Saturday, March 26, 2011

நீங்கள் என்னை அவமானப்படுத்திவிட்டீர்கள் பாஸ்....



முதலில் நான் உங்களை இங்கு எழுத வைத்ததற்காக வருத்தப்படுகிறேன், அதே சமயம் நீங்கள் எழுதியதை வரவேற்கிறேன்.

                          // படிக்கும் ஆர்வமும், ஆவலும் கொண்டிருந்த இளைஞனான உங்களை தினமும் புத்தகச் சந்தைக்கு அழைத்துச் செல்வேன். நீங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கிப் பரிசளிப்பேன். எழுதுங்கள் வசு என்று சொல்லி இருக்கிறேன்...ப்ரியாவிடமும் அது போலவே சொல்லி இருக்கிறேன்..//

பாஸ் என்னை எழுதச் சொல்லி நீங்கள் ப்ரியா தம்பிக்கு கொடுத்த ஊக்கத்தின் பெருங்கடலில், ஒரு துளியைக் கூட நான் பருகியதில்லை. உண்மையில் நான் எழுதிய கவிதைத்தொகுதி (ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்கு காரணங்கள் உள்ளன). தேனியில் கட்சி வேலை செய்த போதும், திருப்பூர், கோவை போன்ற நகரங்களில் கூலி வேலை செய்தபோதும் எழுதியவைகள். 5 வருடம் கழித்துதான் அது புத்தக வடிவம் எடுத்தது. இன்னும் சொல்லப்போனால், உங்களது பழுப்பு நிறப்புகைப்படம் சிறுகதைத் தொகுதி தேனியில் வெளியிடும் நாளில் என் கவிதைத் தொகுதியின் கைப்பிரதி என்னிடம் இருந்தது. அதில் மகள் நேயா கவிதைகள் மட்டுமே புதியது.

// இன்று நீங்கள் இருவரும் புத்திஜீவிகளாகி சண்டை போடுகிறீர்கள். இதில் எனக்கிருக்கும் சம்பந்தம். நான் உங்கள் பொது நண்பன் என்பதே....//

என்னோடு ப்ரியாதம்பியை இணைத்து இருவரும் புத்திஜீவிகளாகி சண்டை போடுகிறீர்கள் என்று தாங்கள் ஒப்பிட்டதை, வலி மிகுந்த அவமானமாக கருதுகிறேன். பாஸ் இதை, உங்கள் எழுத்து சரோஜா தேவி எழுத்து எனச் சொன்னால் எப்படியிருக்குமோ அப்படி இருக்கிறது. ஆம் பாஸ். ப்ரியா தம்பியை நான் எதிரியாக கருதுகிறேன் என்ற உங்களது எண்ணத்தின் வன்மத்தை இங்கு பதிவு செய்வதோடு, புத்தி ஜீவி என்கிற பட்டத்தையும் நீங்கள் தாராளமாக அவருக்கே ஈந்து விடுங்கள். நீங்கள் எழுதிய இவ்வரிகளை

                              //“ ப்ரியா எழுதிக்கொண்டிருக்கிற சர்ச்சைக் கட்டுரைகளில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை..//

 அடிப்படையாக வைத்துச் சொல்கிறேன். பாஸ்…நீங்கள் பத்திரிக்கைகளில் வேலை பார்த்திருக்கிறீர்கள். தீம்தரிகிட வில் பொறுப்பாசிரியராகவும் இருந்திருக்கிறீர்கள். சர்ச்சை மிகுந்த பதிவுகளுக்கும், பாலியல் அவதூறுகளுக்கும், உறுப்பின் மீதான விமர்சனங்களும் ஒன்றென உங்களால் எவ்வாறு சொல்லமுடிகிறது என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் விளக்கலாம்.

பாஸ் சென்னைக்கு வரும்போது மட்டுமல்ல பாஸ் இப்பொழுதும் நான் படிப்பதில் ஆர்வங்கொண்ட இளைஞனே, ஆனால் பாஸ்  நீங்கள் வாங்கிக் கொடுத்த புத்தகங்களைப் படித்தபின்தான், எனக்கு அறிவொளி கிடைத்தது என்கிற  ஒரு தோற்றம் உங்கள் எழுத்தில் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

 பாஸ் உண்மையில் தேனியில் நீங்கள் என்னை சந்தித்த முதல் சந்திப்பிலும் நான் நல்ல வாசகன். இதழ்களில் படைப்புகளை வெளியிடாத  படைப்பாளி. முதல் சந்திப்பில், அதற்குப் பிறகு என் இல்லம் வந்தபோது  நானும் உங்களுக்கு புத்தகம் கொடுத்ததோடு விரிவான ஒரு நாவலை  எழுதச்சொன்னேன். நீங்களும் கமிசன் கடைகளைப் பற்றி எழுதுவதாகச் சொன்னீர்கள்.  

