Pages

Monday, October 30, 2017

அவதூறு + ஆபாசம் + சிபிஎம்



தோழர்களே…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அக்கட்சியின் முதுபெரும் தோழரான W.R. வரதராஜன் அவர்களையே, பாலியல் குற்றச்சாட்டுக் கூறி தற்கொலைக்குத் தள்ளியது. இந்த தற்கொலை முடிவுக்கு சிபிஎம் கட்சியே காரணம். இப்பொழுது அக்கட்சித் தோழர்கள் அதை வெற்றிகரமாக பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இவர்களது கருத்துச் சுதந்திரம் பற்றிய விமர்சனம். இவர்களை விமர்சிக்காத வரைதான். விமர்சிக்கும் பட்சத்தில் அவதூறு எனும் ஆயுதத்தால், மனம் சோர்வடையும் வரை ஆபாசமாகப் பேசி, அதை அமைப்பின் பெயரால் முன்வைப்பார்கள்.

பெண் சுதந்திரம் எனப் பேசும் அவர்களது அமைப்பில் உள்ள, மற்ற பெண்களும் இதைக் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். அமைப்பு என்று வந்துவிட்டால் அதற்கு ஆண் பெண் வித்தியாசமில்லை. அனைவரும் அமைப்புவாதிகளே.

கொற்றவை இப்பொழுது முகநூலில் இயங்கப்போவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறார். ஏற்கனவே இதே முடிவை எடுக்கத் தூண்டிய இதுபோன்ற நபர்கள் இப்பொழுதும் அதில் வெற்றிக் கண்டிருக்கின்றனர். கொற்றவை மிகவும் மனமுடைந்து போயுள்ளார்.

இனி அவரிடம் எந்தக் கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிய அமைப்பும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார். தோழர்கள் இனி எதற்கும் அழைக்கவேண்டாம்.

தோழர்களே…
முழுநேர ஊழியர்கள் என்ற பெயரில் கட்சிக் காசைத் தின்று, புரட்சிப் பணி ஆற்றும் சிலர், தங்களது பெண்டாட்டி பிள்ளைகளுக்கு நகை வாங்கிப் போட்டு, அலங்காரம் செய்து கோயில் குளம் நேர்த்திக் கடன், இஸ்லாமியக் கல்வி, கிறித்தவக் கல்வி அளித்து, வரதட்சணை பெற்று மார்க்சியத்தை கண்ணியமாகக் காப்பாற்றி வருகின்றனர்.

கட்சி சம்பளம் 12000. ஆனால் தினமும் குடிக்க 500. அப்படியெனில் மாதம் 15000 க்கு குடிப்பவர் முழுநேர ஊழியர். கட்சிச் சொத்தைத் திருடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர் மார்க்சிய ஆசான். வீடு கட்டியவர் மார்க்சிய விஞ்ஞானி.
தன் வீட்டில் பூணுல் கல்யாணம் நடத்தியவர் சோம்நாத் சட்டர்ஜி. அவர் புரட்சியாளர். சாதி மறுப்பாளர். இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சியமா?

கட்சியில் சொத்துச் சேர்ப்பதையே மார்க்சியம் எனக் கற்றுக்கொடுக்கும் இவர்கள்தான் மார்க்சியப் போராளிகள் நாங்கள் அல்ல என்பதை முதன்முறையாக ஒத்துக்கொள்கிறேன்.

வயிற்றுப்பாட்டுக்கு சின்னத்திரையில் வேலை செய்து வரும் நான், மானங்கெட்ட சம்பாத்தியத்தை வைத்து, என் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன். நானும் கொற்றவையும் எங்களை சாதி மறுப்பாளர்களாக அறிவித்தும், அந்த அவதூறையே முன்னுக்கு வைப்பதுடன், ஆபாசமாகவும் பேசத் தொடங்கி, அவரை இப்பொழுது மறுபடியும் சோர்வடையச் செய்துள்ளனர்.

தனிப்பட்ட முறையில் இது அவர்களுக்கு வெற்றியாக இருக்கலாம். கட்சியின் மூத்த தோழரையே பாலியல் குற்றச் சாட்டு கூறி, தற்கொலைக்குத் தூண்டியவர்களுக்கு நாங்கள் ஒரு பொருட்டே கிடையாது என்பதை நானறிவேன்.

அதே சமயம்… நம்பிக்கையுடன் வந்த கொற்றவையை மறுபடி நம்பிக்கை ஊட்ட எனக்கு நாட்கள் தேவைப்படுகிறது. பரவாயில்லை. உங்கள் அமைப்புக் கற்றுக்கொடுக்கும் தத்தாரித்தனத்தை நான் கொற்றவைக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. நாங்கள் உரையாடும் மார்க்சியம் வேறு. ரங்கநாயகம்மா நூல் தமிழுக்கு வந்த கொடை. இதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

தற்கொலை செய்யத் தூண்டுவதும், அவதூறு பேசுவதுமாக உள்ள உங்கள் மார்க்சியத்தை என்னால் கற்றுக் கொடுக்கமுடியாது. இதைவிடக் கேவலமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், மாநிலக் கமிட்டியிலும், மத்தியக் கமிட்டியிலும் கவுரவமாக அமர்ந்திருக்கிறார்கள்” என்ற உண்மையை தனது கடிதத்தில் முன்வைத்த W.R. வரதராஜன், தற்கொலைக்கு முன் என்ன மனநிலையில் இருந்திருப்பார் என்று நினைத்தாலே மனம் பதட்டமடைகிறது.

தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன். குறைந்தபட்சம் அவதூறை தத்துவமாக முன்வைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனீஸ்ட் கட்சியின் தோழர்கள், தங்களது மனைவிமார்களுக்கு கற்றுக்கொடுத்த கம்யூனிஸத்தை விட, நான் அதிகம் கற்றுக்கொடுத்திருக்கிறேன். கொற்றவையும் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

அமைதியாக இருந்து சீரியலில் சம்பாரிக்கும் காசை உங்களது கட்சிக்கு நன்கொடையாகக் கொடுக்கும் பட்சத்தில் நானும் புரட்சியாளராக இருந்திருக்க முடியும்தான். அறிவூட்டியதற்கு நன்றி.

இனி கொற்றவை மொழிபெயர்ப்பாளாரக மட்டுமே இருப்பேன் என்பதோடு, என்னிடமும் இனி அமைப்புகள் குறித்தோ, இயக்கங்கள் குறித்தோ எதையும் பேச வேண்டாம் என்று கூறிவிட்டார். இது எனக்குப் பெரிய வலிதான்.

மனம் கனத்துக்கிடக்கிறது.
வாழ்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தடித்தனம்.
ஆபாசம். அவதூறு,மிரட்டல்.

