Wednesday, March 23, 2011

நண்பர் பாஸ்கர் சக்திக்கு....


வணக்கம் பாஸ்....


கடிதங்களைக் கொன்று குவித்த தொலைபேசியை, எங்கிருந்தாலும், அழைத்துப் பேசும் வன்முறையை நிகழ்த்திவிடுகிற கைபேசியைச் சபித்துவிட்டும், நேரில் பேசுவதன் மூலம் வரும் சில இடைச்சிக்கல்களைத் தவிர்க்கவும் எண்ணியே இக்கடிதம்.

 “நானறிந்த எல்லை வரை எனை மிக அருமையாகச் சகித்துக்கொண்டு வந்த நண்பர் பாஸ்கர் சக்தியின் தந்தைமைக்கு என்னால் நன்றி கூற இயலாது. அது பொருளற்ற சொல்லாகிவிடும்

- “ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன.”
 என்ற எனது கவிதைத் தொகுதியில், நான் எழுதிய முன்னுரையில் ஒரு நன்றியாற்றல்தான் பாஸ் இவ்வரிகள்.

ஆனால் இவ்வார்த்தைகளைச் சாரமற்றதாக்கிவிடுமோ என்ற, அபாயத்தின் எல்லைக்கோட்டில் நின்றே, நான் இப்பொழுது பேச வேண்டியுள்ளது.

பாஸ்...உங்கள் முகப்புத்தகத்தில், நீங்கள் அன்பின் படிக்கட்டில் நின்று உரையாடியதையே இங்கு நான் பேசுகிறேன்.

அது... ப்ரியா தம்பி எழுதிய ....

 “ இன்று பாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரைஇசை வெளியிட்டு விழா. அழைத்திருந்தும் வேலைகள் காரணமாக போக முடியவில்லை. போகாததாலோ என்னவோ, மனம் பாஸ்கரையே சுற்றி வருகிறது. பாஸ்கர் சக்தியின் நிறைய தோழிகள் விழாவிற்கு வந்திருப்பார்கள் என்று எண்ணியபோது இங்கிருந்தே பொறாமை அடைந்தேன். பாஸ்கர் மேல் எனக்குள்ள பொஸஸிவ்நெஸ் அந்த மாதிரி!

 என்னவோ தெரியவில்லை.. இன்றைக்கு பாஸ்கர் சக்தி பற்றி எதாவது எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது. எனக்கு சென்னையில் அறிமுகமான முதல் நண்பர் அவர் தான். (கவனிக்கவும்-முதல் மனிதர் அல்ல, நண்பர்)... நான் பார்த்தபோது இருந்ததை விட தொழில் ரீதியாக இன்று எவ்வளவோ உயரத்திற்கு சென்று விட்டார். அந்த உயரம் அவரது குணத்தில், இயல்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடவில்லை. அதே பாஸ்கராக அதே அன்போடு அப்படியே இருக்கிறார். எனக்கு மட்டுமல்ல, அவருடைய எல்லா நண்பர்களுக்கும் அவர் அப்படியே...மனம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்தாலோ, கடும் துயரம் அடைந்தாலோ என்னை சமநிலைப்படுத்த நான் பாஸ்கரைத் தான் அழைக்கிறேன். என் எல்லா பலவீனங்களையும் அறிந்தவராக அவர் மட்டுமே எனக்கு எஞ்சுகிறார். எதுவும் தெரியாத ஒரு சின்னப் பெண்ணாக அவருக்கு அறிமுகமான நாளில் இருந்து இன்றுவரை என்னிடம் அவர் திருப்பித் திருப்பி சொல்லும் வார்த்தை எழுது ப்ரியாஎன்பதுதான்.. ஆரம்பத்தில் தீம்தரிகிடவில் சில கட்டுரைகள் எழுதியதெல்லாம் கூட அவரது வற்புறுத்தலில் தான். எனக்கு ஒரே ஒரு ஆசை உண்டு... பாஸ்கரிடமும் அதை நான் சொல்லியிருக்கிறேன்... ஒரே ஒரு புத்தகம் எழுதி, முன்பக்கம் சமர்ப்பணம் என்று போடுவோம் இல்லையா, அதன்படி பாஸ்கர் சக்திக்கு சமர்ப்பித்து விட வேண்டும்... அதற்காகவாவது ஒரு புத்தகம் எழுதிவிடுவேன் என நான் நம்புகிறேன்.சென்னையில் எனக்கு பெரும்பாலான நண்பர்களை (ரமேஷ் உட்பட), பெரும்பாலான இடங்களை பாஸ்கர் தான் அறிமுகப்படுத்தினார். நிறைய புத்தகங்கள் அவர் மூலம் தான் எனக்கு அறிமுகமாயின. கடுமையான மன அழுத்தத்தில் சிக்கிய சில மாதங்களில் பாஸ்கர் மட்டும் இல்லையென்றால் நான் மீண்டிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.கடந்த வாரத்தின் ஒரு அதிகாலையில் கவிதாபாரதியோடு பேசிக் கொண்டிருந்தேன். நான் எழுதிய ஒரு கதையை படித்துவிட்டு, ‘’நீ மனிதர்களில் உன்னதத்தை தேடினால் பரவாயில்லை, ஆனால் உன்னத மனிதர்களைத் தேடுகிறாய்.. ஒருவேளை நீ முதன் முதலா பாஸ்கர் சக்தியை பார்த்ததாலயோ என்னவோஎனக் கேட்டார். அது உண்மையோ எனத் தோன்றுகிறது. எல்லா நண்பர்களும் நிறைகளும், குறைகளும் கலந்தவர்களாய் இருப்பார்கள். எப்படி யோசித்தாலும் உங்களிடம் எனக்கு ஒரு குறையும் தென்படவில்லை பாஸ்... :)பாஸ்கரோடு பயணித்த நிமிடங்களின் இனிமை அதன்பின் எனக்கு யாரோடும் வாய்க்கவில்லை. இரவெல்லாம் தூங்காமல் பேசிக் கொண்டு சென்ற பேருந்து பயணங்கள் இப்போது நினைத்தாலும் நெகிழ்ச்சியில் கண்கலங்க வைக்கின்றன. அவரின் அன்புக்கு தகுதியானவளாக கூட பல நேரங்களில் நான் நடந்து கொண்டதில்லை. மிக சிறுபிள்ளைத்தனமாக அவரை கலங்க வைத்திருக்கிறேன். அதையெல்லாம் தனது பேரன்பால் துடைத்து விட்டு மீண்டும் மீண்டும் நட்பின் உன்னதத்தை எனக்கு வழங்கிக் கொண்டே இருக்கிறார். நான் ரமேஷிடம், என் அம்மாவிடம் சொல்ல முடியாத விஷயங்களை கூட பாஸ்கரிடம் என்னால் பகிர்ந்து கொள்ள முடியும். என் பலவீனங்கள் குறித்து வெக்கமற்று அவரிடம் மட்டுமே அழ முடிகிறது.என் அம்மாவிற்கு சென்னையில் உறவினர்களோ, நண்பர்களோ இல்லை. பிள்ளைகள் நாங்கள் கடுப்படித்து தனிமையாக உணரும் நேரங்களில் என் அம்மாவும் பாஸ்கருக்குத் தான் ஃபோன் செய்கிறார். என் மகளும் இப்போதே அவரை பாஸு என்கிறாள். என் கல்யாண வீடியோவை நானும், அவளும் பார்த்துக் கொண்டிருந்த போது பாஸ்கரை சரியாக அடையாளம் கண்டு , பாஸுஎன்றாள். கூடவே, இரண்டு வாரங்களுக்கு முன்னால் நானும், அவளும் பாஸ்கர் வீட்டிற்கு சென்றிருந்தபோது அவளது செய்கைகளை பாஸ்கர் சக்தி வீடியோ எடுத்ததையும் எனக்கு நினைவுபடுத்தினாள். எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது... என் மகளுக்கும் வாழ்வில் உன்னதங்களை கற்றுக் கொடுக்க, மனிதர்களை நேசிக்க சொல்லிக் கொடுக்க பாஸ்கர் சக்தி அவளுக்கும் நண்பராய் இருப்பார் என நான் நம்புகிறேன்.நண்பராய் மட்டுமில்லாமல், இவரை கூடவே வைத்துக் கொள்ளும் வாழ்க்கை எனக்கு வாய்த்திருக்கக் கூடாதா என நான் பலமுறை எண்ணியிருக்கிறேன்...  மனம் நெகிழ்ச்சியான இந்த தருணத்தில் ஒன்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது பாஸ்கர்.. வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியையும், வெற்றியையும் மட்டுமே மீண்டும் மீண்டும் வழங்கட்டும்... ஒரு தோழியாய் அருகிருந்து உங்களை ரசித்துக் கொண்டிருபேன்... லவ் யூ பாஸ்கர்..”

...இது ப்ரியா தம்பி உங்களுக்கு எழுதிய மனம் திறந்த, நீங்கள் சொன்னபடி பாசாங்கற்ற வார்த்தைகள்.

பதிலுக்கு ப்ரியா தம்பிக்கு
நீங்கள் எழுதியது...

“ ப்ரியாவின் பதிவும் நண்பர்களின் பின்னூட்டமும் என்னை நெகிழ வைக்கிறது...ப்ரியாவுடனான என் நட்பு தனித்துவமானது. யாரிடமும் அதிகம் கோபப் படாத நான் மிக அதிகம் திட்டியதும் அதே போல் அன்பு செலுத்தியதும் ப்ரியாவிடம் நிகழ்ந்தது...மிகுந்த குழந்தைத் தனமும...் , அறிவும் ஒருசேர அமைந்த ஒரு பெண்ணாய் ப்ரியாவை சந்தித்தேன்...ஆண்கள் மீது அவநம்பிக்கை கொண்ட ஒரு பெண்ணாகவும்..நிறைய வாசிக்கிற,எழுத முடிகிற ஒரு பெண்ணாக ப்ரியா எனக்கு அறிமுகம் ஆனதிலிருந்து பல மாதங்கள் மிகவும் நெருக்கமான நட்பும், ஏராளமான உரையாடல்களும் எங்களுக்குள் நிகழ்ந்தன...இன்று ப்ரியாவின் பிறந்தநாள் ..எத்தனை வாழ்த்துகள் ப்ரியாவுக்கு? ..ஏகப்பட்ட நண்பர்கள்...என்னை மட்டுமே நண்பனாக பெற்றிருந்த ப்ரியாவுக்கு இன்று இத்தனை நண்பர்கள் ! மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு பெண் நம் மீது கொள்கிற நேசத்தை விடவும் அவள் நம்மை முழுமையாக நம்புகிற நிலை சிறப்பானது. ஒரு ஆணாக இருக்கிற அதே நேரம் எவ்வித கல்மிஷமும் அற்று ஒரு தோழி எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள முடிகிற ஒருவனாய் நான் இருக்க வாய்த்தமைக்கு என் இயல்பு ஒ...ரு காரணமாக இருக்கலாம்....ப்ரியாவிடம் எனக்கு எப்போதும் எவ்வித எதிர்பார்ப்புகளும் இருந்ததில்லை..ஒரே ஒரு எதிர்பார்ப்பைத் தவிர...அது அவள் தனது எழுத்து திறமையை வீணடிக்காமல் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே...வெகு சிறிய வயதில் தனது பெற்றோர் அக்கா தம்பி ஆகியோரடங்கிய குடும்பத்தை சென்னைக்கு கொண்டு வந்து நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளத் துணிந்த அந்த இளம்பெண் சோர்வுற்ற தருணங்களில் ஆறுதல் தந்ததை தவிர பெரிதாக நான் எதுவும் செய்து விடவில்லை...