 தேனியில் நீங்கள் கண்ட வடிவேல்முருகனின் வாசிபை வசுமித்ரவாகிய  நான் இப்பொழுது நினைத்துப் பார்க்க, அதை எட்டிப்பிடிக்க அச்சமாக இருக்கிறது. குறைந்தபட்சம், அப்பொழுது வடிவேல்முருகன் ஒரு நாளைக்கு 600 பக்கங்களை படித்துவிடுகிறவனாக இருந்தான். கோவையில் சித்தாள் வேலை செய்யும் போதும், திருப்பூரில் பனியன் தொழிற்சாலையில் வேலை செய்யும் போதும் இதே நிலையே. அங்கெல்லாம் எனது கஞ்சிக்கும் வேலைக்கும் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் என்னால் இருக்கமுடிந்தது.

ஆனால் வசுமித்ர சென்னைக்கு வந்தபோது இருப்பிடம் கூட இல்லை. உண்மையில் சென்னையில் நான் வாழ்ந்தது நண்பர்கள் இட்ட பிச்சை. அதில் நீங்களும் ஒருவர். ஆனால் பாஸ் எனக்கிட்ட பிச்சையை நான்  உழைப்பாய் திருப்பித் தந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். இதுவரை சென்னையில் எனக்குச் செய்தவர்கள் யாவருக்கும் வசுமித்ர தன் உழைப்பை பதிலாய் தந்திருக்கிறான்.


                      // ப்ரியா இந்த மாதிரி எழுதத் துவங்கியபோதே போனில் இது பற்றி நான் விமர்சித்தேன்... பொதுவெளியில் நான் ப்ரியாவை கண்டித்திருக்க வேண்டும் என்பது உங்கள் அவா...எனக்கு அது தேவையில்லை... பேசிக்கொள்ள முடிகிற நண்பர்களுக்கு நடுவில் எதுக்கு பதிவு புண்ணாக்கெல்லாம்?//

இவ்வரிகளை நான் எப்படிப் புரிந்துகொள்வது. போனில் விமர்சனம் செய்துவிட்டேன், பொது வெளியில் பிரியாவை நான் கண்டித்திருக்க வேண்டும் என்ற என் அவாவை விளக்கியிருக்கிறீர்கள். நேரில் பேச வேண்டிய நட்பை அவ்வளவு ப்ரியமாக, எந்தப் புண்ணாக்கிற்காக பாஸ் பொதுவெளியில் வைக்க வேண்டும். அதை நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும். நட்பை பொது வெளியில் வைத்து உச்சிமுகரவேண்டிய நிலையில்தான் நட்பு இருக்கிறதா. சம்பந்தப்பட்ட கடிதத்தில் மின்னுகிற வரிகளை உடனே கைபேசி, தொலை பேசியில் அழைத்துச் சொல்லியிருக்கலாமே, எதற்கு பதிவு, போதாக்குறைக்கு இக்கடிதம் சரியாகப் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்கிற  உங்களது பரிதவிப்பு.

                     // “நான் ரமேஷ் குறித்து குறிப்பிட்டிருந்த வார்த்தைகள் மீதான உங்கள் எதிர்வினையில் வன்மம் மட்டுமே தெரிகிறது...மிகவும் வருத்தமாக இருக்கிறது வசு. ரமேஷை, ஒரு கணவனாக அவரது புரிந்து கொள்ளும் தன்மைக்காக நான் பாராட்டுகிறேன்..ஆனால் நீங்கள் மார்க்ஸ் பற்றி இப்படி எல்லாம் எழுதிய ஆளை பாராட்டுகிறானே என்று எரிச்சலடைகிறீர்கள். அது வேறு இது வேறு என்று கூடத் தெரியாத ஆளா நீங்கள்?. தெரியும்...இருந்தாலும் ஆவேசம் கண்ணை மறைக்கிறது. //