தோழர்களே…. இதுதான் சிபிஎம் கட்சி என்று மீண்டும் மீண்டும் நான் சொல்வதற்குக் காரணம், பொதுத்தளத்தில் எப்படி உரையாடவேண்டும் என்றோ,  நட்பு முரண்பாடு, பகை முரண்பாடு, விமர்சனப் பண்பு குறித்தோ, அவர்களுக்கு சிபிஎம் கற்றுக்கொடுக்கவில்லை என்பதை, அவதூறாளர்களை வைத்து முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

மார்க்சியப் பார்வையில் தனிநபர்கள் செய்யும் குற்றதிற்கு, எப்படி சமூகக் கட்டமைப்பு காரணமோ, அதே போல் அமைப்பில் உள்ள இந்த நபர்களில் நடத்தைக்கு, அமைப்பைக் குறைச் சொல்வது, அல்லது அமைப்பைக் கேள்வி கேட்பது என்பது ஒன்றும், தவறான விசயமோ, அல்லது நாகரீகமற்ற செயலோ கிடையாது.

அவ்வளவே.




Sunday, October 29, 2017

தோழர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு பகிரங்கக் கடிதம்.

சிபிஎம் கட்சியின்  மாநிலச் செயலாளரான தோழர். ஜி.ராமகிருஷ்ணனுக்குப் பகிரங்கக் கடிதம்.





வணக்கம் தோழர், சமீபகாலமாக உங்கள் அமைப்பில் முழு நேர ஊழியராக இருக்கும் ஒரு சிலர் ஒரு புரட்சிகர முன்னெடுப்பை எடுத்துச்செல்கின்றனர். அதாவது முழுநேர ஊழியராக இருப்பவரே புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் அருகதையுடையவர் என்று எண்ணும் அளவுக்கு சென்றுவிட்டனர்.

பாரதி புத்தகாலயத்தில் பணிபுரியும் மேலாளர் சிராஜுதீன் என்பவர் நான் செய்யும் தொழிலைத் தெரிந்துகொண்டே அதை மானம் கெட்ட தொழில், அப்படிப் பிழைத்து அதில் வரும் வருமானம் அவமானத்திற்குரியது என்று பொதுவெளியில் தன் கருத்தை வைத்தார். அப்பொழுது அது குறித்து அவரிடம், மானம் கெட்ட தொழிலில் சம்பாரித்த காசை, உங்கள் பாரதி புத்தகாலயத்துக்கு நிதி உதவியாகச் செய்யலாமா என அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு,  “தோழர்.. மன்னிச்சிடுங்க உணர்சிவசப்பட்டுவிட்டேன்” என்றார். அந்த மன்னிப்பைப் பொருட்படுத்தினேன். அதே சமயம் அதை பொதுவெளியில் வைக்கச் சொன்னேன் அவர் செய்யவில்லை.

தோழர் எனது வேலை சின்னத்திரைத் தொடர்களுக்கு வசனம் எழுதுவது. அப்படி வசனம் எழுதிய பலருக்கு, உங்களது கட்சியின் கலை இலக்கிய அமைப்பான தமுஎகச சம்பந்தப்பட்ட சீரியலின் பெயரை அழைப்பிதழில் அச்சிட்டு விருதும் கொடுத்திருக்கிறது. மன்னிக்கவும். அந்த சீரியலும் புரட்சிகர கருத்தியலை வாரி வழங்கும் தொடரல்ல.

ஒரு நேரத்தில் சின்னத்திரையில் இருப்பவர்கள் எங்களது அமைப்பில் இருக்கிறார்கள் என்று கூறுவதில் பெருமிதம் அடைவதும், சில கேள்விகளை முன்வைத்தால் மானம் கெட்ட தொழில் அவமானகரமான வருமானம் எனச் சொல்லுவதும் ஏன். சின்னத்திரையின் எழுத்தாளர் சங்கத்தில் இருக்கும் நான் இதுகுறித்து ஏன் கேள்விகளை எழுப்பக் கூடாது.

மேலும் தோழர் இந்த ஒட்டுமொத்த வசைகளுக்கும் காரணமாக அமைந்தது எனது வாழ்நாள் தோழியான தோழர் கொற்றவை,  தோழர் ரங்கநாயகம்மா அவர்களின்  “சாதியப் பிரச்சினைக்கு தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத்தேவை!” என்ற நூலிலிருந்து கிளம்பியதுதான்.

அந்த நூலை முன்வைத்துப் பேசுகிறேன் என, அம்பேத்கரின் கருத்துக்களையோ அவரது ஆய்வுகளையோ மார்க்சியத் தளத்தில் முன்வைக்காது, சிபிஎம் கட்சி பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் இருக்கிறார்கள், அது குறித்து எனக்கு கேள்விகள் இருக்கிறது என  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்களின் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பொது ஊடகத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அந்தக் கேள்விக்கு இதுவரை தமுஎகசவோ, சிபிஎம் கட்சியோ எந்த விதமான பதில்களையும் தரவில்லை.

அதே சமயம், ஆதவன் தீட்சண்யாவை தனி நபர் துதி பாடலில் முன்வைத்த சிராஜுதீன், அவர் அடுத்த அம்பேத்கராக இருந்தால் என்ன என்று கேள்வியை முன்வைத்தார். மேலும் இன்னொரு நபரான கருப்பு கருணா என்பவர், பொதுவெளியில் அவன் இவன் எனப் பேசுவதையே முழுநேர ஊழியப் பணியாக செய்துவருகிறார்.  “வக்காலி” என்று அழைப்பது புரட்சிகர வசனமாக அவருக்கு இருக்கிறது. கட்சியின் தத்துவங்கள் சார்ந்தோ, அதன் விதிகள் சார்ந்தோ எதுவும் பேசத் தேவையில்லை. அவதூறுகளை இரைப்பதுதான் முழுநேர ஊழியரின் பணியா?

மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவன் என்ற அடிப்படையில், நான் சாதிகுறித்த ஒடுக்குமுறைகளை எதிர்ப்பவன். அத்தோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலத்துக்கு முன், அறிவிக்கப்படாத முழுநேர ஊழியனாய் இருந்திருக்கிறேன். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட கன்வீனராக, மாணவர் பெருமன்ற மாவட்ட கன்வீனராக, கட்சியின் உறுப்பினராக இருந்து பணிசெய்திருக்கிறேன். இப்பொழுது எந்த அமைப்பிலும் இல்லை.

மார்க்சிய வழியில் பயணிக்கும் என்னை, சிராஜுதின் என்பவர் எல்லா நேரங்களிலும் தேவர் சாதி என்றே சொல்லி அடையாளப்படுத்தி அவதூறும் பரப்பி வருகிறார். நானே என்னை சாதி நீக்கம் செய்து கொண்டபிறகு, அம்பேத்கரை விமர்சித்த ஒரே காரணத்தால், எனக்கு சாதி முத்திரை குத்தியும் அவதூறு செய்தும், வசுமித்ர என்னும் என் பெயரை பசுமித்ரா என்றெழுதுவதும், மானங்கெட்ட தொழில் செய்பவன் என்று சொல்வதையே ஒரு பணியாக நினைக்கிறார். இதுதான் உங்கள் அமைப்பு முழுநேர ஊழியர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விமர்சனப் பண்பா.

கிடாரி என்கிற திரைப்படத்தில் நான் நடித்ததையும். ஒரு வாய்ப்பாக முன்வைத்து அவதூறு செய்கிறார். தோழர் அந்தத் திரைப்படத்தில் வேலராமமூர்த்தியும் நடித்திருந்தார். செம்மலரின் வந்த கிடாரி விமர்சனத்தை தோழர் தமிழ்ச்செல்வன் எழுதியிருந்தார். அதில்  “அட நம்ம வேலா” என்றெழுதி புளங்காங்கிதம் அடைந்திருந்தார். அது சாதிப் பாசமா.. இல்லை வேறெதும் பாசமா என்று எனக்குத் தெரியவில்லை.

மேலும், சோம்நாத் சட்டர்ஜி என்று பெயரில் இருப்பதாலும், பூணுல் கல்யாணம் நடத்தியதாலும், அவர் பார்ப்பனர் என்று எனக்குத் தெரிகிறது. சாதி முறைகளை அவர் இன்னும் கடக்கவில்லை என்றும் புரிகிறது. அவப்பேறாக, நான் தீர்மானிக்கமுடியாத பிறப்பின் சாதியை வைத்துப் பேசும், உங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களை முன்வைத்து, இப்பொழுது எனக்கு சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. இந்த மாதிரியான அணுகுமுறைகள் மூலம்தான் சாதியைக் கடக்கமுடியும் என்று அவர்கள் நினைப்பதால் அதையே நானும் இப்பொழுது கேள்விகளாக முன்வைக்கிறேன்.

நீங்கள் என்ன சாதி, உங்களது வெகுஜன அமைப்பில் இருக்கும் தலைவர்கள் செயலாளர்களின் சாதிகள் என்ன? நீங்கள் எல்லாம் எப்படி சாதியைக் கடந்தவர்கள் என்று பாரதிபுத்தகாலயத்தின் மேலாளர் சிராஜுதின் எப்படி ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்தால், நானும் அப்படிப் பட்ட சான்றிதழைப் பெறுவதற்கு ஆயத்தமாக உள்ளேன்.

மேலும், உங்களது அமைப்பில் சேர்ந்தால்தான், சாதியைக் கடக்கமுடியுமெனில், அதை பொதுவெளியில் வைத்து உரையாடுங்கள். நான் மட்டுமல்லாது, பலரும் உங்களது அமைப்பில் சேர்ந்து சாதியைக் கடப்பார்கள். சாதியை ஒழிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது சிபிஎம்மில் சேர்வது என்றானபின், இந்தியாவில் சாதி ஒழிந்துவிடும் இல்லையா!

தோழரே...

எஸ்.வி.இராஜதுரை உங்களது கட்சியின் தேசியச் செயலாளரான, பிரகாஷ் காரட்டுக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதெனச் சொல்லியவர். பாரதிய ஜனதாவுக்கும், சிபிஎம்முக்கும் வேறுபாடுகள் இல்லை எனச் சொன்னவர். அதற்கு இன்றுவரை சிபிஎம் எந்தப் பதிலும், விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவருக்கு தேனி மாவட்டத்தில் மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்தார்கள்.  

அதே சமயம், உங்களது கட்சியின் பார்வையில், கண்டவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கொடுக்கத் தேவையில்லை என்ற நோக்கம் இருக்கலாம். ஆனால் அப்படிச் சொல்லும் ஒருவரை மார்க்சிய அறிஞர் எனச் சொல்லுவது, பிரகாஷ் காரட்டுக்கு அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதை உங்கள் கட்சி வெகுஜன அமைப்பான தமுஎகச மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்திருப்பதால் அதை உறுதி செய்வதாகவே தோன்றுகிறது. மேலும் மார்க்சிய அறிஞர், விருது கொடுத்த மேடையிலேயே,  “மார்க்சியத்தை பன்றித்தத்துவம்” என அம்பேத்கர் சொன்னது சரி, என விளக்கம் கொடுத்தபோது, அங்கிருந்த சிபிஎம்மின் தோழர்களில், ஒருவர் கூட குரல் எழுப்பவில்லை. விவாதிக்க முனைந்த என்னையும் வெளியே தள்ளிச் சென்றார்கள்.

தோழர், நான் மேடையில் அதைப் பேசினேன் இதைப் பேசினேன் என்று திரிக்க, ஆதவன் தீட்சண்யா, சிராஜுதீன், கருப்பு கருணா போன்றவர்கள் முன்னெடுக்கலாம். ஆனால் நான் மேடையில் பேசியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. மேலும் தேனியில் நடந்தது என்ன என்று நீங்கள் உங்கள் கமிட்டியில் ஒரு ஆய்வையும் செய்யச் சொல்லலாம். அதுகுறித்து என் தரப்பைச் சொல்ல ஆவலோடு காத்திருக்கிறேன்.

அதோடு அக்கூட்டத்தில் பங்கேற்ற தோழர். தி.சு.நடராஜன், பிராங்க்பர்ட் மார்க்சியவாதியெல்லாம் மார்க்சிய அறிஞர் என்று அழைக்கப்படுவதில் எனக்கும் உடன்பாடில்லை என்று என்னிடம் சொல்லவும் செய்தார். தமிழ்ச்செல்வன் ‘தம்பி உன் கருத்துக்கு எதிர்ப்பு மட்டுமல்ல ஆதரவும் இருக்கு’ என இதை முன்வைத்தே சொன்னார்.

கலந்துரையாடல் என அறிவித்துவிட்டு, மேடையில்  “மார்க்சியம் பன்றித்தத்துவம்” என்று வாதிடுபவருக்கு எதிராக, எந்தக் கேள்வியையும் கேட்காமல், என்னை வெளியே அனுப்பியதுதான் தமுஎகசவின் கருத்துச் சுதந்திரம் என்பதை அன்று அறிந்துகொண்டேன்.

மேலும் அதன் தொடர்ச்சியாக தமுஎகசவின் கலை இலக்கியத் தூண்களாக தேனியில் அறியப்படும் தோழர் சீருடையானிடம், ராஜதுரைக்கு நீங்கள் எப்படி மார்க்சிய அறிஞர் எனப் பட்டம் கொடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு, ராஜதுரையின் இரண்டு கட்டுரைகளை படித்தேன், அதனால் அவருக்கு அந்தப் பட்டம் ஏற்புடையதே என்றார். இதை பதிவு செய்யலாமா எனக் கேட்டதற்கு சம்மதமும் கொடுத்தார்.

