Sunday, December 13, 2015

கலை: மதத்தின் அந்தப்புரம்.கலை
மதத்தின் அந்தப்புரம்

வணக்கத்திற்குரிய பழங்கால தப்பெண்ணங்கள், அபிப்ராயங்களோடு கூடிய, நிலைநிறுத்தப்பட்ட, உறைந்து போன உறவுகள் துடைத்தெறியப்படுகின்றன; புதிதாக உருவாகும் எல்லா உறவுகளும் கெட்டித் தட்டிப் போய், மாற்றமுடியாதவையாக ஆகும் முன்னால், காலங்கடந்தவையாக ஆக்கப்படுகின்றன. திடமாக இருப்பவை எல்லாம் காற்றில் கரைகின்றன. புனிதமானவை எல்லாம் நித்தனைக்குள்ளாகின்றன.
-  கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸ்.


கலையின் ஆதாரத்தோற்றம் குறித்த சிறு உரையாடலைத் தொடங்குவதோடு. கலை தொடர்பாக ஒரு சிறு ஆய்வை விட்டுச் செல்ல வேண்டும் என்பதே என் நோக்கம். அந்நியமாதல் பிரச்சினைகளோடு கலையின் ஆதாரத்தேவையினை விரிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இது ஒரு சிறு முன்னோட்டம் மட்டுமே.

மதம் குறித்த அத்தனை அவதனிப்புகளையும், அதன் உள்ளுரையான அனைத்து உணர்ச்சி வெளிப்பாட்டு கூறு முறைகள் முழுவதையும் நாம் உணரும் இடமாக இலக்கியத்தை முன் வைக்கலாம். இதுவரையிலான இலக்கிய வகைகள் அனைத்தும் மதத்தன்மையின் எச்சத்தோடும் அதே சமயம் மதத்தின் தொழுகை வடிவாகவும் இருந்தும் வருகின்றன. ஒடுக்கப்பட்ட, ஒடுக்குகிற வர்க்கங்கள் அனைத்தும் அவ்வடிவத்தை மாற்றங்களின்றி புகழ்ந்து வரும் நோக்கம் அதன்பாற்பட்டதே.

பைபிளும், குர்ரானும், கீதையும், இன்னும் பௌத்தமும் சமணமும் இன்ன பிற மத வடிவத்தை அடிப்படையாக் கொண்டு இரண்டாயிர வருட தமிழ் இலக்கியமும் மதத்தின் வால் பிடித்து அலைந்து திரிவதை அதன் எண்ணற்ற பல்லாயிரக்கணக்கான விரிந்த பக்கங்களில் காணலாம். பேசு பொருளை அதன் உச்சத்தில் வைத்து அதுவே கருப்பொருளெனவும், மீற முடியாத உச்சமெனவும் போற்றிச் சொல்லியிருக்கின்றன. ஈவிரக்கமற்ற  வர்க்கச் சார்புடன், அதே சமயம் மானுட நோக்கத்தை கேள்வி எழுப்பும் ஒரு விமர்சகன் அதை எளிதில் உற்று நோக்கலாம். கலை எப்பொழுதும் காலத்தின் குழந்தையாக ( இங்கு காலத்தின் மாற்றத்தை விஞ்ஞானத்தின் வளர்ச்சியாக மட்டும் அறிஞர்கள் கண்டுகொள்கிறார்கள்) இன்னும் அழுத்தம் கூடிய விதத்தில் கலைஞர்கள் வழிமொழிவது காலத்தின் கண்ணாடி என்றே. ஆனால் காலத்தின் கண்ணாடி விஞ்ஞானத்திற்கு முன் புறத்தையும் விஞ்ஞானம் ( இன்னும் ஏராளமான துறைகள்) முதலாளித்துவத்திற்கு பின் புறத்தையும் வெகு நேர்த்தியாகக் காட்டுகிறது. மட்டுமல்லாது, கண்ணாடியில் விரிசல் இருந்தால் அது காட்சியையும் விரிசலாகவே காட்டும்.

சுருங்கச் சொன்னால் இதுநாள் வரையிலான இலக்கிய வகையீனங்கள் எல்லாம் மதத்தின் எச்சங்களாகவே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலே சொன்னது போல் அது மதத்தின் உள்ளியல்பாகவும், உட்கருத்தாகவும் இருக்கிறது. விஞ்ஞானி கண்டுபிடிப்பாளன் என்ற பெயரில் குறிக்கப்பட்டு, அனைத்தும் அறிவு, முன்னேற்றம் என்றவகையில் சுட்டப்பட்டு, ஆளும் வர்க்கத்திற்கு அறிந்து அத்துறை செய்யும் சேவையை, தானறியாது இலக்கியவாதி இலக்கியத்தின் வாயிலாகச் செய்கிறார். இங்கு அறியாது என்பதற்கு பொருள் இலக்கியத்திற்கு நோக்கம் எதுவும் கிடையாது என்ற அர்த்தத்தில் மட்டுமே. ( இலக்கியவாதி என்ற சொல்லுக்கு இலக்கியத்தை வாதம் செய்பவர் என்று கூறலாமா.. இலக்கியத்தை வாதம் செய்வது என்றால் என்ன)

படைப்பாளி என்ற பதம் பொதுவாக நாம் அறிந்தவரையில், அதுவும் இலக்கியத்துறையில், எழுத்து வடிவத்தை கைக்கொள்ளும் வகையினரையே பெரும்பாலும் குறிக்கிறது. இந்தக் குறிக்கிறது என் வார்த்தையைக் கட்டாயப்படுத்தி ஏற்றுக்கொள்ள வைத்தவர்களும் இலக்கியகாரர்களே. வணிக நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட லிபியானது, பேச்சின் கழுத்தை நெறித்து, கொலை புரிந்து தன் கடமையை சுயாதீனமாக ஆற்றுவதை, காலங்கடந்த பணியாக மேற்கொண்டிருக்கிறது என நாம் துணிந்து கூறலாம்.

