Friday, October 7, 2011

புத்தனின் மதுக்குடுவை.


                                                                                                    
                                                                                                                                                 பவதி பிக்‌ஷாந் தேஹி....
                                                                                                    
 பிட்சையிடும்
                                      யுவதியின் கரங்களில்
               யசோதரையின் ரேகை கண்டு அலறும் புத்தனே

                          ஞானம் என்பது ஞாபகங்களின் வலி.

                                                                                                                                           
        
பசிகொண்டலையும்  என் கனவுக்கு வற்றாத ஆற்று நீருன் அலைச்சல்.

பசியற்ற தேகமாய் தன்னுடல் மாறும் வித்தையை கண்டபடி தோளில் தொங்கிக்கொண்டிருக்கும் தன் விதியின் கனத்தை ஒருமுறை கூர்ந்து பார்த்தான். உதடுகளைக் கிழிக்கும் புன்னகையோடு அது முணங்கும் ஒலி கேட்டான். குடுவை தன் வழக்கமான ஏளனப் புன்னகையோடு பேசத்தொடங்கியது. வேண்டாம் குயவனேஎன்னை வீதியில் விட்டெறிந்துவிடு. காலகாலத்துக்கும் உன் துக்கத்தை நான் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கமுடியாது. அது வற்றாத ஊற்று போல என்னுள்ளிருந்து கிளம்பிக்கொண்டே இருக்கிறது. உன் மெலிந்த விரல்கள் என்னுடலில் பற்றியேறும்போதே நான் கணித்துவிட்டேன் அது எல்லாவற்றையும் காவு கொள்ளும் சாவை வனையப்போகிறதென, வேண்டாம் குயவனே என்னைப் பயன்படுத்த தயங்கும் விரல்கள் இப்புவியெங்கும் நிறைந்திருக்கிறது. என்னை விலைகொடுத்து வாங்கும் துணிச்சலோ, இல்லை விதியோ, கூற்றோ எவனுக்கும் வாய்க்காது. என்னை எறிந்துவிட்டு சுமையற்ற உடலுடனும் கனவுகளற்ற தூக்கமுமாய் வாழத்தொடங்கு. குடுவை இறைஞ்சலுடன் கேட்டதும், குயவன் கலங்கும் விழிகளோடு மூட்டையை நோக்கி என்னை மன்னித்துவிடு குடுவையே மண்ணை மண்ணிலிருந்து பிரித்து, சுட்டு, விரல்கள் குவியப் பிசைந்தபின் அம்மண்ணை குயவன் வைத்துக்கொண்டிருக்கக்கூடாது. அதைச் ச்..ச்சீயென தெருவில் விடவும் கூடாது என்னுயிர் அழியும் மட்டும் நான் குயத்தன்மையை இழக்கமுடியாது என்றதும், கோபத்தின் தாளகதியற்ற கடுஞ்சினத்தோடு குடுவை முட்டாள்... நீ இன்னும் உன்னைக் குயவனென்றும், குயத்தலைவனென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறாயா உன் குலம் சர்வ நாசமாகி இன்றோடு மூன்று நாட்களாயிற்று மக்கள் இல்லாதவனுக்கு தலைமை எங்கனம் சாத்தியம். கோபத்தைக் குறைத்து  மென்மையாய்  பற்கள் அதிராதவாறு...விட்டு விடு குயவனே நான் சுட்டமண்தான் இல்லையென்று கூறவில்லை. யாராவது வழிப்போக்கனொருவனுக்கு தானமாகவாவது என்னை இட்டுவிடு. குயவன்  குடுவையை மூட்டையிலிருந்து அவிழ்த்தபடி சொன்னான் என்னை மன்னித்துவிடு குடுவையே... எப்படி உன் உருவத்திற்கு குடுவை எனப் பெயரிடப்பட்டதோ அதே போல் என் பிறப்பும் குயவன் என என்னை ஆக்கிவிட்டது. காலில் மிதிபடும் மண் லாயக்கற்றது. அஃது எதற்கும் உதவாது, மண்ணிலிருந்து பிரியும் எதையும் மானுடம் பயன்படுத்தும் மண்ணை நேரடியாக அனுபவிக்கமுடியாது என்று சொன்ன சாத்தானுக்கெதிராக தோன்றிய இனம் என் இனம். குழந்தையின் முதல் சுவையென நாங்கள் அதன் தளிர் நாவில் இட்டுவைத்ததே இம்மண்தான் அப்படியிருக்க வனைந்து செதுக்கிய இம்மண்ணை எப்படி மறுபடியும் மண்ணாக்க இயலும் ஒரு குயவன் மண்ணைப்பிரித்து மண்ணாக்கியபின் மீண்டும் அதை மண்ணாக்கினானாகில் அவனுக்கும் மண்ணுக்கும் இருக்கும் தொடர்பு கள்ளத்தனமே என வகுத்துச்சொன்ன ஆதிக்குயவனின் வழி வந்தவன் நான். என்னால் முடியாது. நீ சொன்னது உண்மைதான் என் குலம் அழிந்து இன்றோடு மூன்று நாட்களாகிவிட்டது. இன்னும் ஒரு கவள சோற்றுருண்டை கூட என் குடலை நிரப்பவில்லை ஆனால் குடுவையே மரணம் என் உடலை அணுகும்முன் நீ இன்னொரு கரத்தில் தவழ்ந்துகொண்டிருப்பாய். உன்னுள் நிரம்பும் மது என் பெயர் சொல்லி சஞ்சரித்தபடியே இருக்கும். குடுவை கதறத்தொடங்கியது. அப்படியென்றால் நீ துக்கத்தை விற்கத்துணிந்துவிட்டாய் இல்லையா என்க குயவன் குடுவையே பொருளாகிய உனக்கிட்ட பெயர் குடுவை ஆம் மண்ணால் வனைந்த குடுவை உன் உணர்ச்சிக்கோ உன்னை ஆள்பவன் உணர்ச்சிக்கோ நான் பொருள் கூறமுடியாது. தழுவும் கரத்தை வெறுப்பதோ, விரும்புவதோ உன் மனத்தின் விதி அதை என்னால் வகுக்கமுடியாது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது இன்றிரவுக்குள் என் தோள்ச்சுமை நீங்கும். நான் வெற்று நிழலாவேன். குடுவை பணிந்த குரலில் தயங்கித் தொடங்கியது சரி குயவனே... கண்டுபிடிப்பாளனே முதலில் அதிகாரமும் அப்பொருளின் மேல் உரிமையும் கொண்டவன் ஆவான், வேண்டுமென்றால் ஒருமுறை என்னுள் உனக்காக உன் பொருட்டு மதுவை என்னில் ஊற்றிப் பருகு பிறகு என்னை எது வேண்டுமானாலும் செய் உடன் படுகிறேன். புன்னகையுடன் குடுவையை மனைவி ஞாபகமாய் தன்னுடன் பிணைத்துவைத்திருந்த சேலையில் கட்டி எடுத்துத்தோளில் போட்டபடி சொன்னான். உன் தன்னிகரற்ற அன்புக்கு நன்றி என்னால் துக்கததைப் பருகமுடியாது.


