Pages

Thursday, October 5, 2017

பொதுவுடைமையரின் வருங்காலம்?





பொதுவுடைமையரின் வருங்காலம்?

சர்ச்சைக்குரிய புத்தகம் மட்டுமல்ல,
விவாதித்தே ஆகவேண்டிய புத்தகம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்து ஒலிக்கும் சுயவிமர்சனத்தின் குரலாக இந்த நூலைப் பார்க்க வேண்டியதிருக்கிறது. நூலை எழுதியிருப்பவர் தா.பாண்டியன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர், மாநிலசெயலாளராய் இருந்தவர். அகில இந்திய அளவிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்புக்களில் இருந்தவர்.

நூலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கடந்த கால சரிவுகள் குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டு, அதில் அவரது கண்ணோட்டத்தை சில கேள்விகளாகவும், விவாதங்களாகவும் வைத்திருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் பேசியிருக்கிறார். அத்தகைய பார்வைகளில் நிறை குறைகள் இருப்பினும், இந்த நூல் தன்னளவில் விவாதத்தை வரவழைக்கக் கூடிய, சுயவிமர்சன அடிப்படையில் அமைந்துள்ளது.

இதுவரை கட்சிக்குள்ளிருந்து இத்தகைய விமர்சனக் குரலை தமிழ்ச்சூழலில் யாரும் இவ்வளவு விரிவாக, தோல்வியின் அடிப்படைகளை, இழப்பின் வலிகளை முன்  வைத்து விவாதித்ததில்லை என்றே கருதுகிறேன்.

அதே சமயம், பல்வேறு தரப்புக்களையும், காங்கிரஸ் கட்சி  உட்பட, கம்யூனிஸ்ட் கட்சிகள் அணுக்கமாக கருதியிருக்கவேண்டும் என்கிற பார்வையும் உள்ளே ஊடாடுகிறது,. அது அன்றைய இந்திய சூழ்நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற பார்வையை முன்வைத்து, விமர்சனம் செய்கிறது. இதுவும் விவாதிக்கப்பட வேண்டிய தேவைகளைத் தருகிறது.

கட்சியின் மத்தியத்தலைமை மாநிலத் தலைமையில் குறிக்கிடும் போக்கானது திசையறிந்து மாநிலத்தின் சூழல் கருதியதாக இருக்கவேண்டும் என்கிறது.

இந்தியச் சூழலையும் தமிழகச் சூழலையும் மனதில் வைத்துக்கொண்டு கட்சியின் நிலையை எப்படித் தகவமைப்பது என்ற சிலபல கேள்விகளையும் முன்வைக்கிறது.

அதற்கும் மேலாக
“கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய காலத்திலிருந்து அடக்குமுறைகளையும் சதி வழக்குகளையும், குடும்பம் பட்ட கொடுமைகளையும் சகித்துக்கொண்டு கட்சியைக் கட்டி வளர்த்த மூத்த தலைவர்கள் அவர்களது முதுமைக் காலத்தில் ஒதுக்கப்பட்டவர்களாய் முடிந்த பல கசப்பான செய்திகள் இன்றும் தொடர்வது ஏன்? (இவை உட்கட்சி, ஒழுங்கு நடவடிக்கை என்றக் கூறப்படுவதால், பெயர்களையும் விவரங்களையும் எழுதவிரும்பவில்லை. ஆனால் நினைவூட்டலுக்காக தோழர்கள் பி.சி.ஜோஷி,எஸ் ஏ டாங்கே, சிங்காரவேலர், மணலி கந்தசாமி)