உலக அளவில் வடிவ நேர்த்தியாக கொள்ளப்படும், அல்லது இலக்கியம் என்ற வகைக்கு உயிர் கொடுக்கும் வடிவமாக இருந்து வரும் கவிதை, சிறுகதை, நாவல் இம்மூன்று வடிவங்களை மட்டுமே இந்நோக்கின் அடிப்படையாக வைத்து உரையாடத் தொடங்குகிறேன். இம்மூன்று வடிவங்களையும் மதம் தன் வெளிப்பாட்டு முறைகளால், உட்கட்டமைப்புகளால் எவ்வாறு வெற்றிகரமாக கையாண்டிருக்கிறது என்பதோடு, மதத்திற்கும் இலக்கியத்திற்கும் இடையிலான தோற்றப்பாடுகள், ஒற்றுமைகள் இவற்றைக் குறித்து நாம் பேசவும் வேண்டியிருக்கிறது. மதம் தன் அதிகாரத்தை அரசியலிடம் இழந்தது என்று கூறிய நிகழ்வு அரங்கேறிய அடுத்த கணமே அரசியல் தன் தலையை பொருளாதாரத்திடம் தாழ்த்தியதும் உடனடி நிகழ்வு.

மதத்திற்குச் சேவை செய்யும் இலக்கியகாரர்களும், அதே சமயத்தில் இலக்கியம் மதத்திற்கு செய்த சேவைகளையும் நாம் இப்பொழுது விவாதிக்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். இன்று மதத்திற்கு செய்யும் சடங்குகளின் வடிவங்களே இங்கு இலக்கியத்தின் வகைமகளாக மாற்றம் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மதத்திற்கும் இருக்கும் கடவுளர்கள் போல இங்கும் சிறு எழுத்தாளர்கள் பெருங்கடவுளர்கள், அவற்றைத் வாசிக்கும் வாசகர்கள் ரசிகர்களாய் மாறி, பின் தொழுகையாளர்களாக, அதே சமயம் எழுத்தைத் தூபமிடும் பூசாரிகளாக உருமாற்றம் அடைந்ததோடு, அடையாளச் சிக்கலில் தானறிந்த இலக்கிய தெய்வத்துக்கு ஒரு மடத்தைத் தொடங்குவதும், குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அம்மடத்தை ஆளும் மடாதிபதிகளாக, முல்லாக்களாக, பாதிரிமார்களாக. சித்தர்களாக மாறிய நிகழ்வுகளையும் காண்கிறோம்.

இலக்கியத்தை மதம் போல் ஆக்கியது எது என்ற கேள்வியை இந்நூற்றாண்டு நம் கைகளில் திணித்திருக்கிறது. வெறும் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தவர்களுக்கு, கைகளுக்கு இடையே பதட்டத்தையும் சூன்யத்தையும் நிலையாமையயும் இலக்கியம் தந்தது என்றால் அதன் நோக்கங்கள் வெளிப்படையானவையே. ஒட்டுமொத்த இலக்கிய உலகமும் மொத்தமாக பிரதிநிதித்துவப்படுத்துவது மதத்தின் அதிகார வடிவத்தை இலக்கியத்தின் வாயிலாகச் சற்று நெகிழச் செய்வதையே.

மதவாதிகள் காட்டும் கறார்த்தனமும், பக்கிரித்தனங்களும். பித்தமும், ப்ரேமையும் இலக்கியத்தில் உலக அளவில் நீக்கமற நிறைந்திருப்பது திட்டமிட்ட ஒன்றல்ல. இலக்கியவாதிகளின் சில உச்சாடனங்கள் உள்ளூர் பூசாரிகளிடமும் பேய் ஓட்டுபவர்களின் நிலைதவறிய நிலையும் இலக்கிய பித்து என்றழைக்கப்படுவதையும். நான் கவனத்தில் கொள்ள வேண்டுமெனச் சொல்வது, இலக்கியத்தின் தோற்றுவாயாக ஆதாரமாக மதத்தின் மிச்சங்கள் இருப்பதே. மதத்தின் காலச்செழுமையேறிய கரங்களால் மாற்றுருவாக்கம் செய்யப்பட்ட இலக்கியத்தை இன்று மதத்திற்கு எதிராக, அல்லது அடிமைத்தனத்திற்கு எதிராக, சுதந்திரத்தின் குறியீடாக நிகழ்த்துக்கிறோம் எனச் சொன்ன இலக்கியக்காரர்கள் அடிமைத்தனத்திற்கு எவ்வாறு சங்கிலிகளைத் தயாரிக்கும் நுட்பத்தை தயார்செய்தார்கள் என்பதையும் நாம் இக்கணத்தில் விவாதிக்க வேண்டும்.

மதம் தன் ஆகிருதியை ஊதிக்காட்டியது ஒரு குறிப்பிட்ட காலம் வரை சிற்பங்களாக கோவில்களாக சடங்குகளாக மாறி இன்று எழுத்தின் வாயிலான மொழியையே உச்சாடனம் செய்துவருகிறது. கதா காலேட்சபங்கள், பட்டிமன்றங்கள் பேச்சின் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தது. அதன் ஈர்ப்பை வெகுஜன மத்தியில் இன்னும் படிக்காதர்வர்களின் மத்தியில் அதன் பேச்சு வழக்கிலான ஒலிக்குறிப்புகள் அன்றாட நிகழ்வில் பங்காற்றியதன் விளைவை விட எழுத்து ரீதியான பங்களிப்பையே மதம் எழுத்தை வைத்து முன்னிறுத்தியிருக்கிறது. மதவாதிகள் செய்யும் பணியை கவிஞர்களும் நாவல்காரர்களும் கதைக்காரர்களும் செவ்வனே நிகழ்த்தி வந்திருக்கின்றனர். ஒட்டு மொத்த இலக்கிய வகைமைகள் தங்கள் படைப்புகளின் அடிநாதத்தை இயல்பாக கொண்டிருக்கும் தன்மையை ஆராய்ந்தால் இது தெரிய வரும். படைப்பின் உள்ளொளி, ஆத்மனுபவம் தரிசனம், இன்னும் போத மனநிலை இக்குறிச்சொற்கள் அதனளவிலேயே மதத்தன்மையை சுமந்து கொண்டிருக்கிறது என்றால், எழுத்தாளர்கள் எழுத்தை சரஸ்வதி என்ற அளவிலும் கிரேக்கம் மற்றும் இத்யாதி வடிவங்களில் அதற்கென ஒரு கடவுளையும் படைத்து வைத்திருப்பதை நாம் கேள்விக்குட்படுத்தலாம். அதே சமயம் அ-புனைவுக்கென எந்த கடவுளையும் முன் வைத்து நாம் உரையாடமுடியாததோடு, அது தன்னளவிலேயே பிறரின் பங்களிப்பைக் கோரும் உழைப்பாக இருக்கிறது.

மதம் உருவாக்கி கையளித்த இந்த இலக்கியத்துறையை இன்று இலக்கியகாரர்கள் வடிவ நேர்த்தி மாறாமல் நாளும் தந்துகொண்டே இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு இலக்கியகாரரிடம் இலக்கியத்தின் பயன் அல்லது நோக்கம் என்னவெனக் கேட்கும் பட்சத்தில் சட்டென எதிர்கேள்வியாய் வருவது வாழ்தலின் நோக்கம் என்னவென்பதாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை கேள்வியாளன் இக்கேள்வியை முன்வைத்து உரையாடுகிறான் என்றால், வெவ்வேறு  வார்த்தைகளில் இலக்கியத்துறை வைக்கும் ஒரே ஒரு பதில். மானுட வாழ்வின் சாத்தியங்களை உணர்ந்துகொள்வதற்காக. சந்தேகத்திற்கு இடமின்றி இது மதத்தின் வார்த்தைகளே.

மதத்திற்கு உரிய அதன் நிலைத்தன்மையை இத்தனை ஆண்டு காலாமாய் நீட்டித்து வைப்பதற்கு உரிய அனைத்தும் இலக்கியத்திலும் உண்டு. அதற்கான துணைக்கருவிகள் ஆய்வு பொருட்கள் என்ன அது இத்தனை காலம் பயணித்த வெளியின் பரப்பளவு சென்று சேர்ந்த இடங்கள், அவ்விடங்களில் வினையாற்றிய மனிதர்கள், இவைகளையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் மதத்தின் விஸ்தீரணம் புரியும்.

மதத்தின் வெற்றிகரமான பண்பு அனைத்தையும் உள்வாங்கும் அதன் தன்மை, அதோடு அதன் அஸ்திவாரமாய் நிலைத்திருக்கும் புனைவுத் தன்மை. வாழ்வதற்கும் அதே சமயத்தில் லௌகீக வாழ்வை உதறுவதற்கும், மேலான தன்மையில் துறவையும், அதற்கிணையான தூர்த்த தன்மையை ஆதரிக்கும் பண்பும் மதத்திற்கு உண்டு. வைரத்திற்கு பல பட்டைகளைத் தீட்டும் ஒரு தொழிநுட்ப வல்லுனனைப் போல் இலக்கியகாரர்கள் மதத்திற்கு பல பட்டைகளை நாவல் கதை கவிதைகளை இலக்கியமாகத் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். உலகு தழுவிய இலக்கியகாரர்களின் எவ்வகையான கதைகளையும் குறுக்குவெட்டாக அறுத்து நோக்கினால் உள்ளே மதம் துடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். மதத்தன்மைக்கிணையான தொழுகை வடிவத்தை தான் சார்ந்த கருத்தில் ஏற்றி வைத்திருப்பதையும் நாம் உணரலாம்.

ஆனால் மதத்திற்கு வெற்றிகரமான சவாலாய் விளங்குவது. ஆவணப்படுத்துதலே. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் மதத்தை கதை மொழியில், தங்களது விருப்பக்கனவாய் பல்லாயிரம் கரங்களால் எழுதிக்கொண்டிருக்கும் இலக்கியகாரர்கள் இன்னும் தங்களும் எழுதுமுனையால் படைத்துக்கொண்டிருப்பது மதத்தன்மைகளையே. மதம் தனக்கெதிராக வரும் கேள்விகளை வெல்ல நினைக்கும் அல்லது, உள்வாங்கி அதன் தன்மையை தன் உறுப்புகளில் ஒன்றாய் மாற்றிக்கொள்ளும். அவ்வுறுப்பில் இலக்கியமும் ஒன்றே.