அடுத்து தோழர் காமுத்துரை ஒரு கட்டுரையும் படிக்கவில்லை என்று சொன்னார். முக்கியப் பொறுப்பிலிருக்கும் தோழர்களே இப்படி இருக்கும் போது, ராஜதுரையை மார்க்சிய அறிஞர் எனச் சொன்னது யார். அதன் நோக்கங்கள் விளக்கங்கள் என்ன. மேலும் கம்யூனீஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்ததாலேயே அவர் மார்க்சிய பேரரறிஞர் என்று இப்பொழுதைய தமுஎகசவின் மாநிலச் செயலாளர் சு.வெங்கடேசன் அங்கு சொன்னதாக அறிந்தேன். இது ஒன்றுதான் மார்க்சிய அறிஞராகும் தகுதியா?

மேலும் புத்தகம் பேசுது இதழில் கோணங்கி குறித்து ஒரு துதி பேட்டி வெளிவந்தது. அது குறித்த எனது கேள்விகளை முன்வைத்து எழுதிய கடிதத்தை பிரசுரிக்கவும் இல்லை. ஆனால் அந்தப் பேட்டியில் கலைஞனை நம்புவதும் கலைஞனைப் பின் தொடர்வதுதான் மனிதகுலத்திற்கு விடுதலை என்று முன்னட்டையிலேயே கொட்டை எழுத்துக்களில் போட்டிருந்தார்கள். அப்படி நம்பும் வகையில் ஒரு கலைஞனை தமுஎகசவிலாவது சுட்டிக்காட்டமுடியுமா என எனக்குத் தெரியவில்லை. இதை ஒரு எழுத்தாளர் கூற்று என எடுத்துக்கொண்டாலும் அந்த எழுத்தாளர் கூற்றுக்கு பதில் சொல்லும் எழுத்தாளர் தமுஎகசவில் இல்லையா.

தோழர்... தொடர்ந்து இது போன்ற தனிமனிதக் குழுக்களை, அவர்களை முன்னெடுத்து முதுகு சொறியும் நபர்களை, முழுநேர ஊழியர்கள் என்றும், அவர்கள்தான் புரட்சியை முன்னெடுத்துச் செல்பவர்கள் என்றும் கவனத்தில் கொள்ள முடியுமா?

மேலும் ரங்கநாயகம்மாவின் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் தனது அடுக்குகளில் கூட வைக்காமல் ஒளித்து வைத்தே விற்கிறது. மாறாக ஆந்திராவில் சிபிஎம் கட்சியின் பத்திரிக்கையில் ரங்கநாயகம்மா தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறார். அவரது கட்டுரைகளை சிபிஎம்மின் கட்சிப் பத்திரிக்கை பிரசுரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது.

கட்சியில் இருந்துகொண்டு, தலித்தியம்தான் விடுதலை, மார்க்ஸ் தேவையில்லை என்று கருதும் நபர்கள், உங்கள் அமைப்பில் முழுநேர ஊழியராகவும், மற்றவர்களை ஏக வசனத்தில் திட்டி தன் பிழைப்புவாதத்தை வளர்த்துக்கொள்பவராகவும் இருப்பது ஏன்.

மேலும் தலித்தியத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் மார்க்ஸ் தேவையில்லை எனும் இவர்களுக்கு நீங்கள் அறிந்த மார்க்சியத்தின் படி கூறும் பதில்கள் என்ன.

எல்லாவற்றிற்கும் மேலாக மார்க்சிய அறிஞராக ,செயலூக்கமான வழிகாட்டியாக பல புத்தகங்களை எழுதிய, இப்பொழுதும் எழுதிக்கொண்டிருக்கிற தோழர் ரங்கநாயகம்மாவை நக்கல் நையாண்டி செய்து சிராஜுதீன், ஆதவன் தீட்சண்யா கருப்பு கருணா போன்றவர்கள் ஆற்றும் பணிகளையும் நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

உங்களது வாசிப்பு வசதிக்காக எனது கேள்விகளைத் தொகுத்துக் கேட்கிறேன்.

1.சின்னத்திரையில் கதை வசனம் எழுதுவது, சினிமாவில் நடிப்பது கேவலமான பிழைப்பா? அதில் வரும் வருமானம் அவமானகரமான வருமானமா?

2. சாதியப் பிரச்சினைக்கு அம்பேத்கர் சொல்லும் தீர்வுகள் என்ன?

3.புத்தரா கார்ல் மார்க்ஸா என்றும் அம்பேத்கரின் நூல் குறித்து உங்களது பார்வை என்ன?

4. சிபிஎம் கட்சி அம்பேத்கரின் சாதி ஒழிப்புக் கருத்தியல்களை எப்படி ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துகிறது.

5.சாதி ஒழிப்புக்கு மார்க்சியம் உதவுமா?
உதவுமெனில். அதன் தத்துவார்த்த புரிதல்கள் என்ன?

இறுதியாக, விமர்சனம் செய்வதற்கான உரிமையை, அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியிருக்க, ஒரு நூலை எழுதியதற்காகவே சாதி முத்திரை குத்துவதும், அவதூறு செய்வதும், நூலை  “நரகல்” என்று சொல்வதுமாக இருக்கும் சிபிஎம் முழுநேர ஊழியர்களின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள். அமைப்பில் உள்ளதானலேயே இந்த அதிகாரம் கிடைத்துவிடுமா?

அதோடு, என் குறித்தான கேள்வியில், தேவர் சாதி சங்கங்களில் சென்று பிரச்சாரம் செய்வார்களா என்றொரு கேள்வி வந்தது. அதே பாணியை முன்வைத்து, சிபிஎம் தலைவர்கள் அனைவரும், அவர்களின் சாதி சங்கங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்திருக்கிறீர்களா என்று நான் கேட்கிறேன். மேலும் ஒருவர் இந்த சாதியில் பிறக்கவேண்டும் என்பது அவரது தேர்வாக இருக்கமுடியுமா.?

மறுபடியும் அழுத்தமாகப் பதிவு செய்கிறேன். சிபிஎம் பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் இருக்கிறார்கள், தலித் உறுப்பினர் இல்லை எனும், ஆதவன் தீட்சண்யா கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்.

அதே சமயம், தலித்துக்களுக்கு வாய்ப்பளிக்காத சிபிஎம் கட்சியில், இந்த தலித்தியப் போராளிகள்,  அமைப்பாளர்களாக, பணியாளர்களாக, உறுப்பினர்களாக ஏன் இருக்கிறார்கள்.? என்பதையும் ஆய்ந்தறிந்து சொல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

தலித்துக்களின் மேம்பாட்டிற்காக இந்த தலித்திய போராளிகள் கட்சிக்குள் இதுவரை என்ன வகையான போராட்டங்களை முன்வைத்திருக்கிறார்கள்,அதற்கு கட்சி கூறிய பதில்கள் என்ன, என்கிற ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
வசுமித்ர


Sunday, October 8, 2017

எர்னஸ்த்தோ ச் சே கொபேராவைக் கொலை செய்தல்.....



லாபம் தரக் கூடிய ஒரு மரணம்
இவ்வாறாக ஒரு கொலை
ஒரு தியாகம்

அமைதியோடு அவன் சாவதை யாரும் விரும்பவில்லை
தோட்டாக்கள் உட்பட

ஒரு தோட்டாவுக்கு
துப்பாக்கிக்கு தத்துவம் தெரியாது

ச் சேவுக்கு இரண்டையும் தெரியும்

சற்று தூரத்தில் நின்று முத்தமிடுவதைப் போல் அழகாக ஒரு துளை

போராளியைக் கொலை செய்வதற்கு
துப்பாக்கிகள் விரும்பி தயாரிக்கப்படுகின்றன

லக்ஸம்பர்க்கின் பின் மண்டையில்
துப்பாக்கி அழுந்த தைத்த போது
அவள் மௌனமானாள்
எண்ணற்ற பெண்கள் விழித்துக்கொண்டனர்
நாய்கள் அமைதியோடு இழுத்துச் சென்றன

தற்கொலை போன்றதே தியாகமும்
சவத்தை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியாது
சவத்திற்கு
தத்துவமோ அமைதியோ தெரியாது
வெறும் நிச்சலனம்

பொருளற்ற மரணங்களை ச் சே வெறுத்து உற்றுப் பார்க்கையில்
அறிந்திருப்பான்
சுருட்டில் புகையும் வெண் புகையின் ஓலத்தை

மேலும்
ச் சே வைக் கொல்வது எளிதல்ல

அத்தனை எளிதல்ல
அவனைக் கொல்வதற்கு முன் வரலாற்றைக் கொலை செய்ய வேண்டும்
தத்துவத்தைக் கொலை செய்யவேண்டும்

வெடிமருந்துகளால் எழுதப்பட்ட லிபிகளை
ச் சே அறிந்திருந்தான்

அவனது டைரிக்குறிப்புகளில்
காதலிகளின் பெயர்களை விட அது வசீகரமாய் மின்னிக்கொண்டிருந்தது

புத்தனைக் கொலை செய்வதற்கும்
ச் சே வைக் கொலை செய்வதற்கும்
வித்தியாசங்கள் உள்ளன

புத்தன் சாவில் அமைதியாய் இருந்தான்
ச் சே...
சாவின் கழுத்து இறுகும் வரை நெறித்துக் கொன்றான்


ச் சே கொபேராவைக் கொல்ல தோட்டாக்களைத் தயாரித்தவன் அறிவான்
நிச்சயம் அது அவனைக் கொலை செய்ய முடியாதென்று
அது
ச் சேவுக்கு அளிக்கப்பட்ட தூக்க மாத்திரை

அஃது எண்ணற்ற மனங்களில்
கனவுகளில்
காயங்களில்
ஏக்கத்தில்
தோன்றி
வளரும் தோட்டாக்கள்

தோட்டாக்களை அமைதியாக இருக்கச் செய்வதற்கு
தத்துவம் தெரிந்திருக்க வேண்டும்
தோட்டாவை கொலை செய்வதற்கு
ச் சே கொபேராவுக்குத் தெரிந்திருந்தது

கார்ல் மார்க்ஸை கொலை செய்ய அவர்கள் துடித்துக்கொண்டிருப்பது
எனக்குத் தெரியும்

அவனோ
எழுத்துக்களில்
ரத்தமும் சதையுமாக தன்னை மறு உற்பத்தி செய்வதோடு
ஒயாது கனவும் கண்டு கொண்டிருக்கிறான்
கொலைகாரர்களுக்கு அவன் தன்னைக் கொல்ல வழங்கிய சிறு குறிப்பு இதுதான்

முதலில்
என் கனவுகள்
பின்
என்னை.....


உலகக் கொலைகாரர்களே ஒன்று கூடுங்கள்.



பத்திரிக்கையாளர்கள் அமைதியாக இருக்கும் நாட்டில் ராணுவம் புன்னகையுடன் நுழைகிறது.







அப்படித்தான் இருக்கிறது

பத்திரிக்கையாளர்கள்
அமைதியாகஇருக்கும்போது
நாடு தன் நிர்வாணத்தை
அமைதி நிரம்பிய எள்ளலுடன் ஒருமுறை கவனித்துக்கொள்கிறது

பத்திரிக்கையாளர்கள்
நாட்டின் குடிமக்களுக்கு
உள்ளது உள்ளபடி
மிக நேர்த்தியாக
இல்லாவிடினும் அசிங்கமாகவாவது
குடிமக்களுக்குக் காட்டிக்கொடுக்கவேண்டும்
துரதிருஷ்டவசமாய்
அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள்

விளம்பரம் மக்களை
அவர்கள்விரும்பவியலாதவாறு
வெறுக்க வெறுக்க வன்புணர்ச்சி செய்கிறது

காகிதங்களிலோ
பத்திரிக்கையாளர்கள்
வசந்தங்களை இசைத்துக் கொண்டிருக்கின்றனர்

அறியமுடியாத துப்பாக்கிகளின் வர்ணனையை ஆட்சியாளர்கள்
செய்திகளில் ஒளிபரப்புகிறார்கள்

ஆண்களின் இறுகிய பிருஷ்டமும்
பெண்களின்தேர்ந்தெடுக்கப்பட்ட
நளினமான சதையும்
குடிமக்களுக்குக் காட்டப்படுகையில்
அரசியல்வாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர்

பத்திரிக்கையாளர்கள் மௌனமாக இருக்கும் நாடு உருப்படப்போவதில்லை

ஆம்...
மக்கள் நிர்வாணத்தை
எப்பொழுதும் கொண்டாடிக் கொண்டிருக்கப்போவதில்லை

நிர்வாணம் என்பது அரசின் தத்துவார்த்தச் சொல்
அம்மணம்
மக்களின் சொல்லாக இருக்கிறது

நிர்வாணமாக இருப்பதென்பது
அரசியல்வாதிகளுக்கு உகந்ததாக இருக்கையில்
அம்மணத்தை மக்கள் வெறுக்கிறார்கள்

குழந்தைகள் அம்மணத்தை கேலி செய்கிறது
நடிகைகளின் நிர்வாணங்கள்
நிர்வாணத்தில் நாகரீகம் செலுத்தப்படுகையில்
அம்மணத்தில் பசி தன் விகாரத்தைக் காண்பிக்கிறது

மக்கள் அமைதியாய் இருக்கின்றனர்
சொல்லமுடியாத வார்த்தைகளை
திறக்க முடியா உதடுகளால் கடித்து மென்றபடி
அம்மணக் குருதி கசியும் வரை

மக்கள் எப்பொழுதும் இப்படியே இருக்கப்போவதில்லை
கசியும் குருதியில்
ஆட்சியாளர்களுக்கான வெடிகுண்டின்
கந்தகவாசனையை அறிந்து கொண்டிருக்கிறான் கவிஞன்

அவன் நாசி எப்பொழுதும் மக்களையே நோக்கியிருக்கவேண்டும்
இப்படியாகத்தான் கவிஞன் தன்னை உற்பத்தி செய்கிறான்
இறந்து விடாமல்

