Pages

Wednesday, December 16, 2015

அல்குல்



அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ?
அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல்.
(அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள்.

கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம்.

புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு.
புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள்.

அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள்.

பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang..vol 2)

Cu V e the என்பதன் பொருள் ஏற்கனவே இருக்கும் அகழியில் தோண்டப்படும் மற்ருமொரு பள்ளம். இச்சொற்கள் கூதிக்கு ஒலி உறவும், பொருள் உறவும் உடையன, அல்குலைத் தாண்டி ழ்ழப்படும் யோனியைக் குறிப்பதாம் அது.

அல்குலுக்கு எகிப்திய மொழி கா-ட் kat. ஆங்கிலத்தில் கன்ட், ஜெர்மன் குண்டே டச்சுக்குண்டே பழம் பிரசியன் குண்டே, பழம் நார்ஸ் குண்டே எகிப்திய சொல்லுக்கு அம்மா பெண் பெண் உறுப்பு என்று பல பொருள். இந்த ka-t, cunt ஆகி இருக்கலாம்.

ஜெர்மன் மற்றும் வட அய்ரோப்பிய மொழிகளில் வழங்கும் குண்டே, குண்டா ஆகியவை புண்டை என்னும் சொல்லாக இருக்கலாம்.. அதைவிடவும் அதற்கு இன்னும் நெருக்கமான மேலைச் சொல் தற்கால ஆங்கிலத்தின் புடெண்டா( pundenta) பன்மை புடெண்டம்.
( pudendum)

இந்தச் சொற்கள் பொதுவாய் அல்குலைக் குறிப்பன என்றாலும் அதை வெளிப்படுத்துவதில் தனித்தனிப்பொருள் தருவன.

அல்குல் இது புலவர் கையாள்வது.

கூதி யோனி – vegina இவை அல்குலின் ஆழத்தை விளக்குவதாம். அதற்கு உறை என்றும் பெயர். யோனியும் வெஜைனாவும் yoni- vegina) ஒலி உறவுடையன.

இப்படி 58 பக்கங்களில் நீள்கிறது ஆராய்ச்சி.
படிக்க;  
அல்குல்-  தமிழ்நாடன். காவ்யா பதிப்பகம்.
அதற்கு கி.ரா. ஒரு முன்னுரையும் வழங்கியிருக்கிறார்.
சிற்றுரையில் நடிகன் எஸ் .எம் ராஜா. அப்புத்தகத்தை என் இல்லத்தார் படிக்கச் செய்வேன், தேவைப்படும் எனில் விளக்குவேன்.  என்று நேர்மையாகவும்  பதிந்துள்ளார்.

கொற்றவையின் கட்டுரை குறித்து வந்த விமர்சனங்களில் எனக்கு சில எனக்கு உயர் முற்போக்கு அறிவைத் தந்தன. முற்போக்குப் பெண்ணியம் என்பதில் தொடங்கி புண்டைப் பெண்ணியம் வரை அது நீண்டது. வாழ்த்துக்கள். இப்படித்தான் பல பெண்ணியங்கள் உள்ளது. ஆனால் சகலரும் சொன்னது குடும்பப் பெண்கள் அவர்களை எப்படி இழுக்கலாம் என்று,,

இந்த இடத்தில்தான் குடும்ப ஆண்கள், தங்கள் கொடியை ஏற்றியிருக்கிறார்கள். முற்போக்குப் பெண்ணியத்தில் குடும்ப ஆண்கள் என்ற சொல் நான் கேட்டறியாதது. இதுவரை படித்தறியாது. ஒரு வேளை ஆணாதிக்கத்தில் குடும்ப ஆணாதிக்கமும் சேர்த்தியா எனத் தெரியவில்லை அறிந்தோர் விளக்கவும்.

நீ பேசினால் உன் குடும்பத்தை இழுப்பதா என்ற கேள்விகள் அதிகமும் புழங்கின. மிக்க மகிழ்ச்சி. தனது மகன் குறித்தும் அவரின் இசை கடவுளால் அனுகிரக்கிக்கப் பட்டது நினைத்தே பார்க்கமுடியாது என சான்றோன் எனக் கேட்ட தந்தையாய் அனிருத்தின் தந்தை புளங்காங்கிதம் அடைந்திருந்தார். அவரை இப்பாடலைக் கேட்பாரா என்று கேட்டால் அது குடும்ப ஆணை இழுப்பதாகுமா என்று தெரியவில்லை.

எனக்கு மறுபடியும் சிக்கல் வரும் சொல்லாக இந்தக் குடும்ப பெண்கள் பதம். ஏன் குடும்ப ஆண்களை இழுத்தது தவறா எனத் தெரியவில்லை.

குடும்பப் பெண்கள் என்றால் என்ன.. ?
1 சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தில் உள்ள பெண்கள்.

2 ஆணாதிக்க சமூகத்தில், அனைத்து கேடுகளையும் வீட்டுக்கு வெளியே விதைத்து விட்டு வீட்டுக்குள் குடும்ப ஆணாய் வரும் அவனுக்கு புருஷ சிருட்ஷை செய்வதா…இல்லை, நவீனத்தில் புருஷன் காலணிகளைத் துடைத்து புள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பி இன்முகத்தோடு டாட்டா காட்டி கதவோரம் நின்று கணவனைப் பார்த்து சிரித்து வழியனுப்பி வைப்பதா..இல்லை அவனின் சொத்துடைமயா… ஆணாதிக்கப் பார்வையில் நல்லொழுக்கமான பெண்கள் என்ற அர்த்தமும் சேர்ந்தே வருகிறது. இதையும் முற்போக்கு குடும்ப ஆண்கள் உணரத்தலைப்படலாம்.

குடும்பப் பெண்ணாக இல்லாமல் தனியாக இருக்கும் தனிப்பெண்களை அழைக்க என்ன பதம். அறிஞர்கள் உதவுவார்களா.

இச்சமயத்தில் சிறுகூற்றாக,

புண்டைக்கு வரலாறு, அறிவியல், புவியியல் மட்டுமல்ல இதிகாசமே உள்ளது. என்ன பிரச்சினை என்றால் அனைத்தும் ஆண்கள் எழுதியது. அதனால் அப்படித்தான் இருக்கும்.

அதேசமயம் ஆண்களின் வசை சொல்லான புண்டை என்ற ஒரு சொல், ஒட்டு மொத்தமாய் ஒரு பெண்ணின் முழு உடலையே முன் வைப்பதோடு, சம்பந்தப்பட்ட உறுப்பில்தான் இனவாதம் மதவாதம் மொழி வாதம் என எந்த வாதமாக இருந்தாலும் பெண்களுக்கு எதிராய் யுகங்கள் தோறும், யுத்தங்கள் தோறும் ஆண்கள் அவ்வுறுப்பில் கத்தியைச் சொறுகுவதும், துவக்குகளைச் சொறுகுவதும், மின்சாரம் பாய்ச்சுவதாகவும் இருக்கிறார்கள் என்ன செய்ய.  

