Pages

Thursday, October 5, 2017

சில சொற்கள்



I
தயை செய்யுங்கள் பிரதமரே
மதம் பழங்குடிகள் வசம் இருக்கும் போது
அவர்கள் சந்தோஷமாயிருந்தார்கள்
அவர்களும் குடித்து
அதற்கும் கொடுத்தார்கள்

கவனியுங்கள்
அங்கு கடவுள் என்பது
வெறும்
‘அது’
மட்டுந்தான்

அரசின் வசம் கடவுள் வரும்போது
வணிகமாகியது
உங்கள் வசம் வரும்போது
கலகமாகியது

மதத்தை அபின் என மார்க்ஸ் சொன்னதை
கைவிட்டுவிட்டு
அதற்குக் கீழிருக்கும் வரிகளைப் படியுங்கள்
பிரதமரே
உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும்

பாழாய்ப் போன கடவுளை
தூக்கிச் சுமக்கச் சொல்லாதீர்கள்
பிணக் கனம் கனக்கிறது

பேயைச் சுமந்தலைவதை
விட்டொழியுங்கள்
கல்லறையை
இந்தியா என்றழைக்கமுடியாது

II

தாஜ்மஹாலின் பளிங்குக் கற்களால்
இராமனுக்கு கழிப்பறை கட்ட நினைக்கும்
அமைச்சருக்கு என்ன வயதிருக்கும்

இருக்கட்டும்
எனக்கு அது ஆள்பவனின் காதலாகத்தான் படுகிறது

அப்படியே
தமிழகத்தையும் கவனியுங்கள்
ஆயிரம் வருடங்களாய்
ஒரு அதிகாரச் சின்னம் கல்லாய் கிடக்கிறது

போதாக் குறைக்கு
என் சாதியரசன்
உன் சாதியரசன்
என்ற கூப்பாடும் கேட்கிறது

லிங்கத்தைக் கடாசி விட்டு
என்ன செய்யலாம் என யோசியுங்கள்

மதுரையிலும் ஒன்று இருக்கிறது

எல்லா இடங்களிலும்
மனித உழைப்பைத்தான்
மதிக்க வேண்டியிருக்கிறது
நான் கவிஞன்

சொற்களை தூக்கி அலையும் எனக்கு
அலையும் பசியோடு
கற்களைச் சுமந்தவனின் உழைப்பு மிக முக்கியம்
அவனுக்குக் கல் என்பது ரொட்டி
கடவுளோ
காதலோ அல்ல

கூலி கொடுத்து
கடவுளை நிமிர்த்தி வைப்பவன் மீது
கவிஞனுக்கு எந்த மரியாதையும் கிடையாது

எண்ணற்ற கவிஞர்கள்
கடவுளையும்
அரசர்களையும் புகழ்ந்திருக்கிறார்கள்
பாவம்
வயிற்றுப்பாடு

காதலோ
கடவுளோ
அரசோ
ஆளும் அனைத்தும்
பிரம்மாண்டமாய் நிற்பதிலேயே நிலைகொள்கிறது

பசித்த வயிற்றின் மீது முத்தமிட்டுச் சொல்லுகிறேன்
பாராளுமன்றம் என்கிற பன்றித் தொழுவத்தை
சுற்றுலாத்தலமாக அறிவியுங்கள்
மிக முக்கியமாய்
கழிப்பறையைச் சுற்றிக் காட்டுங்கள்
எல்லாம் வல்ல இந்தியா
உங்கள் பெயரால் நாறிக்கொண்டிருக்கிறது



III


தோட்டா பாய்ந்த பொழுது
வெறிபிடித்த அம்மதத்திற்கு
நான்கடி பின் வாங்கி விழும்போது
கிழவன்
ஹேராம் என்றான்

கிழவன் கூப்பிட்ட ராமன்
உங்களின் ராமன் அல்ல
கம்பனின் ராமன்
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை;
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே,
இல்லாரும் இல்லை
என்ற தேசத்தின் ராமன்

உங்கள் ராமன்
இந்துத்துவ பட்டறையின்
இரும்புத் தச்சன்

சூலங்களையும்
ஈட்டிகளையும் செய்யும் குருட்டுத் தச்சன்


உங்கள் ராமன்
அனைத்தையும் அடித்துப் பிடுங்கும் ராமன்
ஏழைகளில் வயிற்றில் மிதிக்கும் ராமன்
அனாதைகளைத் தீயிலிடும் ராமன்
முதியோர்களை செல்லாக் காசுகளாய் தெருவில் எறியும் ராமன்
இளைஞர்களின் உதிரத்தை உதடு சிவக்க உறியும் ராமன்
எண்ணற்ற விதவைகளின் ராமன்


துரதிருஷ்டம் பீடித்தோரே…
இராமனைக்  கடவுள் என்பதை விட
நாம்
பிரதமர் என்றே அழைக்கலாம்

ராமன்
முதலாளிகளின் கடவுள்
குடிகளின் எமன்


IV


தனிமையிலிருக்கும் பிரதமர்
என்ன யோசிப்பார்

பங்குச்சந்தைத் தளகர்த்தர்களில் அந்தப்புரங்கள் குறித்தா
சில்லறைத் தட்டுப்பாடு பற்றியா
தேசிய இனப்பிரச்சினைகள் குறித்தா
சிறுவர்களடிக்கும் மூத்திரம் போல் பிரியும் நதிகள் குறித்தா

ஜக்கிவாசுதேவின் நடன அசைவுகளில் லயம் தப்பியதை நினைப்பாரா
மதத்தின் முக்காட்டில் ஒழிந்திருப்பது கடவுளல்ல
சைத்தான் என்பதை அறிவாரா

சைத்தான் புன்னகைக்கும் போது
கண்ணாடி பார்ப்பாரா

பிரதமர் யோசிக்கிறார்
தன்னுடை குறித்து
தன்னைக் குறித்து
தன்னை மட்டும் நினைத்து
தனக்குத்தானே யோசிக்கும் பிரதமர்

தன்னைப் பற்றி என்ன யோசிப்பார்
முதலாளி வீட்டு நாய்க்குட்டிகளின்
வால்கள் குறித்து யோசிப்பாரா

கறிவகைகளை மென்று துப்பும்
அந்நாயின் கடைவாயைக் கவனிக்கும் போது
தன் வயிற்றை யோசிப்பாரா

இருக்கிறது
நாய்களுக்கும் நரிகளுக்கும்
கரப்பான் பூச்சிகளுக்கும் கூட வயிறு இருக்கிறது
அவைகளும் வேட்டையாடுகிறது

மனிதர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் பிரதமரே

எத்தனை நாளைக்கு வித்தைகளைக் காட்டுவீர்கள்
பசித்த வயிறுகளின் எக்காளம்
வேட்டைக்கு வித்திடுகிறது

பசித்தவர்கள் வேட்டையாடும்போது
பசி மட்டுமே இருக்கும்
தேசமோ பிரதமரோ அங்கு இருக்கமுடியாது
பசித்த மனிதனுக்கு சோறிடும்
இன்னொரு  மனிதன் அங்கிருப்பான்

பிரதமரான  உங்களுக்கு
முதலாளி தேவோ பவ

எங்களுக்கு
அன்னம் தேவோ பவ



No comments:

Post a Comment