Tuesday, November 15, 2016

“பரிதாபத்திற்குரிய அம்பேத்கர்!”


பல்கலைக் கழகப் பண்டிதர்களின் குறைக்கருத்தியல்களை முன்வைத்தும், வசைகளின் பின்னால் ஒளிந்திருக்கும் அடையாளமும், இருப்பரசியலும் ...திருவுருவின் முன் பலியாவதென்பது ஒரு தொடர் செயல்பாடாக மாறும் போது, விவாதம் என்பது தனிநபர் அவதூறை விமர்சனம் என்றாக்கிவிடுகிறது.

‘பரிதாபத்திற்குரிய மார்க்ஸ்’ என்று பல்கலைக் கழகப் பண்டிதர் பிரேம் தலைப்பு வைத்து கெவின் ஆண்டர்சனை படித்துவிட்டேன் என்பதை சூசகமாகச் சொல்லுகிறார். கெவின் ஆண்டர்சன் மூலமாக மார்க்சை படிக்கும் பிரேமுக்கு இந்துத்துவ அம்பேத்கர் என்பது மகிழ்ச்சி தரத்தக்க விசயமாகத்தான் இருக்கும். இதன் அடிப்படையில் ‘பரிதாபத்திற்குரிய மார்க்ஸ்என்று ஒரு தலைப்பை வைக்க அவருக்கு எந்த தயக்கமும் வரபோவதில்லை.

ஆனால் நாம்  ‘பரிதாபத்திற்குரிய அம்பேத்கர்என்று தலைப்பு வைத்தோமாயின் அவர் தூற்றல் இவ்விதமாக அமையும் என்பதை உறுதிபடக் கூறுகிறேன்:  “ஆதிக்கசாதிக்காரர் அம்பேத்கரை பரிதாபத்திற்குரியவர் எனச் சித்தரிப்பதன் மூலம் அம்பேத்கரை ஏளனம் செய்கிறார். இதுதான் ஆழ்மன சாதி உளவியல். இதைத்தான் பின்நவீனத்துவம் கட்டுடைத்தல் என்கிறது. பன்மைத்துவ வெளிச்சத்தில் இதைக் காணலாம். தலித்துகள் பரிதாபத்துக்குரியவர்கள் என்பதை ஆதிக்க சாதி திமிரில் சொல்கிறார்கள் – இவ்வரிகளை மாற்றியோ தலைகீழாக்கம் செய்தோ கூட அவர் எழுதலாம். ஆனால் பொருள் ஒன்றுதான் விமர்சித்தவர் ஆதிக்க சாதி அவ்வளவே. இவ்வகையான விமர்சனங்களை வைக்க ஒருவர் ஒடுக்குகிற சாதியில் பிறந்ததே போதுமானது. தான் ஒரு தலித்தாகப் பிறந்தததானேலேயே ஒரு  போராளியாக இருப்பதற்கான சாட்சியமாக அமைவதே அவரது விமர்சன உளவியலின் நோக்கம். பிறப்பின் அடிப்படையில் குணம் அமையும் என்ற பார்ப்பனிய  அரிச்சுவடியில்தான் பண்டிதர் தன் விமர்சனத்தையே நகர்த்துகிறார்.

இந்தப் புரிதலைத்தான்,   ‘தீண்டாமை என்னும் மொண்ணையான ஆயுதம்என்ற கட்டுரையில் ரங்கநாயகம்மா போட்டு உடைத்திருக்கிறார். ஆனால் அதை அவர் கட்டுடைப்பு என்று சொல்லவில்லை. யதார்த்தத்தை முன்வைத்தே எழுதியிருக்கிறார். இதனால் தங்களை விமர்சிப்பவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்லமுடியாத தங்களுடைய சாதிச்சார்பின் சோரத்தில், பதற்றமடைந்து கேள்வி கேட்பவர்களை ஆதிக்கசாதி என வசைபாடுதலும், அடையாள அரசியலில் தன்னிடம் மறுக்கப்பட்டு, அதிகாரமும் உரிமையும் பறிபோகிறதே என்ற பதைபதைப்பில் பிரேம் மட்டுமல்ல எண்ணற்றோர் கொதித்த மனநிலையில்தான் இருக்கின்றனர். பிரேம் போன்றோர்களது இத்தகைய அணுகுமுறைகள் புதிதல்ல. அதிர்ச்சி மதிப்பீட்டீற்காக எதையும் செய்யத் துணிந்தவர் என்பதை அவரது எழுத்துக்களில் நாம் கண்டுணரலாம்.

ரங்கநாயகம்மா அம்பேத்கரை அறிவுஜீவியாகக் கருதி அவரை கறாராக விமர்சித்திருக்கிறார். அவருக்குண்டான மதிப்பையும் தருகிறார். ஆனால்  அம்பேத்கரை இப்படி விமர்சிக்கலாமா, அது எவ்வளவு பெரிய பாவம் என்ற ரீதியில் முன்வரும் விமர்சனங்கள் அம்பேத்கரை ஒரு பரிதாபத்திற்குரிய ஜீவியாக அவர்கள்  நினைப்பது புரிகிறது. அந்தப் புரிதலில் அம்பேத்கருக்காக வாதாடுவதன் பின்னுள்ள பண்டிதர்களின், எழுத்தாளர்களின் இருப்பரசியலின் உள்நோக்கத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அம்பேத்கரை அறிவுஜீவியாக மதிப்பிட்டு அவரை மதிப்பதும் அவரது கருத்துக்களை ஏற்பதும் விமர்சிப்பதும் என்ற நிலை இன்னும் நிகழவில்லை. அம்பேத்கரை திருவுருவாக்கும் வேலையை, இவ்வகையான பண்டிதக் குறைக்கருத்தியல்களைத்தான் இந்துத்துவாதிகள் மிகவும் வரவேற்கிறார்கள். ஜனசங்கத்தில் அம்பேத்கரின் பெயரும் துதியில் இப்பொழுது சேர்க்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் பிரேம் வகையறாக்கள் அம்பேத்கரை விமர்சிப்பவர்கள் எல்லாம் ஆதிக்க சாதிகள் என்று விமர்சனத்தை வைக்கிறார்கள். மேலும் அம்பேத்கரை பின்நவீனத்துவ அம்பேத்கர் என்கிறார். இந்துத்துவ அம்பேத்கரைவிட பின்நவீனத்துவ அம்பேத்கர் எவ்வளவு ஆபத்தானவர் என்பதை நாம் உணராமல் இல்லை.

இவர்களது சந்தேகமும் அவநம்பிக்கையுமே பின்நவீனத்துவக் கருத்தியலாகவும் புரிதலாகவும் வெளிப்படுகிறது. அதோடு மேட்டிமைத்தனமான தங்களது அறிவுக்கு எந்தத் தளத்தை முன் வைத்து உரையாடுவது என்கிற குழப்பத்தில் தான் நினைத்ததையெல்லாம் பண்டிதக் கண்டுபிடிப்புகள் என்பதும், அர்த்தமற்ற சொல் அலங்காரத்தில், கோட்பாட்டு வார்த்தைகளில் முன்வைத்தும் வித்தை காட்டுகின்றனர்.

