Pages

Sunday, August 14, 2016

நித்ரா.... நின் சோக நிலத்தில் விளைகிறது எனதான துக்க கோதுமை.





சூரியகாந்தியின் முகத்தோடு நீ புன்னகைக்கையில்
உழவன் போல் மகிழ்ச்சியடைகிறேன்
உனது சாயைகளைக் கண்டு நிழல்
தன்
அருகாமையை உணர்கிறது

பசித்த
மற்றும் எளிய வரிகளினூடாக நான் உனக்கு ஒன்று சொல்கிறேன்
நான் காதலிக்கிறேன்
உன் அருகாமையில்
செவ்வனே சரிசெய்து பழுது பார்க்கப்பட்ட
எனது இதயம்
உனக்கான நேரத்தை மிகத் துல்லியமாகக் காட்டுகிறது

பிரிவின் போது ஆழ முத்தமிடும் உனது உதடுகளில்
பெருங்கடல் ஒளிந்திருக்கிறதென்பதை நானறிவேன்

எனது தெய்வங்களும் எனது நிலமும்
நீயல்லா வானமும் எனக்குத் தேவையில்லை
நீயாக இருப்பதில்
என் காதல் இன்னும் வேர்பிடித்துப் பூக்கிறது
உனது சுயமரியாதைகளில்
எனது வார்த்தைகள் அகம்பாவத்துடன் நுழைய
நான் என்னை அனுமதிப்பதில்லை
எல்லா வார்த்தைகளிலும்
உனது
காதல் பரிவர்த்தனையை நிகழ்த்திக்கொண்டேயிருக்கிறாய்

சட்டமிடப்பட்ட ஓவியத்தைக் கண்டு பதறும்
ஓவியன் போல் நான் திகைக்கிறேன்
உனது
பிரிவுகளில் நான் எச்சரிக்கையாயிருக்கிறேன்

நாடோடி தனது கால்களை
கனவில் தொலைத்தது போல் திடுக்கிறேன்

நித்ரா...
நள்ளிரவில் பிரிவென்பது
விவரிக்கமுடியா கொடுமையான கொலைக்கருவி
முத்தமிடுவதைப் போலவோ
கட்டியணைப்பதைப் போலவோ
கண்ணீர் மல்கவோ நாம் ஒரு பிரிவை அனுமதிக்கக்கூடாது

பிரிவை அதன் குகையிலேயே சந்திக்கவேண்டும்
எப்போதும்
நளினம் குடியேறும் பிரிவுகளிடம்
எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்
கொஞ்சும் பிரிவுகளிடமும்...

எனது பிரிவையும்
உனது பிரிவையும் உரசிப்பார்க்கையில்
பறக்கும் பொறி எனது அந்தகத்தை குணப்படுத்தப்பட்டும்

உன்னை தேவதையென்பதற்கு பதில்
நான் சாத்தானாக மாறமல் இருப்பதற்கான
பாடத்திட்டங்களை  எனக்குக் கற்றுத் தா
எல்லோரிடமும்
காதல்
தன் சிவப்புக் கம்பளத்தை விரிக்கிறது
குருதியோடும்
கண்ணீரோடும்
நிணத்தோடும்
புன்னகையோடும்
வன்மத்தோடும் எத்தனை பாதங்கள் கடந்து போயிருக்கும்

அன்பே நமது சிவப்புக்கம்பளத்தை சுருட்டி
வனத்தில் வீசிவிட்டேன்
இனி அது பறவைகளுக்கனது

நாம் காதலிப்பதென்பது
உயிர் வாழ்வதுதான்
அதிகாரத்தின் கண்களைக் குருடாக்கிவிட்டு
உனது சொந்த ஆணவத்தை ஓங்கி முத்தமிடுகிறேன்

நிச்சயம் அது கம்பீரமாய் இருக்கும்
என்னைப் பொறுத்தவரையில்
உன்னிடம் மண்டியிடுவதென்பது
தாய்மொழி தெரியாத சிசுவின் முன்
காத்து நிற்பதைப் போன்றது
சிறு
புன்னகை
சிறிய கண்கள்

அப்படியே நிகழட்டும் அது....

எனது ஆணவத்தில் தீ கொளுத்தியெறியும்
உனது கேள்விகளை எனது கதவுகளைத் திறந்து வரவேற்கிறேன்
பரவட்டும் தீ
என் தத்துவ ஆசிரியர்கள்
கருகி சாம்பலாகட்டும்

எஞ்சிய எலும்புத் துண்டுகளைச் சேகரிக்கையில்
எனது எலும்புகள் மிஞ்சாது பார்த்துக்கொள்
நித்ரா
உனக்கு
நீ விரும்பிய
என் காதல்
உனக்கு....


No comments:

Post a Comment