Thursday, March 31, 2011

உணர்ச்சி வசப்படாதீர்கள் பாஸ்.......
“சிறுபிள்ளைத்தனமான புரிதல்அதீதவாசிப்புபடைப்பூக்கம்
தத்துவ ஞானம் திருகல்நடை, கறாரான அறிவுஜீவி, அகங்காரம், அகந்தை, விவாதம் தரும் அற்ப சுகத்துக்காக ஏங்குபவன்அறிவாளி,  உலகரட்சகன்,சுயமோகி, கிளர்ச்சியாளன்அ.மார்க்ஸ் வக்கீல்." பாஸ்...  இது என்னைப்பற்றிய உங்களது வரைபடம். 
( பட்டையக் கிளப்புறீங்க பாஸ்)”

வெகுளி, நெகிழ்ச்சியான உணர்வுகளைக் கொண்டவன், சம அன்பு செலுத்துபவன். இது நீங்கள் வரைந்த உங்களது குணச்சித்திரம்.

நல்லது பாஸ்....
இது சம்பந்தமாய் நான் எழுதும் கடிதத்திற்கு நீங்கள் பதிலளிக்கமாட்டீர்கள் என்ற உங்களது நம்பிக்கையை நானும் மதிக்கிறேன். சுய அகங்காரம், சுயமோகம் இவைகளை  நான் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். நல்லது. அதில் அவை தெரிவதாக சம்பந்தப்பட்ட நபர்கள் சொன்னால் விவாதிக்கலாம். அந்த சமபந்தப்பட்ட, உங்களுக்கும் எனக்குமான நண்பரை நீங்கள் இதற்கு பதில் எழுதாததன் மூலம் தவிர்க்கலாம்.

பாஸ்..எனது வலைப்பக்கத்தில் அதிகமும் நான் விவாதித்தது ஆதிரனிடம் மட்டுமே. அதில் நீங்கள், சுயமோகம், அகங்காரம் இவைகளைக் கண்டால் அதற்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். ஆம்..பாஸ் எனக்கும் ஆதிரனுக்குமான இலக்கியம் சம்பந்தமான, கொடூரப் பற்சக்கரங்களில் ஊற்றப்படும் மசகு எண்ணெய், எனது அகங்காரமும், சுயமோகமும்தான். அதை நான் ஊற்றாவிட்டால் பற்சக்கரம் கிறீச்சிட்டு நின்றுவிடும் பாஸ். இதை ஆதிரனும் அறிவார். நான் போனில் பேசும் எல்லைகளைத் தவிர்த்து பதிவு செய்வதும் அதனால்தான். எனது சுயமோகத்தை, அகங்காரத்தை அவர் விரும்பினால், பதிலுக்கு, அவரது சுயமோகமும், அகங்காரமும் வெடித்தால் நான் மகிழ்வேன். ஆனால் இவையன்றி எனக்கும் அவருக்குமான நட்பு சாத்தியப்படாது. அது மிக மோசமான ஓலத்துடன், எதிரெதிரே சுற்றி இயங்கும் சக்கரப்பொறி. ஒரே திசையில் சுற்றினால் இயக்கம் வெடித்துவிடும்.


மார்க்ஸ் ஒரு ஆளுமை என்று நான் குறிப்பிட்டதற்கு என்னை அவருக்கு வக்கீலாக ஆஜர் செய்த உங்களிடம் நான் அதற்கு கட்டணம் கேட்கப்போவதில்லை. அதே சமயம்  ப்ரியா தம்பிக்கு நீங்கள் வக்கீலாக மாறிவிட்டீர்கள் என்றும் சொல்லப்போவதில்லை. நல்லது. நான் வாசக நிலையைத் தாண்டி அ.மார்க்ஸ்க்கு வக்கீலாகும் புதிய பொறுப்பு வந்திருக்கிறது. அதை ஏற்பதா, தட்டிக்கழிப்பதா, அதன் பாரதூரமான விளைச்சல்கள் என்னவென்று யோசித்துச் சொல்வேன்.

