Thursday, September 15, 2011

அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும். - ஆனந்த் டெல்டும்டே
இந்திய அளவில், தலித் இயக்கம் பற்றின ஒரு சுயவிமர்சன நூல். வாசிக்கும்போது தமிழ்ச் சூழலில் இயங்கி வரும் தலித் இயக்கங்களின் மேல் சில கேள்விகளை முன்வைக்கிறது.அம்பேத்கரியர்கள் யார்?

அம்பேத்கரியர்,அம்பேத்கரியம் என்பன தலித் வெகு மக்களின் பொதுவான சொல்லாடலின் பகுதிகளாகியுள்ளன. வெகு மக்களிடையே புழக்கத்தில் உள்ள பதங்களைப் போல இவற்றுக்கும் துல்லியமான அர்த்தங்கள் இல்லை. கல்லூரிப் பேராசிரியர்களா வும், ஆராய்ச்சியாளர்களாகவும்(acadamics) இருக்கிறவர்கள் கூட துல்லியமான அர்த்தத்தில் இவற்றைப் பயன்படுத்தவில்லை. இப்பதங்களுக்கான அர்த்தத்தை வரையறுக்கச் சிலர் செய்த முயற்சியின் வெற்றி கேள்விக்குரியது. அவர்களது முயற்சியின் விளைவுகளுக்களுக்கும் அப்பதங்களை வெகுமக்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்களோ அதற்கும் தொடர்புப் பொருத்தம் ஏதுமில்லை. இந்தப் பதங்களை பயன்படுத்துபவர்களைக் கேள்வி கேட்டால் அவர்களிடமிருந்து வழக்கமாக வரும் உடனடிப் பதில் இதுதான்; காந்தியவாதி, லோகியவாதி என்பன போன்ற பதங்களுக்கும் வரையறுக்கப்பட்ட அர்த்தங்கள் இல்லை. அப்படியிருக்க அம்பேத்கரியர் என்பதற்கும் வரையறை என்ன என்று ஏன் வலியுறுத்த வேண்டும் ? தீங்கற்றவையாக ஒலிக்கும் இத்தகைய வாதங்கள் அம்பேத்கரிய தலித்துக்களின் நடைமுறைகள் குறித்த ஏராளமான தகவல்களை உள்ளடக்கியுள்ளன. இந்து மதம், இந்துப் பண்பாடு ஆகியன மேலாண்மை செலுத்தும் சமுதாயத்தில் நிலவுகின்ற அனைத்தையும் சந்தேகிக்க வேண்டிய தலித்துகள், அச்சமுதாயத்திலுள்ள ஒவ்வொன்றையும் முன்மாதிரியாகக் கொள்வது- நாங்கள் அதனை வித்தியாசமாகப் பயன்படுத்துகிறோம் என்று உரிமை பாராட்டிக்கொண்ட போதிலும் - விந்தையானது. பாலி மொழியில் உள்ள நீண்ட கதைப் பாடல்களை ஏன் பாடுகிறீர்கள் ? அர்த்தமில்லாத மதச் சடங்குளை ஏன் கடைப்பிடிக்கிறீர்கள்? பழைய சம்பிரதாயங்களை ஏன் இன்னும் வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டால், சட்டென்று அவர்கள் பதில் சொல்கிறார்கள்; 'இந்துக்களும்தான் அவற்றைச் செய்கிறார்கள்'. உண்மையில், அவர்களது நடத்தையைக் விமர்சனக்கண்ணோடு பார்த்தோமேயானால், அவர்களது பண்பாட்டு வாழ்க்கை முழுவதுமே என்ன செய்கிறார்களோ அதே பாணியில்தான் இருக்கின்றது. அவர்கள் உணர்வுப்பூர்வமாக இந்துக்களை விமர்சனம் செய்தாலும், உணர்வுபூர்வமற்ற வகையில் அவர்கள் ஒவ்வொரு விடயத்திலும் இந்துக்களையே பின்பற்றுகிறார்கள். தற்போதைய போலி அறிவுஜீவிப் போக்குகளான தலித் முதலாளியம், தலித் பூர்ஷ்வா வர்க்கம் முதலியவையும் கூட, தலித்துக்களையும், தலித் அல்லாதவர்களையும் உள்ளடக்கிய சமுதாயத்திலுள்ள முன்மாதிரிகளை நகல் செய்வதேயன்றி வேறு அல்ல. - பக் 6,7

இதோடு

அம்பேத்கரியர்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகளாக

அடையாள நெருக்கடி
கருத்து நிலை நெருக்கடி
தலைமை நெருக்கடி
அரசியல் நெருக்கடி
அறவொழுக்க நெருக்கடி
அமைப்பு நெருக்கடி
வாழ்க்கை நெருக்கடி

என அவற்றை விளக்குவதோடு மேற்கண்ட நெருக்கடிகளுக்கான காரணத்தையும் சொல்கிறார்.