பத்திரிக்கையாளர்களுக்கு
தகவல்கள் இருக்கிறது
செய்திகள் இருக்கிறது

அழும் குமுறும்
நெஞ்சில் அடித்துக் கதறும்
பத்திரிக்கையாளனே நாட்டுக்குத் தேவை
பத்திரிக்கைகள் பொய் சொல்லுகையில்
பத்திரிக்கையாளன் தலை குனிகிறான்
வரலாறு மிகுந்த வன்மத்துடன் அவனை நகர்ந்து செல்கிறது

பத்திரிக்கைகளுக்கு தெரியாத பத்திரிக்கையாளன்
அல்லது கவிஞனுக்குத் தெரியும்

உண்மையில் பசித்த மக்கள்
உணவை உற்பத்தி செய்வதை விட வெடிகுண்டுகளை
உற்பத்தி செய்யவே விரும்புவார்கள்
பசி
வெடிகுண்டுகளின் புன்னகையைத் தயாரித்துவிடுகிறது

மக்கள்
புன்னகை செய்யும்பொழுது
அரசு மௌனமாகிறது.


Thursday, October 5, 2017

பொதுவுடைமையரின் வருங்காலம்?





பொதுவுடைமையரின் வருங்காலம்?

சர்ச்சைக்குரிய புத்தகம் மட்டுமல்ல,
விவாதித்தே ஆகவேண்டிய புத்தகம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்து ஒலிக்கும் சுயவிமர்சனத்தின் குரலாக இந்த நூலைப் பார்க்க வேண்டியதிருக்கிறது. நூலை எழுதியிருப்பவர் தா.பாண்டியன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர், மாநிலசெயலாளராய் இருந்தவர். அகில இந்திய அளவிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்புக்களில் இருந்தவர்.

நூலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கடந்த கால சரிவுகள் குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டு, அதில் அவரது கண்ணோட்டத்தை சில கேள்விகளாகவும், விவாதங்களாகவும் வைத்திருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் பேசியிருக்கிறார். அத்தகைய பார்வைகளில் நிறை குறைகள் இருப்பினும், இந்த நூல் தன்னளவில் விவாதத்தை வரவழைக்கக் கூடிய, சுயவிமர்சன அடிப்படையில் அமைந்துள்ளது.

இதுவரை கட்சிக்குள்ளிருந்து இத்தகைய விமர்சனக் குரலை தமிழ்ச்சூழலில் யாரும் இவ்வளவு விரிவாக, தோல்வியின் அடிப்படைகளை, இழப்பின் வலிகளை முன்  வைத்து விவாதித்ததில்லை என்றே கருதுகிறேன்.

அதே சமயம், பல்வேறு தரப்புக்களையும், காங்கிரஸ் கட்சி  உட்பட, கம்யூனிஸ்ட் கட்சிகள் அணுக்கமாக கருதியிருக்கவேண்டும் என்கிற பார்வையும் உள்ளே ஊடாடுகிறது,. அது அன்றைய இந்திய சூழ்நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற பார்வையை முன்வைத்து, விமர்சனம் செய்கிறது. இதுவும் விவாதிக்கப்பட வேண்டிய தேவைகளைத் தருகிறது.

கட்சியின் மத்தியத்தலைமை மாநிலத் தலைமையில் குறிக்கிடும் போக்கானது திசையறிந்து மாநிலத்தின் சூழல் கருதியதாக இருக்கவேண்டும் என்கிறது.

இந்தியச் சூழலையும் தமிழகச் சூழலையும் மனதில் வைத்துக்கொண்டு கட்சியின் நிலையை எப்படித் தகவமைப்பது என்ற சிலபல கேள்விகளையும் முன்வைக்கிறது.

அதற்கும் மேலாக
“கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய காலத்திலிருந்து அடக்குமுறைகளையும் சதி வழக்குகளையும், குடும்பம் பட்ட கொடுமைகளையும் சகித்துக்கொண்டு கட்சியைக் கட்டி வளர்த்த மூத்த தலைவர்கள் அவர்களது முதுமைக் காலத்தில் ஒதுக்கப்பட்டவர்களாய் முடிந்த பல கசப்பான செய்திகள் இன்றும் தொடர்வது ஏன்? (இவை உட்கட்சி, ஒழுங்கு நடவடிக்கை என்றக் கூறப்படுவதால், பெயர்களையும் விவரங்களையும் எழுதவிரும்பவில்லை. ஆனால் நினைவூட்டலுக்காக தோழர்கள் பி.சி.ஜோஷி,எஸ் ஏ டாங்கே, சிங்காரவேலர், மணலி கந்தசாமி)

திரிபுர மாநிலத்தின் முதல்வராக இருந்த தோழர் நிரூபன் சக்கரவர்த்தி, பல லட்சம் நட்சத்திரங்களில் நடுவே (எண்ணற்ற கம்யூனிஸ்ட் தியாகிகள் மத்தியில்) துருவ நட்சத்திரமாக ஒழுக்க வாழ்க்கையை நடத்திக் காட்டியவர். அவரை மக்களும், எதிர்த்த கட்சியினரும் கூட மாமுனிவர் – கம்யூனிஸ்ட் துறவி என்றே வருணித்தனர். அவர், மேற்கு வங்க அரசு பற்றி மக்கள் குறை கூறுவதைக் கேட்டு வேதனைப்படுகிறேன் என்று பகிரங்கமாகப் பேசியதால்,  கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நீக்கத்தை மக்கள் கண்டித்தனர். எனவே அவர் நோய்வாய்ப்பட்டு இறப்பதற்கு முதல் நாள் ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்துவிட்டு கட்சி உறுப்பினர் அட்டையை அவர் உடல்மீது வைத்துவிட்டு திரும்பினர். இதை மேற்கு வங்க கலைஞர்களும் எழுத்தாளர்களும் புரட்சியாளர்களின் மூடச் சடங்கு என வருணித்தனர்

இதே போன்று, உச்ச நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்குரைஞராக இருந்தவர் சட்டர்ஜி. கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். இந்து மகா சபையின் தலைவராக இருந்தார். அவரது மகனாகப் பிறந்தவர்தான் சோம்நாத் சட்டர்ஜி, அவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதே போல் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உ.வரதராஜன் தற்கொலை செய்து கொண்டது பற்றி குத்திக் குடைகிற முறையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு இன்றும் பதில் கூற இயலவில்லை. இது நீண்ட பட்டியல்; இந்தத் துயரக்கதை நீளக்கூடாது என்பதே நமது வேண்டுகோள்.”

என்று கட்சியின் உள் விசயங்களையும் வெளிப்படையாக வைத்து விவாதிக்க வேண்டுகிறார். கம்யூனிஸ் கட்சி அல்லது ஆளும் கட்சியாக இருக்கும் வங்கத்தில் அது பிற இடதுசாரிகளை எப்படி நடத்தியது என்று விவாதங்கள் இருக்க தோழர் தா.பாண்டியன் தன் கருத்தாக

“இடதுசாரி ஒற்றுமை என்ற பெயரால்,சுயமாக கருத்துக்களை வெளியிட மேற்கு வங்கத்தில் இடமே தரப்படவில்லை. கேரளாவில் இரு கட்சித் தலைமையும் மாறுபட்ட நிலைகள் தோன்றுகிறபோது பகிரங்கமாக விவாதிக்க், கருத்தை வெளியிட தயங்கியதே இல்லை. ஆனால் மேற்கு வங்கத்தில் கட்சிக் கூட்டம் [ஓடுவதற்குக் கூட, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டத் தலைமையிடம் அனுமதி பெற்றபிந்தான் கூட்டம் நடத்தமுடியுமாம். எத்தனை கொடிகள் கூட்டத்தை ஒட்டிப் பறக்கலாம் என்பதையும் மார்க்சிஸ்ட் கட்சிதான் தீர்மானிக்குமாம். இந்த அடிமைப்பட்ட நிலையை இப்போதுதான் தோழர்களால் கூற முடிகிறது. வெட்கப்படவேண்டிய செயல்.

மேற்கு வங்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே தொடர்ந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வந்ததை “ குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது” என தோழர் இந்திரஜித் குப்தா குறிப்பிடுவார்.

தனித்து சுயமாக இயங்குகிற தனித்தன்மையை இழந்து இடதுசாரி ஒற்றுமை என்பது, இடதுசாரி இயக்கம் முழுவதையும் பாதிக்கும். அதைத்தான் மேற்குவங்கத்தில் காண்கிறோம்.

34 வருட கூட்டணி ஆட்சியில் 20 ஆண்டுகளாக இந்தியக் கம்யூனிஸ் கட்சியும் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தது. எனவே அப்போதுதான் சிங்கூர் நந்திகிராம் வால்மார்ட் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுப்பு, மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனீஸ்ட் கட்சியினர் இழைத்த கிரிமினல் தாக்குதல்கள், நில ஒப்படைப்பு நின்று போனது பற்றி, இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சியின் தேசியக் குழு கூட்டங்களில் கேள்வி கேட்ட போதும், விவாதிக்கக் கேட்டபோதும், இடதுசாரி ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி என்ற பதிலடி கிடைத்தது. ரிக்சா வண்டியை மனிதர்கள் இழுப்பதை நிறுத்தவேண்டும் என தோழர் டாங்கே சொன்னபோது இடதுசாரி ஒற்றுமையை உடைக்க  காங்கிரசின் கையாள் முயல்கிறார் எனக் கூறியதைக் கேட்டேன்.”

என்று தா.பாண்டியன் பல்வேறு விமர்சனங்களை வெளிப்படையாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட கருத்துக்களை தோழர் தா.பாண்டியன் வைப்பதென்பது இந்தியக் கம்யூனீஸ்ட் கட்சி அனைத்தையும் விவாதிக்க தயாராக இருக்கிரது என்பதை வெளிக்காட்டுகிறதா, இல்லை இவ்விவாதங்கள் பரந்து பட்ட வெளியில் இவ்விவாதங்கள் நடைபெற வேண்டும் என ஆசிரியர் விரும்புகிறாரா? எது எப்படியாயினும் விவாதம் முக்கியம்.

எல்லாவற்றிற்கும் மேலாக சுதந்திரத்துக்கு முன்னான காங்கிரசின் முற்போக்குத் தன்மை, அம்பேத்கர், பெரியார் நீரோட்டங்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டுகொள்ளாதது ஏன் என்பது போன்ற கேள்விகளையும் முன்வைக்கிறார். இதனை முன்வைத்து நாமும் விவாதிக்க பல கருத்துக்கள் இருக்கிறது.
ஆனால் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான தலைவர்களில் ஒருவர் இப்படி வெளிப்படையாக விவாதிக்க நினைப்பது என்னளவில் ஆரோக்கியமான ஒன்றாகவே கருதுகிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக நூலில் ஒலிக்கும் ஆசிரியரின் குரல், ஒரு வயது முதிர்ந்த தோழரின் அங்கலாய்ப்பின் தொனியில் ஒலித்தாலும், கட்சி மீதான நம்பிக்கையை, அதன் லட்சிய வேகத்தை எங்கும் அமுங்கிய குரலில் சொல்லவில்லை. அக்குரல் கலகத்தன்மையை முன்வைத்திருக்கிறது. கலகத்திற்கு வயது முக்கியமல்ல. ஒன்றுபடுவதற்கான விவாதங்களை நடத்துவதுதான் முறை.

இந்தப் புத்தகம் குறித்து எங்காவது விவாதங்கள் நடைபெற்றதா, இந்தியக் கம்யூனீஸ்ட் கட்சிக்குள்ளாவது இந்நூல் விவாதிக்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. விவாதங்களை எழுப்பும் பட்சத்தில் நூல் தன் பணியைச் செவ்வனே செய்ததாக இருக்கும்.

மாற்றுக் கருத்துக்களை மதிக்க வேண்டியது, விவாதிக்க வேண்டியது கம்யூனீஸ்டுகளின் கடமை. கருத்துக்கள் மாற்றுக் கருத்துக்களா இல்லை அவதூறுகளா என்பதை அறியமுடியாத தத்துவப் பற்று அல்லது தத்துவச் சார்பு நம்மை கட்சிவாதத்துக்கு பல முறை தள்ளியிருக்கிறது.

அவதூறுகளுக்கு சொந்தக்காரர்களால, ஆளும் வர்க்கம் மட்டுமல்ல, ஆளும்வர்க்கத்தை ஒடுக்கும் கம்யூனிஸ்ட்களும் பலியாவது நல்லதல்ல. அவதூறுகள் குறித்து நாம் நேர்மையான விவாதங்களை முன்னெடுத்தோமானால் அது தத்துவத்திற்கு இன்னும் கூடுதலான வெளிகளையும், கட்சிக்கு நன்மையையுமே செய்யும்.

விவாதிக்க வேண்டிய கருத்தை ஒரு தரப்பு முன்வைக்கும் போது, பதில் இல்லையெனில், அதை அவதூறு என்று சொல்லிவிடுவதன் மூலம் கட்சியின் சரிவை சில வருடங்களை தள்ளி வைக்கலாம். ஆனால் கட்சி தன் நிலைப்பாடக முன்வைக்கும் மார்க்சியத்தை அது உடனே சீரழிக்கும். முத்திரை குத்தி அனைத்தையும் தத்துவத்தின் பெயரால் நிலைநிறுத்த துணிந்தோமானால் இழப்பு நமக்கே.

நூலை, முழுவதும் படித்துவிட்டு ஆய்வுப் பார்வையோடு இன்னும் விரிவான விமர்சனங்களை முன்வைக்கிறேன்.

விவாதிக்கப்பட வேண்டிய புத்தகம்.
விவாதித்தே ஆகப்பட வேண்டிய புத்தகம்.
ஆசிரியரின்  அணுகுமுறைகளையும் சேர்த்து.
கம்யூனிஸ்ட் கட்சிகள் கவனத்தில் கொள்லலாம்.


இன்றைய இளம் தலைமுறை கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து அறிந்துகொள்ள, அதன் முறைமைகளைத் தெரிந்து கொள்ள நிச்சயம் இந்த நூல் உதவும் என்பது என் நம்பிக்கை. பல விவாதங்கள் நூல் முழுக்கக் கொட்டிக்கிடக்கிறது.

உதாரணத்திற்கு;

கம்யூனிஸ்ட் கட்சி 1948 முதல் 19451க்குள் ஜோஷியை நீக்கியது, அடுத்து ரணதிவேயை நீக்கியது, அடுத்துப் பொறுப்பேற்ற ராஜேஸ்வர ராவையும் விலகச் செய்தது, மூவர் தலைமையை நியமித்தது ஆகியவை, மனிதர்களை நியமித்தது அல்லது நிக்கியது போன்ற நடவடிக்ககைகள் அல்ல, மூன்று முறை கொள்கை மாற்றம்; போர்தந்திர முறைகள் மாற்றம் என ஏற்பட்டவை ஆகும். ஒவ்வொரு மாற்றத்துக்கும், அதனை ஏற்பவர்கள் எதிர்ப்பவர்கள் என இருந்ததால், ஒவ்வொரு தடவையும் மாற்றத்தை எதிர்த்தோர் நீக்கப்பட்டதும் உண்டு. தாங்களாகவே விலகிச் சென்றவர்களும் உண்டு. ஊரறிந்த ஒரு பெரிய உதாரணம், கட்சி அமைப்பு விதிமுறைப்படி முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பொதுச் செயலாளரான பி.சி.ஜோஷி கட்சி உறுப்பினர் நிலையிலிருந்தும் நீக்கப்பட்டார். பின்னர், மூன்றாவதாக அமைந்த மூவர் குழு பி.சி.ஜோஷியை அங்கத்தினர் ஆக்கினார்கள்; மத்திய அலுவலகப் பொறுப்பாளராகவும் ஆக்கினார்கள். அதே மூவர் குழு பி.டி.ரணதிவேயை கட்சியிலிருந்து நீக்க கடிதம் கொடுத்தபோது, தன்னைக் கட்சியிலிருந்து நீக்கிய ரணதிவேயை நீக்கக் கூடாது என்று வாதாடிய ஜோஷி, ரணதிவே முன்வைத்த அறிக்கையை நூற்றுக்கு தொண்ணூற்று ஏழு பேர் ஆதரித்தீர்கள்; ஆகவேதான் அத்தீர்மானம் நிறைவேறியது; ஆக தீர்மானம் நிறைவேற கை தூக்கிய உங்கள் அனைவரையுமே வெளியேற்றவேண்டும். எனவே, அவரை மட்டும் நீக்கக் கூடாது என வாதிட்டதால் நடவடிக்கை கைவிடப்பட்டது.

அதோடு மட்டுமில்லாது, இன்று நடப்பில் நடக்கும் ஒரு விசயத்தை நூலில் குறிப்பிட்ட ஒரு விசயத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கவும். அது குறித்து நாம் விவாதிக்கவும் உதவுகிறது.

பங்களாதேசைச் சேர்ந்த தஸ்லிமா நஸ்ரின் குடியேறினார்.மேற்கு வங்க அரசு இஸ்லாமிய பழமைவாதிகளின் கோரிக்கையை ஏற்று, அவர் எழுதிய புத்தகத்தை தடை செய்தது. கல்கத்தாவை விட்டு வெளியேறும்படி மாநில அரசு உத்தரவிட்டது. அதை எதிர்த்து கலைஞர்கள் கூட்டம் நடத்தியபோது பல லட்சம் மக்களும் கமாணவர்களும் திரண்டு அரசைக் கண்டித்தனர். மார்க்சிஸ்டுக் கட்சி உறுப்பினராக இருந்த திரையுலக நடிகர்கள், எழுத்தாளர்கள், இது மார்க்ஸ்-லெனின் வகுத்த பாதை அல்ல, போபாட்,கிமில்சுங், என்வர் ஹோக்சா ஆகியோரின் நோய் என சாடினர்.

அத்வானி ரத யாத்திரை வந்தபோது, மேற்கு வங்கத்தில் இரண்டு நாட்கள் பயணம் செய்தார். மேற்கு வங்க அரசு தடுக்கவோ – நிறுத்தவோ முயற்சிக்கவில்லை. அதே காலத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த விரும்பிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சி ஷோஷலிஸ் கட்சி, பார்வார்ட் பிளாக் கட்சிகள் ஆகியவற்றையும் நடத்தவிடாமல் மார்க்சிஸ்ட் கட்சி தடுத்தது. தானும் எந்தக் குரலும் எழுப்பவில்லை. ஆனால் அத்வானி மறுநாள் பயணத்தில் பிகாருக்குள் நுழைந்தவுடன் லாலு பிரசாத் தலைமையிலான அரசு அத்வானியைக் கைது செய்து பயணியர் விடுதியில் காவலில் வைத்தது. அதே நேரத்தில் பாட்னாவில் அத்வானி பேசுவதாக இருந்த மைதானத்தில், லாலு பிரசாத்தின் கட்சியினர் சீதையை காட்டுக்கு விரட்டிய ராமனுக்கு கோயில் கட்டவிடமாட்டோம் என்ற முழக்கத்தோடு முப்பது லட்சம் பேர் கூடியிருந்தனர். பீகாரிலுள்ள மிதிலையில்தான் சீதை பிறந்தார் என நம்பிக்கை. எனவே எங்கள் சீதையை காட்டுக்கு விரட்டிய ராமருக்கு கோயிலா? என எதிர்ப்பைக் காட்டினர். லாவுவின் துணிவோடு ஒப்பிட்டு இடதுசாரிக் கூட்டணியை ஏளனம் செய்தனர் அறிஞர்கள்.

என்று தனது நூலில் குறிப்பிடும் ஆசிரியர். கேரளப் பாதை வெளிச்சம் தரக் கூடியது என்று  நம்பிக்கையோடு கூறவும் செய்கிறார். இப்பொழுது கேரளாவில் அமிஷ் ஷா நுழைந்திருக்கிறார். இது குறித்த விவாதங்களை அங்கு கேரள அரசு எப்படி எதிர்கொள்ளும், ஆசிரியர் என்ன விதமாக அணுகுவார் என்பது என்னுடைய கேள்வியாகவும்  எஞ்சுகிறது.

பொதுவுடைமையரின் வருங்காலம்?
தா. பாண்டியன்.
நியூ செஞ்சூரி புக் ஹவுஸ்
விலை;250
பக்கங்கள்;332