பாஸ்... என் ஆவேசம் என் கண்ணை மறைத்தது. நல்லது பாஸ். கண்களை மறைத்த ஆவேசத்தின் கைகளை நீக்கி  கேட்கிறேன். அ.மார்க்ஸைப் பற்றி கீற்று ரமேஷ் அப்படி பொருட்படுத்தும் படியாக என்ன எழுதியிருக்கிறார் என்று எனக்குக் காட்டுங்கள். வேறுபாடுகளின் வாய்ப்பாடுகளை ஒரு வாசகனாக நான் அறிவேன் பாஸ்.

                        // அப்புறம் உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன் வசு.... அ. மார்கசை நீங்கள் இலக்கியம் படிப்பதற்கு முன்பிருந்தே சுபமங்களா காலத்திலிருந்தே அறிவேன் நான்..அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு...அவரது செயல்பாடுகளால் மட்டுமல்ல வசு....பாரதியின் தந்தையாக, குடும்ப நண்பராகவும் அவரை இப்போதும் மதிக்கிறேன். நேசிக்கிறேன்...எனவே கீற்றுவின் நிலைப்பாடுகள், ப்ரியா, ரமேஷின் நிலைப்பாடுகளை என் மீது ஏற்றிப் பார்க்கும் காரியத்தை விட்டு விடுங்கள்..(கீற்றுவின் மீது நான் கொண்டிருக்கும் முரண்பாட்டை கீற்று ஆண்டு விழா மேடையிலேயே நான் சொன்னேன்.)..நான் மெகா சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்... பதிவுலகின் அதி நாகரிக செயல்பாடுகளில் நான் ஒன்றும் செயலூக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கவில்லை....பல விஷயங்களை நான் படிப்பதே இல்லை...//

பாஸ்… உங்களது அ.மார்க்ஸை, அவரது அப்பாவான அந்தோணி சாமிக்கு  - மார்க்ஸ்க்கு, மார்க்ஸ் என்று பெயர் வைப்பதற்கு முன்னமே தெரியும் பாஸ். அதற்கு நான் என்ன பண்ண முடியும். அப்புறம் பாரதியின் தந்தையாக, உங்கள் குடும்ப நண்பராக மார்க்ஸை நான் அறிந்து கொள்ளவில்லை. அ.மார்க்ஸாகத்தான்  அறிந்திருக்கிறேன். இனியும் அறிந்துகொள்வேன். அப்படி அவரை அறிந்து கொள்ளவே நாளும் ஆசைப்படுகிறேன்.

ப்ரியா தம்பிக்கும் உங்களுக்குமான நட்பை பொது வெளியில் வைத்தபோது, எப்படி நீங்கள் அந்த நட்புக்கு விளக்கவுரை எழுதினீர்களோ, அதே போல் ப்ரியா தம்பி பொது வெளியில் மார்க்ஸை அவதூறு செய்ததற்கு நீங்கள் பாரதியின் தந்தையாக, உங்களது குடும்ப நண்பராக, மார்க்ஸை மனதில் கொண்டு  மறுப்பு, அல்லது ஏற்பை எழுதியிருக்கலாம் . மேடையிலேயே விமர்சித்த நீங்கள் ( அது என்ன விமர்சனம் என எனக்குத் தெரியாது பாஸ், குறிப்பிட்டால் விவாதிக்கலாம்)  பொது வெளியிலும் எழுத வேண்டுமென்பதுதான் என் அக்கறை.

இறுதியில் எல்லாவற்றிற்கும் மேலாக கீற்று ரமேஷோ, ப்ரியா ரமேஷோ அவதூறு செய்தது பாரதியின் தந்தையையோ, உங்களது குடும்ப நண்பரையோ அல்ல, என்னைப்பொறுத்த வரையில் அ.மார்க்சை. நான் மதிக்கிற ஆளுமையை, அவர் எழுதிய எதையும் படிக்காததோடு, அவரது அந்தரங்கம் யாரின் மேல் ப்ரியப்படும் என்கிற வக்ரத்தின் எதிர்பார்ப்பை, கண்டுபிடிக்கிற ஆவேசத்தை. இதற்கு நான் அ.மார்க்சின் ஒரு வாசகனாகத்தான் எதிர்வினை புரியமுடியும். பாரதியின் தந்தையாகவோ, உங்களது குடும்ப நண்பரைப் பேசிவிட்டார்களே என்ற பதைப்பிலோ அல்ல.

