Tuesday, February 14, 2012

குடிகாரர் இல்லாத திருவாளர் ஞாநிக்கு......

சூர்ய கதிர் பதில்கள். 1.2.2012
ராஜாராம், சென்னை.
புத்தக கண்காட்சியில் ரெண்டு எழுத்தாளர்களுக்கிடையே கையை கடித்து சண்டை போட்டார்களாமே?
அது எழுத்தாளர்களிடையிலான சண்டை அல்ல. குடிகாரர்களிடையே நடந்த சண்டை. டாஸ்மாக் வாசலில் தினசரி பல சண்டைகள் நடக்கின்றன. .டி எஞ்சினீயரும், குழாய் ரிப்பேர்காரரும் சண்டை போட்டார்கள் என்றா சொல்லுகிறோம் ?வணக்கம் திருவாளர் ஞாநி....நானும் சங்கரும்தான் சண்டையிட்டோம். ஆனால் உங்கள் நாட்டாண்மைத் தனம் இப்படி அரை குறையாக குதிக்கக் கூடாது. முதலில் குடியை அவமானப்படுத்தும் உங்கள் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளுங்கள். குடிக்காமல் சண்டை போட்டாலும் சண்டை சண்டைதான்.

தாங்கள் சம்பந்தப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லுவதாய் இருந்தால் சம்பந்தப்பட்ட சண்டை குறித்து விசாரித்திருக்க வேண்டும்.

நான் அன்று குடிக்கவில்லை. குடி குறித்து எனக்கு நிறைய பார்வைகள் உண்டு உங்களைப் போல் மட்டையடி அடிப்பது போல் குடியை நான் ஒற்றைப் பார்வையுடன் செய் செய்யாதே என்று மந்தப் போக்கில் சொல்வதில்லை. இன்னும் ஒன்று எவருடன் அமர்ந்து குடிக்க வேண்டும் என்கிற என் தெரிவுகளினாலேயே நான் குடிப்பது அபூர்வம். அன்று நான் குடிக்கவில்லை

மிஸ்டர் ஞாநி....குடிக்காத என்னை குடித்தேன் எனச் சொன்னதோடு குடித்தவர்கள் எழுதுவதெல்லாம் கவிதையல்ல...என்ற உங்களின் மனநிலை வியக்க வைக்கிறது. குடிக்காதவர்கள் செய்யும் அயோக்கியத் தனங்களை பட்டியலிட்டால் உயிர் வாழ்வதே சிரமம்தான் என்ன செய்ய. ஏன் இவ்வளவு வன்மத்தோடு செயல்படுகிறீர்கள், அன்று நான் குடித்திருந்தேன் என்று உங்களால் உறுதியாக எப்படி சொல்ல முடிகிறது. நீங்கள் குடிக்காவிட்டால் அது உங்களோடு...ஆனால் நீங்கள் குடிப்பதை நானும் பார்த்திருக்கிறேன். ஞாபகம் இருக்கிறது. அதை தேவைப்பட்டால் விளக்குகிறேன். மேலும் உங்கள் இல்லத்தில் மதுவருந்தி கால் விரித்து படுத்திருந்த ஆளுமையையும் நான் அறிவேன். அவர்களையும் தாங்கள் குடிகாரர்கள்தான் என்று பொருட்படுத்தினால் நான் விவாதிக்கத் தயார். எல்லாவற்றிற்கும் மேலாக பல முறை சந்தித்திருக்கிறோம் என்றாவது நான் குடித்து நீங்கள் பார்த்ததுண்டா..என் உடலில் மதுவின் நறுமணத்தை சுவாசித்ததுண்டா.....

சமயோசிதமாக..நளினமாக....எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் போகிற போக்கில் என்னைக் குடிகாரன் என்றழைத்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. தாங்கள் குடிக்காமல் பல நல்ல செயல்கள் செய்து.....இலக்கியம் விமர்சனம் என எல்லாத் துறைகளையும் வளருங்கள்.

இதில் நான் மிகுந்த அவமானமடைவது... பாப்பசியில் அது குறித்து புகார் செய்தபோது அங்கிருந்த தோழமைகள் என் புகாரை பொருட்படுத்தியது நான் குடித்திருந்ததனால்தான.....வெட்கமா இருக்கிறது. காலம்போன காலத்தில் இப்படி அரை குறை தகவல்களோடு எழுதுவதற்குப் பதில் தாங்கள் ஓய்வெடுக்கலாம். தாங்கள் எழுதியதை மறுபடி மறுபடி வாசித்து வாசித்து பிழை திருத்தம் செய்வதோடு சிந்தனைகளையும் மாற்றலாம். உதவியாய் இருக்கும்.

