Pages

Saturday, March 31, 2012

வணக்கம் நேசமித்ரன்...பகுதி 2.



நன்றி

ஒரு போதும் உங்களது எழுத்தை புதிய பதிவு புதிய எழுத்து முறை என்று நான் சொன்னதாக நீங்கள் சொல்வதை பொய் என்றே கூறுகிறேன். ஏனெனில் எனக்கு ஞாபகம் என்பது என்றும் மாறாத நோய். முதலில் நீங்கள் பேசியபொழுது உங்களை யாரென்றே தெரியாது என்று சொன்னேன். பார்த்த ஞாபகமும் இல்லை என்று சொன்னேன் இது என் நினைவில் இருக்கிறது. பிறகு ரமேஷ் வைத்யாவின் வீட்டில் நீங்கள் என்னைச் சந்தித்ததாகவும் நான் உங்கள் கவிதைகளை வெறும் ரெட்டாரிக் என்று ஒதுக்கியதாகவும், ( இது ஒரு 8 வருடம் இருக்கும் ) அதன் பின் அவைகளை எல்லாம் விட்டுவிட்டு தாங்கள் படிக்கத் தொடங்கியதாகவும் கூறினீர்கள்.


உங்கள் ஞாபகப்பிரதியை மெச்சுகிறேன். மேலும் அடுத்த கட்ட விவாதமாக தேனியில் நான் இருக்கையில் முகப் புத்தக வழியாக தொடர்புக்கு வந்தீர்கள் கவிதைப் புத்தகம் போட இருக்கிறேன் என்றீர்கள் என் முதல் கேள்வி எந்தப் பதிப்பகம் எனக் கேட்டேன் நீங்கள் உயிர்மை என்றீர்கள் என் நம்பிக்கையின்மையை நான் சொன்னதும், உடனே கவிஞர் சுகுமாரன் சொன்னார் என்றீர்கள். இருக்காதே என்று சொன்னேன். இல்லை, அவர்தான் சொன்னார் என்றீர்கள். சுகுமாரனுக்கும் உங்களுக்கும் உள்ள நெருக்கம் நானறியேன். உரையாடல் முடிந்தது.

புத்தகத் திருவிழாவில் வலசையைக் கையில் கொடுத்தபோது நிச்சயம் நல்ல உழைப்பென்றே சொன்னேன். ஆனால் அதை உங்கள் படைப்புக்களுக்கான விமர்சனமாக எடுத்துக் கொண்டுள்ளீர்கள் என்பது இப்பொழுது புரிகிறது. அதிலும் தலையங்கம் சார்ந்த வலசையைக் கையில் கொடுத்ததும் அபார உழைப்பென்று சொன்னேன்., ஆனால் வழக்கம் போல் கோணங்கியின் தலையங்கம் எனக்கு புன்னகையை வரவழைத்தது. நீங்கள் என் கையில் வலசையைக் கொடுக்கும் முன் காசு எடுத்தேன்...நீங்கள் அது கொற்றவைக்கான பிரதி என்றீர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டேன். அதற்கும் மேலாக என்னைத் தேடி வலசையை நீங்கள் கொடுக்க காரணம் அதற்கு முன் நீங்கள் என்னைத் தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசியதே. அதுவும் முதல் வலசையைப் பற்றி. நான் நேரடியாகச் சொன்னேன் முதலில் நூறு ரூபாய் என்பது கொஞ்சமும் அடிப்படையில்லாத விலை. பின் கதைகள் உட்பட எல்லாவற்றையும் நான் விமர்சிக்க ( அட்டைப் படம் உட்பட எனக்குப் பிடிக்கவில்லை என்பது முதற்கொண்டு) நீங்கள் அதில் வந்திருக்கும் கதைகளை மையமாக வைத்து சொன்னது இந்தக் கதை கோணங்கிக்கு மாற்றாக வைத்தது, அவர் எதிலிருந்து காப்பியடிக்கிறார் என்தை சொல்ல வந்த கதை”, “இந்தக் கவிதை யவனிகாவை முன்வைத்து..... என பல பெயர்களைச் சொன்னீர்கள்... நான் அப்பொழுது சொன்ன வாக்கியம் நேசமித்ரன் இதுதான் உண்மையென்றால் அதை இதழில் பதிந்திருக்கலாமே ஏன் அவ்வாறு செய்யவில்லை என்றதும் இல்லண்ணே...ஹி....ஹி......அது.... என்றீர்கள்...அது நட்பு என உணர்ந்தேன், அதைத்தான் முதல் கடிதத்தில் பொறணி எனக் குறிப்பிட்டேன். நிற்க......