அம்பேத்கரை சரியாக விமர்சித்த நூல்கள் என்று அவர்கள் எதேனும் ஒரு நூலை சுட்டிக் காட்டினால் (குறைந்த பட்சம் தமிழில்) அதையும் படித்துவிட்டு விவாதிக்கலாம். மேலும் அம்பேத்கரை யாரும் கண்டுகொள்ளவில்லை யாரும் பேசவில்லை யாரும் எழுதவில்லை என்று பத்தாம் பசலித்தனமாக  ஒரு பொதுவான குற்றச்சாட்டைப் பொதுவெளியில் அங்கலாய்ப்பாக வைப்பதும், அப்படி யாரேனும் விமர்சித்தால் உடனே சாதி முத்திரை குத்துவதுமாக இரட்டை நிலையே இங்கு நீடிக்கிறது. இதுவே அம்பேத்கரை பரந்த அளவில் கொண்டு செல்வதைத் தடுக்கிறது. இந்தக் குற்றச்சாட்டே மேலும் பலருக்கு அவர்களின் சாதித் தலைவரை நாம் ஏன் விமர்சிக்க வேண்டும் என்கிற மன நிலையையும் தருகிறது. பல்கலைக் கழக பண்டிதர்களும் இந்த நோய்த்தொற்றை அறிவுசார் விமர்சனமாகவே சொல்கிறார்கள்.

டெல்டும்டே அம்பேத்கரின் போதாமைகளை அழுத்தம் குறைந்த குரலில் முன்வைக்கின்றார். அதற்குப் பலனாக அதே அழுத்தம் குறைந்த குரலில் டெல்டும்டே ஓடுகாலியாக சித்தரிக்கப்படுகிறார். என் முகநூல் உரையாடல்களில் அவரைக்குறித்து அவ்விதமே பேசப்பட்டது.

மாறாக அம்பேத்கரை திருவுருவாக்கி கடவுளாக, கடவுளின் தூதுவராக காஞ்ச அய்லய்யா போன்றோர் முன்மொழிகின்றனர். அம்பேத்கரை இறைத்தூதராக மாற்றுகிறார். இவ்வகையான மத அடைமொழிகளை கட்டமைப்பது யாருக்கு உதவும். சுருங்கச் சொல்லவேண்டுமென்றால். கடவுளை விமர்சிக்கும் போது மத அடிப்படைவாதிகள் தங்களது விமர்சனங்களை எந்த திசை நோக்கி எந்தப் புரிதலில் வைப்பார்கள் என்பது நாமறியாததுமல்ல.

திருவுருவாக்கப்படும் முதல் நோக்கமே அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதை முன்நிபந்தனையாகக் கொள்ளும் சாட்சியாகிறது. இது இத்தகையவர்களுக்கு வசதியாக இருக்கிறது. தான் நம்பும் திருவுருவுக்கு பல்வேறு அவதாரங்களை வரிசையாக வைக்க இது முதலில் உறுதி செய்கிறது. நமது சூழலில் பல்வேறு அவதார மகிமைகளை எடுக்காத திருவுருக்களே இல்லை எனலாம். முதன் முதலில் திருவுருவாக்கப்பட்டு காந்தி சிலையாகிப் போனதும், பின் சிலை வழிப்பாட்டில் உச்சரிக்கும் கோட்பாட்டாளர்களின் துதிகளும் மந்திரங்களுமே விமர்சன பின்னணியைக் கொண்டதாக அமைகிறது. தான் நம்பும் கடவுளுக்கு இப்போது பின்நவீனத்துவ புகழாரங்களும் எவ்வித அரசியல் நோக்கமும் இன்றி துதிபாடுதலை முன்வைத்தே நகர்கிறது. அதற்குத் தோதாதாக இவர்கள் உளவியலையும் துணைக்கு அழைப்பார்கள். உதாரணத்திற்கு மார்க்சியத்தில் உப்பு புளி இல்லை என்றவர்கள் இங்கு பெரும்பாலும் காந்தியிடம் அனைத்தும் கிடைக்கிறது என்றார்கள். ஆனால் அம்பேத்கரிடம் கிடைப்பது என்ன என்று இங்கு இவர்கள் எழுதினார்களா என்றால் ஏமாற்றமே.

உதாரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். அம்பேத்கர் குறித்து இதுவரை தன் கருத்துக்களையோ விமர்சனங்களையோ தனிநூலாகக் கூட முன்வைக்கத் தயங்கிய பிரேம் காந்தியைக் கடந்த காந்தியம் என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியிருக்கிறார். எதர்கெடுத்தாலும் உள் நோக்கம், பன்மெய்த்துவம், மாற்று அரசியல், கட்டுடைத்தல் என்கிற வார்த்தைகளை முன்வைத்து தன் அடையாள இருப்பை முன்வைக்கும் இவர் தனது நூலை எழுதுவதற்கான முதல் நிமித்தமாக காலச்சுவடு கண்ணன் இருந்ததை சொல்லுகிறார். நல்லது யார் சொன்னாலும் அவர் குறித்து ஒரு நூலை எழுதவும், தன் விவாதப் பொருளை முன்வைத்து நகர்வதும் பல விமர்சன முன்னெடுப்புக்களை செய்ய உதவும்.  இங்கு காலச்சுவடு கண்ணன் என அவர் சொல்வதன் மூலம் வேறு பல விசயங்களை மறைமுக நோக்கில் கூறவும் விழைகிறார். இதே போன்ற ஒரு நூலை வேறொருவர் எழுதும் பட்சத்தில் காலச்சுவடு கண்ணன் சொல்லி எழுதிய நூல் கண்ணனின் சாதி சார்ந்தே இருக்கும் என்று பிறப்பை முன்வைத்து நகர பிரேம் தயங்கவே மாட்டார் என்பது உறுதி. அதற்கான ஆதாரங்களாக அவர் நான் வைத்த கேள்விகளை எதிர்கொண்ட விதமே சுட்டிக்காட்டிவிடுகிறது.

முகநூலில் அவராக என் பக்கத்தில் வந்து உரையாடி வைத்த கேள்விகளை எதிர்கொள்ளாமல் ஆதிக்கசாதி என பிறப்பை முன்வைத்து நகர்ந்து எளிய கேள்விகளுக்குக் கூட அவரது பன்மைத்துவ உளப்பாங்கு பதில் சொல்லமுடியாது என்னை உரையாட முடியாதபடி துண்டித்துச் சென்றிருக்கிறார். இவரது இந்த அணுகுமுறையின் படி நான் மாற்று உரையாடலின் மனப்போக்கை காந்தியிடம்தான் புகார் செய்ய வேண்டும்.

அவர் எழுதிய காந்தியைக் கடந்த காந்தியம்  நூலின் முன்னுரையில்  “ நான்  ‘காந்தியவாதிஅல்லன், ஒரு பின்நவீன, பெண்ணிய, மார்க்சிய உளப்பாங்கு உள்ளவன். ஆனால் எனது நேசத்திற்கு உரியவர்களுக்கு காந்தியத்தை பரிந்துரைப்பேன்  என காந்தியை தன் உளவியல் தலைமைத்துவம் கொண்ட தலைவராகவும் அவர் ஒருவருக்கே மாற்று விவாதக் களத்தில் பங்காற்ற உரிமை இருக்கிறது போலவும் ஒரு தோற்றத்தைத் தருகிறார். ( இந்த உளப்பாங்கு தன் தேவைக்கேற்ப அளவு கூடவோ குறையவோ செய்யும் என்பதற்கு பண்டிதரின் நூல்களை வாசித்தால் நன்கு புரியும். பிழைப்புவாதக் கருத்துக்கு வித்தியாசங்களே மூலதனம்)

அவர் தனது பிரியத்திற்குரியவர்களுக்கு அவர் ரஜினி பட ஒளிவட்டைக் கூடக் கொடுக்கலாம் ஆனால் அதை தத்துவத்தின் பேரில், பின்நவீனத்துவத்தின், பெண்ணியத்தின் மார்க்சியத்தின் பெயரால் செய்ய வேண்டுமா என்பதுதான் இங்குள்ள  கேள்வி. மேலும் தானொரு பண்டிதர் என்பதால் தான் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் பின்னாலும் ஒரு கோட்பாடு இருக்கும் என அவர் நம்பினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அவரது பிரியத்தையும் நேசத்தையும் பெற்றவர்களை இக்கணத்தில் நினைத்து பரிதாப்படுகிறேன். அதே சமயம் தன் பிரியத்துக்குரிய ஒருவரை பின்நவீனத்துவ வாசிப்பில் அவர் எப்படி வெளித்தள்ளியிருக்கிறார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். (ஆனால் ஆதிக்கசாதியில் பிறந்தவர் என் நேசத்துகுரியவர் காந்தி எனச் சொன்னால்..?)

