Tuesday, October 18, 2011

விசாரணை.




விசாரணை எனும் பதம் உண்மையில் துரதிருஷ்டவசமானது
கேட்பவன் நிரபராதியாகும் அபாயமும்
பதிலி
சோகச் சித்திரத்தில் புன்னகைக்கும் உதடுகளாவும் இருக்கிறான்
பெண்ணாகயிருந்தால் உடலெங்கும் அவளுக்கு
யோனிகள் முளைத்து விடுகிறது

விசாரணையாளனுக்கு
சம்பந்தப்பட்ட
விசாரணைகளில்
அவனுக்கு சிலரின் உறுப்புகள் அநாவசியம்
சிலருக்கு உற்பத்தி தேவைப்படுகின்றன
முக்கியமாக பெண்களுக்கு.....

விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்டவர் விசாரணைக் கைதியாகிறார்
உண்மையில் விசாரணை என்பது கேள்விகளால் நிரப்பப்பட்ட தாள்கள் அல்ல
அது வதைகளால் மிளிரும் சித்திரம்

ஒரு கேள்வி என்பது விசாரணைக்குட்படுத்தப்பட்டவரின் விலாவில்
முஷ்டியை இறக்கி குத்துவதென்பதாகும்
விசாரணையாளன் தன் உடலால்
அல்லது
தன்னுடலோடு கொண்டுவந்த கருவிகளால் பேசுவதென்பதாகும்
அரசு என்ற சொல்லால்
ஆணை என்ற சொல்லால்

பொய் உண்மை
கருப்பு வெள்ளைக் கட்டங்களுக்குள்
இருவரும் ஆடு புலி ஆடுகின்றனர்
இருமை எவ்வளவு ஆபத்தானதோ
அதே அளவுக்கு
கண்ணீரும்

அழுகை
ஆனால்
சர்வ நிச்சயமாக அது சோகமல்ல

விசாரணையாளன்
பதில்களை வலியால் பிடுங்கியபிறகு
விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்
அழுகிறார்
மிகுந்த மௌனத்தோடும் எச்சரிக்கையோடும்

எச்சரிகைதான்
எண்ணற்ற பொய்களை தயாரிக்கிறது
பொய்களைத் தயாரிப்பவன்
இது நல்ல பதம்

கதவுகள் தாழத் திறக்கப்படுகிறது
விசாரணைக்குட்படுத்தப்பட்டவன்
கைதி என்கிற சொல்லோடு
வெளியே இழுத்து வரப்படுகிறான்
பாதிக்கப்பட்டவர்கள் கரகோஷங்களை எழுப்புகின்றனர்

பாதிக்கப்பட்டவன் நினைத்துக்கொள்கிறான்
சிறுவயதில்
தனது மகளுக்கோ
மகனுக்கோ
அழுகையை நிறுத்த வேண்டி
அல்லது
உணவு ஊட்டுத்தலை முன்வைத்து
தான் சொன்ன கதைகளின் எளிய வரிகளை

குழந்தைகளுக்கு பொய்கள் போதும் என நினைப்பவன்
முதலில்
குழந்தையை விசாரணை செய்கிறான்

குழந்தை உண்கிறது
சிரிக்கிறது
உண்மையில் அங்கு புன்னகைத்துக்கொண்டிருப்பது
விசாரணையாளனின் தோல்வி


பாதிக்கப்பட்ட கேள்விகள்
வலி நிரம்பிய பதில்களை எழுதி வாங்குகிறது
சொற்கள்
சட்டங்கள் என்ற பதத்தை பெறுகையில்

உண்மைகள்
பொய்கள்
குறுகிய கால வாழ்வு இவற்றைக்கொண்ட
ஒரு மனிதன்
தூக்கில் தொங்குகிறான்
சமாதானம்
அமைதி
கனவு
எல்லாம் முடிவுக்கு வருகிறது

ஒரு பிணத்தின் முன் வரலாற்றிற்கு
செய்வதற்கு எதுவும் இல்லை

அது....
அந்த
வரலாறு
எப்பொழுதும்
எழுதுபவர்களின் குதச் சூட்டில் தனது கைகளை வெப்பம் காய்ந்துகொண்டிருக்கிறது


பிருஷ்டம் 
இது சமஸ்கிருதச் சொல்
குண்டி...
ஆம் இது ஏறக்குறைய சற்று
சரியான வார்த்தை
சிறிய கேலிக்குரிய வார்த்தை
ஆள்பவர்களுக்கு குண்டிகள் கிடையாது

பிருஷ்டங்களை வைத்திருக்கும் சில
அரசியல்வாதிகள்
தர்மவான்கள்
காலணியை நக்கும் அதிகாரிகள்
இன்னும் சில
எழுத்தாளர்களை
எனக்குத் தெரியும்

ஆனால்
நான் விசாரணைக்குட்படுத்தப்படுவதில்
எனக்கு நம்பிக்கையில்லை.


0 comments:

Post a Comment