இந்த பதிவும் சரி. இதற்கான சில நண்பர்கள் என்னைப் பற்றி சொல்லியிருக்கும் உயர்வான அபிப்ராயங்களும் சரி..மிகுந்த கூச்சத்தை எனக்கு தருகின்றன...அன்பாகவும் இயல்பாகவும் இருப்பது அவ்வளவு பெரிய விஷயமா என்ன?...உங்களை நண்பர்களாக பெற்றது எனது மகிழ்ச்சி....

 ப்ரியாவின் பதிவில் கடைசி பத்தி சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்கிற கவலை எனக்கு தோன்றியது...ஒரு நெகிழ்ச்சியான மனநிலையில் தன் மனதில் தோன்றியதை பாசாங்கற்ற நேர்மையுடன் ப்ரியா பதிவு செய்திருக்கிறாள்...அதனை சரியாக புரிந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி...இப்படி ஒரு மன உணர்வை பொதுவெளியில பகிர்ந்து கொள்ள ப்ரியாவால்ம் முடிகிறதென்றால் அது ரமேஷ் போன்ற ஒரு புரிதல் மிக்க நல்ல மனிதன் கணவனாக அமைந்ததுதான் காரணம்....ப்ரியாவின் மகள்..என் செல்ல மின்னுவுக்கும் நான் என்றும் தோழனே.. :-)

நாளை வரவிருக்கிற ஆனந்த விகடனில் ப்ரியாவின் சிறுகதை வெளியாகியிருக்கிறது...வெகுநாட்களாக நான் சொல்லிக் கொண்டிருந்த விஷயத்தை நோக்கி ப்ரியா எடுத்து வைத்திருக்கு முதலடி இது என நினைக்கிறேன்...உன் பிறந்தநாளுக்கு நீ எனக்கு அளிக்கும் பரிசு இது ப்ரியா...தொடர்ந்து எழுதி அத்தொகுதியை எனக்கு நீ சமர்ப்பிக்க வேண்டும்...இன்னும் ஐந்து நிமிடங்களில் உன் பிறந்த தினம் மாறி அடுத்த தினம் பிறக்கப் போகிறது....சென்னையில் உனது முதல் நண்பனாகிய என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் .”


.......................... இது நீங்கள் ப்ரியா தம்பிக்கு எழுதிய அன்பின் விளக்கம் பாஸ். நல்லது பாஸ்...உங்களது நட்பை அதன் மேம்பட்ட உன்னதத்தை நீங்கள் கருத்தில் கொண்டு, பொது வெளியில் வைத்ததானால், அதற்கு பல நண்பர்கள் பின்னூட்டமும் இட்டதனால் நானும் எனது பின்னூட்டத்தை ஒரு பார்வையாளனாக, நண்பனாக வைக்கிறேன் பாஸ்.


பாஸ்...ப்ரியாதம்பி சொல்லியபடி நீங்கள் அவரை வற்புறுத்தி                     
 ‘தீம்தரிகிட’ வில் எழுத வைத்துள்ளீர்கள். இந்த வற்புறுத்தி என்ற ப்ரியா தம்பியின் வார்த்தைக்கு நீங்கள் பதில் கூறாததால், அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றே நான் நினைக்கிறேன்.  ‘தீம்தரிகிட’  இதழுக்கும் வற்புறுத்தி, படைப்புகள் வாங்க வேண்டிய நிலை இருந்ததை இன்று உணர்கிறேன்.

அதே போல் அவரை முதன் முதலாய்த் தொடங்கி இப்பொழுது வரை நீங்கள் மட்டுமே எழுதுவதற்கு உத்வேகம் கொடுத்த நண்பராய் ப்ரியா தம்பி சொல்லியிருக்கிறார். நீங்களும் அதை மனமாரா ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். என் அன்பு பாஸ்... இவ்வார்த்தைகளின் அடிப்படையை வைத்தே நான் பேசுகிறேன்.