உதாரணமாக தலைமை நெருக்கடியில்

ஒவ்வொரு சமூகக் குழுவும் ஏராளமான பிரிவுகளாக பிளவுபட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனித் தலைமை உள்ளது. அம்பேத்கரியத் தலித்துக்களின் தலைமை என்பது அவப்பேறாக நிலப்பிரபுத்துவப் பண்பாட்டில் காணப்படும் முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதாவது, முதலில் ஒரு தலைவரை உருவாக்குவது,பின்னர் அவரைச் சுற்றி ஒரு குழு திரண்டு அந்தத் தலைவரை வலுப்படுத்துவது. மக்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்காக கிளர்ச்சி செய்து ,ஒன்றாகத் திரண்டு ஒரு தலைமையை உருவாக்குவதன் மூலம் அம்பேத்கரிய தலித் இயக்கம் ஒரு உயிரோட்டமுள்ள வளர்ச்சியைப் பெறுவதில்லை. தலித்துகள் தலைமைகளை உருவாக்கும் முறை தலைவருக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் ஓர் இடைவெளியை உருவாக்கி, தலைவருக்குப் பொருளாதார வசதிகளைத் தேவையாக்குகிறது. அந்த வசதி தலித்துக்களிடமிருந்து கிடைப்பது சுலபமல்ல. எனவே பல தலித் தலைவர்கள் தலித் அல்லாத செல்வந்தர்களின் ஆதரவை நாடுகின்றனர். எனவே இத்தகைய தலைவர்கள் தங்களுக்கு கொடையளிப்பவர்களுக்குக் கடமைப்பட்டவர்களாகவும் அவர்கள் சொல்வதின்படி நடக்க வேண்டியவர்களாகவும் உள்ளனர். நாம் இவ்வாறு சொல்வதனால் எல்லாத் தலைவர்களுமே இவ்வாறுதான் வளர்ச்சி பெற்றுள்ளனர் என்று பொருள் கொள்ளக் கூடாது: அவர்கள் எல்லோருமே தங்கள் அரசியல் வாழ்வை இப்படித் தலித் அல்லாதவர்களிடமிருந்து உதவி பெற்றுத்தான் தொடங்கவில்லை. ஆனால் அவர்களது வளர்ச்சியின் ஒரு கட்டத்தில், தலித் அல்லாதவர்களிடமிருந்து உதவி பெறுவது வேண்டாமா என்னும் தடுமாற்றத்திற்கு ஆளாகி, தங்களை நிலை நிறுத்திக்கொள்ளுவதற்காக தவிர்க்கமுடியாதபடி தலித் அல்லாதவர்களின் உதவியைப் பெறும் ஆசைக்குப் பலியாகி, எந்தக் குறிக்கோளுடன் தொடங்கினார்களோ அதிலிருந்து திசை விலகிச் சென்றுவிடுகிறார்கள். இது தலித் தலைவர்களிடம் சுயநலப் போக்கைத் தூண்டிவிட்டு,  சீரழிவு என்னும் நச்சுச் சூழலை ஏற்படுத்தி விடுகிறது. தற்போது தலித்துகள் சிக்கித் தவிக்கும் புதை சேற்றிலிருந்து அவர்களை மீட்பதற்கு மிகப் பெருந்தடையாக இருப்பவர்கள் இந்த சுயநலத் தலைவர்கள்தான். - பக்-26,27.

விவாதிக்கப்பட வேண்டிய நூல்.
'அம்பேத்கரியர்கள்: 
நெருக்கடியும்  சவால்களும்

ஆசிரியர்: ஆனந்த் டெல்டும்டே
தமிழில்: எஸ்.வி.ராஜ துரை
விடியல் பதிப்பகம்.

No comments:

Post a Comment

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...