பாஸ்...     
இந்தக் கிளர்ச்சி என்கிற வார்த்தைகளை நீங்களும் ப்ரியா தம்பியும் அடிக்கடி உபயோகிக்கிறீர்கள். அ.மார்க்ஸ்க்காக வாதாடுவதில் நான் கிளர்ச்சியடைவதாக நீங்களும், கவிதைகளில் வரும், யோனி முலை என்ற வார்த்தைகளில் கிளர்ச்சியடைவதாக ப்ரியா தம்பியும் சொல்கிறார். பாஸ்...எனக்கு இதை எப்படிப் புரிந்து கொள்வது, என்கிற கிளர்ச்சிக்கு நான் ஆளாக விரும்பவில்லை. எனவே, அதன் அர்த்தத்தை எப்படி புரிந்துகொள்வது என்று எனக்கு  வகுப்பெடுக்கவாவது தயவு செய்து நீங்கள் எனக்குப் பதில் எழுத வேண்டும். பொதுவாக இந்தக் கிளர்ச்சி என் வரையில் யாரும் என்னை என் விருப்பமில்லாமல் செய்யமுடியாத ஒன்றாகவே நான் நினைத்திருக்கிறேன். 

ப்ரியா தம்பி உங்களுக்கு எழுதிய கடிததத்தில் நீங்கள் அவரின் வார்த்தைகளை நெகிழ்ந்து விளக்கியது போல், எனது கேள்விகளையும், வார்த்தைகளையும் நீங்கள் நெகிழ்ச்சியான மனநிலையில் வாசித்திருக்கலாம். இது என் வேண்டுகோள்தான். ஆலோசனை அல்ல. ப்ரியா தம்பியின் நெகிழ்ச்சியான மனநிலை கொண்ட வார்த்தைகளை விளக்கி உரை செய்ததோடு,  நீங்கள் சொல்லியது போல், சம அன்பை செலுத்திய எனக்கு மட்டும் உரை செய்யவில்லை. என்ன செய்வது,  அதற்குள் என் எழுத்துக்களில் அகங்காரம், சுயமோகம் எல்லாம் வந்து குடியேறி விட்டது.

என் மேல் நான் கொண்ட சுய மோகம், நான் சொத்தென வைத்திருக்கும் அகங்காரம் எல்லாம் இழி குணங்களாக உங்களுக்குத் தெரிகிறது. இத்தகைய இழி குணங்களோடுதான் நான் மற்றவர்களையும் அணுகிறேன். உங்களுக்கு அது வேண்டாமென்று விலக்குவதோடு, இத்தகைய குணங்கொண்டவர்கள் உங்களோடு இல்லை எனவும், உத்தமர்கள், பற்றற்ற புத்தர்களை நீங்கள் நண்பர்களாக அடைந்திருக்கிறீர்கள், மனித மனத்தின் எந்த அழுக்கும் இல்லாத தூயவர்களை கண்டடைந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் எழுதிய எளிய வரிகளின் மூலமான நான் அறிந்துகொள்கிறேன். ஆனால் நாளுக்கு நாள் அயோக்கியர்களை நான் சந்திக்கவேண்டியிருப்பதோடு, என் அயோக்கியத்தனத்தை அவர்களது அயோக்கியத்தனத்தோடு உரசியும் பார்த்துக்கொள்கிறேன். நல்ல முறையில் அது பயனளிக்கிறது.

பாஸ்....
உங்களுக்கு காலங்கடந்து தெரிந்த, எனது சுய அகங்காரம், சுய மோகம் இவைகள் எல்லாம், என்னைச் சந்தித்த சில நொடிகளிலேயே கண்டடைந்தவர்கள் எனக்கு முத்தங்களையும், அதற்கிணையான துரோகத்தையும் அள்ளி ஊதியிருக்கிறார்கள். பதிலுக்கு நானும் வழங்கியிருக்கிறேன். அவர்களை வெறுப்பது என்னால் ஆகமுடியாத காரியம். அவர்கள்தான் என்னைப் பொருத்த வரையில் எனக்கு எல்லாம்.