மிகுந்த தெளிவுடன் கேட்கிறேன்...குடிக்காத...உங்கள் பார்வையில் நல்ல எழுத்துக்களை முன் வைக்கிற ஒரு சம காலப் படைப்பாளியை  நீங்கள் சுட்டினால் நான் பேசவும்...அது குறித்து எழுதவும் சித்தமாயிருக்கிறேன். 


மனுஷ்ய புத்திரன் பரவாயில்லை எனச் சொல்ல வைத்து விட்டீர்கள்.


{இப்பொழுதுதான் நண்பர் சொல்லி பார்வைக்கு வந்தது.}

3 comments:

 1. ஏதாவது கலகம் வந்தால் தான் கவிதை பிறக்கும்,பரவாயில்லை படைப்பாளிகள் சண்டையிட்டால் கூட சத்தத்திற்கு பதில் சந்தம் பிறக்கிறது

  ReplyDelete
 2. அன்புள்ள வசு

  நீயும் சஙகரும் அன்று சண்டையிட்டது பற்றி பார்த்தவர்கள் சிலர் தெரிவித்த தகவல்களின் அடிபப்டையிலேயே என் கருத்தை எழுதியிருந்தேன். இருவருமே குடித்துவிட்டு சண்டையிட்டதாகவே எனக்கு சொல்லப்பட்டது. அது தவறெரென்றால் திருத்திக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். எல்லா துறைகளைச் சேர்ந்தவர்களும் குடிக்கிறார்கள். குடித்திருக்கும் நேரத்தில் அவர்களின் நடத்தையை அவர்களின் தொழில் பணி மீது சுமத்தி சொல்லக்கூடாது என்பதே என் கருத்து. குடித்தபின் தொழில், பணி வேறுபாடுகள் கலைந்து ஒரே போல ஆவதே உண்மை. குடிப்பவன் கவிஞனாக இருக்க முடியாது என்று நான் எங்கேயும் சொல்லவில்லை. கவிஞன் குடிக்க வேண்டாமே என்பதுதான் என் விருப்பம். எப்போதும் உன் மீதான அன்புடன் ஞாநி

  ReplyDelete
 3. வணக்கம் ஞாநி.....

  உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். அதே வேளையில் சொன்னார்கள் சொன்னேன் என்பதும் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நீங்கள் பதில் சொல்லியிருப்பதாகவும் நீங்கள் கூறுவது எனக்கு மிகுந்த ஆயாசத்தைத் தருகிறது. சொன்னவர்கள் உங்கள் நம்பிக்கையின் பட்டியலில் இருந்தால் அவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மையாகத்தான் இருக்கும் என்ற உங்கள் நம்பிக்கையை நான் உங்கள் நட்பின் அடிப்படையில் மட்டுமே வைத்து புரிந்து கொள்ள முடியுமே தவிர ஆதாரங்களைத் தேடும் உங்கள் மனதின் அடிப்படையில் அல்ல. மேலும் அக்கேள்விக்கு நீங்கள் பதிலளிப்பதன் மூலம் என் மீது கவிழும் குடிகாரன் என்ற முத்திரையை நான் பெருமையாகவே கருதுகிறேன். ஆனால் பொது புத்தியில் குடி குறித்த அவமான வார்த்தைகளை ஒரு பணியாகவே அரசு செய்து வருகிறது.

  நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும் ஞாநி... தாங்கள் குடியிருக்கும் அதே அழகிரி சாமி சாலையில் என் வாழ்நாள் தோழியோடு நடந்து வந்தபோது, அவளுக்கு சில உறுதிகள் சொல்ல வார்த்தையில்லாது கைகளை பிடித்து நடந்து வந்தேன். அப்போதுதான் உயர் திரு கலாச்சாரக் காவலர் தன் ஜாதி சொன்னதோடு...ஒருபெண்ணை கையைப் பிடித்து எப்படி இழுத்துச் செல்லலாம் எனக் கேட்க, நான் பேச... பதிலை கையில் வைத்திருந்த வாளால் என் கழுத்தில் ஆழமாக வெட்டியும். வயிற்றில் குத்தியும் வெளிப்படுத்தினார். ஆனால் இலக்கியவாதி என கருதும் ஒரு நண்பர் அதை ... வசு ஒரு மதுவிடுதியில் இலக்கியக் கலாட்டா செய்து பாட்டிலை உடைத்துக் குத்திவிட்டார்கள் என்று மிகுந்த பெருமையுடன் சொல்லித் திரிந்தார். நான் என்ன செய்ய வேண்டும். அவரை முன்னிருத்தி ஒட்டு மொத்த இலக்கிய உலகையும் காய்ச்சலாமா. இதில் மிகப் பெரிய வேடிக்கை நான் மருத்துவமனையில் இருந்தபோது சம்பந்தப்பட்ட இலக்கியவாதி என்னைச் சந்தித்து ஆறுதல் அளித்ததுதான்.