மௌனத்தின் தோற்றமாய் மாறிய குடுவையைத் தோளில் போட்டபடி எதிரே வந்த முதிய கிழவன் ஒருவனிடம் வேசிகள் வீதி எங்கிருக்கிறது பெரியவரே. பெரியவர் முகம் தூக்கி ஒருமுறை பார்த்து வலப்பக்கம் கைகாட்டிவிட்டு. போ தோள்ச்சுமை குறையும், லக்கற்றவனாய் திரும்பிவா..குயவன் மன்னிப்புக் கேட்கும் பாவனையுடன் மன்னிக்க வேண்டும் பெரியவரே தங்கள் வயதை ஏளனம் செய்யும் நோக்கத்துடன் நான் வேசிவீதியின் முகவரி கேட்கவில்லை, அதையும் பொருட்ப்படுத்தாமல் தாங்கள் எனக்கு கூறிய அறிவுரைக்கு நன்றி ஆனால் பெரியவரே நான் இருக்கும் பொருளை துறக்கப் போகவில்லை, விற்கப் போகிறேன், ஆனாலும் தாங்கள் தங்கள் அமுத வாயால் எனக்குச் சொன்ன அறிவுரை பலிக்கும் என்பதை நானறிவேன். விற்றபின் நான் லக்கற்றுத்தான் திரியப்போகிறேன். வருகிறேன் எனச்சொன்னவனின் விழிகளை ஆழ நோக்கிய பெரியவர் மன்னித்துவிடு இளைஞனே மகன் பிரிவால் அவ்வீதியைச் சபித்தவன் நான். சாபங்களின் உறைவிடமென அதை நான் உணர்ந்திருக்கிறேன். முதியவரின் கலங்கிய விழிகள் பார்த்த குயவன் ஐயா தாங்களுக்கும் தங்கள் அனுபவத்திற்கும் தெரியாதது எதுவுமல்ல. நட்ட செடி வளருமே தவிர அதற்கு தான் படரும் இடம் தெரியாதென்ற முதுமொழி தாங்கள் அறியாததல்ல. எங்கு நட்டாலும் அது தன் குணத்தையும் மணத்தையும் ஒரு போதும் இழப்பதில்லை, அஃதே அதன் ஆதாரப்பண்பு. அஃது மாறினால் அது நட்ட செடி அல்ல, வேறொன்று, மன்னிக்கவும் பெரியவரே  மனிதனோ இருவர் வனைந்த பொருள் அவனுக்கு இரட்டைப்பாதைகள், எதிரெதிர் துருவம்.  எதையும் மாற்றமுடியாது முதியவரே மனிதனுக்கு மனிதனே சொன்ன நீதி உட்பட வருகிறேன். சோர்ந்த உடலுடன் தன்னைக் கடக்கும் குயவன் நிழல் கண்டு தன் நிழலை நகர்த்தியவாறு கிழவன் பெரும் புன்னகையோடு வாழ்வின் முதல் நடையோடு கிளப்பிப்போனான்.


