Pages

Tuesday, August 20, 2024

ஜெயமோகனின் வெண்முரசு (மகாபாரதம்) இலக்கியத்தகுதி உடையதா? - வ சு மி த் ர


 

(கலை - மதத்தின் அந்தப்புரம்’ 

ஆய்வுக்கான குறிப்பிலிருந்து...)

 

 






“இந்தியாவில் பிராமணன்வேதத்தைப் படிக்கும் உரிமையைத் தனக்கு மட்டுமே வைத்துக் கொண்டுஅதன் புனிதத்தன்மையை நிரூபிக்கிறான்”

-கார்ல் மார்க்ஸ்

 

படைப்பு எனும் பேரில் மனிதன் தான் படைத்த கடவுளுக்கே சேவை செய்வது அந்நியமாதலின்பாற்பட்டே. தன்னிடமிருந்து விலகி தனக்கு மேலான ஒன்றை கற்பிக்கவும்அதற்கு இலக்கியத் தகுதியை வழங்குவது குறித்தும் இலக்கியவாதிகள் கேள்விகளை முன் வைக்க வேண்டும். (அதற்கு நாளாகும்!) புராணங்களை இலக்கியம் என்று வரையறுக்க முடியுமாஏலவே இதுகுறித்தான பார்வையில் பல்வேறு போக்குகள் உள்ளன. விவாதம் நிகழ்வின் அதன் தொடர்ச்சியாக அது விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

 

இந்தியத் தத்துவ இயலை மதத்திலிருந்து பிரிக்கமுடியாத நிலைதான் இலக்கியத்திற்கும் நிகழ்ந்து வருகிறது. தமிழில் மத நீக்கம் செய்யப்பட்ட படைப்புகள் வெளிவந்துகொண்டிருக்கிற காலத்தில் (இன்னும் பெருவாரியான நாவல்களில் குடும்பத்தன்மையே மதமாக சித்தரிக்கப்படுகிறது. குடும்பத்தைத் தாண்டி அதன் நீட்சி பாயத் தயங்குகிறது) இதன் போக்காக மத அடிப்படைவாத கோமாளித்தனங்களுக்கு இலக்கிய அந்தஸ்த்தை வழங்கலாமா?

 

ஏலவே சமய இலக்கியங்களை பகுத்தறிவுக்குட்பட்டு கேள்வி எழுப்பினால் உடனே பக்தி இலக்கியங்களை விலக்கி விடலாமாஇது வறட்டுத்தனமான இலக்கியப் பார்வையில்லையாஎன்றொரு கேள்வி உடனே முளைக்கிறது. விலக்குதல் குறித்து இங்கு பேச்சில்லை. அது மதத்தின் வேலை.

 

பக்தியை கடவுளை அப்படைப்புகளிலிருந்து பிடுங்கிவிட்டால் அப்படைப்புகளில் இலக்கியத் தகுதி என்ன என்பதுதான் இங்கு கேள்வி. தொழுகைதான் அதன் உள்ளடக்கம் எனில் நாம் மறுபடியும் முதலிலிருந்து தொடங்கவேண்டும். இலக்கியத்தின் உலகக் கண்ணோட்டம் எது?பக்தியை கொள்முதலாகக் கொண்டு படைக்கப்பட்ட மரபை இலக்கிய உள்ளடக்கமாகக் கொள்ள வேண்டுமெனில் அது பறைசாற்றும் மேன்மை கீழ்மைகளை எப்படி வரையறுப்பீர்கள்?என்ற கேள்வியும் எழும். இலக்கியமென்பது என்னரசனை மட்டுந்தானாஇந்தப் பனுவல்களை கேள்வி எழுப்பும் படைப்புகளை இலக்கியமாக ஏற்றுக்கொள்ள முடியுமா

 

இலக்கியம் பகுத்தறிவற்றதை இலக்கியச்சுவையோடு தரும்பட்சத்தில் அதன் மீதான கேள்விகளை எழுப்ப இலக்கியம் என்ற ஒரு வகைப்பாட்டிற்கு இருக்கும் தகைமைகள் என்ன

 

இலக்கியம் என்பதற்கான வரையறைகள் என்னமத அடிப்படைகளை ஏற்படுத்தவும்தர்க்கத்தை - பகுத்தறிவை வெளியே தள்ளி மக்களை அறியாமைக்குள் தள்ளும் அதன் செயல்பாட்டுத் திட்டங்கள் குறித்து கேள்விகள் இல்லையாஆன்மீகத்தின் மீது இலக்கியம் வைக்கும் அளவுகோல்கள் என்னவெறும் வார்த்தைகளுக்குப் பின்னிற்கும் உணர்ச்சிகள் போதுமானதா?

 

மகாபாரதம்-ராமாயாணம் இவைகளை இலக்கியப் பிரதியாக அணுகவேண்டும் அவை மாபெரும் இதிகாசங்கள் என்ற கோணங்கள் ஏலவே வெளிப்பட்டதுண்டு. மகாபாரதமும் ராமாயணமும் படைக்கப்பட வேண்டிய தேவைக்கான காரணங்கள் என்ன என்கிற கேள்வி எழ வேண்டாமாஅதன் தேவையும் சேவையும் யாருக்கு

 

தமிழில் உலகசாதனை செய்ததாக ஜெயமோகனால் கருதப்படும் அவரது வெண்முரசு தொகுதிகள் விற்பனைக்கு வந்துள்ளன. தொகுதிகளின் விலை 42,200 ரூபாய். 

 

மதங்களின் அடிப்படையே வரலாற்று அடிப்படை அதுவும் இந்துத்துவ அடிப்படைகளே முழுமுதலான சாட்சி எனக் கருதும் ஜெயமோகன் எழுதிய வெண்முரசுக்கு இலக்கியத்தகுதி எப்படிக் கிடைக்கிறதுஇது கேள்வி.

 

வெண்முரசு நூலைக் குறித்து அவர் வைக்கும் வியாக்கியானங்கள் கொந்தளிப்புடன் எழுத்துலகில் உலக சாதனைகளை அடைந்துவிட்டதாக பிரஸ்தாபிக்கிறது. வெண்முரசு குறித்து அதன் மைய அடக்கமாக ஜெயமோகன்: மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம் வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம் மகாபாரதத்தில் உள்ளது. இந்தியப் பண்பாடு உருவாகிவந்த முழுச்சித்திரமும் அதில் உண்டு. பாரதவர்ஷம் என்று சொல்லப்படும் நிலத்தின் அனைத்துப்பகுதிகளையும் மகாபாரதம் சித்தரிக்கிறது. அனைத்து மக்களையும் விவரிக்கிறது. அத்துடன் என்றும் மனிதகுலம் எதிர்கொள்ளும் அடிப்படையான அறக்கேள்விகள் அனைத்தையும் அது ஆராய்கிறது. அழியாத ஞானத்தை அவற்றுக்கான விடையாக அளிக்கிறது. அந்த ஞானத்தை நோக்கிச் சென்ற மாமனிதர்களின் உணர்ச்சிகளையும் தேடல்களையும் மோதல்களையும் வீழ்ச்சிகளையும் மீட்புகளையும் சித்தரிக்கிறது. ஆகவே ஒரு ஞானநூலாகவும் பேரிலக்கியமாகவும் ஒரேசமயம் திகழ்கிறது. சென்றகால வரலாறாகவும் இன்றைய வாழ்க்கையாகவும் உள்ளது.” என்கிறார் ஜெயமோகன்.

 

இந்தமாதிரியான ஞானங்களின்! பிரச்சினை என்னவென்றால்மனித குலம் எதிர்கொள்ளும் அடிப்படையான அறக்கேள்வியாக- ஒருவர் உழைக்க மற்றவர் உண்ணுவது ஏன் என்ற கேள்விகள் எல்லாம் எழாது. தத்துவப்பூனை ஞானப்பாலைக் குடித்துவிட்டு நித்யத்துவமாகக் கண்களை மூடியபடியே இருந்தால் நாம் என்ன செய்யமுடியும்?

 

ஜெயமோகனது வரலாற்றுப் புத்தகமான மகாபாரத்தில்-இந்தியப் பண்பாட்டு மரபை உருவாக்கித்தந்த  அவரது இந்தியத் தத்துவ மரபில் பௌத்தம் சமணம் இதரவைகளுக்கு இடம் இருக்கிறதாவாசித்தவர்கள் பதில் கூறலாம்.

 

வரலாற்றை வெறும் மதக்கருத்தியல் குவியமாகக் காணும் பிரம்மைபீடித்த ஒருவருக்கு பித்தே ஞானத்தின் அடிப்படையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வரலாறு என்றால் அவர் உருவகப்படுத்துவது மக்களோஉழைக்கும் வர்க்கமோ அல்ல. அப்படி இருப்பின் மகாபாரதத்தின் சேவை எவருக்கு இன்றுவரை பயன்பட்டு வருகிறது என்ற சாதாரண கேள்வி எழுந்திருக்கும். என்ன செய்வதுஞானம் என்றாலே அது உழைப்பைத் தள்ளி வைத்து சுரண்டிக் கொழுப்பதுதான். அஹம் பிரம்மாஸ்மி! 