விடியல் பதிப்பகத்தில் வலசையை விற்பனைக்கு வைக்கச் சொன்னீர்கள் அப்பொழுதே என் முகத்தில் தெரிந்த புன்னகை தங்களுக்கு ஏளனத்தை நினைவூட்டாததில் எனக்கு மகிழ்ச்சியே. (விடியல் பதிப்பகம் நான் சொன்னால் எதையும் கேட்கும் என்ற உங்களது நம்பிக்கை அப்பாவித்தனமானது. அப்பொழுது நான் உணர்ந்தது...விடியல் பதிப்பகம் வெளியிட்ட எந்த புத்தகத்தையும் நீங்கள் படிக்கவில்லையென்று.....) வலசையை அங்கு வைக்க வேண்டுமாம் என்று விடியல் தோழரிடம் சொன்னதும் அந்தத் தோழர் செய்த புன்னகையும் அவ்வாறே இருந்ததை என் ஞாபகச் சிடுக்கில் இருந்து சொல்கிறேன்.

விடியலில் வலசையா நினைக்கவே அச்சமாக இருக்கிறது நேசமித்ரன். கவிதைகளை விட அதை எழுதும் மனிதனின் மனத் தேவைகள் குறித்து ஓரளவுக்கு புரிந்து கொள்கிறவன் நான். கவிதைகளை எப்படி புரிந்து கொள்வது என என்னிடம் பாடம் கேட்ட தாங்கள் எனக்கே விளக்குவது மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது.

நிச்சயம் கோணங்கி பற்றி நீங்கள் என்னிடம் பேசியது பொறணிதான் மறுப்பதற்கில்லை. மது விசயங்களில் எனக்கு நாட்டமில்லை, ஆனால் இன்னொன்று சொல்வேன் நாலைந்து இலக்கியக் கூட்டங்களில் கலந்து விட்டால் கவிஞர்களின் தோளில் கைபோட்டு திசை பார்த்து புகைப்படமெடுத்துவிட்டால் தானும் கவிஞராகிவிடலாம் என்ற உங்கள் நினைப்பை போற்றுகிறேன். தன்னம்பிக்கை வாழ்க.

தனிமனித வன்முறை என்னளவில் அளவில் வேறுபட்டது. நான் அனுபவித்த துயரத்திலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் அதிகம். ஆனால் வெறும் வார்த்தைகளை வைத்து கும்மியடிக்க எனக்கு ஒரு போதும் தெரியாது. அதைத்தான் வாசகன் மீது ஆசிரியர் செலுத்தும் ஆகச் சிறந்த வன்முறையாக கருதுகிறேன். கோணங்கியை படித்தது போதாதென்று அதன் மோசமான டப்பிங்கையும் ரீமிக்ஸையும் படைப்பு என்று தாங்கள் சொல்வது தரங்கூடிய வன்முறை மட்டுமல்லாது, வாசகருக்கு துரோகத்தையும், வீணாக மரங்கள் அறுபடுவதையும் நிகழ்த்துகிறது.

உங்களிடம் உரையாடும் எனது எண்ணத்தை தாங்கள் சந்தேகிக்க வேண்டாம். வேண்டுமென்றால் பொதுவில் கூட வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் என்னுடன் உரையாடுவதில் உங்களுக்கு இருக்கும் உவப்பு எனக்கில்லாவிட்டாலும் நீங்களும் நானும் நம்பும் இலக்கியத்திற்காக இதைச் செய்யலாம்.

உங்களுக்கு டப்பிங் பாடல்கள் மட்டுமல்ல ரீமிக்ஸ் மற்றும் ரீமேக் செய்யும் உத்தியும் இருக்கிறது. இதைத்தான் கோணங்கியின் அப்பட்ட கழிவுக் குப்பை என்று சொன்னேன். அப்படி இல்லை என்பது கடவுள் இருக்கிறார் என்று நிறுவ முயல்வதற்கு சமம்.

கோணங்கியிடம் மட்டுமல்ல உங்களது எழுத்துக்களை வாசிக்கும் யாரும் கோணங்கியைத் தாண்டாமல் வாசிக்க முடியாது. ஒருவேளை அப்படி வாசிப்பவர்கள் கோணங்கியை வாசிக்காமல் இருந்திருந்தால் உங்களுடைய எழுத்து புது எழுத்து முறை எனச் சொல்லலாம். ஆனால் கோணங்கியை வாசிக்கும் போது அவருக்கு அவரே தன் வாழ்நாளில் காணாத சிரிப்பை கூடுதல் சத்தத்துடன் வெளிப்படுத்திவிடும்.

மேலும் நீங்கள் கோணங்கியின் எழுத்துக்களை பின் தொடரக்கூட இல்லை. அதையும் ஏதோ ஹோட்டல் பில்லைப் போல்தான் கையாளுகிறீர்கள். கோணங்கி எழுத்தைப் போல் நீங்கள் எழுதுவதாக நான் சொல்கிறேன் என்று நீங்கள் தட்டையாக புரிந்து கொள்ள வேண்டாம். ஒரு வேளை கோணங்கி போல் நீங்கள் எழுதக் கூடுமென்றால் அதுதான் கோணங்கியின் மகத்தான தோல்வியாக இருக்கக் கூடும். ஒருவர் எழுத்தை ஒருவர் வெற்றிகரமாக கையாள முடியுமெனில் அது கலை அல்ல தொழில் நுட்பம்.

அடர்த்தியான சொற்செட்டுகள் கொண்டு எழுதுவது என்றெல்லாம் நீங்கள் சொல்வது டூ மச் நண்பரே.....

எனக்கு டப்பிங் பாடல்களும் ரீமேக் படங்களும் பிடிக்காது. அதோடு ரீமிக்ஸும்.  சொந்தமாக உழப்பி வைத்தால் கூட ஏற்றுக்கொள்ளுவேன். ஏனெனில் அது சொந்த உழப்பல். நீங்கள் அதையும் கோனங்கியை முன் வைத்துதான் செய்வேன் எனும் போது எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை.


மறுபடியும் சொல்கிறேன் கோணங்கியை இவ்வளவு மோசமாக யாரும் அவமானப் படுத்த முடியாதென்றே எண்ணுகிறேன்.

இன்னும் ஒன்று சவாலாகவே சொல்கிறேன்
ஒரு வேளை... புத்தகங்கள், அகராதிகள், ஆங்கில, அறிவியல் அகராதிகள், டூரிஸ்டர் கைடுநிகண்டுகள் இல்லாத அறையில் உங்களை அமர்த்தி வைத்தால், அவ்வறையில்  நீங்கள் கவிதையென்று ஒன்று எழுதும் போது...சத்தியமாக நீங்கள் எனைப் பொருட்படுத்தி எழுதும் வெறும் வசைகளாக மட்டுமே இருக்கும்.

உங்கள் விமர்சனம் கூட  எதோ ஒன்றைக் காப்பி செய்வது போல் இருக்கிறது. வணக்கத்துடன்
வசுமித்ர

2 comments:

  1. முதல் இடுகைக்கும் இரண்டாம் இடுகைக்கும்தான் எவ்வளவு முரண் /பொய் .சுயமாய் ஒரு சொல்லை நீங்கள் எழுதும் நாளில் ஒரு வேளை உங்களுக்கு என் எழுத்து புரியலாம் வசுமித்ர.அது வரைக்கும் யூகங்கள் வளர்த்துக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு . தான் சொன்னதை ,செய்ததை இல்லவே இல்லை என்பவரிடம் பேசுவதற்கு இனி ஒரு சொல்லும் இல்லை.விரும்பினால் வழக்கம் போல் நீங்கள் காத்திருக்கலாம் . வணக்கத்துடன் நேசமித்ரன்

    ReplyDelete
  2. நேசமித்ரன்...பொய்களை பொய்கள் என்றே அறிவிக்க முடியும். நீங்கள் என் கவிதைகள் குறித்த புகழுறைகளை முன்வைப்பது காரிய சித்திக்காகவே என்று எனக்குத் தெரியும். சுயமாய் நான் எழுதுகிறேனா இல்லை என்பது என் வாசகர்களுக்கும், வெளியிடும் பதிப்பாளருக்கும் தெரியும். ஆனால் உங்கள் எழுத்து கோணங்கியின் அப்பட்டக் கழிவுக் குப்பை என்பதை மறுபடியும் நிறுவுகிறேன்....அதில் எந்த மாற்றமும் இல்லை. உண்மையில் உங்களது இலக்கிய நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். உங்களிடம் பொய் சொல்லி எனக்கு நிரூப்பிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஆனால் பொய்களை வலிந்து கூறி இதுவரை எதையும் சுயமாய் செய்யாது போட்டோ எடுத்தும் தோளில் கைபோடச் சொல்லி நீங்கள் எடுத்த புகைப்படங்களும் உங்கள் அவஸ்தையை எப்போதும் பறை சாற்றிக்கொண்டிருக்கும். இதற்கு மேலும் விவாதத்தை பொதுவில் கூட வைத்துக்கொள்ளலாம் என்றும் சொன்னேன். நேரில் பேசலாம் என்றும் சொன்னேன். ஆனால் தப்பித்து ஓடும் உங்கள் எளிய மனத்தைப் புரிந்து கொள்கிறேன். உங்களுக்கு என்னிடம் பேசுவதற்கு ஒரு சொல்லும் இல்லை என்பது எனக்குத் தெரியும்...ஆம் உண்மையில் ஒரு சொல்லும் சொந்தமாக இல்லை.

    ReplyDelete