Sunday, May 20, 2012

புத்தரின் மௌனம் எடுத்த பேச்சுக்குரல்.
இதோ
எனது வெளிநடப்புக்கான பிரகடனம்

நெடுஞ்சாலைகள் தோறும் நிறுவிய எனது
சிலைகளின் முன்னே
மனிதரின் நிணமும் குருதியும் எலும்பும்
படையல் செய்தோரே

இதோ ஏற்றுக்கொள்ளுங்கள்
எனது வெளி நடப்புக்கான பிரகடனம்

பௌத்தத்தின் பேரால் தோரணம் கட்டிய
வீதிகள் தோறும் நீங்கள் நிகழ்த்திய
இனசங்காரப் பெரஹாராக்களின் பின்னரும்
இங்கே எனக்கு அலங்கார இருக்கையோ?

சூழவும் நெருப்பின் வெக்கை தாக்கவும்
போதிமரத்து நிழலும் எனை ஆற்றுமோ?
வெக்கை தாழவில்லை: வெளி நடக்கிறேன்.
புழுதி பறந்த வீதிகள் எங்கும்
குருதி தோய்ந்து புலைமையின் சுவடுகள்.

விலகிச் செல்கையில்
கால்விரல்களில் ஏதோ தட்டுப்படுகிறது.
பேரினவாதப் பசிக்கு மனிதக் குருதியை ஏந்திப்
பருகி எறிந்த பிஷா பாத்திரம்.

ஒருகணம்
அமுதசுரபி என் நெஞ்சில்
மிதந்து பின் அமிழ்கிறது

எங்கும் வீதிகளில் இனசங்காரத்தின்
மங்காத அடையாளங்கள்
ஓ! என் மனதை நெருடுகிறது.

இன்னும் காற்றிலேறிய அந்தப்
படப்படப்பும் பதகளிப்பும் அடங்கவேயில்லை

எழும்பிய அவலக்குரல்களின் எதிரொலி
காற்றிலேறிக் கலந்தோடும்
ஏன்? ஏன்? இக்கொடுமை என்றறைகிறதே!

இவை கேட்டதிலையா உமக்கெல்லாம்?

எனக்குள் கேட்டதே!
இதயம் முழுதையும் சாறாய்ப் பிழிந்ததே!
ஓ....
இதயமே இல்லா உங்களை இந்த
எதொரொலி எங்கே உரசிச் செல்லும்?
சந்திகள் தோறும் என்னைக்
கல்லில் வடித்து வைத்துக்
கல்லாய் இருக்கக் கற்றவர் மீது
கருணையின் காற்று எப்படி உயிர்க்கும்?
மனச்சாட்சி உயிரோடிருந்தால் வீதியெல்லாம்
மனித இறைச்சிக்கடைகள் விரித்து
மானுடத்தை விலை கூறியிருப்பீரா?

வெலிக்கடை அழுக்குகள் உங்கள் வீரத்தின் பெயரா?
ஓ? எத்தனை குரூரம்.

இத்தனை குரூரங்களும் கொடுமைகளும்
எனது பேரில்தான் அர்ச்சிக்கப்பட்டன; அரங்கேறி ஆடின

எனது பெயரால்தான் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை.
எனது பெயரால்தான் இனப்படுகொலை
குருதி அபிஷேகம் இவை எல்லாமும்.

உங்கள் ஆக்கிரமிப்பின் சின்னமாக
நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இழிநிலை.

நான் போதித்த அன்பு, கருணை எல்லாம்
கல்லறைக்குள் போக்கிய
புதைகுழி மேட்டில் நின்று என் சிலைகளைப்
பூசிக்கிறீர்
உங்கள் நெஞ்சில் உயிர்க்காத என்னை
கல்லில் உயிர்த்திருப்பதாய்க் காணும் உங்கள்
கற்பனையை என்னென்பேன்?
நானோ கல்லல்ல; கல்லில் வடித்த சிலையுமல்ல.

கண்டந்துண்டமாய் அவர்களை நீங்கள்
வெட்டியெறிந்தபோதெல்லாம்
உதிரமாய் நானே பெருகி வழிந்தேன்
நீங்கள் அதனைக் காணவேயில்லை.
கைவேறு கால்வேறாய்க் காட்டிலே கிடந்து
‘தாகமாயிருக்கிறேன்’ என்று கதறியதும் நானே
அக் கதறல் உம் செவிகளில் விழவேயில்லை.

கல்லாய் இருந்தீர் அப்போதெல்லாம்.

ஆணவந் தடித்த உங்கள் பேரினவாதக் கூட்டுமனம்
எனக்குள் மறைந்து கோண்ட எத்தனிப்பே
என்னை வெறிங்கல்லில்மட்டும்
கண்டதன் விளைவன்றோ?

நானோ கல்லல்ல; கல்லில் வடித்த சிலையுமல்ல
மாறுதல் இயற்கை நியதி என்ற
உயிர்நிலை ஓட்டத்தின் உந்து சக்திநான்.
கல்லல்ல: கல்லே அல்ல.

எனது ராஜாங்கத்தையே உதறிநடந்த என்னைக்
கல்லாக்கிவிட்டு உங்கள்
சிங்கள பௌத்த ராங்கத்துள்
சிம்மாசனம் தந்து சிறை வைக்கப் பார்க்கிறீர்.

யாருக்கு வேண்டும் உங்கள்
ஆக்கிரமிப்புய்க் குடைவிரிப்பின்கீழ் சிம்மாசனம்?

நான் விடுதலைக்குரியவன்.
நிர்வாணம் என் பிறப்புடன் கலந்தது.

சிங்கள பௌத்தத்துள் சிறையுண்ட உமக்கெல்லாம்
எனது நிர்வாண விடுதலை ராஜாங்கத்தின்
விஸ்தீரணம்
புரியாது அன்பரே
பிரபஞ்சம் மேவி இருந்த என்ராஜ்யம்
பேரன்பின் கொலுவிருப்பு என்பதறியீர்;
வழிவிடுங்கள் வெளிநடக்க.
நெஞ்சில் கருணைபூக்காத நீங்கள்
தூவிய பூக்களிலும் குருதிக்கறை;
சூழவும் காற்றிலே ஒரே குருதிநெடில்.

ஓ! என்னை விடுங்கள்
நான் வெளிநடக்கிறேன்
என்னைப் பின்தொடராதீர் இரத்தம் தோய்ந்த சுவடுகளோடு.

நான் போகிறேன்,
காலொடிந்த ஆட்டுக்குட்டியுமாய் நானுமாய்
கையொடிந்த மக்களின் தாழ்வாரம் நோக்கி,
அதுதான் இனி என் இருப்பிடம்.

வருந்தி அழைத்த பெரும்பிரபுக்களை விடுத்து
ஓர் ஏழைத்தாசியின் குடிலின் தாழ்வாரத்தில்
விருந்துண்டவன் நான்.

அத் தாழ்வாரத்தில் உள்ளவர்களிடந்தான்
எனக்கினி வேலையுண்டு.

நீங்கள் அறிவீர்
வரலாற்றில் என் மௌனம் பிரசித்திபெற்றது.
ஆனால், நான் மௌனித்திருந்த சந்தர்பங்களோ வேறு.

இப்போதோ
என்மௌனத்துட் புயலின் கனம்.

ஒருநாட் தெரியும்

அடக்கப்பட்டவர் கிளர்ந்தே எழுவர்
அப்போதென் மௌனம் உடைந்து சிதறும்;
அவர்களின் எழுச்சியில்
வெடித்தெழும் என் பேச்சு.

உயிர்த்தெழும் காலத்திற்காக
(அகங்களும் முகங்களும் 1985)கவிதைகள்
சு.வில்வரத்தினம்.

விடியல் பதிப்பகம்

No comments:

Post a Comment

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...