Sunday, April 23, 2017

பேராசிரியப் பெருந்தகை பிரேம் அவர்களுக்கு...முகநூலில் கூட, என்னிடம்  விவாதிக்கமுடியாத நேர்மையற்ற பேராசிரியர் பிரேம், எனது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்னை பிளாக் செய்து ஓடிப்போனவர். அவரது மொழி பேராசிரியரின் மொழியா என்றால், சுத்த சுயம்புவான சாதிவெறி மொழியையே மூலமாகக் கொள்கிறது. அம்பேத்கர் பற்றிய தவறான புரிதல்களை பின்நவீனத்தும் என்ற பெயரில் சதா எழுதியும் முன்வைத்தும் வரும் இந்தப் பேராசிரியர் இப்பொழுது தெலுங்கு பார்ப்பன நிதி பெற்ற நூல் என ரங்கநாயகம்மாவின் நூலை கூறியிருக்கிறார். அப்படி நிரூபிக்கும் பட்சத்தில் அது குறித்த உரையாடலை நாம் தொடரலாம். அதோடு இந்துத்துவப் பணம் என்றும் கூறுகிறார். அப்படி நிரூபித்தால் அதையும் விவாதிக்கலாம். ஆதாரமே இல்லாமால் அவதூறுகளை இரைப்பது பிழைப்புவாத அரசியல்வாதிகளின் போக்கு. பிரேம் ஒரு பேராசிரியரா இல்லை பிழைப்புவாதியா என்னும் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

எங்களை ஜமினிந்தார் ஜமிந்தாரினி என்று குறிப்பிடுவதன் மூலம் பிரேம் தன்னை எந்த இடத்தில் வைத்துள்ளார் என்பது அவரது உளவியலை நோக்கி அவரே கேட்டுக் கொள்ளட்டும். மேலும் தப்புத்தப்பாக உளறிக்கொட்டி என்றும் சொல்லியிருக்கிறார். அதை சரி செய்யவும் பேராசிரியர் உழைக்க வேண்டும். இவரது இந்த அடையாள அரிப்பை தலித் மக்களின் விடுதலைக்கான குரல் என இவர் பறை சாற்றுவது நகைப்புக்குறியது.  ஏற்கனவே எடுத்துக்கட்டியது போல்

“பெரும்பாலான மற்ற தலித் சிந்தனையாளர்கள்அம்பேத்கரை குருட்டுத்தனமாக வழிபடுகின்றனர், பாராளுமன்றம் மற்றும் சீர்திருத்தம் என்னும் வரம்பைத் தாண்டி அடிப்படைக்கூறு சார்ந்த எந்த நடவடிக்கையையும் தவிர்க்கின்றனர். தலித் விடுதலைக்கான எந்தத்திட்டமும் அவர்களிடத்தில் இல்லை. அவர்களிடத்தில் தர்க்கம் மற்றும் அறிவியலின் அடிப்படையில் பேசினால், அதிலும் நீங்கள் தலித்தாக இல்லாமல் போனால் (நீங்களே உங்கள் சாதியைத் துறந்திருந்தாலும்) உங்கள் மீது சாதி வெறியர் முத்திரையைக் குத்துவார்கள்.”

“யதார்த்தத்தில், தலித் அறிவுஜீவி சமூகத்தின் குரலாக ஒலிக்கும் இவர்கள், குட்டிபூர்ஷுவா வர்க்கத்தின் நலன்களையே பிரதிபலிப்பவர்கள். பெரும்பான்மை தலித் மக்களின் நிலை குறித்தோ, அவர்களது விடுதலைக்கானப் போராட்டங்கள் குறித்தோ இவர்களுக்குக் கவலை இல்லை. அவர்களிடமிருந்து எங்கோ விலகிச் சென்று விட்டனர். தங்களுடைய சமூக அந்தஸ்து மற்றும் சாதி அடிப்படையில், பெரும்பான்மை தலித்மக்களின் தலைவராவதே இவர்களுடைய எண்ணம். வளமான வாழ்க்கைச் சூழல் இவர்களுக்கு அமைந்தாலும், தங்களுடன் பணிபுரியும் ஆதிக்க சாதிப் பணியாளர்களால் நுண்ணிய அவமதிப்புகளை, விலக்கை, பாகுபாட்டை இவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது, இதனால் அவர்களுக்குள் ஒருவித தீவிர உணர்ச்சி மேலோங்குகிறது, அது அவர்களுடைய ஆளுமையிலும், எழுத்திலும் பிரதிபலிக்கிறது. இன்றைக்கு அவர்களுடைய பாத்திரம் முதலாளித்துவ அமைப்பின் சமூகத்தூண் என்பதே. மார்க்சின் “ஆளும்வர்க்கமானது ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனைகளை எவ்வளவு தன்வயப்படுத்த முடிகிறதோ, அதன் ஆதிக்கம் அவ்வளவு ஆபத்தாகவும், நிலையானதாகவும் இருக்கிறது.” (மூலதனம்-3) எனும் கருத்துரை இவர்களுக்குப் பெருமளவில் பொருந்தும்” –  சாதியப்பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம்…

அம்பேத்கரின் கருத்தியல்கள் மற்றும் அவரது மார்க்சியப் புரிதல் குறித்து விரிவாக எழுத கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கு ஆய்வுகள் செய்ய வேண்டும். இப்படி பல அவஸ்தைகளை அடைய வேண்டுமா என்ற யோசனையில்தான், 30 நாளில் தலித் அறிவுஜீவி ஆக என்ன செய்யலாம் என்கிற ஆய்வேட்டின் அடிப்படையில் தன்னைத் தவிர அனைவரையும் ஆதிக்கசாதி என்று முத்திரை குத்தி தன்னை ஒரு அறிவுஜீவியாக முன்வைத்து நகர்கிறார்கிறார்கள் பிரேம் போன்ற எண்ணற்ற ‘தலித்திய போராளிகள்’. இதில் அறமெல்லாம் பேசுகிறார் பிரேம்! ஆச்சரியமாக இருக்கிறது! முதலாளித்துவ முதலை கண்ணீர் சொட்டுவதைக் காண முடிகிறது!

“கம்யூனிசம் தொடர்பான அம்பேத்கரின் தியரிட்டிகல் விமர்சனத்தை மார்க்சிஸ்ட்டுகள் ஏற்க அவசியமில்லை. அவர் ஃபேபியன் சோசலிசத்தினால் ஆதர்ஷம் பெற்றவர், மார்க்சியத்தை ஏற்பவர் அல்ல.” என ஒரு கொடூரமான பொய்யைப் பரப்பிக்கொண்டிருக்கிறான் என்று யமுனா ராஜேந்திரனின் பதிவுக்கு இப்படி ஒரு மரியாதையற்ற சொற்களை பயன்படுத்தியிருக்கிறார் பிரேம். என்னவிதமான மொழி இது?

அம்பேத்கர் பேபியன் சோசலிஸ்டுகளிடம் இருந்தே வந்தவர் என டெல்டும்டே குறிப்பிட்டு இருக்கிறார். ஜான் டூயி, மற்றும் அவரது ஆசிரியர்கள் யார் என்று எல்லாம் தெரிந்த பேராசிரியர் விளக்கி அருள் புரியவேண்டும். இது எப்படிப் பொய் என்றும், அதோடு உண்மையையும் உலகுக்கு பறைசாற்ற வேண்டும். அதற்கு 30 நாளில் தலித் அறிவுஜீவியாக என்ன செய்யலாம் என்ற கையேட்டை உதறிவிட்டு அம்பேத்கரை படிக்க வேண்டும்.

செய்வீர்களா!

மேலும் தமிழ்நாட்டின் முக்கிய மார்க்சிய அறிஞர் ராஜதுரை அம்பேத்கருக்குத் தெரிந்தது TEXT BOOK மார்க்சியம் என்று விளக்கியிருக்கிறார். இன்னொரு பேராசிரியரான அருணன் அம்பேத்கர் படித்ததெல்லாம் தவறான மார்க்சிய புத்தகங்கள் என்று கூறியிருக்கிறார். அது தவறான மார்க்சிய நூல்கள் என்று அம்பேத்கருக்கு தெரியாத அளவுக்கு படித்திருக்கிறார் என்ற கூற்றும் இதில் இருக்கிறது. எனவே பிரேம் இவர்களை மறுத்து அம்பேத்கர் ஒரு கம்யூனிஸ்ட் என்று நிறுவுவதற்கான தத்துவார்த்த முயற்சிகளை எழுத வேண்டும். விவாதிக்க வேண்டும்.


மேலும் புத்தரும் அவரது தம்மமும் நூலை வெளியிட அம்பேத்கர் டாட்டாவிடம் நிதி கேட்டிருப்பதாக ஒரு குறிப்பை க.திருநாவுக்கரசு சுட்டியிருக்கிறார். அம்பேத்கரது வார்த்தைகளாக

“டாடா என் வேண்டுகோளை மறுத்துவிட்டால், என்னுடைய பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அடுத்த வாசலுக்குத்தான் செல்லவேண்டியிருக்கும்” என (அம்பேத்கர்) குறிப்பிட்டு இருந்தார். டாடா நிறுவனத்தினர் ரூ.3000/- க்குரிய காசோலையை அம்பேத்கருக்கு அனுப்பிவைத்தனர்.

என்று கூறியிருக்கிறார். எனவே டாட்டாவின் நிதி உதவி பெற்றே புத்தரும் அவர் தம்மமும் வெளிவந்திருக்கிறது என்பதை எந்தப் பொருளில் எடுத்துக்கொண்டு விவாதிப்பது. பேராசிரியர் விளக்கவேண்டும்.டாட்டா இந்துவா, இல்லை முதலாளியா, பௌத்தத்திற்கு அவர் ஏன் செய்ய வேண்டும், அம்பேத்கர் ஏன் டாட்டாவைத் தேர்ந்தெடுத்தார் என்பதையெல்லாம் விளக்க வேண்டும்.

இந்துத்துவா இப்டித்தான் பேசும்,சாதியம் இப்படித்தான் பேசும் என்று பதில் சொல்ல முடியாத இயலாமையில் பொதுப்புத்தியோடு வார்த்தைகளை வைத்தால். அதே பொதுப்புத்தியோடு தலித்தியம் இப்படித்தான் பேசும், அடையாள அரசியலும் இப்படித்தான் பேசும். முத்திரை குத்துவதன் மூலம் பதில் சொல்ல முடியாத தங்களது கையாலாததனத்தை மூடி மறைக்க அது என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதை நானும் அறிவேன் என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது தான். இது வெட்டித்தனமான அகங்கார சண்டையாக எஞ்சுமே ஒழிய தலித் மக்களுக்கு எந்த விதத்தில் பயன் தரும்?

இதுவரை எனக்குத் தெரிந்து அம்பேத்கரை பின்நவீனத்துவ அம்பேத்கர் என்று சொன்ன முதல் அறிவுஜீவி பிரேம் தான். அம்பேத்கர் எப்படி பின்நவீனத்துவ அம்பேத்கர்ஆனார் என இதுவரை எதையும் முன்வைத்து விளக்கவில்லை. மறுபடியும் எனது கேள்விகளையே முன்வைக்கிறேன்.


மேலும் சில கேள்விகள்;

1. மார்க்சியத்தைப் பெருங்கதையாடல் என்றவர்கள் பௌத்தத்தை பெருங்கதையாடல் எனச் சொல்ல முடியுமா? முடியாதென்றால் எப்படி. முடியுமென்றால் விளக்கலாம்.

2. அம்பேத்கர் பின்நவீனத்துக்கு முன்னோடியானது எப்போது?

3. அம்பேத்கர் புத்தரும்அவரது தம்மமும்நூலை  எழுதவதற்கு ஆதாரங்களாக உள்ள நூல்கள் எவை?

4. மறுபிறப்பை அம்பேத்கர் நம்புவதாக சொல்லியிருக்கிறார். இதன் விளக்கத்தை, பின்நவீன வெளிச்சத்திலோ, அல்லது கவிதை முறையிலலோ கூட விளக்கலாம். (பதிலுக்கு அதே முறைகளில் விவாதமும் அமையும் )

5. பௌத்தத்தின் இன்றைய பெறுமதி என்ன?

6.புத்தரா கார்ல்மார்க்ஸா கட்டுரையில், மார்க்சியம் சம்பந்தமாக அவர் ஆய்வு செய்த நூல்கள் எவை எவை.?
           
7. புத்தர் தன் தந்தையின் சொத்துக்களைப் பறிமுதல் செய்துவிடாதீர்கள் என்று சொன்னதற்கான ஆதாரம் பௌத்த தத்துவ இயல்களில் எங்கு இருக்கிறது. அல்லது அது அம்பேத்கரின் அனுமானமா?

8. கடன் பட்டவரையும், சிப்பாய்களையும் மதத்தில் இணைத்துக் கொள்ள தடை விதித்ததன் பின்புலம் என்ன?

