Pages

Monday, September 12, 2016

நகரும் பாதங்கள்.

புத்தனின் மதுக்குடுவை

உபாயா கவ்சல்ய. 



இதுவுமது


பறவைகள் புணர்ச்சி முடிந்து துயிலும் நேரம் புத்தனே…
வேடர்கள் தங்கள் வில்லை அணைத்தவாறு உறங்கும் நேரம் புத்தனே….
நண்பர்கள் பிரியமான எதிரிகளைக் கனவில் காணும் நேரம் எனதருமை புத்தனே….
துக்கம் தன்னுடலை பிம்பமாக்கும் பிரிய இரவிது புத்தனே.

‘அறிந்திருக்கமாட்டீர்கள் பிக்குகளே…’ குரல் மரங்களை அசைத்துப் பின் திசைகளை அடைக்கிறது.

ஆம் நான் கோதமன்.  சுத்தோதனனின் இனிய புதல்வனும், பார்க்கும் கணம்தோறும் மனதில் மாயங்களை ஏற்படுத்தும் பேரழகி யசோதரையின் கணவனும்.  தரை தொடாது மேகத்தில் மிதக்கும் பருவத்திற்குரிய சிசு ராகுலனின் தந்தையுமாவேன்.  நான் ராகுலனின் தந்தை.  ஆம் அழியப்போகிறது.  அனைத்தும் தலை உதறி நிதானத்திற்கு வர இக்கோதமனுக்கு நிதானம் வரவில்லை.  அறைச் சுவர்கள் ஈரத்தைப் போர்த்தி அமைதியாய் இருந்தது.  ஒருமுறை இவற்றை நான் சபித்திருக்கிறேன்.  விழிகளை மூடி நிதானங்கொள்ளும் சுவர்களை யார்தான் விரும்புவார்கள்.  ஆம் கோதமா… அறிந்திருக்கமாட்டாய்.  அறிந்திருந்தாலும் நடித்திருப்பாய்.  நடிப்பின் கைகளை உடல் அழுந்தப்பற்றியவன்தானே நீ… மௌனம் உருக்கொண்டலைந்து உன்னைப் பிரசவித்ததென உன் பின்னால் சுற்றும் கனத்த பிக்குகளின் வார்த்தைகளுக்கு நீ புன்னகையைக்கூட மௌனமாக்கிச் சிரிக்கலாம்.  அவர்களின் வலுத்த கேள்விகளை அவர்களுக்குள்ளேயே புதைத்துவைக்க உதவி செய்யலாம்.  ஆம் புலன்களே அறியாது குழி தோண்டக் கூடியவனல்லவா நீ.

யசோதரை
அழகிய மௌனம்
இல்லையா என் ததாகா…
ஆம்
பறவைகள் புணர்ச்சி முடிந்து துயிலும் நேரம்

ததாகா…
இதோ அறிமுகமாகிறது முதல் சித்திரம்

தாழ்ப்பாள் திறக்கும் ததாகன்.

கோதமா.. கடும் பனியில் நிலவு தகிக்க குளிரில் உறைந்திருக்கும் தாழ்ப்பாளை நீக்கும் உன் விரல்களை நினைக்கிறேன்.  ஆம் அதே விரல்கள்தான் இன்று ஞானத்தைச் சுட்டும் குறி நிலைகள்.  ஆச்சரியம்.  கொங்கைகளை மறந்த பெண்போல.  ஆம் யசோதரை துயில் கொண்டுள்ளாள்.  அப்படித்தானே தாழ்ப்பாளை நீக்கும் நொடியில் நினைத்துக்கொண்டாய்.  இருக்கலாம். பிரபஞ்சத்தில் ஞானத்தைத் தூங்கவைத்து விழிப்பு நிலை தேடி வெளியே சென்ற நீ வேறு எப்படி நினைக்கமுடியும். அவள் தூங்குவதை உன் விழிகள் உன் விருப்பப்படி நம்பிவிட்டன.  உடன்பட்டாய்.  அதை நீயே பார்த்துக்கொண்டிருக்கிறாய். 

முட்டாள்..  ஒரே ஒரு புன்னகை செய்வதன் மூலம் யசோதரை அன்றிரவே..அந்நொடியே உனை கொலை செய்திருக்கலாம்.  உன் பயம் உன் உடலை எப்படிக் கவ்விப்பிடித்தது என்பதை உன் புலன்கள் அறியும்.  பாதங்களை இறுகப்படித்து தயார் செய்து தொடைகளைத் தளரவிட்டு நடுங்கும் உன் விழிகளால் கட்டிலை நோக்கியது என் ஞாபகத்தில் இருக்கிறது.  உனக்கு… தயவு… செய்து வெட்கப்படாதே.. வெட்கம் அறியாமையின் குழந்தை.  நீயல்ல அது.  அவள் உன்னைத் தப்பிப்போகவிட்டாள்.  அதே.  தப்பியே போகவிட்டாள்.  அவளுக்குத் தெரியாதென்று எண்ணிய உன் முட்டாள்த்தனத்தின் மீது என் வெறிபடர்ந்த முத்தமொன்றை பரிசாகத் தருகிறேன்.  சஞ்சலம்தான் மதுக்குடுவைக்கு ராஜபாட்டை.  இருக்கட்டும்.