பொதுவாக இங்கு பின்நவீனத்தும் பேசிய வாதிகளின் அக்கறை, ஒரு விசயத்தை நான்தான் முன்னெடுப்பு செய்தேன் என்பதிலேயே பெரும்பாலும் நிலைகொள்ளுகிறது. பின்நவீனத்துவ அடையாளத்தையும் தங்களது அறிவுஜீவி இருப்புக்கான லேபிளாக மாற்றும் இவர்களது உளவியல் தன்னைத்தானே தொழும் ஒரு சுயமோக மனநிலைக்கே இட்டுச் செல்கிறது.

கருத்துக்களை பின்நகர்த்தி, வடிவத்தை முன்னகர்த்தி காந்தியின் திருவுருவை இன்னும் பலமடங்காக்கி ஒரு பெருவடிவான காந்தியை அறிமுகப்படுத்திகிறார். பிரேம் தனது கோட்பாட்டுப் புரிதல் என்ற அர்த்ததில்  காந்தியை ‘ஹல்க் காந்தியாக மாற்றுகிறார். அவரையே பன்மெய்த்துவ காந்தியாக பிதுக்கிக் காட்டுகிறார்.

பிதுக்குவதன் மூலம் ஒரு பொருளை பன்மடங்கு பருமனைக் காட்டிவிடமுடியும் என்று நினைக்கும் அவரது ஹல்க் காந்தியை நாம் பிதுக்கி எடுத்தபின், இருந்த நிலையும், அளவும் மாறி தொய்ந்து நோஞ்சானான காந்தியையே அது இன்னும் மோசமாகத் தருகிறது. எந்தளவுக்கு அது மோசமாகத் தருகிறது என்றால் “ உலகில் இதுவரை தோன்றிய கோட்பாடுகள், தத்துவங்கள் யாவுமே மானுடச் சிக்கல்களை முழுமையாகத் தீர்க்கவியலாத போதாமையுடன் இருப்பதையும் மாற்று அரசியல் குறித்த சிந்தனையில் காந்தியம் தவிர்க்க இயலாததாக ஆகியிருப்பதையும் சமீபகால யுத்த அரசியல் பொருளாதார நடவடிக்கைகளை உதாரணங்காட்டி முன்வைக்கிறது இந்நூல்எனும் பின் அட்டையில் பிளர்ப் எழுத வைக்கும் அளவுக்கு காந்தியை மாற்று அரசியலின் பிதாமகனாய் முன்னிருத்துகிறது. இதைக் காந்தியைக் கடந்த காந்தியம் என்பதோடு இனி அம்பேத்கரைக் கடந்த அம்பேத்கரியம் என்ற நூலையும் நாம் எதிர்பார்ப்பதோடு, அந்நூலின் பின்னட்டை வாக்கியத்தில் காந்தி என்ற வார்த்தைகளுக்கு அம்பேத்கர் பெயரைப் போட்டு பன்மெய் பின்நவீனத்துவ! வாசிப்பையும் நாம் செய்யலாம். உண்மையில் பல்கலைக் கழகப் பண்டிதர் பிரேமின் பார்வையில்  ‘அம்பேத்கர் பரிதாபத்திற்குரியவரே”

நூலின் உள்ளடக்கமே தொழுகை மனப்பான்மையில் இருக்கும் போது அது குறித்த கருத்துக்களை நாம் எந்த வகையில் விமர்சனத்துக்குள்ளாக்குவது என்கிற விவாதத்தையும் நாம் முன்வைக்க வேண்டியதாகிறது. முன்னுரையில் பிரியத்துக்குரியவர்களுக்கு காந்தியை சிபாரிசு செய்வேன் எனச் சொல்வது காந்தியின் பன்மெய்த்துவத்தை எந்த அளவுகோல் கொண்டு நிர்ணயித்துச் சொல்கிறது என்பது புரியவில்லை. அனைத்தையும் பேசியவர் என்கிற அங்கிகாரத்தை இப்பொழுது நாம் ஒரு தொலைக்காட்சி நேர்காணலைச் செய்பவருக்குக் கூட வழங்க முடியும். பேசுவதென்பது எது பற்றி? அதன் நோக்கங்கள் எதன்பாற்பட்டது? என்பதெல்லாம் கேள்விகளே இல்லை. பேசினார் அது முக்கியம். அவ்வளவே!

ஆனால் இப்பொழுது அதே தொனியில் அவரது நகர்வானது அம்பேத்கருக்கு நகர்ந்திருக்கிறது. அதே சமயம் காந்தியை ஹல்க்காக மாற்றிய பிரேம் அம்பேத்கரையும் அதே தளத்திற்கு நகர்த்தவே விரும்புகிறார். திருவுருவின் முன் பலியாவதென்பது ஒரு தொடர் செயல்பாடாக மாறும் போது, விவாதம் என்பது தனிநபர் அவதூறை விமர்சனம் என்றாக்கிவிடுகிறது.

அம்பேத்கரைப் படிப்பதும், அவரை விமர்சிப்பதும் அம்பேத்கரை நிராகரிக்கிறார்கள் என்ற தோற்றத்தை தருவதற்கு போதுமான காரணங்கள். அம்பேத்கரை திருவுருவாக மட்டும் வைத்து அவரைப் போற்றி இறுகிய சிலையாக மாற்றி அதன் மூலம் தங்களது அடையாள அரசியலை காத்துக்கொள்ளும் தந்திரமே இதில் முக்கிய இடம் வகிக்கிறது. இரண்டாவது இடம் தன் பிறப்பின் மூலமாக சாதியை அனைத்துக்கும் மூலமாக வைக்கும் பார்ப்பனிய பார்வை.

அம்பேத்கரைப் படித்து,  விமர்சித்து, கடந்து செல்வது என்பது அம்பேத்கரை எப்படி அவமதிப்புச் செய்யும் என்பது எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. அவரை விமர்சிப்பது காலத்தின் அவசியமாக இருக்கும் பட்சத்தில் அது நிகழ்ந்தே தீரும். ஒரே ஒரு நூலில் அம்பேத்கரை விமர்சிப்பதன் மூலமாக அவரை ஓரங்கட்டிவிடமுடியும் என்கிற அவர்களது அறியாமையும், பதற்றமும் அவர்களது தத்துவ வறுமையைக் காட்டுவதோடு, விளக்கமளிக்க முடியாத அவர்களது வார்த்தைகள் அவதூறுகளாகப் பரிணமித்து அவர்களின் பிழைப்புவாத நோக்கங்களையும் விளக்கிவிடுகிறது.

