Pages

Tuesday, August 30, 2016

அறிவு நாணயமற்ற ஆதவன் தீட்சண்யா





நேற்று ஒரு தோழரிடம் பேசிக்கொண்டிருந்த போது ஆதவன் தீட்சண்யா ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு என்கிற நூல் குறித்து தொலைக்காட்சியில் பேசியிருக்கிறார் என்ற தகவலைச் சொன்னார். நானும் பரவாயில்லை நூலை முழுதாகப் படித்துவிட்டு அறிவு நாணயத்தோடு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியிருப்பார் என்று அந்தக் காணொளியைப் பார்த்தேன். ஏமாந்ததுதான் மிச்சம்.

சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு... எனும் நூலை இந்துத்துவ அம்பேத்கர் என்ற நூலோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். இதிலிருந்தே, ஆதவன் ரங்கநாயகம்மாவின் நூலை முழுதாக இன்னும் படிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ரங்கநாயகம்மாவின் நூல் ஆதவன் சொல்லியபடி அம்பேத்கரின் மேற்கோள்களை பிறாய்ந்து எடுத்து தன் மனநிலைக்கு ஏற்றார் போல் எழுதிய நூல் அல்ல. அது, அம்பேத்கரின் சாதி ஒழிப்பு ஆய்வில், காணப்படும் முரண்பாடுகளை முழுவதுமாக ஆராய்ந்து எழுதிய நூலாகும். அதே போல் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலின் வழி, அம்பேத்கரின் புத்தரைக் கேள்வி கேட்டு விவாதித்து பௌத்தம் போதாது என்பதை முன்வைத்திருக்கிறது. மாற்றாக மார்க்சியத்தை முன் வைத்து அதன் தேவையை வலியுறுத்துகிறது. ஆனால், ரங்கநாயகம்மாவின் நூலைப் படிக்காமலேயே அது அம்பேத்கரை திரித்திருக்கிறது என்ற அவரது அறிவுநாணயமற்ற அவதூறை நினைத்துதான் நாம் வெட்கப்பட வேண்டியிருக்கிறது.


இந்துத்துவ அம்பேத்கர் நூல் பற்றிச் சொல்லுகையில் அம்பேத்கர் சொன்னதைத்தான் ஆர் எஸ் எஸ் செய்கிறது என்கிற மாதிரி திரிக்கிறார்கள் என்று சொன்ன ஆதவன் ரங்கநாயகம்மாவின் நூல் என்ன வகையில் திரிக்கிறது என வெளிச்சம் போட்டுச் சொல்லியிருக்க வேண்டும். சொல்ல முடியாமல் தடுத்ததற்கு ஒரே காரணம் அந்த நூலை அவர் இன்னும் முழுமையாகப் படிக்கவே இல்லை என்பதே. ஒருவேளை படித்திருந்தாலும் நூலின் தர்க்க நியாயங்களை எதிர்கொள்ள துணிவின்றி ஊடகங்களில் அவதூறைச் சொல்லி தப்பித்தல் உத்தியை கையிலெடுப்பதே அவரால் செய்ய முடிந்த பணியாக இருக்கிறது. அப்படி அம்பேத்கரை திரித்து  ஆர் எஸ் எஸ் சொன்னது போல் ரங்கநாயகம்மா, அம்பேத்கரை எங்கு எப்படி எவரின் நலனுக்காகத் திரித்திருக்கிறார் என்றாவது சொல்லியிருக்க வேண்டும். அதையும் சொல்லவில்லை. எதையோ சொல்ல வந்து தடுமாற்றம் அடைந்து முழித்ததைத் தாண்டி அதில் வேறு விசயங்கள் ஏதுமில்லை.

நூலை ஆதவன் முழுமையாக வாசித்திருக்கும் பட்சத்தில் ரங்கநாயகம்மாவின் நூல் அம்பேத்கரை எங்கு என்ன விதமாக திரித்திருக்கிறது என்பதை ஆராய்ந்து  இதுதான் அம்பேத்கர் சிந்தனைகள் என்று ஒரு நூலோ, ஏன் நூல் கூட வேண்டாம் ஒரு கட்டுரையாவது எழுதலாம். எழுத வேண்டும். மார்க்ஸியத்தை முன்னெடுக்கும் ஒரு நூலை இந்துத்துவ நூலோடு ஒப்பிடும் அவரது கயமை வருந்தத்தக்கது.

அம்பேத்கரின் நூல்களையும் படிக்காதவர் ஆதவன் என்று உறுதியாக நாம் கூற முடியும், ஒரு நூலைப் படிப்பது என்பது அதை அறிவுக்கு உட்பட்டு ஆராய்வது, காலத்துக்கு ஏற்ற கருத்தா என்று ஆராய்வதே ஒரு நூலைப் படிப்பதாகும். இது என் கருத்து. மாறாக பைபிளை, குரானை, கீதையை தினம் தினம் பாராயணம் செய்யும் சாமியார் படிப்பு படிப்பே அல்ல. மத வாசிப்பு. தொழுகை. பாராயணம். அவ்வளவே! ஆதவன் அம்பேத்கரை விமர்சனத்துக்கு அப்பாற்றப்பட்ட கடவுளாக, அறிவுக்கு ஒவ்வாத நிலையில் வைத்திருப்பது அம்பேத்கருக்கே ஒவ்வாத ஒன்றாகத்தான் இருக்கும். மேலும் சோறு,  மானம், ரோஷம் என்ற கருத்தியல்களைக் கேள்வி கேட்கிறார். உண்மையில் இது நல்ல கேள்வி. சோறு, பணம் இல்லாவிட்டால் மானத்தோடு வாழவே முடியாது. அப்படி யாரேனும் சொன்னால் அது கண்டிக்கப் படவேண்டியதே. ஆனால் அம்பேத்கரின் எழுத்துக்களைப் பைபிள் போல் வேத பாராயணம் செய்யும் ஆதவன் அம்பேத்கரின் மான ரோஷ கருத்தியல்கள் குறித்து படித்திருப்பாரா. 

“நாங்கள் அடைந்துள்ள இழப்புக்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்பதுதான் அவர்களிடம் நான் கேட்கும் கேள்வி. மனித ஜீவன்களுக்கு அருமையிலும் அருமையானது விலைமதிப்பற்ற சுயமரியாதையே தவிர பொருளாதார ஆதாயமோ அனுகூலமோ அல்ல. நற்பண்பும் நற்குணமும் படைத்த ஒரு பெண்மணி ஒழுக்கக் கேட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை நன்கு அறிவார். எங்கள் பம்பாயில் விலைமாதர்கள் வசிக்கும் ஒரு வட்டாரம் உள்ளது. இங்குள்ள பெண்கள் காலை 8 மணிக்கு எழுந்திருக்கிறார்கள்; அருகிலுள்ள உணவுவிடுதியில் காலை சிற்றுண்டி கொண்டுவரும்படி பணிக்கிறார்கள்; ( பெண்கள் பேசும் குரலில் இங்கு டாக்டர் அம்பேத்கர் பேசுகிறார்) “ ஓ சுலைமான் ஒரு தட்டுக் கொத்துக்கறியும்(கீமா) ரொட்டியும் கொண்டுவா. அவ்வாறே சுலைமான் தேநீர், கேக்கோடு கொத்துக்கறியைக் கொண்டு வருகிறார்.ஆனால், தாழ்த்தப்பட்ட சகோதரிகளுக்குச் சாதாரண ரொட்டியும் சட்னியும் கூட கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் அவர்கள் அன்பும் பண்புமிக்க விழுமிய வாழ்க்கை நடத்துகிறார்கள்.”

இது அம்பேத்கர் சொன்ன கருத்து. இந்தக் கருத்துக்கும் பொருளாதாரச் சிந்தனைக்கும் மானம் மரியாதைக்கும் விழுமிய வாழ்க்கைக்கும், விபச்சாரத் தொழிலுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?

இதை எந்தத் தொகுதியில் சொல்லியிருக்கிறார் என்பதை அம்பேத்கரின்  எழுத்துக்கள் 7000 பக்கங்களுக்கு மேல்  இருக்கிறது  என பக்க எண்ணிக்கையைச் சொல்லும் அவரே எடுத்துச் சொல்லலாம். அல்லது ஆய்வுக்குழு அமைத்தும் சொல்லலாம்.

இந்துத்துவ அம்பேத்கர் என்று அவர்கள் திரிப்பது போல், இந்துத்துவ மார்க்ஸ் என்றோ, இந்துத்துவ பெரியார் என்றோ திரிக்கமுடியுமா? அப்படித் திரிக்க அவர்களுக்கு ஏதுவான வாசகங்கள் எதையும் மார்க்ஸோ அல்லது பெரியாரோ சொல்லியிருப்பார்களெனில் அவரே  அதை எடுத்து இயம்பலாம். அப்படி திரிப்பதன் மூலம் அவர்கள் யாருக்குச் சாதகமாக தலைவர்களை வளைக்கிறார்கள், என்ன நோக்கமென்றாவது அறியலாம். எதை எதோடு ஒப்பிடுவது என்கிற சிற்றறிவு கூட இல்லாது அம்பேத்கரை ரங்கநாயகம்மா திரிக்கிறார் என்பது அறிவு நாணயத்துக்கு அழகல்ல.

ஆதவன் பேட்டியில் சொல்லியிருப்பதாவது “ரங்கநாயகம்மாவின் நூல் அம்பேத்கரின் வாசகங்களைத் திரித்து வலிந்து பொருள்கொண்டு தீராத காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில், இவனுக்கெல்லாம் வந்த வாழ்வப் பார்த்தியா...உலகம் முழுக்க இவனைக் கொண்டாடுது என்கிற எரிச்சலுற்ற மனநிலையோடு நூல் எழுதப்பட்டிருக்கிறது’ என வலிந்து பொய் கூறும் ஆதவன் அந்த நூலை படிக்காமலேயே இது போன்ற கருத்துக்களை முன் வைத்தற்குக் காரணம், நூல் கூறும் நியாயங்களை ஏற்றுக்கொள்ளாத அவரது சுயசாதி மனப் பதட்டமும், பயமும் தவிர வேறெதுவுமே இல்லை.


மேலும் மார்க்ஸியத்தின் அடிப்படை நூல்களைக் கூட ஆதவன் வாசித்தது இல்லை என்பது அவரது உரையாடல்களை வைத்தே அறிந்து கொள்ளலாம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் பொலிட் பிரோவில் பார்ப்பனியர்கள் அதிகம் உள்ளதில் தனது வருத்தத்தைப் பகிர்ந்திருக்கும் அவர் இதுகுறித்து தானும் எழுதியுள்ளதாக கூறியிருக்கிறார். அப்படி எழுதியது என்ன?

அல்லது இது குறித்து அவர் சார்ந்த அமைப்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இது குறித்து ஏதேனும் ஒரு கேள்வியையோ, அல்லது உரையாடலையோ, எழுத்துப் பூர்வமாக விவாதமாக வைத்திருப்பாரெனில் அதைச் சுட்டிக்காட்டலாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு  எதாவது முறையான பதிலைச் சுட்டியிருந்தாலும் இணைக்கலாம். அத்தோடு பெரும்பான்மை பார்ப்பன சாதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி எனக் குறைபட்டுக்கொண்டு, உள்ளத்தில் கேள்விகளை அடக்கி வைத்திருந்த அவர், சம்பந்தப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி தலித்துக்களுக்கு எதிராக பார்ப்பனியத்திற்கு ஆதரவாக எடுத்த தீர்மானங்களை இங்கு ஆதாரத்தோடு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தக் கடமையும் அவருக்கு இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவின் பிரதிநிதித்துவத்தை எந்த அடிப்படையில் பரிந்துரைக்கலாம்.  அம்பேத்கரை அவர்கள் ஏற்றுக்கொண்டவர்களாக இருக்க வேண்டுமா? இல்லை மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்க வேண்டுமா? கட்சி கட்டுப்பாடுகளை மதிக்க வேண்டுமா? இல்லை அதையும் கழட்டிப் போட வேண்டுமா? ஒருவேளை பிரதிநிதித்துவம் செய்துவிட்டால் எல்லா விடிவும் வந்துவிடுமா என்பதை ஆய்வின் மூலம் விளக்கினால் - அது அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உதவும், அவருக்கும் உதவும், மேலும் எனக்கும் அது உதவுவதோடு, இங்கு இருக்கும் ஏனைய தலித் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைய அல்லது, தலித் கட்சிகளோடு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய ஒரு நல்வாய்ப்பாக இருக்கும்.