இப்பொழுது அதை துணிந்து, அதன் இளி தொனி மாறாமல் அப்படியே இருவர் பாடுவதை எதிர்ப்பதை விடவும், புண்டை என நீ எப்படிச் சொல்லலாம் என்ற கேள்விகளே நீண்டது. இடக்கரடக்கலும், வித்தியாசப்படுத்தலின் அரசியலும், பெண்ணியமும், வர்க்க அரசியலும் தெரியாது, கருத்துச் சொல்லியாய் இருப்பதும், தன் குறி ஒன்றே பிரதானம் என்ற நினைப்பே போதுமானது என நினைத்து தட்டத்துச் செய்பவர்களுக்கு நான் என்ன சொல்ல.

உதாரணமாக

டி ஆர் எழுதிய பாடலான….

ங்கொப்பன் மவனே
ங்கொப்பன் மகனே
டண்டணக்க
என்ற பாடலை 

புண்டை மவனே
புண்டை மவனே
-       எனப் பாடினால் அசிங்கமும் ஆபாசமுமாகத்தான் இருக்கும்.

கவிதைகளில் புண்டை எனக் குறிக்கப்பெறாமல் போன காரணம், அது வசவுச் சொல்லாக மாறியதானாலேயே தவிர. குறிக்கக் கூடாதென்பதற்காக அல்ல. இடக்கரடக்கல். (மலத்தை நெருப்பென்று கரந்தழைக்கும் பழக்கம் பார்ப்பனர்களிடத்தில் உண்டு. பீயை பீ என்று கூறாது மலம் என்ற பொதுவழக்கும் உண்டு.)

இன்னும் ஈழத்தில் எத்தனையோ கவிதைகள் போருக்கு எதிராய் துவக்குக்கு எதிராய் நீண்டிருக்கின்றன. கவிஞர் வைரமுத்து கூட தினந்தந்தியில் யோனிக்கு மானக்குழி என பெயர் ஒன்றை இட்டு எழுதியிருந்தார்.

இடம் பொருள் ஏவல்,  இத்தோடு தொனியையும் சேர்த்து அறியாத அறிஞர் பெருமக்கள் தமிழ் கூறும் நல்லுலகில் முற்போக்கு நிலைய வித்துவான்களாய் இருப்பது நான் அறியாததொன்றல்ல..

யோனி, ஆனந்ததம், அல்குல், திதலையகம், மாண்வரியகம் என இலக்கியமும், சங்கப்பாடல்களும் சொல்வது, அதன் தொனியில் பெண்ணை நோக்கிய நேரடி வசைக்கான அர்த்தத்தை சேர்காததானாலேயே. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அல்குல் யோனி இவ்விரண்டும் வசைச்சொல்லாக உருமாறியிருந்தால் அதை எழுத மாட்டார்கள்.

( இன்னும் சில விலக்கமாய் தமிழில் நிர்வாணத்துக்கு சொல்லே கிடையாது. அப்படியென்றால் தமிழில் யாரும் அம்மணமாக இருந்ததில்லையா என்ற ஆய்வும் தேவையே.)

இடக்கரடக்கலுக்கு
எடுத்துக்காட்டாக;

தாயாகப் போகிறவளே
உன் யோனியைப் பிளப்பேன்
உன் யோனியை விரிப்பேன்
தாயையும் சேயையும் பிரிப்பேன்
சூல் பையிலிருந்து குழந்தையைத் தனியே தனிப்படுத்துவேன்
சூல்பை கீழிறங்கட்டும்

-       இது அதர்வ வேதத்தில் வருகிற மகப்பேற்றின் போது வரும் பாட்டு.
இதை யோனி என்று மொழி பெயர்த்தவர்..நேரடியாக

தாயாகப் போகிறவளே
உன் புண்டையைப் பிளப்பேன்
உன் புண்டையை விரிப்பேன்

என்ற ரீதியில் மொழி பெயர்த்தால் தொனியும் அர்த்தமும் இணைந்து தரும் விளக்கம் என்னவென வியாக்யானிகள் பொருத்திப் பார்க்கலாம். மடல் வாழைத் துடை இருக்க என்று எழுதிய வாலி சமூகத்தில் கவிஞராகவும், எப்படி.. எப்படி.. சமைஞ்சது எப்படி.. என்று எழுதியபோது ஆணாதிக்க வக்ரப் பேர்வழியாகவும் மாறியது இந்த இடம் பொருள் ஏவல் சாந்த புரிதல்களினாலேயே.

இப்படி இழுத்து வைத்து இலக்கியம், எழுதுமுறை, கூறு முறை என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் நிறுத்தி வைத்து அவ்வுறுப்பைச் சுட்டினால் அவர்களை சவுக்கால்தான் அடிக்க வேண்டுமென்றால் தமிழ் கூறும் நல்லுலகில் சங்கப் புலவர்கள் தொடங்கி பிட்டுக்கு வாங்கிய அடியோடு இறையனார் இன்னும் பல கோடுகள் தாங்கி வரிப்புலியாய்த் திரிதல் வேண்டும்.

மற்றபடி குடும்ப பெண்கள் என்று சொல்லி கட்டுரையின் பொருளை இரண்டிரண்டு வரியாக பிரித்தெடுத்தால் தொனியும் அர்த்தமும் மாறத்தான் செய்யும். குழந்தைகளுக்கு அதைச் சொல்லிக்கொடுக்காதீர்கள் இதைச் சொல்லிக்கொடுக்காதீர்கள் என்று நானறிந்து அறிவுரை மழைகளை குழந்தை செல்வங்களுக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கும் குடும்ப ஆண்கள், என் மகள் அப்படிப் பேசினால் என் மகன் இப்படிப் பேசினான் அய்யோ அழகு எனக் கொஞ்சும் குடும்பப் பெண்கள்… உங்கள் மகன் இப்படி அறுவெறுப்பாக பேசுகிறானே என்ன செய்ய என்று கேட்பது ஒரு சமூகக் குற்றம். அழகாக பேசுகிறானே என்றபோது உங்கள் தாய் தந்தையர்க்கான முகம் குமிழ் பூத்து நெக்கு விடும்போது உன் மகன் இப்படியா என சுட்டிக் காட்டினால் குடும்பப் பெண்கள் கருத்துரிமை.

இத்தனைக்கும் சுட்டிக்காட்டப்பட்ட அப்பெண்கள் உங்கள் குழந்தைகள் போல் எத்தனையோ குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடம் வைத்து நடத்துபவர்கள்.


சம்பந்தப்பட்ட அனிருத் சிம்பு இவர்களின் பாடல்களை கலைஞர்களாக இருக்கும் அவர்கள் வீட்டுப் பெண்கள் இதை எப்படி புரிந்து கொள்வார்கள் செயலாற்றப் போகிறார்கள் என்று கொற்றவை கேட்டதுமே குடும்ப ஆண்கள் கொந்தளிப்பது மிகச்சரியாக இருக்கிறது. புண்டைப் பெண்ணியம், பொம்பளை என்ற ரீதியில். மகிழ்ச்சி. நிற்க.

உங்கள் மழலைகள் தூங்கும் நேரம் தவிர அவர்களை வளர்ப்பது சமூகம். வீட்டுக்கு வெளியே விட்டுவிட்டுப் போனால் சாலை மதில் சுவர்களில் தொங்கும் போஸ்ட்டர்களிலிருந்து அவர்களுக்கு சமுகம் கற்றுத்தரும் சித்திரங்கள் ஏராளம். வாழ்க தமிழ்ச் சமூகம். என் மகன் இசையமைத்து ஹிட்டான பாடல் என அவர்கள் பள்ளி விழாக்களில் ஆடச் சொல்லி உறுப்பின் பெயர் தெரியாது உங்கள் செல்ல மகள் இடுப்பை அசைத்து ஆடும் போது என்ன செய்வீர்கள். பள்ளியைக் குற்றம் சாட்டுவீர்களா. அல்லது படித்தவரைக் குற்றம் சாட்டுவீர்களா.

சிறு விளக்கம்.

சிம்புவுக்குப் பதிலாக அவர் குடும்ப ஆணான டி ஆர் முதலில் களத்தில் இறங்கி மைந்தனைக் காப்பாற்ற துடித்திருக்கிறார்.

மேலும் சிம்பு டி ஆர் அனிருத் அவரது குடும்பப் பெண்களுக்காகப் பேசிய குடும்ப ஆண்களை மதிக்கிறேன். இனியாவது அவர்கள் பொதுவெளியில் எப்படி  செயல்படுகிறார்கள் என்று பார்க்க ஆவலாக உள்ளேன்.

காதலியின் சுண்டு விரல் போட்டோ போட்டு இன்னைக்கு இவகூட, அடுத்த நாள் இன்னொரு பெண்ணின் நகத்தைப் போட்டு இன்று இரவு இவளோடு என்று குலாவும் போதும்..எனக்கு ஒருத்தி கிடைச்சிட்டா என்பதும், அதற்கு விருப்பக் குறிகளை அள்ளி வழங்கியதோடு, அடே நண்பா நானு நானு,… என நாக்கைத் தொங்கப் போடுவதும், அக்குடும்ப ஆண்கள் அக்காதலிகளின் புகைப்படங்களைக் கூடப் போட துணிவில்லாது இருப்பதும் கூட புண்டை ஆராய்ச்சிக்கு இடமளிக்கக் கூடும் என்ற பயத்தாலேயா.. அவ்வகை மாதிரிகளான குடும்ப ஆண்களையும் மதிக்கிறேன்

தங்கள் தோழிகளின் தோளில் சாய்ந்து தோழி எனக் கூடச் சொல்ல வராது அக்கா என்று பாத்திரவார்ப்பை மாற்றுவது, அதே சமயம் இன்னொருவரின் அக்காவை அடியே உன்னை லவ் பண்றேண்டி எனச் சொல்லுவதும் குடும்ப ஆண்களின் வழக்கம்தான்.

மீச்சிறு குறிப்பு.

1 இரு ஆண்கள் புண்டையைப் பற்றி பாடியது இருக்கட்டும். ஒரு பெண் அதை எப்படி எழுதலாம் என்ற கேள்வியை மறைத்துக்கொண்டு குடும்பப் பெண்கள் குடும்பப் பெண்கள் என்று குடும்ப ஆண்கள் கூவியது மகிழ்ச்சியைத் தந்தது. ஏனெனில் முகநூலில் குடும்பமில்லாமல்தான் குடும்பப் பெண்களை அவர்கள் வாழ்த்துவதும் வரவேற்பதும்.

2 கோவன் நேரடியாக முதலமைச்சர் ஜெயலலிதாவை உத்தமி உல்லாசி என்று பாடி, படம் போட்டுக் காட்டியதையும் மகிழ்வுடன் கேட்டு, புரட்சி வாயை இழுத்து மூடி, பேசாமல் அமைதி காத்த முற்போக்கு குடும்ப ஆண்களுக்கும் முற்போக்கு பெண்ணிய குடும்பப் பெண்களுக்கும் என் அன்பு. புரட்சியாளர்கள் பேசினால் அது சாலத்தகும்.கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே.

ம.க.இ.க கோவன் பிரச்சினையில் உளவியலாய் நான் கற்ற கூறுகள் நான்கு.

1 அப்பாடலின் பாடபேதத்தை எதிர்த்தால் வீட்டுக்கு வந்து சம்பந்தப்பட்ட அமைப்பினர் பேசக் கூடும்.

2 அவர்கள் நேரடியாக உங்கள் குடும்பப் பெண்களை பெயர் சொல்லி சந்திக்குக் இழுக்கக் கூடும்.

3 முற்போக்கு புரட்சிகர முகமூடிகள் கிழிந்து தொங்கும்.

4 மெய்நிகர் உலகத்தில் நீங்கள் சக ஆண்களுக்கு, அல்லது சக பெண்களுக்கு விட்ட தூதுக்களை கணிணி அறிவோடு பிறாய்ந்து உங்கள் இல்லத்தில் வீசக் கூடும்.

இவ்வளவே.

இதில் நனிகூர் அறிவுடையோர் கூறும் கூற்றாகச் சொன்னது அவர்களாவது ஒரு தடவை சொன்னான் இந்தம்மா எத்தனை தடவை சொல்லுது… இணையத்தின் கொற்றவையின் புழங்கு வெளி சிறிது. அவர் எழுதிய எதிர்வினை எத்தனை பேரை அண்டப் போகிறது. ஆண்சொல்லாடலில் கரைக்கப்பட்ட சிறு பெருங்காயம் அது.

முகப் புத்தகத்தில் உங்கள் நாலு வயசுக் குழந்தை இயங்கத் தொடங்கி அவர் கொற்றவையை அறிந்திருந்தால் இது குற்றமே.  கணிணியே காணாத மக்களையும் அவர் தம் குழந்தைகளையும் சிம்பு அனிருத் வகையறாக்கள் அண்டும் விதம் அவர்களின் திரைத் துறை ஒலிப்பெருக்கிகள் அவர்கள் இல்லத்தில் ஒலிக்கும்போது முக நூலோ அல்லது வாட்ஸ் அப்போ அறியாத அக்குழந்தைகள் எழுந்து பாடி ஆடினால் என்ன செய்வீர்கள். விளக்குங்கள் தகைமையுள்ளோரே.

ஒரு பாடலின் இயங்கு வெளி குறித்து சிற்றறிவும், ஊடக விளம்பர மோகத்தின் பாய்ச்சலும் அறியாத உங்களை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.

4 அனிருத்தின் தந்தையும் குடும்ப ஆணாகவும் உள்ள ராகவேந்தர் தன் மைந்தனின் இசை குறித்தும் கடவுள் கடாஷத்தைக் குறித்தும் முன்னொரு சமயம் விதந்தோதிய சுட்டி.



வாழ்த்துக்கள்.
 வசுமித்ர

Wednesday, November 4, 2015

கோவனா? - தீப்பொறி ஆறுமுகமா?...






கோவனை கைது செய்ததன் மூலம் அரசு தனது சகிப்பின்மையைக் காட்டியது போல, கோவனை அப்பாடலை நிகழ்த்தலாம் எனச் சொன்ன ம க இ க வும் தங்களது ஆணாதிக்கப் போக்கைக் காட்டியிருக்கிறது. இதில் ஆணாதிக்கம் எங்கு வந்தது என்றோ, பிரச்சினையைத் திசை திருப்புகிறேன் என்றோகூட அவர்கள் கருத்துச் சொல்ல வாய்ப்பியிருக்கிறது. அதே போல் தீவிர இடதுசாரிகளின் வெளிப்பாடு எவ்வளவு மோசமான சகிப்பின்மையைக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் உரையாட வேண்டும்.