அம்பேத்கரை விமர்சிப்பது, புரிந்து கொள்வது, கடந்து செல்வது என்பது அவர் யாருக்காகப் போராடினாரோ அவர்களுக்காகப் போராடுவது என்று பொருள். மாறாக ஒரே ஒரு விமர்சன நூலில் அம்பேத்கரை அல்ல. அவரை திருவுருவாக்கி தவிக்கும் பிரேமின் ஒரு கட்டுரையைக் கூட தூக்கி எறியமுடியாது. கருத்தில் மாற்றுக்கள் இருந்தால் பொருட்படுத்தப்படும். இல்லையேல், அவ்வெழுத்துக்கள் தன் காலத்தின் எல்லையைத் தீர்மானித்துக்கொள்ளும்.

திருவுருவாக்கம் என்ற குறைக்கருத்தியல் யதார்த்தத்தில் மாபெரும் வெற்றியை அடைய காரணம் திருவுருவாக்கப்பட்டவரை வாசிக்கத் தேவையில்லை அவர் எது சொன்னாலும், செய்தாலும் அது சரி என்ற துதிபாடல் போதுமானது. ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகள் இத்தகைய பாரம்பரியத்தைத்தான் வளர்த்துவிடுகிறது.

இந்தக் குறைக் கருத்தியலையே தான் நம்பும் அரசியல் தலைவரை திருவுருவாக்குவதற்கு நீள்கிறது. அறிவுஜீவி என்ற சொல்லும் இப்பொழுது அனுபவிக்கக் கூடிய சொத்தாக மாறும் காலகட்டத்தில் அதன் பின்னணி பல்வேறு நோக்கங்களைக் கொண்டதாக அமைவதை நாம் கவனிக்க வேண்டும். திருவுருவாக்கம் செய்யப்பட்ட பின் வாசிக்காமல் இருப்பது அதன் முதல் நிலை. பின் அங்கிருந்தே அனைத்து சொற்களும் வெடித்துக் கிளம்புகின்றன.  முதற்கட்டமாக விமர்சிப்பவர்களுக்கு சாதி முத்திரை குத்துவதன் மூலம் எவரையும் வாசிக்கவிடாமல் அச்சுறுத்தி பிழைப்பு நடத்தும் இது போன்ற  கோட்பாட்டாளர்களும் பிழைப்புவாதிகளும் உண்மையில் யாருக்கு சேவகம் செய்கிறார்கள்? யாரை விலக்கி வைக்கிறார்கள்? ரஜினி படத்தை விமர்சித்தால் நீ கமல் ரசிகனா என கேட்கும் நடைமுறை ரசிக மனோபாவத்தைத் தாண்டி வேறெதுவும் இல்லை.

அடுத்தபடியாக அம்பேத்கரை நாங்கள் மட்டும் தான் பேசுவோம் எழுதுவோம் என்று உரிமை கொண்டாடுவது அம்பேத்கரின் அறிவுத்தளத்தை மறுத்து, அவரை தங்கள் சொந்த சாதித் தலைவனாக மட்டுமே கருதும் அவர்களது சாதிய மனநிலையையே இதில் பார்க்க முடிகிறது. இதை பலமுறை கூறவேண்டிய அவல நிலையில் உள்ளேன். இந்த உரையாடல் தலித் அல்லாத யாரும் தலித் கதை நாவல் அது இது என எதையும் எழுதமுடியாது என்று சொன்ன விவாதங்களாக தமிழில் பத்து பதினைந்து கால வரலாறாக களமாடவும் செய்தன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

அம்பேத்கரை இப்படி தங்களது சொந்த சாதித் தலைவனாக மட்டும் குறுக்கிக் காட்டுவதும், அவரை யாரும் விமர்சிக்கக் கூடாது என்பதும், மாறுக்கருத்துக் கொண்டோரை ஆதிக்கசாதி என முத்திரை குத்துவதுமான இந்த அவல நிலைதான் அம்பேத்கரின் படைப்புகளை அனைவரும் படிக்கவும், விமர்சனமும் செய்ய முதல் தடையாக இருக்கிறது.  படித்து விமர்சித்தால் எங்கே தங்களையும் ஆதிக்க சாதி என்று சொல்லிவிடுவார்களோ, முத்திரை குத்திவிடுவார்களோ என்ற அச்ச உணர்வை வளர்த்தெடுத்து வீரியமாக செயற்பட்டிருக்கிறது. இது ஆதிக்கச் சாதி விளையாட்டு. இந்த விளையாட்டை தொடர்வதன் மூலம் தங்கள் அடையாளத்தை அறிவுசார் சொத்தாக மாற்றவும், அதன் பலனை அரசியல் தளத்தில் அனுபவிக்கவும் துடிக்கும் பண்டிதர்களின் துடிப்பு புரிகிறது. 

விளைவு. இன்று தமிழில் அம்பேத்கரை விமர்சனப் பூர்வமாக அணுகிய நூல்கள் அரிது. ஓரிரண்டு நூல்கள் வந்தாலும் அதையும் கண்டும் காணாத நிலை இருக்கிறது. அப்படியே ஒரு நூல் வந்தாலும் அதை ஆதிக்க சாதி நூல் எனச் சொல்லிவிட்டால் போதும் எல்லாம் முடிந்துவிடும். விமர்சிக்கவோ படிக்கவோ தேவையில்லை. பெரும்பாலும் இங்கு அம்பேத்கரின் ஆய்வுகளைப் பற்றி எழுதுகிறேன் என எழுதியதில் பெரும் பகுதி அம்பேத்கர் ஸ்தோத்திரங்களும், அம்பேத்கரைக் கடவுளாகவும், விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராகவும் பிற்போக்கான முறையில் முன்வைத்து, அவரை கெட்டிதட்டிய இறுகிய சிலையாக மட்டுமே மாற்றிப் பார்க்கிறது.

அம்பேத்கரை யார் விமர்சித்தாலும் அவர் சாதியவாதியாக நினைக்கும் பிரேம் போன்றவர்களும், அம்பேத்கர்  விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக முன்வைக்கும் சாதியப் புத்திக் கொண்டவர்களும் அம்பேத்கரை சாதித் தலைவராக மட்டுமே முன்வைக்கும் பார்ப்பனிய குரலுக்கு இணையான குரலாகவும், அவர்களுக்கு துணை போகிற குரலாகவும் இருக்க இது வாய்ப்பளிக்கிறது.

அம்பேத்கர் யாருக்குச் சொந்தம் என்கிற கேள்வி எவ்வளவு அபத்தமானதும், ஆபாத்தானதாகவும் இருக்கிறது என்பதையும் தாண்டி, இந்தக் குழப்பத்திற்கு காரணம் அம்பேத்கரின் எழுத்துக்களா, அல்லது வாசித்தவர்களின் சாதி குறித்த கருத்தா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஒரு தலைவரை இன்னும் இப்படி சந்தேகத்தோடும் குழப்பத்தோடும் அணுக வேண்டிய தேவை இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? இதன் நோக்கம் என்ன? அம்பேத்கரின் எழுத்துக்களில் அப்படி நாம் பொருள் கொள்ள வாய்ப்புகள் இருக்கிறதா.

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று எவருமில்லை எனக் கூறி அனைவரையும் கட்டுடைப்புச் செய்கிறேன் பேர்வழி எனக் கிளப்பி குறைக்கருத்தியல்களை பிண்டக்குவியல்களாய் உருமாற்றி பின்நவீனத்துவத்தின் பெயரால் முன் வைக்கும் பிரேம், இப்பொழுது அம்பேத்கரைக் கட்டுடைக்க அவருக்கு அந்த பின் நவீனத்துவமும் உதவவில்லை என்பதோடு, பின்நவீனக் கட்டுடைப்புக்கு பொருந்தாமல் அம்பேத்கர் அவருக்கு சர்வமுதலாய் மாறிய விந்தை ஏன் வந்தது. விமர்சனப் பூர்வமான அறிவா, அல்லது பிழைப்பு அரசியலா?  இதுநாள் வரை மார்க்சியத்துக்கு மாற்றாக பேசிய  பின்நவீனத்துவம் அவரது சாதித்துவத்திற்கு அக்கறை காட்டுகிறதா?

