எப்பொழுதும்
நான் காத்துக்கொண்டிருக்கிறேன்
நண்பர்கள் வழியனுப்ப
காத்துக் கொண்டிருக்கிறார்கள்
காத்துக்கொண்டிருப்பதையும்
வழியனுப்புவதையும்
கவிஞர்கள் கண்டுகொள்வதேயில்லை
வார்த்தைகளை ருசி பார்க்கத் தெரிந்த
கவிஞர்களுக்கு
சொற்களின் குரூரமும்அடிக்கசப்பும்
பற்களைச் சில்லிடச் செய்யும் வன்மத்தையும் தெரியும்
சொல்லின் செல்வர்கள்
சொல்லேர் உழவர்கள்
தமிழறிஞர்கள்
முத்தமிழ் குடித்தோர்
எவருக்கும் கிடைக்காத
இறுதிச் சொல்லை
கவிஞர்கள் சில சமயங்களில்
சிறுநீர் பெய்யும்போது கூட அறிந்துவிடுவார்கள்
சொல்லை
அறிந்த கவிஞர்களை
சொற்கள் காயப்படுத்துவதில்லை
எனினும் தேர்ந்தெடுத்த சொற்களை வைத்து கவிஞர்கள்
தமக்கான ஆயுதத்தை உருவாக்கிவிடுகிறார்கள்
துப்பாக்கிக் குண்டு
குறுங்கத்தி
இப்படியாக....
ம்யாகோவ்ஸ்கி
தோட்டாக்களைச் செய்து
கவிதைகளை உச்சரித்த
அவன் நாவின் மேல் வைத்து கபாலத்தைத் திறந்தான்
சொற்கள் சிதறி இறந்தான்
பிளாத் வரிகளில் ஓடும்
சுய நெருப்பை நம்பினாள்
செக்ஸ்டான் கவிதையெழுதிய
காகிதத்தை கிழித்துப்போடும்
காற்றை...
கவிஞர்கள் நம்புகிறார்கள்
திட
திரவ
வாயுக்களை
கவிதையைத் தவிர
நம்புகிறார்கள்
கவிதையைப் பேசுவதும்
எழுதுவதும்
உச்சரிப்பதும்
கூட தற்கொலைச் செயல்தான்
ஒரே
சமயம்
மனப்பிறழ்வுக்கும்
மானுட சொர்க்கத்தின் வாசல்களை
நரகத்தின் இறுகிய வரிகளால்
நொறுக்கி
எறிந்துவிட்டு
உள்ளே நுழையும் எத்தனமும்
வான்கா...
கவிதையை
எழுத்தை வண்ணமாய்க் கண்டவன்
பிரியக்கூடாத காதலிக்காக இடது காதை அறுத்தான்
வண்ணங்களின் ஒலியை இழந்தான்
தடைச் சட்டங்கள் அமலுக்கு வருகையில்
பல
சில
வார்த்தைகள் தூக்கில் தொங்குகின்றன
கவிஞர்கள் சடலங்களாக மாறிவிடுகின்றனர்
கவிஞர்களுக்கு
சிலசமயம்
காதுகள்
கண்கள்
வாய்
அதனால் அவர்கள் எழுதுகிற சொற்கள்
அனைத்தும்
வேலை நிறுத்தம் செய்யும்
கவிஞர்கள் பாவம்
பாவம்
கவிஞர்கள்
என்று
இடைவெளிகளை உடைத்தும்
தள்ளிப் போட்டும் சொல்லலாம்
கவிஞர்கள் தன் வறுமையை எழுதும்போது
விழிகளால் தொலைதூர நட்சத்திரமொன்றை
பிரகாசிக்க விடுகிறார்கள்
ஒளி மிகுந்த சொற்கள்
ஒளிமிகுந்த சொற்கள்
வார்த்தைகளின் குறுக்குவெட்டுத்தோற்றம்
அறிந்தவர்கள் கவிஞர்களென்றாலும்
கவிஞர்களுக்கு
மௌனம் தெரிந்திருக்கவேண்டும்
மௌனத்தை
வலியவோ
இறுக்கியோ
தளர்த்தியோ
அல்லது
விரும்பியோ
விரும்பாலோ
எப்படியோ
புணர்ந்தால்தான் கவிதை எழுத முடியும்
மௌனத்தில்தான் கவிஞர்கள் ஊமையாகிறார்கள்
ஊமைச் சொற்கள்
கூர்மையுடையது
நேரடியர்த்தம் கொண்டது
இவ்வுலகில் சகிக்க முடியாத அமைதி என்றால்
கவிஞர்களின் இறுக மூடிய எழுதுகோலையும்
அதற்கிணையாக
பற்களால் உதடுகளை அழுத்திக் கடித்தபடி
உள்ளே
குருதி கசிய துவண்டபடியிருக்கும்
நாவின்
மௌனத்தையே சொல்வேன்
மயான அமைதி
பேய்களின் சதித்திட்டம்
அரசுகளின் ஒன்றுகூடல்
சாவமைதி
கவிஞர்களுக்கு மௌனத்தைத் தரும்
அரசு....
என்ன சொல்வது
அ
ர
சு......
ஆட்சியைக் கைபற்றும் சொற்கள் அறியாதவர்கள்
கவிஞர்கள்
இருக்கலாம்
ஒருவேளை....
அவன் சில
சமயங்களில்
கவிதையெழுதுவது போல்
நடித்துக்கொண்டிருந்தால்
அரசை நடத்திக்கொண்டிருந்தால்
வார்த்தைகளை இலவசங்களால் நிரப்பினால்
கவிஞன் கடவுளாகிறான்
மக்களின் அப்பாவி இதயங்களை
தனது வரிகளால்
கிழித்தபடி உறிஞ்சிக்கொண்டு
நாற்காலியை பதறியபடி பற்றிக்கொண்டு
ஆனால்
நிதானமாக இருக்கமுடியாது
கவிஞர்கள் நிதானத்தை கைக்கொள்ள முடியாதவர்கள்
கலைஞன் நிதானியாகலாம்
ஆனால்
அவனால் கவிதைக்கான ஒரு வாரிசை
தந்துவிட்டுப் போக முடியாது
எனக்குத் தெரிந்து
கவிஞர்களின்
குழந்தைகள்
ஒரு போதும் கவிதையெழுத முடியாது
முடியாது
ஆட்சி நடத்தலாம்
கவிதை சும்மாயிருக்காது
அல்லலடைந்த குருதி
பற்கள் நொறுங்க கடிபட்ட மௌனம்
பசிய சொற்கள்
இவைகள்
கவிஞர்களுக்கு கருப்பொருளாகும் தருணத்தில்
அவர்கள் அஞ்சக்கூடும்
வார்த்தைகளுக்கு
சொற்களுக்கு
மௌனங்களுக்கு
நம்புவோம்
கவிஞர்களே
அறம்
பாடுதல் என்பதும் சற்று சிறிய கவிதைதான்.
(...எர்னஸ்த்தோ ச்சே கெ'பாராவைக் கொலை செய்தல்)
கவிதைத் தொகுதி.

அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com