சிறுபிள்ளைத் தனமான புரிதல்வாசிப்பு, படைப்பூக்கம், தத்துவஞானம் திருகல் நடை, கறாரான அறிவுஜீவி, அகங்காரம், அகந்தை, விவாதம் தரும் அற்பசுகத்துக்காக ஏங்குபவன்,  அறிவாளி, உலகரட்சகன்சுயமோகி, கிளர்ச்சியாளன், இவர்களை கைகள் விரித்து வரவேற்கக் காத்திருக்கிறேன். பதிலுக்கு என்னிடமும் இவை போன்ற வஸ்துகள் நிறைய உள்ளனஅதற்கும் மேலாக நான் எழுதுகிறேன் என்பதையும், நான் அகங்காரத்தோடு சொல்லிக்கொள்கிறேன்.

 ப்ரியா தம்பியின் திறன் மிக்க எழுத்துக்களில் என்னென்ன காணக்கிடைக்கிறது என்பதை நீங்கள் நட்பு சார்ந்து எழுதிய உங்கள் வார்த்தைகளில், உங்கள் மனநிலையை, நடுநிலைமையை விளக்கி விட்டீர்கள். 

பாஸ்...
என் உறுப்பு சார்ந்த கவலைகளை நானே பார்த்துக்கொள்வதோடு, என் கிளர்ச்சிகள் குறித்து, ப்ரியா தம்பி பொது வெளியில் விவாதிக்கும் கவலையை அவருக்கு நான் எப்படி அளித்தேன் எனத் தெரியவில்லை.  அ.மார்க்ஸை இப்படி பேசியது ஏன் என்று நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் தரமுடியாது, என்பதோடு ஞாநியைக்கூடத்தான் கீற்று திட்டியது என்கிறீர்கள், அதற்கு நானும் பொங்கவில்லை என்று நேரடியாக   சுட்டிக்காட்டி அதை அடைப்புக்குறிக்குள் அடைக்கியிருக்கீர்கள். அடைப்புக்குறியை நீங்கள் தாரளமாக நீக்கலாம்.  ஞாநி  என்னைப்பொருத்தவரையில் ஆளுமை அல்ல. அப்படி இல்லாவிட்டாலும், ஞாநியை ஒரு பத்திரிக்கையாளனாக மதிப்பேன்.( என் தேர்வு இதுதான்) ஞாநி எத்தனையாவது பொண்ட்டாட்டி கட்டியபிறகு, அல்லது எத்தனையாவது பொண்ட்டாட்டி கட்டாத பிறகு  பாலியல் குறித்து எழுதினார் என்று கீற்றுவில் விவாதம் வந்திருந்தால், அந்தச் சுட்டியை எனக்கு இணைக்கலாம். இதற்கும் நீங்கள் பதில் தராததன் மூலமாக, நான் அச்சுட்டியை இழக்கலாம். தேடிப்பார்க்கிறேன், ஆனால் கூட்டுக் கலவி, அல்லக்கை, ரெண்டாவது பொண்டாட்டி என்ற குறிச் சொற்களின் மூலம்தான் தேடமுடியும். தேடுகிறேன்

கூறியது கூறல் என் தவறுதான். ஆனால் பதிலை தட்டிக்கழிக்கும்போது, தேவையில்லை எனும் போது, அதைச் சுட்டிக்காட்டலாம் அல்லவா. நான் கறாரான அறிவுஜீவி என்பது போல், அதே அளவுக்கு உணர்வுகளையும் கட்டுபடுத்துபவன்தான் பாஸ். எனக்கும் நான் தேர்ந்தெடுத்த, விரும்பிய உணர்வுகள் இருக்கிறது. எனக்குத்தான் உணர்வுகள் இருக்கிறதே என நான் பாட்டுக்கு அவிழ்த்துவிட்டால் அது தரும் சேதங்களை நான் அறிவேன். உதவிகள் செய்த நண்பர்களுக்கு நானும் உழைத்திருக்கிறேன் என்பதில் நுட்பம் ஏதுமில்லை. செய்தாருக்குச் செய் என்பது மட்டுமே.  நீங்கள் எனக்குச் செய்த உதவிகளை சொல்லமுடிகையில், நானும் சொல்லலாம்தானே, இல்லை எனக்கு அந்த உரிமை இல்லையா. இதற்கெல்லாமா பாஸ் உணர்ச்சிவசப்படுவது. 

பாரதியின் தந்தை. குடும்ப நண்பர் என்று மார்க்ஸை நெகிச்சியுடன் கூறியதை நான் நான் நக்கலடிப்பதாக கூறுகிறீர்கள். அதே பாரதியின் தந்தையை, குடும்ப நண்பரைத்தான் ப்ரியா தம்பி ரெண்டு பொண்ட்டாட்டிக்காரர் என்றார், மார்க்ஸ் பற்றிய உங்களது மதிப்பீடுகளை நண்பனாக கேட்டதற்கு ப்ரியா தம்பியை என்னுடன் உங்களது அன்பின் தராசுவில் நிறுத்திப்பார்த்தீர்கள். நான் வெறும் எடைக்கற்கள் அல்ல பாஸ். ஞாநியை அவதூறு செய்தபோது மார்க்ஸ் பேசினார், ஞாநி அ.மார்க்ஸ்சின் உழைப்புக்கு தலைவணங்குகிறேன் எனச்சொல்லியிருக்கிறார். அதற்கு முன்னால் அவர்கள் இருவருக்கும் பெரும் விவாதங்கள் நடந்துள்ளது. அதையெல்லாம் ஏன் அவர்கள் பொது வெளியில் வைக்க வேண்டும். அப்போது ஞாநி அ.மார்க்ஸ்க்கு வக்கில் இல்லை, அ.மார்க்ஸ் ஞாநிக்கு வக்கில் இல்லை. நான் வக்கீல். நான் கேட்ட எக்கேள்விக்கும் பதில் தராது நட்பு, புத்திசாலி என்ற அளவிலேயே உணர்ச்சி வசப்பட்டு பதில் கூறியதோடு, நட்பையும் துண்டிப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்.

பாஸ்...
நான் இதுவரை நண்பனின் தோழியை நாமும் மதிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்ற நிலையில்தான் அந்தக் கேள்வியை உங்களுக்கு எழுதினேன். இனி நான் உங்களுக்கு இது சம்பந்தமாய் எழுதப்போவதில்லை. என் கிளர்ச்சிகள் குறித்து, உறுப்பின் எழுச்சி குறித்து ஆராய்ச்சி செய்யும் ப்ரியா தம்பிக்கு என் ஆய்வுகளை நானும் சமர்ப்பிப்பேன். அதை நான் கண்காணிக்க, அதுகுறித்து  விரிவாக விளக்க எனக்கும் உரிமை உண்டு. அதை பதிவு செய்வதோடு, அதை இலக்கியமாக்கி, சர்ர்சைக்குரிய கட்டுரையாக்கி அவருக்கு எப்படி, எந்த தட்டில் வழங்குவது என்று எனக்குத் தெரியும். வாங்குவதற்கான கரங்களை அவர் தயார் செய்துகொள்ளட்டும். இனி என் பாலியல் விருப்பு வெறுப்புகளை விவாதிக்கத் தயார். 

ஆனால் பாஸ்...நீங்கள் எனக்குப் பதில் கூறாமல் குட்பை என்ற வார்த்தைகளின் மூலம் விடைகொடுத்திருக்கிறீர்கள், ஆனால் இது போன்ற விவாதத்தை கீற்றுவில் நடத்தி குட்பை சொன்னால், விடாது துரத்தி, காண்டம் கணக்குகளையும் சமர்ப்பிக்கச் சொல்லுமாறு பின்னூட்டங்களும், அதைத்தொடர்ந்து, வசைகளும் வரும்.

