Monday, November 29, 2010

நந்தலாலா : தாய்மைச் சுமை


அன்னை பூமி, தாய் நாடு, தாய்மை, போன்ற கருத்தியல்களைச் சுமந்து வந்திருக்கும் இன்னுமொரு திரைப்படம் நந்தலாலா. காலங்காலமாய் பெண்ணின் மேல் ஆண்கள் தூக்கிவைத்த பெருஞ்சுமையென தாய்மையைத்தான் கருத வேண்டியிருக்கிறது. ஆண் பெண்ணை மதிக்கவேண்டுமானால் ஒன்று கற்போடு இருக்கவேண்டும் இல்லையெனில் தாய்மையோடு இருக்க வேண்டும். இயக்குனர் நிறைய படித்தவர் என்பதை நான் அறிவேன் அவரும் தன்னை இலக்கிய வாசகன் என சொல்லிக் கொள்ள எந்த இடத்திலும் தயங்கியதே இல்லை. அது குறித்து நான் பெருமைப் படுகிறேன்.

படத்தில் எந்த இடத்திலும் பெண்கள் காட்டப்படவேயில்லை. அவர்கள் காட்டப்படுவதெல்லாம் தாய்மையின் வாயிலாகத்தான், பெண்ணுக்கு தாய்மையைத் தவிர வேறு எந்த குணமும் அவர்களை உயரத்துக்கோ அல்லது வெளிச்சத்துக்கோ அவர்கள் விரும்பும் சுதந்திரத்திற்கோ அழைத்துச் செல்லப்போவதில்லை என்று மிக உறுதியாகக் காட்டப்படுகிறது.

படத்தில் கதைநாயகர்கள் இருவரும் அப்பா ஓடிப்போனதை ஒரு சிறு நகைச்சுவையாகக் கையாண்டு விடுகிறார்கள். இதன் மூலம் ஆண்கள் என்றாலே ஓடுகிறவர்கள், பொறுப்பு பற்றி அவர்கள் எதையும் கவலைப் படப் போவதில்லை, அப்படி படவேண்டிய அவசியமும் இந்த ஆண்மையச் சமூகத்தில் இல்லை என்று புரிகிறது. பெண்கள்தான் அதைக் கண்டுகொள்ளாது தனக்கு சமூகம் வழங்கியிருக்கும் தாய்மையை பெரும் படிமமாக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தூக்கிச் சுமக்க வேண்டும்.

தாய்மையினால். அந்தக் கருத்தினால் ஆண்களுக்கு பெருத்த லாபம் உண்டு. அவன் சுதந்திரமாக எங்கும் திரியலாம், எதையும் செய்யலாம், பொருள் சம்பாதிக்கிறேன் என்ற பெயரில் சுதந்திரத்தின் முகத்தில் ஆழ முத்தமிடலாம்...ஆனால் பெண்ணுக்கு...இதில் எதுவும் கிடைக்கப் போவதில்லை.

