Saturday, June 17, 2017

புத்தர்- அம்பேத்கர்-மார்க்ஸ். - செ.சண்முகசுந்தரத்திற்கான எதிர்வினை.புத்தர் அம்பேத்கர் மார்க்ஸ் என்ற தலைப்பில் செ. சண்முக சுந்தரம் எழுதி காலச்சுவட்டில் வெளிவந்த கட்டுரைக்கான எதிர்வினை.

செ.சண்முகசுந்தரம் தனது கட்டுரை (என் வரையில் ஒரு அடையாளத்துக்காக) முழுக்க அம்பேத்கரை பரிதாபப்படவேண்டியவர் என்ற அளவிலேயே நிலை நிறுத்த விரும்புகிறார். அம்பேத்கர் பாவம் அவரை யாரும் விமர்சிக்கக் கூடாது. அவர் என்ன செய்வார் என்கிற பரிதாபத் தொனியையே முன்வைத்து நகர்கிறார்.

அம்பேத்கரின் எழுத்துக்கள் குறித்து, விமர்சன நூலாக வந்திருப்பது மகிழ்ச்சி என்றவர், அடுத்த நொடியிலேயே அம்பேத்கர் மீது சேற்றை வாரி இறைக்கும் முயற்சியிலும் நூல் ஈடுபட்டிருக்கிறது என்கிறார். ஆனால் அப்படி சேற்றை வாரியிறைத்திருப்பது செ.சண்முகசுந்தரம் தானேயொழிய ரங்கநாயகம்மா இல்லை. 

பொதுவாக அம்பேத்கரை உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் கதாநாயகனாக அணுகும் எவரும் செய்யும் காரியத்தையே சண்முகசுந்தரமும் செய்திருக்கிறார். மேலும், நாட்டின் இப்போதைய இந்துத்துவச் சூழலையெல்லாம் சுட்டிக்காட்டுவதன் மூலம், நூல் என்னவோ இப்பொழுதுதான் வந்தது போல் ஒரு போலியான தோற்றத்தையும் சம்பந்தமில்லாமல் கொடுப்பதோடு, உடனே கல்விப் புலத்தில் இப்படிப் புத்தகங்கள் வருவது நல்லதுதான் என தான் சொன்ன கருத்துக்களைத் தானே மறுத்து மறுத்து பேசியிருக்கிறார்.

முதலாவதாக அம்பேத்கர் புத்தரா கார்ல் மார்க்ஸா கட்டுரை குறித்து சண்முக சுந்தரம் விதந்து ஓதி பல வியாக்கியானங்களைச் சொல்லியிருக்கிறார். அது அவருடைய விருப்பமாக இருக்கலாம். ஆனால் அதில் மார்க்ஸையும், மார்க்ஸியத்தையும் மிக நுணுக்கமாக ,அதே சமயம் மிக எளிமையாகவும் அம்பேத்கர் விளக்கியிருக்கிறார் என்று சொல்லும்போது, சம்பந்தப்பட்ட சண்முகசுந்தரம் அம்பேத்கரையும் படிக்கவில்லை, மார்க்ஸையும் படிக்கவில்லை என்பது தெளிவாகப் புலனாகிறது. 

மார்க்ஸின் மேற்கோள்களை வைத்து, மார்க்சியமே இதுதான் என்ற பார்வை அம்பேத்கருக்கு இருந்தது போல், இவருக்கும் இருந்தால் மார்க்சியம் என்ன செய்யும். அம்பேத்கருக்கு மார்க்சியம் தெரியுமா என்பது போன்ற ஆய்வுகள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டவை. இன்னும் முறையான பதில்கள் வராதவை. 

அம்பேத்கருக்கு தெரிந்த மார்க்சியம்,  “பாடப்புத்தக மார்க்சியம்” என முக்கிய மார்க்சிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை  சுட்டிக்காட்டியிருப்பதை அவர் ஒருமுறை படித்துப்பார்க்கலாம். (இப்போது அவர் எதில் அறிஞர் என்று அவருக்கே வெளிச்சம்) அதே போல், அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் முக்கிய மார்க்சிய புத்தகங்கள் எதுவும் வரவில்லை என அருணன் அளந்து விட்டதையாவது தேடிப்பார்க்கலாம்.

அம்பேத்கருக்கு மார்க்சியம் தெரியாதது ஒரு குற்றமே அல்ல. ஆனால் தெரியாத ஒன்றை அவர் விமர்சிக்கும் போதுதான் அது குறித்து அவர் அறிந்து பேசியிருக்கிறாரா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.அது தவிர்க்கமுடியாததும் கூட.

சண்முக சுந்தரம் அம்பேத்கருக்கு மார்க்சியம் தெரியும் என்பதை அம்பேத்கரே சொல்லிவிட்டார், இதனால் ரங்கநாயகம்மா கேள்வி எழுப்பத் தேவையில்லை எனவும், அப்படி கேள்வி கேட்பதே அம்பேத்கரை எள்ளல் செய்வது போல் உள்ளதாகவும் தனது ஆழமான கருத்தை முன்வைக்கிறார். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 

நான் கூட அம்பேத்கரை விட அதிகம் படித்திருக்கிறேன். என்று சொல்வதன் மூலம் அதையும் நம்பும் துர்பாக்கியம் சண்முகசுந்தரத்துக்கு வாய்க்குமே என நினைக்கும் போது மனம் சற்று கவலையடைகிறது. ஒருவர் படித்துவிட்டேன் எனச் சொன்னதாலேயே அதை அப்படியே நம்புவது, படித்து ஆய்ந்து கட்டுரை எழுதும் ஒருவருக்கு அழகல்ல. மேலும் “ “கார்ல் மார்க்ஸுக்கு முன்னரே புத்தர் கம்யூனிசம் பேசினார்” என்று அம்பேத்கர் இந்தக் கட்டுரையில் சொல்வதாக ரங்கநாயகம்மா குறிப்பிடுகிறார்.(பக் 290) அப்படி அம்பேத்கர் எதுவும் சொல்லவில்லை.” என்று ஆணித்தரமாகச் சொல்வதோடு கட்டுரைகளிலிருந்து அம்பேத்கர் கார்ல் மார்க்ஸ் குறித்துச் சொன்ன வார்த்தைகளை பெருமிதத்தோடு எடுத்துப் போடுகிறார்.

ஆனால், அம்பேத்கர் அப்படிச் சொல்லியிருக்கிறார். அழுத்தமாகச் சொன்னால், கார்ல் மார்க்ஸ் சொல்வதற்கு 2000 வருடத்துக்கு முன்னமே புத்தர் சொல்லியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

அம்பேத்கரது பௌத்தம் குறித்த பேச்சுக்களை இன்னும் கொஞ்சம் ஆழமாகப்  படிக்க வேண்டும் என ண்முகசுந்தரம்  அவர்களை ஒரு மாணவனாகக் கேட்டுக்கொள்கிறேன். மறுபிறப்பை நிருபிப்பேன் என விஞ்ஞானிகளுக்கு சவால் விட்ட அம்பேத்கரையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் அம்பேத்கர் கம்யூனிசம் குறித்தும், மார்க்சியம் குறித்து வைத்த விமர்சனங்களிலிருந்து, அம்பேத்கரது கம்யூனிசம் என்ன வகையான கம்யூனிசம் என்பதையும் விளக்க வேண்டுமென விரும்புகிறேன்.

ரங்கநாயகம்மா தனது வாதங்களை அம்பேத்கரின் வாதங்களிலிருந்து விமர்சனங்களிலிருந்து நேரடியாக எடுத்து வைத்திருக்க, அம்பேத்கர் பேசியதை அப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது இப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதோடும், சொல்விளையாட்டு போன்ற வியாக்கியானத்தை மட்டும் முன்வைத்து அம்பேத்கரை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என சண்முகசுந்தரம் வாதிடுகிறார். இது சரியான விவாத முறையல்ல.

மேலும் புத்தரா கார்ல்மார்க்ஸா ஒப்பீடு குறித்து அம்பேத்கரே சொல்லிவிட்டார் அதனால் ரங்கநாயகம்மா அதையும் கேள்வி கேட்கத் தேவையில்லை என்கிறார்.

‘’மார்க்சியம் பற்றிய அவரது எழுத்துகளைப் படிக்கும்போது, பூர்ஷுவா சமூகவியலாளர்களின் மேம்போக்கான விமர்சனங்கள் மற்றும் மேற்கோள்களைத் தாண்டி மார்க்சிய மூல நூல்கள் ஒன்றைக் கூட அவர் படித்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் விளக்கியது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் அல்ல. சோஷலிசம் மற்றும் கம்யூனிசம் இடையிலான வேறுபாடுகளைக் கூட அவர் அறிந்திருக்கவில்லை.  அரசின் வர்க்க குணாம்சத்தைப் புரிந்துகொள்ளத் தவறியதால், விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் தேசியமயமாக்கப்பட்டாலும், அரசின் வர்க்கப் பண்பு பூர்ஷுவா பண்பாக இருக்கும் பட்சத்தில், அது சோஷலிசமாக இருக்க முடியாது, அது அரச ஏகபோக முதலாளித்துவமாகவே இருக்கும் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு வர்க்கத்தின் அரசை பலவந்தமாக தூக்கி எறிவதன் மூலமே மற்றொரு வர்க்க ஆட்சியை நிறுவ முடியும் என்பதையும் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.’’

மார்க்சின் மேற்கோள்கோள்களையே மார்க்சியம் என சண்முகசுந்தரமும் நம்பியிருக்கிறார் என்றால், அவர் அம்பேத்கர் வழியாகத்தான் மார்க்சியம் கற்றிருக்கிறார் என்றே படுகிறது. தான் கற்றதாக நினைத்து அம்பேத்கர் விமர்சித்த மார்க்சியத்தைக் கற்றால் இது போன்ற பிரச்சினைகள் வரும் என்பதை நாம் மறுக்கமுடியாது. அம்பேத்கரின் மார்க்சியப் புரிதலை

வரலாற்றில், எந்த ஒரு வர்க்கமும் அமைதியான முறையில் தம் அதிகாரத்தை தாரை வார்த்துக் கொடுத்ததில்லை. வர்க்கப் போராட்டத்தில் வன்முறை என்பது இன்றியமையாததே அன்றி, எவருடைய விருப்பமும் அல்ல. கம்யூனிஸ்டுகள் வன்முறை குறித்து பேசும்போது அவர்கள் தனிநபர் வன்முறையைக் குறிப்பதில்லை, மாறாக, அது வர்க்க வன்முறை, பலவந்த முறைகளைக் கைகொண்டு அதிகாரத்தில் இருக்கும், பலவந்த முறையில் இயங்கும்,  பலவந்த முறையில் பரமாரிக்கப்படும் அரசை பலவந்தமாக தகர்ப்பது என்று பொருளாகும். (ஆனால், இந்த நடைமுறையில் வன்முறைக்கு அவசியமில்லாமல் போனால்,  வன்முறை என்பது தத்துவார்த்த அளவோடு நின்று விடும்). அதேபோல், அம்பேத்கர் ஒரு பொருளாதார அறிஞராக இருந்தும், சரக்கு உற்பத்தி முறை, உபரியை அபகரித்தல்  அல்லது மூலதனத் திரட்டல் பற்றிய மார்க்சிய விளக்கங்களைக் குறித்து ஏதும் அறிந்திருக்கவில்லை. பொருளாதார அடித்தளம் (உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம்) மற்றும் மேற்கட்டுமானத்திற்கும் இடையிலான இயங்கியல் தொடர்பு பற்றியோ, உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள் இடையிலான தொடர் போராட்டத்தின் காரணமாக ஏற்படும் அளவுரீதியான பாய்ச்சல் பற்றியோ, உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகளை தகர்ப்பதன் விளைவாக புதியதொரு உற்பத்தி முறை நிறுவப்படுவதே சமூகப் புரட்சி என்னும் விளக்கத்தையும் அவர் சுத்தமாக அறிந்திருக்கவில்லை.

அம்பேத்கரது மார்க்சியம் அவரது மார்க்சியம் பற்றின அனுமானங்களே தவிர, அதுதான் மார்க்சியம் என்று சண்முகசுந்தரம் நம்பலாம். ஆனால் அம்பேத்கரை இதை வைத்து அரைவேக்காடு எனச் சொல்வது ரங்கநாயகம்மா அல்ல, சண்முகசுந்தரமே. ரங்கநாயகமாவின் நூலை முழுதாகப் படிக்கும் முன்னரே இதை எதிர்த்தே எழுதவேண்டும் என்கிற மனநிலையே அவருக்கு வாய்த்திருக்கிறது. இதே மனநிலைதான் அம்பேத்கருக்கு மார்க்சியத்தின் மீதும் இருந்திருக்கிறது. விசயம் அவ்வளவே.

மேலும் போகிற போக்கில் ரங்கநாயகம்மா அம்பேத்கரை கற்பனாவாத சோஷலிஸ்ட் என்று வேண்டுமானால் அழைத்திருக்கலாம் என ரங்கநாயகம்மாவுக்கு சலுகையும் அளிக்கிறார். சம்பந்தப்பட்ட சண்முகம் சுந்தரம், ஒரு நூலை படிக்கும் முறை குறித்து அறிவதோடு மட்டும் நில்லாது, படித்து ஆய்ந்து அதன் பின் எழுதலாமா என யோசித்து எழுதலாம் என்பதே அவருக்கு நான் நினைவூட்டும் சலுகை.

மார்க்சியம் முறித்த அம்பேத்கரது புரிதல்கள் பிழையானவை

ஒரு சாமானிய எழுத்தரைப் போல், மார்க்சியத்தை பொருளாதார நிர்ணயவாதம் - உண்மையில், இயந்திரத்தனமான பொருள்முதல்வாததின் விளைவான பொருளாதார நிர்ணயவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தோன்றிய மார்க்சியத்தை - என குற்றம் சாட்டுகிறார்; மார்க்சியர்கள் மனிதர்களை வெறும் பொருளாதார விலங்குகளாகவே கருதுகின்றனர் என்கிறார். மார்க்சியம் சொல்வது இதுதான்: உற்பத்தி நடவடிக்கைகள் என்பது மனித நடவடிக்கைகளின் அடிப்படையாகும், அதனால் அவர்கள் உற்பத்தி உறவுகளாக பிணைப்புக்குள்ளாகிறார்கள்.  இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கும், அதன் மேல் அரசியல்-கருத்தியல்-கலாச்சார-சமூக நிறுவனங்கள் ஆகிய மாபெரும் தூண்கள் கட்டியெழுப்பப்படுகின்றன. கட்டியெழுப்பப்பட்டதும், அந்த மேற்கட்டுமானமானது சுதந்திர நகர்ச்சியைப் பெற்றுவிடும். சுழற்சியில், அது அடிக்கட்டுமானத்திலும் செல்வாக்கு செலுத்தும், புதிய அடித்தளத்திற்கும், புதிய மேற்கட்டுமானத்துக்கும் இடையிலான மோதல் தொடரும். சோஷலிசத்திற்கு மாறும் கட்டம் முழுவதிலும், பல்வேறு வகையான முதலாளித்துவ அடிக்கட்டுமானங்கள் எஞ்சியிருக்கும், மாற்றத்திற்கான தொடர் முறையிலான நீடித்த  நடைமுறையுடன், பழைய மேற்கட்டுமானத்தோடு தொடர்ந்து போராட்டங்களும் நிகழும். இந்த  திட்டங்கள் பற்றி ஏதுமறியாததால், அம்பேத்கர் 1938இல் ஜனதாவில் எழுதிய ஒரு கட்டுரையில், கலாச்சாரம் மற்றும் மதமெனும் தூண்கள் பொருளாதார அடித்தளத்தின் மேல் நிலவுகிறது என்றால், அடித்தளத்தைத் தகர்கக வேண்டுமெனில், முதலில் தூண்களைத் தகர்க்க வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாக கருத்து தெரிவித்தார். இந்தக் கருத்தையும் ஏதும் புரியாமலேயே தெரிவித்திருக்கிறார். கம்யூனிசமும், பொருளாதார அடித்தளத்தைத் தகர்க்க - மக்களின் வர்க்க உணர்வை தட்டி எழுப்பி, அரசை தகர்ப்பதற்காக அணிதிரட்டப்படும் வரை - அரசியல் பொருளாதார பரப்புரையுடன் - முதலில், மேற்கட்டுமானத்தின் மைய அரசியல் நிறுவனமான அரசை தகர்க்க வேண்டும், மதச்-சட்டங்கள், மதிப்பீடுகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்திற்கும் எதிராகப் போராட்டம் தொடுக்கப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறது. 