திரிபுர மாநிலத்தின் முதல்வராக இருந்த தோழர் நிரூபன் சக்கரவர்த்தி, பல லட்சம் நட்சத்திரங்களில் நடுவே (எண்ணற்ற கம்யூனிஸ்ட் தியாகிகள் மத்தியில்) துருவ நட்சத்திரமாக ஒழுக்க வாழ்க்கையை நடத்திக் காட்டியவர். அவரை மக்களும், எதிர்த்த கட்சியினரும் கூட மாமுனிவர் – கம்யூனிஸ்ட் துறவி என்றே வருணித்தனர். அவர், மேற்கு வங்க அரசு பற்றி மக்கள் குறை கூறுவதைக் கேட்டு வேதனைப்படுகிறேன் என்று பகிரங்கமாகப் பேசியதால்,  கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நீக்கத்தை மக்கள் கண்டித்தனர். எனவே அவர் நோய்வாய்ப்பட்டு இறப்பதற்கு முதல் நாள் ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்துவிட்டு கட்சி உறுப்பினர் அட்டையை அவர் உடல்மீது வைத்துவிட்டு திரும்பினர். இதை மேற்கு வங்க கலைஞர்களும் எழுத்தாளர்களும் புரட்சியாளர்களின் மூடச் சடங்கு என வருணித்தனர்

இதே போன்று, உச்ச நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்குரைஞராக இருந்தவர் சட்டர்ஜி. கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். இந்து மகா சபையின் தலைவராக இருந்தார். அவரது மகனாகப் பிறந்தவர்தான் சோம்நாத் சட்டர்ஜி, அவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதே போல் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உ.வரதராஜன் தற்கொலை செய்து கொண்டது பற்றி குத்திக் குடைகிற முறையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு இன்றும் பதில் கூற இயலவில்லை. இது நீண்ட பட்டியல்; இந்தத் துயரக்கதை நீளக்கூடாது என்பதே நமது வேண்டுகோள்.”

என்று கட்சியின் உள் விசயங்களையும் வெளிப்படையாக வைத்து விவாதிக்க வேண்டுகிறார். கம்யூனிஸ் கட்சி அல்லது ஆளும் கட்சியாக இருக்கும் வங்கத்தில் அது பிற இடதுசாரிகளை எப்படி நடத்தியது என்று விவாதங்கள் இருக்க தோழர் தா.பாண்டியன் தன் கருத்தாக

“இடதுசாரி ஒற்றுமை என்ற பெயரால்,சுயமாக கருத்துக்களை வெளியிட மேற்கு வங்கத்தில் இடமே தரப்படவில்லை. கேரளாவில் இரு கட்சித் தலைமையும் மாறுபட்ட நிலைகள் தோன்றுகிறபோது பகிரங்கமாக விவாதிக்க், கருத்தை வெளியிட தயங்கியதே இல்லை. ஆனால் மேற்கு வங்கத்தில் கட்சிக் கூட்டம் [ஓடுவதற்குக் கூட, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டத் தலைமையிடம் அனுமதி பெற்றபிந்தான் கூட்டம் நடத்தமுடியுமாம். எத்தனை கொடிகள் கூட்டத்தை ஒட்டிப் பறக்கலாம் என்பதையும் மார்க்சிஸ்ட் கட்சிதான் தீர்மானிக்குமாம். இந்த அடிமைப்பட்ட நிலையை இப்போதுதான் தோழர்களால் கூற முடிகிறது. வெட்கப்படவேண்டிய செயல்.

மேற்கு வங்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே தொடர்ந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வந்ததை “ குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது” என தோழர் இந்திரஜித் குப்தா குறிப்பிடுவார்.

தனித்து சுயமாக இயங்குகிற தனித்தன்மையை இழந்து இடதுசாரி ஒற்றுமை என்பது, இடதுசாரி இயக்கம் முழுவதையும் பாதிக்கும். அதைத்தான் மேற்குவங்கத்தில் காண்கிறோம்.

34 வருட கூட்டணி ஆட்சியில் 20 ஆண்டுகளாக இந்தியக் கம்யூனிஸ் கட்சியும் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தது. எனவே அப்போதுதான் சிங்கூர் நந்திகிராம் வால்மார்ட் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுப்பு, மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனீஸ்ட் கட்சியினர் இழைத்த கிரிமினல் தாக்குதல்கள், நில ஒப்படைப்பு நின்று போனது பற்றி, இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சியின் தேசியக் குழு கூட்டங்களில் கேள்வி கேட்ட போதும், விவாதிக்கக் கேட்டபோதும், இடதுசாரி ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி என்ற பதிலடி கிடைத்தது. ரிக்சா வண்டியை மனிதர்கள் இழுப்பதை நிறுத்தவேண்டும் என தோழர் டாங்கே சொன்னபோது இடதுசாரி ஒற்றுமையை உடைக்க  காங்கிரசின் கையாள் முயல்கிறார் எனக் கூறியதைக் கேட்டேன்.”

என்று தா.பாண்டியன் பல்வேறு விமர்சனங்களை வெளிப்படையாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட கருத்துக்களை தோழர் தா.பாண்டியன் வைப்பதென்பது இந்தியக் கம்யூனீஸ்ட் கட்சி அனைத்தையும் விவாதிக்க தயாராக இருக்கிரது என்பதை வெளிக்காட்டுகிறதா, இல்லை இவ்விவாதங்கள் பரந்து பட்ட வெளியில் இவ்விவாதங்கள் நடைபெற வேண்டும் என ஆசிரியர் விரும்புகிறாரா? எது எப்படியாயினும் விவாதம் முக்கியம்.

எல்லாவற்றிற்கும் மேலாக சுதந்திரத்துக்கு முன்னான காங்கிரசின் முற்போக்குத் தன்மை, அம்பேத்கர், பெரியார் நீரோட்டங்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டுகொள்ளாதது ஏன் என்பது போன்ற கேள்விகளையும் முன்வைக்கிறார். இதனை முன்வைத்து நாமும் விவாதிக்க பல கருத்துக்கள் இருக்கிறது.
ஆனால் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான தலைவர்களில் ஒருவர் இப்படி வெளிப்படையாக விவாதிக்க நினைப்பது என்னளவில் ஆரோக்கியமான ஒன்றாகவே கருதுகிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக நூலில் ஒலிக்கும் ஆசிரியரின் குரல், ஒரு வயது முதிர்ந்த தோழரின் அங்கலாய்ப்பின் தொனியில் ஒலித்தாலும், கட்சி மீதான நம்பிக்கையை, அதன் லட்சிய வேகத்தை எங்கும் அமுங்கிய குரலில் சொல்லவில்லை. அக்குரல் கலகத்தன்மையை முன்வைத்திருக்கிறது. கலகத்திற்கு வயது முக்கியமல்ல. ஒன்றுபடுவதற்கான விவாதங்களை நடத்துவதுதான் முறை.

இந்தப் புத்தகம் குறித்து எங்காவது விவாதங்கள் நடைபெற்றதா, இந்தியக் கம்யூனீஸ்ட் கட்சிக்குள்ளாவது இந்நூல் விவாதிக்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. விவாதங்களை எழுப்பும் பட்சத்தில் நூல் தன் பணியைச் செவ்வனே செய்ததாக இருக்கும்.

மாற்றுக் கருத்துக்களை மதிக்க வேண்டியது, விவாதிக்க வேண்டியது கம்யூனீஸ்டுகளின் கடமை. கருத்துக்கள் மாற்றுக் கருத்துக்களா இல்லை அவதூறுகளா என்பதை அறியமுடியாத தத்துவப் பற்று அல்லது தத்துவச் சார்பு நம்மை கட்சிவாதத்துக்கு பல முறை தள்ளியிருக்கிறது.

அவதூறுகளுக்கு சொந்தக்காரர்களால, ஆளும் வர்க்கம் மட்டுமல்ல, ஆளும்வர்க்கத்தை ஒடுக்கும் கம்யூனிஸ்ட்களும் பலியாவது நல்லதல்ல. அவதூறுகள் குறித்து நாம் நேர்மையான விவாதங்களை முன்னெடுத்தோமானால் அது தத்துவத்திற்கு இன்னும் கூடுதலான வெளிகளையும், கட்சிக்கு நன்மையையுமே செய்யும்.

விவாதிக்க வேண்டிய கருத்தை ஒரு தரப்பு முன்வைக்கும் போது, பதில் இல்லையெனில், அதை அவதூறு என்று சொல்லிவிடுவதன் மூலம் கட்சியின் சரிவை சில வருடங்களை தள்ளி வைக்கலாம். ஆனால் கட்சி தன் நிலைப்பாடக முன்வைக்கும் மார்க்சியத்தை அது உடனே சீரழிக்கும். முத்திரை குத்தி அனைத்தையும் தத்துவத்தின் பெயரால் நிலைநிறுத்த துணிந்தோமானால் இழப்பு நமக்கே.

நூலை, முழுவதும் படித்துவிட்டு ஆய்வுப் பார்வையோடு இன்னும் விரிவான விமர்சனங்களை முன்வைக்கிறேன்.

விவாதிக்கப்பட வேண்டிய புத்தகம்.
விவாதித்தே ஆகப்பட வேண்டிய புத்தகம்.
ஆசிரியரின்  அணுகுமுறைகளையும் சேர்த்து.
கம்யூனிஸ்ட் கட்சிகள் கவனத்தில் கொள்லலாம்.


இன்றைய இளம் தலைமுறை கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து அறிந்துகொள்ள, அதன் முறைமைகளைத் தெரிந்து கொள்ள நிச்சயம் இந்த நூல் உதவும் என்பது என் நம்பிக்கை. பல விவாதங்கள் நூல் முழுக்கக் கொட்டிக்கிடக்கிறது.

உதாரணத்திற்கு;

கம்யூனிஸ்ட் கட்சி 1948 முதல் 19451க்குள் ஜோஷியை நீக்கியது, அடுத்து ரணதிவேயை நீக்கியது, அடுத்துப் பொறுப்பேற்ற ராஜேஸ்வர ராவையும் விலகச் செய்தது, மூவர் தலைமையை நியமித்தது ஆகியவை, மனிதர்களை நியமித்தது அல்லது நிக்கியது போன்ற நடவடிக்ககைகள் அல்ல, மூன்று முறை கொள்கை மாற்றம்; போர்தந்திர முறைகள் மாற்றம் என ஏற்பட்டவை ஆகும். ஒவ்வொரு மாற்றத்துக்கும், அதனை ஏற்பவர்கள் எதிர்ப்பவர்கள் என இருந்ததால், ஒவ்வொரு தடவையும் மாற்றத்தை எதிர்த்தோர் நீக்கப்பட்டதும் உண்டு. தாங்களாகவே விலகிச் சென்றவர்களும் உண்டு. ஊரறிந்த ஒரு பெரிய உதாரணம், கட்சி அமைப்பு விதிமுறைப்படி முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பொதுச் செயலாளரான பி.சி.ஜோஷி கட்சி உறுப்பினர் நிலையிலிருந்தும் நீக்கப்பட்டார். பின்னர், மூன்றாவதாக அமைந்த மூவர் குழு பி.சி.ஜோஷியை அங்கத்தினர் ஆக்கினார்கள்; மத்திய அலுவலகப் பொறுப்பாளராகவும் ஆக்கினார்கள். அதே மூவர் குழு பி.டி.ரணதிவேயை கட்சியிலிருந்து நீக்க கடிதம் கொடுத்தபோது, தன்னைக் கட்சியிலிருந்து நீக்கிய ரணதிவேயை நீக்கக் கூடாது என்று வாதாடிய ஜோஷி, ரணதிவே முன்வைத்த அறிக்கையை நூற்றுக்கு தொண்ணூற்று ஏழு பேர் ஆதரித்தீர்கள்; ஆகவேதான் அத்தீர்மானம் நிறைவேறியது; ஆக தீர்மானம் நிறைவேற கை தூக்கிய உங்கள் அனைவரையுமே வெளியேற்றவேண்டும். எனவே, அவரை மட்டும் நீக்கக் கூடாது என வாதிட்டதால் நடவடிக்கை கைவிடப்பட்டது.