பாஸ்கர் மணி அகியின் தாயைச் சந்திக்கும் இடத்தில் அவள் தன் சூழலை விளக்குகிறாள் அதை அமைதியாகவும், இயலாமையோடும், வெளியே நிற்கும் அவள் மகனின் முகத்தை எண்ணி மனதில் துக்கத்தோடும் கேட்கும் பாஸ்கர் மணி அவள் சொல்லி முடித்ததும் சட்டெனக் கன்னத்தில் அறைந்து விட்டு வெளியே செல்லுகிறான், வெளியே இருந்து உள்ளே ஓடி வரும் அகியை அணைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டுச்செல்ல எத்தனிக்க அகி பிடியிலிருந்து மீறி சென்று வாசலில் ஒரு குழந்தை இருப்பது கண்டதும் தன் தாய் அவ்வீட்டில் இல்லை என்று முடிவு செய்கிறான்...பாஸ்கர் மணி தன் தாயைக் காட்டுகிறேன் வா என அழைத்துச் செல்கிறான். நிற்க அப்படி அகியின் தாய் என்ன சொன்னாள். பார்வையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று காட்சி விளக்கப் படாமல் நகர்கிறது. நான் விளங்கிக்கொண்டது அவள் தன்னுடைய துயரவாழ்வைச் சொல்லியிருக்கிறாள். வேறொரு ஆணுடன் வாழநேர்ந்த சூழலைச் சொல்லியிருக்கிறாள். மணி அறைந்து விட்டு வெளியே வந்திருக்கிறான். இதில் நான் இன்னொன்றும் புரிந்துகொண்டேன் அவள் தன் இயலாமையை பாஸ்கர்மணி காலில் விழுவதன் மூலமும், கூனிக் கூறுகி கூசி நிற்பதன் மூலமும் விளக்கி விட்டாள். மணிக்கு அவள் செய்தது தவறென்று தெரிந்து அடிக்கிறான். வெளியேறுகிறான்...இதே மணிதான் தன் தகப்பன் பற்றின எந்தக் கேள்வியும் இல்லாது படம் முழுக்க வருகிறான். ஆண் செய்வதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு சுதந்திரம் உண்டு பெண்ணுக்கு ஒன்றே ஒன்றுதான் அது தாய்மைச் சுமை. அது மனநலம் பிறழ்ந்தவனுக்கும் மாறாமல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் இரண்டு ஊர்களுமே அன்னைவயல், தாய்வாசல் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அதிலும் தாய்மை. இதைச் சற்று அரசியலாக்கினால் அன்னை நாட்டைக் காப்பீர், தாய் நாட்டைக் காப்பீர் என்று அரசியல் வாதிகளின் வெற்று முழக்கம் புரியும். இந்த முழக்கம் நாட்டில் வாழும் ஆண்களை மட்டுமே நோக்கி எல்லாக்காலங்களிலும் விடப்பட்ட அறை கூவல். இவை பெண்களுக்கான வார்த்தை இல்லை, (பெண்களுக்கு ஆண்களை நோக்கி எழுப்ப எக்கசக்க முழக்கங்கள் உள்ளது) அன்னை நாட்டை இன்னொருவன் ஆளவிடுவது அன்னையை மற்றொருவன் புணர்வதற்குச் சமம். இதனால்தான் ஆணுக்கு அவன் அன்னையைப் பற்றி இழிவாக பேசினால் வெறியேறுகிறது. இதில் ஏற்படும் வெறி தானொரு தாய்ப்பாசத்தினால் ஆளப்பட்டவன் என்பதல்ல நான் ஒருத்தனுக்கு பிறந்தவன் என்ற ஆணாதிக்கக்கூற்றே. பெரும்பாலும் வசவுகள் தாயின் கற்பை மட்டுமே ஏசும் சொற்களாக உள்ளதையறிவோம், (உதாரணத்திற்கு தேவிடியாமகனே ) ஆண் தன்மீது கொண்ட நல்லொழுக்கத்தை ஆண்மையைக் காப்பாற்ற தாய்மை ஒரு கருவி மட்டுமே.

நாய் வளர்த்தவனுக்கு மட்டுமே விசுவாசம் காட்டும் அதன் நன்றி பொது குணமல்ல, அதன் அறம் நன்றியல்ல. தீ எத்தேசத்திலும் எந்த மூலையில் இட்டாலும் சுடும் அதன் தர்ம்ம் சுடுவது. அதுதான் அதன் பொது அறம் ஆனால் தாய்மை அப்படியல்ல, அவள் தன் குழந்தையை மட்டுமே விசுவாசமாக வளர்ப்பாள். இன்னொரு குழந்தையை அல்ல, எல்லோருக்கும் அவரவர் அம்மா மட்டுமே விசுவாசத்துக்குரியவர்கள், இல்லையென்றால் அம்மா வயதிலுள்ள நடுத்தரவயது பெண்மணியின் மேல் ஒரு ஆணால் காமப் பார்வை பார்க்கமுடியாது. இது ஒரு பொருளாதார உறவு. இதை அந்தளவில் புரிந்து கொண்டால் போதும்.( இளைஞர்கள் பார்க்கும் பெரும்பாலான பாலியல் படங்களில் அவர்களின் அன்னை வயதுள்ளவளைத்தான் அவன் ஆண்டி (aunty) என்ற பார்வையோடு பார்க்கிறான்) இதைத் தாய்மை என்றாக்கி தனக்குகந்தவாறு அதை உன்னதப்படுத்தி ஆண் எல்லாக் காலங்களிலும் தன் சுதந்திரத்தைத் தக்க வைத்துக்கொள்கிறான். பாஸ்கர் மணிக்குக் கூட அன்னை தன்னை பார்க்க வரவில்லை என்ற கோபம் மட்டுமே படத்தின் இறுதி வரை நீள்கிறது. தகப்பன் ஞாபகத்துக்கு வராத காரணம் தகப்பன்கள் எல்லாமே அப்படித்தான் என்ற பொதுபுத்தி அவனை கேள்விகேட்கத் தோன்றவிடாமல் செய்திருக்கிறது.