உண்மையில் ரங்கநாயகம்மாவின் நூல் அம்பேத்கரை வேண்டாம் என்றோ  நிராகரித்தோ பேசவில்லை. அவரது லட்சியம், போராட்டங்களைக் கணக்கிலெடுத்து மதிப்பதோடு, அவரை விமர்சனத்துக்கு உட்படுத்தவும் செய்கிறது. அம்பேத்கரை படிக்காமலேயே நீங்கள் கடவுளாக்கி வணங்குவது போல ரங்கநாயகம்மா வணங்கவில்லை. ஏனெனில் அவர் அம்பேத்கரைப் படித்திருக்கிறார். அதனால் அவரை ஐக்கியம் மற்றும் விமர்சனத்தோடு அணுகியிருக்கிறார். ஆனால் ஆதவனைப் போல் ஏற்றுக்கொண்ட தலைவரை கடவுள் இடத்துக்கு உயர்த்துவது அத்தலைவரை கீழிறக்கும் செயலே அன்றி வேறல்ல. எந்த ஒரு தலைவரையும் விமர்சனப் பூர்வமான அணுகுமுறையின் மூலமாக அணுகுவதே அவரைப் பின்பற்றவும், அவர்தம் லட்சியங்களை வளர்த்தெடுக்கவும் உதவும். மாறாக கடவுள் என்று சொல்வது, அவரை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக மாற்றிவைப்பதோடு, பாசிச கருத்தியலையும் முன் வைப்பதென்றாகிறது. இதுதான் அம்பேத்கர் விளக்கிய தலித் பார்ப்பனியம்.

காஞ்ச அய்லய்யாவின் பேட்டி ஒன்றை படிக்கையில் எனக்கு இதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. அய்லய்யா அம்பேத்கரை புத்தர், ஏசு, முகமது நபிகள், மார்க்ஸ் ஆகியோரோடு ஐந்தாவது இறைத்தூதர் என்பேன் என்று பதில் அளித்திருக்கிறார். இதைப் பதில் என்பதற்கு பதில் உளறியிருக்கிறார் என்றே நான் சொல்வேன். கார்ல் மார்க்ஸை இறைத்தூதர் என்ற வரிசையில் வைக்கும் அவரது எண்ணம் கண்டிக்கத்தக்கது. அம்பேத்கரோ பௌத்தத்தைக் குறித்து பேசுகையில் எந்த மதத்துக்கும் ஒரு இறைத்தூதர் இருக்கிறார், புத்தர் அப்படியில்லை என்பதை மத மாற்றக் காரணிகளில் ஒன்றாய், மிக முக்கியமான காரணியாய் முன் வைக்கையில் - அய்யலய்யா அம்பேத்கரையே இறைத்தூதர் என்று முன்வைப்பது அம்பேத்கரை கேலி செய்வதற்கு சமம். இந்த தொழுகை மனப்பான்மையே நேரடியாக பாசிசக் கருத்தியலுக்குக் கொண்டு செல்கிறது. அதோடு  எவர் ஒருவரையும்  விமர்சிக்க அச்சமுறும் நிலையை ஏற்படுத்துகிறது.

இந்து ஆன்மீகமே பாசிசம் என்று சொல்லுகிற போது இஸ்லாம் ஆன்மீகம், கிருத்துவ ஆன்மீகம், பௌத்த ஆன்மீகம் பாசிசம் இல்லையா? அந்தந்த நாடுகளில் கோலோச்சும் மதங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன. கருத்துச் சுதந்திரத்தை தெருவுக்குத் தெரு வைத்துக் கொண்டாட்டிக் கொண்டிருக்கிறதா? இப்படி ஆளாளுக்கு ஒரு இறைத்தூதரை நிர்மாணம் செய்தால் கருத்து சுதந்திரத்துக்கும், விமர்சனத்துக்கும் ஒரு சிலை செய்து வைத்து அதை இருட்டறையில் மூடிவிட்டுச் செல்லலாம்.




No comments:

Post a Comment