கோவனைக் கைது செய்தது சரியா எனக் கேட்டால் அது தவறுதான். அதற்காக போராட வேண்டுமா என்றால் போராடத்தான் வேண்டும். கோவனுக்காக மட்டுமல்ல, இன்னும் அரசின் மக்கள் விரோத திட்டங்களை, அதன் முதலாளித்துவப் பார்வைகளை எதிர்த்து, நாள்தோறும் கைதாகும் தோழர்களுக்காகவும் சேர்த்துப் போராடவேண்டும். அதே சமயம் அவர்களின் போராட்ட வடிவங்களையும், அது அறிவிக்கும் முறைமைகளின் மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

எழுத்துரிமை பேச்சுரிமை இவைகளின் மூலம் கருத்துக்களை முன் வைக்கும் கருத்துரிமையும் நமக்கு இருக்கத்தான் செய்கிறது. புரட்சியாளர்கள் ஆட்சியைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இவ்வுரிமையை, நான் இழக்க மாட்டேன்.

கருத்துரிமை என்ற பெயரில் இன்னொருவரின் மீது ஆபாசமான சொற்களை வைப்பது கருத்துரிமையில் சேர்த்தியா..இதுதான் என் கேள்வி.

பாடலில் ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயஸுல்ல உல்லாசம் என்ற வரிகள் என்ன அர்த்தத்தைத் தருகிறது. ஆண் உத்தமன் எனும் போது அவனது குணங்கள் முன்னுக்கு வருகிறது. பெண் உத்தமி எனும் போது அவளது உடல் முன்னுக்கு வருகிறது. உல்லாசப்பயணம் என்பது வேறு,  ஊத்திக்கொடுத்து ஒரு பெண் உல்லாசமாய் இருக்கிறாள் என்றால் அவ்வரிகள் யாரை எந்த நோக்கத்தில் முன்வைக்கிறது.

மக்களுக்காக ம.க.இ.க போராடுகிறது என்பதற்காக அது தான் மட்டுமே ஒர்ஜினல் இடது சாரி இயக்கம் என்ற இருப்பை கைக்கொண்டுவிட முடியாது. ஆனால். அது தன்னை எப்பொழுதும் அப்படித்தான் அழைத்துக்கொள்கிறது. இணைய வெளியில் மட்டுமல்ல பொதுவெளியிலும் அனைத்து இடது சாரிகளையும் அது போலி கம்யூனிஸ்ட் கட்சி என்றே அதிகாரக் குரலால் அழைக்கிறது.

இப்பொழுது இந்தக் கைதானது வார்த்தைகளுக்கான கைதா. இல்லை மது ஒழிப்பை ஆதரித்ததற்காகக் கைதா என நான் குழம்பியிருக்கிறேன். சி.பிஐ .எம்மின் வெகுஜன அமைப்பான த.மு.எ.க.ச ஒரு கண்டனத்தை வெளியிட்டு இருக்கிறது.

தமிழகத்தில் சாதிய, மதவாத அமைப்புகளால் எழுத்தாளர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் முடக்கப்படுகிறது. அப்போது மவுனம் காக்கிற அல்லது ஒடுக்குமுறைகளில் இறங்குவோருக்குச் சாதகமான நிலைபாட்டையே மாநில அரசு எடுத்துவந்துள்ளது. நேரடியாக அரசை விமர்சிக்கிற பாடல் என்றதும், இவ்வாறு கைது, சிறை என்ற நடவடிக்கைகளில் இறங்குகிறது. தேர்தல் சூழல் நெருங்கிவரும் நிலையில், ஆட்சிக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவோருக்கு எச்சரிக்கை விடுக்கிற நடவடிக்கையாகவும் இதைக் காண வேண்டியுள்ளது.

மகஇக அமைப்பின் நிலைபாடுகளிலும் அணுகுமுறைகளிலும் எமக்குக் கருத்துவேறுபாடுகள் உண்டு என்றபோதிலும், அவர்களது முன்னணிக் கவிஞர்-பாடகர் கோவன் மீது அரசு தொடுத்துள்ள இந்தத் தாக்குதலை தமுஎகச சார்பில் உறுதியாகக் கண்டிக்கிறோம். அரசு உடனடியாக இந்த ஜனநாயக மறுப்பு நடவடிக்கையை விலக்கிக்கொண்டு, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேரடியாக அரசை விமர்சிக்கிற பாடல் என்று இவ்வறிக்கையில் தமுஎகச  சொல்லும் அவ்வரிகள்,  அரசை விமர்சிக்கிறதா அல்லது பெண்ணின் ஒழுக்கத்தை விமர்சிக்கிறதா என்று விளக்கவேண்டும். கலை இலக்கியத்தில் புரட்சியை எடுத்துச் செல்வதோடு, அது நச்சுக்கலை இது நச்சுப் பாட்டு. அது முதலாளித்துவத்தை தூக்கிப் பிடிக்கும் நாவல், இது பெண்ணிய கவிதை என்றெல்லாம் தரம் பிரித்து விமர்சனம் செய்து வரும் அவ்வமைமைப்பு இதனையும் புரட்சிகர விமர்சனங்களைக் கொண்டு இது கருத்தா என விளக்குவதோடு இதுதான் மக்கள் இலக்கியம என்றும் எடுத்தியம்ப வேண்டும்.

இல்லை,.. இப்பொழுது இது போன்ற பாசிச சக்திகள் தலை தூக்கும்போது நாம் இப்படி விமர்சிப்பது நாமே நம் அமைப்புக்களை விமர்சிப்பது போல ஆகிவிடும் என்ற கருத்தை முன் வைத்தால்…நான் அதற்கு பதிலாக சொல்லுவது இதுதான். எப்பொழுதும் மதவாத சக்திகளும் பாசிச சக்திகளும் பிரிந்ததே இருந்ததில்லை. அவைகள் தங்கள் நோக்கத்தை முன்வைத்து வரலாற்றில்  நகர்ந்தபடியே இருக்கத்தான் செய்கிறது. புரட்சி பேசும் அமைப்புகள்தான் மாறி மாறி விலகியும், பேசியும் வருகின்றன. உதாரணத்திற்கு ம.க.இ.க ஆளும் தரப்பை விமர்சிக்க வைத்த வார்த்தைகளின் அளவையும் கனத்தையும் விட, இரண்டு கம்யூனிஸ் கட்சிகளையும், பிற கம்யூனிச அமைப்புகளையும், போலிக் கம்யூனிஸ் கட்சிகள், போலி அமைப்புகள் என்று வைத்து விமர்சித்ததுதான் அதிகம்.

