Pages

Sunday, March 31, 2013

எனது குரல்களை





எனது குரல்களை
நான் கண்டுகொள்கிறேன்
உடலுரசிய பூனைகளின் வால்களை கனவில் காண்கிறேன்
மௌனத்தை குரல்களால் அனுபவிக்கும்போது
வெற்றிடத்தில்
சொட்டி
ஒலிக்கிறது வலி

எல்லாவற்றையும்
அறிய முயற்சிக்கும் பிடிவாதத்தில்
மழை பெய்யட்டும்

காகிதங்களை எரிக்கிறேன்
எழுத்துகள் புகைந்து சித்திரத்தை வரைந்து விட்டுப் போகிறது

நடுத்தெருவில் கண்டெடுத்த புல்லாங்குழலின்
மத்திம துளையில்
நாடோடி தன் யாசகக் குரலை
விட்டுச் சென்றுள்ளான்

பியானோக்கள் தங்கள் கட்டைகளென
என் வீட்டை அதிர்வுறச்செய்கிறது
நடுங்குதலில்
துடித்தெழும்புகிறது
பெரும் இசை

எல்லாவற்றையும் குரல்களாக்க
அந்தகன் முயல்கிறான்
தன் குரலை பிரதியெடுப்பவனை நாளும் ஓயாது தேடுகிறான்
தன் குரலை பார்க்க முடியதெனினும்

செவிகளால் ஒரு உரசல்
அல்லது
ஒரு சிறிய புணர்ச்சி
இவ்வளவே

அந்தகனுக்கு அவன் குரலை ஒலித்துக்காட்டுவது
அந்தகனால்தான்
முடியும்
முடியவேண்டுமென நான் நம்புகிறேன்

அந்தகனுக்கு நெருக்கமாக
அவனுக்கு உறவாக
குரல் மட்டுமே இருக்கிறது
அந்தகனது  குரலை பிரித்தெடுக்கும் அந்தகன் அறிவான்
அது
மாபெரும் சவால்
கொலை
நிகழ்த்திக்காட்ட இயலாத குழந்தையின் தற்கொலை

அந்தகனின் குரலைத் திருடத் தயாராயிருக்கும்
இசைக்குறிப்பை
எழுதும் விரல்களை நான் அறிவேன்
அவை அந்தகர்களின் கடவுளர்களுடையது

கடவுளும் அந்தகனாய் இருக்கும்போது
சித்திரம் நிறங்களால் கலங்கி விடுகிறது

கடவுள் அந்தகன்

காட்சிகளால் அந்தகனின் குரலை அனுபவிக்கமுடியாது
அந்தகனை பார்வையுள்ளவர்களால் சபிக்க
ஆசிர்வதிக்க
மன்னிக்கமுடியாது

அவன் அந்தகன்
இருளின் நிறத்தை ஓயாது புணர்ந்து சலிப்பவன்

புணர்ச்சி
விழியுள்ளோருக்கு வெறும் சித்திரம்
ஒப்பிட்டுக் கொள்ளும் சதையின் கனபரிமாணங்கள்
பெயர்கள்
உதற முடியா ஈரம்
விரல்களைக் குழப்பும் வெறும் பிசுபிசுப்பு

அந்தகனுக்கு
புணர்ச்சி குரலில் தோன்றி
குரலில் முடியும் இசைக்குறிப்பு

அவன் இசைஞன்
கண்கள்
உள்ளவர்கள்
செவிகளை இழப்பாளர்களாக


அந்தகனுக்கு இரண்டு குரல்கள்
இருக்கும் பட்சத்தில் மானுடச்செவிகள்
இருள்பூச வேண்டுமென  நான் நம்புகிறேன்

அந்தகனின் குரலை இசைக்க
நாடோடி தெருவில் இறங்குகிறான்

ஒரு பெண் தானமிடுகிறாள் குரலை
தெருவின் சித்திரம் இவ்வாறாக நிறைவுபெருகிறது

ஒரு குரல்
தனித்து ஒலிக்கிறது

No comments:

Post a Comment