பாஸ்…நீங்கள்  முதன் முதலாய் எனக்கு அறிமுகமானதிலிருந்து மெகா சீரியல்கள் பணியில்தான் இருக்கிறீர்கள், இப்பொழுது திரைப்பட பணியிலும் இருக்கிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களது வேலைப்பளுவை அருகிருந்து பார்த்திருக்கிறேன். அதே போல் 24 நான்கு மணி நேரமும் சும்மா இருந்தாலும் படிக்கவோ, எழுதவோ முடியாது ஓய்வு, மற்றும் இதர பணிகளை செய்பவர்களையும் நாம் பார்க்கமுடிகிறது.

எடுத்துக்காட்டாக லெனின் சாகும் போகுது 53 வயது எழுதிய நூல்களோ 54. அவர் வாழ்வில் தலைமறைவு, புரட்சி, வர்க்கப்போராட்டம் என எத்தனையோ போராட்டங்கள். அப்படியே அவருக்கு எதிரான, மோசமான  வாழ்க்கை முறையாக வசுமித்ர ஒரு போராட்டமும் இல்லாமல் வயிற்றை வானத்துக்கு காட்டிக்கொண்டு படுத்திருப்பதை என்னவென்பது. தலைகீழ் எடுத்துக்காட்டாக ஜெயமோகனும் திரைத்துறையில் ஆவேசமாக இயங்கி வருகிறார். ஒவ்வொரு நாளும் அவர் எழுதும் வேகத்தைப் பார்த்தால் பீதியாக இருக்கிறது. என்ன செய்ய. அது அவரவர் தேர்வு. அவரவர் உழைப்பு, அவரவர் வேகம்.

நிற்க.
        // நான் மிகவும் நேசித்தவன் பெயர் வடிவேல் முருகன்...அவன் நிறையப் படித்து வசுமித்ரவாக ஆகிப் போனான்...வசுமித்ரவாக ஆகிப் போன பின்னும் வடிவேல் முருகனின் ஆவேசம் அப்படியே இருக்கிறது...இந்த ஆவேச அரோகரா எல்லாம் ஒர்த் இல்லை என்று உணர்கிற நாளில் அவன் படைப்பிலக்கியத்தில் இயங்கத் துவங்குவான் என்று நம்புகிறேன்....ஆதிரன் சொன்னதை வழிமொழிகிறேன்.//

வடிவேல்முருகன் நல்லதொரு வாசகன். அவன் வாசிப்புக்கு இணையாக வசுமித்ர இனி வாசித்து விட முடியாது என்பதை மறுபடியும் நானே சொல்கிறேன். அதே போல் வசுமித்ர படைப்பிலக்கியத்தில்  “ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள்”  உள்ளன என்ற கவிதைத்தொகுதியை தனித்தும்,   “கள்ளக்காதல் ”என்ற கவிதையை ஆதிரனோடு சேர்ந்தும் எழுதியிருக்கிறான்.  (தெரிந்த, போனில்   பேசிக்கொள்ள முடிகிற நண்பர்களுக்கு நடுவில் எதுக்கு பதிவு புண்ணாக்கெல்லாம்?...பாஸ் எனக்கும் ஆதிரனுக்கும் பத்து வருட பழக்கம் இருக்கிறது. போனில் பேச முடிந்தவைகளைத்தான் அவருக்கு விமர்சனங்களாக பதிவு செய்திருக்கிறேன். பதிவுகள் போனில் பேசுவது, கேட்பது என்ற இரண்டையும் தாண்டி இருக்கிறது பாஸ்.)