குயவன் அவ்வரண்மனையின் முன் தளர்ந்த கால்களோடு நின்றான். உண்மையில் அது அரண்மனைதான். அரசனுடனுடன் உராயும் எதற்கும் அத்தன்மை வந்துவிடுகிறது, வாளானாலும், பொருளானாலும், உயிரானாலும் அதிகாரம், கட்டளை எல்லாம் தானாகவே குடியேறிவிடுகிறது. வாசலில் நின்றவனின் எளிய கோலத்தைப் பார்த்தவாறு வெளியே வந்த பெண்ணொருத்தி உள்ளே செல்ல எத்தனிக்க குயவன் அம்மா என்றான் திரும்பியவள் புன்னகைத்துவிட்டு உணவு கொண்டு வருகிறேன் என்றாள். மன்னிக்கவும் நான் பொருள் விற்க வந்த வியபாரி, குயவன். மதுக்குடுவை கொண்டுவந்துள்ளேன் பயன்படும். உரியவர் வந்தால் விற்பேன் என்க அவனையே பார்த்த பெண் உள்ளே வந்தமருங்கள் அன்னையை வரச்சொல்கிறேன் என்றபடி காத்திருக்க குயவன் தயங்கி நிற்க உள்ளே வாருங்கள் பொருள் விற்க வருபவர்க்கு சஞ்சலம் தேவையில்லை. புன்னகையுடன் அவள் முகத்தைப் பார்த்த குயவன். சஞ்சலம் இல்லாத பிறவி எதுவுமில்லை தாயே என் கோலம் கண்டு உள்ளே அழைத்த உங்கள் பெருந்தன்மை பற்றி யோசிக்கிறேன் என்றான். மனம் தொடும் சிரிப்பை உதிர்த்தவள், குயவரே இம்மண்ணில் நிலைத்திருக்கூடிய செல்வம் அனுபவமன்றி வேறென்ன பொருளைக்குவித்து இங்கு வந்தவர்கள் சுகம் பெற்ற அனுபவம் மறந்து எல்லாம் இழந்தேன் என உங்கள் கோலத்தில் கதறியழுது போனதை இம்முற்றத்தில் நான் பலமுறை கண்டுள்ளேன். எனக்கு உருத்தோற்றத்தில் நம்பிக்கை கிடையாது. செல்வந்தன் பராரி எல்லோரும் ஓர்மையுடன் இப்புவியில் பார்ப்பது பெண்களன்றி வேறெதுவும் கிடையாது. வந்தமருங்கள். தலைவியை வரச்சொல்கிறேன் என்றபடி உள்ளே போக குயவன் மெதுவாய் உள்ளே சென்றமர்ந்தான். குடுவையை இறக்கிக் காலருகே வைத்தவன் நிமிர மங்கலத்தின் சகல நிமித்தங்களையும் தன்னுடலில் கொண்டபடி தலைவி நின்றிருந்தாள். எழப்போன குயவனின் சோர்வைக் கண்டு அமருங்கள் மரியாதை எப்பொழுதும் நிமிர்ந்தேதான் இருக்கிறது. உடல் வெறும் கருவிதானே என்றபடி அமர்ந்தவள், சாப்பிடுகிறீர்களா என்றாள், தயக்கத்தோடு குயவன் விரல்களைப் பிசைந்தபடி பார்த்தவன். கண்களில் எந்த உணர்ச்சியும்  காட்டாது பொருள் விற்க வேண்டும். புரிந்த தலைவி மூட்டையை அவிழுங்கள்: என்றாள். குயவன் குனிந்து மூட்டையின் முடிச்சை பசியால் அவிழ்க்க முயன்று திணறுவது கண்டு அருகில் இருந்த பெண் பார்த்து ஆணையிடும் குரலில் உதவி செய் என்றாள், குயவன் பணிவோடு இல்லை தாயே அவிழ்த்துவிடுவேன் என்ற குயவனைப் பார்த்துவிட்டு பெண்ணிடம் பழரசம் ஏதேனும் கொண்டு வா.. என்க பெண் உள்ளே செல்ல மூட்டையை அவிழ்த்த குயவன் குடுவையை வெளியே வெயில் துலங்க எடுக்க திகைத்தெழுந்த தலைவி குயவரே இதற்கு...இதற்கு...என வார்த்தைகள் தடுமாற உளறுவது கண்டு திகைத்த குயவன் தாயே....என்க தன்னைக் கட்டுப்படுத்தியபடி குடுவையையே கண்கொட்டாது பார்த்தவள். குயவன் முகம் பார்க்காது மன்னித்துவிடுங்கள் என்று சபதமெழ உள்ளே ஏறக்குறைய ஓடுவது போல் விரைந்து செல்ல குயவன் புரியாது குடுவையைப் பார்க்க குடுவை அமைதியாய் இருந்தது.

