Friday, August 5, 2016

அடுத்த அம்பேத்கர் நாந்தாண்டா… எனக் குமுறும் ஆதவன் தீட்சண்யாவுக்கு...
முதலில் ஆதவன் தீட்சண்யாவுக்கு நூலை அனுப்பிய அதியன் ஆதிரை பற்றிச் சொல்ல வேண்டுமானால் அம்பேத்கருக்குப் பிறகு ரஜினிதான் அவரது தலைவர்.  சம்பந்தப்பட்ட நூலின் ஒரு பக்கத்தைக் கூடப்  படிக்காமல் முடிவுக்கு வந்து, எனது முகநூல் பக்கத்தில்… போட்டதே 300 காப்பி என்று உளறியவர். மேலும் rss புக் போல என்றவர் (அவர்கள் என்றைக்கு மார்க்ஸைத் தூக்கிப் பிடித்தார்கள் எனத் தெரியவில்லை) இப்பொழுது அவர் வாங்கிக் கொடுத்த ரங்கநாயகம்மாவின் புத்தகம் பற்றி  ஆதவன் தீட்சண்யா விமர்சனம் என்ற பெயரில் நூலைப் படிக்காமலேயே எழுதியிருக்கிறார். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் வேறு ஏதேனும் ஒரு நூலைப் படித்துவிட்டு இதை எழுதியிருக்கிறாரோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

ஒரு நூலை எப்படிப் படிப்பது என்று கூடத் தெரியாத இவர், நூலை விமர்சிக்கும் லட்சணம் கண்டு வியப்படையாமல் இருக்கமுடியாது. முதலில் அம்பேத்கருக்கு முன்னாலேயே பல பேர் சாதி குறித்து எழுதியதாக சொல்லியிருக்கும் இந்த அறிவாளி, அவர்கள் குறித்தாவது இந்த விமர்சனத்தில் சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை.

ஆதவன்…

\\ பள்ளு பறையெல்லாம் புத்தி சொன்னா நாங்க பாத்துக்கிட்டு சும்மா இருப்போம்னு நினைச்சியா?’ என்று பல்லைக் கடிக்கும் அப்பட்டமானதொரு சாதிவெறியரின் உளவியலுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்த ஒருவரால் மட்டுமே இப்படி எழுத முடியும்.\\

அம்பேத்கரை பள்ளுப் பறை சாதியாளாராக மட்டும் காட்ட முனையும் உங்கள் வக்கிர புத்திக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. அறுவெறுப்பின் உச்சம் இது ஆதவன். ஏதோ தலித்துகளுக்கு அடுத்த அம்பேத்கர் நான் மட்டும்தான் என்கிற உரிமை கோரலைத் தாண்டி நீங்கள் எழுதியதில் எதுவும் இல்லை. நாந்தான் அடுத்த அம்பேத்கர்… தமிழ்ல்ல என்னைப் படிச்சாப் போதும்… மத்த எழுத்தெல்லாம் சும்மா… எனக்கு சிலை வைச்சு மாலை மரியாதை செலுத்துங்க…ரங்கநாயகம்மா புத்தகத்தை குப்பையில எறிஞ்சிட்டு என் புத்தகத்தை நல்ல விலை கொடுத்து வாங்கி என்னைத் தூக்கித் தலையில வைங்க என்பதுதான் உங்களது இரைஞ்சல்களாக இருக்கிறது.

\\ இந்தியாவில் சாதிகள்என்கிற  அம்பேத்கரின் ஆய்வுரையை தேவைக்கேற்ப ஒட்டியும் வெட்டியும் வலிந்து பொருள்கொள்ளும் ரங்கநாயகம்மா, அதுதவிர அம்பேத்கரின் கூற்றுக்கு வேறு அர்த்தமில்லை என்று நிறுவும் வெறிகொண்டு ஆடுகிறார்\\

ஆதவன் தீட்சண்யா…நீங்கள் வெறிகொண்டு ஆடாமல்.. பித்துப் பிடிக்காமல்…அமைதியாக நிதானமாக மூச்சை உள்ளிழுத்து விட்டு, யோகா பயின்று, அந்த நிதானத்தோடு  வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட நூலை எங்கெங்கு வெட்டி ஒட்டியிருக்கிறார்கள்… அதை  வலிந்து பொருள்கொள்ளாமல் எப்படிப் படிக்கலாம் என  விமர்சித்து எழுதியிருக்கலாம்.  இதையும் செய்யவில்லை.