போராட்டத்தை எப்படியும் எடுத்துச் செல்லலாம் என்றால், கோவன் செய்ததும் அதுதான் என்றால், அதிமுக, திமுக இன்னும் வெகுஜனக் கட்சிகள், மேடைகளில் வெகுஜன மக்களை ஈர்க்க ஆடும் காபரே டான்ஸ்க்கும், அசிங்கமான பாடல்களுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம். தரங்கெட்ட வரிகளை வைத்துக்கொண்டு ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்பின் மீது, ஒரு தனிமனிதனாக, மார்க்சியத்தைப் படித்து வரும் ஒரு மாணவனாக, எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை.  என்பதோடு, மரியாதையும் இல்லை என்றே சொல்கிறேன். வரலாற்றை சாகசமாக திருப்பமுடியாது. #கோவன் இப்பொழுது சாகச நாயகனாயிருக்கிறார். அவரது கைது - வரிகளுக்கா இல்லை அவ்வரிகளுக்கிடையே இருக்கும் மது ஒழிப்புக்கா என்ற குழப்பம் எனக்கு இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

இரண்டுக்குமே எனது வருத்தங்களையும் கண்டனங்களையும் பதிவுசெய்கிறேன். 

இதற்கிடையே இணையவெளியில் கத்தாருக்கு இணையாக வைக்கப்பட்ட கோவனை இப்பாடல் விசயத்தில் நான் தீப்பொறி* ஆறுமுகம் என்றே சொல்லுவேன். வேண்டுமென்றால் நீங்கள் இனி கோவனை இஸ்க்ரா கோவன் என்று அழைத்துக்கொள்ளலாம்.

மலிந்த ஆபாசாமான வார்த்தைகளை முன்வைத்து சாராய ஒழிப்பைப் பேச வேண்டுமென்றால் என்னிடம் ஏராளமான பாடல்கள் இருக்கிறது. அதையும் மகஇக வுக்கு எழுதித்தருகிறேன். இதை விட ரைமிங்க்காக மெட்டுக்கு இடிக்காத வரிகளாக அவை இருக்கும் என உறுதியும் கூறுகிறேன். அரசை எதிர்ப்பது என்பது மகஇக -வைப் பொறுத்தமட்டில் அது தனிநபர் எதிர்ப்பாகவே இருக்கிறது. சில பல வருடங்களுக்கு முன் சேகுவேராவை இவ்வமைப்பு புறக்கணித்தே வந்தது. கேட்டால், விமர்சனத்துடன் கூடிய அணுகுமுறை, அவன் சாகசப்புரட்சியாளன் என்றது.

இப்பொழுது #கோவன் செய்திருப்பது என்ன? வெகுஜன மலிந்த ரசனையை இயக்கப் பார்வையாய் வைத்து, இப்படிச் சொன்னால் ஏதேனும் நடக்கும் என்ற எண்ணைத்தைத்தாண்டி இதில் வேறென்ன இருக்கிறது. ஒரு பெண்ணை அவமதிக்கிற சொற்களை வைத்து மது ஒழிப்பைப் பேசுகிறேன் என்பது இன்னும் எனக்கு கூச்சந் தரத்தக்கதாகவே இருக்கிறது. தமு எக ச அறிக்கையில் கூறியிருப்பது போல்

” தமிழகத்தில் சாதிய, மதவாத அமைப்புகளால் எழுத்தாளர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் முடக்கப்படுகிறது. அப்போது மவுனம் காக்கிற அல்லது ஒடுக்குமுறைகளில் இறங்குவோருக்குச் சாதகமான நிலைபாட்டையே மாநில அரசு எடுத்துவந்துள்ளது. ”

உத்தமி, உல்லாசம், அவள், இவள் என்பதையெல்லாம்  “கருத்துகள்” என்று சொல்கிற அளவுக்கு சிவப்பு கண்ணை மறைத்திருக்கிற தமுஎகசவுக்கு, இதே குற்றச்சாட்டை ம க இக வின் மீதும் வைக்கலாம் என்பது தமுஎகசவுக்கும்,மற்ற இடதுசாரி தோழர்களுக்கும் நினைவுபடுத்துகிறேன். 

பொது வெளியிலும், இணையத்திலும் கம்யூனிசக் கருத்துக்களை எடுத்துச் செல்லும் சக தோழர்களை. சக அமைப்புகளை எவ்வளவு மோசமாக நடத்த முடியுமோ, அவமானப்படுத்த முடியுமோ அத்தனையையும் #மகஇக   போன்ற சில அமைப்புகள் செய்து கொண்டிருக்கின்றன. எடுத்த எடுப்பில் என்.ஜி. ஓ க்கள், முதலாளித்துவ கைக்கூலி, ஆன்டி மார்க்சிஸ்ட், திரிபுவாதி, ஓடுகாலி, சாதியவாதி, பெண்ணியவாதி இதுபோன்ற பதங்களை வைத்துத்தான் வசைபாடுகிறது.

கோவனின் கைதை எதிர்க்கிற நாம் இவ்வரிகளை என்ன செய்யப் போகிறோம்? உத்தமி உல்லாசமாய் இருக்கிறாள் என்று கூறுவதை எப்படிப் பார்க்கப் போகிறோம். கோவன் இவ்வரிகளை ஒரு ஆண் ஆளும் போது பாடியிருந்தால்,  அதாவது முன்னால் முதலமைச்சராய் இருந்த கருணாநிதியாக இருந்தால் ஊத்திக்கொடுத்த உத்தமனுக்கு கோபாலபுரத்துல உல்லாசம்.என்று இருந்திருக்குமா.

#கோவனை தவறாக வழிநடத்தி அவரது வரிகளில் உள்ள கொச்சைத்தனத்தைச் சுட்டாமல் விட்டு, அவரை நெருக்கடிக்குத் தள்ளியிருக்கிற மகஇக-வின் தலைமைக்குக்கும், தேச துரோக வழக்கில் அவரைக் கைது செய்த தமிழக அரசுக்கும் எனது கண்டனங்கள்.

புரட்சியை ஒரு சாகசச் செயலாக கருதும்போது இது போன்ற ஆபாச வரிகளும் வரத்தான் செய்யும். ஏனென்றால் சாகசம், கதாநாயகத்தனம் என்பதெல்லாம் ஆணாதிக்கத்தையே வழிமொழியும் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.

சிறுகுறிப்பு;

#மகஇக தங்களது அமைப்பின் புரட்சிகர தலைவர்களாக முன்வைக்கும் மார்க்ஸோ, எங்கெல்ஸோ லெனினோ, இது போன்ற எதிர்ப்புப் போராட்டங்களில் உத்தமி அவள் இவள் என்ற வார்த்தைகளை வைத்து புரட்சியை நடத்தியிருந்தாகவோ, அல்லது இது போன்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதாகவோ இருந்தால், எனது இந்தப் பார்வைக்கு மன்னிப்புக் கேட்டு, இக்கருத்துக்களை திரும்ப எடுத்துக்கொள்வதோடு, மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் அவர்களின் ஆணாதிக்கக் குறிப்புகளையும் வைத்து உரையாடுவேன்.



. இஸ்க்ரா  – தீப்பொறி -  லெனின் நடத்திய பத்திரிக்கையின் பெயர்.