நீங்களும் ஆதிரனும் சொல்லும் கூற்றில் வசுமித்ர படைப்பிலக்கியத்தில் இன்னும் புகவே இல்லை என்பது போன்ற தொனிகள் காதைக் கூசவைக்கிறது பாஸ். ஆனால் அவற்றை  வெறும் வார்த்தைகளெனவே நான் கொள்ளுகிறேன். அதோடு  அவற்றை வசுமித்ர இன்னும் படைப்பிலக்கியத்தில் இல்லை என்கிற எண்ணங்களின் அர..அர…அரஹோராவாக எடுத்துக்கொள்ளுகிறேன். அதைத்தாண்டி வசுமித்ர தனது பிளாக்கில் நிறைய படைப்புகளை எழுதுகிறான்( சிறு பத்திரிக்கைகள் மாதத்திற்கு ஒரு முறை வருவதோடு, எழுதுவதை அவர்கள் வெட்டவும் செய்கிறார்கள் பாஸ்…) என்பதோடு, இவ்வாண்டு புத்தகச் சந்தைக்கு ஒரு புத்தகத்தை ஈணுவதோடு, ஆட்டுக்குட்டியொன்றையும் தேனியில் வெட்டுவேன். அதற்கு உங்களையும் ஆதிரனையும் சேர்ந்து விருந்துக்கு அழைப்பேன். இதோடு  புத்தனின் மதுக்குடுவை என்ற நாவலை விரைவில் பிரசவிப்பேன்.படைப்பிலக்கியத்தில்,(வசுமித்ர நம்புகிற) வசுமித்ர இருப்பான் என்றும் உறுதி பகர்கிறேன்.


எல்லாவற்றிற்கும் மேலாக வடிவேல் முருகனின் ஆவேசம். இன்னும் வடிவேல் முருகனுக்கு இருக்கிறது என்று நீங்கள் கூறுவது, என்னைக் கைப்பிள்ளையாக்கி, இன்னும் மாத்து வாங்க வைப்பதற்கு சமம். இன்னுமா  பாஸ்...இந்த வடிவேல் முருகன நம்புறீங்க.

என் அன்பு பாஸ்.. வடிவேல் முருகன் வடிவேல் முருகனாய் இருந்திருந்தால், வாளால், கழுத்தில் அழுத்தம் கூடிய வெட்டும், வயிற்றில் வேகமான குத்தும் பெற்று மருத்துவமனையில் காலை விரித்து படுத்திருந்திருக்கமாட்டான். என்பதையே, வசுமித்ரவாகிய நான் இப்பொழுது என்னிரு கைகளை அகல் விரித்துச் சொல்கிறேன். இன்னும் சொல்லப்போனால், போடிநாயக்கனூர் வடிவேல் முருகனை, நீங்களோ, ஏன் ஆதிரனோ கூட பார்த்ததில்லை.


7 comments:

 1. ho.. boy.. it is not only bad.. foolish too.. u exposed bad. it is not good.up to this time i felt some serious think about these posts.. now on wards its going to be fun.. utterly fun. I wish to enjoy your way of expressions which are compleatly useless.. go on boyyyy... go oooonn.. :-))))))

  ReplyDelete
 2. பெரியவர் ஆதிரனுக்கு என் நன்றிகள். முட்டாள் தனத்தை, அதன் மோசமான முறைகளை எனக்கு நீதியாக வழங்கியதற்கு எனது மன மகிழ்ச்சியையும், நீங்கள் இது குறித்து யோசிக்க வேண்டிய துர்லபத்தை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக என் எழுத்துக்கள் உங்களுக்கு ஒரு உபயோகத்தையும் தராத பட்சத்தில் நான் களிகூர்கிறேன், அதோடு உங்களுக்கு பயன் தரும் எழுத்து முறைகளை தேடி வாசியுங்கள். நீதி சொல்வதோடு கேளிக்கையாக மாறப்போகும் என்கிற ஆருடத்தை வியக்கிறேன். உங்களுக்கான கேளிக்கையை நான் எழுத உங்களுக்குத் தெரிந்ததை எனக்குச் சொல்லித்தாருங்கள் தாத்தா…சிறுவன் காத்திருக்கிறான்.

  ReplyDelete
 3. மிகவும் அருமையான பதிவு வசு...இதை விட மரியாதையாக...பதமாக...இதமாக ஒரு கட்டுரையை யாரும் எழுதிவிட முடியாது......

  ReplyDelete
 4. வணக்கம் சொர்ணவல்லி.