\\ ரங்கநாயகியம்மா விமர்சனம் என்கிற பெயரில் அம்பேத்கரை சிறுமைப்படுத்துவதிலேயே முனைப்பாக இயங்கியிருக்கிறார். சாதியம் பற்றிய அம்பேத்கரின் பார்வையை குழந்தைத்தனமானது, மிகையுணர்ச்சி கொண்டது, நகைப்புக்குரியது என்றெல்லாம் பரிகாசம் செய்யத் துணிந்த இவரால் சாதியம் குறித்தோ சாதியொழிப்பு குறித்தோ எதையும் திட்டவட்டமாக கூறமுடியவில்லை என்பதுதான் அவலம்.\\

ஆதவன் தீட்சண்யா நீங்கள் எழுதும் விமர்சனம் இதுவரை யாரையும் காயப்படுத்தாமல் கொஞ்சிக் கஞ்சிக்கு விழுந்துதான் எழுதப்பட்டிருக்கிறதா நீங்கள் விமர்சிக்கும் எழுத்தாளர்களையெல்லாம் அன்புடன் அணுகி புறங்கையில் முத்தமிட்டுத்தான் தொடங்குகிறீர்களா, ரங்கநாயகம்மா எந்த இடங்களில் அவர் இத்தகைய சொற்களை கையாளுகிறார் என்ற அறிவிருந்தால் அதை எடுத்துப் போட்டு எழுதியிருக்கலாம். மேலும் மிகையுணர்ச்சி பரிகாசம் நகைப்புக்குரியது என்ற விமர்சனங்களை யாரை நோக்கி எழுதலாம் எனச் சொல்லலாம். ( மேலும் நீங்கள் இந்த விமர்சனத்தில் எழுதியுள்ள வெறிகொண்டு ஆடுகிறார்…குப்பைக்குப் போகணும் என்ற அதிஉயர் விமர்சன வார்த்தைகளை எழுதாமலாவது விட்டிருக்கலாம்..அது எப்படி… நீங்கள்தான் அடுத்த அம்பேத்கர் ஆயிற்றே..நீங்கள் எதையும் எழுதலாம் ) அதை வேறு எப்படி எழுதவேண்டும் என்று சொல்லிக் காட்டியிருக்கலாம் அதையும் செய்யவில்லை. என்ன செய்வது உங்களது முற்போக்கு நோய் முற்றி அடையாள அரசியலில் நிலை கொண்டு விட்டது. நூலை முழுதாக படிக்கவாவது செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.

\\ அம்பேத்கருக்கு முன்பாகவே அரசியலரங்குக்கு வந்துவிட்ட கம்யூனிஸ்ட்களில் ஒரு சாரார், சாதியத்தால் கட்டமைக்கப்பட்ட தங்களது அகநிலைக்கும் செளகரியங்களுக்கும் குந்தகம் வராமல்தான் இன்றைக்கும் மார்க்சீயம் பேசிவருகின்றனர்\\

இதில் எந்த இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் ஆதவன். நீங்கள் என்னென்ன சௌகரியங்களை அடைந்தீர்கள் என சுயவிமர்சனம் செய்துகொள்ளலாம். மேலும் சுயவிமர்சனம் தற்கொலைக்கு ஒப்பானது. ( இது ரோக் டால்டனின் கவிதை வரி ) ஆதவன்… நீங்கள் முன் வைக்கும் வார்த்தைகள் நான் தலித்தாகப் பிறந்துள்ளேன், எனவே தலித்தைப் பற்றிப் பேச எனக்குத்தான் தகுதியிருக்கிறது. மேலும் அவர்களை தவறாக வழி நடத்த எனக்கு மட்டுமே உரிமை உள்ளது. அவர்களை நான் தான் சுரண்டுவேன் அவர்களுக்கு அடுத்த அம்பேத்கர் நான்தான் எனவே..இத்யாதி இத்யாதி என்கிற பார்ப்பன மனநிலையே உங்களுக்குள் செயல்படுகிறது. தலித் புரட்சியை இன்னைகே ஆரம்பிச்சு அடுத்த நிமிஷமே என்னால முடிச்சு வைக்கமுடியும் என்கிற உங்களது தத்துவப் புரிதல்கள் என்னை வியப்பின் எல்லைக்கே கொண்டு போய் விட்டது. அவர் சாதி ஒழிப்புக்கு எழுதிய தீர்வுகளை தாராளமாக முன்வைக்கலாம்.

\\ இந்தியாவில் நிலவும் சகலவிதமான ஏற்றத்தாழ்வுகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் காரணமாக இருக்கும் சாதியத்திற்கு எந்த பங்கமும் வராமல் பயின்றொழுகிக் கொண்டே புரட்சியாளர்களாகவும் காட்டிக்கொள்கிற மோசடிப் பேர்வழிகளுக்கு இந்நூல் பெருந்தைரியத்தையும் தத்துவபலத்தையும் தரவல்லது.\\

ஆதவன்… நீங்கள் எழுதிய சாதிய ஒழிப்பு போராட்ட தத்துவ ஆயுதங்கள் எத்தனை பேருக்கு விளக்கை ஏற்றிவைத்தது என்று தாராளமாக சொல்லுங்கள் ஆதவன். அதையும் படிக்கத் தயாராய் இருக்கிறேன். ( ஏதோ ரங்கநாயகம்மா தத்துவபலம் தந்துள்ளார் என உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார். அது என்ன தத்துவபலம் ஆதிக்க சாதி தத்துவபலமா, மார்க்சிய தத்துவபலமா..என நீங்கள்தான் சொல்ல வேண்டும்.)

\\அம்பேத்கரது சிலைகளை உடைத்து செருப்பு மாலை போட்டு அவமதிப்பதால் உணரும் மனக்கிளர்ச்சியை இனி இந்நூலை வாசிப்பதன் மூலமே கூட அடையமுடியும்\\

ஆதவன்… உங்களது ஒட்டுமொத்த வக்கிரமும் இங்குதான் வெளிப்படுகிறது. நீங்கள் இதன் மூலம் உங்களது அடிப்பொடிகளுக்குச் சொல்ல வருவது என்ன. இத்தகைய உணர்ச்சியைத் தரும் இந்த நூலை எழுதிய ரங்கநாயகம்மா கொளுத்தப்படவேண்டும். தமிழுக்குக் கொண்டு வந்த கொற்றவையும் அதே வகையில் கையாளப்படவேண்டும் என்கிற விருப்பமா .ஆம் உங்கள் உள்ளார்ந்த விருப்பம் இதுவே…இதைத் தவிர வேறு எதுவும் இல்லை. சாதிவெறியைத் தூண்டிவிடுகிற பேச்சைத் தாண்டி நீங்கள் எதுவுமே பேசமுடியாது. உங்களது இந்த ஒப்பீடு ஒன்றே போதும் ஆதவன். உங்கள் உளவியல் என்ன நீங்கள் யார்  என்று தெரிந்துவிட்டது. ஆதவன்…. இது ஆதிக்க சாதி மன வெறிக்கு சற்றும் குறையாத உங்களது சுயசாதி  வெறி. அவ்வளவே.

இன்னும் குறிப்பாகச் சொன்னால் என் தலைவனைப் பேசினால் அவ்வளவுதான்…எனக் கொந்தளிக்கும் மனநிலையோடு அம்பேத்கரை பள்ளுப் பறைச் சாதித் தலைவனாக மட்டும் முன் வைக்கும் உங்கள் விமர்சனம் எனக்கு அறுவெறுப்பையே ஊட்டுகிறது. இந்த வார்த்தைகளை எழுதும் போது உங்களுக்கு ஒன்றுமே தோணவில்லையா. உங்களை நீங்கள் முக்கியமாக நினைத்துக்கொள்ளும் மனநிலை புரிகிறது அடுத்தவர்களும் தன்னை அப்படித்தான் நினைக்கவேண்டும் என்கிற உங்களது அறிவற்ற மனநிலைதான் தெரிகிறது.

அம்பேத்கரை சாதித் தலைவராக காட்டும் உங்களது வாசிப்பு எத்தகையது என்று நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள் ஆதவன். அத்தோடு… வன்மத்தோடு நீங்கள் எங்களை என்ன செய்ய வேண்டும் என்ற உங்களது வெறியும் ஆசையும் இதில் பிடிபடுகிறது. கருத்துச் சுதந்திரம் கருத்து சுதந்திரம்…. என்ற உங்களது பிதற்றல்கள் உங்களை எந்த இடத்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது ஆதவன்.

\\ சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் இணைத்து நடத்துவதன் தேவையை உள்வாங்கி மார்க்சீய அமைப்புகளை அது நோக்கி உந்தித்தள்ள பணியாற்றி வருபவர்களை பின்வாங்கச் செய்கிற தந்திரம் இப்புத்தகத்தில் துருத்திக்கொண்டு இளிக்கிறது //

எந்தெந்த இடங்களில் எப்படியெல்லாம் துருத்துகிறது என்றாவது நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. நீங்கள் உங்களை அடுத்த அம்பேத்கராய் நினைப்பதுதான் இந்த விமர்சனத்தின் வாயிலாக இளித்துக்கொண்டு இருக்கிறது.

\\ ‘இந்தியாவில் சாதிகள்என்கிற அம்பேத்கரின் ஆய்வுரை மீதான வெகுஜன கவனத்தை சிதறடிக்கும் நோக்கத்துடனேயே இந்நூல் இப்போது தமிழுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறதோ என்கிற சந்தேகமும் எழாமலில்லை.\\

உங்கள் அரைவேக்காட்டுத்தனமான சந்தேகங்களுக்குப் பஞ்சமே இல்லையா ஆதவன். மகிழ்ச்சி. இப்படித் தோன்றுகிறது… அப்படித் தோன்றுகிறது…  துருத்துகிறது..சந்தேகம்… என்கிற உங்களது பதட்ட ஊகங்களைக் கண்டு புன்னகை செய்யாமல் இருக்க முடியவில்லை. எதையும் அறிவு நாணயத்தோடு அணுகமாட்டீர்களா ஆதவன். தெலுங்கில் 2000ல் வெளிவந்து ஆங்கிலத்தில் இந்தப் புத்தகம் 2001ல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் நூலின் நோக்கம் அங்கு என்னவாக இருந்திருக்கும். அந்த வருடத்தில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்.  அடுத்த அம்பேத்கர் ஆவதற்காக தயாராகிக்கொண்டிருந்தீர்களா…

//நேர்த்தியான தாளில் ராயல் டம்மி அளவில் 416 பக்கங்களைக் கொண்ட இந்நூலை வெறும் 80 ரூபாய்க்கு வெளியிட்டிருப்பதற்கு வாசகரின் வாங்கும் சக்தி மீதான அக்கறையை விடவும் வாங்கத் தூண்டும் தந்திரமே காரணமாக இருக்க முடியும்.//

