Pages

Wednesday, June 18, 2014

மகளை எழுத்தாளாராக்குவேன் என கனவு காணும் ஜெயமோகனுக்கு...





ஜெயமோகனுக்கு...

அன்புள்ள ஜெயமோகன் உங்களது நாலந்தர எழுத்து வல்லமை இதற்கு மேல் செல்ல முடியாது என்பதற்கு நீங்கள் பெண்களின் கூட்டறிக்கை குறித்து எழுதிய பதிலே சாட்சி. பெண்கள் எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லாது தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என வகைபிரித்துப் பேசியிருக்கிறீர்கள். அவ்வறிக்கையில் வசைகள் அவதூறுகள் எங்கு உள்ளன என குறிப்பிட்டால் இன்னும் பேசலாம். உண்மையில் வாழும் மனிதர்களின் உடற் குறைபாடுகளை உங்களளவுக்கு கேவலமாகப் பேசும் பிறிதொரு எழுத்தாளப் பிறவி இத்தமிழில் இல்லை என்றே நான் சொல்லுவேன்.

கார்ல்மார்க்ஸ் தொடங்கி கமலாதாஸிலிருந்து வளர்ந்து மனுஷ்யபுத்திரனை நொண்டிநாய், அதுவும் வாங்கு சொல்லுவது போல் ஒலிக்கும் காலச்சுவடு நாய் என எழுதிய நீங்கள் இதை வசை என்று அழைக்காமல் என்னவென்று சொல்லுவீர்கள். இதுகுறித்து ஒருமுறை நான் உங்களுக்கு கடிதம் எழுத நீங்கள் என்னை மனநலம் பேணுமாறு எழுதினீர்கள். அப்படியென்றால் யாருக்கு மனநிலை தவறியிருக்கிறது. உங்களுக்குப் பிடித்த இந்துத்துவ கோவணாண்டிகளின் தாடி மயிரும் பட்டொளியாக ஒளிரும் காட்சியாகப் படும்போது கார்ல்மார்ஸின், மாவோவின் அந்தரங்க உறுப்பின் தேட்டத்தை விசாரித்தீ்ர்கள்.

எனக்கு இவ்வகை விசாரணைகள் புதிதல்ல. உங்களை ஒத்த சில இலக்கிய தூயத்துவ மடாதிபதிகளை, இலக்கியத்தில் மொழியினால் ஆன சாத்தியங்களை முவைத்த காரணத்திற்காக, நகுலன் மகாத்மாவென்றும் அவர் சாப்பிடும் பிராந்தியில் கம்பன் கம்பூன்றி தெளிவாக நடந்து வருகிறான், தேவதேவனின் கண்களில் ஞான ஒளி மின்னுதடா சர்வேசா, அவருடைய தாடியில் தொங்குடதா தமிழ்கூறும் நல்லுகம் தேவதச்சனின் வெற்றிலை மணத்தில் மணக்குதடா தத்துவ முத்து என தலை முதல் உள்ளங்கால்கள் வரை வர்ணிப்பதும் நான் கவனித்து வருவதுதான்.

ஆனால் இதே வர்ணனை சிலாக்கியங்கள், மார்க்சிய தத்துவ ஆசிரியர்களை விமர்சிக்க வரும்போதும் மட்டும், வறட்டு வறட்டுனெ கவட்டையைச் சொறிந்து கொண்டு விமர்சிப்பதையும் கவனிக்க முடியும். கேட்டால் கலை இலக்கியம் அந்தரத்தில் தொங்கும் பொற்கனி, அதை உள்ளொளி முள்ளெலி, ஆன்ம சுத்தி, இன்னபிற பெருங்காயங்களோடு நெஞ்சில் கைவைத்துப் படிக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அவர்களைப் படிக்கவே ஞான வெள்ளெழுத்துக் கண் வேண்டும் என்கிற உளறல்களையும் அறிந்தே வருகிறேன்.

