Wednesday, January 4, 2012

கவிதை குறித்து.......வணக்கம் மணிகண்டன் ......
இங்குதான் எனக்கு பிரச்சினை ஆரம்பிக்கிறது. மணிகண்டன் கவிதை மட்டுமல்ல சிறுகதை, நாவல், செய்திகள் ஏன்.... முதல் குற்றத்தகவல் அறிக்கையும் (F.I.R). கூட கலைடாஸ்கோப்பாய் மாறும். விரைவாக சேரும், சேரவேண்டும் என்ற அவாவாவே படைப்பாளரை பதிப்பகம் நோக்கி இழுக்கிறது என்பது என்வரையில் ஏற்றுக்கொள்ளமுடியாத பதில். இங்கு ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகள் இன்னும் விரைவாகச் செல்கின்றன. அதில் கவிதையாளர் பங்கேற்கலாம்.
ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன் கலை கலைக்காகவே என்று சொன்ன மேற்கத்திய நாட்டு படைப்பாளிகளின் எண்ணவோட்டம் வேறு.  அவர்கள் தூய கலையைக் கூட சொல்லியிருக்கலாம். இங்கு தமிழ் நாட்டில் சொன்னது பார்ப்பனக் கோஷ்டிகளும் அதற்கு தலையாட்டிய அவர்களின் பஜனைக் கோஷ்டிகளும்தான்.


அவர்களுக்கு மாறாக கலை கலைக்காகவே என்று சொல்லும் தமிழ் எழுத்தாளர்களை நீங்கள் சுட்டிக் காட்டலாம். ப்ரெக்ட் ஒரு இடது சாரி அவன் கலையை அரசியலுக்கு அடிக்கும் ஆப்பாய்க் கூட இறக்கியிருக்கலாம். இங்கு தமிழில் கலை கலைக்காகவே என்றவர்கள் என்ன காரணத்திற்காகச் சொன்னார்கள் என்பதையும் விளக்குங்கள்.


வெளிநாடுகளில் படைப்பை எடிட் செய்யும் வழக்கம் இருக்கிறது. அப்பொழுது கலை கலைக்காகவேஎன்பதும் வாசக நோக்கத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் எப்படிப் புரிந்து கொள்ளுவீர்கள்.


எல்லாவற்றையும் விட கவிதையாளர் கவிதை எழுதுவதற்கு அடுத்தபடியாக, தாங்கள் கூறிய கவிஞர்களின் பீடம், பதிப்பக அடையாளத்திற்கு தவித்தல், விழுந்து புரளல்,  விரைவாக வாசகரை சென்றடைதல் போன்ற கலை தவிர்த்த கவலைகள் ஏன் படைப்பாளரை அச்சுறுத்த வேண்டும். அவர்களுக்கு எதற்கு அரசியல்.


கவிதை என்பது கலைடாஸ்கோப் என்றால்  அதை வெளியிட சம்பந்தப்பட்ட கவிஞர்கள் செய்யும் அரசியல், ஊளைகள், மற்றும் பஜனைப் பாடல்கள், மற்றும் எச்சில் வடித்தல்கள் எதில் சேர்த்தி.  என் வரையில் அது கவிதையென்னும் கலைடாஸ்கோப்பை சிதறச்செய்யும் ஒரு சிறிய மரச்சுத்தியல் அவ்வளவே. 

கவிதை பற்றி ஒருவர் புரிந்து கொள்வதற்கும் அதைவிமர்சிப்பதற்கும் வேறுபாடுகளும் மாறுபாடுகளும் இருக்கிறதென்றால். நான் சொன்னபடி 2002 ல் கவிதையென்றால்....நதி கண்ணாடி...கண்ணாடியல்லாத நதி, புத்தன்,புயலின் நுண் வெற்றிடம், தத்துவம், மீகாலத்தின் உருவாக்கம், invisible parofite, alternative unit of time…..என்றெல்லாம் உதிர்த்த கவிஞர் 2011 ஆண்டு இறுதியில் பாம்புக்கும் பம்ப்புக்கும் மாற்றம் பெற்றதுதான் கவிஞரின் வளர்ச்சியா.

இன்னும் ஒன்று.... நான் பிரெக்ட்- ன் கவிதைகள் மற்றும் அவர் குறித்தான விமர்சனக் கட்டுரைகள் பற்றி படித்திருக்கிறேன். ப்ரெவரின் கவிதைகள் குறித்துப் படித்திருக்கிறேன். இவர்கள் இப்படியெல்லாம் பயமுறுத்தவில்லையே. இங்குதான் அவர்கள் கலை கலைக்காவே என்பதற்கும் இங்குள்ளவர்கள் தங்கள் மேதமையோடு கலந்த பார்ப்பனிய அரிப்பை சொறிந்து இழுப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அறியமுடிகிறது.

