Pages

Friday, September 30, 2016

நூலகத்துக்குச் செல்லும் வழியில்...





நான்
நடந்துகொண்டிருந்தேன்
எப்போதாவது பறவைகள்
நடக்குமென்று
இக்கணத்தில் நான் சொல்லப்போவதில்லை

அதிகாரங்களை
சாலைகள்தான் தொடங்கிவைக்கின்றன
ஆலயங்களையும் எழுப்புகின்றன

உண்மையில்
பிச்சைக்காரர்கள் என்பதற்குமேல்
மனிதர்களிடம் வீசியெறிய வேறு சொல் இல்லை

அரசுகள்
தங்களின் வார்த்தைகளின் மூலமாகவே சுவாசிக்கின்றன
அரசுகள்
அதிகாரிகள்
அனைவரும் வார்த்தைகள் கிடைக்காது தவிக்கும்போது

அரசியல் சற்றுத் தடுமாறுகிறது
விலைபோகிறவர்கள் அதை சமன் செய்கிறார்கள்

நூலகத்துக்குச் செல்லும் வழியில்
குற்றவியல் நீதிமன்றமும்
சற்றுத் தள்ளி
அமைச்சகமும்

அப்பால்
இறுதியாக நூலகம்
கல்லறைத் தோட்டத்துக்கு அருகில் இருக்கிறது
அருமையான தேர்வு

நூலகத் தூசுக்களை சுவாசித்தபடி
எண்ணற்ற இதயங்கள் அங்கு இருமிக்கொண்டிருக்கின்றன

அரசுக்கு இணையானதுதான் கல்லறையும்
இரண்டிலும்
அவ்வப்போது
சாவமைதி ஏற்படும்

எல்லோரும் அமைதியாய் இருந்தால்
அதை
மயான அமைதி என்றுதான் நான் கூறுவேன்

மேலும்
எல்லோரையும் அமைதியாய் இருக்கச்சொல்லும்
ஒரு நாட்டை
கல்லறைத் தோட்டம் என்றழைப்பதில் எனக்கு

மாற்றுக்கருத்து இல்லை.

Thursday, September 22, 2016

கொட்டேஷன் நிரப்பியான அ.கா.ஈஸ்வரன் அவர்களை முன்வைத்து....




கொட்டேஷன் நிரப்பியான இவர் முக நூலில் எங்கு யார் மார்க்சியம் குறித்துப் பேசினாலும் ஒரு கொட்டேஷனை நிரப்பிவிட்டு அமைதியாக காத்திருப்பார். மார்க்சியம் குறித்து கேள்வி கேட்டவர் மார்க்சியத்தை தன்னளவில் படித்துப் புரிந்தவராய் ( பிழைகள் இருந்தாலும்) அதை தன் சொந்தவார்த்தைகளில் முன்வைத்து பேசுவார் ஆனால் கொட்டேஷன் நிரப்பியான ஈஸ்வரன் அனைத்திற்கும் மார்க்சிய கொட்டேஷன்களையே பதிலாய் வைப்பார். கேள்வி கேட்டவர் திக்குமுக்காடி புரிந்தும் புரியாமலும் மார்க்சிய மூல ஆசிரியர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்களா என்பதில் தன் சொந்த வார்த்தையை முன் வைத்து கேள்வி கேட்பார் ஆனால் பாருங்கள் அதிலும் மார்க்சிய கொட்டேஷன்களே பதிலாய் வந்து விழும்.

இத்தகைய போக்குக்குப் பின்னால் இருக்கும் அடையாள இருப்பு அரசியலை இந்த சமயத்தில் வெளிக்கொண்டு வரவேண்டும் என நண்பர்களும் தோழர்களும் வாசகர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த வகைமாதிரிகள் குறித்து விரிவாக எழுதுகிறேன்.