தமிழில் இலக்கியத்துறை என்றதும் கட்டிடங்களும் பேராசிரியர்களுமே நினைவுக்கு வருவது, பெருங்கோயில் கலாச்சாரத்தை நினைவுபடுத்துவது தவிர்க்கவியலாதது அதே சமயத்தில் கலகக்காரர்கள் என அழைத்துக் கொள்ளும் சிறுபத்திரிக்கை அல்லது சுதந்திர சிந்தனை இவைகளை நாங்கள்தான் எழுதுகிறோம் என இலக்கியத்தைக் கையில் எடுத்து புனிதத்தை ஒழிக்கிறோம் என கதை கவிதை என வடிவத்தை மாற்றி அமைத்தாலும் அதுவும் இறுதியில் மதத்தன்மையே முன்மொழிகிறது, உடைப்பு, கவிழ்ப்பு இத்யாதிகளெல்லாம் தூர்த்த தன்மைக்கு மதம் கொடுத்திருக்கும் இடத்தை ஒப்பு நோக்க சற்றுக் குறைவே.அவ்வகையில் இவ்வகை இலக்கிய வடிவை எடுப்பவர்கள், மதத்தின் விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர் என எதிர்ப்பையும் உள்ளிழுக்கும் மதத்தன்மைகொண்டு எதிர்க்கும் சூபிக்கள், சித்தர்கள், இவர்களே.

ஒவ்வொரு இசத்துக்கும் ஒரு சித்தரோ அல்லது முல்லாவோ பாதிரியோ இருப்பது போல் இந்தியாவில் இலக்கியம் சாதி வகையீனங்களாக மாற்றப்பட்டிருக்கும் விதத்தையும் நாம் ஆராய வேண்டும். மதத்திலிருந்து அரசியற் பொருளாதாரம் பிரிந்தது போல் மதத்திலிருந்து இன்னும் இலக்கியம் பிரிக்கப்படவே இல்லை. குறிப்பாக இரண்டாயிர வருடங்களாக முறையாற்றி வரும் தமிழ் இன்னும் மதத்தின் வடிவங்களாகவே தன்னை முன்வைத்துக் கொண்டிருருக்கிறது சங்க இலக்கியம் தொட்டு அனைத்து நூல்களும் மதத்தையும் அரசியலையுமே தொழுது வருகிறது, அவ்வப்போது அரசியலை விமர்சனத்துக்குள்ளாக்கும் இலக்கியகாரருக்கு வாழ்வை முடித்து வைக்கும் பணியையும் அது செய்ததுண்டு.

இதற்காப்பால் மதம்மாற்றம் நிகழ்வதையொத்து இச மாற்றங்களையும் தமிழ் உள்வாங்கியிருக்கிறது. நான் இன்ன இசம் என்பதோடு நில்லாமல் இவர்தான் என் ஆசான் குரு இவரின் வழிமரபு இவரது குலத்தோன்றல் என்பதையே முன் வைக்கிறது. உண்மையில் இலக்கியம் குருமரபின் சொத்தாகவே இருக்கிறது.  மேற்சொன்னபடி பக்தன் பூசாரியாகவும் வாசகன் பக்தனாகவும் மாறும் உருமாற்றம் நிகழ்கிறது. வாசகனின் வாழ்நிலை தன் நிதானத்தை அடையும் பட்சத்தில், அல்லது அதை உதறும் பட்சத்தில் நிகழ்வது, இரண்டு வினைகளே. ஒரு விமர்சக இடம் அல்லது படைப்பாளி என்ற அடையாளம். எல்லா நதிகளும் கடலை நோக்கியே என்ற பதத்திற்கு இணையாக எல்லா இலக்கிய வடிவமும் கடவுளை நோக்கியே.

ஒரு படைப்பு பொதுவெளியில் பிரபலமானவுடன் அப்படைப்பாளி முதலில் சொல்லுவது மக்களை படிக்க வேண்டும், வாழ்வின் பல்வேறு பட்ட பரிணாமங்களை, அக எழுச்சி உள எழுச்சி என்ற எண்ணற்ற பதங்களை வாரியிறைப்பதுதான். அதைத்தான் மதம் தன் தோன்றிய நாளிலிருந்து செவ்வனே செய்து வருகிறது. நோபல் பரிசிலிருந்து இன்னும் வெளிவராத படைப்பை எழுதிக்கொண்டிருக்கும் உள்ளூர் இலக்கியகாரரிடமும் இருப்பது இவ்வார்த்தைகளே. விருதுக்குப் பின் அவர்கள் அடையும் மனநிலை மடாதிபதிகளுக்கும் மேய்ப்பர்களுக்கும் சளைத்தல்ல.

தொழில்நுட்பம். எழுத்துக்கு எவ்வளவு பெரிய மாற்றக்காரணியாய் இருக்கிறது என்பது நாம் அறியாததல்ல. இந்த நூற்றாண்டில் இன்னும் குறிப்பாக கடந்த இருபது வருடங்களில் தமிழ் கூறும் நல்லுலகில் எழுத்தாளர்கள் அதிகம் பெருகியிருக்கிறார் என்றால் தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்ற அர்த்ததில் இல்லை. பதிப்பகங்கள் பெருகியிருக்கிறது. அவ்வளவே.