வாசகர்... சம்பந்தப்பட்ட கவிஞரின் கவிதைகளை வாசிப்பதோடு, கவிஞரின் நுண்மான் நுழைபுலத்தையும் அவர் எழுதிய ஆண்டுகளின் கனத்தையும் சேர்த்து வைத்து வாசிக்க வேண்டும் என்று ஏன் படைப்பாளர்கள்  துன்புறுத்த வேண்டும்.  கலை கலைக்காவே சரி. விற்பனை மக்களுக்காவே. இல்லையா. விளக்குங்கள். 

2000 வருடத்திற்கு மேலாக தீண்டத்தகாத சமூகத்தை உருவாக்கி கல்வியறிவு மறுக்கப்பட்டு, சாதியின் பெயரால் ஒதுக்கிவைக்கப்பட்ட இந்தியாவில், தமிழகத்தில் கலை கலைக்காகவே என்பது பெரும் அபத்தமாகவே படுகிறது. அறுவெறுப்பாகவும் இருக்கிறது.

எனக்குத் தெரிந்து தமிழ் உரைநடையிலிருந்து கவிதை வரை தொடங்கி வைத்தது பார்ப்பன சாதியாக இருப்பதும், ஆளும் சாதியாக இருப்பதும், ஏன் மணிகண்டன். அவர்கள்தான் பிறவிப் படைப்பாளர்களா. அவர்களின் கலை எதற்காக.
உதாரணத்திற்காக

சுப்பிரமணிய பாரதி
மாதவையா
மௌனி
கு.பா.ரா.பிச்சமூர்த்தி
க.நா.சு தொடங்கி


இன்னும் சுந்தரராமசாமி ஆரம்பித்து பட்டியலைத் தொடரலாம்.

உங்கள் இணைப்பைப் படித்தேன். அதில் நான் கலை மக்களுக்காவே என்று சொன்னது போல் எழுதியுள்ளீர்கள். இன்னும் நான்  என் விவாதத்தை அந்த நோக்கில் தொடங்கவேயில்லை.
கலை கலைக்காகவே என மேற்கு சொல்வதற்கும் இங்கு சொல்வதற்கும் உள்ள வித்தியாசங்களைத்தான் இப்பொழுது  கேள்விக்கு வைக்கிறேன்.( பின் கலை என்றால் என்னவென்றிலிருந்து, அது யாருக்காக, அது தோன்றுவதற்கான தேவை என்ன என்பதிலிருந்து நாம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது) அங்கும் கருப்பர் இலக்கியம் என்ற தனிப் பிரிவு உண்டு மணிகண்டன். இங்கு கலை கலைக்காகவே என்ற குரல்கள், கலையைப் பேசினவா இல்லை பார்ப்பனியத்தின் தூய்மையை அதன் சாகசத்தை, புனிதத்தை பேசினவா என்று நீங்கள் கூறலாம்.

அப்படி கலை கலைக்காகவே என்று சொன்ன எழுத்தாளர்களை நீங்கள் சுட்டுவதன் மூலம் அவர்களின் படைப்புகள் எந்தளவுக்கு கலை கலைக்காகவே என்பதில் வெற்றியடைந்திருக்கிறது என்பதையும் அவர்கள் கலை கலைக்காகவே என்பதன் அவசியத்தை எந்தளவுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் என்றும் நாம் பேசலாம்.

தேவதச்சனை பிணம் என்று சொன்னதும் உங்களுக்கு கோபம் வந்ததற்கு எனது மகிழ்ச்சி. ஆனால் அத்தைகைய அர்த்தத்தில் நான் கூறவில்லை. நான் சொன்னது போஸ்ட் மார்டம் அறிக்கைகளை கவிதைகள் என்று சொன்னது. தேவதச்சனை நான் நேரடியாக பிணம் என்று சொல்லவில்லை. சொல்லமாட்டேன். நான் சொன்னது படைப்புகளை. அது மனுஷ்யபுத்திரன் சாகித்ய அகாதமியை செத்தவர்களுக்கு திதி என்று சொன்னதற்கு பதிலாகத்தான். என்னிடம் கேட்ட கேள்விகளோடு மனுஷ்யபுத்திரனுக்கும் உங்களுடைய வருத்தத்தை இணைப்பாய் இணைத்தால் மகிழ்வேன்.

தனிமனித சிக்கல்கள் பற்றி கூறியிருந்தீர்கள். சமூகத்தில் வாழாத எந்தத் தனிமனுதனுக்கும் இச்சமூகசம் சார்ந்த
(மனிதர்கள் சார்ந்த )சிக்கல்கள் வராது. எவரும் இங்கு தனிமனிதர் அல்ல என்பதே என் கருத்து. ஒரு மனிதன் சமூகத்தோடு உடன்படுவது அல்லது மறுப்பது, இல்லை இரண்டிற்கும் இடையில் காலூன்றி நிற்பது ( இதை பௌத்த மரபு சொல்லும் மத்திய நிலை என்று பொருள் புரிந்து கொள்ளலாம்) மட்டுமே இங்குள்ள அடிப்படைகள்.