மார்க்சிய கொட்டேஷன் நிரப்பியான ஈஸ்வரன் மார்க்சியத்தை விளக்குவதாய்ச் சொல்லி  வெட்டி ஒட்டும் அறிவையே தன் அறிவாய் முன் வைத்து, மார்க்சியத்தின் மூல ஆசிரியர்களில் ஒருவராய் தன் பெயரைச் சேர்க்கும் ஆவலாதியில் எழுதியும் வருகிறார்.  விளக்கம் கேட்டால், ஜார்ஜ் தாம்சன் லெனின் என்று உளறுவதும் நடக்கிறது. ஏன் சொந்த வார்த்தையில் முன் வைக்கவில்லை என்ற கேள்வி ஒன்றும் ஆபத்தான கேள்வி இல்லை. அதற்கு பதிலும் கூற முடியும். ஆனால் இந்த கொட்டேஷன் நிரப்பியோ அதற்கு எந்தப் பதிலையும் வைக்காது தன் அறிவு மடமையை முன் வைத்து தன் பக்கத்தில் எதையேனும் கொட்டேஷனாய்ப் போடுவார்.

தோழர்களே உங்கள் சொந்த வார்த்தையில் மார்க்சியத்தை எளிய முறையில் முன் வையுங்கள் என்று கேட்பது ஒரு குத்தமா. ஜார்ஜ் தாம்சனோ லெனினோ ஏன் இதுவரை இந்திய அளவில் இது போன்ற கொட்டேஷன் நிரப்பிகள் எவருமில்லை என்பதற்கு இவர் ஒருவரே சாட்சி. இவரைப் போல் உலக அளவில் கொட்டேஷனை எடுத்துப் போட்டு மார்க்சியத்தை விளக்க நினைத்த ஒருவரையாவது சுட்டமுடியுமா.

இது மிக எளிதான வேலையாக இருக்கிறது என்ற ஈஸ்வரனின் சுயவிளக்கமே அவரது உழைப்புச் சோம்பேறித்தனத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததோடு அவரது தன்னம்பிக்கையின்மையையும் சுட்டிவிட்டது. இந்தக் கொட்டேஷன் நிரப்பி தான் இதுவரை புரிந்து கொண்ட மார்க்சியத்தை முன் வைத்து,  சமூக நிகழ்வுகளை, பிரச்சினைகளை தன் சொந்த வார்த்தைகளில் வைத்திருக்கிறாரா, இல்லை ஏதேனும் ஒரு கட்டுரையாவது எழுதியிருப்பாரா என்று தேடிப் பார்த்தால் பதில் பூஜ்யம். மார்க்சியத்தை அவருக்கு அவரே விளக்கிக் கொள்ளும் அளவுக்கு வார்த்தைகளில் கவனம் இல்லாத  கொட்டேஷன் நிரப்பியான இவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட எளிய வழி வெட்டி ஒட்டும் கலை.

மேலும் ஈஸ்வரனிடம் ஏன் இத்தனை கொட்டேஷன்கள் என்றால் ரங்கநாயகம்மா அம்பேத்கரை கொட்டேஷன்களாக போடவில்லையா என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறார். ஒரு விமர்சன நூலை எப்படிப் படிக்க வேண்டும், ஒரு கோட்பாட்டு நூலை எப்படி எழுத வேண்டும் என்ற அறிவு கூட இல்லாது, மூளை மழுங்கிய கேள்வியை நம் முன்வைத்தால் நாம் என்னதான் செய்வது.

ரங்கநாயகம்மா அம்பேத்கரின் வார்த்தைகளை முன்வைத்து அந்த நூலை விமர்சனம் செய்திருக்கிறார். அம்பேத்கரை முன்வைத்து விமர்சிக்கும் போது அம்பேத்கரின் வார்த்தைகளையே மேற்கோள்களாய்  வைத்து விமர்சிப்பதே அறிவு நாணயம். ஆனால் மார்க்சியத்தை, தத்துவத்தை தன் சொந்த சொற்களில் விளக்க, மார்க்சியத்தைப் பயின்ற யாராலும் முடியும். அப்படி வந்த நூல்கள் பல ஆயிரம் இருக்கிறது. ஆனால் ஈஸ்வரன் கேட்கும் கேள்வியோ விமர்சன நூலில் அம்பேத்கர் கொட்டேஷன்கள் ஏன். இந்தக் கொடுமையை என்னவென்று அழைப்பது. இதுதான் இவரது பொருள்முதல்வாத அறிவு.