எழுத ஆர்வமில்லாதவரை, சிந்திக்கத்தெரியாதவரை, ப்ரியா தம்பி கூறியது போல் சின்னப்பொண்ணாக இருந்தவரைச் சிந்திக்கத் தூண்டி எழுத வைத்துள்ளீர்கள். அது தீம்தரிகிடவில் தொடங்கி ஆனந்த விகடன் வரை வந்திருக்கிறது. நல்லது பாஸ்...அவர் தீம்தரிகிடவில் எழுதியது தொடங்கி ஆனந்த விகடன் வரை எழுதிய எந்தப்படைப்படையும் ஒரு வாசகனாக நான் ஏற்றுக்கொள்ளாததோடு அதை ஒரு படைப்பாகாவே என்னால் கருத இயலவில்லை. என் வாசிப்புக் கோளாறாகாவே கூட இது இருக்கலாம். அல்லது என் வாசிப்பு என் தேர்வாக இருக்கலாம். இலக்கியத்தில் வகை மாதிரிகள் இருக்கலாம்தானே.

பாஸ்..ப்ரியா தம்பி இவற்றை எழுதியதோடு அவரின் இலக்கியப்பயணத்தை நீங்கள் தொடங்கி வைத்துள்ளீர்கள், நீங்கள் அவரை எழுத்துப் பணிக்கு அழைத்து வந்துள்ளீர்கள் என்பதோடு, அவர் முதல் தொகுதியை  உங்களுக்கு சமர்ப்பணம் பண்ணுவதற்காகவாவது ஏதேனும் ஒன்றை எழுதவேண்டும் எனக்கூறியதும், நீங்களும் அவர் ஆனந்த விகடனில் ப்ரியா தம்பியின் முதலடியான அதை ( மன்னியுங்கள் பாஸ் அதைக் கதை என்று என்னால் கூற இயலாது. அதை என்றுதான் நான் கூறுவேன்)   நீங்கள் அவர் உங்களுக்கு அளித்த பிறந்த நாள் பரிசு என்று விரும்பி அதை ஏற்றுக்கொண்டு எழுதியுள்ளீர்கள் பாஸ்.

ஆனால் பாஸ்....அவர் உங்களுக்கு அவைகளால் நிரம்பிய ஒரு தொகுதியை பரிசளிக்கட்டும். அது அவரது விருப்பம், உங்களது ஏற்பு. ஆனால்  ப்ரியா தம்பி..., நம் சக படைப்பாளர்களான அ.மார்க்ஸ், ஷோபா சக்தி, லீனா மணிமேகலை போன்றோரின் படைப்புக்களை விட்டுவிட்டு, அவர்களது அந்தரங்கங்களை பொது வெளியில், தன் மனம் போன போக்கில் எழுதிய அவதூறுகளின் தொகுதியை அவர் யாருக்குச் சமர்ப்பணம் செய்வார். இதில் ஷோபா சக்தி, லீனா மணிமேகலை இருவரும் நமக்குப் பொதுவானவர்கள் அல்ல. நீங்கள் அவர்களைப் பற்றி என்னிடம் பேசியதில்லை. ஆனால் எனக்கும் உங்களுக்கும் பொதுவாகத் தெரிந்தவர் அ.மார்க்ஸ் அவரைப் பற்றி நீங்கள் என்னிடம், பலமுறை வியந்து பாராட்டிப் பேசியுள்ளீர்கள். ப்ரியா தம்பியை எழுதத் தூண்டிய நீங்கள், அவர் எழுதி வரும் அவதூறுகளையெல்லாம் தொடர்ந்து படித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். அவரது அவதூறின் முடிவாய் வந்த விமர்சங்கள் அ.மார்க்ஸ் குழாம், கூட்டுக்கலவி, லீனா மணிமேகலை ஷோபாசக்தி இவர்கள் பொறுக்கிகள், இதோடு நான் யோனி முலை என்ற வார்த்தைகளில் கிளர்ச்சியடைந்து இருப்பதாகவும், நான் சென்னைக்கு, அல்லது தமிழகத்தில் இருக்கும் பெண்களை எள்ளி நகையாடும் மனநிலை கொண்டவனாகவும் சொன்னார். பாஸ் நான் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் எள்ளி நகையாடி இருக்கிறேன் என்பது தாங்கள் அறியாததல்ல. 


என் அன்பு பாஸ்...நீங்கள் சொல்லி, அவரால் செய்ய முடியாத இல்லப் பணிகளை, நட்பின் பொருட்டு நான் செய்து கொடுத்தேன். அப்பொழுது என் பெண் பித்து அவரது கண்ணுக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது. அவரது அவதூறுக்கு எதிர்வினையாற்றிய போது மிருகம் சாடிக் குதித்து வெளி வந்து விட்டது.

ப்ரியா தம்பி கீற்றுவிலும், (கீற்றை நடத்துவது ரமேஷ். உங்களது வார்த்தைகளில் சொன்னால் ரமேஷ் போன்ற ஒரு புரிதல் மிக்க நல்ல மனிதனான கணவன்),  தன் முகப்புத்தகத்திலும் எழுதிய அவதூறையும், அதற்கு வந்த பின்னூட்டங்களையும், பதிலாய் ப்ரியா தம்பி எழுதிய பின்னூட்டங்களையும் படித்தே வந்திருப்பீர்கள்.

எங்காவது உங்களது பதில் வரும் என்று காத்திருந்தேன். மௌனம். எந்த பதிலையும் அதில் நான் காணவில்லை. பாஸ்... அ.மார்க்ஸ் இரண்டாவது சம்சாரம் வைத்துக்கொண்ட பிறகுதான் அவருக்கு பாலியல் சுதந்திரம் பேச முடிந்தது என்கிற தத்துவார்த்த நோக்கை ஒரு நண்பர் ப்ரியா தம்பியிடம் சொன்னதாகவும், அதை அவர் யோசிக்க வேண்டிய கூற்றாகவும் எழுதியிருந்தார்.

ப்ரியா தம்பி தனதான, உங்கள் மேல் கொண்ட நட்பை, அன்பை, எல்லோரும் கொண்டாடிப் போற்ற வேண்டும் என்ற மனநிலையில், அவரது நட்பைப் பிரகடனப்படுத்தியும்,(இதில் நட்பை பொதுவாய் வைத்து அவர் பேசியிருந்தாலாவது பொதுக்கருத்தாய் நினைத்திருப்பேன். மாறாய் டிக்காஷன் கலக்காத, கறந்த பாலாய் உன்னதத்தின் கோபுர உச்சியேறி எழுதியிருந்தார்.) உச்சாடனமும் செய்திருந்தார். எனக்கு ஆகப்பெரிய மகிழ்ச்சி பாஸ். இவ்வுலகில் எதிர்பார்ப்போ, பரிவர்த்தனையோ செய்யப்பாடாத, எந்த முன் தீர்மானங்களும் அற்ற தனிப்பட்ட உறவு எதுவுமேயில்லை என இறுமாந்திருந்த எனக்கு  நல்ல பாடமாய் இருந்தது அது. என் நினைப்பு படு தோல்வியடைந்ததில் மிக்க நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் கொண்டேன்.

இதில் எனக்கு வருத்தத்தை பெருமளவில் தந்தது எதுவென்றால், நீங்கள் பதிலுக்கு, அவரது வரிகளை மற்றவர்கள் புரிந்துகொள்ளுமாறு எழுதிய வேண்டுகோள்களே. ஆம் பாஸ் அதை வேண்டுகோள்கள் என்றுதான் நான் சொல்வேன். அவர் உங்களை அன்பின் மிகுதியால் அவருடனே வைத்துக் கொள்ளமுடியாதா என்ற ஏக்கத்தையும் பதிவு செய்திருந்தார். நல்லது பாஸ் எல்லோருக்கும் இது போன்ற நட்பு கிடைத்தால் உலகம் கொண்டாட்ட மனநிலையை அடைந்துவிடும். ஆனால் பாஸ் இதே வார்த்தைகளை அ.மார்க்ஸ் விஜி யிடம், ப்ரியா தம்பியின் வார்த்தைகளில் சொன்னால் ரெண்டாவது பொண்ட்டாட்டியிடம், மார்க்ஸ் அவரை தனது ரெண்டாவது பொண்ட்டாட்டி ஆக்கிக் கொள்வதற்கு முன் பேசியிருக்கலாம்தானே,  இந்திய, அதிலும் தமிழ்ச் சமூகத்தில் மனைவியாக ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் திருமண முறையை ஏற்றுக் கொண்டிருக்கலாமல்லவா. (இது என் வாசகப் புரிதல் மட்டுமே, மேலும் இதைத் தாண்டி அவர் எத்தனை பொண்ட்டாட்டிகள் வைத்துள்ளார், என்பதை ஒரு வாசகனாக கணக்கெடுக்க வேண்டிய மனநிலை எனக்கில்லை.) அவரது தோழமை உறவை,  முடிந்த அளவுக்கு கொச்சைப்படுத்தி விட்டு, உங்களுடனான நட்பை அவர் உன்னத தளத்துக்கு நகர்த்துவதும், நீங்கள் அதை புரிந்து விளக்குவதும் எந்த மனநிலையில் என்று எனக்கு விளங்கவில்லை.

பாஸ்... இதை ப்ரியா தம்பியின் தனிப்பட்ட சிந்தனை,என்னிடம் கேள்விகள் ஏன்... என்று என்னைக் கேட்டால், நான் புன்னகைக்கவே முடியும். நம்மைச் சந்திக்க வரும் ஆரம்ப கட்ட இலக்கியம் தெரியாத நபரை, படிக்க வைக்க சில புத்தகங்களை, அதுவும் நாம் தேர்ந்து எடுத்துக்கொண்ட பாதைக்கு வழிகாட்டும் புத்தகங்களை காண்பிப்போம். அவர்கள் தங்களது சிந்தனைகளை எழுதி, ஆர்வத்தோடு, அதை நம்மிடம் காட்டும்போது விமர்சிப்போம். சும்மா எழுது எழுது என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டால் எழுதிவிடமுடியாது பாஸ். சில விசயங்களை விவாதித்து, அதிலுள்ள நுண் அரசியலை எடுத்துச் சொல்லி, அதன் பின் இதை நீ எழுது எனச் சொல்லலாம். வெறுமனே எப்படிச் சொல்லமுடியும். பிரியா தம்பி எழுதிய அவதூறுகளின் சித்திரத்தையும் எனக்குப் புரிய வையுங்கள். அல்லது மார்க்ஸ் ரெண்டு பொண்ட்டாட்டிக் காரன் என்று எழுதுவதிலும், ஷோபா சக்தி பொம்பளைப் பொறுக்கி என்று எழுதுவதும், லீனா மணிமேகலை, கூட்டுக்கலவி, குழுப்புணர்ச்சி, வேசைத்தனம் என்ற ரீதியில் விமர்சனம் எழுதுவதும்,   சரிதானா என்பதையும், நீங்கள் அவரை எழுது எழுது என உற்சாகப்படுத்துவதையும் எனக்கு விளக்கினால், நான் மகிழ்ச்சி கொள்வேன்.

