Pages

Sunday, February 14, 2016

ஒரு காதல் கவிதை எழுத முடியாத விரல்களை என்ன செய்யலாம்......


என்ன செய்யலாம்
கவிஞனை
ஆற்றாமையை
ஒப்பற்ற துரோகத்தை
துரோகத்தில் ஊறித்ததும்பும் புன்னகையை
கனவுகளின் வாய்க்காலை
நஞ்சூறி விரியும் வெண்சிறகை
எடைகூடிய சொற்களைச் சுமக்கும்
கனத்த இதயத்தை

கண்ணீரின் வெதுவெதுப்பை
இயலாமையின் சாறை
கைவிடப்பட்டவனின்
இறுதிச்சடங்கை

கவிஞன்
வானமும் வெளியும்
சூன்யமும் இல்லாத
அகதி
தலைச்சிறந்த அயோக்கியன்
அனாதை

வழியிழந்த
பேதமறியா விரல்களால்
நாளும் எழுதிச்செல்கிறான்

பறவைகளே நிதானமாயிருங்கள்
வயல்வெளிகளில்
சொற்களை விதைக்கிறார்கள்

ஒரு பிரிவை எழுத விரும்பாத விரல்களை என்ன செய்யலாம்
அறிவீர்கள்
நண்பர்களே பிரிவின் உப்பும்
தகிக்கும் காழ்ப்பும்
பிரிவின் எரிப்பும்
சொல்லின் முடிவும்
இறுகி
உடைக்க முடியா உன்மத்தமடைகிறது

புணர்ச்சியில் வெம்பிச்சரியும் உடல்கள் கவிஞனுடையதில்லை
களைப்பு அவன் வரிகளைத் தீண்டுவதில்லை
விடை பெற்ற முத்தங்களை
முத்தகங்களீந்த வரியுதடுகளை
கனைக்கும் குதிரைகளின் கால் குளம்புகளை
கவிஞன் சொற்களாக்குகிறான்

ஒரு கூர் நுனித் தனத்தை
முரசென அறிவிக்கும்
கவிஞனின் கரத்தை
எப்படித் துண்டிக்கலாம்
வார்த்தைகளை இழந்த மௌனத்தை
உதட்டில் பீய்ச்சியடிப்பவனை
குருதியை யாசகம் கேட்பவனை
மண்டையோடுகளை காய்ந்த உதடுகளால்
அரவணைத்து முத்தமிடுபவனை
கவிஞனை
என்ன செய்யலாம்
விரல்களை
கரத்தை
கவிஞனை
கவிதையை

அவன் விரும்பாத நிதானத்தை
நிதானத்தின் பதட்டத்தை
என்ன செய்யலாம்
என்ன செய்யலாம்
ஒரு கவிஞனின் பிணத்தின் முன் சிறுநீர் பெய்யலாம்
அல்லது
பதிலுக்கு அவனது கவிதையை வாசிக்கலாம்
கவிதையை முடிக்கும் போது
பெய்யும் சிறுநீரை நிறுத்திவிட்டு
கண்களில் வரவழைக்கலாம்
கனங்கூடிய உப்பை.


No comments:

Post a Comment