கேள்விகளை முன்வைத்து, உங்கள் சொந்த வார்த்தைகளில் மார்க்சியத்தை எழுதுங்கள் என்றதும் உடல் வியர்த்து, தொடக்க நிலை வாசகர்களுக்கு எழுதுவேன் என்கிற ஈஸ்வரனது எதிர்காலப் பதில் எத்தனை சிறுபிள்ளைத்தனமானது என நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். இதில் இவரது ஜல்சாப்புகளையும் நாம் காணலாம்.

தமிழில் நா.வானமாமலை தொடங்கி எத்தனையோ பேர் மார்க்சிய மூல ஆசிரியர்களின் கொட்டேஷன்களை தேவைப்படும் இடங்களில் மட்டும் பொருத்தி, தங்கள் வாதங்களை மிக எளிய எடுத்துக்காட்டுகளாய் விளக்கி எழுதியிருக்கின்றனர். ஆனால் கொட்டேஷன் நிரப்பியான ஈஸ்வரனோ ம்...என்றால் மார்க்சிய அர்த்தம். ஏன் என்றால் லெனிய விளக்கம் என்று ஏகத்துக்கும், பக்கம் பக்கமா கொட்டேஷன்களை நிரப்பிவிட்டு, பொருள்முதல்வாதத்தை நான் விளக்கிவிட்டேன் என தன் சொந்த அகங்காரத்தை முன்வைத்துப் பேசி வருகிறார். அத்தகையோர் ஏன் சொந்த சொற்களை வைத்து பொருள்முதல்வாதத்தை விளக்கக் கூடாது.

அவர்களால் அது முடியாது. காரணம், அவர்களது சொந்த விளக்கங்கள் அவர்களது அரைகுறைப் புரிதல்களை வெளிப்படுத்திவிடும். இதற்கு அவர்கள் சொந்தமாக எழுதிய வார்த்தைகளில் இரண்டு வாக்கியங்களை எடுத்துப் படித்தாலே நன்றாக விளங்கும்.

மேலும் ரங்கநாயகம்மா கறாரான பார்வையில் அம்பேத்கரை விமர்சித்திருப்பதை ஏன் இப்படி என்ற இவர் அதையே மார்க்சிய மூல ஆசிரியர்கள்  கறாராக முன் வைக்கும் போது, தத்துவம்... ஆகா அற்புதம் என்ற துதி பாடும் மனநிலையும், தலைவர் வழிபாட்டுணர்வுமே இவரை இப்படி எழுத வைக்கிறது.  மார்க்ஸ் முதலாளித்துவ வர்க்கத்தை ஏன் வாட்டி வறுத்தெடுக்கிறார் என்ற கேள்விகளை முன்வைப்பதில்லை.

இவர்களின் நோக்கம் எல்லாம், தன்னை மார்க்சிய மூல ஆசிரியர்களில் ஒருவராய் இணைத்துக் கொள்ளும் அறியாமையும். மார்க்சிய வெளிச்சத்தில் தங்கள் விற்பனைப் பண்டங்களை முன்வைத்தும், கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனினைத் தொழுவதும்தான். இவர்களுக்கு இதில் வசதியாக இருப்பது இந்த விற்பனைத் தந்திரமே. இந்த தந்திரத்துக்கு இவர் வைத்திருக்கும் பெயர்தான் மார்க்சிய விமர்சனம். மார்க்சிய எழுத்து, மார்க்சிய நூல். பொருள்முதல்வாதம்.( உண்மையில் இது பொருளை முன் வைத்து எழுதும் வாதம்தான்)

ரங்கநாயகம்மா An introduction to Marx’s Capital’ என்ற நூலை  1900 பக்கங்களுக்கு மேல் புரிந்து கொள்ளும் வகையிலான விளக்கங்களை, அவரது சொந்த மொழியில் வைத்திருக்கிறார். நீங்கள் அதில் கொட்டேஷன்களை தேடுவதே மிகுந்த சிரமத்துக்குரிய பணியாக இருக்கும். ஆனால் ஈஸ்வரன் போன்ற கொட்டேஷன் நிரப்பியோ ஒரு கட்டுரையை எழுத முப்பது கொட்டேஷன்களை நிரப்புவதோடு, அது சரிதான் என் பொருள்முதல்வாத விளக்கமும் கொடுப்பார். இந்த அநியாயத்தை எங்கு போய் சொல்வது.