என் அன்பு பாஸ்.... எனக்கு நீங்கள் எப்படி நண்பரோ அதே போல்தான் மார்க்ஸ் எனது நண்பர். ப்ரியா தம்பி தன் நட்பை எப்படிக்கொண்டாடுகிறாரோ அதே போல் எனக்கும் என் நட்பைக் கொண்டாட  உரிமை இருக்கிறது. உங்களுக்கும் ஞானிக்குமான நட்பு எப்படியோ, அதுவே ஷோபா சக்திக்கும் அ.மார்க்சுக்கும் இருக்கிறது. இதில் தொண்டர் படைகள், செம்புதூக்கிகள், அல்லக்கைகள், குரு சிஸ்ய உறவுகளுக்கான மதிப்பீடாக,  இது எந்த இடத்தில் மாறுகிறது என எனக்குத் தெரியவில்லை. உங்கள் மீது நான் கொண்ட அன்போடு சொல்கிறேன். மார்க்ஸ் எனக்கு நண்பன், ஆசானோ குருவோ அல்ல, எனது அகந்தையின் மீது ஆணையாகச் சொல்கிறேன் எனக்கு கா.மார்க்ஸ்தான் குரு.

பாஸ்...நீங்கள்தான் ப்ரியா தம்பிக்கு இன்றுவரை எழுத ஊக்கம் கொடுத்துள்ளீர்கள் என்கிற, உங்களின் வார்த்தைகளின் மூலமாகத்தான் இதைக் கேட்கிறேன். அதோடு மார்க்ஸ், ஷோபா சக்தி, லீனா மணிமேகலை இவர்கள் பற்றிய உங்களது மதிப்பைச் சொன்னால் மகிழ்வேன்.

ப்ரியா தம்பி எழுதிய அனைத்திற்கும் நான் உங்களிடம் விளக்கம் கேட்கப்போவதில்லை, நம் ஊரில் சொல்வது போல் ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்று ஆகிவிடக்கூடாதல்லவா,  எனது நட்பு உத்தமம், மற்றது அயோக்கியத்தனம் என்பதற்கு அது வழிகாட்டியாக அமைந்துவிடும்.  மேலும் பொது வெளியில் வைத்ததானால் மட்டுமே இக்கடிதத்தை எழுதுகிறேன்...உங்கள் பதில் வேண்டி.....

நண்பனாக மட்டுமின்றி, எனதுஅந்தரங்கமான தருணத்தில்

 “நானறிந்த எல்லை வரை எனை மிக அருமையாகச் சகித்துக்கொண்டு வந்த நண்பர் பாஸ்கர் சக்தியின் தந்தைமைக்கு என்னால் நன்றி கூற இயலாது. அது பொருளற்ற சொல்லாகிவிடும் என்ற வரிகளை எழுதிய  வசுமித்ர - வாக, தேனியில் நாம் சந்தித்தபோது என் பேரை முருகன்.....என அசோகன் குரலில் நான் சொல்லி, நீங்கள் சிரித்து மகிழ்ந்த அத்தருணங்களை மனதில் கொண்டும் , அதோடு ப்ரியாதம்பி, வசுமித்ர, பாஸ்கர் சக்தி நாம் மூவருமாக உரையாடிய நாட்களையும் நினைத்துக் கேட்கிறேன்....


                                  உங்கள் அன்பு
                                   வசுமித்ர.


6 comments:

 1. வசு, அடுத்தமுறை பாஸ்கரைப் பார்க்கும்போது இந்த பிரியா தம்பி யார் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் என இருக்கிறேன். ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த இலக்கிய-அரசியல் சூழலைவிட தற்போதைய நிலை இன்னும் மோசமடைந்திருப்பதை உணரமுடிகிறது. (என் நிலை கொஞ்சம் ரிப் வேன் விங்கிள் போன்றதுதான்)கூடிய சீக்கிரம் இந்த மாதிரியான ப்ளாக் ரைட்டிங் வேறு ஒரு ஆரோக்கியமான தளத்துக்கு நகரும் என்று நம்புகிறேன். நீங்கள் எல்லாம் அதற்கு உதவவேண்டும்.

  -பாபு யோகேஸ்வரன்

  ReplyDelete
 2. வணக்கம் பாபு யோகேஸ்வரன்.

