Wednesday, May 10, 2017

பகுத்தறிவின் கடவுள் - பகுதி III - ன் முடிவு
இத்தோடு, புத்தரின் அழகை அம்பேத்கர் முடித்துக் கொள்ளவில்லை. இதுவரை சொல்லியது போதாதென்று, அதற்கென “அவருடைய (புத்தருடைய) தனிப்பெருந் தோற்றத்தின் சிறப்பு” என்று ஒரு தனி அத்தியாயம் கொடுத்தே விளக்கியிருக்கிறார்.

சில பௌத்த இலக்கிய நூல்களின் கருத்துக்களை வைத்து புத்தரை, புனிதர், அழகு மிக வாய்ந்தவர் என்று தொடங்கும் அம்பேத்கர்,

‘பொன்மலைச் சிகரம் போன்ற வடிவம், உயரம், வலுமிக்கவர், மகிழ்ச்சி ததும்பும் தோற்றம், நெடிய தோள்கள், சிங்க நடை, வேழ நோக்கு, அவர் தம் அழகும், பொன்னென ஒளிரும் பரந்த நல் மார்பு,அவர் புருவம், நெற்றி, வாயிதழ்கள், உடலை, கரங்களை, நடையை, அவரது குரல் தனிச்சிறப்பான இனிமையுடையதாய், பேரிகையின் நாதமென ஈர்த்ததாய், வசீகரம் மிக்கதாய் துள்ளலும், தொய்வின்மையும் உடையதாய், அவர் குரலினிமை கேட்போரை பிணித்தது, அவர் தம் பார்வை வியந்து பணியத் தூண்டியது, அவர் யாது கூறுகிறார் என்பது கூட அத்துணை முக்கியமானதாயில்லை அவருரை கேட்டோர் எவரையும் தம் விருப்பிற்கீத்து உணர்வினை உந்துபவராயிருந்தார் அவர்’

என்று புத்தரின் அழகை சலிக்க சலிக்க, கூறியது கூறியே வர்ணித்துச் செல்கிறார். பகுத்தறிவை தள்ளிவைத்து ஒரு பக்தராய் மட்டுமே அம்பேத்கர் தன்னை முன்வைக்கிறார் என்பதை இங்கு நாம் மறுக்க முடியாது.

மேலும் மறுபடியும், ‘அவரை நேரில் கண்டவரின் சாட்சியம்’ என்று ஒரு தலைப்பில் மறுபடியும் புத்தரின் அங்க லட்சணங்களை கூறத் தொடங்குகிறார்.

அந்த முப்பத்திரண்டு அங்க அடையாளங்களும் புத்தருக்கிருப்பதை உறுதிபடுத்திக்கொண்ட பிராமணர் சாலே, புத்தர் உயர்பேரறிவெய்திவிட்டார இல்லையா என்பதை இன்னும் அறியாமலிருந்தார்.

சாலே அறிவு கெட்ட பிராமணர். இல்லையா, இல்லையென்றால் 32 அங்க லட்சணங்கள் இருக்கும் போதே அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். தெரியவில்லை. மேலும் புத்தரை சோதிக்க எண்ணுகிறார், ஆனால் 32 அங்க லட்சணங்களை புத்தர் குழந்தையாய் இருந்தபோதே  பார்த்துக் கணித்த அசித்தர் கெட்டிக்கார பிராமணர். ஆம் புத்தர் பிறந்த போது நாற்பது பற்களுடன் பிறந்தார்.

இந்த, 32 அங்க லட்சணங்களைக் கண்டும் நம்பாத அந்த பிராமணர் சாலே, புத்தரை ஞானவான், மாமனிதர், புனிதர்தான், புத்தர்தான் என  எதை வைத்து உறுதியாக நம்புகிறார் என்று தெரியுமா?

“மூத்த முதிய பிராமணர்களும், குருக்களின் குருக்களும், அரஹத்களானோரும், உயர்பேரறிவெய்திய அனைவரும் தம்மைத் தாமே போற்றிப்புகழ்ந்து பாடி தம்மை வெளிப்படுத்துவர் என்று தான் கேள்வியுற்றதை நினைவுக்குக் கொண்டு வந்து அதன் மூலம் உயர்வெய்தியவர் என உணர்ந்து, கீழ்க்கண்ட புகழ்மொழிகளால், புத்தரை நேருக்கு நேர் மெச்சிப் புகழலானார்.”

என்கிறார் அம்பேத்கர்.

இதிலிருந்து தம்மைத்தாமே போற்றிப் புகழ்ந்துபாடி வெளிப்படுத்துபவரை, நாம் ஞானவான் என்றும் உயர்வெய்தியவர் என்றும், மூத்த முதிய பிராமணர்கள் என்றும் புத்தர் என்றும் தாரளமாக நம்பலாம் என அம்பேத்கர் முன்மொழிவதை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியவில்லை. புத்தர் கூட தம்மைத் தாமே எங்காவது போற்றிப் புகழ்ந்து பாடி தன்னை வெளிப்படுத்தியுள்ளாரா? இதோடு சாலே என்ற அந்த பிராமணர் புத்தரை நோக்கி...

ஐயன்மீர்! உம்முடல் அழகுற மிகப் பொருத்தமுற அமைந்து வளர்ந்துள்ளது; முத்துப்பற்களும், முழுநிறைவு உடலழகும் ஒவ்வொரு அங்க அடையாளமும் உம்மை மாமனிதரெனவே தெளிபடுத்துகின்றது.

தெள்ளிய கண்களும், தெளிவுறு அழகும், பொருந்திய உயரமும், நேர்கொண்ட பார்வையும், சோதரர் இடையொரு சூரியப் பேரொளியாய், மிகுந்த மரியாதைக்குரியவராய், மிக்கினியக் குரல்வளம் உடையவராய் உள்ள நீவீர் ஏன் வீட்டைத் துறக்கும் நிலையேற்று, அழகின் அரும்பும் பருவத்தை வீணாக்கினீர்கள்.

உலகப் பேரரசராய் நாட்டில் உலாவர வேண்டியவர் நீங்கள்,; ஒரு கரையினின்று மறுகரைவரை கடலெல்லாம் உமது ஆளுகைக்குட்பட்டிருக்கவேண்டும். தங்கள் அரசாட்சியின் கீழுள்ள குறுமன்னரெல்லாம் பெருமிதம் கொள்ள வேண்டும். மானுடத்தை, அரசருக்கரசராய், நீவீர் ஆளவேண்டும்.

என நேருக்கு நேராக புகழ்வதாக அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

இந்த இடத்தில் நேரில் 32 அங்க லட்சணங்களைக் கண்டு சந்தேகப்பட்டு, கேள்விப்பட்டதை வைத்து புகழும் சாலே என்ற அந்த பிராமணனைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும். ஆனால் அம்பேத்கர் இதைத் துணிந்து கூறுகிறார்.

மேலும் 32 அங்க லட்சணங்கள் உள்ளவர் ஞானத்தை அடைந்த பின்னும், அவரை மன்னாதி மன்னராக வேண்டும். மற்றவர்களெல்லாம் அவருக்குக் கீழ் குறுமன்னராக வேண்டுமென விரும்பும் பிராமணர் சாலே, எதுவும் அறியாதவர் என்று இதன் மூலம் தெரிகிறது.

இதற்கும் மேலாக தன்னை ஒருவர் இப்படி நேருக்கு நேர் புகழ, புத்தர் அதை அமைதியாக தலையாட்டிக் கேட்டுக்கொண்டிருந்தார் என நம்பவேண்டும் என்கிறாரா அம்பேத்கர்.

அடுத்தபடியாக ‘அம்பேத்கரது’ ஆனந்தர் புகழ்கிறார்.

புத்தரின் மேனிநிறத்தை மிகமிகத் தூயதும், மிக மிக ஒளிமயமானதும் ஆகும் என்றும் ஒரு ஜோடி பொன்னுடைகள் உயர்வெய்திய புத்தரால் அணியப்பட்டால், அவை தம் அழகினை இழக்குமென தோன்றுவதாகவும் வர்ணிக்கிறார்.

இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் முடிவு, பகுத்தறிவாளர் புத்தரை அதிமனிதராகவும். கடவுள் ஸ்தானத்துக்கும் அம்பேத்கர் ஏற்றிப் புகழ்கிறார். மற்றவர்களும் அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டுமென வற்புறுத்தவும் செய்கிறார்.

இதோடு, புத்தர் பரிவ்ராஜகம் மேற்கொண்ட துக்கத்தை தாங்கமுடியாத அவரது சிற்றன்னை கௌதமி

ஓ ! அவருடைய அந்த இரு அழகிய பாதங்கள்- முன்பகுதி பேரழகாய் இணைக்கப்பட்டிருக்குமே- கணுக்காலும் அத மிருதுவான மறைவும், நீலத்தாமரை மலரெனத் திகழுமே, மத்தியில் சக்கர மகிமை பொருந்திய அவை, வனத்தின் கடினத் தரைகளில் எப்படி நடப்பது”

என்று அழுவதாக அம்பேத்கர் சொல்லுகிறார். மேலும்,

“.....அப்போது அவர் (அம்பத்தா) அவருடைய (புத்தருடைய) உடம்பில் மகான்களின் உடம்பில் காணப்படும் முப்பத்திரண்டு அடையாளங்கள் உள்ளனவா இல்லையா என்று கவனித்துப் பார்த்தார். அவற்றில் இரண்டு தவிர மற்ற அனைத்தும் இருப்பதை அவர் கண்டார்.”