இதை விட கேவலமாக உங்களைப் போல் எழுத எவருக்கும் வாய்க்காது ஆதவன். பதட்டத்தில் என்ன எழுதுகிறோம் ஏது எழுதுகிறோம் என்று தெரியாது அடுத்த அம்பேத்கர் பதவிக்கு தனக்கு வாய்க்காமல் போய் விடுமோ என்கிற அவல நிலைக்கு ஆளாகியுள்ளீர்கள் என்பது நன்கு தெரிகிறது. இந்த நோய் எளிதில் தீர்க்கக் கூடியதே. பொதுவாக உங்களது இந்த புரட்சிகர அரிப்பை சொறிந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பு இருந்த போதும், விமர்சனம் என்ற பெயரில் ஆழச் சொறிந்து ரணமாகிவிட்ட உங்களது குழந்தை மனது கண்டு எனக்கு பரிதாபமாக இருக்கிறது. உங்கள் பார்வையை அப்படியே கொஞ்சம் திருப்பி அம்பேத்கரின் தொகுதி நூல் விலையைச் சுட்டிக்காட்டி யாரேனும் இது நூல் விற்கும் தந்திரம் எனச் சொன்னால் என்ன செய்வீர்கள். பின் மண்டையைச் சொறிவீர்களா.. அது மட்டும் வாங்கும் தந்திரம் என்று சொல்லாமல் புரட்சியை முன்னெடுக்கிறது. நான் பிறப்பால் தலித்… நான் சொன்னதே தலித் இலக்கியம்… நான் எழுதுவதே தலித் புரட்சி என்கிற அடையாளப் பிரச்சினை இல்லையா இது.

ஆதவன் ஒரு நூலை விமர்சிக்கும் போது ஆசிரியர் யார் அவர் இதுவரை என்னென்ன செய்திருக்கிறார் என்ற குறைந்தபட்ச தேடுதலாவது வேண்டும். உங்களுக்கு அப்படி எதுவுமே இல்லையா. இது பற்றின அறிவில்லாமல் எழுதியவைதான உங்கள் அத்தனை புத்தகங்களும்.

ஆதவன்… ரங்கநாயகம்மா இந்தப் புத்தகத்தை மட்டுமல்ல, பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

1999ல் மூலதன நூலுக்கு ஒரு அறிமுகம் என்று மூன்று தொகுதிகள் வந்துள்ளன

தொகுதி 1 பக்கம் 630 – விலை 90 ரூபாய்.
தொகுதி 2 பக்கம் 766- விலை 110 ரூபாய்
தொகுதி 3 பக்கம் 572- விலை 80 ரூபாய்.
மூன்று தொகுதிகள் பக்கங்கள் 1968
விலையோ 280 –மூன்று தொகுதிகளுக்குமே கெட்டி அட்டை தரமான காகிதம்.

RAMAYANA
The Poisonous  Tree

என்கிற இந்த நூல் ராயல் சைசில் கெட்டி அட்டையில் 2004ல் வந்தது. நூலின் பக்கங்கள் 784. ஆங்கிலத்தில் 784 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை என்ன விலைக்கு விக்கலாம் என பத்திரிக்கை நடத்தும் உங்களுக்கு அதுவும் வாங்கும் சக்தியில்லாமல் தந்திர உத்தி கொண்டு விற்கும் உங்களுக்கு தெரியாமல் இருக்காது. நூலின் விலை என்ன தெரியுமா ஆதவன் 150 ரூபாய்கள்தான். பணம் அனுப்பினால் அந்த நூலையும் அனுப்புகிறேன். மேலும் ECONOMICS FOR DHILDREN [ lessons based on Marx’s Capital ] என்ற நூலையும் ராயல் சைசில் கெட்டி அட்டையில் 472 பக்கங்களில் 150 ரூபாய்களுக்குத்தான் வெளியிட்டுள்ளார்.(கொற்றவை இந்த நூலைத்தான் இப்பொழுது மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார்) இந்த நூல்களைப் படித்துவிட்டு, விமர்சனம் என்ற பெயரில் நீங்கள் இரைக்கப் போகும் ரத்தினங்களைக் கண்டு பயமாக இருக்கிறது ஆதவன். படியுங்கள் இதையும் படித்துவிட்டு தையாத் தக்கா எனக் குதித்து, நூலின் உள்ளடக்கத்தை விட்டுவிட்டு அட்டை.. பக்கம்.. விலை.. என உளறுங்கள். இதற்கும் நானே வாய்ப்பளிக்கிறேன்.

