Pages

Tuesday, March 1, 2011

சிறையதிகாரிக்கு விண்ணப்பம் - ஊர்வசி. 1984



ஐயா,
என்னை அடைத்து வைக்கிறீர்கள்
நான் ஆட்சேபிக்க முடியாது
சித்திரவைதைகளையும்
என்னால் தடுக்கமுடியாது
ஏனெனில்,
நான் கைதி
நாங்கள் கோருவது விடுதலை எனினும்
உங்களது வார்த்தைகளில்
‘பயங்கரவாதி’.

உரத்துக் கத்தி அல்லது முனகி
எனது வேதனையைக்
குறைக்கக்கூட முடியாதபோது
எனது புண்களில்
பெயர் தெரியாத எரிதிராவகம்
ஊற்றப்படும் போது
எதையும் எதிர்த்து
எனது சுண்டுவிரலும் அசையாது.
மேலும் அது
என்னால் முடியாதது என்பதும்
உங்களூக்கு நன்றாகத் தெரியும்.

அதனால்தான் ஐயா.
ஒரு தாழ்மையான விண்ணப்பம்
என்னை அடைக்கிற இடத்தில்
எட்டாத உயரத்திலாயினும்
ஒரு சிறு சாளரம் வேண்டும்
அல்லது, கூரையில்
இரண்டு கையகல துவாரம் வேண்டும்
சத்தியமான வார்த்தை இது.
தப்பிச் செல்லத் தேடும் மார்க்கமல்ல
தகிக்கும் எனது ரணங்களில்
காற்று வந்து சற்றே தடவட்டும்
சிறுதுண்டு மேகம்
மேலே ஊர்ந்து செல்வதில்
இன்னும்
மரக்கிளையின் நுனி அரும்பித் தளிர்ப்பதில்
எப்போதாவது ஒரு குருவி
நிலைகுத்திய என் பார்வைப்பரப்பைத்
தாண்டிப் பறப்பதில், நான்
இதுவரை வாழ்ந்த உலகில்
என் மனிதரைக் காண்பேன்.

பைத்தியமென்று நீங்கள் நினைக்கலாம்
ஆனால்,
எதைத்தான் இழப்பினும்
ஊனிலும் உணர்விலும்
கொண்ட உறுதி தளராதிருக்க
அவர்களுக்கு நான் அனுப்பும் செய்தி
இவைகளிடம்தான் உள்ளது ஐயா. 

                                                                                       - மரணத்துள் வாழ்வோம்.
பக்கம் 103- 108
விடியல் பதிப்பகம்.

2 comments:

  1. தகிக்கும் எனது ரணங்களில்
    காறு வந்து சற்றே தடவட்டும்//
    துல்லியமான உணர்வு. காற்றை சரி செய்து விடுங்கள்

    ReplyDelete
  2. நன்றி நாய்க் குட்டி மனசு.

    ReplyDelete