அனைத்தையும் பெருங்கதையாடல் எனச் சொன்னதோடு, தலைகீழாக்கம் செய்ய வேண்டும் போட்டு உடைக்க வேண்டும் என பொத்தாம் பொதுவாக பின்நவீனத்துவத்தை வைத்தவர் பௌத்தம் பெருங்கதையாடல் இல்லையா என்றால் பதில் இல்லை. நான் எனது கட்டுரையில் முன்னமே குறிப்பிட்டது போல் இன்னொரு வகையான விமர்சனமும் தமிழில் இருந்தது. அது கலை இலக்கியவாதிகளின் குரல். எந்த படைப்பிலும் பிரச்சாரம் இருந்தால் அது இலக்கியமாகாது. கலையில் பிரச்சாரம் கூடாது. அப்படி ஒரு படைப்பு பிரச்சாரம் செய்தால் அது படைப்பே இல்லை சுவரொட்டி என மார்க்சியப் படைப்புகளை முன்வைத்து தங்களது இலக்கிய ரசனையை முன்வைத்தவர்கள், தலித் இலக்கியம் படைப்பா இல்லை பிரச்சாராமா எனக் கேட்டபோது திகைத்து வாய் மூடி நின்றார்கள்.

அனைத்தும் கலையாக மாற வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தவர்கள் தங்களது படைப்புகளில் இருண்மையை, அக நிலைவாதத்தை, தனிநபரின் உளவியலை, காமத்தை என அனைத்தையும் கொச்சையாகப் பிரச்சாரம் செய்தார்கள். இது தலித் இலக்கியத்தையும் விட்டு வைக்கவில்லை.
ஓரு உலக கண்ணோடத்தைத் தரும் மார்க்சியத்தை மட்டும் பிரச்சாரம் என்றார்கள். சுவரொட்டி என்றார்கள். (ஆனால் இன்று ஒரு புதிய தலைமுறை தங்களது கவிதைகளை நேரடியாக பிரச்சாரமாகவே வைத்து இலக்கியத்தில் மார்க்சியத்தையும் சூழல் குறித்த விழிப்புணர்வையும் வைக்கிறது. இவர்கள் மேல் இலக்கிய ரீதியாக, அரசியல் ரீதியாக என்னவிதமான விமர்சனங்களை வைத்தாலும் அவர்களது முயற்சிகளை நாம் மதிக்க வேண்டியிருக்கிறது)

வறட்டுத்தனமான இலக்கியவாதிகளுக்கு, அந்நியமாதல் இருத்தலியம் பின்நவீனத்துவம் என இசங்களின் வழியாக உதவி செய்த பண்டிதர்கள் கோட்பாட்டியலாளர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கிறது.

மார்க்சியத்தின் பெயரால் மார்க்சியத்தையே சிதைத்து, ஒரு தலைமுறையை சீரழித்த எஸ்.வி. ராஜதுரை இன்று மார்க்சிய அறிஞராக பரிணாமம்! அடைந்திருக்கிறார். மார்க்சிய அறிஞர் என்றால் என்னவென்றே தெரியாத அமைப்பு அவருக்கு அவ்வாற பட்டத்தைத் தருவது என்ன வகையான புரிதல் என்று இதுவரை தெரியவில்லை. தங்களின் தத்துவப் பற்றாக்குறைக்கு ஆள்பிடிக்கும் நிலையில்தான் அவ்வியக்கங்கள் இருக்கிறது என்பதற்கு இது ஒன்றே வாழும் சாட்சியாகி இருக்கிறது. இப்பொழுது அம்பேத்கரியராக பிரேமும் நுழைந்திருக்கிறார். கிடைத்த நாற்காலிகளில் தங்களது அடையாள இருப்பையே முன்வைத்து நகர்ந்த இவர்கள் உண்மையில் சமூகத்துக்கோ, இலக்கியத்துக்கோ சேவை செய்யவில்லை. தங்களுக்கான சேவைகளை மட்டுமே செய்துவருகின்றனர். அது இப்பொழுது வெட்டவெளிச்சமும் ஆகிவிட்டது.

முன்னமே நான் சுட்டிக்காட்டியது போல் மார்க்சியத்தை விமர்சித்தால் அறிவுஜீவிப் பட்டமும், தலித்தியத்தை ஆதரித்தால் சாதி மறுப்பாளர் பட்டமும் கிடைக்கும். அதே சமயம் தலித் அடையாள அரசியலை ஆதரித்தால் தலித் போராளி பட்டமும் கிடைக்கும் என்பதைத் தாண்டி இவர்கள் எதையும் நிகழ்த்தவில்லை.

மேலும் தலித்துக்களை விமர்ச்சித்தால் தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்குப் பாதகம் வந்துவிடுமோ என்ற அச்சத்திலும் மேற்சொன்ன இலக்கியவாதிகளின் எடுப்புப் பிள்ளைகளாய் கம்யூனிஸ்ட் கட்சிகளும் மாறிவிட்ட அவலத்தை இன்று நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. சி.பி.எம் கட்சியில் பொலிட் பீரோவில் பார்ப்பனர்களே அதிகம் இருக்கிறார்கள் என்று, சிபிஎம்மின் வெகுஜன அமைப்பில் மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஆதவன் தீட்சண்யா நேரடியாக ஊடகத்தில் சொல்லும் நிலை வந்திருக்கிறது.

இது குறித்து சிபிஎம்  கட்சி ஒரு கேள்வி கூடக் கேட்க முடியாத நிலை ஏன் ஏற்படுகிறது.
காரணம் ஒன்று - கேள்விகேட்டாலோ, விசாரித்தாலோ, அதுவே பெரிய பின்விளைவுகளை உண்டாக்கலாம்.  சம்பந்தப்பட்ட ஆதவன் தீட்சண்யா “ஆம் அது அப்படித்தான்.. கம்யூனிஸ்ட் கட்சி சாதி பார்க்கிறது, என்னை சாதி ரீதியாக விமர்சித்தார்கள், விசாரணை செய்தார்கள், உண்மையில் இது பார்ப்பனியக் கட்சிதான். கட்சியில் என் அனுபவம் இதுவே. சிபிஎம் கட்சி பார்ப்பனியக் கட்சி என்பதற்கு நான் விசாரிக்கப்பட்டதே சாட்சி. கட்சியின் பொலிட் பீரோவில் மட்டுமல்ல அதன் வெகுஜன அமைப்புகள் வரை இந்தப் பார்ப்பனியர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். இப்பொழுதும் சொல்கிறேன் சிபிஎம் கட்சி ஒரு பார்ப்பனியக் கட்சிஎன அவர் பொதுவெளியில் செல்லவும், ஊடகங்களில் பேசவும் வாய்ப்பளிக்கும் என்று அஞ்சி எந்த விளக்கத்தையும் கேட்காமல் அமைதியாக இருக்கலாம்.

