Pages

Wednesday, November 4, 2015

கோவனா? - தீப்பொறி ஆறுமுகமா?...






கோவனை கைது செய்ததன் மூலம் அரசு தனது சகிப்பின்மையைக் காட்டியது போல, கோவனை அப்பாடலை நிகழ்த்தலாம் எனச் சொன்ன ம க இ க வும் தங்களது ஆணாதிக்கப் போக்கைக் காட்டியிருக்கிறது. இதில் ஆணாதிக்கம் எங்கு வந்தது என்றோ, பிரச்சினையைத் திசை திருப்புகிறேன் என்றோகூட அவர்கள் கருத்துச் சொல்ல வாய்ப்பியிருக்கிறது. அதே போல் தீவிர இடதுசாரிகளின் வெளிப்பாடு எவ்வளவு மோசமான சகிப்பின்மையைக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் உரையாட வேண்டும்.

கோவனைக் கைது செய்தது சரியா எனக் கேட்டால் அது தவறுதான். அதற்காக போராட வேண்டுமா என்றால் போராடத்தான் வேண்டும். கோவனுக்காக மட்டுமல்ல, இன்னும் அரசின் மக்கள் விரோத திட்டங்களை, அதன் முதலாளித்துவப் பார்வைகளை எதிர்த்து, நாள்தோறும் கைதாகும் தோழர்களுக்காகவும் சேர்த்துப் போராடவேண்டும். அதே சமயம் அவர்களின் போராட்ட வடிவங்களையும், அது அறிவிக்கும் முறைமைகளின் மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

எழுத்துரிமை பேச்சுரிமை இவைகளின் மூலம் கருத்துக்களை முன் வைக்கும் கருத்துரிமையும் நமக்கு இருக்கத்தான் செய்கிறது. புரட்சியாளர்கள் ஆட்சியைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இவ்வுரிமையை, நான் இழக்க மாட்டேன்.

கருத்துரிமை என்ற பெயரில் இன்னொருவரின் மீது ஆபாசமான சொற்களை வைப்பது கருத்துரிமையில் சேர்த்தியா..இதுதான் என் கேள்வி.

பாடலில் ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயஸுல்ல உல்லாசம் என்ற வரிகள் என்ன அர்த்தத்தைத் தருகிறது. ஆண் உத்தமன் எனும் போது அவனது குணங்கள் முன்னுக்கு வருகிறது. பெண் உத்தமி எனும் போது அவளது உடல் முன்னுக்கு வருகிறது. உல்லாசப்பயணம் என்பது வேறு,  ஊத்திக்கொடுத்து ஒரு பெண் உல்லாசமாய் இருக்கிறாள் என்றால் அவ்வரிகள் யாரை எந்த நோக்கத்தில் முன்வைக்கிறது.

மக்களுக்காக ம.க.இ.க போராடுகிறது என்பதற்காக அது தான் மட்டுமே ஒர்ஜினல் இடது சாரி இயக்கம் என்ற இருப்பை கைக்கொண்டுவிட முடியாது. ஆனால். அது தன்னை எப்பொழுதும் அப்படித்தான் அழைத்துக்கொள்கிறது. இணைய வெளியில் மட்டுமல்ல பொதுவெளியிலும் அனைத்து இடது சாரிகளையும் அது போலி கம்யூனிஸ்ட் கட்சி என்றே அதிகாரக் குரலால் அழைக்கிறது.

இப்பொழுது இந்தக் கைதானது வார்த்தைகளுக்கான கைதா. இல்லை மது ஒழிப்பை ஆதரித்ததற்காகக் கைதா என நான் குழம்பியிருக்கிறேன். சி.பிஐ .எம்மின் வெகுஜன அமைப்பான த.மு.எ.க.ச ஒரு கண்டனத்தை வெளியிட்டு இருக்கிறது.

தமிழகத்தில் சாதிய, மதவாத அமைப்புகளால் எழுத்தாளர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் முடக்கப்படுகிறது. அப்போது மவுனம் காக்கிற அல்லது ஒடுக்குமுறைகளில் இறங்குவோருக்குச் சாதகமான நிலைபாட்டையே மாநில அரசு எடுத்துவந்துள்ளது. நேரடியாக அரசை விமர்சிக்கிற பாடல் என்றதும், இவ்வாறு கைது, சிறை என்ற நடவடிக்கைகளில் இறங்குகிறது. தேர்தல் சூழல் நெருங்கிவரும் நிலையில், ஆட்சிக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவோருக்கு எச்சரிக்கை விடுக்கிற நடவடிக்கையாகவும் இதைக் காண வேண்டியுள்ளது.

மகஇக அமைப்பின் நிலைபாடுகளிலும் அணுகுமுறைகளிலும் எமக்குக் கருத்துவேறுபாடுகள் உண்டு என்றபோதிலும், அவர்களது முன்னணிக் கவிஞர்-பாடகர் கோவன் மீது அரசு தொடுத்துள்ள இந்தத் தாக்குதலை தமுஎகச சார்பில் உறுதியாகக் கண்டிக்கிறோம். அரசு உடனடியாக இந்த ஜனநாயக மறுப்பு நடவடிக்கையை விலக்கிக்கொண்டு, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேரடியாக அரசை விமர்சிக்கிற பாடல் என்று இவ்வறிக்கையில் தமுஎகச  சொல்லும் அவ்வரிகள்,  அரசை விமர்சிக்கிறதா அல்லது பெண்ணின் ஒழுக்கத்தை விமர்சிக்கிறதா என்று விளக்கவேண்டும். கலை இலக்கியத்தில் புரட்சியை எடுத்துச் செல்வதோடு, அது நச்சுக்கலை இது நச்சுப் பாட்டு. அது முதலாளித்துவத்தை தூக்கிப் பிடிக்கும் நாவல், இது பெண்ணிய கவிதை என்றெல்லாம் தரம் பிரித்து விமர்சனம் செய்து வரும் அவ்வமைமைப்பு இதனையும் புரட்சிகர விமர்சனங்களைக் கொண்டு இது கருத்தா என விளக்குவதோடு இதுதான் மக்கள் இலக்கியம என்றும் எடுத்தியம்ப வேண்டும்.

இல்லை,.. இப்பொழுது இது போன்ற பாசிச சக்திகள் தலை தூக்கும்போது நாம் இப்படி விமர்சிப்பது நாமே நம் அமைப்புக்களை விமர்சிப்பது போல ஆகிவிடும் என்ற கருத்தை முன் வைத்தால்…நான் அதற்கு பதிலாக சொல்லுவது இதுதான். எப்பொழுதும் மதவாத சக்திகளும் பாசிச சக்திகளும் பிரிந்ததே இருந்ததில்லை. அவைகள் தங்கள் நோக்கத்தை முன்வைத்து வரலாற்றில்  நகர்ந்தபடியே இருக்கத்தான் செய்கிறது. புரட்சி பேசும் அமைப்புகள்தான் மாறி மாறி விலகியும், பேசியும் வருகின்றன. உதாரணத்திற்கு ம.க.இ.க ஆளும் தரப்பை விமர்சிக்க வைத்த வார்த்தைகளின் அளவையும் கனத்தையும் விட, இரண்டு கம்யூனிஸ் கட்சிகளையும், பிற கம்யூனிச அமைப்புகளையும், போலிக் கம்யூனிஸ் கட்சிகள், போலி அமைப்புகள் என்று வைத்து விமர்சித்ததுதான் அதிகம்.

போராட்டத்தை எப்படியும் எடுத்துச் செல்லலாம் என்றால், கோவன் செய்ததும் அதுதான் என்றால், அதிமுக, திமுக இன்னும் வெகுஜனக் கட்சிகள், மேடைகளில் வெகுஜன மக்களை ஈர்க்க ஆடும் காபரே டான்ஸ்க்கும், அசிங்கமான பாடல்களுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம். தரங்கெட்ட வரிகளை வைத்துக்கொண்டு ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்பின் மீது, ஒரு தனிமனிதனாக, மார்க்சியத்தைப் படித்து வரும் ஒரு மாணவனாக, எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை.  என்பதோடு, மரியாதையும் இல்லை என்றே சொல்கிறேன். வரலாற்றை சாகசமாக திருப்பமுடியாது. #கோவன் இப்பொழுது சாகச நாயகனாயிருக்கிறார். அவரது கைது - வரிகளுக்கா இல்லை அவ்வரிகளுக்கிடையே இருக்கும் மது ஒழிப்புக்கா என்ற குழப்பம் எனக்கு இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

இரண்டுக்குமே எனது வருத்தங்களையும் கண்டனங்களையும் பதிவுசெய்கிறேன். 

இதற்கிடையே இணையவெளியில் கத்தாருக்கு இணையாக வைக்கப்பட்ட கோவனை இப்பாடல் விசயத்தில் நான் தீப்பொறி* ஆறுமுகம் என்றே சொல்லுவேன். வேண்டுமென்றால் நீங்கள் இனி கோவனை இஸ்க்ரா கோவன் என்று அழைத்துக்கொள்ளலாம்.

மலிந்த ஆபாசாமான வார்த்தைகளை முன்வைத்து சாராய ஒழிப்பைப் பேச வேண்டுமென்றால் என்னிடம் ஏராளமான பாடல்கள் இருக்கிறது. அதையும் மகஇக வுக்கு எழுதித்தருகிறேன். இதை விட ரைமிங்க்காக மெட்டுக்கு இடிக்காத வரிகளாக அவை இருக்கும் என உறுதியும் கூறுகிறேன். அரசை எதிர்ப்பது என்பது மகஇக -வைப் பொறுத்தமட்டில் அது தனிநபர் எதிர்ப்பாகவே இருக்கிறது. சில பல வருடங்களுக்கு முன் சேகுவேராவை இவ்வமைப்பு புறக்கணித்தே வந்தது. கேட்டால், விமர்சனத்துடன் கூடிய அணுகுமுறை, அவன் சாகசப்புரட்சியாளன் என்றது.

இப்பொழுது #கோவன் செய்திருப்பது என்ன? வெகுஜன மலிந்த ரசனையை இயக்கப் பார்வையாய் வைத்து, இப்படிச் சொன்னால் ஏதேனும் நடக்கும் என்ற எண்ணைத்தைத்தாண்டி இதில் வேறென்ன இருக்கிறது. ஒரு பெண்ணை அவமதிக்கிற சொற்களை வைத்து மது ஒழிப்பைப் பேசுகிறேன் என்பது இன்னும் எனக்கு கூச்சந் தரத்தக்கதாகவே இருக்கிறது. தமு எக ச அறிக்கையில் கூறியிருப்பது போல்

” தமிழகத்தில் சாதிய, மதவாத அமைப்புகளால் எழுத்தாளர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் முடக்கப்படுகிறது. அப்போது மவுனம் காக்கிற அல்லது ஒடுக்குமுறைகளில் இறங்குவோருக்குச் சாதகமான நிலைபாட்டையே மாநில அரசு எடுத்துவந்துள்ளது. ”

உத்தமி, உல்லாசம், அவள், இவள் என்பதையெல்லாம்  “கருத்துகள்” என்று சொல்கிற அளவுக்கு சிவப்பு கண்ணை மறைத்திருக்கிற தமுஎகசவுக்கு, இதே குற்றச்சாட்டை ம க இக வின் மீதும் வைக்கலாம் என்பது தமுஎகசவுக்கும்,மற்ற இடதுசாரி தோழர்களுக்கும் நினைவுபடுத்துகிறேன். 

பொது வெளியிலும், இணையத்திலும் கம்யூனிசக் கருத்துக்களை எடுத்துச் செல்லும் சக தோழர்களை. சக அமைப்புகளை எவ்வளவு மோசமாக நடத்த முடியுமோ, அவமானப்படுத்த முடியுமோ அத்தனையையும் #மகஇக   போன்ற சில அமைப்புகள் செய்து கொண்டிருக்கின்றன. எடுத்த எடுப்பில் என்.ஜி. ஓ க்கள், முதலாளித்துவ கைக்கூலி, ஆன்டி மார்க்சிஸ்ட், திரிபுவாதி, ஓடுகாலி, சாதியவாதி, பெண்ணியவாதி இதுபோன்ற பதங்களை வைத்துத்தான் வசைபாடுகிறது.

கோவனின் கைதை எதிர்க்கிற நாம் இவ்வரிகளை என்ன செய்யப் போகிறோம்? உத்தமி உல்லாசமாய் இருக்கிறாள் என்று கூறுவதை எப்படிப் பார்க்கப் போகிறோம். கோவன் இவ்வரிகளை ஒரு ஆண் ஆளும் போது பாடியிருந்தால்,  அதாவது முன்னால் முதலமைச்சராய் இருந்த கருணாநிதியாக இருந்தால் ஊத்திக்கொடுத்த உத்தமனுக்கு கோபாலபுரத்துல உல்லாசம்.என்று இருந்திருக்குமா.

#கோவனை தவறாக வழிநடத்தி அவரது வரிகளில் உள்ள கொச்சைத்தனத்தைச் சுட்டாமல் விட்டு, அவரை நெருக்கடிக்குத் தள்ளியிருக்கிற மகஇக-வின் தலைமைக்குக்கும், தேச துரோக வழக்கில் அவரைக் கைது செய்த தமிழக அரசுக்கும் எனது கண்டனங்கள்.

புரட்சியை ஒரு சாகசச் செயலாக கருதும்போது இது போன்ற ஆபாச வரிகளும் வரத்தான் செய்யும். ஏனென்றால் சாகசம், கதாநாயகத்தனம் என்பதெல்லாம் ஆணாதிக்கத்தையே வழிமொழியும் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.

சிறுகுறிப்பு;

#மகஇக தங்களது அமைப்பின் புரட்சிகர தலைவர்களாக முன்வைக்கும் மார்க்ஸோ, எங்கெல்ஸோ லெனினோ, இது போன்ற எதிர்ப்புப் போராட்டங்களில் உத்தமி அவள் இவள் என்ற வார்த்தைகளை வைத்து புரட்சியை நடத்தியிருந்தாகவோ, அல்லது இது போன்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதாகவோ இருந்தால், எனது இந்தப் பார்வைக்கு மன்னிப்புக் கேட்டு, இக்கருத்துக்களை திரும்ப எடுத்துக்கொள்வதோடு, மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் அவர்களின் ஆணாதிக்கக் குறிப்புகளையும் வைத்து உரையாடுவேன்.



. இஸ்க்ரா  – தீப்பொறி -  லெனின் நடத்திய பத்திரிக்கையின் பெயர்.

3 comments:

  1. மனதை வருடும் அருமையான கட்டுரை. பிசகற்ற மார்க்சிய வழியிலான விமர்சனம். தோழர் வசுவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி- ஜீவா

    ReplyDelete
  2. சொற்களை அதன் நேர்ப் பதத்தில் பொருள் கொள்ளுங்கள்.இரட்டை அர்த்தத்தில் நீங்களாகப் புரிந்து கொண்டு குறை சொல்லாதீர்கள்.
    உத்தமன்,உத்தமி என்பது உடல் அல்லது கற்பு சார்ந்த சொல் மட்டுமல்ல. "யோக்கியம்" என்ற பொருளும் தரக் கூடியது. ஜெயலலிதா யோக்கியமானவரா?
    "உல்லாசம்" என்ற சொல்லும் அது போல்தான்.
    சாமான்யன் பிளாட்பாரத்திலோ,குடிசைகளிலோ வசிக்கிறான்.
    ஜெயலலிதா போயஸ் கார்டன் மாளிகையில் பணியாட்கள்,பஞ்சு மெத்தை,கார் என்று உல்லாச வாழ்க்கை வாழ்கிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    "மோடிக்கும்,ஜெயலலிதாவுக்கும் இடையில் விவகாரமாக ஒன்றும் நடந்திருக்காது என்று நம்புவோம்" என்று பச்சையாக விமரிசனம் செய்த இளங்கோவனை விட்டுவிட்டு,கோவனை சிறையில் அடைப்பது என்ன அர்த்தத்தைக் கொடுக்கும் என்று பெண்ணியவாதிகள் தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  3. வணக்கம் செல்வம். முகநூலில் இது குறித்து விரிவான உரையாடல் நடந்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்வது இதுதான், ஆணை உத்தமன் என்பதற்கும் பெண்ணை உத்தமி என்பதற்கும் உள்ள அர்த்தங்களை யோக்கியம் என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ள முடியாது. இதற்கும் மேலாக அவர்கள் பஜாரி என்றும் அழைத்து அதை அட்டைப்படமாகவும் போட்டுள்ளார்கள். அதற்கும் நேரான அர்த்தமாக பஜாரில் கடை வைத்திருப்பவள் என்று புரிந்து கொள்ள வேண்டுமா...விளக்குங்கள்.

    ReplyDelete