இதற்கப்பால், புத்தரும் மார்க்ஸும் ஒண்ணு இதை அறியாதவன் வாயில மண்ணு என்பதைப் போல் சண்முகசுந்தரம்

“ ‘புத்தர் தனது காலத்தில் ஊர் ஊராகச் சுற்றி எதைப் போதித்தாரோ அதையே மார்க்ஸ் 17 வயதில் எழுதினார். இவ்விருவரது நோக்கமும் இதுதான்; “மானுடகுலம் உய்விக்க உழைக்கவேண்டும்” மார்க்ஸைப் பிற அறிஞர்களோடும் ஞானிகளோடும் ஒப்பீடுவதற்கு பணத்தை அளவு கோலாகக் கொள்ளும் நூலாசிரியர் , மானுட குலத்திற்கு உழைத்தல் என்னும் உயரிய நோக்கத்தை ஏன் அளவுகோலாக எடுத்துக்கொள்ளக் கூடாது?”

என்று அற்புதமான கேள்வியொன்றை அவரது மார்க்சிய பௌத்த புரிதலின்படி முன்வைத்திருக்கிறார். புத்தரையும் மார்க்சையும் ஒன்றுபடுத்தி இணைக்கிறார். தயவுசெய்து புத்தர் ஒட்டுண்ணியா என்கிற ரங்கநாயகம்மாவின் அத்தியாயத்தை மறுபடி படிக்குமாறு அவரை நான் கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன். உழைப்பு என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள சிரமப்படுவதுடன், அதை மார்க்சுடன் புத்தரை இணைக்கும் வழியாக விளக்க முயல்வது எவ்வளவு பெரிய அபத்தம். 

மார்க்சியம் மனிதர்களை வெறும் “பொருளாதார விலங்குகளாகக்” கருவதாகச் சொல்லி, அதனை மறுக்கும்விதமாக எந்தவொரு சிவில் சமூகத்திலும் மதம் என்பது அவசியம் என்றார். அம்பேத்கரின் இந்த “சிவில் சமூகம்” என்பது, ஹெகலின் சிவில் சமூக கருத்துருக்கு மட்டுமின்றி, சமூக-அரசியல் மட்டத்தில் மதத்தின் இருப்பை முற்றிலுமாக நிராகரித்த கருத்தியல் வடிவிலான பகுத்தறிவு மனநிலையினைக் கொண்டிருந்த லோக்கே, ரூசோ போன்றவர்களின் சிவில் சமூக கருத்துருவுக்கும் கூட நெருக்கத்தில் இல்லை. உண்மையில், மதத்தின் வரலாற்று வளர்ச்சி குறித்தோ, திட்டவட்டமான சூழ்நிலைகளில் மதத்தின் உருவாக்கம் குறித்த மார்க்ஸுக்கு முந்தைய, புரட்சிகர பொருள்முதல்வாத பூர்ஷுவா சிந்தனையாளர்களின் சிந்தனைகளைப் பற்றி கூட அம்பேத்கர் அறிந்திருக்கவில்லை.

