Sunday, March 27, 2011

ஆதிரனுக்கு.... சில முடிவுறு சொற்கள்....

-->


ஆதிரன்.....இது நான் உங்களுக்கு வெயில் காலத்தில் எழுதும் கடிதம், தயவு செய்து குளிர்காலத்தில் படிக்காதீர்கள். வார்த்தைகள் அதற்கான வெளிகளை மாற்றிக்கொண்டு விடுவதோடு அர்த்தங்களையும் தீர்மானித்துவிடும். உங்களது வாசிப்பு முன் தங்கிவிட்டது என்பதை, கொற்றவையின் கவிதைகளோடு என் சமீப கவிதைகளை ஒப்பிட்டுப் பேசியதிலிருந்து தெரிகிறது.

என்னால் கொற்றவையின் கவிதைகளை தரம் பிரித்துப் படிக்கும் அளவுக்கு இப்பொழுதுள்ள நிறக்குருடு ஒத்துழைக்கிறது.முழுக்குருடாகும் நிலையை நான் வரவேற்கிறேன். கொற்றவை எனக்குக் கிடைத்த நல்ல மாணவி. கூடவே என்னை ஆதிக்கம் செய்யும் வல்லமையையும் ஒரு சேரப் பெற்றிருக்கிறார். நீங்கள் அவரைக் குறிப்பிடுவது, அல்லது ஒப்பிடுவது அவர் என்னருகில் இருக்கிறார் என்பதைத் தாண்டி வேறில்லை என்று நினைக்கிறேன். நல்லது அவராவது கவிதைகளை எழுதட்டும். எனக்கு விருப்பமான கவிதையை முழுமுற்றாக, அவர் எழுதி, அது என்னை சற்று எச்சரிக்கையடைவும், அதே கணத்தில் கொண்டாடவும் வைக்கும் போது, நான் என் கவிதைகளைக் குறித்து அவரிடம் விவாதிப்பேன்.

கவிஞரிடம் பேசும் போது கவனமாக இருக்கவேண்டுமில்லையா  ஆதிரன். கவிஞர்கள் தங்கள் கவிதைகளுக்கான ஆயுதத்தை தீட்டும் போது, ஆயுதத்தின் மறுபுறம் மற்ற கவிதைகளுக்கான விமர்சனத்தையும் தீட்டுகிறார்கள். கூரிய, பட்டை தீட்டப்பட்ட, வழிபடும், மற்றும் கொலைக்கருவியுமான ஆயுதம். பார்க்கலாம்.

ஆதிரன்…. இப்பொழுதுதான் வாசிப்பது எப்படி, நீதி என்றால் என்ன, படைப்புகளை எவ்வாறு புரிந்துகொள்வது, விளைவுகள் என்ன என்ற கேள்விகளெல்லாம் உங்களுக்கு வந்திருக்கிறது. நல்லது இதற்கு மருந்து பதில்கள் அல்ல, நல்ல புத்தகங்கள். அதையும் பட்டியிலிடு எனக் கேட்டு என் நாவல் வேலைகள், மற்றும் அவதூறுக்கான எதிர்வினைகள் செய்வது போன்ற வேலைகளைத் தள்ளிப்போட வைக்காதீர்கள்.

எனது ஆழ்ந்த விரிவான படிப்புகள் என்னை குறளியாக்குவதிலிருந்தும், மத, ஜாதிய வெறுப்புக்களை சுமக்கும் அடிமையாக மாற்றமலும் வைத்திருக்கிறது. இப்பொழுது இவ்வளவே. குறளி என்னவென நீங்கள் என்னைக் கேட்டால் நான் பதில் சொல்லமுடியாது திகைத்து விடுவேன்.

கா. மார்க்ஸ், அ.மார்க்ஸ் இவர்கள் எதிர்வினைகளைத்தாண்டி நிறைய எழுதியிருக்கிறார்கள் என்கிற தங்களின் கண்டுபிடிப்பை வியக்கிறேன். இவர்களைப் படித்தவர்கள் கிசுகிசுக்களை உற்பத்தி பண்ணும்போது நான் கிசுகிசுக்களை மறந்துவிட்டு அவர்கள் கூறும் கிசுகிசுக்களின் உளவியலை ஆராய்கிறேன்.

நான் நீதியையோ, நியாயத்தையோ எதிர்பார்த்து நாட்டாமைகளின் முன் நிற்பதில்லை. நீதி இது, உத்தமம் இது என்று இனம் பிரித்து, நெஞ்சுருதியோடு சொல்பவர்களிடத்தில்,  அப்படியென்றால்…என்ற கேள்வியை மட்டுமே வைக்கிறேன். என் வார்த்தைகள் உங்களுக்கான அகராதியில் எப்படித் தப்பி, ஒளிவு மறைவுகளுக்கான வேலையைச் செய்கின்ரன எனத் தெரியவில்லை. சூன்யம் வைத்தவரை விரைவில் நாமிருவரும் கண்டுபிடிக்கலாம். ஒரு சமயத்தில் விட்டு விடு என்கிறீர்கள், மறு சமயத்தில் ஏன் என விளக்கமும் கேட்கிறீர்கள். நான் கேட்டதையே நீங்களும் என்னிடம் கேட்கிறீர்கள். உங்கள் அகராதியில் நீதி, அறத்திற்கான பொருள்கோடல்களை விளக்கினால் அதையும் கற்றுக்கொள்கிறேன்.

இறுதியாக படைப்பாளிக்கு இது இது தேவையான் எழுத்து, இது தேவையில்லை என்கிற, உங்களது பாலர் பாட அட்டவணையில் இருக்கும் பட்டியலில் என் பெயர் எக்காலத்தும் இடம்பெறப்போவதில்லை. நீங்கள் நட்பின் பெயரால், அதைக் கொஞ்சி, முத்தமிட்டுத் திணித்தாலும் அது பட்டியலிலிருந்து துருத்திக்கொண்டு இருக்கும்.

என் வாசிப்பு எப்படி என் தேர்வோ, அதே போல் என் எழுத்தும் என் தேர்வே. இதுவரையில் நீங்கள் மதிக்கிற எழுத்தாளர்கள் வைக்கும் கட்டுரைகளையோ, விவாதங்களையோ நீங்கள் என்னிடத்தில் இவ்வளவு நம்பிக்கையுடன் விவாதித்ததில்லை. இப்பொழுது என் அவதூறுக்கான துறை சார்ந்த எழுத்து உங்களை உசுப்பி விட்டதோடு மட்டுமல்லாமல், கேள்விகளையும் கேட்க வைத்த, அதன் அதியசங்கண்டு வெட்கமடைகிறேன்.

தத்துவங்களையும் அறங்களையும் என் கவிதைகளில் நீங்கள் கண்டுபிடித்த தருணங்களில் நீங்கள் தத்துவம் எது அறம் எது என்று விசாரித்துக்கொள்ளுங்கள். மேற்கூறிய இரண்டையும் நான் கவிதைகளில் வைத்து உங்களை அலுப்படையச் செய்தது எனக்கு மிகுந்த கொந்தளிப்பான மகிழ்ச்சியைக் கன்னாபின்னாவெனத் தந்துகொண்டிருக்கிறது. நீங்கள் உருவமுடியா வரிகளைத் தரமுடியாமல் போன எழுத்து முறையை நான் யோசிப்பதோடு, ஏன் நம்மால்  உருவமுடியவில்லை என்பதையும் சந்தேகியுங்கள். ஆசிரியர்கள் இரண்டு வகை. ஒன்று மாணவன் கற்றறிந்த் ஆசிரியர்களை போட்டுத் தாக்கும் ஆசிரியன், இரண்டாவது மாணவ அறிவைப் போட்டுத்தாக்கும் ஆசிரியன். இந்த அடிமுறைகளை கவனத்தில் கொண்டால்  சொல் வர்மம், அறம் பாடுதல் போன்ற சித்திகள் கைகூடலாம். (சித்தப்பாக்களை மன்னிக்கலாம். சித்த – பாக்கள் இதைத்தான் கூறுகிறது.)


நீங்கள் சமீபத்தில்  அறம், தத்துவம் இவைகள் இல்லாததோடு, உங்களை சோர்வில்லாது, ஜிங்குச் சா…ஜிங்குச் சா…எனக் குதிக்க வைத்த, சமீபத்தில் வந்த கவிதை நூலை எனக்கு சிபாரிசு செய்தால், அவ்வாசிரியரிடம் உங்கள் வாசிப்பு மனத்தை மதித்து, உரையாடுவேன். (அவற்றை நான் வாசிக்காமல் இருந்திருக்கலாம். மிக முக்கிய வேண்டுகோள்,  தமிழில் நூலை சிபாரிசு செய்யுங்கள், சிலசமயம் மொழிபெயர்ப்புக்கு நான் அல்லாட வேண்டியதிருக்கிறது.)

நானும் எனக்காகவும், சில தவிர்க்கமுடியா தருணங்களில் மற்றவர்களுக்காகவும், மிகுந்த கட்டுப்பாடோடு இயங்கும் மனிதன்தான். அதை சற்று சுதந்திரமான வெட்கத்தோடு சொல்லிக்கொள்கிறேன். ஆனால், ஆதிரன்…. அடிக்கடி உங்களது வார்த்தைகளில் சோம்பலும், அயர்ச்சியும், எரிச்சலும் அடிக்கடி வந்து விழுகிறது. இது இயேசு பெருமான் கூறிய பற்கடிப்புகளுக்கு கொண்டு சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நான் செய்ய வேண்டிய வேலைகளுக்கு மத்தியில், இதை உங்களுக்காகச் சொல்கிறேன்.

புனைவை எழுதுவதிலிருந்து என்னால் தப்பிக்கமுடியாது என்று எனக்குத் தெரியும். மண்டைப்புளு சதா உருத்திக்கொண்டே இருக்கிறது. சிறுது காலம் சாக்கடையில் ஊறட்டும் என்று விட்டு வைத்துள்ளேன். ஆனால் அது சாக்கடை பற்றிய ஞானத்தை முழுமுற்றாக எனக்கு தரவேண்டும். இதுவே அதற்கு நான் விதித்த சட்டம். உண்மையில் இதிலிருந்தே ஆகப்பெரிய உளவியலைக் கற்கிறேன். நாவலை எழுத ஒரே சமயம் நான் புத்தனிடமும், பக்த கச்சனாவிடமும், சன்னாவிடமும், ஆம்ராவிடமும், சுத்தோதனனிடமும், அன்னை மாயாவிடமும் பேசி, வாதிடவேண்டியிருக்கிறது. நாவலை நான் எழுத இது மிகுந்த உத்வேகத்தை அழிக்கிறது. சக மனித உளவியலைக் கணக்கில் கொள்வதோடு, பிணங்களின் உளவியலையும் நான் கற்க வேண்டியிருக்கிறது. அதற்காக, பிணங்களின் அனுபவத்தை நான் உயிரோடு இருந்து அனுபவிக்க வேண்டிய கொடிய விதிமுறைகளும் அதில் அடங்கி இருக்கிறது. இதுவே நான் எனது எழுத்துகளுக்கான மூலப்பொருட்களைச் சேகரிக்கும் முறை, தாஸ்தாயெவ்ஸ்கியை ஆழ்ந்து கற்றவராக அறியப்பெற்ற, அறத்தை தன் குதத்திலிருந்து இந்துத்துவ குசுவாய் விடும் வல்லமை பொருந்திய ஜெயமோகன், ஏன் இன்னொரு மனிதனை நொண்டி நாய் என்று திட்டுகிறார். அதன் உளவியல் என்ன, என சக மனிதர்களின் எழுத்தை, வாசிப்பை நான் இனங்காண வேண்டியிருக்கிறது. இதை ஒரு முறை எழுதி, உங்களிடம் பேசுகையில் நீங்கள் தேவையற்ற வேலைகள் என்றீர்கள். ஆனால், துரதிருஷ்டம் அவதூறுகளுக்கான எதிர்வினைகளுக்கு  சட்டென எழுத்துக்களைத் தட்ட்ச்சு செய்துவிட்டீர்கள். உங்கள் விருப்பங்களையும் இதிலிருந்தே அறிகிறேன். (புனைவை எழுதுவதற்கான மனநிலையையே நான் உங்களுக்கு விளக்கச் சிரமப்படும் போது, புனைவை எப்படி விளக்கப்போகிறோம் என்ற அச்சமும் பிடித்தாட்டுகிறது.)