மேலும் ரங்கநாயகம்மா “குழந்தைகளுக்குப் பொருளாதாரம்” என்ற நூலை குழந்தைகளுக்கும் புரியும்படி, மூலதனத்தை ஒரு பாடத்திட்டமாக முன்வைத்து எழுதியிருக்கிறார். அதில் ஏதேனும் கொட்டேஷன்கள் இருக்கிறதா என்று தேடிப்பாருங்கள்.


ஈஸ்வரன் என்ற கொட்டேஷன் நிரப்பியோ, இனி எழுதுவேன், பார்க்கலாம் என்ற வார்த்தைகளை வைத்துவிட்டு, நூலை தன் சொந்த மொழியில் எழுதாத தற்குறித்தனத்தை மறைக்க கொட்டேஷன்களை இட்டு எழுதுவதே அருமையான வேலை எளிதான வேலை எனச் சொல்லும் துணிகர முயற்சியைச் செய்கிறார்.

அவர் எழுதியதாய் சொல்லும் ஒரு நூலில் கொட்டேஷன்களை தவிர்த்துப் பார்த்தால் அவர்  சுயமாக எழுதியது பத்து பக்கங்களுக்கு மேல் வருமா என்பது சந்தேகமே. அதுவும் அவரது சொந்த புரிதலில் உள்ளது அல்ல.

கொட்டேஷன்களுக்கு அவர் பாணியில் ஒரு கோனார் உரை அவ்வளவே. அவர் எழுதிய அந்தப் பக்கங்களை வைத்துத்தான் ஒட்டு மொத்த நூலையுமே தன் நூல் என்றும் பொருள்முதல்வாதத்தை விளக்கிவிட்டேன், அடுத்து இயக்கிவியலை விளக்கப் போகிறேன் அதற்கடுத்து இன்னும் சிலதை விளக்குவேன் எனச் சொல்லும் அறிவின் மடைமையை கூசாமல் சொல்ல வைக்கிறது. மூல ஆசிரியர்களின் மேற்கோள்களை அப்படியே எடுத்து வைத்து, அதை ஓரிரு பாராக்களில் தன் வரிகளை அடைத்து, மூல ஆசிரியர்களின் ஒட்டுமொத்த உழைப்பை தன் உழைப்பாக முன்வைத்து மார்க்சிய மூல ஆசிரியர்களை அவமானப்படுத்தி வருகிறார். இங்குதான் அவர் உழைப்புச் சுரண்டலிலும் ஈடுபடுகிறார்.

முதலாசிரியர்களின் நூல்களை தொகுத்து புரியவைக்க சொந்த வார்த்தைகள் இல்லாத இவரது உழைப்புச் சோம்பேறித் தனமும், அதை சொந்த வார்த்தையால் விளக்க இயலாத அறியாமையுமே இவரை வழி நடத்துகிறது.

கேட்டால் என் நூல் இத்தனை வந்திருக்கிறது. அமோக வரவேற்பு பெற்றிருக்கிறது என்று சமீபத்தில் வந்த இரண்டு மூன்று நூல்களின் பெயர்களைச் சொல்லி, அவற்றையும் விற்கும் தந்திர எண்ணத்தோடு செயல்படும் உத்தி இவரை விட்டால் வேறு யாருக்கும் வராது என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

வாசகர்களை கவர்வதையே மையமாக வைத்து வெட்டி ஒட்டிய பக்கங்களை, மூல ஆசிரியர்களின் பெயரோடு தன் பெயரையும் இட்டு தானே எழுதியது போன்ற தோன்றங்களையும் முன்வைக்கிறார்.