அடையாளப் பிரச்சினையில். உண்மையில் அடையாள சிக்கல் என்பது ஒரு மனிதன் அந்நியத்தன்மையில் அடையும் சிக்கலே ஒழிய அது தத்துவமோ, உளவியல் குறிப்போ அல்ல. அதன் ஒரே நோக்கம் எழுதும் எழுத்தாளர் தன்னை எவ்வகையிலாவது முன் வைக்கும் விளம்பர நோக்கமே. நாளும் வெளிவரும் பற்பசை விளம்பரங்களுக்கு ஒத்த வகையில் இலக்கியகாரர்கள் புது புதுக் காரணிகளோடு தங்கள் எழுத்தை முன் வைத்து விவாதிக்கிறார்கள். எழுத்தாளர்கள் தங்கள் கைக்காசைப் பதிப்பகங்களுக்குக் கொடுத்து தாங்களே அச்சிட்டுக் கொள்கின்றனர். இதில் பெரும்பாலும் ஒப்பீட்டளவில் நாவல் சிறுகதை தாண்டி எண்ணிக்கையில் படைப்புகளாக நிகழ்வது கவிதைகள் மட்டுமே. உரைநடைக்கு, அதாவது கதை, நாவல்களுக்கு ஆளுக்கேற்றார் போல் ஒரு பதிப்பக் ஒரு குழு அவ்வளவே. படைப்புகளை முன்னிலைப்படுத்த இவர்களுக்கென்று  விமர்சன உத்திகளை வகுத்துத்தர சம்பந்தப்பட்ட பதிப்பகம். அல்லது பழக்கம் சார்ந்த இலக்கியம் என்றாலே என்னவென்று தெரியாத நாட்களை முன்வைத்து டீ குடிக்க, வம்பளக்க உள்ள நண்பர்களே இங்கு இலக்கிய முன்னெடுத்துக்காட்டிகளாகவும் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு என் நண்பன் எழுதினால் அது கவிதைதான், என் சித்தப்பா பொண்ணு எழுதினா கதைதான். முடிவாக, உறவும், பழக்கமுமே விமர்சன ஆதாராமாயும், விளம்பர உத்தியாகவும் மாறியது. இந்த கதை கவிதை நாவல் மூன்று வடிவிலும் வெளிக்காட்டிக்கொள்கிறது. கதை கவிதை என ஒரு  சிறுகோயிலைக் கட்டுதல் அதில் பூஜை புனஸ்காரங்களை செய்தல். தெரிந்த நபர்களுக்கு நட்பு அறிக்கை விடுதல். கூட்டுப் பிரார்த்தனைகள் இன்ன பிற வடிவங்களைச் செய்தல் இதுவே.

ஒட்டுமொத்தமாக இலக்கியத்துறை உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டு முறையிலும் மதத்தன்மை கொண்ட இடமேகவே இருக்கிறது. இலக்கியம் மதத்தின் அந்தபுரமாகவே இருந்து வருகிறது என்பதற்கு சாட்சியாக இன்னும் சற்று ஆழமாக விமர்சன முறைமைகளை நெறிப்படுத்தலாம்.

முதலில் இலக்கியம் ஒரு துறை என்பது தமிழில் இன்னும் ஏற்றுக்கொள்ளாத ஒன்றாகவே இருக்கிறது. இலக்கியம் மட்டுமல்ல கலைகள் என அறியப்படும் எதுவுமே. காரணம் கோயில் வழிபாடு சம்பந்தப்பட்ட மத நடவடிக்கைகளே இங்கு இலக்கியமாக அறியப்படுகிறது. கடவுளையும் கோயிலையும் அரசனையும் தமிழிலிருந்து  பிரித்தால் மிஞ்சப்போவது எதுவுமே இல்லை. மத வழிபாடும் அரச வழிபாடும் மொழி வழிபாடும், இன்னும் சுருங்கச் சொன்னால் ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய வடிவத்தின் உட்புள்ளியாய் மைய நிலை நோக்காய் இருப்பது அது காதலையும், வள்ளல் தன்மையையும், வீரத்தையும் பாடும் ஒன்றாக இருப்பது. இவற்றை நீக்கிவிட்டால் தமிழ் இலக்கியமே கிடையாது. இலக்கியவாதிகள் என அறியப்படவும், அறியவும் விரும்பும் கதை கவிதை நாவலை எழுதுபவர் தன்னை படைப்பாளி என்ற கனம் நிரம்பிய சொல்லால் சுட்டிக்கொண்டு இவ்வுலகில் அனைத்துக்கும், அனைத்துத் துறைக்கும் கருத்துச் சொல்லியாய் மாறுவதோடு தான் படைப்புக்கடவுள் என்கிற தோரணையையும் முன்வைக்கின்றனர். ஒரு கவிதைத் தொகுதி போட்டவுடன் அவர் தமிழ் கவிதை உலகையே விமர்சனம் செய்வதோடு தமிழ் நாட்டில் தமிழர்கள் இட்லி தின்பதும் அவர்கள் அறிவுப் பற்றாக்குறையைக் காண்பிக்கிறது. சோற்றுக் கலாச்சாரத்தை ஒழித்த பிரிட்டிஷ்காரர்கள் ஒழிக என்கிற வகையிலான எந்தக் கருத்தையும் படைப்பாளி என்ற அளவில் முன் வைப்பதும் நிகழ்கிறது.

இன்னும் குறிப்பாக அளவில் சுருக்கிச் சொன்னால் இவ்வகையான இலக்கியகார்கள் தங்கள் படைப்பை முன் வைத்து ஏற்படுத்தும் சலசலப்புக்களை விட தாங்கள் படைப்பாளி என்ற வகைமையில் இவ்வகை கருத்துக்களைச் சொல்லி தன் படைப்பை முன்னிருத்தப் போடும் வேஷமே அதிகமாக இருக்கிறது. தமிழில் இதற்கு நல்ல உதாரணமாகச் சொல்ல வேண்டும் எனில் நிறைய இருக்கிறது. உலக அளவில் பேராசிரியர்கள் விமர்சகர்களாக பங்காற்றியிருக்கிறார்கள்.