மதம் என்பது ஏதோ, மனிதர்களுக்கும் மேலானதாக, வழிகாட்டும் நெறியாகக்  விஷயத்தில் அம்பேத்கரும் காந்தியைப் போல் ஒரு பழைமைவாதியே. இந்துமதத்தை விட மேலான ஒரு மதம்தான் அவருக்குத் தேவைப்பட்டது, அதைத்தேடி இறுதியில் 2000 வருடம் பழமை வாய்ந்த புராதன பௌத்த மதத்தைக் கண்டடைந்தார். பிராமணிய எதிர்ப்புடைய பண்டைய பொருளாயத தத்துவங்களான ஆசீவகம், லோகாயதம் அல்லது சாங்கிய மதங்களைத் தேடி அவர் செல்லவில்லை. ஏனென்றால் அவை ஒழுங்கமைக்கப்பட்ட மதங்கள் இல்லை. அம்பேத்கரின் ஆன்மீக வெறுமையே, மதம் ஒன்று மட்டுமே ஆன்மீக செல்வம் எனக் கருதக் காரணம்.  மனிதர்களை வெறும்பொருளாதார விலங்குஎன்று கருத்துவதற்கெல்லாம் அப்பால், மார்க்சியமானது ஆன்மீக செல்வமற்ற மனிதரை மனிதர் எனும் தகுதியைப் பூர்த்தி செய்யாத ஒருவராகவே கருதுகிறது; பெரும்பான்மை உழைக்கும் மக்கள் உயிர் வாழ்வதற்காகக் கூட கடுமையாக உழைத்து துன்புறும் நிலையில், ஆன்மீக செல்வம் மறுக்கப்பட்டு ஒருபுறமிருக்க, மறுபுறம் ஒட்டுண்ணி வர்க்கங்களோ உழைப்பெனும் இயற்கையான மனிதப் பண்பற்றவர்களாக, ஆன்மீக செல்வத்தின் பேரால் காமம் மற்றும் போகத்தில் திளைக்கும் சீரழிந்த கலாச்சாரத்தை கடைபிடித்து வாழும் ஒரு நிலையை அனுமதிக்கும் சமூக அமைப்பை ஒழிக்க வேண்டும் என்பதே அதன் கொள்கை. கலாச்சாரம், கலை-இலக்கியம், இசை, தத்துவம் இவையனைத்தையும் ஆன்மீக செல்வங்கள், மனித சாரம் என்றே மார்க்சியம் கருதுகிறது. “1844 ஆண்டின் பொருளாதார மெய்யியல் கையேடு”, “புனிதக் குடும்பம்”, ‘ஜெர்மன் தத்துவம்’, ‘அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு’ (’க்ருண்ட்ரிஷேஅவரது வாழ்நாளில் பதிப்பிக்கப்படவில்லை) போன்ற மார்க்ஸ், எங்கெல்ஸின் நூல்களை அவர் படித்திருந்தால், ‘மூலதனத்தில்அங்கிங்கு வரும் குறிப்புகளை அவர் படித்திருந்தால், 1950 வரை வெளிவந்த லெனின், ஸ்டாலின், மாவோ, கார்க்கி, லுனாச்சார்ஸ்கி, ப்ரெக்ட், லூக்காஸ், வோரோவ்ஸ்கி, வொரொன்ஸ்கி  போன்ற டஜன் கணக்கானவர்களால் இயற்றப்பட்ட மொழியியல் கோட்பாடு பற்றிய படைப்புகள், இலக்கியம், கலை, இசை மற்றும் சோஷலிச கலை இலக்கிய, இசை, சினிமாத் துறையில் நடந்த பரிசோதனை முயற்சிகள் எல்லாம் பற்றி நூற்றில் ஒரு பங்காவது அறிந்திருந்தால் மார்க்சியத்தின் ஆன்மீக செல்வம் பற்றிய அவரது பார்வை இத்தனை மேலோட்டமாக இருந்திருக்காது.

புத்தர் எப்படி உழைத்தார், யாருடைய நலனுக்கு உழைத்தார் என்பது குறித்தும் ஆய்வுகள் இருக்கின்றன. கோசாம்பி தொடங்கி, ராகுல சாங்கிருத்தியாயன், சர்மா என அறிவில் சிறந்தோர் சிலர் எழுதியிருக்கின்றனர். படியுங்கள் அய்யா.

சமீபத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஒரு தமுஎகச முற்போக்குக் கொழுந்து “மார்க்ஸும் உழைக்கவில்லை, புத்தரும் உழைக்கவில்லை... சேற்றை வாரியிறையிங்கள்” என்று அற்புதமான தனது அறியாமையை முகநூலில் இட்டிருந்தார். நெஞ்சம் அடைந்த பதற்றத்திற்கு அளவேயில்லை. தனது வரிகளில் சேற்றை வாரியிரைத்துவிட்டு இன்னும் யாரை எதில், சேறை அடிக்கச் சொல்கிறார் என்றும் புரியவில்லை.

இவர்களது பாணியில் ஒன்று சொல்வதாக இருந்தால், ஜக்கி வாசுதேவும் உழைக்கவில்லை. தமுஎகசவை வழிநடத்தும் கட்சியான, சி.பி.எம் மின் மாநிலச் செயலாளர் என். ராமகிருஷ்ணனும் உழைக்கவில்லை. புத்தம் சரணம் கச்சாமி, கம்யூனிசம் சரணம் கச்சாமி. சங்கம் சரணம் கச்சாமி. கட்சி சரணம் கச்சாமி... அச்சா....?

ரங்கநாயகம்மாவிடம் அறிவுநாணயத்தை எதிர்பார்க்கும் தகுதி சண்முகத்துக்கு கிஞ்சித்தும் இல்லை என்பது அவரது எழுத்துக்களிலேயே தெரிகிறது. மார்க்ஸ் தத்துவம் குறித்து வைத்த வார்த்தைகளை வைத்து, அந்த நாலுவரியே ஒட்டுமொத்த மார்க்சியம் என அம்பேத்கரும் நம்பினார், நானும் நம்புவேன் என்றால் அது மார்க்சியத்தின் ஆனா ஆவண்ணா என்றுதான் ரங்கநாயகம்மா சொல்லுவார். ஒரு வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் விளக்கக் கூறுகளை கூட ஏற்க மறுக்கும் மூளை நோகா ஞானத்தின் யாருக்கு என்ன பயன்.

இது எல்லாம் போக, போகிற போக்கில் சண்முகசுந்தரம் தனது திருகுதாளத்தை வன்மத்தோடு முன் வைக்கிறார். ரங்கநாயகம்மா அம்பேத்கரை அரைவேக்காடு எனச் சொன்னதாக முன்வைத்த சண்முக சுந்தரம் புத்தகத்தை பற்றி முடிக்கும் தறுவாயில்

“அம்பேத்கரின் சிந்தனைகளை முற்றும் முழுதாக ரங்கநாயகம்மா நிராகரிக்கவில்லை. மிகப்பெரும்பாலான கருத்து முரண்பாடுகள் சாதியை மையமாக வைத்தும் தீண்டாமை எப்படித் தோன்றியது என்பது குறித்துமே ஏற்பட்டிருக்கின்றன. ஆரோக்கியமான கருத்து மோதல்கள் தவிர்க்கமுடியாதவை, வரவேற்க வேண்டியவை. ஆனால் இதை மையமிட்டு அம்பேத்கரின் மீதான தூற்றல்களும் தலித் இயக்கங்கள் மீதும் ஏவப்படும் அவதூறுகளும் ஏற்புடையதாக இல்லை”