மேற்கோள் போடுவதற்குக் கூட நியாயம் கற்பித்து, அதையும் மூல ஆசிரியர்களின் மேற்கோளை வைத்து விளக்கும் இவர், தன்னை ஒரு மார்க்சியவாதி எனச் சொல்லிக் கொள்வது மார்க்ஸையே அவமானப்படுத்துவதற்குச் சமம். மேலும்  இதைத்தான் லெனினும் சொன்னார்,  செய்தார் என்று புரிந்து கொள்ளும் வகையில், லெனினது மேற்கோளையே இவர் வசதிக்கு ஏற்ப பயன்படுத்தும் குணமும் இவரை விட்டுவைக்கவில்லை.


மார்க்சிய நூல்களுக்கு வழிகாட்டி என்ற நூல்களும் நம் முன்னால் இல்லாமல் இல்லை. இவர் மார்க்சியம் பற்றி ஏதேனும் ஒரு நூல் எழுதவேண்டுமென்றால் இது போன்ற நூல்களை சுட்டிக் காட்டித் தன் கடமையைச் செய்யலாம். ஆனால், மார்க்சிய மூல ஆசிரியர்களின் எழுத்துக்களை அப்படியே எடுத்துப் போட்டு, தனி நூலாக்கம் செய்வதற்கு ஒரே ஒரு காரணம், நூல்களைச் சுட்டி எழுதினால், அடையாளம் காட்டினால் எந்தப் பெயரும் கிட்டாது. ஆனால் கொட்டேஷன்களால் நிரப்பி வெட்டி ஒட்டும் வேலையைச் செய்தால் மார்க்சிய எழுத்தாளராக அறியப்படுவோம் என்ற ஆசையில் இது போன்ற வெட்டி ஒட்டி ஜாயிண்டடிக்கும் வேலையை செவ்வனே செய்து வருகிறார்.

மேலும் விவாதம் செய்யலாம் என்றால், நீயா நானா மேடையா என விளக்கம் கொடுக்கும் இவர், அதையாவது பொருள்முதல்வாத அடிப்படையில் விளங்கிக்கொள்ள முயற்சித்தாரா எனில் அதுவும் இல்லை. நீயா நானா போன்ற விவாத முறைகளில் நமக்கு விமர்சனமிருந்தாலும் சொல்ல வேண்டிய கருத்துக்களைச் சொல்ல நமக்கு ஏன் தயக்கம் ஏற்பட வேண்டும். ஊடகம் சார்ந்த இது போன்ற போக்குகளைக் கூட பொருள்முதல்வாத, இயங்கியல் அடிப்படையில் பார்க்கத் தெரியாத இவர்தான், சம்பந்தப்பட்ட நூலில் மார்க்சிய உப்பு இல்லை, லெனினிய புளி இல்லை என்று ஞானப்பழம் போல் விளக்கி வருகிறார்.

எனக்குத் தெரிந்து இதுவரை மார்க்சியம் குறித்து ஏதேனும் ஒரு உரையையாவது சொந்த மொழியில் பேசியிருப்பாரா, இல்லை இயல்பான யதார்த்தமான முறையிலாவது தனி நபர்களிடமாவது உரையாடியிருப்பாரா. எழுதியிருப்பாரா.? எதுவும் கிடையாது. ஏன். இதுபோன்ற முயற்சிகளை ஒருக்காலும்  அவரால் செய்யமுடியாது. காரணம், தன் கொட்டேஷன் நிரப்பி மட்டுமே என்கிற உண்மை அவருக்கு நன்றாகத் தெரியும்.

குறிப்பு: வேண்டுமென்றால் பாருங்கள்... நான் எழுதிய இந்த சுட்டலுக்கும் அவர் மார்க்சிய மூல ஆசிரியர்களின் கொட்டேஷன்களைப் போடாமல் எழுதவே முடியாது. எழுதவும் மாட்டார்.

மார்க்சியர்களே..தோழர்களே... கொட்டேஷன் நிரப்பிகளிடம் உஷாராய் இருங்கள்.