எழுந்தவன், திகைப்பு மாறாது உள்ளே சுவர் முழுவதையும் கைவிடப்பட்டவன் போல் பார்த்து நிற்க வேகமாய் முன்னே வந்த பெண் தட்டில் பழரசத்தோடு வந்தாள். குயவன் மன்னிக்கவேண்டும் உங்கள் தலைவி..என தயங்க, புன்னகையும், சோகமும், பயமும்,. திகைப்பும், சஞ்சலமும், பரிதாபமும், கேலியும், கேள்விக்குறியும், திகைப்பும், நாணமும், மடமும், வெட்கமும், பயிர்ப்பும் இப்படி எந்த உணர்ச்சியும் காட்டாது. பருகுங்கள் தலைவி செய்தி சொல்லியிருக்கிறாள், தயக்கமோ பயமோ வேண்டாம் பொருளுக்கு விலை சொல்லுங்கள் கூறிய விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கு மும்மடங்காக எடுத்துக்கொள்கிறேன் எனக்கூறியுள்ளாள், பேரம் பேசக்கூடாதெனவும் எனக்கு உத்தரவு. நம்பமுடியாது திகைத்த குயவன் குடுவையை ஒருமுறை பார்த்துவிட்டு பெண்ணைப் பார்த்து என்ன சொல்கிறீர்கள் புரியவில்லை என்றான், பெண் இப்பொழுது புன்னகையோடு குயவரே பசியெனும் ஒலியால் உம் செவி அடைத்திருக்கிறது. தன்னம்பிக்கை இழக்க வேண்டாம் நீங்கள் கேட்ட விலைக்கு ஒரு மடங்கு அதிகம் வைத்து பொருளை வாங்கிக்கொள்கிறேன் என என் தலைவி சொன்னாள், முதலில் பழரசத்தை அருந்துங்கள் என நீட்ட, அமரப்போன குயவன் அமராது மண்டியிட்டு குடுவையை கட்ட முயல திகைத்த பெண், குயவரே என ஒலி எழுப்ப குயவன் மெமையான குரலில் உம் தலைவியின் பெருந்தன்மைக்கு என் பசியை பலியடப்போவதில்லை பெண்ணே, பொருள் வாங்குபவர்தான் பொருளுக்குரிய விலையோ, இல்லை மறுப்போ சொல்லவேண்டும் என்பது என் விற்பனை நியதி, உம் தலைவிக்கு என் பரதேசிக்கோலம் தெரிந்த அளவுக்கும், குடலில் நீக்கமற நிறைந்திருக்கும் பசி தெரிந்த அளவுக்கும் விற்பனை தர்மம் தெரியவில்லை. நான் கிளம்புகிறேன் என குடுவையை தோளில் ஏற்ற, திகைப்படங்காத குரலில் குயவரே தலைவி வேறொன்றும் சொன்னாள் என்க குயவன் நம்பிக்கையிழந்து பார்க்க பெண்..குயவரே தான் பிச்சையிடவில்லை அவர் ஒப்பற்ற வியாபாரி. அனைத்திற்கும் மேல் பெருங்கலைஞன், அவரது குடுவையை என் இல்லம் ஏற்றால் அஃதை விட தனக்கு வீடும், பேறும் தேவையில்லையென்றும் துரதிருஷ்டவசமாய் தாங்கள் வனைந்த குடுவை இதுவரை தன்னால் ஸ்பரிசிக்கப்படாததும், கனவில் காணமுடியாததும், எண்ணத்தால் உணரமுடியாததும், எப்பொழுதும் கேள்விக்குறிகொண்ட தன்மையையும், தனக்கு ஆகுமோ, ஆகாதோ என சதா சஞ்சலத்தைக் கொடுக்கும் குணம்கொண்டதாயும், எள்ளலால் பிற மகளிரின் ஒலி தான் செவியை நிறைக்க காரணமாயிருக்கும் கருப்பையைத் தலைவிக்கு ஞாபகமூட்டியிருக்கிறது, அதனால் குடுவை மேல்  பீதியும், உங்களின் விரலின் மேல் மரியாதையும் வந்திருக்கிறது, குடுவையை தன்னில்லத்தில் வைத்தால் அஃது தான் வாங்கிய சாபத்தின் ஒலியை தன் வயிற்றில் நிரப்பி தன்னைத் தானே தின்னச்செய்யும் வலியைக் கொடுத்துவிடும் என்பதாலும் அவள் இக்குடுவையை முன்வைத்து பேரம் பேச  வரவில்லை தாங்கள் விரும்பினால் குடுவைக்குரிய விலையைப் பெற்றுக்கொண்டு அதே கையோடு இக்குடுவையையும் எடுத்துச் செல்லும்படி கூறினாள் என்க, குயவன் தலைகுனிந்து சீலையில் கட்டப்பட்ட குடுவையைப் பார்த்தான். இழிநகையோடு குடுவை எழ முயற்சிப்பது தெரிந்தது. கண்களை மீறத்துடிக்கும் கண்ணீரை உதடுகடித்து அடக்கியபடி குடுவையை தோளிளேற்றி கிளம்பிய குயவனை பெண் பார்த்துக் கொண்டேயிருக்க வாசல் பக்கம் வந்த குயவன் திரும்பி கண்ணீரை புறங்கையால் ஆழத் துடைத்தபடி எல்லோர்க்கும் ஆகும் எதையும் இம்மண்ணில் படைக்க முடியாது என்பதை இக்குயவனின் சாபமாக உம் தலைவிக்கு சொல் விடைபெறுகிறேன். என வாசல் தாண்டி இறங்கிய குயவன் வெயிலை உணர, அதற்காகத்தான் நான் அப்பொழுதே சொன்னேன் என குடுவை வாய்திறக்க குயவன் முழுப்புன்னகையோடு நீ தோற்றுக் கொண்டிருக்கிறாய் என்பதை எனக்கு அறிவிக்கவேண்டாம் குடுவையே அதை நான் அறிந்து பல மணி நேரங்காளாயிற்று என்க குடுவை தனது பதட்டத்தைக் காட்டிக்கொள்ளாது என்ன உளறுகிறாய் என வெறியடக்கிக் கத்த குயவன் அதே மாறாத புன்னகையோடு அவள் உன்னை அடையாளம் கண்டு விட்டாள், என் விரல்கள் என்னை ஏமாற்றவில்லை குடுவையே இன்றிரவு நீ இன்னொரு விரல்களுக்குள் பொதிவது நிச்சயம்.

குடுவை பேசத்தொடங்கியது. மூடனே என்னை அடையாளம் கண்டவள் உன்னிடமிருந்து என்னை வாங்கியிருக்கலாம் வாங்கவில்லை உன்னைப் புகழ்வதன் மூலம் அவள் என்னைப் புறக்கணித்திருக்கிறாளென்பதை புரியவில்லையா என்க குயவன் உன் கரகரப்பை வழுவழுப்பாக்கிய என் விரல்களை உன் பேச்சு ஏமாற்றமுடியாது குடுவையே நீ சொல்வது போலவே இருக்கட்டும் எனக்குத் தேவை என்ன, செய்த வினைக்கு கூலிதானே, அவள் புரிந்து கொண்டாள் என்ன புரியாவிட்டால் என்ன, உன்னில் அவள் மதுவை நிரப்புகிறாளோ இல்லை வெற்றை நிரப்புகிறாளோ அது பற்றி எனக்கென்ன கவலை. விற்றுமுடித்ததும் நான் என் பணியை முடித்தவனாவேன் அவ்வளவுதான். என்க, குடுவை குயவனே என்னை வெறுத்து இந்த உலகில் நீ அடையவேண்டியது எதுவும் இல்லை, அப்படி இருந்தாலும் அதை என் பொருட்டு நீ செய்யவேண்டியதும் இல்லை என்னைச் சுமந்து நீளும் உன் நாட்களை விரயமாக்கிக் கொள்ளாதே என்பதுதான் என் வேண்டுகோள், என் வேண்டுகோள்களை நீ உதாசினம் செய்வது, வெறுப்பது போன்ற எண்ணற்ற உணர்ச்சிகளைக் காட்டி விட்டாய் ஆனால் என் உடல்   சூடு தணியாது இருக்கிறது இதுவே என் இப்பொழுதைய மனநிலை என்க குயவன் சாலையெங்கும் இறைந்து கிடக்கும் மலர்களை பார்த்தபடி நடக்கத்தொடங்கினான். சாலையைக் கடந்து பிரதான வீதிக்குள் நுழைபவனை கேவி அழும் கண்ணீர்க்குரல்தால் முதலில் அழைத்தது. நகரெங்கும் அழுகிய வாசனையுடன் கண்ணீர் வீசிக்கொண்டிருந்தது. உப்புக்காற்று மதில்களை அரித்துக் கொண்டிருந்தது. எல்லா விழிகளும் துக்கத்தை அதற்கேயுரிய கடுஞ்சினத்தோடு வீசிக்கொண்டிருந்தன.