நூற்களை எப்படி இவ்வளவு குறைவான விலையில் வெளியிட முடிகிறது என ரங்கநாயகம்மாவும் குறிப்பெழுதியுள்ளார். உங்களைப் போன்ற அரைவேக்காடுகளுக்கு எதையெல்லாம் குறிப்பாக எழுத வேண்டியிருக்கிறது பாருங்கள்.. அந்த நூலைப் படித்துவிட்டு என்ன சொல்லுவீர்கள் மார்க்ஸை திரிக்கிறார்கள்..ராமாயணத்தைத் திரிக்கிறார்கள் என்று சொல்லுவீர்களா..வாங்கும் தந்திரம் என்று பரிதவிப்பீர்களா.

// ரங்கநாயகம்மா போன்றவர்கள் எழுதிக் குமிக்கிற இந்தக் குப்பைகளையெல்லாம் வாசித்து என்ன ஆகப்போகிறது என்று எரிச்சலாகி தூக்கி தூர எறிந்துவிட வேண்டும் போலிருக்கிறது. உண்மையில் அப்படி எறிந்துவிட வேண்டும் என்று எதிர்பார்த்துதான் இப்படி எழுதுகிறார்கள். அதற்காகவே எறிந்துவிடாமல் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.//

ஆதவன் நீங்கள் அடுத்த கட்டமாக அணிய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் பாக்கி. அம்பேத்கரைப் போல் நடிக்கத் துடிக்கும் நீங்கள், ஒரு ப்ளூ கோட்டை அணிந்துகொண்டால் போதும் அம்பேத்கர் தயார். நீங்கள் எழுதிய புத்தகங்களை..வாங்கும் சக்தியைக் குறிவைக்காத அந்த புத்தகங்களை, சாதியை ஒழிக்க தலைவன் நான் மட்டுந்தான் புத்தகம் எழுதியிருக்கிறேன்னு,  உங்களைச் சொல்லச் சொன்ன புத்தகங்களைக் கக்கத்துல இடுக்கிக்கிட்டு மோட்டைப் பார்த்து நில்லுங்க…உங்களை இதுவரை படிச்ச வாசகர்கள் உங்களுக்கு சிலை செய்யத் தோதா இருக்கும். அதோட உங்க ரசிகர்கள் இல்லாம வேற யாராவது படிச்சா அந்தப் புத்தகத்தை எங்க வீசுவாங்கன்னு தெரியும்…அது சரி ஆதவன்… நிறைந்த விலையில் உங்களது நூலை வெளியிடும் தந்திரம் என்ன. அத்தோடு… படித்துக் கிழிக்க வேண்டும் என்ற மனநிலையில்தான் உங்களது நூலை நீங்கள் முன்வைக்கிறீர்களா.

நூலை முழுவதுமாகப் படித்துவந்து உரையாடினால் மகிழ்ச்சியடைவேன். இல்லையென்றால், தான் புத்தி வேணும்… தவறுனா சொல் புத்தி வேணும் என்ற பழமொழிக்கு ஏற்ப உங்களது ஆசான்களாய் இருக்கும் நபர்களை விமர்சனம் செய்யச் சொல்லுங்கள்.. அவ்வளவே….தலித்துகளுக்கு தலையையும், மார்க்சியத்துக்கு வாலையும் காட்டும் உங்கள் அடையாள அரசியலின் இரட்டைப் பிழைப்பில் மண் விழுந்த பரிதாபத்தில் நீங்கள் பதட்டமடைந்துள்ளீர்கள். அதற்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். போய் உருப்படியா படிச்சிட்டு வந்து பேசுங்க

சிறுகுறிப்பு ;
ஆசிரியர் பெயர்  ரங்கநாயகம்மா. ஆனால் நீங்கள் சில இடங்களில் ரங்கநாயகியம்மா என்று எழுதியுள்ளீர்கள். அந்தப் பெயரில் சாதி குறித்து எந்த நூலையாவது நீங்கள் படித்திருந்தால் உடனே அனுப்பி வையுங்கள். உங்களுக்கு என் அன்பு. இல்லை பிழைதான் என்றால் பரவாயில்லை விட்டுவிடலாம். இல்லையில்லை… இது வீம்புக்கு எழுதியதுதான் என்றால் உங்கள் பெயரை வேறு மாதிரி எழுத எனக்கும் தெரியும்.