  ReplyDelete
 5. ஒரு அறிவாளிக்கு என் எளிய வரிகளுக்கு பொழிப்புரை சொல்லி விளங்க வைக்க வேண்டியிருப்பது வேதனையே....வசு, `நீங்கள் எதுவும் தெரியாத அப்பாவியாக என்னிடம் வந்தீர்கள், நான்தான் உங்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்து படிக்க வைத்து அறிவுத் தீபத்தை ஏற்றினேன்’ என்றெல்லாம் நான் எங்கே சொன்னேன்? உங்கள் மீதும் ப்ரியா மீதும் எனக்கு ஒரே விதமான அன்பு இருந்தது, நீங்களிருவரும் என் பொது நண்பர்கள் என்பதை சுட்டுவதற்காக நான் சொன்ன வாக்கியம் அது...எனக்கு அறிமுகமாகும் போதே நீங்கள் ஒரு தீவிரமான வாசகனாகவும், எழுதுகிறவனாகவும், தீவிர விஷயங்களை ஆவேசமாக விவாதிக்கும் இளைஞனாகவும்தான் இருந்தீர்கள். அது எனக்கும் நம் நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்...நான் வாங்கிக் கொடுத்த புத்தகங்களை படித்துதான் நீங்கள் அறிவொளி பெற்றீர்கள் எனும் தொனி என் பதிலில் இருக்கிறதென்பது உங்களது சிறுபிள்ளைத் தனமான புரிதல்....அப்படிச் சொல்வதற்கு நான் ஒன்றும் முட்டாளல்ல.. எதற்கு சொன்னேன் என்பதை விட்டு விட்டு வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கினால் என்ன செய்ய?..
  `ப்ரியாவின் பதிவு எனக்கு தர்மசங்கடத்தைத் தந்தது..நட்பை பொதுவெளியில் வைப்பது தேவையில்லை என்பதுதான் என் நிலை’ என்று குறிப்பிட்டு என்ன மனநிலையில் நான் பின்னூட்டமிட்டேன் (உங்கள் வார்த்தைகளில் ஆசிர்வதித்தேன்) என்பதையும் எழுதிய பிறகு அது குறித்து என்னிடம் கேள்விகள் எழுப்புகிறீர்கள்...நான் என்ன செய்ய? கூறியது கூறல் சலிப்பான வேலை
  ப்ரியாவையும் உங்களையும் ஒரே தட்டில் வைத்துப் பேசி அவமானப்படுத்தி விட்டதாக குறை சொல்கிறீர்கள்...இருக்கலாம்...உங்கள் வாசிப்பு, உங்கள் படைப்பூக்கம், தத்துவ ஞானம் ஆகியவற்றுக்கும், ப்ரியாவின் வாசிப்பு மற்றும் அறிதலுக்கும் இடையே பாரதூரமான வேறுபாடுகள் இருக்கலாம்...ஆனால் அந்த ப்ரியாவைத்தானே உங்கள் சம போராளியாக நிறுத்தி வாதாடிக்கொண்டிருக்கிறீர்கள்...? ஒரே தட்டில் உங்களிருவரையும் வைத்தது நானல்ல...நீங்கள்தான்.

  ReplyDelete
 6. //அ. மார்கசை நீங்கள் இலக்கியம் படிப்பதற்கு முன்பிருந்தே, சுபமங்களா காலத்திலிருந்தே அறிவேன் நான்..அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு...அவரது செயல்பாடுகளால் மட்டுமல்ல வசு....பாரதியின் தந்தையாக, குடும்ப நண்பராகவும் அவரை இப்போதும் மதிக்கிறேன். நேசிக்கிறேன்//.இது நான் எழுதியது. இதில் சுபமங்களா காலத்திலிருந்து மார்க்ஸை அறிவேன் என்று நான் குறிப்பிட்டதன் அர்த்தம் என்ன? மார்க்ஸ் அதில் எழுதிய எழுத்துகள் என்னை ஈர்த்தன என்பதுதானே? (எழுத்துகளின் வாயிலாக கல்லூரிக்காலத்தில் அவரை அறிந்து பிறகு விகடனில் வேலை பார்த்த காலத்தில்தான் நேரில் சந்தித்தேன்.)அது தவிரவும் அவரிடம் குடும்ப ரீதீயிலாகவும் நட்பு இருக்கிறது என்பதை உங்களைப் போல் திருகல் நடையிலல்லாமல் தெளிவாகத்தானே எழுதியிருக்கிறேன்? நீங்களென்னவோ மார்க்ஸை நான் என் ஆளுமையாகப் பார்க்காமல் பாரதியின் தந்தையாக மட்டுமே பார்ப்பது போன்று கருதி கிண்டலாக பதில் சொல்லி இருக்கிறீர்கள். இளமையிலேயே ஒரு நாளைக்கு 600 பக்கம் படித்த அறிவாளியான நீங்கள் வார்த்தைகளையும், வரிகளையும் புரிந்து கொண்டு உள்வாங்கும் விதம் புல்லரிக்க வைக்கிறது.
  நான் உங்களைப் போல் கறாரான அறிவுஜீவி இல்லை வசு..உணர்வுகளோடு கூடியவன்.. மார்க்ஸ் பற்றிக் குறிப்பிடும் போது அவரது செயல்பாடுகளுடன் சேர்த்துதான் அவரை நேசிப்பதாக சொன்னேன்..குடும்ப நண்பர் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டேன்...அதை நக்கல் அடிக்கிறீர்களே?. விவாதம் தரும் அற்ப சுகத்துக்காக எதை வேண்டுமானாலும் கொச்சைப் படுத்துவது என்ன குணம்? உங்கள் அதீத வாசிப்பு உங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கும் இடம் இப்படி இருக்கிறது...

