Pages

Friday, March 17, 2017

அடிப்படைவாதம்






அடிப்படைவாதம்
அது
நீ உயர்த்தும் குரலில் இல்லை
கருத்துச் சுதந்திரத்தை அறுத்து
கூறுபோட்டு விற்கும் போதும்
ஆயுதம் உயர்த்தும் போதும்
அதன் கண்களைக் கவனி
கடவுளின் கண்களைக் காண்பது போலிருக்கும்

தொண்டைக்குள்ளிருந்து
நீ அழைக்கும் இறைவனை
இப்பொழுது நான் கைவிடுகிறேன்

கொழுப்புக் கரைவது போல்
உன் கடவுள் கரைந்து கொண்டிருக்கிறார்


தோழர் மார்க்ஸ்...
ரொட்டியில் நீங்கள் சுதந்திரத்தை எழுதினீர்கள்

நாங்களோ
எங்கள் கடவுளின் பெயரை எழுதினோம்

மதம் ஆன்மத்தேவைகளைப் பூர்த்தி செய்கிறது
பிணத்தேவைகளை நிறைவேற்றுகிறது
அப்படியே ஆகட்டும்
இந்த வார்த்தையை இப்படியே உச்சரியுங்கள்

நான் இந்து
எனக்காக நான் பேசிக்கொல்வேன்
நான் இஸ்லாமியன்
எனக்காக நான் பேசிக்கொல்வேன்
நான் கிறித்தவன்
நானும் எனக்காகப் பேசிக்கொல்வேன்

கம்யூனிஸ்டுகளே….
நீங்கள் யாருக்காகப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்!

மன்னித்துவிடுங்கள் மார்க்ஸ்….
அடிப்படைவாதம் என்பது
நான் என்ற சொல்லுக்குப் பின்னாலிருக்கும் நலனே

கடவுளை கோபிக்காதீர்கள் சாதுக்களே…
தன் உருவில்தான் மனிதனையும் படைத்தானவன்
மனிதன் வெறுமனே அதை நிகழ்த்திக்காட்டுகிறான்
கொலைகார மனிதன்
கொலைகாரக் கடவுள்
கொலைகார மதம்

அடிப்படைவாதத்தின் வாய்
தன் பெயரை அடையாளத்தின் பெயரால் கூவுகிறது
கொலை
மதங்களின் பிறப்புரிமை

தேசியக் கொடியை ஒரு கணம் உற்றுப்பாருங்கள்
காவிக்கொலை
வெள்ளைக்கொலை
பச்சைக்கொலை
நழுவிச் சுழல்கிறது பௌத்தப் படுகொலை

ஆகட்டும் கடவுளே
உன் அம்மணத்தை
என் பிணத்தை வைத்து மறைத்துக்கொள்

Wednesday, March 15, 2017

தமுஎகச தொண்டர்களுக்கு…






தமுஎகசவின்(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) அவசர அம்பேத்கரான ஆதவன் தீட்சண்யா, தொலைக்காட்சி பேட்டியொன்றில், கம்யூனிஸ்ட் கட்சி பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் இருப்பது குறித்து, தனக்கு கேள்விகள் இருப்பதாகச் சொன்னபோது,  கமுக்கமாய் இருந்த தொண்டர்கள், இப்போது அதே கேள்வியை உடன்பிறப்புகள் கேட்டதாக,  கொதித்தெழுந்து, கம்யூனிஸ்டுகள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று பட்டியலிட்டு பதறுவது ஏன்.  உங்கள் அடையாளக் கொதிப்பை முதலில் உங்கள் அமைப்பிலேயே காட்டுங்கள்.

உட்கட்சிப் போராட்டம் பற்றித் தெரியவேண்டுமென்றால் லியூ ஷோசியிடம் கேளுங்கள். அது ஒன்றும் தற்கொலைக்கு நிகரானதல்ல.  இன்னும் ஒன்றும் சொல்வேன், கட்சியைக் கலைத்துவிட்டு வேறு தொழில் பார்க்கலாம் என்று சொன்ன மார்க்சிய அறிஞர் அ.மார்க்ஸையும் துணைக்கு அழையுங்கள்.  நந்திகிராமில் நடந்தது என்னவென்று கேளுங்கள். அதோடு முக்கிய மார்க்சிய அறிஞரான எஸ்.வி.ராஜதுரையை அழைத்து அவரிடம் பேசுங்கள். ஏனெனில்

“அந்தக் கட்சியின் சி.பி.எம்- தமிழ்மாநிலச் செயலாளர் என். வரதராஜனும், அக்கட்சியில் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் மதுரையில் 3.2.2009 அன்று பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசியதைப் பார்க்கையில், அவர்கள் அரசியல் அரிச்சுவடி கற்காதவர்களா என்னும் சந்தேகம் நமக்கு எழுகின்றது. அவர்களது நம்பிக்கைக்குரியவரும் அரசியல் ஆலோசகர்களில் ஒருவருமான என்.ராமால் நடத்தப்படும் ‘ தி ஹிந்து’ நாளேட்டில் வெளிவந்துள்ள செய்தியின் அடிப்படையிலேயே நாம் இந்தக் கருத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.”