  எல்லோரும் எழுதுவதற்கான சூழலை பிளாக் ரைட்டிங் ஏற்படுத்திக்கொடுத்தது உண்மைதான். ஆனால் அது ஆரோக்கியமானத் தளமாக, முக்கியமாக இலக்கியத்தில் தன்னை ஒரு போதும் அது நகர்த்திக்கொள்ளாது என்றே எண்ணுகிறேன். இதை உறுதியாகச் சொல்ல எனக்கு நிறைய சாட்சியங்கள் இருக்கிறது. சிறுபத்திரிக்கைகள் எனக்குத் தெரிந்து மிகக் காத்திரமாக பல்வேறு அரசியலை வெளிப்படுத்தி வந்திருந்த காலம் ஒன்று இருந்தது. அதில் புனிதர்கள் என்று யாருமில்லை. முக்கியமாக குரு சிஷ்ய மரபை உடைத்தெறிந்து, வாசகனை, விமர்சகனாக படைப்பாளியாக மாற்றியது சிறுபத்திரிக்கைகளே. இப்பொழுது அது மிக மோசமான திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல ஓரிரு பத்திரிக்கைகளே உள்ளன. அதற்குப் பின்னாலும் , சில மகாத்மாக்கள் ஒளிந்துகொண்டு, அதை அரசியலாக்கி சால்வை வாங்கிக்கொள்கிறார்கள்.

  ReplyDelete
 3. this is bad vasu. you should change this kind of attitude. i request you, please sink in fiction and get away from this cheap rate politics. i know this lines makes you angry. but this is true. people like 'priya thambi'are DOESN'T MATTER. please understand. there are lot things to do .. you know that..

  please try to understand the phenomena.. and get rid of it.

  love - mahi.

  ReplyDelete
 4. அன்புள்ள வசு
  இதனை எழுத எனக்கு விருப்பம் இல்லை. என்றாலும் எழுதாமல் மௌனம் சாதிப்பது கூட வேறு விதமாக அர்த்தம் செய்து கொள்ளப்படும் சூழலில் வேறு வழியின்றி எழுதுகிறேன்...மிகவும் தாமதமாகவே உங்கள் பதிவு பற்றித் தெரிய வந்தது. படித்த உடன் எழுதுகிறேன்....முதலில் சில விளக்கங்கள்... பொது வெளியில் இவ்வாறான விவாதங்களில் ஆவேசத்துடன் இயங்குகிற தன்மையோ, அவசியமோ எனக்கு இல்லை...தவிரவும் இவ்வித விவாதங்களில் கசப்பும், காழ்ப்பும் மட்டுமே எஞ்சுகிறது என்பதை நானறிவேன்..தமது முடிவில் தீர்மானமாக இருப்பவர்களிடையே விவாதம் என்பது காரசாரமாக்க் கழிகிற நேரம். அதைத் தாண்டி எதுவுமில்லை...இதுதான் நிலைமை.
  உங்கள் பதிவின் தொனியைப் பார்த்தால் சங்கடமாக இருக்கிறது. சமீப காலமாக ப்ரியா எழுதி வரும் சர்ச்சைக்குரிய பதிவுகளை எல்லாம் நான் ஊக்குவிப்பது போன்ற ஒரு பிரமை அதில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது..என் பற்றி நன்கு அறிந்த, என்னிடம் நேரடியாக உரிமையுடன் பேசக்கூடிய நீங்கள் இப்படி ஒரு பதிவை எழுதி என்னை இந்த பதில் எழுத வைக்க வேண்டிய அவசியமே இல்லை. நேரிலேயே கேட்டிருக்கலாம். என்னைப் பொறுத்தவரை ப்ரியாவிடமும், உங்களிடமும் நம் நட்பின் ஆரம்ப காலங்களில் நான் கொண்டிருந்த அன்பு கிட்டத்தட்ட ஒரே விதமானது....படிக்கும் ஆர்வமும், ஆவலும் கொண்டிருந்த இளைஞனான உங்களை தினமும் புத்தகச் சந்தைக்கு அழைத்துச் செல்வேன். நீங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கிப் பரிசளிப்பேன். எழுதுங்கள் வசு என்று சொல்லி இருக்கிறேன்...ப்ரியாவிடமும் அது போலவே சொல்லி இருக்கிறேன்..இன்று நீங்கள் இருவரும் புத்திஜீவிகளாகி சண்டை போடுகிறீர்கள். இதில் எனக்கிருக்கும் சம்பந்தம். நான் உங்கள் பொது நண்பன் என்பதே....

  ReplyDelete
 5. இன்று நீங்கள் நிறைய எழுதுகிறீர்கள் வசு. உங்கள் எழுத்துகளுக்கும் கருத்துகளுக்கும் நானே பின்புலம் என்று யாராவது சொன்னால் அது எவ்வளவோ சிறுபிள்ளைத்தனமோ அதே அளவு சிறுபிள்ளைத்தனம்தான் ப்ரியாவின் இப்போதைய சர்ச்சைகளை நான் ஆதரிக்கிறேன் என்பதும்...
  உங்களது பிரச்சினை ப்ரியா எழுத்துத் திறமை உள்ளவள் என்று நான் சொன்னது...ப்ரியாவை நான் அப்படி அங்கீகரித்தது உங்களுக்கு பிடிக்கவில்லை....ஆனால் என் கருத்தில் மாற்றமில்லை வசு. ப்ரியா எழுத்துத் திறமை உள்ள பெண். முனைந்து எழுதினால் நல்ல படைப்புகளை ப்ரியாவால் தர முடியும்...நான் பேசுவது படைப்புகளைப் பற்றி மட்டுமே...மற்றபடி ப்ரியா எழுதிக்கொண்டிருக்கிற சர்ச்சைக் கட்டுரைகளில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை... ப்ரியா இந்த மாதிரி எழுதத் துவங்கியபோதே போனில் இது பற்றி நான் விமர்சித்தேன்... பொதுவெளியில் நான் ப்ரியாவை கண்டித்திருக்க வேண்டும் என்பது உங்கள் அவா...எனக்கு அது தேவையில்லை... பேசிக்கொள்ள முடிகிற நண்பர்களுக்கு நடுவில் எதுக்கு பதிவு புண்ணாக்கெல்லாம்?
  தீம்தரிகிட வில் ப்ரியாவிடம் கட்டுரை கேட்டு வாங்கிப் போட்டதில் ஏன் இத்தனை உறுத்தல் உங்களுக்கு? எழுத முடிகிற நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டு வாங்கி பிரசுரித்தோம்...ப்ரியாவை நான் அதில் வற்புறுத்திதான் எழுத வைத்தேன்...ஆதிவாசிகள் குறித்து ப்ரியா அதில் எழுதிய கட்டுரை சிறப்பானது என்றுதான் நான் இப்போதும்கருதுகிறேன்...(ப்ரியாவின் விகடன் கதையை கதை என்று கூட சொல்ல விரும்பாத உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு வசு...அது உங்கள் லெவலுக்கான கதை இல்லைதான்.) ப்ரியாவின் கதையில் உள்ள குறைகள் என்று எனக்குத் தோன்றியதை போனில் சொல்லி விட்டேன். எல்லாவற்றையும் பதிவு எழுதும் பழக்கம் எனக்கு இல்லை வசு.

  ReplyDelete
 6. சொல்லப் போனால் ப்ரியா என் குறித்து எழுதிய அந்த பதிவை நான் தர்மசங்கடமாகவே உணர்ந்தேன். ஏனெனில் இரண்டு பேருக்குமிடையிலான நட்பு அது போன்று பொதுவெளியில் பகிரப்பட வேண்டிய தேவை இல்லை என்பதே என் நிலை..ஆனால் ஒரு மனநெகிழ்ச்சியில் அது எழுதப் பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து, அந்த மனநிலையை மதித்து நான் எழுதியவையே எனது பின்னூட்டங்கள்...அதில் நான் ப்ரியாவின் எழுத்து குறித்து எழுதிய வரிகள் எல்லாமே ப்ரியா எழுத வேண்டிய படைப்புகள் குறித்தவையே தவிர வில்லங்கப் பதிவுகள் குறித்த பாராட்டுகள் அல்ல.
  அதில் நான் ரமேஷ் குறித்து குறிப்பிட்டிருந்த வார்த்தைகள் மீதான உங்கள் எதிர்வினையில் வன்மம் மட்டுமே தெரிகிறது...மிகவும் வருத்தமாக இருக்கிறது வசு. ரமேஷை, ஒரு கணவனாக அவரது புரிந்து கொள்ளும் தன்மைக்காக நான் பாராட்டுகிறேன்..ஆனால் நீங்கள் மார்க்ஸ் பற்றி இப்படி எல்லாம் எழுதிய ஆளை பாராட்டுகிறானே என்று எரிச்சலடைகிறீர்கள். அது வேறு இது வேறு என்று கூடத் தெரியாத ஆளா நீங்கள்?. தெரியும்...இருந்தாலும் ஆவேசம் கண்ணை மறைக்கிறது..

  அப்புறம் உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன் வசு.... அ. மார்கசை நீங்கள் இலக்கியம் படிப்பதற்கு முன்பிருந்தே சுபமங்களா காலத்திலிருந்தே அறிவேன் நான்..அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு...அவரது செயல்பாடுகளால் மட்டுமல்ல வசு....பாரதியின் தந்தையாக, குடும்ப நண்பராகவும் அவரை இப்போதும் மதிக்கிறேன். நேசிக்கிறேன்...எனவே கீற்றுவின் நிலைப்பாடுகள், ப்ரியா, ரமேஷின் நிலைப்பாடுகளை என் மீது ஏற்றிப் பார்க்கும் காரியத்தை விட்டு விடுங்கள்..(கீற்றுவின் மீது நான் கொண்டிருக்கும் முரண்பாட்டை கீற்று ஆண்டு விழா மேடையிலேயே நான் சொன்னேன்.)..நான் மெகா சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்... பதிவுலகின் அதி நாகரிக செயல்பாடுகளில் நான் ஒன்றும் செயலூக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கவில்லை....பல விஷயங்களை நான் படிப்பதே இல்லை...
  நான் மிகவும் நேசித்தவன் பெயர் வடிவேல் முருகன்...அவன் நிறையப் படித்து வசுமித்ரவாக ஆகிப் போனான்...வசுமித்ரவாக ஆகிப் போன பின்னும் வடிவேல் முருகனின் ஆவேசம் அப்படியே இருக்கிறது...இந்த ஆவேச அரோகரா எல்லாம் ஒர்த் இல்லை என்று உணர்கிற நாளில் அவன் படைப்பிலக்கியத்தில் இயங்கத் துவங்குவான் என்று நம்புகிறேன்....ஆதிரன் சொன்னதை வழிமொழிகிறேன்.

  ReplyDelete

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...