  ReplyDelete
 7. வசு, அ. மார்க்ஸ் பற்றி ப்ரியாவோ, கீற்றோ சொல்லும் விஷயங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா? என்ன அவசியம்? கீற்றுவில் ஞாநியைக் கூடத்தான் திட்டி எழுதினார்கள்.. அதற்கும் நான் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் நான் ஞாநியின் வக்கீல் இல்லை.. (ஆளுமைகள் அவதூறு செய்யப் படுவதை பொறுத்துக் கொள்ளாத நீங்களும் கூட ஞாநிக்காக பொங்கியதாகத் தெரியவில்லை. அது உங்கள் தேர்வு. எனக்கு அதில் பிரச்சினையில்லை) .ஞாநி குறித்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லிக் கொள்வார். அது என் வேலையில்லை…
  அ. மார்க்ஸ் அவரது பொதுவாழ்க்கையில் எத்தனை எத்தனை எதிர்ப்புகளை, அவதூறுகளை சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறார் என்பது நீங்கள் அறியாதது அல்ல..அவர் எந்த வக்கீல்களையும் நம்பி இல்லை என நான் கருதுகிறேன்....இருந்தும் அவர் சார்பாக வாதாடுவதில் உங்களுக்கு கிளர்ச்சி இருக்கலாம்...ஆர்வமிருக்கலாம்...அது உங்கள் பிரியம்...எனக்கு அதில் துளியும் ஆர்வமில்லை.எள்ளளவு கிளர்ச்சியுமில்லை...நான் ஒன்றும் உலக ரட்சகனாகவும், கோபக்கார இளைஞனாகவும் என்னை உருவகித்துக் கொள்ளவில்லை...
  எனக்கு உதவி செய்த நண்பர்களுக்கு எல்லாம் உழைப்பை பதிலாக கொடுத்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறீர்கள்..நீங்கள் எழுதியதிலேயே மிக மோசமான வரி இதுதான்..இதன் மூலம் உங்களை வெகுளித்தனமாக நேசித்த என்னை நீங்கள் நுட்பமாக அவமானப்படுத்தி இருக்கிறீர்கள்… மிகுந்த மனவேதனையுடன் இதைக் குறிப்பிடுகிறேன்.
  அகங்காரம் என்பதை குறைபாடான ஒரு குணாம்சம் என்றே நான் கருதுகிறேன்.... ஆனால் உங்கள் அகந்தையை நீங்கள் கொஞ்சிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்.. நீங்கள் நண்பர்களுக்கு எழுதும் எழுத்துகளில் கூட சுயமோகமும், அகங்காரமும் நிரம்பி வழிகின்றன .அது உங்கள் இஷ்டம்...ஆனால் இப்படியான ஒரு மனிதனிடம் எனக்கு விவாதிக்கப் பிடிக்கவில்லை திரு.வசுமித்ர !....இதுவே உங்களுக்கு நான் எழுதும் இறுதியான பதில். இதற்கு பதிலாக நீங்கள் என்ன எழுதினாலும், என் குறித்து என்ன விதமான மதிப்பீடுகளுக்கு நீங்கள் வந்தாலும் நான் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை…
  குட் பை.

  ReplyDelete

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...