இப்பொழுது மாற்றுச் சிந்தனை என்பதை முன்வைத்து வரும் படைப்புகள், எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்கள் ஐரோப்பிய சிந்தனைக்கும், காலனிய அடிமைத்தனத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்தவராகவே படைப்புகளை அணுகி, எதேனும் ஒரு மாற்றைச் செய்கிறார். இதை மாற்று என்று சொல்வதை விட தழுவல் என்றே சொல்ல வேண்டும். தமிழில் இப்பொழுது கொரியா படங்கள், அல்லது டிஸ்கவரி சேனல், இல்லை ஏதேனும் ஒரு வேற்று மொழிப்படத்தைப் பார்த்து நாவல் அல்லது சிறுகதை எழுதுவது எளிதாக இருக்கிறது. அதற்கு முன்னுதாரணங்களும் உள்ளது. சற்றே அழுத்தமாகக் குறிப்பிட்டால் வகை மாதிரிகளை எழுதிக்காட்டுவது. ஒளி வடிவத்தை லிபியாய் மாற்றுவது, அதையே படைப்பு என அறியத்தருவது இவையே எழுத்தாளர்களின் பணியாக இருக்கிறது.

இறுதியாக எழுத்து ஒரு துறை. அதனளிவில் அதற்கு ஒரு இடம் உண்டு, என்றால் கோபப்படும் இவர்கள் தங்களை படைப்பாளிகள் என அறிமுகம் செய்துகொள்வதையே விரும்புகிறார்கள். ஒட்டு மொத்த இலக்கியப் பரப்பில் மதம் தரும் அனுபவத்தை மட்டுமே இலக்கிய அனுபவமாக முன் வைத்து இதை நிகழ்த்தியிருக்கிறார்கள். படைப்பு குறித்த விமர்சனங்களை நாம் இந்திய விமர்சன மரபிலிருந்தே தொடங்கினால் அது ஏக உலகு தழுவிய படைப்பு மதத்தையே குறிக்கப் பெறுவதைக் காணலாம்.

பைபிளை முன் வைத்து குர்ராணை முன் வைத்து, பௌத்த, இந்துத்துவ சிந்தனைகளை இன்னும் நாவல் கவிதை சிறுகதை என படைப்பாளிகள் வகைப்படுத்தும் எந்தப் படைப்பும் இன்னும் தன் நிலை கடந்து முன்வரவில்லை. முடியவும் முடியாது அதன் காரணமாக படைப்பு என்பதே கடவுள் தரும் இன்பத்திற்கு இணையாக செய்யப்படுவது, மதத்தின் தேவையே கலை என்பதும்.

முற்போக்கு பிற்போக்கு மாடர்னிச என அனைத்து வகைகளும் கொண்டு சேர்க்கும் அடிப்படையில், படைப்பு விரும்பும், அதே சமயம் படைப்பாளி விரும்பும் புகழ் இறைக் கருத்தியலுக்கு நிகரானதே. வறுமையைப் பற்றி மதம் குறித்த அளவுக்கு இலக்கியம் இன்னும் ஒரு சிறுகதை கூட எழுதியதில்லை. அதேதான் இந்த நாவல் கவிதை வரிகளுக்கும் கிடைத்த நிலை. இந்த முற்போக்கு இச, கட்டுடைப்பு உடைத்தல்களை எல்லாம் மதம் தன் ஆரம்பகட்டத்திலே வெளிப்படுத்திய முன்மாதிரிகள். மத வடிவத்தை உற்று நோக்க அது நாஸ்திகத்தையும் உள்ளடக்கி தன் பங்காக முன் வைத்திருப்பது தெரியும். கோயிலுக்குச் சென்றுதான் கடவுளைத் தொழ வேண்டும் என ஒரு சடங்கு சொல்கிறது வலியுறுத்துகிறது என்றால், கடவுளர்கள் இல்லாத இடம் ஏது என்று வியாக்கியானம் செய்வதோடு சிதர் மரபு அதை சமத்காரமாக உடைத்து இன்னும் வெளியை நிறைக்கிறது. கடவுள்த்தன்மையை அதன் வகைமாதிரிகளை எண்ணற்ற வடிவங்களில் கலைத்தும் சிதைத்தும் உருமாற்றியும் இயங்கிய மதத்தின் தொங்கு சதையாகத்தான் இலக்கியத்துறையும் இயங்கி வருகிறது.

மதம் தன் பரப்புரையை வெற்றிகரமாக பரப்பிய வடிவங்களான இவைகளால் அது சேவை செய்வது யாருக்காக என்பதை விமர்சகர்கள் சுட்டிக் காட்ட வேண்டும். வடிவ உத்தியை விட்டுவிட்டு படைப்பு என்னவாக இருக்கிறது என்ற உள்கட்டமைப்பையும் தகர்க்க வேண்டும். உதாரணத்திற்கு தமிழில் பேசப்பட்ட பிற மொழிப் படைப்பாளிகள் இங்கு கடவுளுக்கு நிகராகவே,… குறித்துச் சொன்னால்; இலக்கியக் கடவுளாகவே ப்ரிதிஷ்டை செய்யப்பட்டதும் அதன் பேரில் போலித்தனமான மடங்களும் இலக்கிய விமர்சங்களும் இங்கு கண்கொள்ளாக் காட்சியாய் நடந்தேறின.

புதுமைப்பித்தனை முன் வைத்து நடந்த மட பிரச்சினைகளிலிருந்து, நகுலன் மற்றும் ஏனைய இறந்த படைப்பாளிகள் குறித்த படைப்பு ரீதியிலான விமர்சனங்களை விட, அக்கடவுள்கள் வாழ்ந்த விதத்தைச் சொல்லி அவர் தம் கோமாளித்தனங்களை லீலைகளாய் மாற்றிய மடாதிபதிகள். அடையாள இருப்புப் பிரச்சினை கொண்டவர்கள். மற்றும் எண்ணற்ற பக்தர்களை தமிழை மட்டுமே முன் வைத்து இயங்கியதை நாம் சுட்டலாம். 

படைபை பின்னுக்குத் தள்ளி எழுத்தாளர்களின் லீலையை, யதார்த்த வாழ்வை வாழ முடியாத அவர்களது கோமாளித்தனங்களை முன் வைத்து அதிகமும் பாராட்டுப் பட்டு வந்திருப்பதோடு. இதில் முதன் முறையாக நான்தான் இந்தப் படைப்பாளிக் கடவுளை கண்டெடுத்தேன் எனச் சொல்லும் ஊர்முறையான சிறு பூசாரிகளையும் காணலாம். இவர்களை நாம் குறைசொல்லமுடியாது. இவர்கள் இரண்டாயிரம் வருட பராம்பரியத்தில் வணங்கிச் செயல்படும் ஒரு பிரதேசத்தில் இருந்து பிறந்து வந்தவர்கள். ஆனால் கலையின் கரங்களை வைத்து மதம் சாதித்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் விரிவாகச் சொன்னால் படைப்பைப் பார் படைப்பாளியை விமர்சிக்காதே என்பதை அதிகாரமாய் முன் வைக்கும் இலக்கியத்தில்தான் அந்த படைப்பாளி வெற்றிலை போட்டுத் துப்பினால் நீங்காரம், அவருருகில் பாம்பு சுருண்டு உறங்குகிறது என்பதோடு, வாழும் போதும் இறந்தபின்னும் அவர் உருவைத் தொழ வசதியாய் புகைப்படக் கருவியை வெளியில் அசைத்து அசைத்து இன்னும் அரையிருளில் என்றால் (கர்ப்பகிரகத்தை நினைத்துக் கொள்ளுங்கள்) அவரது படைப்பைப் போலவே படைப்பாளியும் மர்மமான முறையில் இருக்க வேண்டும் என்கிற பூசாரி வேலையயும் செய்திருக்கிறது. படைப்புதான் முக்கியமெனில் படைப்பை எழுதுவதை விட்டுவிட்டு இவர்கள் படைக்கும் கோமாளி வேலைகளை முன் வைத்து அதைப் படைப்பாளரின் வெளிச்சத்தை முன் வைத்து வாசிக்க வேண்டும் எனச் சொல்வது இணை முரண்.

கலை = சுதந்திரம் என முன்வைக்கும் படைப்பாளிகள் அந்த சுதந்திரம் யாருக்கு, எந்த வர்க்கத்துக்கு அந்த சுதந்திரம், என வெளிச்சமாக இதுவரை எதையும் முன் வைத்துப் பேசியதில்லை. தனிமனித சுதந்திரம் என்ற பொருளில், அது தரும் லாப நட்டங்களை விரிவான பொருள்கோடல்களோடு முன் வைக்கும் படைப்பாளிக்கும், தன்னியல்புகளை, இன்னும் அழுந்தச் சொன்னால், ஒவ்வொருவருக்கும் ஒரு விதி இருக்கிறது, வாழ்க்கை இருக்கிறது என சட்டமும், கட்டமும் போட்டுச் சொல்லும் ஜோதிட உலகம் இதை விட ஆழமாக தனிமனித இருப்பை பேசுகிறது. அப்படியானால் சுதந்திரம் பற்றிப் பேசும்  இலக்கியங்கள் ஒட்டுமொத்தமாக ஜோதிடத்துறையின் முன் மண்டியிட்டு தாழ்பணிந்து கிடக்க வேண்டும்.

அப்படியென்றால் கலையின் அடிப்படை என்ன அது எதை முன் வைக்கிறது. விவாத்தை இன்னும் சற்று மேலே நகர்த்தலாம்.

அந்நியமாதல் அற்ற சமுதாயத்தில் கலையில் இடம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியிலிருந்தும், மனித குலத்தை அனைத்தும் தழுவியதாக இருக்கிறது கலை என்கிற பொத்தாம் பொதுவான பசப்பை முன் வைத்தும் பேசுகிறேன். ஒரு பறவை பறக்கிறது என்பது மனித வயப்பட்ட மொழியில் சுதந்திரத்தின் குறியீடாய் இருக்கலாம். ஆனால் பறவைக்கு பறத்தல் என்பது வாழ்வு, மற்றும் உழைப்பு.

v இந்த யுகம் அபுனைவுக்கான யுகம் என அறிவிக்கிறேன்.

விலகல்களும் செயல்பாடுகளும்


·        புனைவு-  வாசக சுக போத அனுபத்தை தனிப்பட்ட முறையில் கொடுக்கும்.
( வாசிப்பனுபவம் என்றெல்லாம் பக்திவயப்படுகிறார்களே அதுதான்.) மாறாய் அபுனைவு நேரடியாக முகத்திலே அறையும்.

