Saturday, March 26, 2011

ஆதிரனுக்கு .....எனது அவதூறை வெளிச்சத்தில் வைத்து.....


-->“ நல்லவர்களையும், நியாயமானவர்களையும் கவனியுங்கள் ! இவர்கள் அதிகமாக யாரை வெறுக்கிறார்கள் ? இவர்களுடைய மதிப்பீடுகளின் அட்டவணைகளைத் தகர்ப்பவனை, உடைப்பவனை, சட்டத்தை உடைப்பவனை – ஆனால் அவன்தான் படைப்பவன்.”

-    நீட்ஷே

வணக்கம் ஆதிரன், ஜெயமோகனை எனக்கு கவிதையில் இணையாக வைத்துப்பார்க்கிற உங்களது சிறுபிள்ளைத்தனத்தை அதன் நீள அகலங்களில் காண்கிறேன். நீளமாக எழுதினால் ஜெயமோகன், குட்டையாக எழுதினால் ஹைகூ என்றே, அதை உங்களது விமர்சன மதிப்பாக ஏற்றுக்கொள்கிறேன். இவ்விடத்தில் என் கவிதைகள் பற்றின புரிதலை, என் கவிதைகளை உங்களை வாசிக்கச் சொல்வதோடு முடித்துக்கொள்கிறேன்.

ஆதிரன் நான் அவதூறுகளை எழுதவில்லை அவதூறு சார்ந்து அவர்கள் எழுதிய எழுத்துக்களில் நீதி எங்கு ஒளிந்திருக்கிறது என்று கேள்வி கேட்கிறேன். அவ்வளவே. உங்களுக்கு அலுப்பாக இருந்தால் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். பதிவுகளில் தரம் குறைந்த அரசியல் என்று என் எழுத்தை நீங்கள் முன் நிறுத்தினால், அது அப்படிப்பட்ட சாத்தியத்தை உங்களுக்கு வழங்கிய வாசிப்பைச் சந்தேகம் கொள்ளுங்கள். பார்க்க விரும்பாவிடில் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள் ஆதிரன். விருப்பமின்மை ஒரு வகையில் தனி மனித சுதந்திரம், அதை நீங்களே உங்களுக்கு எதிராக திருப்பும் பட்சத்தில், அது கண்ணாடிச் சட்டகத்தில் முகத்திற்குப் பதிலாய் நம் புட்டத்தைக் காண்பித்துவிடும். தனி மனித சுதந்திரம் குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் ஆதிரன். அது கொலை செய்வதைப் போல, அல்லது ஒரு பெண்ணை விருப்பமில்லாது மேயும் விதிமுறைகளை, நமக்கு நீதியின் பெயரால் வழங்கிவிடக்கூடும்.

ஆதிரன் புனைவு, இலக்கியம், விமர்சனம் கட்டுரைகள் எல்லாம் மனிதனைக் குறி வைத்தே என்பது தாங்கள் தெரியாததல்ல, அதில் அவதூறுகளைக் கடுமையாக விமர்சனம் செய்வது, புகழுரைகளை ஏற்றுக்கொள்ளுவது என்கிற தராசு மதிப்பீடுகளையெல்லாம் விமர்சகன் கைக்கொள்ள வேண்டியதில்லை. கேள்விகளில் நீயாயம் இருக்கிறதா இல்லையா என்பது என்னைப்பொறுத்தவரையில் இடப்படும் பதில்களில் இருக்கிறது. சிவப்பு மஞ்சள் நீலம் பச்சை எல்லாம் நிறக்குருடனுக்கு பயனற்றவை. அவனால் ஸ்பரிசத்தால் அடையும் உணர்வுகளைப் போன்றவையே விமர்சனத்தில் வைக்கும் நாமறியாத வரிகளில் ஒளிந்திருக்கும்.  தனிப்பட்ட குரோதத்திற்கு கருத்து விரோதம்தான் காரணமெனில் இதை எழுதும் விரல்களை நான் மன்னிக்கிறேன். தனிப்பட்ட கருத்துக்களை பொது வெளியில் வைக்கும் விரல்களை அதற்கேயுரிய தைரியத்தோடு வரவேற்கிறேன். எழுத்துக்கள் பொருளாய் மாறினால் என்னால் எதுவும் செய்ய இயலாது.


ஆதிரன் நான் மார்க்ஸ், பாஸ், ப்ரியாதம்பி இவர்களின் எழுத்துக்களான மூன்றையும் படிக்கிறேனோ, இல்லையோ என்னைப்பற்றி என் கிளர்ச்சிகள் பற்றி எழுத, மற்றும் அறிய விரும்புவரின் முன் ஒரு சோதனைச்சாலை எலியாய் அமர்ந்திருக்க எனக்கு விருப்பமில்லை. நான் கேள்விகளை அவர்கள் வைத்த பதில்களுக்காக எழுதுகிறேன். என் உறுப்பின் எழுச்சி குறித்து மற்றொருவர் தீவிரமாக கவனம் செலுத்துகையில் நான் கண் காணிக்கப்படுகிறேன் என்ற அச்ச உணர்வே எனக்கு மேலெழுகிறது.  தனிப்பட்ட வகையில் தொந்தரவு தராமல் இருந்தால் எதிர்பாலுறவு மீதான கிளர்வு எந்தக்குற்றத்திற்கும் உட்படாதது என்பதை ப்ரியாதம்பி அறிவார் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி. நாளை எனக்கு குழந்தை பிறந்து அவள்(ள்) பள்ளிக்குச் செல்லும் வழியை நிர்வாண போஸ்டர்களாலும், அம்மண விளம்பரங்களாலும் வழிமறியுங்கள். அடைத்து வையுங்கள், விலையுயர்ந்த சாக்லெட்டுகளை மிகக்குறைந்த விலையில் வாங்கப்பட்ட எனது தொலைக்காட்சியில் ஒளி பரப்புங்கள். அவள்(ன்) எந்தவிகிதத்திலும் பாதிக்கப்படமாட்டாள்(ன்) என்பதையும் உறுதி தாருங்கள், மிக்க மகிழ்ச்சி.

நான் கம்புதான் நெட்டுக்கத்தான் நிற்பேன் என்பதை என் எழுத்து வாயிலாக கண்டடைந்த உங்கள் ஆத்மாவை மெச்சுகிறேன். நான் கம்பாகவே இருக்கிறேன், நெகிழும், உருகும் மற்றும் கழியும் நிலைகளை எனக்குக் கற்பியுங்கள். எனது மொழி தன் உடலெங்கும் அதன் கடுமையைச் சுமந்தபடி இருக்கும் பட்சத்தில் நான் நெகிழ்ச்சியான தருணங்களில்தான் அதை எழுத வேண்டியிருக்கிறது என்பதோடு,  மொழிக்கு என்னை எமாற்றக்கூடிய வல்லமை உண்டென்பதை அறிவேன். அதனுடன் போராடியும், சில சமயங்கள் அதை ஏமாற்றியும், என்னை வாசகனாக, விமர்சகனாக, படைப்பாளனாக, தவிர்க்கமுடியா இடங்களில் கோமாளியாகி நடித்து அதை சிரிப்பூட்டவும் செய்து, அது ஏமாந்த தருணத்தில் என் காரியத்தைச் செய்துகொள்வேன். ஆனால், மொழியை வேறொன்றினால் அல்ல, அதே மொழியால் மட்டுமே அதைச் சாத்தியமாக்குவேன்.

காத்திருக்கிறேன். எல்லாவாற்றிற்கும் மேலாக சாத்தியப்பாடுகளை அதனதன் வழியில் வரவேற்கவேண்டுமென்றால் நீங்கள் எனக்கு எதிர்வினையே புரிந்திருக்கவேண்டாமே,  வசுமித்ர – வின் உறுப்பு விருப்புங்களை ப்ரியாதம்பி சொன்னால் சொல்லிவிட்டு போகட்டுமே, அதற்கு எதிர்வினையாற்றிய வசு மித்ர விற்கு ஆதிரன் ஏன் எதிர்வினையாற்றவேண்டும். ஆம் ஆதிரன் நாம் சாத்தியப்பாடுகளை அதன் வகுக்காத எல்லைவரை சென்று விரும்பவேண்டும். சில சமயம் சாத்தியப்பாடுகள் நம் எல்லைகளை தீர்மானிப்பதில் வெற்றி கண்டுவிட்டால்,, அடிமைகளுக்கான குவளையை ஒரு வெற்றிக்கோப்பையை உயர்த்துவது போல் உயர்த்த வேண்டி வரும். நான் மிகச்சிறந்த எனது விருப்பத்திற்குகந்த முறையில் மடியவே விரும்புகிறேன்.
 

1 comment:

 1. கவிதை குறித்தான வார்த்தைகள் ஒரு நையாண்டி என்பதை அறியமுடியாதா வசுமித்ர. இனி நீ சொல்வது போல கண்ணைமூடிக்கொண்டு ஓய்வு எடுக்க வேண்டியத்தான். நீ நிறக்குருடன் என ஒப்புக்கொண்டுள்ளாய். அதனால்தான் தரம் பிரிப்பதில் உனக்கு சிக்கலிருக்கிறது. உனது கவிதைகளை தொடர்ந்து வாசிக்கிறேன். கருவறையில் சொற்கள் கொண்டு நிரப்பினர் .. என்கிற கொற்றவையின் கவிதையில் தெரியும் வலி உமிழும் தெரு நடை போன்ற காட்சியை உனது சமீபத்திய கவிதைகளில் என்னால் உருவமுடியவில்லை.. அறிவு பின் தங்கி போய்விட்டது போல வசு மித்ர.
  ********
  நான் உனது பதிவுகளை தரம் கெட்டஅரசியல் என்று சொல்லவில்லை. அவ்விதமான பதிவுகளுக்கு நீ எதிர் வினை செய்தாய் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.
  *******
  நீயட்ஷே வின் மேற்கோள் அருமை. அதை திரும்ப திரும்ப படித்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். நல்லவர்களையும் நியாயமானவர்களையும் இரண்டாக பிரிப்பது எவ்வளவு புத்திசாலித்தனம்! மதிப்பீடுகளின் அட்டவணைகளையும் சட்டத்தையும் உடைப்பவன் படைப்பாளி என்பதை நாம் ஒப்புக்கொண்டோமானால் நாம் யாவரும் படைப்பாளிகள் அல்ல என்பது தெளிவு.. மதிப்பீடுகளின் எதிர்ப்பு மற்றொரு வகை மதிப்பீடு. சட்டத்தை மதிப்பீடுகளின் அட்டவணைகளை மீறி நீ (நாம்) எதுவும் செய்துவிடவில்லை.. சில நேரங்களில் இவற்றை எழுதுவதன் மூலமாக விமர்சனம் செய்வது தவிர. பிறகு படைப்பு என்பதை நீ எவ்வாறு அர்த்தம் கொள்கிறாய் அல்லது சட்டத்தையோ மதிப்பீடுகளின் அட்டவணைகளையோ நீ எவ்வாறு உடைக்கிறாய்.. அதற்கான விளைவுகள் என்ன.. எதிர்த்து உடைக்க வேண்டிய சட்டங்கள் மற்றும் மதிப்பீடுகள் எவை எவை.. அதற்கான காரணம் என்ன .. **** நீதிகளை நியாயங்களை எதிர்பார்த்து எழுதுகிறேன் என்கிறாய்.. அவரவர்களுக்கு நீதியும் நியாயமும் தனித்தனியானது என்பது கவிஞனுக்கு பாலபாடம். அவற்றுடன் உடன்படுவது அல்லது எதிர்ப்பது அல்லது விலகிச்செல்வது என்பது மனித மனங்களின் அனுபவம் சார்ந்தது. இதையெல்லாம் கடந்துதான் பதிவுகளையும் எதிர்வினைகளையும் படைப்புகளையும் நீ செய்து கொண்டிருக்கிறாய்.. நான் எங்கு எதிர்பார்கிறேன் என்று கேட்பாயானால்.. நீதி எங்கு ஒளிந்து என்று நீ கேட்கும் கேள்விக்கு என்ன பொருள்..
  ****
  உனது பதிலில் இன்னொரு நகைச்சுவை: நான் உனது எழுதுதொனி அல்லது நடை என்பதை மட்டுமே 'கம்பு' என சொல்கிறேன். அதன் மூலமாக உன்னை அல்ல. அதுவும் ஒரு விமர்சனம் மட்டுமே. அதற்கு மேல் ஒன்றுமில்லை..
  ****
  காரல் மார்க்ஸை குரு என்கிறாய். மார்க்ஸை சிறந்த ஆளுமை என்கிறாய்.. அவரும் தனது மீதான அவதூறுகளுக்கு சில நேரங்களில் எதிர்வினை செய்கிறார். ஆனால் அவைகளை விட அதிகமாய் ஆய்வுளில் நேரம் செலவழித்து படைப்புகளை விமர்சனப்படைப்புகளை குவிக்கிறார். நீ விரும்பும் எந்த ஆளுமையும் அவர்களது படைப்புகளிலும் கள வேலைகளிலும் மிக ஈடுபாட்டோடு இருந்திருக்கிறார்கள்.. அதற்கான சாட்சியங்களாய் அவர்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன. அதனைப்படையில் நான் கேட்கும் கேள்வி உனது ஆழ்ந்த விரிவான படிப்பின் எதிர்விளைவுகள் என்ன.. நீ ஒரு கவிஞன் மட்டுமே என்று சொன்னால் எனக்கு உடன்பாடில்லை.. என் உடன்பாட்டைப் பற்றி நீ அக்கறை படவும் போவதில்லை.. அரசியல் உனக்கு தெரியும்.. நீ அதிகாரத்தை எதிர்கிறாய் என்றால் உனது அரசியல் செயல்பாடுகள் என்ன..
  *******
  மொழியை ஏமாற்ற நீ கோமாளி வேடம் போட்டால் மொழி அர்த்தத்தை கொடுக்காமல் சொற்களை வழங்கும். சொற்கள் ஒரு போதும் ஒற்றை அர்த்தத்தை அளிப்பதில்லை. உன் மொழி உடம்பெங்கும் கடுமையை சுமக்கும் என்றால் அது படைப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் பிரார்த்திக்கிறேன்..
  *****
  வசு மித்ர
  தத்துவங்களையும் அறங்களையும் கற்பிக்கும் உனது கவிதை அலுப்பூட்டுகின்றன. ஆனால் உனது கவிதைகளை படிக்காமல் என்னால் இருக்க முடியாது. எந்நேரமும் தனது விருப்பப்படி இயங்கும் மனிதர்களின் தனிப்பட்ட உணர்வு பதிவுகளில் நீதி தேடி அலையும் உனது எதிர்வினை கட்டுரைகளில் நான் எரிச்சலடைகிறேன். நீ செய்ய வேண்டிய வேலைகளை விட்டுவிட்டு எதிலிருந்து தப்பிக்க பார்க்க இந்த திசைதிருப்பல் வேலைகளை செய்கிறாய் என்று புரியாமல் தவிக்கிறேன்.
  *******
  இவைகளை நீ மறுத்து எழுதும்போது எனக்கான பதில்களாய் நினைக்காமல் உனக்கானவைகளாக எழுது. நன்றி.
  ********
  அன்பு. மகி.

  ReplyDelete

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...