“ அவர் இவ்வாறு சந்தேகக் குழப்பத்தில் இருப்பதை புத்தபிரான் அறிந்தார். அப்போது அவர் தம்முடைய அற்புத சக்தியின் மூலம் அவற்றைக் கண்டு கொள்ளச் செய்தார். ஆடையால் மறைக்க வேண்டிய உறுப்பு ஒரு உறையால் மூடப்பட்டிருப்பதைக் கண்டார், புத்த பிரான் நாக்கை நீட்டி அதைக் கொண்டு, தமது இரண்டு காதுகளையும், மூக்கு துவாரங்களையும், நெற்றியையும் தொட்டார்.”

மேலும் இதே சந்தேகம் போக்கர்சாதி  என்பவருக்கும் வந்து,

“....போக்கர்சாதி புத்தபிரானின் உடம்பில் மகானுக்குரிய முப்பத்திரண்டு அடையாளங்கள் உள்ளனவா என்று கவனித்தார். அவற்றில் இரண்டைத்தவிர மற்றவையெல்லாம் இருப்பதைக் கண்டார். அந்த இரண்டைப் பற்றியும் அவருக்கிருந்த சந்தேகத்தை புத்த பிரான் அம்பத்தாவுக்கு தீர்த்து வைத்தது போலவே தீர்த்தும் வைத்தார்”


என்ற அம்பேத்கர், தனது குதிரையான கந்தகத்தை சித்தார்த்தர் வருந்திப் பிரிவதை விவரிக்கும் போது,

ஐவிரலும் அகன்று மெல்லென விரிந்து சற்றே நடுப்பகுதி வளைவுற்ற அரிய ஸ்வஸ்திக் சின்னம் உடையதாயிருந்த தம் அழகுக் கரத்தால், கௌதமர் அதை அன்புடன் தடவிக்கொடுத்தபடியே நண்பரிடம் கூறுவது போல் கூறினார்.

இந்த சக்கர மகிமை போன்ற மற்ற வர்ணனைகளும் 32 அங்க லட்சணங்களும் லக்கண சூத்திரத்தில் குறிக்கப்பெற்றிருக்கிறது. இப்படி அங்க லட்சண சாஸ்திரங்களை முன்வைத்து புத்தரை கடவுளாகக் காணும் போக்கென்பது, முற்போக்கு பௌத்தத்திற்கு உரியதல்ல. மஹாயானத்திற்கே உரியது. அந்த 32 அங்க லட்சணங்கள் என்னவென்று பார்த்தால் அது பகுத்தறிவை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. புத்தரை அந்த பகுத்தறிவாளரை பகுத்தறிவின் கடவுளாக அம்பேத்கர் முன்வைக்கிறார். அதை சந்தேகிக்கக் கூடாதென்பதற்காக பல இடங்களில் அதை வலுவாக முன்வைக்கவும் செய்கிறார்.


லக்கண சூத்திரமானது 32 அங்க லட்சணங்களில் ஒன்றாக புத்தர் போன்ற உயர்வெய்திய, அதிமனிதர்களாயிருப்போருக்கெல்லாம், மூத்த முதிய பிராமணர்களுக்கெல்லாம்  40 பற்கள் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. புத்தர் பிறந்த போதே நாற்பது பற்களுடன் பிறந்திருக்கிறார். புத்தர் குழந்தையாய் பிறந்தபோது அசிதர் அத்தனை பற்களையும் எண்ணிப் பார்த்திருக்கிறார். அதை அம்பேத்கரும் பல இடங்களில் பெருமையுடன் விவரிக்கிறார்.
   
இந்த அடிப்படையை முன் வைத்து நாம் வரும் முடிவு, அம்பேத்கர் புத்தரை பகுத்தறிவாளராக ஏற்றுக்கொள்ளவில்லை. பௌத்தம் சொல்லும் பகுத்தறிவு மரபையும் ஏற்றவரல்ல, அவர் நவயானியும் அல்ல.

‘பிறப்பாலும் வம்சத்தாலும் கிடைக்கும் கௌரவம் புத்தரது போதனைகளுக்கு எதிரானது...” “மிக உயர்ந்த ஞானம், உயரொழுக்க நெறி பெற்றவர்களுக்குப் பிறப்பால் வரும் கர்வம் அல்லது வம்சத்தால் வரும் கர்வம் என்பது கிடையாது...”**

என்ற புத்தரை, சிங்கக்கொடி, சீரியகுலம் எனப் பிம்பிசாரனின் குலப்பெருமையைப் புகழ்ந்து பேச வைத்த அம்பேத்கர் ஒரு மஹாயானி. மஹாயானி மட்டுமே.


No comments:

Post a Comment

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...