 

மதப்பனுவல்களையே அறப்பனுவல்களாகக் காட்டும் ஜெயமோகன்ஏன் மதப்பனுவல்களில் இத்தனை அறக்கருத்துக்கள் கொட்டிக்கிடக்கிறனஅதன் தேவை என்னஎன்ற கேள்விகளை எல்லாம் முன்வைப்பது கிடையாது. நிலப்பிரபுத்துவ கால கட்டத்தில் அதன் சேவைக்கென ஆளும்வர்க்கத்தால் கொண்டாடப்பட்ட மதப்பனுவல்களை இருந்த நிலையிலிருந்தே திருப்பிக் கொண்டுவருவது வரலாற்றைத் தலைகீழாக்கும் செயல். அது நிகழாது எனத் தெரிந்தே அறம்-பேரிலக்கியம் ஞானப்பனுவல் என்ற  பெயர்களில் மதப்பனுவல்களை இலக்கியமாக்கும் முயற்சியில் இறங்குகிறார். கேள்வி ஒன்றுதான் இலக்கியமாக்கினால் அது கூறும் முடிவுகள் ஏற்கத்தக்கனவா

 

தேவிபிரசாத் சட்டோபாத்யாய ராகுல்ஜி உள்ளிட்ட எத்தனையோ அறிஞர்கள் மார்க்சியப் பின்புலத்தின் அடிப்படையில் மதத்தின் தோற்றுவாய் குறித்து விளக்கியுள்ளனர். கார்டன் சைல்ட் தொல்லியல் அடிப்படையில் அதன் வேர்களைக் கண்டார். இதன் தொடர்ச்சியாக மதத்தின் தோற்றுவாய் குறித்து பாலகோபால் எடுத்துரைக்கையில்: ஆதிகாலத்தில் மனிதனுக்கு எத்தனையோ மூட நம்பிக்கைகள் இருந்தன. நம்மில் உயிர் இருப்பதைப் போலவே நதிகளில் மரங்களில் காற்றில் அசையும் அனைத்து இயற்கையிலும் உயிர்கள் இருக்கும் என நினைத்தான். கங்கைத் தாய்அக்கினி பகவான் இதர கடவுள்கள் இவ்வாறு பிறந்தவர்களே. அப்போதைக்கு மதம் இருக்கவில்லை. அறியாமையில் பிறந்த மூட நம்பிக்கைகள் மட்டுமே இருந்தன. மூட நம்பிக்கைகள் தாமாகவே சுரண்டலுக்கு சாதனமாகப் பயன்படப் போவதில்லை. உதாரணமாக ஆதிவாசிகளில் எத்தனையோ சிறுதெய்வங்களின்பால் நம்பிக்கைகள் இருக்கும். ஆனால் ஆதிவாசிகள் சமூகத்தில் சுரண்டலுக்கு இடமில்லை. இந்தச் சிறு தெய்வங்களை ஒரே ஒரு படைப்பு கர்த்தாவிற்கு (பரபிரம்மாயெஹோவாஅல்லா) உட்படுத்தி பாவ புண்ணியங்கள்சொர்க்க நரகங்கள்கர்மமறுபிறப்புகள் போன்ற சித்தாந்தங்களை இணைத்து ஒரு உலகக் கண்ணோட்டத்தை வடிவமைக்கும் போதுதான் மதம் பிறக்கிறது. மூட நம்பிக்கைகள் ஆதிகாலத்திலிருந்து இருக்கும். ஆனால் மதம் வர்க்க சமூகத்தில் மட்டுமே தோன்றுகிறது. நிலப்பிரப்புத்துவ அமைப்பில் அதன் பண்பு முற்றுமான முழுமையும் தெளிவையும் அடைகிறது. தோற்றத்தில் வெவ்வேறான மதங்களில் எத்தனையோ வேற்றுமைகள் இருக்கும். பௌத்தம்இஸ்லாம் போன்ற மதங்களில் தோற்றத்தில் சற்று முற்போக்குப் பண்பைக் காணமுடியும். ஆனால் காலப்போக்கில் அவை அனைத்தும் அவற்றின் பண்பை தமது வரலாற்றுப் பாத்திரமான சுரண்டல் கருத்தியலுக்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொள்ளும்.

 

இயற்கை அனைத்தும் என்னுள் இணைந்திருக்கிறது’ என நாராயணன் பகவத்கீதையில் கூறுகிறார். நான்தான் சொர்க்கம்’ என ஏசு கிறிஸ்து கூறுகிறார். அல்லா தவிர வேறு கடவுள் இல்லை’ என குரான் கூறுகிறது. இயற்கை அனைத்திற்கும் வெளியில் இருந்துஇயற்கையை கட்டளையிடும் சக்தியாக கட்டுப்படுத்தும் இயக்கும் படைப்பு ஆற்றல் கர்த்தாவாக ஒரு பரமாத்மாவை மதம் உழைக்கும் வர்க்கத்தின் முன் நிறுத்துகிறது. பயங்கொள்ள வைக்கும் ஒரு பிரபஞ்சம் தழுவிய வடிவத்தை உணர்த்தச் செய்யும் அவன் எங்கும் இருப்பான்எதிலும் இருப்பான்அவனுக்கு பிறப்பு இல்லைஅழிவு இல்லைஅனைத்தையும் காண்கிறான்அனைத்தையும் நடத்துகிறான். அவன் ஒரு பெரிய சி.ஐ.டி. அவன் கண்ணில்படாமல் எவரும் எதையும் செய்யமுடியாது. இவ்வளவு பயமுறுத்தும் கடவுளை படைத்தபின் அதன்மூலம் எதைச் சொன்னாலும் உழைக்கும் மக்கள் அதை நம்புவார்கள். மதங்களுக்கு பொதுவாக தேவதூதர்கள் இருப்பார்கள். அவர்கள் மூலமாக மதக்கருத்துக்கள் உரைக்கப்படும். ஆனால்அந்த தூதர்கள் மதக்கருத்துகளின் தரகர்கள் மட்டுமே. அவர்கள் சொல்வது அவர்களின் சொந்தக் கருத்துகள் அல்ல. கடவுள் அவர்கள் மூலம் சொல்கிறார். அவை கடவுள் வார்த்தைகளாக இருந்தால்தான் மதிப்பிருக்கும். குரானில் இருப்பது முகமத் அபிப்ராயங்கள்  அல்ல. முகமத் மூலம் அல்லா ஒலித்த அபிப்ராயங்கள். பைபிளில் தேவதூதர்களின் இடம் இன்னும் குறைவு. ஏசுகிறிஸ்து தானே ஒரு பாத்திரமாக இருந்து தனது மதத்தைக் கூறுவார். தேவதூதர்கள் ரிப்போர்ட்டர்கள் மட்டுமே. இந்துக்களைப் பொறுத்தவரை தேவதூதர்களின் மீது நம்பிக்கை இல்லாததாலோ என்னவோ நாராயணன் சுயமாக அவதாரமெடுத்து தனது பகவத்கீதையை தானே உரைத்தான்.

 

எந்த வடிவத்தில் கூறினாலும்எத்தனை வித்தியாசங்கள் இருந்தாலும் இறுதியாக இந்த மதங்கள் அனைத்தின் சாராம்சம் ஒன்றுதான்.தாம் விளைவிக்கும் விளைச்சல் பாதிக்கு மேல் சுரண்டல் வர்க்கங்களின் கிடங்குகளுக்குப் போகிறது. ஆயினும்,விவசாயி உழைக்க வேண்டும். தான் நெய்த துணிகட்டும் வீடுசெதுக்கும் சிற்பம்,வேறொருவரின் அலங்காரம்வேறொருவரின் ஆடம்பரம்தனக்கு மட்டும் கூரை குடிசையே மிஞ்சும். ஆயினும்கூலிக்காரன் உழைக்க வேண்டும். இந்த உழைப்புச் சுரண்டலை அவன் வெறுக்காமல் அங்கீகரிக்கும் வகையில் பார்த்துக்கொள்வதே மதத்தின் முக்கியமான கடமை. மதத்தைப் புரோகிதர்கள் தமது சுயநலன்களுக்காகப் படைத்தார்கள் எனும் வாதத்தைக் காரணவாதிகள்நாத்திகர்கள் பிரச்சாரம் செய்தார்கள். பூஜைகள்திருமணங்கள்திதிகள் பிராமணர்களுக்கு எவ்வளவு ஆதாயத்தை சேர்க்கின்றன என்பதைக் கணக்கிட்டுஅதுவே மதத்தின் பொருளியல் அடித்தளம்’ என நினைப்பார்கள். இது மிகவும் அறிவியலற்ற அணுகுமுறை. உழைப்பவன் உழைப்புச் சுரண்டலுக்கு உட்படுவதைக் கவனிப்பதே மதத்தின் கடமை. இதற்கு ஒரு கருவியாக பணியாற்றும் புரோகிதர்கள் அந்தப் பணியில் ஒரு பணியாக தமது சுயநலனைக் கவனித்துக் கொள்கிறார்கள்.   

 

ஆன்மா நிலையானது என்னும் சித்தாந்தத்தை எடுத்துக்கொள்வோம். இந்த உடல் நிலையற்றது எனவும் துச்சமெனவும்நாம் உடைகளை மாற்றுவதைப் போல் ஆன்மா உடல்களை மாற்றுகிறது எனவும் (பகவத்கீதையில் கூறியதைப் போல்) பிரச்சாரம் செய்வதில் உள்ள நோக்கம் என்னவென்றால்இந்த உடல் நிலையற்றதுஅற்பமானதுஆகவேஅது செய்கிற உழைப்பாகட்டும்...அந்த உழைப்பை சுரண்டுவதாகட்டும் பெரிய விஷயமாக கருதாமல் நிலையான ஆன்மாவுக்கு மோட்சத்தை சாதிக்க வேண்டிய ஏற்பாட்டில் கவனமாக ஈடுபடுங்கள் என உழைக்கும் மக்களுக்கு கூறுதல். இந்த சித்தாந்தத்தின் பகுதியாகவே இறந்தவர்களுக்கு உணவளிக்கும் திதி சடங்குகள் தோன்றின. இது அவற்றின் தோற்ற வரலாற்றின் பிரதான அம்சம். ஆனால்பிறகு திதி சடங்குகளை செய்விக்கும் பிராமணர்கள் ஆயிரத்தெட்டு விதிகளை உருவாக்கி ஒருவர் மரணத்தை தமது பண்டிகையாக மாற்றினார்கள். திதி சடங்குகளை எவ்வளவு சிறப்பாகச் செய்கிறோமோ அவ்வளவு சுகபோகங்கள் இறந்தவர்களுக்கு கிடைக்கும் என நம்பவைத்து  தமது வாழ்க்கையை உத்தரவாதப்படுத்திக் கொண்டார்கள்.” என விரிவாக எடுத்துரைக்கிறார் பால கோபால். 