நகருக்குள் நுழையும் புதிய நாயொன்றைப் பார்க்கும் மற்றொரு நாயின் பற்கள் போல்தான் எல்லோர் விழிகளும் அவனை வரவேற்றன. மரண அச்சத்தோடு தன்னைப் பார்க்கும் கண்களின் வேதனைச் சுருக்கம், இது எதற்காக என கேள்விகளை சுமந்தபடி எவரிடம் மன்னனின் அந்தரங்க அறைக்கு வழிகேட்பது எனக் குழப்பத்துடன் குயவன் தெருவோரம் நீண்ட ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தான். குழந்தைகள் அவன் கையில் உள்ள மூட்டை கண்டு தீண்பண்டம் விற்கவந்தவனோ, அவனது உடைகண்டு பிச்சைக்காரனின் அழுக்கு மூட்டையோ என்ற குழப்பத்தோடு அருகே பரபரக்கும் விழிகளுடன் வருவதும் போவதுமாய் தயக்கத்துடன் அலைந்துகொண்டிருந்தன.

தெருவெங்கும் பார்வையை அலையவிட்ட குயவன் எவர் கண்ணிலும் புன்னகையின் சிறு அடையாளம் கூட காணாதது கண்டு தயக்கம் அவன் கால்களை நகர்த்தவிடாமல் இறுக்கிய நிலையிலையே வைத்திருந்தது. மௌனம் வழியும் முகத்தோடு தெருவில் திரியும் புறாக்களைப் பார்த்தவாறு இருந்த குயவனின் செவியில் முணங்கலொலி கேட்க குயவன் புரியாது நிலம் பார்க்க குடுவை தன் முகத்தைக் காட்டத்தொடங்கியது.