Thursday, July 30, 2015

கொலைக் குறிப்பேடு



ஒரு மனிதன் கயிற்றின் முன் நிராதரவாக நிற்கிறான்
கழைக்கூத்தாடியைப் போல் நீதி அங்கும் இங்கும் ஊசாலடிக்கொண்டிருக்கிறது
பார்வையாளர்களுக்கு
நடந்து போகும் மனிதனை விட
கயிறே பார்வையை நிறைத்திருக்கிறது
ஒரு மனிதன் முறுக்கிய கயிற்றுக்குத் தன் தலையைக் கொடுக்கும் போது
தான் மனிதனாக பிறந்ததற்கு இது வேண்டும் என நினைக்கலாம்
தான் கடந்து போகாத பாதையில்
தன் தடத்தைப் பதித்தவனின் முகத்தை நினைக்கலாம்

அரசு ஒரு கழுதை
அதற்கு உண்ணக் காகிதகங்கள்தான் வேண்டும்
என்கிற பழமொழியை நினைவு கூறலாம்

தலையை மூடிய கறுப்புத் துணிக்குள் ஒளிமிகுந்த வார்த்தைகளை அவன் யோசித்துக்கொண்டிருக்கலாம்
அரசு என்ற ஒரு சொல் உண்மையில் குமட்டலை ஏற்படுத்துகிறது
அரசு
நீதியின் பெயராலோ சத்தியத்தின் பெயராலோ அல்ல
சக மனிதனின் பெயரால்
இருக்கவேண்டும்
அவ்வளவு நிச்சயமான தன்மையுடன்

மனிதர்களிடம் பேசவிரும்பாத அரசு
விசாரிக்கவும் ஆணையிடவும் விரும்பும் அரசு
எப்படி மனிதர்களை ஆளும் தகுதி கொண்டதாக இருக்கமுடியும்

இறுதி நொடியில்
மறுக்கவே முடியாத நினைவைப் போல்
அவனது விழிகளை ஈரப்படுத்திக்கொண்டிருப்பது ஒன்றே ஒன்றுதான்
தன் நிழலைப் போல விட்டுச் சென்ற
அவனது குழந்தைகளுக்கு காரணம் சொல்லும்
தூக்குத் தண்டனைக் குறிப்பேடுகளில்

தூக்குத் தண்டனை என்பது
நீதியின் பெயரால் என்ற வார்த்தையால் இணைக்கப்பட்டு
அவர்களுக்குச் சொல்லக் கூடாது
கடவுளின் பெயரால்
என்ற வார்த்தைகளையும் நீக்கவேண்டும்
முடிவாக
ஒரு மனிதனைத் தூக்கிலிட விரும்பிய அரசு
அவர்கள் வாழும் இம் மண்ணில்தான் இருக்கிறது என்பதையும்…


இறுதியாக கயிற்றின் முன் நிற்பவன்
தன்னைப் போலவே இருக்கும் மக்களுக்குச் நினைவூட்ட விரும்புவதெல்லாம் ஒன்றேதான்
மக்களே. அரசு உங்களை விரும்பிக் கேட்டுக்கொள்கிறது
அமைதியாயிருங்கள்

பிணத்தைப் போல அவ்வளவு விரைப்பாக

Monday, May 4, 2015

கார்ல்மார்க்ஸ் பிறந்த நாள்.




உழைப்பு மிகவும் மனிதத்தன்மை கொண்ட தேவையாகும், ஆனால் அந்த உழைப்பின் நிகழ்வுப் போக்கில் தொழிலாளி தன்னை ஒரு மனித ஜீவனாக உணர்வதில்லை. இங்கே அவன் பலவந்தம் செய்யப்பட்ட பிராணியாக, உயிருள்ள இயந்திரமாக மட்டுமே இயங்குகிறான். இதற்கு மாறான முறையில் உழைப்புக்கு வெளியேதான், அவனுடைய சாதரணமான  அடிப்படையில் மிருகச் செயல்களை நிறைவேற்றுகின்றபொழுது- உணவருந்துதல், மதுவருந்துதல், உடலின்ப நடவடிக்கை,உறக்கம் இதரவை- தொழிலாளி தன்னை சுதந்திரமாக இயங்குகின்ற மனிதப்பிறவியாக உணர்கிறான். “ எது மிருகத்தன்மையோ அது மனிதனுக்கு உரியதாகிறது எது மனிதத்தன்மை உடையதோ அது மிருகமாக ஆகிறது.



கார்ல்மார்க்ஸ்.

Wednesday, April 22, 2015

காமத்துப்பால் II





இரண்டாம் பத்து
11
கொடுங்காற்றின் நடுவே
படபடத்தலைகிறது
தனியனின் காமம்
நீர்வார்த்து சாந்தமுறும் கரங்களில்
அலைபாய்கிறது
யோனியின் ரேகை

தானத்தை புணர்ச்சியாய் யாசிக்கும் கரங்களில்
வந்து வீழ்கிறது
அண்டத்தின் இடியொலி

கருகும் உடலில்
புகைகிறது
புணர்ச்சி வாசம்

சம்போ மகாதேவா
சம்போகம்.

12

குறி நாவாகி
மடித்துச் சுருட்டுகிறது அவளை
தலையெங்கும் காமம் வழிய
செஞ்சூரியனைக் கசக்கித் துடைக்கியில்
பூமிக்கு அறிமுகமாகிறது
முதல் இருட்டு

13
மௌனத்தின் வெறி
வரைபடமொன்றை வரைகையில்
பெருவிரலொன்று
மெல்லக் கால்வைக்கிறது
வரைபடத்தின் தலைவரியில்
நகைத்து இளிக்கிறது பூதம்

14

கழுத்தைத் திருகி
என்
காமத்தைக் கொல்வேன்
இது
என்
பிணத்தின் மீது சத்தியம்

15

தனிமையைக்
குறியாய் மாற்றி வருடுகிறேன்
விழிகளில் வழிகிறது
இந்திரியம்

16

கைவிடப்பட்ட
காமத்தின் அனாதைத்தனத்திற்கு
என் பெயர்
சகி
அதை நீ உச்சரிக்கையில்
மரணவாடை நாசியைத் தாக்கும்

17

கட்டளையை யாசிப்பாய் புரிந்து கொண்டவளே
இதுகேள்..

எனது திருவோடு
உனதுடல் வேண்டி மலர்கிறது

18

தானமிட்ட காமத்தில்
வாங்கிய புளிப்பு
வேண்டிய காமத்தில்
யாசிப்பின் உப்பு
பிடுங்கிய காமத்தில்
வெறுப்பின் கரிப்பு
விரும்பிய காமத்தில்
எரிப்பின் இனிப்பு

சலித்த காமத்தில்
இறப்பின் ருசி

19

தின்னத் தின்ன வளரும்
பெருங்காமத்தின்
கடைவாய்ப் பற்களில் உனதுடல்
புன்னகை செய்கையில்
என்
காடொன்று பற்றியெரிகிறது
எரிப்பின் மிச்சத்தின்
இறுதியாய் வீசப்படும்
என் முத்தத்தின் உதடுகளிலிருந்து பெய்யும் இந்திரியம்
அப்புன்னகையை தனது நீர்க்கரத்தால் வாரிச்சுருட்டும்

விதி வலியது கண்ணே

20

அம்மா
எனக் கூவிய என் அடித்தொண்டையில்
இன்றுன் பெயரைக் கூவினேன் காமுகி

பசி மிகுந்த சொற்களோடு
பாயுமுன் கரங்களில்
கிழிபடுகிறது என் தசையின் ஒலி

அம்மாவெனக் கூவிய தொண்டையில்
ஆவேசமாய் பதிகிறதுன் பற்கள்
மிக
நிதானமாக கவிச்சியுடன்
வந்து வீழ்கிறது அச்சொல்
ருசி மிகுந்த குருதிச் சூட்டோடு

முன்னொரு காலத்தில் கூவிய தொண்டையை
பாலால் நனைத்தது
அச்சொல்

அம்மா….