 

இங்கு நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சமும் இருக்கிறது. இவை அனைத்தும் பிராமணர்கள் தங்களது நலவாழ்வை தற்காத்துக்கொள்ள மேற்கொள்ள வைக்கும் சித்தாந்தக் கண்டுபிடிப்புகள் என நாம் நினைத்தால் அது தவறு. இத்தகைய சடங்குகள் எதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டனஅதன் உண்மையான மூலத்தோற்றம் எது என்பதையும் நாம் ஆராய வேண்டும். 

 

மந்திர தந்திரங்களும் பூஜை சடங்குகளும் இவ்வாறானவையே. அவற்றின் நோக்கம் பூஜாரிகளின் வயிற்றை நிரப்புவதல்ல. சாதாரண மனிதனை (உழைப்பாளியை) சமூகத்தில்இயற்கையின் முன் சக்தியற்றவனாக நிறுத்துவதே. தனக்கு எதுவும் தெரியாது. இந்த உலகம்அதில் கஷ்ட நஷ்டங்கள்அவற்றிற்கான காரணங்கள் தனக்குப் புரியாது. இவ்வுலகமோபரலோகமோ கடவுளை கேட்க வேண்டுமானாலும் அதுவும் தன்னால் முடியாது. அதற்காக ஒரு தந்திரம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். அது பூஜாரிகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். வாழ்க்கை தன் போக்கில் போக வேண்டுமானாலும் திருமணம்பிறப்பு அனைத்துக்கும் சடங்குகள் இருக்கும். அவையும் பூஜாரிகளுக்கு மட்டுமே தெரியும். இவை அனைத்தின் நோக்கமும் உழைப்பாளிக்குஇந்த உலகத்தை புரிந்துகொள்ளும் தகுதியும் சக்தியும் இல்லையென நம்பவைத்துஎத்தகைய சுரண்டல் அக்கிரமங்கள் அவன் மீது சுமத்தினாலும் அதுவே இயற்கை தர்மம் எனபாழாய்ப்போன இதுவே தனது வாழ்க்கை எனக் கருதி அக்கிரமங்களுக்கு அடங்கிப் போகச் செய்தல். புரோகிதர்களுக்குத் தவிர உழைப்பாளர்களுக்கு கல்வியில்லாமல் செய்ததின் நோக்கமும் இதுவே. இந்த முறையில் வேலையில் வேலையாக பிரபஞ்ச ஞானத்தின் மீது தனது ஏகபோகத்தின் துணை கொண்டு புரோகிதர்கள். தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்வார்கள். இதுவே தவிரஅவர்கள் வயிறு நிரப்பவே மதம் இருக்கிறதென்றும்அவர்கள் பூஜை சடங்குகள் மூலம் சேர்ப்பதே சுரண்டல் எனவும் நாத்திகர்கள் செய்கிற சித்தாந்தங்கள் அர்த்தமற்றவை. நாத்திகர்களுக்குப் புரியாத விசயம்கடந்த காலத்து மன்னர்,நிலப்பிரப்புத்துவ வர்க்கங்களுக்கு தெளிவாகப் புரிந்திருந்தது. பிராமணர்கள் தமது வயிற்றை நிரப்ப மட்டுமே இல்லை எனவும்நிலப்பிரபுத்துவ சுரண்டலை நிலைக்கச் செய்யவே இருக்கிறார்கள் எனவும் அங்கீகரித்து பிராமணர்களுக்குக் காணிக்கையாக அக்ரகாரங்களை மானியங்களாக கொடுத்து அவர்களையும் நிலப்பிரப்புக்களாக்கினார்கள். அதே போல் புத்த விகாரங்களுக்கும்முஸ்லீம் மசூதிகளுக்கும்கிருத்துவ சர்ச்சுக்களுக்கும் மானியங்கள் கொடுத்து மத அமைப்பு முறையை நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்குள் மேலும் நெருக்கமாக இழுத்துச் சேர்த்துக்கொண்டனர்.” என்கிறார் பாலகோபால்.

 

மதங்களுக்கு ஆளும் வர்க்க அரசுகள் அள்ளிக்கொடுப்பதன் பின்னணியை இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள முடியும். உடல் உழைப்பிலிருந்து விடுபட்ட மதமாச்சாரியர்கள் இந்துத்துவ மரபில் மட்டுமல்ல பௌத்த மரபிலும் உண்டு. நாலந்தா பல்கலைக் கழகம் பௌத்த தத்துவ அறிவின் உறைவிடம் என்கிற பல புளுகுக் கதைகளை நாம் கேட்டிருப்போம். அங்கு உற்பத்தியான அறிவுக் கருத்தியல்கள் என்னஅவை மக்களுக்கு செய்த சேவைகள் என்னஅதன் ஞானம் எத்தகையது?

 

நாளந்தாவைப் பற்றி தேவிபிரசாத் கூறுகையில்; “அது மகாயானிகளின் வேலைகள் நடந்த இடங்களில் மிகவும் முக்கியமான இடம். அதனாலேயே தாராநாதர் அநேகமாக மகாயானத் தலைவர்கள் அனைவரையுமே அதனோடு இணைத்துவிட நினைக்கிறார். சீன யாத்திரிகர்களான யுவான் சுவாங்ஐ. திஸிங் என்ற இருவருமேகி.பி. ஏழாவது நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்து ஓரளவு நீண்ட நாட்களை இந்த மடாலயத்தில் தங்கிக் கழித்துள்ளார்கள்இவை பற்றிய முக்கியமான விஷயங்களையும் எழுதிவைத்துள்ளார்கள். யுவான் சுவாங் கூறுவதுஇந்த மடாலயம் உள்ள இடத்தை ஐநூறு வியாபாரிகள் பத்துக்கோடி பொற்காசுகளுக்கு ஆரம்பத்தில் வாங்கினார்கள். ஐந்து அரசர்கள் அதைத் தொடர்ந்து அபாரமான அழகுகள் கொண்ட கூடங்களையும் பிறவற்றையும் கட்டிமுடிக்கப் பொருள் உதவி செய்தனர். தான் தங்கியிருந்த காலத்தில் அங்கே பதினாயிரம் மாணவர்களும் ஆயிரத்து ஐநூறு ஆசிரியர்களும் வசதியுடன் தங்கினார்கள். படிப்பதும் சர்ச்சை செய்வதுமாயிருந்த அவர்களுக்கு ஒரு நாட்போது மிகவும் குறைவாகவே தோன்றியது. அத்தனை பேர் சிந்தனையும் தியானமும் மட்டுமே செய்து கொண்டு எப்படி வாழமுடியும்இ-த்ளிஸ் இதற்கு விடை தருகிறார்பலதலைமுறைகளில் பல அரசர்கள் மான்யமாகக் கொடுத்த இருநூறு கிராமங்களுடைய வருமானத்தைக் கொண்டு இவர்கள் வாழ்ந்தனர். பல்லாயிரக் கணக்கான உழைப்பாளிகள் இருக்கவேண்டும். அவர்கள் உழைத்து உற்பத்தி செய்தவற்றைக் கொண்டு இவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும். இது நாளந்தாவைப் பற்றிய உண்மை செய்தி என்றால் மற்ற மடாயலங்களின் விஷயமும் இதுபோன்றே இருக்கும். பிறர் உழைப்பைக் கொண்டே வாழும் இவர்கள்சிந்தனையும் தியானமும் மட்டுமே செய்துகொண்டு பொழுதைப் போக்குவது எளிதுதானேஇப்படி உடல் உழைப்பு எதுவுமே இல்லாமல் தத்துவ சிந்தனையில் தனிச்சிறப்படையும் வாய்ப்பும்சமுதாயத்திலிருந்து தம்மை அந்நியப்படுத்தி ஒதுக்கிக் கொண்டதும். சிந்திக்கப்படும் பொருள்கள் வெறுமையாக - ஒன்றுமில்லா சூன்யமாக - முடியும் சிந்தனை மட்டுமே மிச்சமாகிறது.” என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்யாய. 

 

மதமாச்சாரியார்கள், ஆழ்வார்கள், பக்திப்பாசுரங்களை இயற்றியவர்கள், ஸூஃபிகள் பாதிரியர்கள் அனைவரும் உடல் உழைப்பில் இருந்து விடுபட்டவர்கள். சமணத்துறவிகளும் பௌத்தத் துறவிகளும் அப்படியே. உழைப்பிலிருந்து இவர்களை விடுவித்து இத்தனை காரியங்களைச் செய்ய ஆளும் வர்க்கம் ஏன் பணித்ததுமதத்திற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தின் பின்னணி என்னநாம் கவனிக்காமல் விட்டவை எவை?  