அவள் பெண். யசோதரை.

யசோதரை தன்னருகில் உன் மிச்சமான வடிவில் துயிலும் ராகுலனின் சிறு தோள்கள் மீது தனது மூச்சுவிடும் தூரத்தைக் கணக்கிட்டு துயின்றுகொண்டிருந்தாள்.  இல்லை… அது நீ நினைத்தது.  மாறாய் அவள் விழித்திருந்தாள்.  உன் பெருமூச்சின் தகிப்பை அறிந்த அக்கைகள்தான் நீ படுக்கையைவிட்டு விலகிய தருணத்தைக் காட்டிக்கொடுத்தது.  ஆனால் அதற்கு முன்னரே கணித்துவிட்டாள்.  திடுக்கிட்டு விழி சுழற்றும் கோதமா எல்லாம் முடிந்த விசயம் என்று நீ எண்ணிய தருணத்தில் விழுந்த முதல் சவுக்கடி இதுதான்.  அவள் உன் புணர்ச்சித்துணை இல்லையா கோதமா. 

ஆம். கோதமா…

உனக்கும் யசோதரைக்கும் நடந்த அன்றைய இறுதிப் புணர்ச்சியில், நீ கழித்த இந்திரியத்தில் தனிமையின் பெரும் புழுக்கள் ஊர்ந்ததை யசோதை அறிவாள். 

தூங்கும் பெண்ணாய் அவளை கற்பனை செய்த உன் விழிகள் அதை அறியமுடியாதபடிக்கு தன்னை மாற்றிக்கொண்டிருந்தன.  தாழ்ப்பாளில் விரல்களைப் பதித்து விழிகளை யசோதரையின் முகத்தை இறுத்திக்காட்சியாய் பர்த்தாய்.  துக்கத்தை இமைகளாக்கி கருவிழிகளை குரலாக்கி அதை இடதும் வலதும் உருட்டிக் கொண்டிருந்த நீ அவள் விழிப்பை அறிய வழியில்லாது போயிற்று. 

எல்லாம் உன் அறீவின் கப்பில் விளைந்த நீதி.  நீதி தரும் எண்ணற்ற சொற்கள்… இறூதில் வலு மௌனம்.  இரண்டன்றி வேறொன்றை உன்னால் எப்படி நிகழ்த்தமுடியும்.  உன்பயணம் போலிமௌனத்தை தொடமுயற்சிக்கும் எதிர்கால விரல்களுக்காக அவள் தன் மௌனத்தை நம்பியிருந்தாள்.  பித்துப்பிடித்தலையும் பாதங்கள் உனக்கென்பதை தன் முதல் முத்தத்திலேயே அறிந்தாள்.  முத்தமிடுகையில் உன் கால்கள் திசைகளை ஒருபோதும் நம்பாது தவித்தபடியிர்ருப்பை அவள் அறிவாள்.  அதே பாதங்கள் துணுக்குற்றுத் தயங்கி நடுங்குவது கண்டு அவள் தன்னை எழுப்பிக்கொள்ளாது தூங்கும் நடிப்பை தன் உடலுக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தாள்.  ஒப்பற்ற நாடகத்தின் அரங்கத்தில் நுழையப்போகும் உனக்கு அவளின் அசையாத உடல் உன்னை ஏமாற்றியது.  அவள் நீ நினைத்தபடியே தூங்குகிறாள் என உன் நம்பிக்கை உனக்கு தைரியம் கொடுத்தது.  முதலும் இறுதியுமாய் உன்னை மீறி…  உன் உடலை மீறி… யசோதரையாகிய அவள் கோதமனின் மனைவியாகிய அவளறிந்த தன் உடலை தன் செய்கையை மீறிப் புத்தனாகப் போகும் ஒருவனின் நடிப்பை அரங்கேறவிட்டாள்.  நீ விலகி அறைக்கதவை மூடுகையில் ஒரு முத்தம் ராகுலனின் விழிகளில் பதிந்தது.  உன் பாதங்கள் சந்தேகம் பற்றிப் பின் தொடர ஆரம்பித்தது அங்கேதான் யசோதரையை பிர்யும் கணத்தில் என் கண்ணில் நிழலாடியது என்ன… தீராக்காமத்தின் பெருவிரலா என்ன?


ஓவியம்;


No comments:

Post a Comment