Pages

Friday, March 17, 2017

அடிப்படைவாதம்






அடிப்படைவாதம்
அது
நீ உயர்த்தும் குரலில் இல்லை
கருத்துச் சுதந்திரத்தை அறுத்து
கூறுபோட்டு விற்கும் போதும்
ஆயுதம் உயர்த்தும் போதும்
அதன் கண்களைக் கவனி
கடவுளின் கண்களைக் காண்பது போலிருக்கும்

தொண்டைக்குள்ளிருந்து
நீ அழைக்கும் இறைவனை
இப்பொழுது நான் கைவிடுகிறேன்

கொழுப்புக் கரைவது போல்
உன் கடவுள் கரைந்து கொண்டிருக்கிறார்


தோழர் மார்க்ஸ்...
ரொட்டியில் நீங்கள் சுதந்திரத்தை எழுதினீர்கள்

நாங்களோ
எங்கள் கடவுளின் பெயரை எழுதினோம்

மதம் ஆன்மத்தேவைகளைப் பூர்த்தி செய்கிறது
பிணத்தேவைகளை நிறைவேற்றுகிறது
அப்படியே ஆகட்டும்
இந்த வார்த்தையை இப்படியே உச்சரியுங்கள்

நான் இந்து
எனக்காக நான் பேசிக்கொல்வேன்
நான் இஸ்லாமியன்
எனக்காக நான் பேசிக்கொல்வேன்
நான் கிறித்தவன்
நானும் எனக்காகப் பேசிக்கொல்வேன்

கம்யூனிஸ்டுகளே….
நீங்கள் யாருக்காகப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்!

மன்னித்துவிடுங்கள் மார்க்ஸ்….
அடிப்படைவாதம் என்பது
நான் என்ற சொல்லுக்குப் பின்னாலிருக்கும் நலனே

கடவுளை கோபிக்காதீர்கள் சாதுக்களே…
தன் உருவில்தான் மனிதனையும் படைத்தானவன்
மனிதன் வெறுமனே அதை நிகழ்த்திக்காட்டுகிறான்
கொலைகார மனிதன்
கொலைகாரக் கடவுள்
கொலைகார மதம்

அடிப்படைவாதத்தின் வாய்
தன் பெயரை அடையாளத்தின் பெயரால் கூவுகிறது
கொலை
மதங்களின் பிறப்புரிமை

தேசியக் கொடியை ஒரு கணம் உற்றுப்பாருங்கள்
காவிக்கொலை
வெள்ளைக்கொலை
பச்சைக்கொலை
நழுவிச் சுழல்கிறது பௌத்தப் படுகொலை

ஆகட்டும் கடவுளே
உன் அம்மணத்தை
என் பிணத்தை வைத்து மறைத்துக்கொள்

No comments:

Post a Comment