ஆதிரன்…. என் வாழ்வில், சென்னைக்கு நான் வந்தபிறகு நீங்கள் அறியாத பகுதிகள் எதுவும் சொற்பமே. என் எழுத்துக்களோடு எனக்கான குடும்பத்திற்கான கஞ்சியையும் நான் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. சாவு என்னை தன் மடியிலிருந்து இருமுறை தூக்கியெறிந்திருக்கிறது. சாவை நான் மன்னிக்கிறேன். என் வயது இப்பொழுது 31, விரைவில் 32 ஆகும் அதிசயம் நிகழப்போகிறது. (இது வருடத்துக்கொருமுறை தவறாது நிகழ்ந்து விடுவதோடு, ஆச்சரியமும், ஒவ்வொரு முறையும் அதே அளவு நீடிக்கிறது) ஆனால் வயதை ஞானத்தின் காலில் போட்டு மிதித்துவிட்டு,  எத்தனயோ ஆளுமைகள் 30 களிலேயே சாதித்திருக்கிறார்கள். கா. மார்க்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சிக்கானஅறிக்கையை எழுதும் போது 30 வயது.  அன்று இத்தகைய சூழலை அவருக்கு அழித்திருக்கும் நெருக்கடிகளை வாழ்த்துகிறேன். இளம் வயதிலேயே தன்னைத் தேர்ந்துகொள்ளும் வல்லமை வாய்த்த ஆளுமை அவன். நானோ இன்னும் என் மூளையில் சமூகம் ஏற்றிவைத்த வேண்டாத குப்பைகளை கழிப்பதற்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவன். எனக்கு வயதானதும் சொல்லியனுப்புகிறேன். என்ன செய்தாய் என்ற கேள்வியைத் தாண்டி, என்ன செய்யலாம் என்பதை, என் புத்தகங்களில் தாங்கள் படித்துவிட்டு வரலாம் என, இப்பொழுது உறுதியாகச் சொல்கிறேன். வாக்கு தவறினால் அதையும் மன்னிப்புக் கடிதத்தின் வாயிலாக தாண்டிச் செல்வேன்.

ஆதிரன்…அதிகாரத்தை எதிர்ப்பதற்கு நான் அடையாள அட்டைகள் வைத்துக்கொள்வதில்லை. அப்படி அதிகாரத்தை எதிர்க்கும் வழிமுறைகளை நான் கண்டு பிடித்து சொல்லும் பட்சத்தில், நீங்கள் அதில் முறைப்படி நீங்கள் சந்தா செலுத்தி உறுப்பினராகலாம். அது வரையில் நீங்கள் முயற்சி செய்யுங்கள். சோர்ந்துவிடவேண்டாம்.

உண்மையில் இது நான் தப்பிச்செல்வதற்காக அல்ல, கண்டுபிடிப்பதற்காக. ஒரு புனைவை எழுதவேண்டும் என்கிற என் ஆசையை மதித்து. இப்பொழுது அதை எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்களும் புனைவை எழுது என்கிறீர்கள். ஆனால் ஆதிரன், ஒன்று நிச்சயம். அது நீங்கள் மனதில் வைத்திருக்கும் புனைவுகளின் கோட்பாட்டுச் சட்டகங்களுக்குள் அடங்காது. ஆனால் அதுவும் அவதூறுகளுக்கான எதிர்வினை போல், தேவையில்லாமல் உங்களுக்கு மாறலாம். திருப்தி என்பதும் தனி மனித குணமே. அதனால்தான், நீங்கள் விரும்பிய வகையில் அவதூறுக்கான இலக்கியத்தை நான் படைக்கமுடியாமல் போயிற்று. சில சமயம் பற்கள் மூளையின் ஆணையை இழந்து, நாக்கைக் கடித்து விடுகிறது. சிறு கசிவு. அளவு கூடிய எரிச்சல்.

 ஆதிரன்...உங்களுக்கும், பாஸ்கர் சக்திக்குமான, உங்கள் இருவரின் மனமும் கருதிக்கொண்டிருக்கும், படைப்பிலக்கியத்தை பற்றி விரிவாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் நீங்கள் எதிர்பார்க்கும் படைப்பிலக்கியத்தை என்னால் எழுத முடியாது.


எதையும் மறுத்து நான் எழுதியதில்லை. அப்படி ஒரு நோய் எனக்கிருந்தால் நான் கூடிய விரைவில் குணமடைவேன். ஆனால், கேள்விகளே மறுப்பு, ஆபத்து, கெட்டது என்று புரிந்துகொள்ளப்படுகிற போது, என் நோய் முற்றட்டும் என்று விட்டு விடுவேன்.ஆதிரன் உங்களுக்காக, ஒரே ஒரு பதிலில் இதனை நான்அழுத்தமாகக் கூறுகிறேன். தொடர்ந்து வாசியுங்கள் ஆதிரன். ஆசிரியனை நம்பாதீர்கள். அவன் நிறக்குருடு. மற்றும், நீதி, அறம், தத்துவங்கள் அவன் கண்டறியாத உடல்.2 comments:

 1. வசு..உனது முடிவுருசொற்களில்அகமகிழ்ந்தேன்.. என்னை தாத்தாவாக்கியதற்கும் நன்றி. உன் இனிய பணிகளை தொடரலாம். இது அறிவுரை இல்லை. நான் சொல்வதெல்லாம் உனக்கு எதிரான பதிவுகள் என்பதுபோல உன் பதில்கள் இருக்கிறது. இதில் விவரம் என்னவென்றே தெரியாமல் இதமான கட்டுரை என்று உனக்கு ஒரு பாராட்டுவேறு ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். உனக்கு அறிவுரை சொல்லவோ உன் மீதான ஆளுமை செலுத்தவோ நான் ஒரு போதும் முயன்றதில்லை என்பதற்கு நீ மறுப்பு தெரிவிக்க மாட்டாய் என்றே நம்புகிறேன்.. நான் செய்ததெல்லாம் suggessions மட்டுமே. ஆனால் அதிலிருக்கும் அக்கறையை உனது பதில்கள் மூலமாக கேலி செய்துவிட்டாய். நான் உன்னிடம் கேட்ட கேள்விகள் உனக்கானவை. எனக்கான புத்தகங்களை தெரிவு செய்ய எனக்கு சிறுவயதிலிருந்தே தெரிந்திருக்கிறது. சிறந்த அல்லது தேவையான புத்தகங்கள் எது என்று நான் யாரிடமும் கேட்கத்தயங்கியது இல்லை. கடந்த பத்தாண்டுகளில் நான் படித்த புத்தகங்கள் அறுபது சதம் உன்னிடம் இருந்தே பெறப்பட்டது.
  *************
  குரளி. நல்ல ஒப்புதல் வாக்குமூலம். உனது நேர்மையான பதிலை நான் வணங்குகிறேன். குரளி என்றால் எனக்கும் தெரியும்.
  *******
  நட்பின் பெயரால் நான் திணிக்கிறேன் என்கிற சொல்லும் எனக்கு ஒரு அவமானம்தான். கொற்றவை உனக்கு அருகில் இருக்கிறார் என்பதற்காக அந்த கவிதையை நான் மேற்கோள் காட்டவில்லை என்பது உனக்கு புரியவில்லைஎன்றால் அதுவும் எனக்கு எமாற்றமுமும் அவமானமுமே. இப்படி அலுப்பு அவமானம் எல்லாம் வெறும் அக்கறையால் வந்த உணர்வுகள் என்பதை நான் எப்படி விளக்க. நாம் நிறைய பேசியிருக்கிறோம் வசு.. நிறைய.. நான் யாரிடமும் என் வாழ்நாளில் உன்னிடம் உரையாடிய அளவு பேசியதில்லை. அதன் விளைவுகள்தான் இந்த எனதான எழுத்து பதிவுகள்.
  ****************
  எனவே... நீ ஒம்பாட்டுக்கு தாளத்த போடு.. நான் விலகிக்கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் எதையாவது சொல்லவந்து வாங்கிக்கட்டி கொள்வதை இனிமேல் நிறுத்தவேண்டும் நான். இனி பெரியவராக தாத்தாவாக இருக்கும் நான் சொல்லப்போவது என்னவென்றால்: உனது மன்னிப்பு கோரல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
  ************

  ReplyDelete
 2. வணக்கம் ஆதிரன்.


  ஆதிரன்...நான் முன்னமே சொன்னேன் அது வெயில் காலத்தில் எழுதிய மடல், குளிர் காலத்தில் வாசித்தால்..... அவ்வளவே.

  எனக்கான தாளத்தை வேண்டுபவர்களுக்கு, நான் என் செவிகளை தாரை வார்க்க முடியாது.மன்னிப்பை ஏற்ற பெருந்தன்மையை ஏற்றுக்கொள்கிறேன். பின்னூட்டம் போட்ட நண்பர் குறித்து கவலையுற வேண்டாம் ஆதிரன். அவருக்கு விசயங்கள் குறித்து மிக ஆழமான அளவிலேனும் அல்லாமல், ஓரளவுக்கு அது தெரிந்திருக்கும் என நான் நம்புகிறேன்.அவரவர்களின் தனித்த தேர்வு, தனித்த விருப்பம்.எல்லாவற்றிற்கும் மேலாக இதில் தெரிந்துகொள்ள என் வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்றே நான் எண்ணுகிறேன்.

  எல்லாம் தெரிந்த நீங்கள் இது தேவையா என்று கேட்கவில்லையா.....


  ஆதிரன்....

  “அறிவுள்ள மனிதனுக்கு எதிரிகளை நேசிக்க மட்டுமல்லாது, நண்பர்களை வெறுக்கவும் முடியவேண்டும்.”

  - நீட்ஷே.
  வணக்கங்களுடன்.

  ReplyDelete

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...