  ஞாநி சில விசயங்களில் சில கருத்துக்களில் நான் உங்களிடமிருந்து முரண்பட்டாலும்....( ஒரு வாசகனாக) தேர்ந்தெடுத்த கொள்கைக்காக அது சார்ந்து தாங்கள் நிற்கும் உறுதிப் பாட்டின் அழுத்தம் மீது அளப்பறியாத மரியாதை கொண்டவன் நான் என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

  ஆனால் ஞாநி...கேணி கூட்டங்களுக்கு எனக்கு இன்னும் அழைப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது. சம்பந்தப்பட்ட கேள்விக்கு என்னை தொடர்பு கொள்ளும் நிலையில்தான் நான் இருக்கிறேன். ஆனால் சமத்காரமாக குடிகாரர்களுக்கிடையிலான சண்டை என்ற ஒற்றை அர்த்தம் எங்கு கொண்டு போய் விடும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

  " அது தவறெரென்றால் திருத்திக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.” என்று கூறியிருக்கிறீர்கள். திருத்திக்கொள்ளுங்கள். நான் அன்று குடிக்கவில்லை என்பதோடு உங்களுக்கு தகவல்கள் சொல்லுபவர்கள் முக்காலமும் உணர்ந்திருக்கும் ஞானிகள் அல்லர். அதிலும் அவர்கள் குடிகாரர்கள் இல்லையெனில் மிகுந்த கவனத்துடன் அணுகுங்கள்.


  " குடித்தபின் தொழில், பணி வேறுபாடுகள் கலைந்து ஒரே போல ஆவதே உண்மை.” இல்லை ஞாநி இது உண்மையல்ல... பல கோடிகள் முதலீடுகள் கொண்ட தொழில்களை முதலாளிகள் இனிமையான குடி விருந்துகளில்தான் ஆற்றுகிறார்கள். முதலாளிக்கும் நமக்கு கற்றுத் தரும் சில இடங்கள் உண்டுதானே. நான் ஒரு திருவிழா குடிகாரன் என்ற முறையில் சொல்லுகிறேன். குடி குடியைக் கெடுக்கும் என்பது குடிக்கத் தெரியாதவர்களின் சொல். எனது இரண்டு நூல் வெளியீடுகளும் குடி விருந்தோடும்...கறிச்சாப்பாடுமாய்த்தான் நிகழ்த்தியிருக்கிறேன். ஆனால் அன்று வயிறு முட்ட குடித்தவர்கள் நடந்து கொள்ளும் நிதானத்தின் உச்சத்தை எனக்குத் தெரிந்து நிதானமாய் இருப்பவர்களிடம் நான் கண்டதில்லை. குடி ஆழ் மனதில் சில கையாலாகத தனங்களை வெளிக் கொண்டுவரும் என்பது உண்மை. மேலும் அது ஓரளவுக்கு உண்மையல்லவா.

  மக்களுக்கு கருத்துக்களை வழங்குவதோடு ஒரு மக்கள் பணியாளனாக மக்களுக்கு குடிக்கும் கலையையையும் கருத்துரைஞர்கள், அறிஞர்கள், கற்றுத் தரவேண்டும்.


  நீங்கள் அறியாததல்ல... முன்னே சில இடது சாரிகள் அமைப்புகள் காதலையும் காமத்தையும் சமூகப் பணிக்கு எதிரியென கருதி அவற்றை ஒதுக்கி வைத்து விவாதித்தவைகள்தானென.

  இறுதியாக

  “ காதலர்களும் குடிகாரர்களும் நரகத்துக்குத்தான் செல்வார்கள் என்கிறார்கள்
  எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத சர்ச்சைக்குரிய கூற்று:
  காதலர்களும் குடிகாரர்களும் நரகத்துக்கு உரியவர்கள் என்றால்
  சொர்க்கமே காலியாகத்தான் இருக்கும் நாளை.”


  - ஓமர் கய்யாம்.


  ஞாநி நாம் குடிப்போமாக.
  சியர்ஸ்............

  ReplyDelete

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...