படம் முழுதும்ஆண்மையப்பார்வையிலேயே நகர்ந்திருக்கிறது. யாருக்கும் பெண்ணின் சுதந்திரம் குறித்தான கேள்விகள் தாய்மையைத்தாண்டி நகரவிடாது காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது . ஒரு காட்சியில் உயிரை, கற்பைக் காப்பாற்றும் பாஸ்கர்மணியிடம் ஒரு பெண் கேட்பது நீங்க என்ன ஜாதி...ஒரு வேளை இது நிஜமான நடந்த சம்பவமாகவே இருந்தாலும் அதை ஏன் அவ்வளவு அழுத்தமாகக் காட்சிப் படுத்த வேண்டும். பெண்ணும் ஜாதிய உணர்வால் தூண்டப்பட்டிருக்கிறாள் என்பதாலா, உண்மையில் அவள் கற்பழிக்கப்பட்டு அங்கேயே கொலை செய்யப்பட்டிருப்பாள் .காப்பாற்றியதற்கு சிறிய நன்றி கூட சொல்லமுடியாத அளவிற்கு ஜாதி அப்பெண்ணை ஆளாக்கியதை (அவளுடைய குழந்தை கதறிக்கொண்டிருக்கிறது. ஒடிப் போய் குழந்தையைத் தூக்கியவள் குழந்தையைக் கொஞ்சாமல் கேட்கும் கேள்வி தம்பி நீங்க எந்த ஜாதி)இயக்குனர் பதிவு செய்யும் நுணுக்கம் ஏன் ஆண்களின் பொறுப்பற்ற தனத்தை சிறு அளவிலும் பதிவு செய்யவில்லை. கேள்வி எழுப்பவில்லை.

எழுப்ப முடியாது, அப்படி எழுப்பினால் அவன் தான் செய்யும் இழிவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் அது தாய்மையை தூக்கிப் பிடிக்க முடியாததாக செய்து விடும், அகி அம்மா செய்தது நியாயம்தானே என்று கேட்க வைத்து விடும். பாஸ்கர்மணியின் சிறு வயது மனநிலை பற்றி படத்தில் சொல்லவில்லை. பாஸ்கர் மணி வளர்ந்து பெரியவனாகி என்ன செய்தானோ அதைத்தான் தாயும் அவன் சிறுவயதில் மனநலம் பிறழ்ந்தபோது செய்திருக்கிறாள், அதைத் தவறென கடைசி வரை நினைத்து அன்னையைக் கன்னத்தில் அறைவேன் என அன்னையைக் கடைசிக்கணம் காணும் வரை வைராக்கியத்தோடு இருக்கும் மணி அன்னை பைத்தியமாய் இருப்பது கண்டு அடைவது தாய்மைப் பாசத்தினால் அல்ல, மனச்சமாதானத்தினால்தான். பாஸ்கர் மணியும் அன்னையை மனநலம் பிறழ்ந்தோர் இல்லத்தில்தானே சேர்கிறான் இதைத்தவிர வேறு மாற்று அவனுக்கு என்ன இருக்கிறது. இதைத்தான் நான் ஆண்மையப் படம் என்கிறேன். ஆண் தன் தாய்க்கு ஏங்குவது படம், முழுக்க பல்வேறு பாத்திரங்களின் வழியாக அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்பட்டு பெண்ணுக்கான தாய்மையை என்னவாக இருக்கும் என்று எந்த இடத்திலும் காட்டாமல் செய்திருக்கிறார். அகியின் அம்மாவுக்கு இன்னொருத்தர் மூலமாக வந்த குழந்தையின் வாழ்வும் இதனால் பறிபோய்விடக்கூடாதே என்ற தாய்மை கூட தடுத்திருக்கிறலாம். பாஸ்கர் மணிக்கு தன் சக நாயகன் ஏமாற்றப்பட்டுவிட்டானே என்று கூட அறைந்திருக்கலாம். அகியின் அம்மா என்ன சொந்த சுகத்திற்காகவா அப்படிச் செய்தாள் புரியவில்லை. கன்னித்தாய்தான் கடவுளுக்கும் வேண்டியிருக்கிறது, மதத்திற்கும் வேண்டியிருக்கிறது, ஆணுக்கும் அதுதான் தேவைப்படுகிறது. கதை நாயகன் தன் அன்னை மனநலம் பிறழ்ந்து இருப்பது கண்டு அவளைத் தன் கையால் தூக்கி ஒரு இறங்கற்பா பாடத் தோதாக அண்ணன் மகள் தாயைக் கட்டி வைத்திருந்த சங்கிலியைக் கழற்றுகிறாள். பாஸ்கர் மணி பாடத்தொடங்குகிறான். நன்று. எல்லாப் பாத்திரங்களையும் விட பாஸ்கர் மணி தனது தாய் அபிமானத்தைப் பாடலின் மூலம் விளக்கி விடுகிறார். தாயை மன நலம் குன்றிய நிலையில் பார்த்த அவருக்கு மனம் தெளிந்து விடுகிறது. தாய் அப்படியே விடுதியில் சேர்க்கப்படுகிறாள். பின் விட்டுச் செல்வது தன் மகன் என்றோ அல்லது தன்னைக் கவனித்த ஒருவன் என்றோ அக்கறையுடன் அவனது கையைப் பிடிக்கும் தாயை பாஸ்கர் மணி யதார்த்தம் புரிந்து அங்கேயே ஊசி போடச்சொல்லி விட்டுச் செல்கிறான். பாஸ்கர் மணியின் அண்ணன் கதாப்பாத்திரம் யதார்த்தமற்றவர். அன்னைப் பாசத்தை என்ன செய்வதென்று காரணம் புரியாது கைபிசைந்து தன்னுடனேயே வைத்திருக்கிறார். கதை நாயகன் வந்து அன்னைப் பாசத்தை அழகாகப் பாடி முடித்து, இறுதியில் தான் அதுவரை மன நலம் குன்றியிருந்தவன் என்பதை உடல் மொழியின் மூலம் காட்டியவர் இப்பொழுது தெளிந்தவன் எனக் காட்டி பலூன் விற்கிறார். சிறுவனுக்கு ஓசியில் பலூன் தந்து விலை மாது பாத்திரத்தை அர்த்தங்கள் விளங்கா புன்னகையுடன் பார்த்து முதுகு காட்டிச் செல்கிறார்.

