Pages

Thursday, September 28, 2017

பசித்திரு


எனது தனிமையில்
அரசு மூத்திரம் பெய்கிறது

ஆதார் அட்டையுடன்
நான் கல்லறைக்குச் செல்கிறேன்

திருவாளர் மோடி
நீங்கள் உங்களது ஆதார் அட்டையை
வெளிநாடுகளுக்கு அடகுவைக்கும் போது
முதலாளிகளின் கடன் அட்டை
தூக்குக் கயிரைப் போல் தொங்குவதேன்

நான் செத்துக்கொண்டிருக்கிறேன்
தயவு செய்து
தேசிய கீதத்தை இசைக்கத் தொடங்காதீர்கள்
கேட்க அப்ஸ்வரமாக இருக்கிறது

காந்தி என்கிற கிழவனைச் சுட்டுக்கொன்ற
தோட்டாவின் ஒலி
ஹேராம் என ஒலிக்கிறது

துரதிருஷ்டவசமாக
கம்யூனிஸ்டுகள் உறங்கும் பொழுது
நீங்கள் பன்னாட்டு நடனம் ஆடிவிடுகிறீர்கள்
முதலாளிகள் அதை
இந்திய காபரே என்கிறார்கள்

துயரத்தோடு சொல்கிறேன்
அந்நிய தேசத்தில் நீங்கள் முஷ்டியை உயர்த்திக் காட்டும் பொழுது
எனது கோமணத்தை
நான் இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது

இந்த அச்சத்தை நொடிக்கொருதரம் நீங்கள் தரும்போது
மாற்றுக் கோமணம் குறித்து நான் சிந்திப்பது
நானே
என்னை வதைப்பது போலிருக்கிறது

கைகோர்த்து ஆடும் அம்பானிகளுக்கு
நீங்கள் எச்சில் வடிய லாலி பாடுவது எனக்குக் கேட்கிறது

பத்திரிக்கைகள்
அதை பொருளாதார முன்னேற்றம் எனும் போது
நான் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன்

ஒரு குடிமகன் பிச்சை கேட்கும்போது
தேசமே பிச்சையெடுக்கிறது

ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்

எல்லோரும் பிச்சை எடுக்கும் தேசத்தில்
நீங்கள் பிரதமராயிருக்கிறீர்கள்

பிரதான பிச்சைக்காரர்

அயல் நாடுகள் இந்தியாவை
ஒரு திருவோடு போல் வரைந்து வைத்திருக்கிறது

திருவோட்டில் விழும் சில்லறைக்காக
நீங்கள் பிரதமாயிருக்கிறீர்கள்

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்
பிச்சைக்காரர்களின் தேசம்
பிச்சைக்காரர்களின் பிரதமர்
பிச்சைக்காரர்களின் இந்தியா

இந்த உலகில்
எண்பது கோடிப் பேருக்கு
இரண்டு வேளை உணவும் உத்தரவாதமில்லை
பிடல்
உரத்துக்கூவும் போது
இந்தியா மட்டும் தலை குனிகிறது

பிச்சைக்காரர்களின் தேசிய கீதம்
பசி
பசி
பசி
பசி…


No comments:

Post a Comment