என்று கூறியிருக்கிறார். இந்தக் கருத்து எது குறித்து என்று தேடிப் படித்து சொல்லுங்கள். இப்பொழுதாவது பிரகாஷ் காரத் அரிச்சுவடி கற்றுவிட்டாரா, அப்படி கற்றுவிட்டது தெரிந்துதான் ராஜதுரை இப்பொழுது உங்களுக்கு முக்கிய மார்க்சிய அறிஞரானாரா என்ன?

“சிபி எம் கட்சியின் மாநிலச் செயலாளரும் பொலிட் பீரோ உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பினரயி விஜயன் மீது மத்தியப் புலனாய்வுத் துறை ஊழல் வழக்குத் தொடர முயற்சி செய்திருப்பது, காங்கிரஸ் மத்திய அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கை என்று சிபிஎம் ஆதரவாளர்கள் தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். எனினும் கேரள மக்களிடையே பரவலாக நிலவும் கருத்து இதுவல்ல. பிற மாநிலங்களில் ஆட்சி செய்யும் குண்டாயிசத்திற்கு எவ்விதத்திலும் குறைவானதல்ல விஜயனின் நடத்தை முறைகள் என்னும் கருத்து மக்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளது. மேலும், கட்சிக்குள் விஜயன் குழு என்றும் அச்சுதானந்தின் குழு என்றும் பிளவு இருப்பதும், அந்த இருவரும் இரண்டாண்டுகளுக்கு முன் கட்சியின் பிலிட்பீரோவிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதும், 2004 இல் சிபி எம் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், 2009 தேர்தலுக்கு சற்று முன்னதாக காங்கிரஸில் சேர்ந்ததும், ஒரு குறிப்பிட்ட தொகுதியை ஒதுக்குவதில் சிபிஎம் சிபி ஐ கட்சிகளுக்கிடையே மோதல்கள் வலுத்ததும், இந்தக் கட்சிகளுக்கும் பூர்ஷுவாக் கட்சிகளுக்குமிடையே அதிக வேறுபாடு இல்லை என்பதைக் காட்டின ”

என்றெல்லாம் தன் மு‘க்’கிய மார்க்சியத்தைத் திறந்து எழுதியிருக்கிறார். இந்த விமர்சனங்களையெல்லாம் கட்சி இப்பொழுது கடந்துவிட்டதா என்ன? தலித் அடையாள அரசியலுக்குப் பயந்து தன் பாதைகளை மாற்றிக்கொண்டு பம்மும் சிபிஎம்- ன் விளக்கங்கள் என்ன.

இன்று உடன்பிறப்புகள் கேட்டுவிட்டார்கள் என்று கொதித்தெழுந்து பேசும் நீங்கள், அன்று உங்கள் சக தொண்டர் இதே வார்த்தையை தொலைக்காட்சியில் சொன்னபோது,  போட்டுக்கொடுக்கிறான் என்று முணங்கியது ஏன். அன்று இத்தனை விளக்கங்கள் துடிதுடித்து வராமல் இருந்ததன் காரணம் என்ன.? உங்களுக்குள் இருக்கும் அடையாள அரசியலா?, சுயசாதி விருப்பமா, அதுதான் அம்பேத்கரிய அரசியலா?

பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் இருந்தால் அந்தக் கட்சி பார்ப்பனர் கட்சி ஆகிவிடுமா, பார்ப்பனர் நலனுக்காக சிபி எம் எந்தெந்த போரட்டாங்களை நடத்தியது, எங்கு பார்ப்பனரை தூக்கிப் பிடித்தது என்ற எளிய கேள்விகளைக் கூட கேட்கத் தெரியாமல் விழி பிதுங்கி உள்ளுக்குள்ளயே கேள்வி இருக்கே என கையைப் பிசைந்து நின்றது ஏன்.? இது போதாதென்று

“மாவோயிஸ்டுகளை ஒழித்துக்கட்டுதல் என்ற பெயரால் பழங்குடி மக்களை இனக்கொலை செய்வதில் மதச் சார்பற்ற, இந்துதுவ பாசிசவாதிகள் ஒன்று சேர்வதில் வியப்பில்லை. இதில் அவர்களுக்குக் கிடைத்துள்ள புதிய கூட்டாளி சி.பி.எம் ”

என்று மு‘க்’கிய அறிஞர் திருவாய் மலர்ந்துள்ளாரே. உங்களுக்குத் தெரியாதா, எஸ்.வி.ஆரை நீங்கள் படிக்காமல்தான் மார்க்சிய அறிஞர் என்று சொன்னீர்களா.

ஆதவன் கேட்ட கேள்வியை இன்று உடன்பிறப்புகள் கேட்டதும் கொதிப்பது ஏன். அன்று என்ன நீங்கள் திமுகவிலா இருந்தீர்கள்.

சிறுகுறிப்பு;

தோழர்களே ஈவிரக்கமற்ற விமர்சனம் கொஞ்சம் கடினம்தான்.எல்லாவற்றிற்கும் மேலாக எங்களை விமர்சிக்கத் தகுதியில்லை என்று அனைவரையும் விரல் நீட்டும் நீங்கள்,  உங்களை விமர்சிக்க உங்களுக்கே தகுதியுள்ளதா என்றும் கேட்டுச் சொல்லுங்கள்.

அனைத்திற்கும் மேலாக உங்களது மார்க்சியக் கொம்பன் எஸ்.ஏ.பெருமாள் பூனா ஒப்பந்தம் குறித்து கேமரா ரீடிங்கில் படித்து எழுதிய  கட்டுரையை சாதா ரீடிங்கிலேயே படித்துப் பாருங்கள். அக்கட்டுரைக்குப் பெருமை சேர்க்கும் விதமாய் கொம்பன் பெருமையுடன் எடுத்தாண்ட பாட்டையும் எடுத்துப் போடுகிறேன்.

ராகம் ஆதி தாளம் சுத்தமொட்டையில் சுருதி சேர்த்து பாடி அனுப்பி வையுங்கள்.


பல்லவி
ஆழ்ந்த யோசனைகள் செய்தார் மகாத்மா காந்தி
ஆத்ம சக்தியைக் காட்டினார் அந்நியர்கட்கு
ஆத்ம சக்தியைக் காட்டினார்( ஆழ்ந்த)
அனுபல்லவி
கரைகாணாத ஆத்மா கருத்துள் மகாத்மா
கருத்தை விளக்கிக் காட்டினார்- கவர்மெண்ட்டோடு
கடிதம் மூலமாய் பேசினார்(ஆழ்ந்த)
தொகையறா
ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பத்திரெண்டு ஆண்டு
செப்டம்பர் இருபதிலே
தாழ்ந்த நம் சகோதரர்க்கு தனித்தொகுதி வேண்டாம்
கூட்டுத்தொகுதி வேண்டுமென
காந்தி உண்ணாவிரதம் பூண்டார்
(பாட்டு)
பட்டினி என்றதுமே பதைத்தது பாரதமக்கள்
பிரார்த்தனை செய்யலுற்றார்- சர்வேஸ்வரனை
பிரார்த்தனை செய்யலுற்றார்( ஆழ்ந்த)
தொகையறா
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதி வேண்டும்
கூட்டுத்தொகுதி வேண்டாமென
கரைபுரண்டழுதாரே அம்பேத்கர்- தர்மசீலராம்
காந்தியைத் தரிசித்ததுமே
கூட்டுத் தொகுதிக்கே கையொப்பமிட்டார்
தென்னாட்டுக் காந்தியென
தியாகங்கள் பல செய்த திருராஜகோபாலாச்
சாரியார்தாம்
காந்தி உண்ணாவிரத்தை ஓதியே மக்கள்
ஓட்டுப்போட வேண்டுமென்றார்
(பாட்டு)
ஒற்றுமைப் பட்டாரே மக்கள் உத்திமத்தியயாகியாம் காந்தி
சித்தங்களிக்க வென்று திறந்தார் கோவில்
தீண்டாதார்க்கென்ற(ஆழ்ந்த)

மார்க்சியக் கொம்பன்களும், மு‘க்’கிய அறிஞர்களும் இருக்கும் ஒரு கட்சியில் இதுபோன்றெல்லாம் நடப்பது வருத்தத்தை அளிக்கிறது.