Thursday, February 19, 2015

சுக்குமிளகுதிப்பிலி.





புதிய புத்தகம் பேசுது, 2015, ஜனவரி, மலர் 12, இதழ் 11 ன்றை முன் வைத்து
ஓர் எதிர்வினை.


புதிய புத்தகம் பேசுது இதழ் ஆசிரியர், முதன்மை ஆசிரியர், மற்றும் ஆசிரியர் குழுவுக்கும், பேட்டியாளர் கீரனூர் ஜாகிர் ராஜாவை முன் வைத்தும்..

புதிய புத்தகம் பேசுது மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகு ஜனப் பத்திரிக்கை என்பதை நினைவில் வைத்தே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

புத்தகம் பேசுது அட்டைப்படமாக கோணங்கியை பதிந்ததும், அவரது அரசியல் சொல்லாடலாக ( என்னால் அரசியல் இன்றி எதையும் அணுகமுடியாது)  “கலைஞனை நம்புவதும், கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி” என்ற வார்த்தையைப் பதாகையாய் அட்டைப் படத்தில் இட்டதும், நூலின் மத்தியில், கோணங்கியின் விரல்கள் காட்டும் வித்தைக்கு கீழே இதுவும் ஒரு வித்தையாய் அமைந்திருக்கிறது.

கலைஞனை நம்புவதும் கலைஞனை நோக்கி நகர்வர்தும் என்ற சொல்லாடல் கோணங்கியை முதலில் கலைஞன் என உறுதி படுத்துவதோடு, மனித குல மீட்சிக்காக போராடிய பல எழுத்தாளக் கலைஞர்களை அவருக்குத் தெரியும் என்ற தொனியும் உள்ளது. அதோடு அச்சுறுத்தும் வகையில் சமூகத்தின் மீட்சி கலைஞனால் மட்டுமே சாத்தியம் என்னும் பிரகடனத்தையும் முன் வைக்கிறது.  அப்பிரகடனத்திற்கு ஆதாரமாக, மனிதகுல மீட்சிக்காக பாடுபட்ட கலைஞன் ஒருவனைக் கூட எழுத்தாக்கம் பெற்ற பேட்டியில் பதிவு செய்யவில்லை. ஒரு வேளை தனிப்பட்ட முறையில் அப்படிச் சொல்லியிருந்தால் மனிதகுல மீட்சிக்காக கதை எழுதிய அக்கலைஞனை நானும் நம்பத் தயராயிருக்கேன். நிற்க

உரையாடல் முழுவதும்( இது எழுத்து வடிவில் பார்த்ததால் இதற்கு உரையாடல் என்ற மதிப்பைத் தருகிறேன்.. ஆனால் இது வெட்டி அரட்டை என்றே என் புத்தி வாசிக்கிறது.)  முழுவதும் சுயபுராணத்தை தாண்டி வேறு எதுவும் இல்லை என்பதே என் வாசிப்பு.  அதற்கு முழுகாரணம் பேட்டியாளர் கிட்டத்தட்ட கோணங்கியின் மாபெரும் தொழுகையாளராய் மட்டுமே காணக்கிடைக்கிறார். பேட்டி என்றால் என்னவென்றே தெரியாது, தான் நம்பிய மனிதகுல மீட்சியாளனை இச்சமூகமும் நம்ப வேண்டும் என்ற வேண்டுகோளும் கோரிக்கையுமே அதில் கொட்டிக்கிடக்கிறது. பேட்டியின் தலைப்பில் இருந்த மீட்சியானது எவ்வகையிலானது, மீட்சியளிக்கத்தக்கப் படைப்புகளை எழுதியவர்கள் யார் என்ற கேள்வி வரும் வரும் என கடைசிக் கேள்விவரை நான் காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம்.

இக்கடிதத்தின் வாயிலாக கோணங்கி, தான் நம்பிய அந்த மனித குல மீட்சியை நடத்தும் கலைஞனை அடையாளம் காட்ட வேண்டும். முதல் கேள்வி வழக்கமாக உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்றே தொடங்க வேண்டும்… நல்லது.. அது புதிய வாசகர்களுக்கு கோணங்கியை அறியத்தரும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அடுத்த கேள்விதான் பேட்டியை உளறலாய் முன் வைக்கிறது. பேட்டி எடுப்பவரும் உளறி, பேட்டியாளரும் போட்டி போட்டு உளறும் ஒரு பேட்டியை இதற்கு முன் எண்ணற்ற தடவைகள் வாசித்திருக்கிறேன். அதில் இது தலைசிறந்த இடத்தை வகிக்கிறது.

உழைக்கும் மக்களின் தத்துவம் மற்றும் அரசியல் பொருளாதாரத்துக்கான மாற்றங்களை மார்க்சியத்தில் கண்டடைந்த ஒரு கட்சியின் வெகுஜனப் பத்திரிகை.. இன்னும் யதார்த்த வாதத்தின் அடிப்படையை கட்டுக்குலையாமல் காப்பாற்றி வைத்திருக்கும் ஒரு அமைப்பிலிருந்து வெளிவரும் பத்திரிகையின் பேட்டியாளரிடம் இருந்து வரும் அடுத்த கேள்வி - கரிசல் காட்டு வெயில், அதில் மண்டையைக் கொடுத்தால் கடித்துக்கொள்ளும் வெள்ளரிக்காய், இதன் சுவைகளைக் கூறுங்கள் என்று. இதுதான் பேட்டியெடுக்கும் முறையா. இந்த உளறலை வைத்ததும் கோணங்கி வெள்ளரிக்காய் தோட்டம் போட்ட கதையை தண்ணீர் பாய்ச்சிய கதையை, மற்றும் அடுத்தடுத்த கேள்விகளில் வெள்ளரிக்காய்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்தன…இருந்ததில் நல்ல வெள்ளரிக்காயாய் பாரதி புத்தகாலயத்தில் வரப்போகிறது… இந்த வருடத்தில் வெள்ளரிக்காய் விளைச்சல் அமோகம் எனத் தொடர்கிறது.. என்ன கூத்து இது.