கவிதையை, படைப்பை விட்டுவிட்டு எழுத்தாளனின் தாடி மயிர், குடிக்கும் பிராந்தி. போடும் குசு, வெற்றிலை மணம், பட்டுவேஷ்டி, ஒட்டுக்கோமணம் பற்றியே இங்கு இலக்கிய ஞானபீடங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. அதை செவ்வனே செவ்விலக்கிய அமைப்பாக்கி, விஷ்ணு புர பஜனை மடத்தை தோற்றுவித்தது தாங்கள்.

உங்களைப் பொறுத்தவரையில் சீரிய பார்வை, விசாலமான நெற்றி, கூர்த்த நாசி நிமிர்ந்த நன்னடை கொண்டவர்களுக்கே அந்தரங்க எழுத்து கைகூடும். உடற்குறை உள்ளவர்களுக்கு, சில்லறைகளுக்கு எந்த எழுத்தும் வராது. உங்களது விமர்சனங்கள் அனைத்திலும் சம்பந்தப்பட்ட எழுத்தாளனின் உடலை தடவித்தான் வருகிறது. அவ்வகை விமர்சன முறையை நான் கைக்கொண்டால் உங்கள் காதை முன் வைத்தே ஒரு லட்சம் பக்கங்கள் எழுத முடியும். அத்தகைய காது அது. ஆனால் அதற்குள் இருக்கும் சிலந்திக் கூடுகளை கலைக்க எனக்கு விருப்பமில்லை. எவ்வுயிர்களும் இவ்வுலகில் வாழவேண்டும் என்பதே என் நிலை.

எழுத்தாளானர் சார்பு நிலை அற்றவன் எனில் நித்ய சைதன்ய நிதியின் மயிர்கள் எங்கெல்லாம் மின்னியிருக்கிறது என நீங்கள் எழுத வேண்டும். உங்கள் படைப்புகளை வாசித்தவர்களிடமே பேசுகிறேன் என்ற இன்னொரு உளறலையும் வைக்கிறீர்கள். உங்கள் படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்து எழுதிய ஒரு மாணவன் இருக்கிறானா... அல்லது மாணவி இருக்கிறாளா.. அல்லது உங்களது விஷ்ணு புர பஜனை மடங்களில் அழுக்குச் சட்டையோடும் ஏதேனும் சில்லறைகள் தட்டுப்படுகிறதா. அவ்வாறு வரும் ஒரு நபரின், உங்கள் வாசக வாசகியின் பெயரைச் சொல்லுங்களேன். அந்நபரைப் உங்களது நபரைப் பேசச் சொல்லுங்கள். அவர்கள் யார் நீங்கள் உங்கள் வாசகர்களாக கருதும் நபர்கள் யார் அவர்கள் எந்த சமூகம் சார்ந்தவர்கள், எந்த வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்று திறந்த மனதுடன் உங்களால் உரையாடமுடியுமா.

அவ்வறிக்கை சமகால இலக்கியத்தில் மிக மோசமான ஆணாதிக்க மனநிலையோடு இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியைப் பற்றிய அறிக்கை. அதில் சில்லறைத்தனங்கள் இருக்கிறதென்றால், அது உங்களைப் பற்றிய அறிக்கை. அதில் நோட்டையெல்லாம் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அறிக்கையாளர்களுக்கு எவ்வகையில் எவருக்குப் பதில் அளிப்பது என்கிற தேர்வே அதைச் செய்திருக்கிறது.

அதில் உங்களது அடிப்படைப் புரிதல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என நீங்கள் கூறுவது இன்னும் வருத்தமாக இருக்கிறது. அக்கப்போர்கள் என்றால் என்னவென நீங்கள் கூட்டும் விஷ்ணுபுர பஜனை மடத்திற்கு வந்தால் தெரியும். நான் எல்லாவற்றையும் விவாதிக்க உங்களின் வாசகனாகவே வருகிறேன், ஆனால் சப்பளக்கட்டைகள் நாம தேய நாமக்கட்டிகள் இவை எதுவும் கொண்டு வரமாட்டேன். அனுமதிப்பீர்களா... நீங்கள் எழுதியுள்ள இப்பதிலில் எனக்குப் பீதியை ஏற்படுத்தியது உங்களது மிகப்பெரிய தூய உலகியல் கனவென நீங்கள் சொன்னது. உங்களது மகள் எழுத்தாளாரக வேண்டும்... அச்சா..

