Tuesday, December 27, 2011

......ஆமென்., அப்படியாகவே....




திறந்த கதவின் வழியாக புன்னகைக்கும் மனிதர்களைக் கண்டால் நடுக்கமுறுகிறது

அவர் அரசியலைப் பற்றி அறிந்தவராக இருக்கலாம்
அல்லது ஒரு போலிஸ்காரரை
இன்னும் நீதிபதிகளை அறிந்திருக்கலாம்

தனக்குத் தானே பொய்களைச் சொல்லி
அவற்றை நாட்குறிப்பில் வராலாற்றாய்
மாற்றும் உத்தி தெரிந்திருக்கலாம்
சரளமான கவிதையோட்டத்துடன் கூடிய
மொழியில் அவர் இப்பொழுது உரையாடத் தொடங்குகிறார்

அவலத்தை
அதன் ஆரம்பக் கசப்பிலேயே உணர்ந்து கொள்ள தருணங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கிறேன்
தலைக்குப் பின் ஒளிவட்டம் சுழலும்
மனித முகங்களை பார்ப்பதை விட
குதங்களைக் கண்டறிவது ஒரு விஞ்ஞானிக்கு
ஒரு சமூகவியலாளனுக்கு
இன்னும் மேற்படிகளை எழுதும் கவிஞனுக்கு
மகிழ்ச்சியூட்டுவதாக அமைகிறது

வரலாற்றைப் பின் புறமாகப் புணர்பவர்கள்
அரசியலுக்கு தங்களது மேன்மை
மிக்க குதங்களை வாரி வழங்குகிறார்கள்
எழுதுவதற்கும் பேசுவதற்கும்
உரையாடுவதற்கும் வாசிப்பதற்கும்
பட்டினியைக் கைக்கொள்ளும் ஒருவனுக்கு
இறுதியில் சுதந்திரம் என்னவாக இருக்கிறது

பேரோசையில் காணும் குரல் யாருடையது
மௌனத்தால்  இறுகிய மேலுதடுகளை
பிரிக்க எத்தகையச் சொல்லைக்
கைக்கொள்ள வேண்டும்
குற்றம் யாருடையது
நீதியை எவர் கண்களைப் பார்த்துச்
சொல்லுகிறார் நீதிபதி


பாலற்றவர்களுக்கு சொல்ல இப்புவியில் எதுவுமேயில்லை
அவர்கள் முடிவில்லாத மொழியின் முகத்தில்
காறி உமிழ்ந்து அவமானத்தில் பொசுங்கிய கண்ணீரை
பார்வைக்கு வைக்கும் போது
எனது
வாயை அகலத்திறந்து எனது
இருதயத்தின் இடது பக்கத்தில்
பொசுங்கும் அளவுக்கு
மௌன அமிலத்தை நிதானமாக ஊற்றிக்கொள்கிறேன்

எல்லாவற்றுக்கும் பெயர் இட்டு
அளவுகோல் வைக்கும் ஆதிக்கைகளை சபிக்க
எனக்கு மொழிகளோ
பார்க்க விழிகளோ இல்லை

சுத்த அம்மணம்
நிறை அம்மணம்
சூன்யம்
ததாக மௌனம்

ஆமென்.


1 comments: