Pages

Thursday, December 2, 2010

நந்தலாலா: இலக்கியவாதிகளின் அம்மணத்தைக் கூவிச் சொல்லும் குழந்தை.

நச்சரவம் பூண்ட தில்லை நாதரே! தேவரீர்
பிச்சை எடுத்துண்ணப் புறப்பட்டும் உச்சிதமாம்
காளமேன் குஞ்சரமேன் கார்கடல்போற் றான்முழங்கும்
மேளமேன் ராஜாங்கமேன்?
நஞ்சுடைய பாம்பை அணிகலனாய் கழுத்தில் சூடிய தில்லை நாதனே சிவனே நீங்கள் எடுக்கப் போவதோ பிச்சை அதற்கெதற்கு எக்காளம் ஊதவேண்டும், யானையில் ஊர்வலம் வரவேண்டும், கடல் ஒலிபோல் முழங்கும் ஆரவாரங்கள் எதற்கு உடன் வரும் கூட்டம் எதற்கு, அணியும் அரச விருதுகள் எதற்கு, எடுக்கப்போவதோ பிச்சை, அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா.
- கவி காளமேகம்
நந்தலாலாவை வைத்து இலக்கியவாதிகளின் பொருள்படும் விளக்கங்கள், மகிழ்வுகள், கண்ணீர் மல்கல்கள் அனைத்தும் காணவேண்டிய திருக்காட்சிகள், இசையருவியில் சாரு, மனுஷ்ய புத்திரன், பிரபஞ்சன், பவா செல்லத்துரை பேசி பேசி மாய்ந்தது கண்டு மனம் வருத்தமடைகிறது. ( இதில் பவாவும் பிரபஞ்சனும் பகடைக் காய்கள்) . லெனின் சொன்னதைப் போல எவ்வளவு பெரிய மேதையாய் இருந்தாலும் அவன் சவப்பெட்டியைத் திறந்து பார்த்தால் கொஞ்சம் ஆணாதிக்கம் துடித்துக்கொண்டிருக்கும் என்று கூறியதை உணரமுடிகிறது. சாரு உயிர்மையில் அவர் ரசனையை, படத்தைப் புரிந்துகொண்ட விதத்தை அலறியிருக்கிறார். முதலில் கிக்கிஜிரோ நந்தலாலாவின் ஒருவரிக்கதையாம். சாரு எங்கே சென்று அந்தப்படத்தைப் பார்த்தீர்கள் உங்களுக்காக ஜப்பான் இயக்குனர் நந்தலாலாவுக்கும் கிக்கிஜிரோவுக்கும் சம்பந்தமேயில்லை என்பதை வெட்டி ஒட்டப்பட்ட காட்சிகளை வைத்துக் காட்டினாரா...
அறுவெறுப்புதரக்கூடிய விசயம் இதில் என்னவென்றால் சாரு மனுஷ்யபுத்திரன், இதற்கிடையில் ஜெயமோகன் இம்மூவரும் (three idiots) அறம் பற்றிக் கதைக்காத நாளில்லை, எழுதாத பத்திரிக்கைகளில்லை சாருவுக்கும் ஜெயமோகனுக்கும், (இவர்கள் idiots ஐயும் தாண்டி) ஒரு ஒற்றுமையுண்டு அதன் பொதுப்பெயர் திருட்டு, மனுஷ்யபுத்திரன் திருட்டுக்கு உடந்தை. ஜெயமோகன் தன் மனைவியின் பெயரில் ஒரு மலையாள இசைக் கட்டுரையைத் திருடி போடவைத்தவர், அவ்வப்போது வசனங்களையும் சுடுவார். (அங்காடித்தெரு படத்தில் கதை நாயகன் முதலாளியைப் பார்த்து யானை வாழ்ற காட்டிலதான் எறும்பும் வாழுது என்ற வசனம், இதைப் பாராட்டி என் நண்பர் உங்காளு அந்த இடத்தில மிரட்டிடான்யா என்றார்...சிறிது நாள் கழித்து பாலகுமாரன் தன் மாத நாவலில் ஒரு அன்பருக்குச் சொன்ன பதில் அது என்று கண்டேன்..அதில் யானைக்குப் பதில் சிங்கம்...இன்னும் சொல்வதற்கு ஏராளம் உண்டு) சாரு முழுத் திருடர் ஆபிதின் நாவல்களை அப்படியே தன் பெயரில் வெளியிட்டவர். மனுஷ்ய புத்திரனோ பிழைப்புக்கு இலக்கியத்தைச் சுரண்டும் வியபாரி. நான் கடுமையாக எழுதக்கூடாதென்ற மனநிலையில்தான் இதை எழுதுகிறேன்...கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது.
சாருவின் விமர்சனம் தினத்தந்தியில் 2.12.2010 ல் பக்கம் 18ல் நந்தலாலா படவிளம்பரத்தில் கொட்டை எழுத்தில் அவர் எழுதியிருப்பது தாய்மடி தேடிய அற்புதமனிதனின் காவிய பயணம், ஆனால் உயிர்மை விமர்சனத்தில் அவர் கூறியிருப்பது, அந்தத் தாய்மையை சற்று தள்ளிவைத்துப் பார்த்தால் படம் புரியுமாம், சாரு மனதில் வாசக மதீப்பீடு எவ்வளவு கேவலமாய் உள்ளதென்று இதன் மூலம் அறியலாம்.
மனுஷ்ய புத்திரன் வெளியிட்ட சாருவின் கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்புத்தகத்தில் திகம்பரன் என்று தலைப்பிடப்பட்டு பக்கம் 94ல் பட்டினத்தார் தாயைப் பற்றி விரிவாகப் பாடிய பாடலை குறிப்பிட்டு அப்படிப்பட்ட துறவியவையே தாய்ப்பாசம் விட்டு வைக்கவில்லை ஆனால் பெரியார் அப்படியில்லை, பெரியார் தன் தாயைப் பற்றி மிகுந்த பிற்போக்குச் சிந்தனையும் மனிதாபிமானமும் அற்று வாழ்ந்த என் தாய் இவ்வளவு நாள் இந்த உலகில் வாழ்ந்திருக்கக்கூடாது, அதற்கு அவருக்கு அருகதை இல்லைஎனச்சொன்னதாக பதிவுசெய்துவிட்டு தன் தாய் பற்றி அவர் சொல்லுகிறார்
சாருவின் தாய்பக்தி 1
(பக்கம் 94, பாரா 2)
என் மனைவி அவந்திகா அற்புதமான குணநலங்கள் வாய்க்கப்பெற்றவள். அப்பேர்ப்பட்ட பெண்ணை என் தாயார் அவமானப்படுத்தினார்கள்:. மிகவும் கீழ்த்தரமாக நடத்தினார்கள் கார்த்திக் என்னுடைய ரத்தம் அல்ல என்பதால் அவனையும் அதே போல் கேவலப்படுத்தினார்கள். ஆனால் இதே அம்மா என்னை மிகவும் பாராட்டி சீராட்டி வளர்த்தவர்கள்தான், தங்கத்தட்டில் தாங்குவது என்பார்களே, அப்படி என்னைத் தாங்கியவர்கள்தான் ஆனால் அவந்திகாவை அவர்கள் தொடர்ந்து வதை செய்தபோது அம்மாவைப் பார்ப்பதையே நிறுத்திவிடேன், ஆறேழு வருடங்கள் இருக்கும் . அவர் இறந்த செய்தி வந்தது, சென்றேன். கொள்ளிவைக்கச் சொன்னார்கள் மறுத்து விட்டேன்.
நிற்க
மேற்கூறிய அதே புத்தகத்தில் என்னை மாற்றிய புத்தகங்கள் என்று தலைப்பிட்டு உள்ளே சாரு சொல்கிறார் என்னை மாற்றிய புத்தகங்கள் என்பதை விட என்னை மாற்றிய சிந்தனையாளர் என பெரியாரை அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டு ஏன் அவரை நான் ஆசானாக ஏற்றுக்கொண்டேன் என்பதற்கு அவர் மிக அழுத்தமாக சுட்டிக்காட்டியது பெரியார் தாய்மையைப் பற்றி விமர்சனம் செய்திருப்பதை.
2 சாருவின் தாய்பக்தி சமூக பக்தியாய் மாறிய கதை
(அதே புத்தகம் பக்கம் 130)
உதாரணமாக, என்னுடைய தாயார் மரணமடைந்தபோது நானே வீட்டின் மூத்தமகன் என்பதால் சடலத்துக்கு கொள்ளி போடுதல் முதலான சடங்குகளைச் செய்வதற்காக அழைக்கப்பட்டேன், ஆனால் சுயம்மரியாதைத் திருமணம் செய்துகொண்ட என்னுடைய தந்தை மரணச்சடங்கின் போது வைதீக முறையைக் கடைபிடித்ததாலும்,பிராமணர்களின் உணவுக் கலாச்சாரத்தை நான் சில காலத்துக்குக் கடை பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாலும் என் தாய்க்குச் செய்யவேண்டிய கடமையை நான் செய்யவில்லை. நான் எந்த சாதிக்கும் எதிர்ப்பாளன் அல்ல, ஆனால், தாய்க்குத் தனயன் செய்யவேண்டிய இறுதிக்கடமை என்ற பெயரில் வேறோர் கலாச்சாரம் என் வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டதால் நான் அந்தச் சுடுகாட்டில் அதை மறுத்தலித்தேன்.
காரணம் என்னுடைய ஆசான் பெரியார். அவர் தன்னுடைய தாயாரைப் பற்றிச் சொல்கிறார் இவ்வளவு பிற்போக்குத்தனமான கருத்துக்களையுடைய ஒரு பெண்மணி இவ்வளவு காலம் உயிரோரு இருந்திருக்க எவ்வித நியாயமும் இல்லைஅதனால்தான் குறிப்பிட்டேன் என் ஆசான் பெரியார்.
நிற்க
பெரியார் தன் தாயைப் பற்றி உண்மையிலேயே சொன்னது.
பொதுவில் சொல்லவேண்டுமானால், அம்மையார் பணத்தாசை இல்லாதவர்கள்; நன்றாய் சம்பாதித்து ,நன்றாய் செலவு செய்தவர்கள்; பார்ப்பனர்களுக்கு ஏராளமாய் அழுதவர்கள் ; அளவுக்கு மீறிய ஆசாரங்களை அர்த்தமில்லாமல் பின்பற்றி வந்தவர்கள்; எத்தனையோ பேரைத்திருத்திய இராமனால்( ஈ. வெ. ரா) அம்மையாரிடம் தன் கொள்கையைச் சொல்லுவதற்குக்கூட தைரியம் ஏற்படும்படியாக அம்மையார் இடங்கொடுக்கவில்லை.
கடைசி வயதில் அம்மையாரைப் பார்க்க வந்தவ்ர்களிடம் என் மகன் ராமனைச் சிறிது பார்த்துக்கொள்ளுங்கள், இளங்கன்று பயமறியாது என்பது போல் கண்டபடி திரிகிறான் என ஆவலாய்ச் சொல்லியே வருவார்கள்.
ஒரு காலத்தில் மவுலாக்கள் சவுகத் அலி மகமது அலி இருவரும் அம்மாயாரின் தலையில் தங்கள் தலையை ஒட்ட்வைத்து வாழ்த்தும் படி கேட்டபோது தன்னை அவர்கள் தொட்டுவிட்டதற்காக முகத்தைச் சுளித்துக்கொண்டார். இதை நான் வெளிப்படையாய் எடுத்துக்காடி கேலி செய்து அம்மையாரை மன்னிப்புச் சொல்லும்படி செய்தேன். அதனால் அரசியல் தலைவர்கள் காந்தி முதல் யார் வீட்டுக்கு வந்தாலும் அவர்கள் எங்கு தன்னைத் தொட்டுவிடுவார்களோ என்று பயந்து , ஒடுங்கி ஒரு மூலையிலேயே நின்றுதான் அவர்களுடன் பேசுவார். மூட நம்பிக்கைகளுக்கும், குருட்டு அனாச்சாரங்களுக்கும் தாயகமாய் இருந்தாலும் 95 வயது வாழ்ந்து முடிவெய்திவிட்டார்.
எனக்கு அவர் முடிவெய்தியதுபற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது. அந்தம்மாளுடைய கோரிக்கை எனக்கு ஒரு கலியாணம் செய்து வைத்துவிட்டுச் சாகவேண்டுமென்பதே. என் கோரிக்கை எனக்கு முன்னதாகவே அம்மையார் முடிவெய்தி விடவேண்டுமென்பதே!
என் இஷ்டம் நிறைவேறியது.
மகிழ்ச்சி! மகிழ்ச்சி ! பூரண மகிழ்ச்சி!
- குடிஅரசு 2.08.1936
நண்பர்களே பெரியார் தன் குடும்ப விபரங்களைக் கூறிவிட்டு தன் தாய் பற்றி இவ்வாறு பதிகிறார். பெரியார் என்னென்ன காரணங்களுக்காக இப்படி எழுதியிருக்கிறார் என்பதை கீழ்கண்ட புத்தகத்தில் படிக்கலாம்.
பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் -பெரியார் ஈவெ ராமசாமி- நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியீடு பதிப்பாசிரியர் வே ஆனைமுத்து
பக்கம்3110.
சாரு பெரியாரின் வார்த்தைகளை என்ன விதமாக அணுகியிருக்கிறார் அதை சாரு எப்படி எழுதுகிறார் என்பதை நாம் தான் புரிந்துகொள்ளவேண்டும், அதையும்தாண்டி அவர் தன் தாய்க்கு கொள்ளி வைக்காமல் போனதற்கான காரணங்களாக கூறிய குழப்பங்களையும் கவனிக்கவேண்டும், உயிர்மை விமர்சனத்தில் நந்தலாலா திரைப்படத்தில் தாய்மை பற்றி எங்கே சொல்லப்பட்டிருக்கிறது அப்படி புரிந்து கொண்டால் அது தட்டையான பார்வையாம். இதை எந்தத் தளத்தில் வைத்துப் புரிந்துகொள்வது என்று பார்க்கவேண்டும். மிஷ்கின் ஆட்டியர் என்றால் `தகேஷி கிட்டானேவை என்ன சொல்வது. இதுதான் உலகத்திரைப்படங்கள் பற்றிய சாருவின் அளவுகோல்.
ஒரு பேட்டியில் அலுவலகத்தில் குமாஸ்தா வேலை பார்ப்பவன் வேலைக்காக பொய்கள் சொல்லலாம், இலக்கியத்தில் உண்மை சொல்லவேண்டும் இங்கேயும் வந்து பிருஷ்டத்தைக்காட்டினால் என்ன சொல்வது என்று கேட்ட சாரு இப்பொழுது உடலின் நவத்துவாராங்களையும் யாருக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார் ...காட்டுவதும் ஏன். யாருக்கு எது பிழைப்பு.
ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் பற்றி விமர்சனத்தில் உடலைச் சுட்டிக்காட்டியதற்கு நொண்டிநாய் என்று சொல்லுகிறான் என அதன் வாசிப்பின் மறுபக்கத்தை சுட்டிக்காட்டிய சாரு சொல்கிறார் நந்தலாலா திரைப்படத்தை தாய்மையைச் சொல்லும் படமாகப் பார்க்கக்கூடாதாம். அதே ஜெயமோகன் மனுஷ்யபுத்திரனை நொண்டி நாய், வாங்கு சொல்லுவது போல் ஒலிக்கும் அதன் கூவல் பற்றியெல்லாம் சொல்புதிது இதழில் வெளியிட்டிருந்தாரே. அப்பொழுது சாரு என்ன செய்தார். அப்பொழுது புத்திரனுக்கும் அறம் இல்லை. ஜெயமோகன் புத்தகங்களைப் பதிப்பிக்கும் அறம் இருந்தது. மறுபடி சாரு வந்து சுட்டிக்காட்டியதும் அறம் விளங்கிவிட்டது.
இடையில் ஜெயமோகன் படம் பற்றி திருட்டானாலும் பரவாயில்லை...இருக்கட்டும் என்று கருத்து வேறு கூறுகிறார். ஜெயமோகன் உங்களால் வேறு எப்படிச் சொல்லமுடியும். தொழிலுக்கு வந்தாயிற்று காப்பாற்றிக் கொள்ளவேண்டியதுதான்.
சாரு தமிழ் சினிமாவை விமர்சிக்க உங்களைவிட்டால் ஆளில்லை என்கிற தோற்றத்தை அவ்வளவு கஷ்டப்பட்டுக் காட்டிவிட்டு ஆனந்த விகடனில் எழுதுகிறீர்கள் நடிக்கும்போதுதான் தெரிகிறது அது எவ்வளவு சிரம்ம் என்று. ஏன் நீங்கள் நடிக்காதவரை, உலக சினிமாக்களை தமிழக சினிமாக்களை தோண்டித்துருவி பின்நவினத்துவங்களோடு விமர்சிக்கும் போது தெரியவில்லையா, நன்றி சாரு தொடர்ந்து இதே தொனியில் அனைத்தையும் பதிவு செய்யுங்கள், நந்தலாலா உலகப்படம் என்கிற உங்கள் திரை அறிவை நான் மெச்சிக்கொள்கிறேன்.
இசையருவியில் வந்த இயக்குனர் பேட்டியில் மனுஷ்ய புத்திரன் அந்த மாதிரி வீடுகளெல்லாம் அவர் பார்த்தேயிராத வீடாம் அதுவும் சவப்பெட்டிக் கதவுகள் வீடே மரணத்தோற்றம்...புரிந்துகொள்ளமுடிகிறது.
மனுஷ்யபுத்திரன்... சுஜாதா எழுதிய ‘ரத்தம் ஒரே நிறம்’ நாவலுக்கு நீங்கள் பின்னட்டையில் எழுதினீர்களே ஒரு குறிப்பு அதையும் புரிந்துகொள்கிறேன். நீங்கள் அதில் எழுதியிருப்பது....
சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப்போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம் இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலகட்டத்தின் பச்சை ரத்தப்படுகொலைகளும் குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன. தனிமனித விருப்பு வெறுப்புகளும் லட்சியவாதமும் ஒன்றிணையும் புள்ளியின் உணர்ச்சிப் பெருக்கையும் துயரங்களையும் பிரம்மாண்டமாகச் சித்தரிக்கும் சுஜாதா சரித்திர புனைகதை வடிவிற்கு ஒரு புதிய பரிணாமத்தை அளிக்கிறார்.....
ஆம் புத்திரன், சுஜாதா அளித்தார் இன்னும் உங்களுக்கு அளித்துக்கொண்டிருக்கிறார், புதிதாக அளிப்பவர்களையும் தேடிக்கொள்ளுங்கள்.
மன்னிக்கவேண்டும். எழுதக்கூசுகிறது. இவர்கள்தான் தமிழ் இலக்கியத்தின் அறத்தை விளக்கும் சன்னிதானங்கள். இவ்வளவு கேவலமாக வாசகர்களை மதிப்பிடும் இவர்களை என்ன செய்வது.
ஓய்வில்லாது அறத்தைப் பேசும் இவர்கள் ஒரு படத்தை இவ்வளவு தூக்கு தூக்குகிறார்கள் என்றால் இவர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால்.. மற்ற படங்களை...யோசிக்கவே அச்சமாக இருக்கிறது. எனக்கு அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என நீங்கள் பண்ணும் அரசியலை குறைந்த பட்சம் நீங்கள் ஒரு காலத்தில், அல்லது தோன்றியபொழுதில் திட்டிய வைரமுத்து செய்ததில்லை. அவர் முதலமைச்சருக்கு நண்பர்...தம்பி. ஆனால் புத்தகங்களை விற்க நீங்கள் பண்ணும் காரியங்கள் சகிக்கமுடியாததாக இருக்கிறது.
வெளியீட்டு விழாக்களுக்கு நீங்கள் அழைக்கும் சினிமா ஊடகத் துறையினரை நானும் வரவேற்கிறேன். இலக்கியத்தின் காட்சி ஊடகமாக அவர்கள் அதை அவர்கள் நாளை வெளிப்படுத்தக்கூடும். அதே போல் அவர்களை விமர்சனக் கூட்டங்களுக்கும் அழையுங்கள், வெளியிட்ட நூலை, அவர்கள் பெற்றுக்கொண்ட நூல்களைப் படித்து விமர்சனம் செய்யச் சொல்லுங்கள். எனக்குத் தெரிந்து புத்தகங்களை வெளியிட வரும் நடிகர்கள், இயக்குனர்கள், சம்பந்தப்பட்ட புத்தகத்தை விமர்சனம் செய்து ஒரு நாலுவரியை வெளியிட்டதுண்டா... தேவைப்படாதென்று தெரிந்தால் சினிமாவை நக்கல் செய்வது. தேவைப்படும்பொழுது துதி பாடுவது. இதுதானா மனுஷ்யபுத்திரன் உங்கள் தலையங்கத்தில் தலைகொதிக்க நீங்கள் எழுதும் அறம்.
சினிமாக்காரர்களை இலக்கியம் தெரியாதவர்கள் என்பது, அவர்கள் அழைத்தால் பங்கிட்டு விட்டு அவர்தான் இலக்கியத்தின் பிதாமகன் என்பது. நீங்களா தமிழுக்கு இலக்கியத்தை சொல்லித் தரவந்தவர்கள். எனக்கு மிகவும் வெட்கமாகவும் அறுவெறுப்பாகவும் இருக்கிறது.
உண்மையில் நந்தலாலா இலக்கியவாதிகளின் அம்மணத்தை கன்னத்தில் அறைந்து சொல்லும் கவிதை.
படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் அய்யோவென்று போவான்.
- மகாகவி.

11 comments:

  1. விற்பனை செய்ய தயாராக இருக்கும் வரையில் அடிமாட்டு விலைக்கு வாங்குபவர்களும் தயாராகவே இருப்பார்கள்...இப்படி விலை போவர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.இந்த சுழலின் அவலம்.இது வேறு என்னசொல்ல.

    ReplyDelete
  2. வசுவின் இந்த எதிர்வினை,அறம் சார்ந்த நிறைய கேள்விகளை
    முன்வைக்கிறது.அறம் பற்றி பேசியே வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கும்
    மனுஷ்ய புத்திரனும்,சாருவும்,ஜெயமோகனும் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.
    இதை பகிரங்க மாக பதிவு செய்து,விவாதத்திற்கு தயாராக வேண்டும்.ஏனென்றால்
    எது அறம் என்பதில் சந்தேகம் உண்டாக்குபவர்கள் குமாஸ்தாக்களோ,தொலைபேசி
    அலுவலக பணியாளரோ,மாற்று திறனாளி யோ அல்ல.நம்மிடம் இலக்கியம் சார்ந்தும்,
    அக உணர்வுகள் சார்ந்தும்,நல்ல திரைப்படம் குறித்தும் விவாதிக்கும் உரிமையை
    எடுத்துக் கொண்டவர்கள்.அதனால் பெயர்,பணம் சம்பாதிப்பவர்கள்.வசுவின் பார்வை
    யில் உண்மையின் தரிசனம் வெளிப் பட்டிருக்கிறது.இனி தாம் குருடர்கள் இல்லை என்பதை
    நிரூபிக்கும் தார்மீகம் மும்மூர்த்தி(!) களுக்கு தள்ளப் பட்டிருக்கிறது.

    ReplyDelete
  3. நண்பருக்கு, சரியான இடத்தைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். அறம் பற்றி உரக்க அறிவித்திருக்கும், அறிவித்துக்கொண்டிருக்கும், அறிவித்தபடியே இருக்கும் அம்மூவரின் அத்தனை புத்தகங்களையும் ஓரளவுக்கு வாசித்துள்ளவன் என்ற முறையில் நான் காத்திருக்கிறேன். விவாதிப்போம். விவாதிக்கலாம்.

    ReplyDelete
  4. வணக்கம் மகேந்திரன், வாழ்வின் பொருட்டு விறபனை செய்தவர்களை புரிந்துகொள்ள முடிகிறது, குமரகுருபரன் சொன்னது போல் அறம் பர்றிப் பேசுபவர்கள் இப்படிப் பேசுவதுதான் அவமானகரமான ஒரு விசயமாய் தோன்றுகிறது.
    தங்கள் வருகைக்கு நன்றி விஜய் மகேந்திரன்.

    ReplyDelete
  5. வசு,
    உங்களுக்கு இவ்வளவு வன்மம் ஆகாது...ஒரு மனிதர் எவ்வளவு கடினமாக உழைத்து அந்த படத்தை உலக க்ளாசிக் என்று நிறுவ முயல்கிறார்...நீங்கள் அந்த உழைப்பை மதிக்க வேண்டாமா?
    அந்த படத்தில் வரும் பாலியல் தொழிலாளி பேசும் வசனத்தை அவர் சிலாகிக்கும் விதம் ஒன்று போதாதா?..என் வாழ்க்கையே ஒட்டடை படிஞ்சு போச்சு என்று காவியத்தரமாக அவள் பேச, இவர் இல்லை இல்லை சாப்பாட்டுக்கே சிரமப்படும் பாலியல் தொழிலாளி கவிதயாத்தான் பேசுவா என்று நிறுவுகிறாரா இல்லையா?...ஒரு பஸ்ஸும் கடந்து போகாத அந்தச் சாலைகள் தமிழ்நாட்டின் வாழ்வைச் சொல்கின்றன வசு...சாப்பாடு போட்டு காசு கொடுக்கும் லாரி ட்ரைவர் அவர்களை ஏன் பஸ்ஸில் ஏற்றி அனுப்ப முயலவில்லை என்று முட்டாள்தனமாக யோசித்தேன். பிறகுதான் தோன்றியது.பஸ்ஸே போகாத சாலைகள்தான் இவர்களை தாய்வாசலுக்கு கூட்டிப் போகிறது.இது சாத்தியமற்ற தன்மையின் குறியீடு.
    அப்புறம் சாரு இப்படம் காட்டும் பருவநிலைகள் பற்றி குறிப்பிடுகிறார்...ஓ! அப்படியெனில் இந்தக் கதை நிகழும் கால அளவு ஓராண்டா?..நான் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் என்றுதானே நினைத்தேன்...? என்னதான் இருந்தாலும் எனக்கு கொஞ்சம் மூளை குறைச்ச்லதான்.(அது சரி நீங்க ஏன் இவ்வளவு டென்சனா எழுதணும்...தமிழ்நாட்டில் பல விஷயங்கள் சிரித்து கடந்து செல்ல வேண்டியவை)

    ReplyDelete
  6. அன்பு பாஸ்...எனக்கு கோபம் எல்லாம் இல்லை, சில வருத்தங்கள்தான்...இயக்குனர் எல்லா மேடைகளிலும் வாசிப்பை முன்னிருத்துகிறார். அதை நாம் வரவேற்க வேண்டும் நினைத்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு என பிறகு புரிந்துகொண்டேன். வாசித்தவர், அதற்கு உண்மையாய் இருப்பின் குறைந்தபட்சம் அதற்கு உண்மையாக நடந்து இருப்பார். நடக்கவில்லை. தாய்மையை எம்.ஜி.ஆருக்குப் பிறகு கையிலெடுத்திருக்கிறார்.

    சாருவும் அதற்கு கதைமூலம், புத்தகங்கள் கொடுத்து உதவுவதன் மூலம், கடைசியில் (படத்தில் ஏதோ டான்ஸ் ஆடியதாகவும் கேள்விப்பட்டேன்)விமர்சனம் வரை உதவி செய்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக படத்திற்கு அறிவுசார் உரிமையையும் அதற்கான மதிப்பையும் கேட்க முயற்சித்தது. தொலைக்காட்சியைத் திறந்தால் உலகத் தரம் என்ற வார்த்தைதான் அவர்கள் வாயில் வருகிறது. ஒரு பத்திரிக்கை கையில் இருக்கிறது, அது போதும் என நினைத்து சம்பந்தப்பட்ட மனுஷ்ய புத்திரன், சாரு, மற்றும் ஜெயமோகன் அதை நல்ல படம் என நிறுவ முயற்சிக்கிறார்களே இவர்கள் கையில் அதிகாரம் இருந்தால் படம் தயாரித்தால் தமிழ் நாட்டில் என்ன நடக்கும் என்று நினைத்துப் பார்க்கமுடியவில்லை. முன்னதாக இப்பொழுது நடப்பதை நாமும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

    ‘படிச்சவன் பாட்டக்கெடுத்தான் எழுதுனவன் ஏட்டக்கெடுத்தான்’ என்கிற ஒரு பழமொழியை நம் ஊரில் சொல்லுவார்கள், தமிழில் கல்வி பற்றி அத்தனை சொல்லியிருக்க இது எப்படி சொல்லப்படுகிறது என்று யோசித்தேன். சாருக்கள் வரவை புரிந்து கொள்ள உதவியது. 5 நிமிட ஷேக்ஸ்பியர் வசனம், 20 நாள் உழைப்பு,உலக இலக்கிய வாசிப்பு, குறவரின் தொன்மம்,உலகமகா அமைதி,ஆட்டியர், மலைப்பாம்பும் சினையாக இருக்கிறது......கவனியுங்கள் பாஸ் எல்லாமே உலக விசயங்கள்.

    பாஸ் எனக்கு உள்ளூர் விசயம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. எனது நண்பர்களில் ஒருவன் தெலுங்கு தேசத்துக்காரர், அவரைத் தமிழ்ப் படம் பார்க்க அழைத்துச் சென்றிருக்கிறார்கள், அவர் திரைப்படக் கல்லூரி மாணவரும் கூட, அது ஒரு பழையபடம், சிவாஜிகணேசன் நடித்தது. படம் முடிந்து பார்த்தால் நண்பரின் கண்ணில் தாரைதாரையாய் கண்ணீர், மற்றவர்கள் விசாரிக்கும் முன்பே தேம்பியபடி என்ன அற்புதமான நாகரிக்கமான காதல் கதை இப்படி ஒரு கண்ணியமான காதல் கதையை நான் இதுவரை கண்டதில்லை எனச் சொல்லி அவர் உணர்ச்சிவசப்படும் முன் மற்ற நண்பர்கள் உணர்ச்சிவசப்பட்டு விட்டனர், அந்தப் படம் பாசமலர் தெலுங்கு நண்பர் சிவாஜியும் சாவித்திரியும் காதலர்கள் என்று நினைத்ததால் வந்த வினை இது. ஒரு நண்பன் விளக்கப் போக மற்றொருவர் விடு அவன் நம்பிக்கையைக் கெடுக்காதே தமிழ் சினிமா பற்றி ஒரு மூட நம்பிக்கையாவது மிஞ்சட்டும் என்று தடுத்துவிட்டார்.

    பாவம் அந்த நிலைமைக்கு தள்ளப்பட்ட படம் இது.

    பாஸ் இதை நானும் சிரித்துக்கொண்டு கடந்து இருக்கலாம்தான், ஆனால் ஒரு எளிய வாசகனாக நான் இந்த அறிவுலக கோமாளித்தனத்தை எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்.

    ReplyDelete
  7. நீங்க சொன்ன பாசமலர் சம்பவம் வெளிநாட்டுக்காரர் ஒருவர் சொன்னதாக விகடனில் படித்த ஞாபகம். அப்ப முதலில் இந்த சம்பவத்தை சுட்டது யார்

    ReplyDelete
  8. நன்றி இரும்புத்திரை, விகடனில் எழுதியவர் என் நண்பராய் இருக்கக்கூடாதா..

    ஒரு விசயத்துக்கே காப்பிரைட்ஸ் தேவைப்படுகிறது. படம் பற்றி தாங்கள் ஏதும் விமர்சனம் வைக்கவில்லையே

    ReplyDelete
  9. http://irumbuthirai.blogspot.com/2010/12/blog-post.html

    http://irumbuthirai.blogspot.com/2010/11/blog-post_28.html

    http://irumbuthirai.blogspot.com/2010/11/blog-post_22.html

    http://irumbuthirai.blogspot.com/2009/12/blog-post_16.html

    ReplyDelete
  10. நன்றி, நான் இவ்வுரையாடலில் நீங்கள் பங்களிக்காதது பற்றிச் சொன்னேன், வருகைக்கு நன்றி.

    ReplyDelete