 

இந்தியத் தத்துவ இயல் முழுவதும் கூட நிலப்பிரபுத்துவ யுகத்தின் படைப்பேயாகும். இதுவும் கிரேக்க தத்துவ இயலைப் போலவே உடலுழைப்பில்லாதஉணவுஉடை போன்ற கவலைகளில்லாதவர்களின் சிந்தனையின் பலனேயாகும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் தத்துவ இயலைப் படைத்ததில் நிலப்பிரபுகளுக்கு நேரடிப் பங்கு இருந்தது. உபநிஷத்துகளின் தத்துவத்தை உருவாக்கியதில் பிரவாஹன்ஜனகர்அஸ்வபதிகைகேயர் போன்ற அரசர்களுக்கு முக்கியப் பங்கிருந்தது. யாகங்களின் போது அளிக்கப்பட்ட தட்சணைகளைப் பெற்றுக்கொண்ட புரோகித (பிராமண) வர்க்கம் மக்களின் உண்மை நிலையைப் பார்க்கத் தவறிய போதுபிராமணர்களின் சடங்குகள் ஓட்டைப்படகு என்று சொல்லி பிரம்ம ஞானம்’ என்ற இருட்டறையை நிலப்பிரபுக்கள் (சத்திரியர்கள்) தயார் செய்தனர். வேதகால ரிஷிகள் எதார்த்தவாதிகள். அவர்கள் உலகம் எப்படி இருக்கிறதோஅதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதிகபட்ச மகிழ்ச்சியை அடைய விரும்பினர். அவர்களுடைய வாழ்க்கை லட்சியம் வீடு வாசலையும்மனைவி மக்களையும் துறந்து காட்டுக்கு ஓடிப்போவதல்ல! அவர்களது குறிக்கோள் புத்திர பௌத்திரர்களுடன் வீட்டிலேயே மகிழ்ச்சியாக வாழ்வது” தான்! (கிரீடந்தஹ புத்ரைர்ன் த்ரு ப்ர்மோத மானாஹ ஸ்வேதமே.’) அவர்கள் தனது குறிக்கோளை நன்கு புரிந்திருந்தனர். தேனும்பாலும் கலந்த ஸோமரஸம்’ என்னும் லாகிரிப் பொருளைப் பருகி, ‘ஸோம ரஸம் குடித்து அமரர்களாகிவிட்டோம்” என்று கூறிக்கொண்டனர்.(அபயம் ஸோமமம்ருதாபவேம்)

 

பிராமணர்கள் செய்து வந்த யாகங்களில் நடந்ததென்ன! மக்கள் குழுக்காலத்தின் மக்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடிஉண்பதும்குடிப்பதும்ஆடுவதும் பாடுவதுமாக இருந்தனர். அவர்கள் அப்போதைக்குத் தெய்வங்களை மனிதர்களைக் காட்டிலும் சற்றே உயர்ந்தவர்களாக எண்ணிக் கொண்டிருந்ததால்தமது களியாட்டாங்களில் தெய்வங்களையும் இணைத்துக் கொண்டு அவர்களையும் மகிழ்விக்க விரும்பினர். தமக்காகத் தயாரித்து வைக்கப்பட்டிருந்த ஸோமரஸத்தின் கோப்பைகளைக் காட்டிதமது பெரிய தெய்வமான இந்திரனை, “இந்திரனே வருக! ஸோமரஸத்துடன் இக்கோப்பைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பருகி உன் புகழ்பாடும் கீதங்களைக் கேட்டு மகிழ்க! என்று வரவேற்றுக் கொண்டிருந்தனர். (இந்திர ஆயாஹிவீயதேஇமே ஸோமா அலங்கிருதாஹ எஷாம் பாஹி ஷ்ருதி ஹவம்”) ...ஆனால் சில காலத்துக்குப் பிறகு ஆரியர்கள் மற்ற இனத்தவர்களுக்கு அக்கம் பக்கத்தில் சிறுபான்மையினராக வாழத் தொடங்கியதும்ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த அவர்கள் விவசாயமும்மற்ற கைத்தொழில்களும் செய்ய ஆரம்பித்ததும்கழிந்துபோனஅப்பழைய நாட்கள் மீண்டும் திரும்ப முடியாது. அதனால் இப்போது அந்த யாகங்கள் பழைய விழா நாட்களின் உயிரில்லாத நகல்களாக மட்டுமே ஆகிவிட்டிருந்தன. அவைகள் இப்போது புரோகிதர்களின் வருவாய்ச் சாதனங்களாக மட்டும் இருந்துவிட்டன. ஆகவே வளர்ச்சியில் முன்னேறிய சமுதாயத்தை யாகங்கள் இப்பொழுது திருப்திப்படுத்த முடியாது. இதனாலேயே சடங்குகளை எதிர்த்து உபநிஷத்துக்களின் பிரம்ம வாதம்’ தோன்றிற்று.

 

மறுபிறவி’ சித்தாந்தம் நமக்கு முதன்முதலில் உபநிஷத்துகளிலேயே காணப்படுகிறது. வேதங்கள் பரலோகத்தில் அமரனாவதைப் பற்றிக் கூறியபோதுஉபநிஷத்துக்கள் இவ்வுலகத்திலேயே மறுபிறப்பு குறித்து வலியுறுத்தின. வர்க்கங்களாகப் பிரிந்த சமுதாய அமைப்பைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட வாதம் இதுவென்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம். புரோகிதர்களுக்கு வெள்ளி அல்லாமல் தங்கத்தையே தானமாகத் தந்து நடத்தும் யாகங்களுக்கான பலன்தேவலோகத்திலே மட்டும் கிடைத்துஇவ்வுலகத்தில் எவ்விதப் பயனும் இல்லை என்று சொன்னால் பெருஞ்செலவு செய்து யாகங்களைச் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியாயிருக்குமாஅதனால் இவ்வுலகத்தில் செல்வந்தனாக இருப்பது முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பயன் என்று கூறப்பட்டது. இது ஒரே கல்லால் இரண்டு மாங்காய்களை அடிப்பதாகும். பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும் தானங்களின் பயனும்யாகங்களின் பலனும் இவ்வுலகச் சமுதாயத்திற்குள்ளேயே காட்டுவதுசமுதாய ஏற்றத்தாழ்வுகளை நியாயமானவை என்று நிரூபிப்பதாகும். மறு பிறப்பு’ சித்தாந்தத்தின் மூலம் இப்பிறப்பு ஒன்றே என்று கருதாதீர்கள். ஆகவே சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றவோஏழ்மையை ஒழிக்கவோ முயற்சிக்காதீர்கள் என்று அடக்கப்பட்ட வர்க்கத்திற்கு உபதேசிக்கப்பட்டது. உங்களுடைய ஏழ்மை கடவுள் சித்தம் மட்டுமல்ல: அது உங்கள் முற்பிறப்பின் வினைப் பயனேயாகும். மற்றவர் செல்வத்தைக் கண்டு நீங்கள் பொறாமைப் படக்கூடாது. சமுதாயத்தில் ஏழை - பணக்கார வர்க்கங்கள் சாஸ்வதமாக இருக்கின்றன: ஏனெனில் இவை மூலமாகவே நல்ல - கெட்ட காரியங்களுக்குப் பலன்கள் கிடைக்கின்றன. மலையை முட்டி மோதிக் கொள்வதற்குப் பதிலாக நீங்களும் நல்ல காரியங்களைச் செய்யுங்கள்! தான தருமங்களும்யாகங்களும் புரியுங்கள்! இதனால் அடுத்த பிறவியிலாவது அரச குடும்பத்திலோ பணக்காரக் குடும்பத்திலோ பிறந்து வைபோகங்களை அனுபவிக்கலாம்.

 

மறுபிறப்பு’ சித்தாந்தம் கண்டுபிடித்ததும் சொர்க்க லோகம்’ என்ற கருத்தையும் விட்டுவிடவில்லை. இந்த ஆயுதமும் அப்படியே வைத்துக்கொள்ளப்பட்டது. இவ்விதம் உபநிஷத யுகத்தைச் சேர்ந்த நிலப்பிரபுத்துவம் அறிவுடையவர்களை பிரம்மஞானம்’, முடிவில்லாத பிரம்மம்’ (நேதி நேதி)தெரிந்து கொள்ளப்பட முடியாதவன் (அக்ஞேய) போன்ற புதிர்களில் சிக்கவைத்துவிட்டது. நிலப்பிரபுத்துவம் எதார்த்த உலகத்தை மறுத்துஅதைத் துச்சமாகவும்சாரமற்றதாகவும் வர்ணித்து அறிவாளர்களை மற்றொரு பக்கம் செலுத்திவிட்டது. எஞ்சிய சாதாரண மக்கள் சமூகப் புரட்சிப் பாதையிலிருந்து விலகிச் செல்ல சொர்க்கமும் - மறுபிறப்புமே போதுமானவையாக இருந்தன. பல்வேறு உள்நாட்டு - வெளிநாட்டு மதங்களால் மதங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. அவற்றால் மக்கள் எங்கே மதங்களிலேயே நம்பிக்கை இழந்துவிடுவார்களோ என்று அஞ்சி நதிகள் பலஆனால் கடல் ஒன்றே” என்னும் தத்துவம் பேசப்பட்டது. எல்லா மதங்களிடத்திலும் சகிப்புத் தன்மையும்எல்லா மதங்களும் சரியானவையே என்னும் கருத்தும் பிரச்சாரம் செய்யப்பட்டன.

 

இந்தியாவில் பிற்காலத்தில் நிகழ்ந்த மத வளர்ச்சியை ஆராய்ந்தால் இன்னும் பல விஷயங்கள் தெரிகின்றன. உபநிஷத்துகளின் பிரம்ம ஞானம்’ ஆரியர்களின் மூளையிலிருந்து உதித்ததாகும். அக்காலத்திலும் நிறப்பிரச்சினை - ஆரியர்ஆரியரல்லாதாரின் உயர்ந்தவர்தாழ்ந்தவர் என்னும் பிரச்சினை அல்லது பொருளாதார நலன்களின் முரண்பாடு - முடிவுக்கு வரவில்லை. ஆகையால் இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய தேவையும் இருந்தது. வியாபார வளர்ச்சி இப்பணியைச் செய்தது. வியாபாரிகள் பெரும்பாலோர் ஆரியல்லாதவரே! வணிக யுகம் தோன்றுவதற்கு முன்பு அவர்கள் ஏதாவது ஒரு தொழிலோ, (எண்ணெயும் சாராயமும் தயாரித்தல்உணவு விடுதிகளையும்மது விடுதிகளையும் நடத்துதல்பொன்வெள்ளி நகைகளைத் தயாரித்தல்) விவசாயமோ செய்துவந்தனர். வியாபார வர்க்கத்தில் பல்வேறு ஜாதிகள் இருந்தன. கணங்கள்’ என்னும் குடியரசுகளைச் சேர்ந்த அவர்கள் வர்ண அமைப்பை’ (பிராமணஷத்ரியவைசியசூத்திர என்னும் அமைப்பை) எதிர்ப்பவர்கள். அகர்வால்அக்ரஹரிரோஹதகி அல்லது ரஸதோகி ஆகிய ஜாதிகள் வணிக வர்க்கத்தைச் சேர்ந்தவையே! வணிக வர்க்கம் சமாதானத்தை விரும்புவதென்பதை கூறியுள்ளோம். அதனால் வர்ணப் போராட்டத்திற்கெதிரான கருத்தை வணிக வர்க்கம் ஆதரித்ததில் வியப்பில்லை. இதன் காரணமாகவே வைசிய இனம் பவுத்தசமண மதங்களின் மகத்தான ஆதரவாளனாக மாறியது.” என விரிவாக எடுத்துரைக்கிறார் ராகுல்ஜி. மதத்தின் ஆதாரத் தேவை யாருடைய நலனைப் பிரதிபலிக்கிறது என்பது தெள்ளெனத் தெரிகிறது அல்லவா?

 

மகாபாரதத்தை ஐந்தாம் வேதம் என வியக்கிறார் ஜெயமோகன். உண்மைதான் அது அப்படிப்பட்டதுதான்! நான்கு வேதங்கள் இருக்க இந்த ஐந்தாம் வேதமான மகாபாரதம் தோன்றுவதற்குக் காரணங்கள் என்ன?  நாம் அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமில்லையா

 

தர்மசாஸ்திரங்களை உண்டு பண்ணிய தர்ம சாத்திரகாரர்களுக்கு ஒரு கடினமான பிரச்சினை எழுந்தது. வேதங்களைப் பற்றி கேள்வி கேட்கும் உணர்ச்சியை ஊக்குவிக்கும் சுதந்திர சிந்தனையை நல்லதில்லை என்று நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான உழைக்கும் வர்க்கத்து மக்களுக்கு எடுத்துக் கூறிப் பழக்கப்படுத்துவது எப்படி என்பதே அது. இந்தப் பிரச்சினை மிகவும் கஷ்டமாயிருந்ததற்குக் காரணம்அவர்கள் சூத்ரர்களுக்கு சிறிதளவு கல்வி கற்கும் உரிமைகூடக் கொடுக்கவில்லை என்பது மட்டுமில்லை. அவர்களுடைய தர்ம நூல்கள் என்ற வேதத்தை சூத்ரர்கள் படிப்பது கூட அதன் புனிதத் தன்மையைக் கெடுத்துவிடும் என்ற சட்டம்தான். இந்த நிலையில் அது சூத்ரர்களுக்கு எப்படித் தெரியும். சுருதி என்பது வேதம்அதைத்தான் சூத்ரர்கள் கற்பதும் கேட்பதும் குற்றம்ஸ்மிருதியை- தர்ம நூல்களை அவர்கள் கேட்கலாம்- கற்கத்தான் கூடாது என்பதும் கொள்கையாயிற்றுஅதாவது அவர்களுக்கு தர்மத்தையும் சட்டத்தையும் பற்றி எப்படியாவது சொல்லியே தீரவேண்டும்அவர்களை அவற்றால் அடக்கி ஒடுக்கி வைத்துக் கொள்வதுதானே நோக்கம்ஆகவேஇது கடினமான பிரச்சினையாகத்தான் இருந்ததுஆனால் நம் நாட்டு இதிகாசங்களான பாரதத்தையும் ராமாயணத்தையும் எழுதி வெளியிட்டவர்களால் இது சமாளிக்கப்பட்டது.  

 

இதிகாசங்களும்புராணங்களும் பொது மக்களிடையே தர்மத்தைப் பிரச்சாரம் செய்யவே ஏற்பட்டன என்பது பொதுவாக அனைவருக்கும் உடன்பாடான கருத்து. இவற்றை நாட்டின் கிராமப்புறங்களில் படித்து விளக்கி உரைப்பதன் மூலமாக குறிப்பிட்ட சில மேலான இலட்சியங்களும்பிறவிப்பயன்களும்கொள்கைகள்-வாழ்வுமுறைகள் என்பவற்றின் அடிப்படையில் பொது மக்களின் மனதில் நன்கு பதிய வேண்டும் என்று விரும்பினார்கள். இங்கே மற்றொன்றையும் கவனிப்பது அவசியமாகிறது. இதிகாச புராணங்களைத் தொகுத்தவர்கள் இவற்றில் தர்மசாத்திரம் செய்தவர்கள் முக்கியமென்று கூறிய உயர்ந்த பண்புகள் அனைத்தையும், (தர்மம்,அர்த்தம் என்ற காசு பணம்அரசுபொதுவாழ்வுகாமம் என்ற இன்பம் மோட்சம் என்ற வீடு பேறு அனைத்தையும்) திணித்திருக்கிறார்கள்” என்று கூறும் தேவிபிரசாத் சட்டோபாத்யாய கானே கூறுவதாக: இந்தியாவில் இரண்டு இதிகாசங்களும் (பாரதம்,இராமாயணம்) தர்ம சாத்திர விஷயங்கள் பலவற்றையும் தம்பால் கொண்டுள்ளன. அவற்றிற்குப் பின் வந்த நூல்களில் அவை அதிகாரப்பூர்வமான சான்றுகளாகவும் ஏற்கப்பட்டன. ஒரு தர்ம சாத்திரம் என்ற வகையில்தான் மகாபாரதம் முதல் முக்கியத்துவம் பெறுகிறது. கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்கு வெகு காலத்திற்கு முன்பே மகாபாரதம் பொதுமக்களின் கல்விக்குரிய நூலாக ஆகியிருந்ததுநாடெங்கிலும் ஆண்களும்பெண்களும் கூடிய பெருங்கூட்டங்களில் படித்து விளக்கப்பட்டது. இன்று நடப்பது போலவேஇராமாயணமும் இப்படித்தான் பரப்பப்பட்டது. இராமாயணம் மக்களின் மனத்தில் ஏற்படுத்திய உணர்ச்சி மிகப்பெரியதுமக்கள் இராமனைக் கடவுளின் அவதாரமென்றே கொண்டனர்.” என எடுத்துரைக்கிறார்.

 

தர்ம சாஸ்திரங்கள் முன்வைக்கும் பிறப்புத் தகுதியின்றி வேதங்களைக் கேட்கும் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுஉச்சரிக்கும் நாவுகளைப் பொசுக்குமனனம் செய்தால் உடலைப் பிளந்து போடு என்று சொல்லும் தர்ம சாஸ்திரங்கள்!!! (யாருடைய தர்மசாஸ்திரம்)  புனைவென்னும் கோலம் பூண்டால் அதற்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்துவிடுவது ஏன்

 

மேலதிகமாக, ‘சங்கர பாஷ்யத்தை தமிழாக்கம் செய்தவர் மஹாமஹோபாத்தியாய வேதந்தகேஸரி பங்கானாடு ப்ரம்ஹஶ்ரீகணபதி சாஸ்திரிகள் அவர்களின் முக்கிய சிஷ்யரும்வியாகரண வேதாந்த சாஸ்திர பாரங்கதரும்பாகவதபாகவத்கீதோபன்யாஸகரும்சோதிட மந்திர சாஸ்திர வித்வானும், ‘ஆர்யமத ஸம்வர்த்தனீ’ பத்திராதிபருமான ப்ரம்ஹஶ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள்’ இவர் எழுதிய சங்கர பாஷ்யத்தின் முகவுரையில்...

 

மஹாபாரத காலத்துக்கு முன்னரிருந்த த்ரைவர்ணிகர்கள்வைதீக மந்திரங்களையும்அதன் அனுஷ்டான முறைகளையும் தங்களது குடும்பச் சொத்தாகக் காத்துவருவதையும்அதனால் அவர்கள் மேன்மை பெற்று விளங்குவதையும் கண்ட அக்காலத்திய ஜாதி சூத்திரர்கள் நாங்களும் வைதிக மந்திரங்களைக் கொண்டே அம்மேன்மையை அடைய எண்ணங் கொண்டவர்களாய் திவ்ஜாதிகளின் சொத்தான வைதிக மந்திரங்களையும் அதன் அனுஷ்டான முறைகளையும் எப்பாடுபட்டேனும் த்விஜரிடமிருந்து பெற்றுவிட வேண்டுமென எண்ணி அவ்வழியிலிறங்கியதைக்கண்ட முற்கூறிய த்ரைவர்ணிகர்கள் ஜாதி சூத்திரன் வேதத்தைக் காதால் கேட்கவோநாவாலுச்சரிக்கவோமனத்தால் அதன் பொருளைத் தியானிக்கவோ கூடாது” என விதியிருப்பதை அவர்க்கு எடுத்துக் கூறினார்.

 

அது கேட்ட அந்த ஜாதி சூத்திரர் ஆண்டவனது படைப்பில் அகப்பட்ட தாங்களும் நல்லகதியை அடையவேண்டியது அவசியமாதலால் எதைக்கொண்டு தாங்கள் கரையேறுவது எனக் கேட்குங்கால் அந்த ஜாதி சூத்திரர்களைக் கரையேற்றுவிப்பாந்நோக்கி வேதோப ப்ரம்ஹணங்களான இதிஹாசம்புராணம் இவைகளை அவர்க்குக் கற்பித்து அதன் மூலம் பல மந்திரங்களையும்ஞான மார்க்கத்தையும்கர்ம மார்க்கத்தையும் பக்தி மார்க்கத்தையும் தங்களுக்கிருப்பதற்கொப்பாகவே உபதேசித்து அவர்களுக்கும் முக்தி வருவதற்குப் போதிய ஸாதனங்களையும் கற்பித்துக் கொடுத்தனர்.

 

இவ்விதம் தங்களுக்குப் பல நல்வழிகளிருப்பினும் தாங்களும் வேதங்களை ஏன் கற்ககூடாதென அவர்கள் வற்புறுத்திக் கேட்கத் தொடங்கி எவ்வழியிலேனும் அதைக் கற்றுத்தான் தீருவோம் எனப் பிடிவாதம் செய்யத் தொடங்கினர். இவ்விதம் தப்புவழி செல்லுமிவர்க்கு என்ன சொல்லியும் அது பயன்படாது போகவே வேதங்களாகிற தங்களுடைய சொந்தச் சொத்தை பிறரிடமிருந்து ரஷிக்க வேண்டிப் பின்வரும் விதியை யேற்படுத்தினர்.

 

அதாவது: ஸ்த்ரீசூத்திரன்த்விஜபந்துகள்=த்விஜனாய் பிறந்தும் த்விஜனுக்குரிய நியமமில்லாது பெயர்க்கு மட்டும் த்விஜனாகவுள்ளவர் ஆகிய இம்மூவருடைய காதிலும் வேதம் படக்கூடாது அதாவது: அவர் கேட்கும்படி எவரும் அத்யயனம் செய்யக்கூடாது என்றும்அவர்க்கு வேண்டியே ஐந்தாவது வேதமான பாரதமும்18 புராணங்களும் ஏற்பட்டன பற்றி அதையவர்கள் கற்கவேண்டுமென்றும் வரையறுத்தனர். இவ்வித வரையறையினால் ஜாதி சூத்திரரோடு மட்டும் நில்லாது ஸ்தீரிகள்பிரம்ஹசரியாதி நியமமிழந்த த்விஜர் ஆகியோருக்கும் வேதாதிகாரம் இல்லாமற் போய்விட்டது.

 

ஆனால்வேதத்தில் அதிகாரம் வைத்துக்கொண்டிருக்கும் த்விஜர்கள் ப்ரம்ஹசர்ய விரதானுஷ்டான விஷயத்தில் படுங்கஷ்டத்தையும் அத்தகைய கஷ்டத்துடன் வேதத்தைக் கற்று அதன் மூலம் அவர்கள் தம்போன்றவர்க்கும் திருஷ்டாதிருஷ்ட வழிகளிலுபகரிப்பதையும் கண்ட ஜாதி சூத்திரர்கள் வேதத்தைக் கற்பதில் தமக்குள்ள ஆவலை அடியோடு விலக்கிக் கொள்ளவாரம்பித்தனர்.

 

இப்படிப் பெரும்பாலோர் இருந்த போதிலும் அவர்களுள் ஒரு சில ஜாதி சூத்திரர் தாம் வேதத்தை எவ்வழியிலாவது கற்றுத்தான் தீர வேண்டும் என்றெண்ணி  நியம பூர்வகமாய் த்விஜர் அத்யயனஞ் செய்யுங்கால் வேறிடத்தில் மறைந்து நின்று அவற்றைக் காதால் கேட்கவும் கேட்டதை மனத்தில் தரிக்கவேண்டி ஆவிருத்தி (அடிக்கடி சொல்லல்) செய்யவும்அதன் பொருளை மனத்தில் தியானித்து அதைத்தாங்களும் செய்யவெண்ணவும் ஆரம்பிப்பதைக்கண்ட ஜாதி த்விஜர்கள் தங்களுடைய சொந்தச் சொத்தைக் காக்கவெண்ணி ஜாதி சூத்திரர்க்குப் பயத்தையுண்டாக்க வேண்டிப் பின்வருமாறு கடுமையான விதியொன்றை ஏற்படுத்தலாயினர்.

 

அதாவது: நியம பூர்வமாக வேதத்தையொருவன் அத்யயனம் செய்யுங்கால் ஜாதி சூத்திரன் மறைந்திருந்து கேட்பானாயின் அவன் காதில் ஈயம்அரக்கு இவற்றைக் காய்ச்சி ஊற்றவெண்டுமெனவும்நாவால் அதையுச்சரித்தால் நாவைச் சோதிக்க வேண்டுமெனவும்,அதன் பொருளை மனத்தால் தரித்தால் சரீரத்தைப் பிளந்து விட வேண்டுமெனவுமாம். ஆனால் அவ்விதம் எவரையேனும்எந்த ஸமயத்திலேனும் செய்தாரென ஒரு புராணாதிகளிலும் கூறப்படவில்லை. ஆதலால் இது அவர்களைத் தடுக்கவேண்டிச் செய்த கடுமையானதொரு விதிமட்டுமேயாகும் என்பதில் யாதுமையமில்லை. மேலும்இவ்விதம் ஜாதி சூத்திரர் விஷயத்தில் விதற்படுத்தியது மட்டும் போதாதாதெனவெண்ணித் தமது த்விஜாதியருள் நியமபூர்வகமாய் வேதாத்யனம் செய்பவர் எவரும் ஜாதி சூத்திரனுடைய ஸமீபத்தில் வேதத்தை அத்யயனம் செய்தல் தகாதென்பதாய் இவர்கட்கும் ஒரு விதியையேற்படுத்தினர். இம் மட்டோடும் நின்றுவிடாமல் எப்பாடுபட்டேனும் ஜாதி சூத்திரனதருகில் இவர் வேதாத்தியானஞ் செய்வதைத் தடுக்க வெண்ணம் கொண்ட பெரியார் ஜாதி த்விஜனை எச்சரிக்கை செய்வதற்கு வேண்டி ஜாதி சூத்திரன் நடமாடும் ஸ்மசானத்துக் (சுடுகாட்டிற்கு) கொப்பானவன் ஆதலால் அவனருகில் வேதத்தை அத்யயனஞ் செய்யாதீர்” என்றார்.

 

இதோடு தொடர்சியாக:சங்கை (கேள்வி அல்லது சந்தேகம்1) : ஜாதி த்விஜர் சொந்தச் சொத்தாகப் பாவிக்கும் வேதமானது எல்லாவுயிர்க்கும் பிதாவான ஆண்டவனிடமிருந்தே வெளியாயிற்றென்பதை நீங்களே ஒப்பியிருக்கின்றீர்கள். எந்த ஆண்டவனிடமிருந்து வேதம் வெளியாயிற்றோ அவ்வாண்டவன் ஜாதி சூத்திரர்க்கும் உண்மையில் பிதாவாகின்றமையால் ஒரு பிதாவினது சொத்தில் அவனுடைய புதல்வர் யாவரும் சொந்தம் பாராட்டுவது நியாயமும் யுக்திக்குப் பொருத்தமாயிருக்கின்றது. பிராமணர்ஷத்திரியர்வைசியர் மட்டுந்தான் அதில் சொந்தம் பாராட்டக்கூடாதென்றும் பாகுபாடு செய்தது எவ்விதம் பொருந்தும் எனின்?”

 

என்ற கேள்வி மிக நேரடியாக வந்திருக்கசமத்காரமாக இதற்கு பதிலாக கடலங்குடி நடேச சாஸ்திரி:

 

உத்தரம் (பதில்): அவ்விஷயத்திற் கூறுவாம். ஆக்கல் அழித்தலாம் எனும் முத் தொழிலமைந்ததோர் முழுமுதற் கடவுளால் ஆதியாலாக்கப்பெற்ற இவ்வுலகில் அமைந்துள்ள பொருளெலாம் உண்மையில் எல்லோருக்கும் சொந்தமாய் அமைந்து கிடக்க அப்பொருளனைத்திலும் இவ்வுயிர் யாவரும் சொந்தம் பாராட்டி அவற்றை ஆண்டனுபவிக்கமுடியுமோஒருபொழுதும் முடியாது. ஆனால் சிலர் யாதானுமொரு காரணத்தால் அவற்றுள் சிலவற்றைத் தமக்கு மட்டும் சொந்தமானதெனவெண்ணி அனுபவிக்கின்றனராயினும்அவ்விதமனுபவிக்க வியலாத ஏனையோரிடத்துக் கருணைகொண்டு தம்பொருள் மூலம் ஏனையோர் பசிப்பிணி போக்கி அவரையும் காப்பதன்றோ அனுபவத்திற் காண்கிறோம். அதுபோலவே இவ்வேத மந்திரங்களும் ஆண்டவனாற் படைக்கப்பட்டன பற்றிப் பொதுப் பொருளாயினும் பிறவி காரணமாய் அவற்றை த்ரைவர்ணிக ரென்ற ப்ராமணர்ஷத்திரியர்வைசியர் மூவரும் சொந்தச் சொத்தாகவனுபவித்துப் பிறரையும் காக்கவெண்ணி வேதத்திலமைந்துள்ள பொருளையெல்லாம் கதைமுகமாகத் திரட்டி இதிஹாச,புராண ரூபமாக்கி அப்பொருளை ஏனையோர்க்கும் கொடுத்து அவரையும் பிறப்பிணி நீக்கி காக்கவே முயற்சியைக் கைக்கொண்டிருப்பதால் முன்னர் கூறிய வாசங்கைக்கிடமில்லை.” என்கிறார் கடலங்குடி நடேச சாஸ்திரிகள். ஆகமஹாபாரதமும் ஏனைய புராணங்களும் தோன்றுவதன் அடிப்படை இதுதான். 

 

இக்கதைகளின் தோற்றுவாய் வர்ண அடிப்படையாய் தெரியலாம். மாறாக இதற்குப் பின் இருக்கும் உழைப்புச் சுரண்டலை அறிவதுதான் மிக முக்கியமானது. அது உபரி உற்பத்தியோடு சம்பந்தப்பட்டது. பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. 

 

ஆள்வோரின் ஆளுகைக்கு உட்படுமாறு மக்களை அவர்களது நினைவுகளைக் கொண்டே ஆள்வதற்கான படைப்பாக கதைகள் படைக்கப்பட்டன. இதில் எந்த சமயமும் விதிவிலக்கல்ல. அரசுக்குத் தேவையான சுரண்டல் கருத்தியல்களை இவ்விதமாகப் பரப்புவதன் தேவை கருதியே பார்ப்பனியத்திற்கு ஆளும் வர்க்க அரசு அள்ளிக்கொடுத்தது. இதன் இன்னொரு கண்டுபிடிப்பு மறுப்பிறப்பு. 

 

அறிவொளிக்காலம் மதத்திலிருந்து பரிபூரணமாக கடவுளின் இடத்தை கேள்வி எழுப்பியிருந்தாலும்மதப்பனுவல்கள் சாற்றிவைத்திருக்கும் கற்பனை முன் தங்கள் அறிவை யதார்த்ததளத்தில் வென்றாலும் அவர்கள் கொண்ட கற்பனை உலகை வெல்லவே இயலவில்லை. ஆளும் வர்க்கம் தங்களது செயலூக்கமான திட்டங்களை நடைமுறைப்படுத்த இன்றளவும் மதங்களையே ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றன.

 

கடவுள் என்பது கற்பனை என்பதை வாழும் யதார்த்தத்தளத்தில் பொருத்தி வெற்றியடைவதற்கான செயலூக்கமான தத்துவமாகிய மார்க்சியத்தை அது முதலில் எதிர்கொண்டது பண்பாட்டுத் தளத்தில் மட்டுமே. கடவுளைப் பண்பாட்டு தளத்தில் அறிமுகப்படுத்தியதே மதாச்சாரியர்களின் முதல் வெற்றி. கடவுள் என்பது பண்பாடு கிடையாது. கடவுளுக்கும் எந்தப் பண்பாடு கிடையாதுஇருப்பதெல்லாம் ஆள்வோரின் தேவைகளே. 

 

கவிதைகளின் உள்ளடக்கமாக கடவுளை வைத்திருப்பது குறித்து அதன் இலக்கிய மதிப்புக்கு அப்பாற்பட்டு புரிந்து கொள்ள வேண்டுமாயின் லெனின் சொன்னதைத்தான் நினைவுகூர வேண்டியதிருக்கிறது.

 

கடவுளைத் தேடுதல் என்பது கடவுளைக் கட்டமைத்தல் அல்லது கடவுளை உருவாக்குதல் அல்லது கடவுளைப் படைத்தலிலிருந்து வேறுபடுவதுஒரு மஞ்சள் பிசாசு ஒரு நீலநிறப் பிசாசிலிருந்து வேறுபடுவதைக் காட்டிலும் அதிகமானதல்ல. எல்லாப் பிசாசுகளுக்கும் கடவுளுக்கும் எதிராகஒவ்வொரு கருத்தியல்ரீதியான பிண நாற்றத்திற்கும் எதிராகப் பிரகடனம் செய்வதற்காக அல்லாமல் கடவுளைத் தேடுதலைப் பற்றிப் பேசுவது என்பதுஒரு மஞ்சள் பிசாசுக்குப் பதிலாக நீலநிறப் பிசாசை விரும்புவது என்பதுஅதைப் பற்றி ஒன்றும் கூறாமல் இருப்பதைக் காட்டிலும் நூறுமடங்கு மோசமானதாகும். (கடவுளைத் தொழுதல் அனைத்தும் பிணநாற்றம் பிடித்தவைதாம்-அவை எவ்வளவுதான் சுத்தமானவையாக இருந்தாலும் சரிமிகவும் செம்மையானவையாக இருந்தாலும் சரிதேடப்பட்டதாக இல்லாமல் புதிதாகக் கட்டமைக்கப்பட்ட கடவுட் தன்மையாக இருந்தாலும் சரிஎல்லாம் ஒன்றுதான்)…..கடவுளைக் கட்டமைத்தல் என்பது தன்னைத்தானே இழிவுபடுத்துதலின் மிக மோசமான வடிவம் அல்லவாஒரு கடவுளைக் கட்டமைப்பதற்கு ஏற்பாடு செய்யும் ஒவ்வொருவரும்அல்லது அத்தகைய செயலைச் சகித்துக் கொண்டிருக்கும் எவரும் கூடபடுமோசமான வழியில் தன்னைத்தானே இழிவுபடுத்திக்கொள்கிறார். ஏனெனில், “செயல்களுக்குப்” பதிலாக அவர் உண்மையில் சுய சிந்தனையிலும் சுய – பாராட்டுதலிலும் ஈடுபடுகிறார். மேலும் அத்தகைய மனிதர் சிந்திப்பது” மிகவும் அசிங்கமானமடத்தனமானஅம்சங்களைக் குறித்தேயாகும்அல்லதுகடவுளைக் கட்டமைத்தலின் மூலம் தெய்வமாக்கப்பட்ட நான் என்னும் முனைப்பின்” கூறுகளைக் குறித்தேயாகும்” என்கிறார் லெனின். 

 

மகாபாரதத்தின் தோற்றம் அதன் தேவை சேவை ஆளும் வர்க்கத்துக்கு உதவும் ஒரு மதப்பனுவலாக இருக்க ஜெயமோகன் அதை ஐந்தாவது வேதம் என்கிறார். மாபெரும் அறநூல் என்று விதந்தோதுகிறார். ஜெயமோகனது இத்தகைய கருத்தியலை கேள்விக்குட்படுத்த வேண்டியதாயிருக்கிறது. கடவுளின் இடத்தில் அறத்தை வைத்து தொழுகிறார். மாறாக அந்த அறத்தின் நோக்கம் எது என்பதை தெளிவுபடுத்துவதில்லை. இந்துக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட பன்முகத்தை பேரிலக்கியம் பேரறம் என்பதெல்லாம் ஏற்கத்தக்கதல்ல.

 

1.மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்றால் அதன் நோக்கம் என்ன

 

2.ஜெயமோகன் விதந்தோதும் நம் பண்பாட்டின்’ என்ற வார்த்தையின் அடிப்படையில் அந்தப் பண்பாட்டில் பௌத்த சமண மரபுகள் இருக்கிறதா

 

3.பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம் மகாபாரதத்தில் உள்ளதென்றால் அந்தத் தொன்மை யாருடையது

 

4.மனிதகுலம் எதிர்கொள்ளும் அடிப்படையான அறக்கேள்விகள் அனைத்தையும் அது ஆராய்கிறது என்றால் எதன் அடிப்படையில் எந்தத் தத்துவ அடிப்படையில் ஆராய்கிறது. அந்தத் தத்துவ மரபு யாருடையது

 

5.யாருடைய அழியாத ஞானத்தை அவற்றுக்கான விடையாக அளிக்கிறது.?

 

5.அந்த ஞானத்தை நோக்கிச் சென்ற மாமனிதர்களின் உணர்ச்சிகளையும் தேடல்களையும் மோதல்களையும் வீழ்ச்சிகளையும் மீட்புகளையும் சித்தரிக்கிறதென்றால் எந்த அடிப்படையில் சித்தரிக்கிறது. அந்த ஞானம் எது

 

6.ஞானத்தின் தோற்றுவாய் எது

 

7.ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட நூலைப் பேரிலக்கியம் என்பது ஏன்?

 

8.மகாபாரதம் எந்த மக்களுடைய சென்றகால வரலாறாக இருக்கிறது?

 

9.மகாபாரத அடிப்படையில் இன்றைய வாழ்க்கையாக அதை வாழ்பவர்கள் – வாழ நினைப்பவர்கள் யார்

 

மகாபாரத்தத்தின் தோற்றமே கறார்த்தன்மையான விதிகளைக் கொண்ட வர்ணப் போக்கின் பின்விளைவாக இருக்கிறது. வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தை ஊற்றுஉச்சரித்தால் நாக்கைப் பொசுக்குமனனித்தால் உடலைப் பிள வேதம் சூத்திரர்களுக்கில்லை என்பதன் வர்ணப் பின்னணியாக அதன் காரணமாக கதைகூறலாக மாறியிருக்கிறது. அதன் தொடக்கமே உழைக்கும் வர்க்கத்தைப் பிளவுபடுத்தி கூறாக்கியிருக்கிறது. அதைக் கதைமரபாக ஆக்கி நெளிவு சுளிவான வார்த்தைகளின் மூலம் சித்தரிக்கப்பட்டால் அது மதப்பனுவல் என்கிற நிலையை இழந்து அறத்தைப் போதிக்கும் பனுவலாகி பேரிலக்கியம் ஆகிவிடுமா?

 

அப்படியென்றால் இலக்கியம் என்பது என்ன?

அதன் உலகக்கண்ணோட்டம் எத்தகையது?

 

கடவுள்தன்மைக்கு மாற்றாக அறம் அறம் எனக் கூவினால் இங்கு எழும் கேள்வி ஒன்றுதான் அந்த அறம் எந்த மக்களுக்கானது?

 

இத்தகைய மதப்பின்புலத்தைக் கேள்வி எழுப்பும் பெரியாரின் எழுத்துக்களை இலக்கியமாகக் கருதலாமாகருதமுடியாது எனில் அதன் அடிப்படை என்னஇலக்கியமாக இல்லை என்றால் நீங்கள் இலக்கியத்தன்மையாக உணர்வது எதுபுனைவுக்கான மொழியா?  அழகியல் அம்சமாஉருவ உள்ளடக்க அடிப்படைகளா

 

அழிவுக்கருத்தியல்களை, நயமாக - சுவையாக சமத்காரமாக எழுதினால் அதற்கு இலக்கியத்தகுதி கொடுப்பதென்பது ஏற்புடையதல்ல. மனுதர்மத்தை அவ்வாறு எழுதினால் ஏற்பீர்களாஜெயமோகனின் வெண்முரசுக்கு இலக்கியத்தகுதி அளிப்பதென்பது. மனுதர்மத்துக்கு-பகவத்கீதை உட்பட ஏனைய மதவாதப் பிரதிகளுக்கு இலக்கியத்தகுதி கொடுப்பதென்பதாகும். 

 

வெண்முரசு குறித்துக் கூறுகையில்:“இந்நாவல் வரிசை மகாபாரதத்தை முழுமையாக இன்றைய சூழலில் மறுஆக்கம் செய்யும் முயற்சி. மகாபாரதத்தின் மாபெரும் கதை மாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை  விரிவாக்கம் செய்கிறது. உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் தரிசனங்களையும் விரிவாக்கம் செய்கிறது. புராணம் இன்றைய நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச் செயல்பாடு இது” என்கிறார் ஜெயமோகன்.

 

முதற்கட்டமாக புராணங்கள் என்பதே புளுகுகள்தான். அப்புளுகுகளுக்கு தெய்வாம்சத்தைக் கூட்டி அதற்கு புராண அந்தஸ்தை வழங்குகிறார் ஜெயமோகன். ஏலவே புளுகுகளாய் இருக்கும் புராணங்களை நவீன இலக்கியம் என்று அவர் கருதுவது ஆச்சரியமாக இருக்கிறது. எந்த ஒரு புராணத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கும். புராணத்தைச் சொன்னவரின் நோக்கமே அதில் வெளிப்படும்.  

 

இதிகாசங்கள்புராணங்கள் குறித்தான வரையறையாக “இதிகாசங்கள் என்னும் சொல் வீரகாவியங்களான இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் குறிக்கும். அவை ஸ்மிருதிகளில் சொல்லப்பட்ட விதிகளை வாழ்க்கையின் அனுபவங்களில் சரியாக அனுசரித்த ஒரு நாட்டு வீரப்பெருமக்களின் வீரதீரச் செயல்களைப் பாடல் வடிவில் சொல்லும் கதைகளாகும்” என்கிறார் மகாதேவன். ஸ்மிருதிகளைப் பின்பற்றும் ஒரு படைப்பில் அறம் யாருடைய அறமாக இருக்கும? புராணங்களுக்கான வரையறையாக: “புராணங்களும் இதிகாசங்களின் வகைகளைச் சேர்ந்தவைகளே. இவை இரண்டும் சேர ஐந்தாவது வேதம் (பஞ்சமோ வேதஎன வழங்கப்படுகின்றன. நாட்டில் நிகழும் பெரிய நிகழ்ச்சிகள்பழங்கதைகள்கட்டுக்கதைகள் இவற்றின் மூலமாகச் சமயப் பத்தியைப் பாமர மக்களிடையே உண்டாக்குவதும்சமய அறிவைப் பரவச்செய்வதும் புராணங்களின் நோக்கமாகும்.” என்கிறார் மகாதேவன். ஆக சமயம் பரப்பும் நோக்கத்தோடு வைக்கப்பட்ட புளுகுக் கதைகளை அறம் என்ற வார்த்தையின் கீழ் அடக்கி இந்துத் தத்தவமரபை  இலக்கியமாகப் படைக்கிறார் ஜெயமோகன். இறுதியாக இத்தகைய படைப்புகளை இன்றைய சூழலில் மறு ஆக்கம் செய்யும் முயற்சி ஜெயமோகனுக்கு வந்ததன் பின்புலம் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டும்.

 

நவீன இலக்கிய மரபானது புராணப் புளுகுகளைத் தோலுரித்து அதில் ஒளிந்திருக்கும் நலன் யாருடையது?எவருடையது? என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்க (மகாபாரதமும் இதற்கு விதிவிலக்கில்லை) ஜெயமோகனோ பழைய புராணத்தை மறுஆக்கம் செய்து நவீன இலக்கிய வரிசையில் வைக்கிறார். ஜெயமோகன் புனைவுக்கு வழங்கும் அர்த்தம் மதமே. மதச்செயல்பாடுகளையே நவீன இலக்கியவழியாகக் கருதுவது ஆபத்தான போக்கு. 

 

என்வரையில் ஜெயமோகனின் வெண்முரசு (மகாபாரதம்) இலக்கியத்தகுதி கொண்டதில்லை. விவாதிக்கலாம். விவாதிக்க வேண்டிய அவசியமுமிருக்கிறது.

 

பிறரை ஒதுக்குதலிலிருந்து மதம் புனிதத்தைக் கற்பித்துக்கொள்கிறது. அவ்வாறு புனிதம் கற்பிக்கும் புராணங்களுக்கு இலக்கியத்தகுதியை வழங்குவதுஅல்லது ஏற்படுத்துவதென்பது இலக்கியத்தை அவமதிக்கும் செயலாகக் கருதுகிறேன். அதனினும் மேலாக மத அடிப்படையை வைத்து இலக்கியத்தின் மீதும் புனிதத்தன்மையை சாற்றுவது  அதன் நீட்சியாக தொழுகையை முன்வைத்து புனித இலக்கியம் என்று வரையறுப்பது இலக்கியத்தின் போக்கையே மோசமாகத் திசை திருப்புவதாகும். இதன் நோக்கம் நாமறியாததல்ல. புனித இலக்கியங்கள் என்று கருதப்படும் மதநூல்கள் அனைத்திலும் நிரம்பியிருப்பது ஆள்வோருக்கு அடிபணி என்கிற உத்தரவே. இந்திய மகாபாரதம் கூடுதலாக பிராமணர் முன் மண்டியிடு என்கிறது. அதைத்தான் ஜெயமோகன் அறமாகக் கருதுகிறார் போலும்.

 

இறுதியாக மகாபாரதம் ஞான நூல் அல்ல. அதற்கென வேதத்தரப்பு உண்டு. வேதங்களில் அறம் கிடையாது. இருப்பின் அந்த அறம் எவருக்கானது என விளக்கியாக வேண்டும். அது பார்ப்பனியத் தேவைக்கென உருவாக்கப்பட்ட புராணக் கதை. புராணத்தை மறு ஆக்கம் செய்து அதை இலக்கியத்தன்மையுடன்(!) எழுதி அதை ஞானநூலாகவும் பேரிலக்கியமாகவும் முன்வைப்பது சார்புடையது மட்டுமல்ல அபத்தமும்கூட. 

 

ஜெயமோகன் பார்வையில் மகாபாரதமானது  ஞானநூல்-பேரிலக்கியம் என்றால் அதன் முடிவான தரப்பு யாருக்கு விசுவாசமாகச் சேவை செய்கிறது என்பதை விளக்கியாக வேண்டும்.


ஜெயமோகன் சொல்லியிருப்பது போல வெண்முரசு  நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச் செயல்பாடல்ல. அது உருவம் - உள்ளடக்கம் இரண்டின் அடிப்படையிலும் பார்த்தோமானால் வெண்முரசு ஒரு  நவீன உபன்யாசம்.   


ஆச்சரியப்படும் விதமாக தமிழுக்குப் புனிதப் பனுவலும் கிடையாது புராண நூல்களும் கிடையாது. வட மரபு நுழைந்தபின்னரே தமிழில் புராணம் எழுந்தது.

 

கேட்போமாக...

 

“ஓ! மகனேபெண்களைவிட அதிகப் பாவம் நிறைந்த வேறு எந்த உயிரினமும் கிடையாது. பெண் என்பவள் சுடர்மிக்க நெருப்பாவாள். ஓ!மன்னா (யுதிஷ்டிரா) தைத்தியன் மயனால் உண்டாக்கப்பட்ட மாயை அவள். கத்தியின் கூர்முனை அவள்நஞ்சவள்பாம்பவள்நெருப்பவள்உண்மையில் இவை அனைத்துமே கலந்திருப்பவள் அவள்.”- மகாபாரதம் 

 

நாம் விவாதிப்போமாக... சந்தேகத்தில் முளைக்கும் தளிர்நாவில் அறிவாகிய கேள்வியக்னியை ஏற்றுவோமாகுக! புராணப்புளுகுகளை எரிப்போமாகுக!

 

விவாதிப்போமாக...

 

-              வ சு மி த் ர 

 

 

 

 

 

உதவிய நூல்கள்:

 

1.முதற்கனல்

ஜெயமோகன்

நற்றிணை பதிப்பகம்.

 

2.இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்.

தேவிபிரசாத் சட்டோபாத்யாய

தமிழில்: கரிச்சான் குஞ்சு

விடியல் பதிப்பகம்.

 

3.மனித சமுதாயம்

ராகுல் சாங்கிருத்தியாயன்

தமிழில்:ஏ.ஜி.எத்திராஜுலு

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி);லிட்

 

4.கருத்தாயுதம்: வகுப்புவாதத்தை எதிர்கொள்ள

பாலகோபால்

தமிழில்:க.மாதவ்

சிந்தன் புக்ஸ்.

 

5.சனாதனம் அறிவோம்: முதல் பாகம்

செ.தினகர ஞானகுருசாமி

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி);லிட்

 

6.பண்டைய இந்தியா;பண்பாடும் நாகரிகமும்

டி.டி.கோசாம்பி.

தமிழில்:ஆர்.எஸ்.நாராயணன்.

 

7.இந்துசமயத் தத்துவம்

பேராசிரியர் T.M.P.மகாதேவன்

முன்னாள் தத்துவத்துறை பேராசிரியர்

சென்னைப் பல்கலைக்கழகம்

குமரன் புத்தக இல்லம்

கொழும்பு-சென்னை.

 

மேலதிக வாசிப்புக்குப் பயன்படக்கூடிய நூல்கள்

 

1.மதமும் சமூகமும்

தேவிபிரசாத் சட்டோபாத்யாய

 

2.இந்திய வரலாறு ஓர் அறிமுகம்

டி.டி.கோசாம்பி.

 

3.பிரம்ம ஸூத்ரம்

வேதாந்தத் தத்துவத்தின் ஓர் அடிப்படை நூல்

விளக்கியவர்: சுவாமி ஆசுதோஷானந்தர்

 

4.மதவிசாரணை

ஞானசூரியன் ஆசிரியர்- சுவாமி சிவானந்த ஸரஸ்வதி

 

5.மதத்தைப் பற்றி

கார்ல் மார்க்ஸ்-எங்கெல்ஸ்

 

6.மதத்தைப் பற்றி...

லெனின்.

 

 

No comments:

Post a Comment