தோழர்களே, இதில் என் முக்கியமான கேள்வி அசல் வெள்ளரிக்காய் (ஈறுகளுக்கு நைந்து கொடுப்பதாயும் தாடையைப் பதம் பார்க்காத பிஞ்சு வெள்ளரிக்காய்காளாகவும் உள்ள,  மதினி மார்கள் கதையையும் கொல்லனின் ஆறு பெண் மக்களையும்- பாரதி புத்தகாலயம் வெளியிட இருக்கிறது என்று பேட்டியிலும் வெள்ளரி வியாபாரம்)  என கலைஞன் கோணங்கி கருதும் மற்ற பிதிரா, உப்புக்கத்தி, உடைபடும் நகரம். பாழி, பிதிரா, தா, இருள்வ மௌத்திகம் போன்ற வெள்ளரிக்காய்களை பாரதி புத்தகாலயம் பதிப்பிக்குமா( இன்னும் விமர்சனத்துக்கு உட்பட வேண்டிய வார்த்தை புத்தகாலயம் என்பதாகும்- கோயில் கருவரையில் சாமி இருக்கும் விழுந்து கும்பிடு எழுத்துக் கலையில் எழுத்தாளன்தான்  சாமி அவனைக் கும்பிடு.. என்ன தோழர்களே இது,. அறிவைத் தொழுதலா மார்க்சியப் புரிதல்) என்பதையும் சொன்னால் மேற்கண்ட வெள்ளரிக்காய் வியாபரம் பற்றியும் வெள்ளரிக்காய்கள் பற்றியும் நான் பேசத்தயார்.

முக்கியமாக யதார்த்தவாத்தின் அடிப்படையை இன்னும் நகர்த்தி பல இசங்களை குப்பைத்தொட்டிக்கு அனுப்பி வைத்த ஒரு அமைப்பு இப்படி ஒரு தனிமனித புளங்காங்கிதத்தை,  தான் அடைந்ததோடு அதை வாசகர்களும் அடைய வாய்புத் தருவது ஏன்? கீரனூர் ஜாகிர் ராஜாவுக்கு கோணங்கி எப்ப்டி சட்டை போடுகிறார் எப்படி தலை சீவுவார் என்பது ஆராய்ச்சிக்கு உரியதாக இருப்பது அவரளவில் நல்லதே. அதையே இலக்கிய வெள்ளரிக்காய் எனக் கூவி விற்பதது ஏன்? இதில் எனக்குள்ள வருத்தம் என்னவென்றால், புதிதாக எழுத வரும் வாசகன் வாயில் வெள்ளரிக்காய் விதையைத் திணித்து இதுதான் கலை, இதை எழுதியவன்தான் கலைஞன், அக்கலைஞனை நம்புவதுதான் உனக்கும் உன்னைப் போன்ற உருவங்களைக் கொண்ட மனிதகுலத்துக்கும் ஒரே மீட்சி எனச் சொல்லாமல் இருந்தால் சரி.

மிகவும் வருத்தமாக இருக்கிறது. பேட்டியாளரிடம் கோணங்கியை வாசித்தவனாக நான் உரையாடவும் காத்திருக்கிறேன்.

நேரில் உரையாட விருப்பமில்லையெனில் எனது பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளித்தாலும்கூட போதும்:

1.    கலைஞனை நம்புவதும், கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி” என்ற இந்த “தத்துவத்தின்” மூலம் சமூகத்தின் மீட்சிக்கு கோணங்கியும் அதை ஆவலுந்த கேட்ட கீரனூர் ஜாகிர் ராஜாவும் அதை பத்திரிக்கையில் அனுமதித்திருக்கும் ஆசிரியர் குழுவும் முன்வைக்கும் செயல்திட்டம் என்ன?

2.    கலை மனிதகுலத்தை மீட்குமெனில், மார்க்சிஸ்ட்-கம்யூனிஸ்ட் கட்சிக்கான, அரசியலுக்கான (பாராளுமன்றவாதமானாலும்கூட பரவாயில்லை) எல்லாவற்றிற்கும் மேலாக  புரட்சிக்கான தேவை இருக்கிறதா இல்லையா? கலையா? புரட்சியா? எது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீட்சிக்கான ஆயுதம்?

3.    கலை என்பது உங்களது பதிலாக இருந்தால், த.மு.எ.க.ச இதுவரை ‘உற்பத்தி’ செய்த, ‘அரவணைத்து’ கௌரவித்த கலைஞர்கள் மனிதகுல மீட்சிக்காக ஆற்றிய பங்கென்ன, இதுவரை கிட்டிய மீட்சிகள் என்னென்ன? மீட்சிக் கர்த்தாக்களாகிய அக்கலைஞர்கள் பட்டியல் கிடைக்குமா? ‘கலைஞர்களால்’தான் மனிதகுல மீட்சி நிகழப்போகிறது என்பதாக கோணங்கியின் பேட்டியின் மூலம் புத்தகம் பேசுகிறது முன்வைக்கிறதா?

4.    என்னைப் பொறுத்தவரையில் கலைஞன் என்றாலே அவன் எழுத்தாளன் மட்டுந்தானா…என் வாசிப்பின் அறிவில் எழுத்தை ஒரு துறையாக மட்டுமே கொள்கிறேன். பழக்கத்தில், ஓரளவு வாசிப்பில், சாத்தியப்பட்டிருக்கும் எழுத்தை மனித குல மீட்சிக்காக எப்படி முன்வைப்பீர்கள். விளக்குவீர்களா…

5.    இறுதியாக, விஞ்ஞானபூர்வமாக சமூகத்தை ஆய்வு செய்து, சமூக ஒடுக்குமுறைக்கான காரணிகளையும், அதைக் களைவதற்கான செயல்திட்டத்தையும் கொடுத்த கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், மாவோ மற்றும் இதர புரட்சியாளர்களின் சிந்தனைகளை வழியொட்டி செயல்படும் செயல்வீரர்களால் மனிதகுல மீட்சி சாத்தியமாகப் போவதில்லை, ஆனால் நிகண்டுகளையும், கூகிள் தேடல் பொறியில் கிடைக்கும் சில ‘உயிரிகளின்’ பெயர்களையும் ஒட்டி வெட்டி, அனகோண்டாவின் வாய்க்குள் சிக்கி வெளித்தள்ளப்படும் ஒரு காட்டெருமையின் சிதறுண்ட எலும்புத்துண்டுகள் போல் தமிழை, படிமத்தை இரைத்து, கூழ் காய்ச்சிக் கொடுக்கும் கோணங்கி போன்ற கலைஞர்களால்தான் மனிதகுல மீட்சி சாத்தியமாகப்போகிறது இல்லையா தோழர்களே?


நகைச்சுவைக்காக

“இயேசுவை நம்புவதும் இயேசுவை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி”

 “அல்லாவை நம்புவதும் அல்லாவை நோக்கி நகர்வதும்தான் மனிதகுலமீட்சிக்கான ஒரே வழி”

 “இராமரை நம்புவதும், ராமரை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி

கடுங்குறிப்பாக

“கோணங்கியை நம்புவதும் (அவரை பேட்டியெடுப்பதும்), கோணங்கியை நோக்கி நகர்வதும்தான் மனித குல மீட்சிக்கான ஒரே வழி ”

உரையாட வருபவர்களின் கவனத்திற்கு;

மார்க்சை நம்புவதும் மார்க்சை நோக்கி நகர்வதும்தான் மனித குல மீட்சிக்கான ஒரே வழியா என்ற கேள்விக்கு அதன் இலக்கியத்தன்மை மதத்தன்மை நீக்கி பதில் சொல்ல நான் காத்திருக்கிறேன்.

மரியாதையுடன்

வசுமித்ர.