காரணம் இரண்டு – சிபிஎம் கட்சி ஒரு பார்ப்பனிய கட்சி என்பது பல முறை விவாதத்திற்குள்ளான விசயம்தான். இது ஒன்றும் புதிய செய்தியல்ல, தலித் இதழ்களில் CPI(M) கட்சியை CPI(MANU) மனுவாத கட்சி என்றே சொல்கிறார்கள், இப்பொழுது நம் வெகுஜன அமைப்பில் இருப்பவர் அப்படிச் சொல்லியிருக்கிறார். இதனால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. எனவே இத்தகைய விமர்சனங்களை சிபிஎம் மௌனமாக ஊறப்போட்டுக் கடக்க நினைக்கலாம்.

காரணம் மூன்று - உண்மையில் பொலிட் பீரோவில் பார்ப்பனர் எண்ணிக்கைதான் அதிகம் இருக்கிறது. இந்த உண்மையை எதை முன்வைத்து வாதாடுவது என எண்ணி, தன் கட்சியின் வெகுஜன அமைப்புக்களின் சுதந்திரத்தை பொதுவெளிக்கு இன்னும் நீட்டிக்கும் அளவில் ஒரு மாபெரும் ஜனநாயகக் கட்சியாக இருக்கலாம்.

வரலாற்றுத் தவறுகளைச் செய்வதில் சிபிஎம் கட்சி வரலாறு காணாத வகையில் முன்னேறி இருக்கிறது. அடையாள அரசியலின் முன் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பரிதாபமான தோற்றம் மார்க்ஸ் வெட்கப்படும் அளவுக்கு இருக்கிறது.

தமுஎகச போன்ற வெகு ஜன அமைப்பில் தலித் அடையாள அரசியலும், மத சந்தர்ப்பவாத கூட்டும் பல கூறுகளாய் நிறைந்திருக்கிறது. இத்தகைய தவறுகளை தத்துவார்த்த பூர்வமாக விமர்சிக்காத சிபிஎம் கட்சி தான் செய்த வரலாற்றுத் தவறுகளில் இதையும் ஒன்றெனச் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.

முன்னர் ஒரு காலகட்டத்தில் கட்சியில் உறுப்பினராக இருப்பதற்கே தகுதி விண்ணப்பத்தை வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி இன்று அடையாள அரசியலை, தன் தலை எண்ணிக்கைக் கணக்கில் அழித்துக்கொண்டிருக்கிறது. இதை நடைமுறை அரசியல் என்று அவர்கள் விளக்கம் கொடுக்கும் பட்சத்தில் நடைமுறை என்ற பதத்தில் ஒளிந்திருக்கும் நோக்கங்கள் குறித்தும் நலன்கள் குறித்தும் ஒரு ஆய்வறிக்கையே நாம் முன்வைக்கலாம்.

சி.பி.எம் போன்ற ஒரு கட்சிக்கே அம்பேத்கரைப் பற்றி விமர்சனம் செய்வதில் தயக்கமும், அச்சமும் இருக்கும் போது என்ன செய்யமுடியும். தான் தலித்தாகப் பிறந்த காரணத்தினாலே தன்னைத் தலித் போராளியாக முன்வைக்கும் ஒரு நபரின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாது, விளக்கம் கேட்க முடியாத சூழல்கள் நிலவுகிற போது, அம்பேத்கரின் புரிதல்களை அவரது அணுகுமுறைகளின் போதாமைகளை எவர்தான் நேர்மையாக சுட்டிக்காட்டமுடியும். முடியாது! அப்படிச் சுட்டிக்காட்டினால் அவர் சாதி முத்திரை குத்தப்படுவார்.

ஆனால் நிலவும் சூழ்நிலைக்கு மாறாக அம்பேத்கரை பாராட்டுகிற நோக்கில், தலித் வாக்கு வங்கியைக் குறி வைத்து நகரும் இந்துத்துவம் அவரை இந்துத்துவ அம்பேத்கர் என பட்டம் சூட்டி தலித் மக்களை இழுக்க அம்பேத்கரை பாராட்டி வருகிறது. அந்நூல் குறித்து இங்கு எவரும் பேச முடியாத சூழ்நிலை  ஏன் நிலவுகிறது என்பதற்கு நான் முன் சொன்னதே உதாரணம்.  அது இந்துத்துவ கருத்தியல், ஆதிக்க சாதிக் கருத்தியல் என ஒற்றை வரியை விமர்சனமாய் முன்வைத்து கடந்து போகும் சப்பைக்கட்டு ஆகும்.

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக நாம் ஒருவரை கருதினால் அவர் குறித்த எதையும் விவாதிக்க மறுப்பதாகிறது. அதே சமயம் எதிர்தரப்பான இந்துத்துவம் அவர்களின் அதே திருவுருவாக்கத்தை, தனக்கு சாதகமான திருவுருவாக மாற்றவும் வாய்ப்பளிக்கிறது என்பதை இங்கு இவர்கள் உணரவில்லை. அவர்கள் திருவுருவை வரவேற்கவும் தங்களில் ஒரு தலைவராக ஏற்று அதன் மூலம் தங்களின் இருப்பை இன்னும் பலமடங்காங்கிக் கொண்டு, தங்களது அரசியலை முன்வைக்க முடிகிறது. இந்த இந்துத்துவ அணுகுமுறையை  ‘அணைத்துக்கெடுத்தல்’ என்ற வகையில் நாம் அணுகவும் முடியும்.

ரங்கநாயகம்மாவின்  புத்தகம் குறித்து இதுவரை வந்த வசைகளின் தொகையை ஒப்பீட்டால் அந்நூலுக்கு விமர்சனமே வரவில்லை எனலாம். அப்படி விமர்சனம் செய்த எவரும் அம்பேத்கரின் பௌத்தம் பற்றிய, அவரது சாதியின் தோற்றம், மற்றும் சாதியை அழிக்க அவர் முன்வைத்த கருத்துக்கள் குறித்த எந்தக் கேள்வியும் வைக்கவில்லை. வந்த விமர்சனங்களும் நூலின் தொனி குறித்தும், அம்பேத்கரின் மீதான தங்களது சுயசாதிப் புரிதலை முன்வைத்தும் அடையாள அரசியலை முன்வைத்துமே நகர்ந்தன. ஏற்கனவே அம்பேத்கரை விமர்சிக்கும் யாரும் ஆதிக்க சாதி என முத்திரைக் குத்தியதன் விளைவாக, அம்பேத்கரை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என சொன்னால் தலித் போராளி பட்டம் கிடைக்கும் ஆவலை அதிகமாக்கியது. இதன் விளைவு, அம்பேத்கர் எல்லாம் கடந்தவர், கடவுள், அனைத்தும் அறிந்தவர் என்று துதிபாடும் விமர்சனங்களாகவே எஞ்சியது. 

ரங்கநாயகம்மாவோ மார்க்சியத்தை ஏற்றவராக அம்பேத்கரைக் கறாராக விமர்ச்சித்திருக்கிறார். அம்பேத்கருக்கு இயக்கவியல் தெரியாது என்ற கண்டுபிடிப்புகளை வைத்த மார்க்சியர்கள் ரங்கநாயகம்மா தன்னை மார்க்சியர் எனச் சொல்லிக்கொள்கிறார் எனவே அவருக்கு இயங்கியல் பார்வை தெரிந்திருக்க வேண்டும் என்ற தங்களது கண்டுபிடிப்புக்களையெல்லாம் முன்வைத்தது அம்பேத்கரின் மீதான அவர்களது பரிதாபப் பார்வையையே காட்டுகிறது.