மணிகண்டன் கவிதையைப் பொறுத்தவரையில் மட்டும் அல்ல எதைப் பொறுத்தவரையிலும் விளக்கம் கொடுக்கும் போது, அதை கொஞ்சம் பின்பற்றும் போதும், அல்லது ஏற்கும்போதும் அது சம்பந்தப்பட்ட படைப்பாளிக்கு உதவக் கூடும் என்பது என் நம்பிக்கை. சாதியில்லை என்று சொல்லிவிட்டு, ஒரு படைப்பாளி தனது படைப்புகளில் தனக்கே தெரியாமல் சாதி குறித்து எழுத வாய்ப்பிருக்கிறது. அப்படி எழுதி அதை வாசகன் சுட்டிக் காட்டினால். சம்பந்தப்பட்ட எழுத்தாளர் தனது படைப்புகளை நிறுத்திவிட்டு, தன்னை மீறி தன் படைப்பில்  ஏன் சாதி உள்ளுக்குள் வருகிறது? அதன் ஆதாரத் தேவை? என்ற தொனியில் கொஞ்சம் உள்நோக்கி, படைப்புகளை வைத்தால் அது அவருக்கும், அவரைப் போன்ற படைப்பாளிகளுக்கும், நம்மைப் போன்ற வாசகர்களுக்கும் உதவியாய் இருக்குமல்லவா. என் வரையில் இந்த உங்களது அனுபவத்தில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படவேண்டுமென்று விரும்புகிறேன்

பேசலாம் காத்திருக்கிறேன். மேலும் உங்கள் பக்கத்தில் நீங்கள் எழுதிய கலை பற்றின குறிப்புகள் அனைத்தும் உங்களது சுய தேடலை கவிதைகளின் வாயிலாக அமைவதாகவே காட்டுகிறது. கவிதையை ஒரு கருவியாக கைக்கொள்கிறீர்கள். நல்லது.  கருவி பற்றின தேவையையும், அதை தேர்வு செய்ய வேண்டிய அவசியத்தையும் விளக்கலாம். மேலும் மனநிம்மதி ஆசுவாசம் என்பவைகள் உங்களுக்கு மனிதர்களும் சூழலும் தந்ததாகவே இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கருவி வெறும் வார்த்தைகளையும், அர்த்தமற்ற சொற்களையும் இரைத்துவிடக் கூடும் அபாயமும் உள்ளது.  


பேசலாம்.

உதாரணத்திற்காக ஒரு சிறு குறிப்பு;


பள்ளு பறையெனுக்கெல்லாம் எப்படிடா கவிதை வரும் என கவிஞர் தய்.கந்தசாமியிடம், கவிஞர் விக்கிரமாதித்யன் கேட்டது கலை கலைக்காக என்ற அர்த்தத்திலா...இல்லை கலை மக்களுக்காக என்ற அர்த்தத்திலா....

என் வரையில் அதற்குப் பதிலாக தய்.கந்தசாமி எழுதியதை மக்கள் கவிதையோ...இல்லைக் கலைக் கவிதையோ அல்ல அதைக் கவிதை என்றே அழைப்பேன், கவிதைக்கு நிலம் சார்ந்த தொடர்புகளும் உண்டு.

ஜப்பானியப் படம் பார்த்துவிட்டு
சாராயம் குடித்த ஒரு முன்னிரவில்
போதையேற ஏற
கவிதையாய் இறங்கியது

சங்கரராம சுப்ரமணியனொன்று
ந.முத்துக்குமாரும்
வளர்மதி பார்க்க
நான் கவிதை சொல்ல சந்தேகம்
அந்த ஞானக் கிறுக்கனுக்கு
சேரிக்காரனுக் கெப்படி
சித்திக்கும் கவிதை
சந்தேகம் வந்தது
சாதித் திமிர்
நேரில் கேட்டதோ நேர்மை

அடே சடையா
அழுக்கு மடையா
ஓந்தாடியில எம்.....ல வக்க
தாலாட்டில் பிறந்து
ஒப்பாரியில் மறையும்
சேரிக்கு எவனடா ஞானகுரு?

ஆரிய யோனியில்
அழுக்குத் திரட்டி
அதை உன் மூளையில்
அழுத்தித் திணித்து

அப்படிப் பிறக்கும்
உன் கவிதை
அதைவிட அழகு
என் கழுதை.


பேசலாம் மணிகண்டன்.

2 comments:

  1. சம்பந்தப்பட்ட இருவருக்கும்..வாசகன் கவனமாக வாசித்துக்கொண்டிருக்கிறான்.நட்டாற்றில் விடவேண்டாம் :-) :-)

    ReplyDelete
  2. வணக்கம் சிவக்குமார்.

    ReplyDelete

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...