ஏன் அவர்கள் வேறு துறையை தேர்ந்தெடுத்தால் உங்களது ஆகப்பெரிய தூய உலகியல் கனவு கலைந்து விடுமா. வார்த்தைகளை இடம் தேர்ந்து சுட்ட நினைத்திருக்கிறீர்கள் ஜெயமோகன். இன்னும் சொல்லப் போனால் உங்கள் மகள் அளவுக்கு சுரணையுள்ள மகள்கள்தான் அவ்வறிக்கையை எழுதியுள்ளார்கள் என நினைக்கிறேன். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் ஜெயமோகன், அருண்மொழி நங்கை பெயரில் ஒரு மலையாள மொழிபெயர்ப்பை எடுத்தாண்டு, கவனக்குறைவு என்று சொல்லிவிட்டு சொல் புதிதை மூடினீர்கள். அவர் இன்று வரை எழுதிய நாலு வரிகளையாவது கவனத்திற்கு கொண்டு வரமுடியுமா.

உங்களது உளவியல் மிக மோசமான ஆண்நோய்க்கூறு தாக்கிய ஒன்று. இந்நோய் உங்களை உங்களிடமிருந்தே அரித்துக்கொண்டிருக்கிறது. நான் ஏற்கனவே சொல்லியதுதான்.. உங்கள் வழிகாட்டுதலின் கீழ் உங்களது மகனும் மகளும் இயங்குவார்களானால் அவர்கள் படிக்கும் பள்ளிகளில் கல்லூரிகளில் கூட என் குழந்தைகளை சேர்க்க நான் அச்சம் கொள்ளுவேன். வக்கிரம் எழுத்தாகும் போது அது எவ்வகையில் செயலுரும் என்பதை நானறிவேன். நீங்கள் அறிவுத்தளத்தில் உரையாடிய அனைத்து மனிதர்களும் உன்னதங்கள் என்றா சொல்லுகிறீர்கள்.. இதை விட வேறு நகைச்சுவை எதுவும் இல்லை ஜெயமோகன் விஷ்ணு புர மடத்திற்கு வந்து பட்டுக்கோவணம் கட்டிய அந்நபர்களை நீங்கள் அறிவாளிகள், அறிவாயுதங்கள்: என்றே அழைத்துக்கொள்ளுங்கள். எனக்குக் கவலையில்லை.

குழாயடிகளில் நீங்கள் கண்டது உங்களுக்கு வெறும் வசையாக இருக்கலாம் அந்தளவிலான பேச்சுக்கும் ஒரு தூய மதிப்பு இருக்கிறது. என்னசெய்வது உங்களது வீட்டில தெருக்குழாயில் தண்ணீர் படிக்கும் வசதி இல்லை. அப்படி இருந்திருந்தால் உங்களது மகளும் மனைவியும் குழாயடிச் சண்டை குறித்த சிந்தனைகளை உங்களுக்குக் கற்றுத் தருவார்கள். மிக கனத்த உங்களது மனத்தை நான் புண்படுத்த விரும்பவில்லை ஜெயமோகன் ஏனாயில் அது வக்கிரத்தால் அழுகிக்கொண்டு சீழ்பிடித்து பிதுங்கிக்கொண்டிருக்கிறது. சில்லறை உலகில் இல்லாது முற்றும் துறந்து அம்மணமாகும் ஞான உலகத்தை நோக்கிய உங்களது பெரு உலகுக்கு என்னால் வரமுடியாது. மேலும் அது அவமானகரமான செயல்.

கும்பல் சில்லறை என்றால் விஷ்ணு புர மடத்தில் பட்டுவேட்டி கட்டிய அந்த கோமணங்கள் யார்.. அவர்கள்தான்.. முழுமுற்றும் அறிந்த அறிவுப் பேராயுதங்களா.. அங்கெல்லாம் சில்லறை உலகு குறித்துப் பேசாமல்... வேறு என்ன பேசுகிறீர்கள்.


அவ்வளவே.

கூடிய விரைவில் இன்னும் விரிவாக எழுதுவேன். விரிவஞ்சி குறுக்கியிருக்கிறேன்.