அதோடு மட்டுமில்லாது, இன்று நடப்பில் நடக்கும் ஒரு விசயத்தை நூலில் குறிப்பிட்ட ஒரு விசயத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கவும். அது குறித்து நாம் விவாதிக்கவும் உதவுகிறது.

பங்களாதேசைச் சேர்ந்த தஸ்லிமா நஸ்ரின் குடியேறினார்.மேற்கு வங்க அரசு இஸ்லாமிய பழமைவாதிகளின் கோரிக்கையை ஏற்று, அவர் எழுதிய புத்தகத்தை தடை செய்தது. கல்கத்தாவை விட்டு வெளியேறும்படி மாநில அரசு உத்தரவிட்டது. அதை எதிர்த்து கலைஞர்கள் கூட்டம் நடத்தியபோது பல லட்சம் மக்களும் கமாணவர்களும் திரண்டு அரசைக் கண்டித்தனர். மார்க்சிஸ்டுக் கட்சி உறுப்பினராக இருந்த திரையுலக நடிகர்கள், எழுத்தாளர்கள், இது மார்க்ஸ்-லெனின் வகுத்த பாதை அல்ல, போபாட்,கிமில்சுங், என்வர் ஹோக்சா ஆகியோரின் நோய் என சாடினர்.

அத்வானி ரத யாத்திரை வந்தபோது, மேற்கு வங்கத்தில் இரண்டு நாட்கள் பயணம் செய்தார். மேற்கு வங்க அரசு தடுக்கவோ – நிறுத்தவோ முயற்சிக்கவில்லை. அதே காலத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த விரும்பிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சி ஷோஷலிஸ் கட்சி, பார்வார்ட் பிளாக் கட்சிகள் ஆகியவற்றையும் நடத்தவிடாமல் மார்க்சிஸ்ட் கட்சி தடுத்தது. தானும் எந்தக் குரலும் எழுப்பவில்லை. ஆனால் அத்வானி மறுநாள் பயணத்தில் பிகாருக்குள் நுழைந்தவுடன் லாலு பிரசாத் தலைமையிலான அரசு அத்வானியைக் கைது செய்து பயணியர் விடுதியில் காவலில் வைத்தது. அதே நேரத்தில் பாட்னாவில் அத்வானி பேசுவதாக இருந்த மைதானத்தில், லாலு பிரசாத்தின் கட்சியினர் சீதையை காட்டுக்கு விரட்டிய ராமனுக்கு கோயில் கட்டவிடமாட்டோம் என்ற முழக்கத்தோடு முப்பது லட்சம் பேர் கூடியிருந்தனர். பீகாரிலுள்ள மிதிலையில்தான் சீதை பிறந்தார் என நம்பிக்கை. எனவே எங்கள் சீதையை காட்டுக்கு விரட்டிய ராமருக்கு கோயிலா? என எதிர்ப்பைக் காட்டினர். லாவுவின் துணிவோடு ஒப்பிட்டு இடதுசாரிக் கூட்டணியை ஏளனம் செய்தனர் அறிஞர்கள்.

என்று தனது நூலில் குறிப்பிடும் ஆசிரியர். கேரளப் பாதை வெளிச்சம் தரக் கூடியது என்று  நம்பிக்கையோடு கூறவும் செய்கிறார். இப்பொழுது கேரளாவில் அமிஷ் ஷா நுழைந்திருக்கிறார். இது குறித்த விவாதங்களை அங்கு கேரள அரசு எப்படி எதிர்கொள்ளும், ஆசிரியர் என்ன விதமாக அணுகுவார் என்பது என்னுடைய கேள்வியாகவும்  எஞ்சுகிறது.

பொதுவுடைமையரின் வருங்காலம்?
தா. பாண்டியன்.
நியூ செஞ்சூரி புக் ஹவுஸ்
விலை;250
பக்கங்கள்;332





No comments:

Post a Comment