என்றவர்,  ஒட்டுமொத்த நூலின் மதிப்பு வாய்ந்த விவாதங்கள் குறித்து எந்தக் கருத்தும் சொல்லாமல், அப்படியே ஒரு ஓரமாக நகர்ந்திருக்கிறார். சொல்லப் போனால் பசுவைப் பற்றி எழுதச் சொன்னால் பனைமரத்தைப் பற்றி எழுதிய மாணவன் கதை ஞாபகத்திற்கு வந்தது. 

சாதியின் தோற்றம் குறித்து அம்பேத்கர் சொன்னது சரியா? வருணம், சாதி குறித்த அம்பேத்கரின் கருத்துக்கள் சரியா என்ற விவாதத்திற்குள் அவர் போக விரும்பாமல் தப்பிப்பது புரிகிறது. அவரது எழுத்தில் அவர் புத்தபிட்சுவாக மாறும் எண்ணத்துடன் இருக்கிறாரோ, என்பதற்கு சான்றாக புத்தருக்காக நிறைய தவித்திருக்கிறார். சாதி குறித்து விவாதிக்க மறந்துவிட்டார்.

புத்த மதம் அழிவிற்கான காரணங்களாக, அம்பேத்கர் பல்வேறு இடங்களில் பல் வேறு காரணங்களை முன்வைத்து பேசியிருக்கிறார். இவ்வளவு ஏன், புத்த மதம் அழிந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று கூட சொல்லியிருக்கிறார். 

சண்முகசுந்தரமோ புஷ்யமித்ர சுங்கனால்தான் பௌத்தம் அழிந்தது என்று ஆணித்தரமாக கூறுகிறார். ஒரு நபர் நினைத்தால் அழிந்துவிடக் கூடிய நிலையில்தான் பௌத்தம் இருந்திருக்கிறது என்பது இவரது ஆணித்தரமான புரிதல். அறுவுநாணயத்தோடு படியுங்கள் சண்முகசுந்தரம். புஷ்யமித்திர சுங்கன் எந்த மதத்தை முன்வைத்து பௌத்த மதத்தை அழித்தான் என்பதையாவது நிறுவுங்கள்.

ரங்கநாயகம்மா எங்கு? எப்பொழுது? அம்பேத்கரை தூற்றினார், தலித் இயக்கங்களை எங்கு அவதூறு செய்தார்? என்றும் ஆதாரத்தோடு எடுத்துப் போட்டிருக்க வேண்டும். அதை விடுத்து இப்படி தான்தோன்றித்தனமான வார்த்தைகளை வைப்பது முறையல்ல. 

மேலும் அவரே சொன்னது போல் ‘கல்விப்புல கோட்பாட்டு ரீதியில் இதுபோன்ற நூல்களின் தேவை அவசியமாக இருந்த போதிலும், கோட்பாடு குறித்த புரிதலற்ற இவ்வியக்கங்களின் சாதரணர்கள் மத்தியில் இந்நூல் தவறுதலான புரிந்துகொள்ளல்களையும் ஆழமான பிளவுகளையும் உருவாக்கும்” என்பதற்கு அடையாளமாக நூல் குறித்து எதையுமே அறியாத வெகு சாதாரணராய் சண்முகசுந்தரம் எதையோ எழுதியிருக்கிறார். அவ்வளவே. 

உதவிய நூல்;  
சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும் - தொடரும் விவாதம்..தொகுப்பும் தேர்வும் ; கொற்றவை.No comments:

Post a Comment

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.

மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள்  (hit-or-miss reformer...