Pages

Thursday, February 9, 2017

அம்பரய



மனிதர்களின் நம்பிக்கைகளை கேள்வி கேள். நீ கலகக்காரனாவாய், ஆனால் ஒரு போதும் அவர்கள் நம்பிய மனிதர்களை கேள்வி கேட்காதே. நம்பிக்கையின் பேரால் நீ வெறுத்தொதுக்கப்படுவாய். காரணம், அவர்கள் நம்புவது நம்பிக்கைகளை அல்ல. நம்பிக்கைகளைச் சொன்ன மனிதனை. அவன் கடவுளாக்கப்பட்டு அவன் பெயரால் ஸ்தோத்திரங்களும் வைக்கப்பட்டால் மூச்சுவிடாதே. கடவுளை அவமதிப்பது எதற்குச் சமம் என்று யோசி. மனிதர்களிடம் பேசு, ஏன் பக்தர்களிடம் கூடப் பேசு, ஆனால் பூசாரிகளிடம் பேசிவிடாதே. அவர்கள் அடுத்த கடவுளாக காத்திருப்பவர்கள். உன்னைப் பலிகொடுப்பதன் மூலம் அவர்கள் கடவுளாக மாறிவிடும் அபாயத்தை நீ வழங்கிவிடாதே.

நிற்க.


தஸ்தாயெவ்ஸ்கியை சீட்டாடும் இயேசுவாக மட்டுமே அடையாளம் கண்டு வந்திருந்தேன்.  தஸ்தாயெவ்ஸ்கியை எப்படி அடையாளம் காணுவது, தமிழ்ச் சூழல் அவருக்கு  எண்ணற்ற ஸ்தோத்திரங்களை இயற்றியிருக்கிறது. பக்தர்களின் முன் பகுத்தறிவாளானாக எப்படி நிற்பது. அடையாளங்கள், குறியீடுகள், என வார்த்தைகளை கலைத்துப் போட்டு மானிடரை அடையாளம் காட்ட வந்தவராய், அவரை முன்னிருத்துகையில், தஸ்தாயெவ்ஸ்கியை கேள்வி கேட்பதும், சந்தேகம் கொள்ளுவதும் நம்மை சிலுவையில் அடிக்க அவர்களுக்கு நாமே வாய்ப்புத் தருகிறோமே என்ற சந்தேகத்தால் அலைக்கழிந்திருக்கிறேன்.

ஆனால், அவை அத்தனையையும் மீறி பிடிக்காததை பிடிக்காது என முகத்தில் அறைந்தார் போல் சொல். அதற்கும் முன்னதாக நீ அறிந்து கொண்ட அனைத்தையும், அதனை அறிமுகப்படுத்திய அனைவரும் மனிதர்கள், சார்பு நிலை கொண்டவர்கள் என்பதை மனதில் கொள். வியாக்கியானங்களை விடுத்து, மாற்றத்திற்கான சாவிகளைத் தயாரிப்பவர்களை, அது கள்ளச்சாவிகளானாலும், பரவாயில்லை கண்டுகொள் என்கிற பிடிவாதம் மட்டுமே ஈவு இரக்கம் இல்லாமல் என்னை வாசிக்கவும் வாசித்தபின்பு அதாற்கான கேள்விகளையும் வைக்கத்தூண்டியது.

ஒருவழியாக தஸ்தாவெஸ்கியை எப்படி புரிந்துகொள்வது என எனக்குக் கற்றுக்கொடுத்தவர் மக்சீம் கார்க்கி.

“தஸ்தாயெவ்ஸ்கி உண்மையைத் தேடுபவர் என்று அழைக்கப்படுகிறார்; அவர் தேடினார் ; உண்மையைக் கண்டார்; எல்லாம் உண்மைதான்; ஆனால் மனிதனின் விலங்குத்தனமான இயல்பூக்கங்களுக்கு மத்தியில் உண்மையைக் கண்டார். அப்படிக் கண்டுபிடித்தது, அவற்றோடு போராடி அவைகளை அழிப்பதற்கு அல்ல; மாறாக அவைகளை ஞாபகப்படுத்துவதற்கும், காரண காரியம் கூறி விளக்குவதற்காகவுமே. ”

கார்க்கியின் இந்த வாக்கியங்கள் என் வாசிப்பை இன்னும் கூர் தீட்டியது. வாசிப்பது என்றால் என்ன என்பதையும் சுட்டிக்காட்டியது.

 ‘அம்பரய’ நாவலின் மொழி தஸ்தாவ்யெஸ்கியும் டால்ஸ்டாயும் சேர்ந்து எழுதியது போல் இருக்கிறது. ஆனால் அதன் உள்ளடக்கம் மக்சீம் கார்க்கியினுடையதாக இருக்கிறது. அவநம்பிக்கைகளை முன்வைத்து நகரும் கிறிஸ்துவுக்கு அங்கு எந்த இடமுமில்லை. பாவப்பட்ட கிறிஸ்துவையோ, நம்பிக்கைகளை, மதச்சொற்களால் கட்டும் கிறிஸ்துவையோ காணமுடியவில்லை. ஆனால் மனிதன் எத்தகைய அற்புதமான சொல் எனச் சொன்ன கார்க்கியின் மனிதனைக் காணமுடிகிறது. நாவல் நெடுக அம்பரய தன்னைத்தானே வழிநடத்திச் செல்லுகிறான். அவனே சிறுவனாகவும், முழுமனிதனாகவும் நடந்து செல்கிறான்.

பொறாமை வெற்றியாளனிற்கான மரியாதையால் அழகாக மூடிமறைக்கப்பட்டது என்ற வார்த்தைகள் மூலம் அம்பரய எனும் சுமனேவின்  வாழ்வு இழப்பிலிருந்தும் அலைச்சலிலிருந்துமே தொடங்குகிறது. அச்சிறுவனின் ஆகப்பெரிய கனவுகள் சந்தர்ப்பங்களைத் திசைமாற்றுகிறது. பழிவாங்கப்பட்ட மனநிலையால் அவன் அலைவுறும் வாழ்க்கையில் நம்பிக்கையை அவன் எங்கிருந்து பெற்றான் என்பதற்கு நாவலில் எந்த வார்த்தைகளும் கடவுளின் பெயரைச் சொல்லிக் கூவவில்லை. சுமனே சுமனேவிடமிருந்தே அனைத்தையும் பெற்றான் இழந்தான். பெற்றதும் இழந்ததும் சகமனிதர்களால்  மட்டுமே. மேலும் முக்கியமாக சூழலை விதைக்கவும் அறுக்கவுமாக இருக்கும் மனிதர்களாக சூழப்பட்ட ’ ‘அம்பரய’ வின் உலகம்தான் நாவல். கெட்டவர்களாக அறிமுகம் செய்துகொள்கிறவர்களும், நல்லவர்களாக அடையாள அட்டைக் கட்டிக்கொள்பவர்களும் அவ்வுலகத்தில் நிறைந்து இருக்கிறார்கள். சிறுவனாக இருக்கும் அவனுக்குள் பெரியமனிதர்களின் வலிகளும் கடமைகளும்தான் அவனது அலைச்சலை நிர்ணயிக்கின்றன.

அம்பரய
சிறுவன்
ஆம்பல் தேடி அலைகிறவன்
கொலைகாரனின் மகன்

சுற்றியிருக்கும் மனிதர்களில் இத்தகைய அடையாளங்களோடு தன்னை பார்வைக்கு வைத்த அந்த சிறுவன், ஒரு முழுமனிதனின் நம்பிக்கையை தன் பதின்மவயது பருவத்தில் நடந்து கடக்கிறான்.

மொழிபெயர்ப்பை பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. மொழிபெயர்ப்பாகவே தெரியவில்லை.

அம்பரய
சிங்கள் நாவல்
ஆசிரியர் உசுல.பி.விஜய சூரிய
தமிழில் தேவா
வடலி வெளியீடு
விலை; 110