9. பார்ப்பனியம் அரசுடைமையாளர்களை சார்ந்து வளர்ந்தது போல், பௌத்தம் வளர்ந்தது எதனால்? அதன் பின்விளைவுகள் என்ன?

10.  “மதம் ஏழைகளுக்கு அவசியமானது. மதம் ஒடுக்கப்பட்டமக்களுக்கு அவசியமானது. ஒரு மனிதன் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ்கிறான். வாழ்க்கையின் ஆணிவேர், அடிவேர் நம்பிக்கையில்தான் பொதிந்துள்ளது. இந்த நம்பிக்கை இழக்கப்படுமானால் வாழ்க்கை என்னஆவது? மதம் நம்பிக்கையை அளிக்கிறது. ஒடுக்கப்பட்டமக்களுக்கு, ஏழை எளியமக்களுக்கு ஒருசெய்தியைக் கூறுகிறது. –பயப்படாதீர்கள், வாழ்க்கை நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கும், இது உறுதி என்று _ இதனால் தான் ஏழைகளும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களும் மதத்தைஅரவணைத்துக்கொள்கிறார்கள்.” இது அம்பேத்கர் கூறியது.

இது குறித்து உங்களது விவாதங்கள் என்ன?

11. புத்தரின் கையில்ஸ் வஸ்திக் முத்திரை இருந்தது என அம்பேத்கர் தன் நூலில் குறிப்பிடுகிறார். இது குறித்த ஆராய்ச்சிகள் என்ன? அது மட்டுமின்றி 33 மச்சங்கள் குறித்து அம்பேத்கர் விவரிக்க வேண்டிய அவசியம் என்ன?


12. காலாவதியான சிந்தாந்தம் என்று ஒன்றுண்டா, அப்படி காலாவதியானதன் தொடர்ச்சியாக காலாவதியாகாத எந்த சிந்தாந்தமும் தோன்றியதில்லையா? பௌத்தம் இன்னும் காலாவதியாகவில்லை என்று உறுதியாக சொல்ல முடியுமா?

நினைவூட்டல் ; 500 பக்க அளவுக்கு இழுத்துப்போகும் பெரும் கேள்விகளும்உண்டு.

மறுபடியும் அம்பேத்கருக்கு மார்க்சியம் தெரியும் என்ற ரீதியில் அம்பேத்கருக்குத் தெரியாத புடலங்கா மார்க்சியம் என எழுதிய பேராசிரியர் தனக்குத் தெரிந்த கத்தரிக்கா மார்க்சியத்தைக் கூடப் பேசலாம். மேலும் அம்பேத்கருக்குத் தெரிந்த புடலங்கா மார்க்சியத்தையும் விளக்கலாம்.

இதற்கு எல்லாம் மேலாக அம்பேத்கர் சாதியை ஒழிக்கும் வழியாக முன்னெடுத்த செயல்பாடுகளின் தாக்கம் அதன் விளைவு என்ன என்று விளக்கவேண்டும்.

அடையாள அரசியலுக்கும், தலித் முற்போக்கு அடையாளத்திற்கும் இருக்கும் பவுசு கண்டு தன்னை தலித்திய அறிவுஜீவியாய் முன்வைத்து நகர்வதோடு, அனைவரையும் ஆதிக்கசாதி எனச் சொல்லும் பிரேம் தனது சாதியை முன்வைத்து அவர் சாதிவெறியை எப்படிக் கடந்தார் என்று சொல்லும் பொறுப்பும் இருக்கிறது.

சொல்வாரா எனத் தெரியவில்லை.

“இந்நூலை அம்பேத்கர் எழுதி 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதுமட்டுமல்ல, அம்பேத்கர் லட்சோப லட்சம் மக்களுடன் தாம் வாழும் காலத்திலேயே சாதியை ஒழித்தும் 50 ஆண்டுகள்( 14.10.1956) நிறைவடைந்துவிட்டன. இருப்பினும், சாதியை ஒழிப்பது குறித்தும் -நாம் புதுப்புது வழிகளில் போராடிக்கொண்டும், விவாதித்துக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் அம்பேத்கரின் வழியை நாம் பின்பற்றினோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வதற்கான தருணத்தை இந்த நூலை மீண்டும் வெளியிடுவதன் மூலம் உருவாக்குகிறோம். -பக்- 5,6”

என்று தலித்முரசு வெளியிட்ட சாதியை ஒழிக்கும் வழி என்ற தலைப்பில் சரியாக மொழிபெயர்த்த நூலில் தலையங்கமாக முன்வைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் அம்பேத்கர் குறிப்பிட்ட தேதியில் எப்படி சாதியை ஒழித்தார் என்று விளக்கும் கடமையும் அவருக்கு இருக்கிறது.