குயவனே துரதிருஷ்டத்தின் நிழல் உன் உடலெங்கும் தேமெலென பரவுவதை நீ அறிகிறாயா...அது உன் இருட்டின் கனவுக்குள் புகுந்து உன் விரல்களை என்றோ காவு வாங்கிவிட்டது. உனது குயத்தின் உன்மத்தம் மனதிலிருந்த உணர்ச்சிகளை உன் விரல்களுக்கும் ஏற்றிவிட்டது. மண்ணாகிய நான் உனக்கு மட்டுமல்ல உன் இனத்தாருக்கெல்லாம் சொல்வது ஒன்றுதான் இறுதியில் எல்லாம் மண்தான். அஃதன்றி வேறல்ல. என்னிலிருந்து நீ என்னை நீ பிரித்தது போல் உன்னிலிருந்து நீ உன்னையும் பிரிக்கும் தருணம் இதுதான் குயவனே கற்றுக்கொள். எதிர்படும் உன் இனத்தின் விழிகள் ஏதேகிலும் அரும்பும் சிறுபுன்னகை ஒன்றையாவது உனது கண்கள் காணுகிறதா. நம்பிக்கையின் ஒரு துகளையாவது அது மொழிபெயர்க்கிறதா நண்பனே நன்கு கேள் இன்று நீ இந்த ஊரில் ஒரு பொருளை விற்கவோ வாங்கவோ முடியாது, அது பிச்சை போடுவதாக இருந்தாலும், பிச்சை வாங்குவதாக இருந்தாலும். இன்றுன்னால் முடியாது. ஆம் குயவனே உனக்கோ செய்த பொருளைத் தானமிடவோ அல்லது உயிர் வளர்க்க சிறு உணவை தானம் வாங்கவோ முடியாது அதற்கு உன் அறமும் இடங்கொடாது. வீணே இன்று நீ உன் குடல்களை விழுங்கும் பசியோடும் ஆறாத மனத்தின் ரணத்தோடும் என்னில் சமாதியாகப்போகிறாய். நானும் இம்மண்ணோடு மண்ணாகப் போகிறேன். உன் விரல்கள் காற்றை வனைந்ததாய் உன் இல்லாத இனத்தின் விதி தீர்மானிக்கும். குயவன் குடுவையின் தீர்க்கமான சொற்களை விழிகளால் அசைபோட்டபடியே இருக்க குடுவை நம்மமுடியவில்லையா குயவனே என்னை வனந்து நீ இழந்த உன் உன்னத வடிவான உன் மகன் முகம் ஞாபகம் இருக்கிறதா என்க குயவன் கடும் வலியால் புருவம் சுருக்குபவனைப் போல் குடுவையைப் பார்க்க குடுவை மன்னித்து விடு நான் உன்னை சீண்டும் நோக்கத்தில் கேட்கவில்லை உன் மகனொத்த சிறுவன் அரசன் சுத்தோதனின் புதல்வன் சித்தார்த்தன் நேற்று இவ்வரண்மனையை விட்டு ஞானம் தேடுவதாய்  கிளம்பிச் சென்றுவிட்டான். குயவன் வியந்து பார்க்க குடுவை ஆம் குயவனே உடலை பகுத்தறிந்த தன் இல்லாளுக்குக் கூட தெரியாது, ஒரு நள்ளிரவுக் கள்வன் போல் இந்நகரைவிட்டு சென்றுவிட்டான். குழந்தை தகப்பன் வாசம் இல்லாதது கண்டு அரண்மனைச் சுவர்கள் கசிய அழுதுகொண்டிருக்கிறது. அவன் மனைவி யாசோதையின் பெரு மூச்சின் உஷ்ணம்தான் இங்குள்ள குடிகள் அனைவரின் விழிகளிலும் படர்ந்தேறிக்கொண்டிருக்கிறது. அதன் வெம்மை இங்குள்ள மற்ற பெற்றோருக்கும் விஷமென நாளமெங்கும் அலைந்துகொண்டிருக்கிறது.

அரசன் எவ்வழியோ அவ்வழியை பின்பற்றும் இக்குடிகள் நாளை நாடாளப்போகும் அரசன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடியது கண்டு திகைத்துப்போய் இருக்கிறார்கள். விசயம் அறிவிக்கப்பட்டதும் எல்லோர் விழிகளும் நேற்றிரவிருந்து திறந்தபடியே அலைகின்றன.

குறிப்பு; புத்தனின் மதுக்குடுவை- யிலிருந்து ஒரு பகுதி. 361டிகிரி. காலாண்டிதழ் ( ஆடி- ஐப்பசி)
                                        


4 comments:

  1. 'நல்லதொரு பதிவு...நல்லதொரு பகிர்வு!'

    ReplyDelete
  2. ஆர்வத்தைத் தூண்டுவதாய் இருக்கிறது. தொடர்ந்து படிக்க ஆவல். தொடருமா..?

    ReplyDelete
  3. 'ஞானம் என்பது ஞாபங்களின் வலி’

    ‘ஞாபகங்களின்’ என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.(பிழையைச் சுட்டும் பிழை பொறுக்க வேண்டுகிறேன்)

    ReplyDelete
  4. நன்றி தோழன் மபா. வணக்கம் அ.அப்துல் காதர். பிழையைத் திருத்திவிடுகிறேன்.

    ReplyDelete