·        புனைவு வாசகனை பேசும் கருப்பொருளில் பங்கேற்கச் செய்யாது, ரசிகனாய் மாற்றும், ஆனால் அபுனைவு வினையாற்ற வைக்கும். அவர் சமூகத்தில் என்ன பங்கை வகிக்கிறார் என்ற அடிப்படியை வைத்து கேள்வியை முன் வைக்கும். அவரை அவரின் புரிதலை நகர்த்தும்

·        புனைவை எப்படிவேண்டுமானாலும் வாசிக்கலாம். வாசகன் தன் மன இயல்புக்கேற்றவாறு பொருள் உணரலாம். ஒரே நாவலுக்கும் சிறுகதைக்கும் வாசகர்கள் தங்கள் புரிதலை முன்வைத்தும், விமர்சகர்கள் தங்கள் அறிவைத் திணித்தும், காலனிய அடிமைகளானவர்கள் ஏதேனும் அயலக எழுத்தாளர் பெயரை முன் மொழிந்து அவர் போல் உள்ளது இவர் எழுத்து என வெறும் உருவத்தை மட்டும் பிடித்துத் தொங்குவது என அவரவர் உள இயல்புக்கேற்றார் போல் பேச வாய்ப்பளிக்கிறது. அதன் வர்க்கச் சார்பு அது யாரை நோக்கிப் பேசுகிறது என்ற எந்தத் தெளிவையும் நாவல் கதை கவிதையில் எழுத்தாளன் வைக்க வேண்டியதில்லை அது அவனது சுதந்திரம் என எழுத்தாள சுதந்திரமும், இல்லை எழுத்து மக்களை நோக்கித்தானென்ற இடதுசாரிகளின் விமர்சனமும் இன்னும் உரையாடியபடியேதான் இருக்கிறது. விமர்சகர்கள் சம்பந்தப்பட்ட நாவல் கதை கவிதையில் ஏதேனும் ஒற்றை வரியை முன் வைத்து அவர் போராளியாகவோ, பிற்போக்காளராகவோ மாற்றிக்கொள்ளும் தன்மையையும் அடையலாம்.

·        அபுனைவில் நேரடியாக எழுத்தாளரின் நிலை, அவர் எதைக் குறித்து எந்த நோக்கத்தோடு எவரின் வர்க்க நலன் கருதி பேசுகிறார் என தெளிவாகத் தெரியும். வகுக்க முடியும். அந்த அடிப்படையை வைத்து விமர்சகன் தன்னை எதிர்தளத்திலோ இல்லை சம அளவிலோ வைத்து விமர்சனமாற்ற முடியும்.

இன்னும் சற்றுச் சுருங்கச் சொன்னால் ஒரு தலித் படைப்பை ஆதிக்க சாதியைச் சார்ந்த ஒருவர் புனைவாய் அணுகும்போது, அவர் தான் நல்லவர், முற்போக்காளர், அதனால்தான் இதையெல்லாம் வாசித்து கண்ணீர் விடுகிறேன். இம்மக்கள் பாவம், என தன் இடத்தில் இருந்து மட்டுமே வாசிக்கும் வாசிப்பனுபவத்தைத் தரும். அது சம்பந்தப்பட்ட வாசகருக்கு முற்போக்கு நல்லவர், சமூக நோக்கர் என்ற அனுகூலத்தையே தரும். ஆனால் அதே புனைவின் மையக்கருத்தை புனைவல்லாது நேரடியாக வைக்கும் பட்சத்தில் ஆதிக்கச் சாதி மனநிலை அச்சமுறுவதோடு இதில் தனக்கும் தன் மூதாதையருக்கும் பொறுப்பிருக்கிறது என்ற கேள்விகளை முன் வைக்கும், அது இனி எந்தப் பக்கம் பங்காற்றுவது என்ற கேள்வியை முன் வைக்கும். ( இதில் குறுக்குவெட்டாய் தலித் எழுத்தை தலித் தான் எழுதமுடியும் என்ற வியாக்கியானங்கள் இன்னும் உள்ளது. இந்த வகை சம்பந்தப்பட்ட புரிதலை ஒட்டுமொத்த இலக்கியத்துக்கும் வைத்தால் எதுவும் மிஞ்சாது)

·        புனைவுக்குத்தான் வாசகன்
அபுனைவுக்கு வாசகன் கிடையாது. புனைவின் நோக்கமே  வாசகரை திருப்திபடுத்துவதுதான். அவர்தம் உளப்பாங்கை தன் மொழியில் வாயிலாக முன்வைத்துதான். அ புனைவு பிரச்சினையையும் பிரச்சினைக்குரிய காரண காரியங்களையும் நேரடியாக முன் வைக்கிறது.

·        அபுனைவு - புனைவு என்றே இருக்கவேண்டும்,

·        புனைவு -  அ புனைவு என வரிசையில் இருக்கும் மாற்றம்

தமிழ்நாட்டில் எழுத்தாளர் என்றாலோ படைப்பாளி என்றாலோ அது கதை எழுதுகிறவர்கள் மட்டுந்தான். இவர்களை கதையாளி என்றே அழைக்க விரும்புகிறேன். இறுதியாக முற் சுட்டியபடி பேச்சின் கழுத்தை, எழுத்து தன் கரங்களில் நெறித்துக் கொண்டிருப்பதையும் சேர்த்து…

விரிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

  ‘கொம்பு’ பதிப்பக வெளியீடாக வருகிறது.
No comments:

Post a Comment

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...