மேலும் இயக்கியவியல் பார்வையின்படி பார்ப்பதானது, ஏதோ அம்பேத்கர் கற்காலத்தில் பிறந்தவர் போலவும், அவர் வாழ்ந்த காலத்தில் இயக்கவியல் வார்த்தையே அறிமுகமாகவில்லை என்பது போலவும் இருக்கிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் அம்பேத்கர் மார்க்சியத்தை முன்வைத்துப் பேசிய விமர்சனங்கள் எந்த இயக்கவியல் பார்வையோடு இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். மேலும் அவர்களது நோக்கங்களின் அடிப்படையில் அம்பேத்கருக்கு மார்க்சியம் குறித்த போதாமைகள், மயக்கங்கள் உள்ளன என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறது. 

தங்களது அடையாள அரசியலை, இருப்பை  நிலைநிறுத்திக் கொள்ள அம்பேத்கருக்கு பரிதாபப்படும் இவர்களின் நிலை உண்மையில் அறுவெறுக்கத்தக்கது. இன்னும் சொல்லப் போனால் அறிந்துகொள்ள வேண்டிய அம்பேத்கர் என்ற நூலில் பண்டிதரான அ.மார்க்ஸ் அம்பேத்கரது காதல் உணர்ச்சிகளையும், நவ்வாப் பழம் விற்கும் பெண் அது இதுவென அறிமுகப்படுத்துகிறார். பின்நவீன வெளிச்சம் என்பது இதுதானா.

தங்களது அறமற்ற குடி கலகம் குறித்த சொற்களை பின்நவீனத்துவத்தில் அடையாளம் கண்டு அதை அம்பேத்கர் மீதும் பூசுவதற்கான காரணம் அடையாள அரசியல் அன்றி வேறென்ன. நான் அறிந்த நபிகள் நூலில் இன்ஷா அல்லா என்று இறுதிவாக்கியத்தை முடித்து வைப்பதற்கு உணர்சிவசப்பட்ட விளக்கங்களைக் கொடுக்கும் அ.மார்க்ஸ், அம்பேத்கரை விமர்சிக்கும் போது காதல் உணர்ச்சிகள், தனிநபர் ஒழுக்கத்தின் அறப்பிரச்சினைகள் முன்னுக்கு வந்துவிடுகிறது. காந்தியைப் பற்றி எழுதும் போது கரிசனம் புகுகிறது. அவர் தலித் என்ற வார்த்தையை 1931 களிலேயே அவர் உச்சரித்தது கண்டு வியக்க முடிகிறது. புத்தரைப் பற்றி எழுதும் போது கண்ணீர் சிந்திக்கொண்டே எழுதமுடிகிறது. இவைகள் பின்நவீனத்துவத்தின் அடையாளக் கூறுகளோ என்னவோ?. ஆனால் எந்தத் தலைப்புக்கு எப்படி பொருத்தப்படாய் எழுத வேண்டும் என்பதே இதன் மூலமாக நான் அறிந்த பின்நவீனத்துவம்.  பசுவைப் பற்றி எழுதச் சொன்னால் பசு கட்டப்பட்டிருக்கும் பனையைப் பற்றிக் கட்டுரை எழுதிவிட்டு இத்தகைய பனை மரத்தில்தான் பசு கட்டப்பட்டிருக்கிறது என்று பசுவை முடித்துவைக்கும் பின்நவீனப் புரிதல் இதற்கு எவ்வளவோ மேல்.

மேலும் ஒரு நூலை அணுகும் போதே அது சென்சிட்டிவான விசயம் என்பதை சொல்லி நூலை எழுதுவதானது நூல் குறித்த விமர்சனங்களை அதே  உணர்ச்சிவசப்பட்ட அணுகுமுறையையே கையாளச் சொல்கிறது. அல்லது மறைமுகமாக மிரட்டுகிறது எனச் சொல்லலாம். ஆக, இங்கு இஸ்லாம் குறித்த விமர்சனங்களை முன்வைத்தால் அவர் இந்துத்துவவாதி, அம்பேத்கரை விமர்சித்தால் ஆதிக்க சாதி, இந்துத்துவத்தை விமர்சித்தால் போராளி என்கிற பொது புத்தியின் விசாலமான போக்குக்கு பண்டிதர்களும் விதிவிலக்கல்ல.

இந்த விதிவிலக்குகளின் விதிவிலக்காய் காந்தியை அம்பேத்கருக்கு முன்னமே திருவுருவாக்கி அவரை பன்மெய்த் துவத்திலும், பின்நவீன புரிதலிலும் தனிநூலையே முன்வைக்கச் சொல்லுகிறது. ஆனால் பின்நவீனத்துவப் புரிதலில் மார்க்சியத்தைப் பிறாய்ந்த இவர்களது முன் செயல்பாடுகள், தலித்தியத்திற்கு இவர்கள் கொடுத்த கலக வெளிச்சங்கள் எல்லாம் யாரும் மறந்துவிடக் கூடியதல்ல என்பது மட்டுமல்ல, அவர்களது அடையாள இருப்பை இன்னும் அவர்கள் முன்வைத்து நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியமும் கூட. இவர்களது பின்நவீனத்துவம் தங்கள் இருக்கும் இடத்தின் அளவும், அதிகாரத்தையும் புரிந்த   ‘செலக்டிவ் அம்னீஷியா பின்நவீனத்துவம்தானே தவிர பின்நவீனத்துவம் அல்ல.

ரங்கநாயகம்மா அம்பேத்கரை விமர்சித்ததால் அவர் ஆதிக்க சாதி, மாவோவையும் விமர்சித்திருக்கிறார் அதனால் மாவோயிஸ்ட் எதிரி, ஏன் மார்க்சின் தாடியைக் கூட விமர்சித்திருக்கிறார் அதனால் பெண்ணியவாதி, எல்லாவற்றிற்கும் மேலாக மார்க்சியத்தின் மரபார்ந்த சொற்களை விடுத்து புதிய சொற்களை முன்வைத்ததால், மார்க்சியத்தின் அடிப்படைகள் குறித்து சொந்தமாக ஒரு வார்த்தை கூட எழுதமுடியாத மார்க்சிய கொட்டேஷன் சுரண்டிகளுக்கு அவர் மார்க்சியரே இல்லை.

தன் நண்பரை விமர்சித்தால் ஒரு வார்த்தையில் முத்திரை குத்தாதீர்கள் என நட்பு சோரம் போனவர்களுக்கு ரங்கநாயகம்மாவின் நூல் எலும்புக் கூட்டுக்கு பட்டுப்புடவை கட்டிவிட்டாற் போல் இருக்கும் மொழி.

என் வாழ்நாளில் இத்தனை தூற்றப்பட்டவரை இப்பொழுதுதான் பார்க்கிறேன். ரங்கநாயகம்மாவின் நூல் குறித்து ஏன் இத்தனை பதற்றம், அச்சம் நிலவுகிறது. காரணம் ஒன்றே ஒன்றுதான் தலித் பிழைப்பு வாதிகளின் அடையாள அரசியலை சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது, அம்பேத்கரின் போதாமைகளை விளக்கியிருக்கிறது. அம்பேத்கரை திருவுருவாக்கி பிழைப்பு நடத்தியவர்களுக்கு கேள்விகளை வைத்திருக்கிறது.

ரங்கநாயகம்மாவின் விமர்சன முறையின் தொனி குறித்து கவலைப்பட்ட பண்டிதர்களது விமர்சன முறையைப் பார்த்தால் அறுவெறுப்பின் உச்சத்துக்கே நாம் செல்லலாம். அதைவிட மார்க்சியர்கள் என தங்களை அழைத்துக்கொண்டவர்கள் மற்றும் அமைப்புகளின் மொழி இன்னும் அவலம். உதாரணமாக ரங்கநாயகம்மாவின் நூல் குறித்து வந்த வசைகளை இங்கு சுட்டிக்காட்ட நினைக்கிறேன்.

.ரங்கநாயகம்மாவின் நூல் அம்பேத்கருக்கு செறுப்பு மாலை  போட்டிருக்கிறது
.ரங்கநாயகம்மாவின் நூல் நரகல்
.ரங்கநாயகம்மா ஒரு மார்க்சியப் பொறுக்கி
.செறுப்பால் அடிப்போம்
.வன்கொடுமை சட்டத்தின் மூலமாக மிரட்டல்
.ஆதிக்க சாதி
.என்.ஜி.ஓ
.புத்தகம் மூலம் நிறைய பணத்தை ஆட்டையப் போட்டுள்ளார்கள்
.டெல்டும்டே தலித் காவலன்னு கம்பு சுத்தினார்
.இந்த மொழிபெயர்ப்பு இப்பொழுது ஏன் வரவேண்டும்
.மொழிபெயர்ப்பைத் தவிர்த்திருக்கலாம்
.மார்க்ஸ் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்
.மார்க்ஸ் தேவையில்லை மார்க்ஸ்க்குப் பின்னாடி வந்த அத்தனை பேரும் தேவை
.ரங்கநாயகம்மா ஒரு காலம்னிஸ்ட்

.ரங்கநாயகம்மாவுக்கு மார்க்சியம் தெரியாது
.எலும்புக்கு பட்டுப்புடவை கட்டிவிட்டாற்போல் இருக்கிறது
.காழ்ப்புணர்ச்சி கொண்ட எழுத்துக்கள்
.அபத்தமான நூல்
.மார்க்ஸியத்தோட சாரம்சத்தை மார்க்ஸ்க்கு முன்னாடியே புத்தர் சொல்லிட்டார்
.கள்ள மௌனம் காக்கிறார்கள்
.முட்டாள்தனமாய் எழுதப்பட்ட புத்தகம்
.ரங்கநாயகம்மா ஒரு பூனை
கம்யுனிஸ்ட் என்றதும் வரலாற்று பொருள்முதல்வாதம், இயங்கியல் பொருள்முதல்வாதம் என்று சொல்லி, 'வாழைப்பழத்தை விளக்கெண்ணையில் தோய்த்து' (உபயம் -வெசா) எழுதுவார்களே அப்படியொரு பழைய கபாலி எழுத்து இது.’
.முற்றிலும் காலாவதியான நூல்
.ரங்கநாயகம்மா நூலைப் படித்தால் ரத்தம் கக்கி சாவான்
.ரங்கநாயகம்மா யாருக்கோ வப்பாட்டி

இவைகள்தான் சாதியப் பிரச்சினை.நூலுக்கு வந்த விமர்சனங்கள்.....
 (இன்னும் நிறைய)  விமர்சனம் செய்தவர்களில் தமிழின் மாபெரும் தலித் அறிவுஜிவிகளாக அறியப்பட்டவர்கள், கோட்பாட்டாளர்களாகக் கருத்தப்பட்டவர்களும், பண்டிதர்களும் உள்ளடக்கம்.

காரணம்.., என் சாதித் தலைவனை எப்படி விமர்சிக்கலாம் என்ற கொந்தளிப்பே. உண்மையில் இவர்களுக்கு அறிவுரீதியான அம்பேத்கரோ, அவரது படைப்போ அவரது கருத்துக்களோ தேவையில்லை. அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் அம்பேத்கரின் கெட்டி தட்டிப் போன சிலை. அதை முன்னே வைத்து அம்பேத்கரின் பெயரால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இங்கு நான் சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான். அம்பேத்கரின் சிலை பேசாது, எச்சரிக்காது, விமர்சிக்காது, அதை நீங்கள் உங்கள் கைப்பொம்மையாக ஆட்டிவைக்கலாம். ஆனால், அம்பேத்கரைப் படித்தவர்கள், விமர்சனப் பூர்வமாக அதை வளர்த்தெடுப்பவர்கள் வருவார்கள். அப்பொழுது அவர்கள் விமர்சிக்கும் போது  ‘நீங்கள் கையில் வைத்திருக்கும் அம்பேத்கர் பொம்மை உங்களின் அடையாள அரசியலுக்கான கொலு பொம்மை’ எனப் போட்டு உடைப்பார்கள். இன்னும் அழுத்திச் சொல்ல வேண்டுமென்றால் அம்பேத்கரின் உடைக்கு அப்போது நீலச் சாயம் இருக்காது அவரை சரியான பாதைக்கு அழைத்துச்செல்வதன் மூலம் அம்பேத்கரின் உடை சிவப்பு நிறமாயிருக்கும். உங்கள் அணுகுமுறைதான் இறுதியான அணுகுமுறையென்றால் அம்பேத்கரின் உடை காவி நிறத்திற்கு மாறுவதை நீங்கள் தடுக்க முடியாது. அம்பேத்கரை அவர்கள் இந்துத்துவ அம்பேத்கராய் சுவீகரித்துக்கொள்ள நீங்களே வாய்ப்புகளை வழங்க வேண்டி இருக்கும் .

குறிப்பு: அம்பேத்கருக்கே புரியாதது மற்றவர்களுக்கு எப்படிப் புரியும் என்ற  அறிவுமூடத்தனத்தை முன்வைக்கும் பண்டிதர் பிரேமுக்கு அம்பேத்கர் சாதியை ஒழிக்கும் வழியாக என்ன கூறியிருக்கிறார், அவரது பொருளாதாரப் பார்வைகள் யாருக்கு உகந்தவை என விளக்கும் கடமையும் இருக்கிறது. ஏனென்றால்  அம்பேத்கர் நூல்களை சில மணித்துளிகளில், அரை நாட்களில் படிக்கும் வல்லமையும் சித்தியும் ஒருங்கே கொண்டவர் அவரென அவரே சொல்லியிருக்கிறார்.

இப்படி சில மணித்துளிகளில் படித்து முடித்த ஒருவர் 20 வருடங்களில் எத்தனை லட்சம் பக்கங்களை படித்திருப்பார் என வாசகர்கள் எண்ணி வியக்கும் முன் அவர் அப்படிப் படித்து எத்தனை எழுதியிருப்பார் என தேடிப் படித்தால் புன்னகை ஒன்று வீசிவிட்டுக் கடக்கவே அது வாய்ப்பளிக்கும் என்பதை ஒரு வாசகனாக இங்கு முன்வைக்கிறேன்.

காந்தியைக் குறித்து எழுதும் நூலில்  “மார்க்சியம் விவாதத்திற்கு உள்ளான அளவுக்கு வேறு எந்தக் கருத்தியலும் விவாதிக்கப்பட்டதில்லை. இது மிக இயல்பான ஒரு நிகழ்வு. ஏனெனில் இது வெறும் விவாதம் அல்ல; வாழ்க்கையை மாற்றும் செயல்திட்டம்; அது தொடரவே செய்யும்.”? என்ற பிரேம் அம்பேத்கரை மார்க்சியத்தின் பெயரால் விமர்சனம் செய்தால் மார்க்சியம் வெறும் கலைக்களஞ்சியம், மார்க்ஸ் தேவையே இல்லை என பேசுவதன் பாகுபாடு எதன் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. அவரின் ஆசுவாசம் எதில் நிலைகொள்கிறது எனப் புரிகிறது.

பண்டிதப் பெருந்தகைகள் தாங்கள் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு மட்டும்  ‘விசுவாசமாகஇருந்து, பட்டம் வாங்கும் மாணவராக மட்டுமே இருப்பது அழகல்ல என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.No comments:

Post a Comment

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...