நான் கேட்டது உங்களுக்கு, என் வார்த்தைகளில் புரியாததோடு பல்வேறு அவலச் சுவைகளை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை குட்பை, மற்றும் இதர வார்த்தைகளில் அறிகிறேன். நீங்கள் எனக்கு எளிதாக விளக்கியது போல் நானும் எழுதுகிறேன்.  ( எளிதாக எழுதுகிறேன் என்று நான் சொல்லுவது கூட அகந்தைக்கான வார்த்தைகளாய் மாறலாம், என்ன செய்ய)

  “ ஏன் பாஸ்....ப்ரியா தம்பி இப்டி நாம மதிக்கிற, அ.மார்க்ஸ்ச ரெண்டு பொண்டாட்டி வச்சதுக்குப் பிறகுதான் பலான சமாச்சாரமெல்லாம் எழுதுறாருன்னு, அவரு பிரண்டு சொல்றதா சொல்லுதே, நீங்க அத சுட்டிக்காட்டக்கூடாதா, நானும் உங்களுக்கு ஒரு பிரண்டு, என்னை அது அசிங்கசிங்கமா எனக்கு எதுல கில்மா வரும்னு எழுதுது, அதே மாதிரி சகப் படைப்பாளிங்களா நாம கருதுற ஷோபா சக்திய பொம்பளைப் பொறுக்கி, பொடணீல அடிவாங்குனான், லீனா விளம்பரப் பைத்தியம், போர்ட் போலியோன்னு எழுதுதே, நீங்க என் நண்பரா அத நாலு வார்த்தை கேட்கக்கூடாதா, என்ன பாஸ்...இது. ஒரே அசிங்கமாவுல்ல இருக்கு, இத எழுதவா நாம் இங்க வந்தோம்.....”

(இவ்வளவு, இவ்வளவுதான் பாஸ்.....இதற்குமேல் வேறொன்றுமில்லை.)


இதுக்குத்தான் பாஸ் நீங்கள் பதில் சொல்லாமல், புத்தக விழாவுக்குக் கூட்டிட்டுப்போனேன், நீயும் அதுவும் ஒண்ணு, இப்ப ரெண்டு பேரும், புத்திசாலியாகி சண்டை போடுறீங்க நானென்ன செய்யட்டும், எனக்கு ரெண்டு பேரும் ஒண்ணுதான்அ.மார்க்ஸ எனக்கு முன்னாலேயே தெரியும், போன்ல இதப்பத்தி கண்டிச்சேன்( என்ன பாஸ் கண்டித்தீர்கள், பதிவுசெய்தால்....மார்க்ஸ் மேல் நான் வைத்திருக்கும் அபிப்ராயத்தை பொருத்திப் பார்க்க வசதியாய் இருக்கும்), கீற்று மேடையிலேயே பேசுனேன்அப்புறம்....பேசுறதுக்கு எதுக்கு பதிவுப் புண்ணாக்கு, எனக்கு வேலைகள் இருக்கு, பிஸி, என்றெல்லாம் எழுதினீங்க...என்ன பாஸ்....இது....நான் பேசியது ப்ரியா தம்பியின் எழுத்துக்களை. நீங்கள் தட்டில்  நிறுத்தியது நட்பை.

கீற்று தனக்கு எதிராக ஒரு சொல் வந்தாலும் ங்கொய்யால,  ங்கொம்மால...என்ற சொல்லை நாக்கில் உச்சரித்துவிட்டுத்தான், எதையும் தட்டச்சு செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, விவாதம் தரும் அற்ப சுகத்துக்காக  எதையும் கொச்சைப்படுத்துபவன் நான், என்ற உங்களது வார்த்தைகளை நம்புகிறேன். ஆனால் அதிலுள்ள வித்தியாசங்கள்தான், என்னை அதை ஏற்கவிடாமல் தடுக்கிறது.

பாஸ்... 
எனது முகப்புத்தகத்திலோ, எனது வலைப்பக்கத்திலோ நான் விவாதம் தரும் அற்ப சுகத்துக்காக எங்கேயாவது எழுதியிருக்கிறேன் என்று விளக்கினால் நான் அதை சீர் படுத்துவேன். அது போன்ற விவாதங்கள் மனச்சிக்கல்களையும் மலச்சிக்கல்களையும் கொண்டு வந்து விட்டுவிடும் என்றும் நான் அறிவேன். அதே சமயம் திறன் மிக்க எழுத்தாளரான ப்ரியா தம்பியின் முகப்புத்தகம், மற்றும் கீற்றுவில் அவரது பங்களிப்புக்களை வாசியுங்கள், விவாதம் தரும் அற்ப சுகம் அல்ல பாஸ், அவை அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள். சரோஜா தேவிக்கு ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது என்றால் அது கீற்றுவின் எழுத்துகள் முன் தோற்று மண்டியிடும்.விவாதம் தரும் அற்புத, உச்ச சுகத்தில் ஸ்கலிதமானதுதான் வசுபாரதியாகிய நான், இன்னும் முலை, யோனி என்ற வார்த்தைகளை தாண்டமுடியாமல் இருக்கிறான் என்ற வார்த்தைகள்.

பாஸ்...
என் முகப்புத்தகத்தில் வலைப் பக்கத்தில் எனது புகைப்படங்கள் இல்லை. சுயமோகத்தை நான் உளவியலுக்கு உட்படுத்தினால், தலைச்சீவி பவுடர் போட்டு, நல்லுடைகள், நறுமணத்தைலங்கள் தேய்த்து உலாவ வேண்டிய அவசியம் எவருக்குமில்லையே. ஏன் பாஸ்....  இது,  சுயத்தின் மீது மோகம் கொள்ளாதவன் பிறவற்றின் மீதும் மோகம் கொள்ள முடியாது.

பாஸ்......என் படிப்பு என்னை சுய அகங்காரமென்னும் இடத்திற்கு கொண்டு வந்து விட்டது போல், உங்களது வாசிப்பு பிரியா தம்பியின் திறன்மிகு எழுத்துக்களை கண்டடைவதில் வந்து விட்டிருக்கிறது. நான் இதற்கு ஒன்றும் செய்யமுடியாது. {எடுத்துக்காட்டாக உங்களது பார்வையில் அவர் எழுதிய ஆதிவாசிகள் கட்டுரை.} என் எழுத்துக்கள் சுயமோக எழுத்துக்கள். பிரியா தம்பியின் எழுத்துக்கள் திறன் மிக்க எழுத்துக்கள். நன்றி பாஸ். தொடர்ந்து வாசியுங்கள். இதற்காக நீங்கள் என்னை வெறுத்து குட் பை சொல்லலாம், ஆனால் நான் சொல்லமாட்டேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக என்னைப்பொருத்தவரையில் நான் உங்களை நிறுத்தியிருப்பது எப்பொழுதும் வெறுக்கமுடியாத எல்லையில்தான். இன்னொன்றும் சொல்கிறேன், நீங்கள் என் மீது வைத்திருந்த நட்புக்கு குட்பை சொல்லலாம், நான் உங்கள் மீது வைத்திருக்கிற தந்தைமையை நீங்கள் விரும்பினாலும் அகற்றமுடியாது.

 “நானறிந்த எல்லைவரை எனை மிக அருமையாக சகித்துக்கொண்டு வந்த நண்பர் பாஸ்கர் சக்தியின் தந்தைமைக்கு என்னால் நன்றி கூற இயலாது. அது பொருளற்ற சொல்லாகிவிடும்.”

-  “...ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன.”

- வசுமித்ர.


2 comments:

  1. இத எழுதவா நாம் இங்க வந்தோம்....//
    அதே தான்.

    ReplyDelete
  2. ennathaan nadanthathu?...yen intha vaathangal?

    ReplyDelete

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...