டெல்லியில் உள்ள அடையாள அரசியலின் அரைவேக்காடு என்று நான் அவரைச் சொன்னால் அது ஆதிக்கசாதி வார்த்தை, அதையே அவர் மற்றவரை நோக்கிச் சொன்னால் அது கலகச் சொல்லாக மாறும் வித்தியாசங்களைக் கொண்டது. இதுதான் பின்நவீனத்துவம் என நான் புரிந்துகொள்கிறேன். அடையாள அரசியல் இப்பொழுது பேராசிரியரின் எழுத்துக்களில் வாழ்ந்து செழித்து,  பாசிசத்தில் தன்னை அடையாளமாய் நிலை நிறுத்தியிருக்கிறது. அடையாள அரசியலின் கடைப்புகலிடம் இதுவாகத்தான் இருக்கிறது.

தனது பேராசிரிய புத்தியை அறிவுஜீவி புத்தியாய் முன்வைப்பவரின் அகங்காரம் எத்தகைய மொழிகளை உள்ளடக்கியது என்பதை அனைவருக்கும் தானே காட்டித் தந்த அவருக்கு நன்றி.

எல்லாவற்றுக்கும் மேல காந்தியைக் கடந்த காந்தியம், மார்க்சைக் கடந்த மார்க்சியம் எனப் பிழைப்பை முன்வைப்பது போல் அம்பேத்கரைக் கடந்த அம்பேத்கரியம் என ஒன்று இருந்தால் அதை எழுதுங்கள்.

வாழ்க அகங்காரத்துடன்.
வளர்க அடையாள அரசியலுடன்...

சிறுகுறிப்பு ;

“விடுதலைச் சிறுத்தைகள் முறை” என்பதன் மூலம் பேராசிரியர் பிரேம் என்ன சொல்ல வருகிறார். அவர் விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் உறுப்பினர் என்று சொல்ல வருகிறாரா, இல்லை “வேறேதும்” சொல்ல விரும்புகிறாரா?

சொல்ல விரும்பிய ‘உளவியலுக்கு’ எனது பதில் இதுதன். நானோ, கொற்றவையோ  இப்பொழுது எந்தக் கட்சியிலும், அமைப்பிலும் உறுப்பினர்களாக இல்லை. எங்கள் பின் எந்தக் கூட்டமும் அமைப்பும் இல்லை. எங்களை எது செய்தாலும் கேட்க நாதியும் இல்லை. எங்கள் கையை ஊண்டி கரணம் அடித்தால்தான் எங்களுக்குக் கஞ்சி. மேலும் தமிழ் நாட்டில்தான் இருக்கிறோம். கொற்றவை பெங்களூரில் வேலை பார்க்கிறார். (சோற்றுக்கு வழி இன்றி போய்விடுமோ என்ற அச்சத்தில், கிடைத்த வேலையை பற்றிக் கொள்ள,  பெற்ற மகளைக் கூட இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தான் சந்திக்க முடிகிறது அவரால். இந்துத்துவ நிதி ஏதுமிருந்தால் வாராவாரம் ஃப்ளைட்டில் வந்து செல்ல முடியும், மேலும் தனியார் நிறுவனங்களில் லீவுக்கு LOP போகும், போக்கு வரத்து செலவு இதெல்லாம் இடிக்கிறது! ஆகவே இரண்டு வாரத்திற்கொரு முறை பஸ்ஸில் வந்து செல்லும் நிலையில் தான் எங்களை ஆர்.எஸ்.எஸ் வைத்துள்ளது. என்ன செய்வது!)

நான் தேனியில் இருக்கிறேன். சிக்ஸ் பேக் வைக்கும் முயற்சியில் உடலை கடுமையாக வருத்திக் கொண்டிருக்கிறேன். கஞ்சிக்கு கரணம் போட இதுவெல்லாம் எங்களுக்கு அவசியமாக இருக்கிறது.

வணக்கம் பேராசிரியர்.


No comments:

Post a Comment

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...