படம் முடிவடைகிறது.

சிறுவன் தன் தாயை இன்னொரு ஆணுடன், ஒரு குழந்தையுடன் கண்டதும் தன் தாய் தவறானவள் என்பதைப் புரிந்துகொள்கிறான் என்பதை அவன் காட்சியின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை கையில் வைத்திருந்த அன்னையின் புகைப்படத்தை வீசிவிடுகிறான். கன்னித்தாய் பட்டம் காற்றில் பறக்கிறது. வேகமாக ஓடி வந்து விலைமாது பாத்திரத்தை கன்னத்தில் மாற்றி மாறி முத்தம் கொடுக்கிறான்...அவன் எதிர்பார்த்த ஒழுக்கமான தாய், தன்னை வரவேற்கும் தாய் என்ற எதிர்பார்ப்புகளை அகியின் தாய் நொறுக்கிவிடுவதால் வரும் விளைவு இது. ஒரு சிறுவனுக்கும் ஆணாதிக்க்க் கூறுகளை பால்யத்திலேயே பதியவைத்து விடுவதை புரிந்துகொள்ள முடிகிறது

என்னால் இசை பற்றிப் பேசமுடியுமென்றால் அது இளையராஜாவைத் தவிர்த்து பேசமுடியாத காரியம். அவரின் ரசிகன் நான். ஆனால் இந்தப்பட்த்தில் அவர் செய்திருப்பது இசை அல்ல. வந்தேன் பேர்வழி போனேன் பேர்வழி. அவ்வளவே. அவர் இசையமைத்து முழுமனதுடன் நான் வெறுத்த இசையமைப்பாய் இப்படத்தையே காரணம் காட்டுவேன். (பரதன் இயக்கிய ஆவாரம் பூ திரைப்படத்தின் அறிமுகப்பாடலும் தளபதி பட்த்தின் கதை நாயகன் அம்மாவைப் பார்த்ததும் வரும் பின்னணி இசையையும் நினைத்து நானே என்னைத் தேற்றிக் கொண்டேன்)

இறுதியாக ஆணுக்குத் தேவை அன்னை, சகோதரி மனைவி தோழி இப்படிமங்களேதானே தவிர சுதந்திரமான பெண்ணல்ல. அப்படி இருக்கும் பட்சத்தில் அவனுக்கு பெண் உபயோகப்படப்போவதில்லை.

படமும் அன்னையைப் பற்றியானதல்ல, ஆண்தன்மையைப்பற்றியது.

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...