Pages

Sunday, June 2, 2013

தீர்க்கதரிசி.



குற்றம் புரிவோரைப் பற்றி,
அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல,
மாறாக, உங்களுக்கு அவர்கள் அந்நியர்கள்
என்பதைப் போன்றும், அவசியமின்றி
உங்கள் உலகத்தில் குறுக்கிடுபவர்கள்
என்பதைப் போன்றும் நீங்கள் பேசிவருவதை
நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

ஆனால் புனிதர்களும், நேர்மையானவர்களும்கூட
உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும்
உயர்வைக் காட்டிலும்
அதிக உயரத்திற்குச் சென்றுவிட முடியாது
என்று நான் சொல்லுகிறேன்.
அதேபோல் கொடியவர்களும், பலவீனர்களும்
உங்கள் ஒவ்வொருக்குள்ளும் இருக்கும்
தாழ்வைக் காட்டிலும்
தாழ்ந்த இடத்திற்கு வீழ்ந்துவிடமுடியாது.

மரத்தின் மௌன அறிவுக்கு அப்பாற்பட்டு
எந்தவோர் ஒற்றை இலையும் பழுப்படைவதில்லை
அதுபோன்றே உங்கள் அனைவரின்
இரகசிய விருப்பம் இல்லாமல்
எந்தவொரு குற்றவாளியும்
குற்றம் புரிவதில்லை.
உங்களுக்குள்ளே இருக்கும் கடவுளை நோக்கி
நீங்கள் ஒரு யாத்திரை மேற்கொள்வதைப் போன்று
இணைந்தே நடைபோடுகிறீர்கள்

பாதையும் நீங்களே,பயணிப்பவரும் நீங்களே
உங்களில் ஒருவர் கீழே விழுகிறார் என்றால்
தடைக்கல்லைக் குறித்து
தனக்குப் பின்னால் வருபவர்களுக்கு
எச்சரிக்கும் விதமாகவே
அவர் விழுகிறார்.

அதுமட்டுமல்ல, முன்னால் சென்றவர்கள்
தன்னைக் காட்டிலும் வேகமாகவும்,
உறுதியோடும் சென்றபோதிலும்
தடைக்கல்லை அகற்றவில்லை என்பதால்
அவர்களுக்காகவும்தான் அவர் விழுகிறார்.

                                                                                     - கிப்ரான்.



மொழியாக்கம் வெ. கோவிந்தசாமி

1 comment:

  1. "தடைக்கல்லை அகற்றவில்லை என்றால் பயணித்து என்ன பயன்...?" என யோசிக்க வைக்கிறது...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete