1
வேலைக்குச் செல்லும்போது
வெள்ளைக் காகிதத்தில்
சுருட்டி எடுத்துச் செல்லும்
சாண்ட்விச்சைப் போல இருக்கிறது
என் அப்பாவின் நினைவு
தனது தொப்பிக்குள்ளிருந்து சீட்டுக்களையும்
முயல்களையும் எடுக்கும் ஒரு
மந்திரவாதியைப் போல
தனது சிறிய உடலிலிருந்து அன்பை
உருவி எடுப்பார் அவர்
அவரது கரங்கள் என்னும் நதிகள்
நற்செயல்களால்
நிரம்பிப் பாய்ந்துகொண்டிருக்கின்றன
2
எனக்கு ஒரு ஆளைத் தெரியும்
தான் கலவி செய்த
அறையின் ஜன்னலின் வழியே பார்த்த
காட்சியை அவன்
படம்பிடித்துக்கொண்டிருந்தான்
தான் புணர்ந்த பெண்ணின் முகத்தை
விட்டுவிட்டு
3
ஒருவரை மறப்பதென்பது
புழைக்கடை விளக்கை அணைக்க மறப்பதுபோல
அது மறுநாள் வரை எரிந்துகொண்டே இருக்கும்
ஆனால் அந்த விளக்குதான்
உங்களை நினைவுகூரச் செய்யும்.
4
கற்பாறையைப் போல் தோன்றும் விதமாக
வர்ணமடிக்கப்பட்ட வீட்டுச் சுவரின் அருகில்
நான் கண்டேன்
கடவுளின் தரிசனங்களை
மற்றவர்களுக்குத் தலைவலியைத் தரும்
உறக்கமற்ற இரவு
எனக்குத் தந்தது மலர்களை
அவை அழகாக மலர்ந்தன என் மூளையில்
நாயைப் போலக் காணாமல் போனவன்
மனிதனைப் போல கண்டறியப்படுவான்
வீட்டுக்கு கொண்டுவரப்படுவான் மீண்டும்
நேசம் என்பது கடைசி அறையல்ல
அதற்கு அப்புறமும் இருக்கின்றன, முடிவற்று
நீளூம் தாழ்வாரமும்
5
என்னை நீ பிரிந்துசென்ற பிறகு
எனது மார்பையும் அடிவயிற்றையும் ஒரு
நாயைக் கொண்டு
மோப்பம் பிடிக்கச் செய்வேன். அது தனது
நாசியை நிரப்பிக்கொண்டு
உன்னைக் கண்டுபிடிக்க ஓடிச்செல்லும்
அது உன் காதலனின்
விதைகளைக் கிழிக்கும், குறியைக் கடித்துத்
துண்டாக்கிவிடும்
என்று நான் நம்புகிறேன்
அல்லது, குறைந்தபட்சம்
உனது உள்ளாடைகளையாவது தந்து
பற்களில் கவ்வி வரும்.
வலசைப் பறவை
மொழிபெயர்ப்பு; ரவிக்குமார்
பதிப்பகம்; மணற்கேணி

0 comments:
Post a Comment