இறுதிக்குறிப்பு :

சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு:
புத்தர் போதாது!
அம்பேத்கரும் போதாது!
மார்க்ஸ் அவசியத் தேவை!

என்கிற நூலை நீங்கள் வாசிக்கவே இல்லை. நூலை வாசிக்காமல் ஆங்காங்கே தலைப்புகளைப் படித்துவிட்டு கெக்கேபிக்கே என்று உளறியிருக்கிறீகள். தயவு செய்து நூலை முழுவதுமாகப் படியுங்கள். 

தெலுங்கு மூலமாக இந்த நூல் 2000 த்தில் வெளிவந்து ஆங்கிலத்தில் 2001ல் வெளிவந்தது. உங்களது இந்த விமர்சனத்தில் உங்களுக்கு எந்த அறிவு நாணயமும் இல்லை என்று நிருபித்திருக்கிறது. நமக்குத்தான் அறிவில்லை என்று புலம்புவதை விட்டுவிட்டு… உருப்படியாக எதையேனும் செய்ய வேண்டும் என தாங்கள் நினைத்தால், அறிவு நாணயம்கொண்டோர் யாரேனும், தெலுங்கிலோ இல்லை ஆங்கிலத்திலோ, இந்த நூலை முழுவதுமாகப் படித்துவிட்டு, தத்துவப் புரிதலோடு விமர்சனம் செய்திருப்பார்கள். அதையாவது ஒன்று திரட்டி தமிழில் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிடுங்கள். அதையும் மனந்திறந்த வாசிப்பு உட்படுத்துவேன். நிச்சயம் அவ்விமர்சனங்களைப் படிப்பதோடு. விமர்சனங்களும் செய்வேன். ( இது போன்ற விவாதத்துக்குரிய நூல்களைக் குப்பைக் கூடைக்கு அனுப்பமாட்டேன். பாருங்கள்... உங்கள் நூல்களை கூட நான் அவ்வாறு செய்யாமல் வீட்டில் நல்ல காற்றோட்டமான இடமாக பார்த்துத்தான் வைத்திருக்கிறேன்.)

காத்திருக்கிறேன்.
அன்புடன்
வசுமித்ர


2 comments:

  1. வெறும் வன்மத்தால் ஆதவனை குதற முயற்சிக்கும் வசுமித்ரவின் குணமும், தொனியும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தன்னுடைய பிறந்தநாள் குறித்து புரட்சியாளர் அம்பேத்கர் கூறியிருப்பதாக ஆதவன் சுட்டி நகைத்திருப்பது மிக மிக முக்கியமான ஒன்று. அதைக்கூட கணக்கில் கொள்ள இயலாத முட்டாளாக ராங்குநாயகியம்மா இருக்கலாம். மொழி பெயர்த்துள்ள கொற்றவை அந்நூலின் கருத்துத் தரம் குறித்து மறந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. நான் ஒரு சாமானியன், எனக்கே நூலின் தலைப்பே நூலாசிரியரின் அறிவு குறித்து அருவருப்பு கொள்ளவைக்கிறது. மொத்தமாக மொழிபெயர்த்த கொற்றவைக்கு எப்படி எதுவும் தோன்றாமல் போனது!? கொற்றவை இந்த நூலை மொழிபெயர்த்திருக்கக்கூடாது என்பது என்னுடைய அக்கறை.

    ReplyDelete
  2. அம்பேத்கரையும் படிக்காமல் மார்க்ஸையும் படிக்காமல் ஆதவனுக்கு வக்காலத்துக்கு வாங்கி இங்கு குமுறிய உங்களின் நட்புச் சோரத்தை மதிக்கிறேன். கொற்றவை குறித்த உங்கள் அக்கறை அவருக்கு உதவுமா எனத்தெரியவில்லை. மேலும் அதே அக்கறையோடு அம்பேத்கர் பிறந்த நாள் குறித்து ஆதவன் சுயச் சார்பாய் ஊதிய வசனங்களையும் பார்க்கலாம்.

    ReplyDelete

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...