Saturday, February 19, 2011

இளவரசிக்கும் அடிமைக்குமான இவ்வுரையாடலில் எவ்வார்த்தையில் துளிர்விட்டது காதல்.




இளவரசிக்கும் அடிமைக்குமான இவ்வுரையாடலில் எவ்வார்த்தையில் துளிர்விட்டது காதல்

காலம் இருளாயிருக்கிறது அடிமையே.
ஆம் இளவரசியே
இருள் வாசனையாகவும் இருகிறது.
அடிமையே நான் அறிந்து உனக்கு வாசனைப் புலன்கள் அடைத்து விட்டதாகவே எண்ணினேன்.

ஆம் இளவரசி. உங்கள் வலிமை பொருந்திய நா, அடிமையின் முன் எப்பொழுதும் சற்றும் சஞ்சலமில்லாது, உண்மையை உரைப்பதாகவே இருக்கிறது. இளவரசி தன் புருவத்தை உயர்த்தத்தொடங்கினாள்.
அடிமை தோள்களைத் தளரச்செய்து இயல்பாய் குனிந்து இளவரசியே நான் நிற்கலாமா. இளவரசி தனங்களை குழைத்து ம்என்றாள்.

அடிமை மண்டியிட்டபடி இளவரசி... சொற்களை சைகையால் இசைத்து, அதன் அர்த்தங்களை இறுக வைக்கும் தங்களது இரு புருவங்களில் இடது புற புருவத்தை இறக்குவீர்களானால் நான் உங்கள் முன் பயமற்றுப் பேசமுடியும். பேசு அடிமையே. முதலில் இளவரசியின் முகம் பார்த்து பேச நினைத்தவன் பின் பார்வையை பூமிக்கு இறக்கி.. நான் உங்கள் நாவில் விளையும் நிமிர்ந்த சொல்லுக்கு எப்பொழுதும் தலைவணங்குபவன். என் கண்கள் எப்பொழுதும் அடிமைக்குண்டான துயருடனே இருப்பதை தாங்கள் அறீவீர்கள். அடிமையின் முன் மட்டுமல்ல பேரரசர்களின் வாளின் முன்னும் உங்கள் குணங்கள் மணம் வீசத் தயங்கியதேயில்லை. உங்கள் அலங்காரங்கள் எப்பொழுதும் உங்களுக்கானதாகவே இருக்கிறது. எவர் பொருட்டும் நாணாத சொல்லுக்கு மட்டுமே உங்கள் இதழ் திறக்கிறது.

இளவரசி அடிமையின் பாதவிரல்களைப் பார்ப்பது தனக்கிழுக்கு என நினைத்தவாறு, எனக்குப் புரிகிறது அடிமையே நீ வலியறிந்தவன். கண்களை உள்ளுக்கிழுத்தபடி அடிமை சொல்லத்தொடங்கினான்.

மன்னித்துவிடுங்கள் இளவரசி நான் அடிமை என்று எப்பொழுது எண்ணத் தொடங்கினேனோ, அப்பொழுதே என்னை நான் தனிமைக்கு பருக கொடுத்தேன். தனிமை, அகண்ட வாய்களையும் பெரும் கூரான அம்பெனச் சுழலும் நாவையும் கொண்டது. அதன் பற்கள் கனவுகளையும், கனவு காணும் விழிகளையும் கசக்கிச் சாறு பிழியும் தன்மையும் கொண்டது.

ஆம் இளவரசியே... அஃது, உள்ளது உள்ளபடி முதலில் என் விழிகளைத்தான் காவு கொண்டது. அது வலிதரும் விதத்தில்தான் என்னை வந்தணுகுமென ஏமாந்து என் உடலில் வலிமையேற்றி, எதிர்க்கும் துணிவோடு காத்திருந்தேன். முட்டாள் என்று என்னை எனக்கு அது மிகவும் வன்முறையோடு அடையாளப்படுத்தியது. அடிமையின் சொற்களை தற்சமயம் கேட்கும் நிலையிலிருந்த இளவரசி, அவன் உடலைப் பாராது, வனமெங்கும் பச்சை இலைகளை வரைந்து வைத்திருக்கும் வனத்தைப் பார்வைக்கு வைத்தபடி ஏன் அடிமையே எப்படி அதை அனுபவித்தாய் என தன் வார்த்தையை முடிக்கையில்,
தற்சமயம் கேட்கும் அடிமை தன் தலையை வானம் பார்த்து குவித்தபடி தொடங்கினான்.

இளவரசியே... ஒரு அடிமை அறிந்ததை விட இளவரசி நீங்களும் உங்கள் புலன்களும் அனுபவித்தவை ஏராளம். ஓர் அடிமை சொல்லி தாங்களுக்கு தெரிய வேண்டியது ஒன்றுமில்லை. இருந்தாலும் இவ்வடிமையின் சொற்களுக்கு அமைதி காக்கும் உங்கள் பேரன்பில் விளையும், நெற்கதிரொத்த அன்புக்கு நானும் என் வார்த்தைகளும் இருப்பதில் ஆனந்தமடைகிறேன். கேளுங்கள் இளவரசியே மன்னித்து விடுங்கள். கேளுங்கள் என அகம்பாவத்தோடு சொல்லியது தவறுதான். கேளுங்கள் என நான் சொன்ன என் அகம்பாவத்தை மன்னித்து விடுங்கள் சொல்கிறேன் எனத்தொடங்கி சொல்லியிருக்க வேண்டும்.

நிறுத்திக்கொள் அடிமையே.. உன் பணிவான சொற்களை. உன் உடம்பில் பாயும் குருதியின் வெளிச்சம் என் நிழலால்தான் என்பதை நீ எனக்கு ஞாபக மூட்டவேண்டியதில்லை. கொடுப்பவளுக்குத் தெரியும், உள்ளங்கையில் ஒளிந்திருக்கும் பொருளின் இறுக்கம்.

நன்றி இளவரசியே உங்கள் இதழால் என்னை மன்னித்ததற்கு. நான் தனிமையை எனக்கு என் உடலுக்கு, என் வாக்கிற்கு அறிமுகப்படுத்தியபோது, அது கொடுங்காட்டின் ஒற்றை உடல் கொண்ட சர்ப்பமாக வழிந்து நெளிந்து கொண்டிருந்தது. அதன் கூரிய பற்கள் எப்பொழுது பதியுமோவென என் தசைகள் புணர்ச்சிக்குத் தயாராவது போல் நடுக்கத்துடனே, அல்லது எதிர்பார்த்தபடி தசையை தின்னுமோ என்கிற அச்சம் தவிர வேறெதுவுமில்லை. ஆனாலும் தனிமை எனக்கு உற்ற துணையாகத்தான் இருந்திருக்கவேண்டும்.

இளவரசி கரும் விழிகளால் அடிமையின் உடலை ஒருமுறை வெறுப்பும் கசப்பும் நிரம்பித்துள்ளும் பார்வையால் நோட்டமிடுவதையும், உணர்ந்த அடிமை, தனிமைதான் இப்பொழுது தன்னை கவ்வியிழுக்கிறதென உணர்ந்து தசைகளை இறுக்கிக்கொண்டபடி இளவரசி அருகில் பயமின்றி தனிமை தன்னுடலில் எப்படி பயமின்றி ஆட்சிசெய்யமுடியும் என்ற குழப்பத்தோடு நிமிர்ந்தவன் விழிகளை மறைத்துக்கொண்டிருந்தது, இளவரசியின் கரும்நிற பாவைகள்.

திடுக்கிட்டபடி கால்கள் உதற இளவரசி... என்ற சொல்லுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் தத்தளிப்பும் பயமும் ஒருசேர ஆட்டிவைக்கும் அவனுடலை திருப்தியோடு விழிகளால் விழுங்கியவாறு, தான் அவன் பயத்தை உண்டு வாழ்வதை அவனுக்கு காட்டிக்கொடுக்கக்கூடாதென்ற சிறு விதியுடன் ஏன் அடிமையே உரையாடலில் எடுத்துக்காட்டென நீ சொன்ன புணர்ச்சி என்கிற வார்த்தையை எப்படி அச்சத்துக்கு நிறையான சொல்லாக முன்வைத்தாய், அது வெறும் வார்த்தைதானா,  அல்லது அனுபவத்தின் சதையறிந்த சொல்லா, இல்லை என்னுடலை அவ்வார்த்தையின் முன் வைக்கும் உன் விருப்பமாம். என்றாள்.

தயங்கி தன்னுடலை தானே அறுவெறுப்போடும், தானே அப்பார்வையை தன்னுடலுக்கு தன் விருப்பமின்றித் தருவதால் கூசிச்சுருங்கும் நரம்புகளையும் அகத்தால் பார்த்தபடி மனதின் பற்களால் தான் கூறிய வார்த்தை, இளவரசியின் ஆளுமை உடலில், திமிந்த தசையின் நுண்ணிய துவாரத்தில் சொறுகிவிட்டது. இப்பொழுது வந்து வீழ்ந்தது, துவாரத்தில் சொறுகிய வார்த்தையின் வழி கசியும் சிறு நிணத்துளியே, எனபதுடன் தான் காவு கொள்ளப்படுவோம் என்ற உறுதியான சிந்தனையுடன் கெண்டைக்கால்களை இறுக்கமாக்கி மரணத்தின் முன் ஒன்றும் செய்ய இயலாது, காலம் தோறும் முயன்று அதன்முன் தோல்வியை வைத்துவிட்டுப்போன தன் மூதாதையரை நினைத்து, ஒரு துளிக் கண்ணீர் சிந்தினால் கூட இளவரசியின் முன் அடிமை உணர்ச்சியைக் காட்டக்கூடாது என்ற அடிமையின் அகராதி மனதில் விரிந்து, காற்றில் படபடத்தலைய கன்னங்களால் காற்றை உள்ளுக்கிழுத்து. அடிமை பிதற்றத் தொடங்கினான்.

இளவரசி... ஒரு அடிமை தன்னைக் கொல்லுங்கள் என்றோ, அல்லது தண்டியுங்கள் என்றோ ஆள்வோருக்கு வேண்டுகோள்களாகவோ விருப்பமாகவோ, அல்லது தன்னிச்சையாகக் கூடக் கூறக் கூடாதென்பதையும், நீங்கள் உங்கள் தகுதியையும் தாண்டி எளிய ஜீவன் என்ற கருணையோடு பார்க்கும் என்னுடலும் மனமும் அறியும் தேவி. நான் பிழை செய்தது உங்கள் அன்பின் பார்வையில் எப்படி என்னுடல் மீறி விழுந்து பதிந்தது என்பதையறியா என் அகத்தை சுட்டுப்பொசுக்குங்கள் உடலை காகங்களுக்கு உங்கள் தேச எல்லை தாண்டி கொண்டு செல்லச் செய்து கொத்தி உண்ணவிடுங்கள். வார்த்தைகளை மேலும் மேலும் இறைப்பதால் தன் சாவினால் கூட இளவரசியை திருப்தி செய்யாமல் போய்விடக்கூடும் என்ற பதைபதைப்பில் தன் நாவைத் தின்ன வரும் வார்த்தைகளை பற்களால் அரைத்து விழுங்கியபடி அமைதியாகி கண்கள் தாழ தரையைப் பார்த்தபடி நின்றான் அடிமை.

Tuesday, February 8, 2011

தேகம் - நாவல்* விமர்சனம்.




 “கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளை முனியாண்டியின் நாவலுக்கு எழுதியிருக்கும் தனது விமர்சனத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களை இணைத்துத் திரித்து தகிடுதத்தம் செய்திருக்கிறான். அந்தச் சம்பவங்களை உனக்கு உள்ளது உள்ளபடி சொல்லப்போகிறேன் கேள்.”
                                                                       -ஸீரோ டிகிரி. (55)

கதையில் வரும் பாத்திரம் தர்மாவுக்கு சுயமாக சுயமைதுனம் கூடச் செய்யத் தெரியாது என்பது ஒட்டு மொத்த வரிகளினாலும் தெரிகிறது. அவனுக்கு பெண்களைக் கண்டால் பிடிக்கும். ஆனால் வயாதன உடல் ஒத்துழைக்காது, பெண்களை உடல்களால் அணுகமுடியாது வெற்று வரிகளால் அணுகத் தொடங்கும் நிலையே தர்மாவுக்கு வாய்க்கிறது.

தர்மாவுக்கு பன்னி பிடிக்கவும் தெரியாது. பன்னி பிடிப்பது அற்புதமான கலை. உண்மையில் ஆசிரியர் பன்றிகளையே பன்னி என்று தவறாகச் சொல்கிறார் என்று நினைக்கிறேன். பன்றி என்று சொல்லுகையில் அது ஒரு விலங்கு என்றே வாசக மனம் புரிந்துகொள்ளும். ஆனால் பன்னி என்று சொல்லும்போது கூடவே பிய்யும்  மணக்கும்.

இது ஒன்றே போதும் ஆசிரியரின் பன்றி வெறும் கறிப்பன்றி என்று வாசகன் உணர. பன்றியை பொதுவாக வளர்த்து அறுப்பார்கள். ஆனால் பன்னி சுதந்திரத்தின் அடையாளம். அதை வேட்டையாடுவதைத் தவிர வேறு வழியில்லை. மற்றும் பன்றிகளை வளர்ப்பவர்கள்  பன்றிகளுக்கு உயர் ரக காய்கறிகளையே உணவாக வழங்குவர். பன்னிகளுக்கு மலத்தை படைக்க படைக்க முடியாது. அதிகபட்சம் பன்னிகளுக்கு குளுதாடித் தண்ணீர்தான். அதைச் சுமந்து செல்வது என்பது, கடக்கும் தெருவிலுள்ள அனைவரின் நாசியில் பன்னியின் மணத்தை மட்டுமல்லாது சுழற்றிய வண்ணம் இருக்கும் அதன் வால் உட்பட சித்திரமாய் வரும். இறுதியாக பன்றி என்பது பன்னிகளை அவமானப்படுத்தும் சொல்.


காதலைப் பற்றிக் கேட்டால் தர்மாவுக்கு கிழவிகளே ஞாபகம் வருகிறார்கள். தர்மாவுக்கு வதை என்பது உடலில் கூர்மையான அல்லது மொன்னையான ஆயுதங்களை உடலில் குத்திக் கிழிப்பதே. அதையே அவர் வன்முறை என்று நினைக்கிறார். சில சிறுவர்கள் ஓணானை வதைப்பதை பார்த்திருக்கலாம்.

ஒரு உடல் தன் கைக்குக் கிடைக்கும் பட்சத்தில் கருத்துக்களை வைத்து அவ்வுடலைக் கிழிப்பது தர்மாவின் தத்துவம். கொலை செய்வது தர்மாவுக்கு குப்பி கொடுப்பது போன்ற செயல்தான். ஒட்டுமொத்தமாய் நாவல் என்றழைக்கப்படும் இப்புத்தகத்தில் தர்மா தன்னை நிரூபிக்க மட்டுமே எண்ணுகிறான்.

தர்மாவின் கவிதைகள் வாரமலர் புத்தகத்தில் 100 ரூபாய் பரிசு பெறுவதற்கு போடும் போட்டிகள் ஏராளம்.

உடலை தேகம் என்று நாவலாசிரியர் நம்பியதால் வந்த வினை இது. நாவலாசிரியர் தர்மாவைப் பற்றி எழுதும்போது தனது நினைவுகள் அவரைத் தொந்தரவு செய்வதை நாவலை வாசிக்கும் வாசகன் உணர முடியும். குப்பி கொடுத்தாவது தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை தேகத்தின் வரிகள் முழுக்க சிதறிக் கிடக்கிறது.
ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தான் 3 வருடங்கள் ஆண் விபச்சாரகனாய் இருந்ததையே தேகம் எனும் நாவலாய் எழுதிவருகிறேன் என குறிப்பிட்டார். அப்பொழுது இதில் வரும் தர்மாவுக்கு பெண்கள் பற்றின கனவுகளை ஆசிரியர் சாரு நிவேதிதாவின் கனவுகளாகக் கொள்ளலாம்.

இயக்குனர் மிஷ்கின் நாவலை வீட்டில் வைத்துப் படிக்கமுடியாது என்று சொன்னதை சாருநிவேதிதாவின் உளவியலைக் கணக்கிட்டே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வீட்டில் கணவன் மனைவிக்குள் நடக்கும் உடல் உரையாடல்களை முடிந்தளவுக்கு குழப்பியதோடு அதை மிகக் கேவலமான ஒன்றாய், காமத்துக்கு எதிரே பழஞ்சாமியார்கள் சொல்வது போல் எழுதியிருப்பதே.

காமம் தவறு என்று கருதும் ஒரு சாமியாரின் தத்துவமனநிலையும், மறைமுகமாகவேணும் அதை செய்வது எப்படி என தெரியாது குஞ்சைக் கையில் பிடித்துக்கொண்டே அலையும் ஆணாதிக்கப் பதிவுகள் நிரம்பிய நாவலே இது. இது சம்பந்தமாக அவர் இதற்கு முன்னால் எழுதியிருந்த ராஸலீலாவில் முனியாண்டிக்கு முதல் மனைவி எட்டிக்கசப்பு. நாவல் முழுக்க அவரது x மனைவி வாழும் காலந்தோறும் முனியாணியின் விரைகளில் மேல் நசுக்கியப்டியே இருக்கிறார் என்பது முனியாண்டி சொல்லித் தெரிகிறது. அந்நாவலில் முதல் மனைவியை எவ்வளவுக்கெவ்வளவு அருவெறுக்கச் செய்யவேண்டுமோ அவ்வளவுக்கவ்வளவு அறுவெறுக்கச் செய்து இந்நாள் மனைவியை தேவதை ஸதானத்தில் முனியாண்டி சொல்லியிருப்பான். இரண்டாவது மனைவி அந்நாவலில் முனியாண்டிக்குச் செய்யும் சேவைகளாவன, முனியாண்டிக்கு வரும் வெளிநாட்டுப் பெண்களில் காம அழைப்பைத் தவிர்க்கும் வேலை. இரண்டாவது முனியாண்டிக்கு கருவாட்டித் தொக்கு வைத்து பரிமாறும் தேவதை. அவ்வளவே.

ராஸ லீலாவையும் தேகத்தையும் ஒப்பீட்டில் வைத்துப் பார்த்தால் இது ராஸலீலாவின் இன்னொரு அத்தியாயமே.  ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சாருவின் நாவல்களில் பெண்கள் ஒன்று காலை விரிக்கவேண்டும். ( கதையில் வரும் ஆணுக்கோ பேச மட்டுமே தெரியும் ) இரண்டு சமைத்துப் போடவேண்டும். நாவலில் வரும் பெண் பாத்திரங்கள் செய்யும் வேலைகள் இவையே.

கி.ரா, கழனியூரான்  இருவரும் தொகுத்த பாலியல் கதைகளில் வரும் அனுபவமொழிகள், மனிதன் காமத்தை எவ்வளவு விருப்பமாய், விளையாட்டாய், படைக்கும் கருவியாய், காமத்தை அணுகுகிறான் என்ற பதிவுகள் பக்கத்துக்குப் பக்கம் நிரம்பிக்கிடக்கும். எடுத்துக்காட்டாக, வயதாகிவிட்ட பின்னும் காமம் தேவைதானா  என    ஒரு கிழவி, தனது கிழவரான கணவனை வீட்டை விட்டு வெளியே போய் படுக்கச் சொல்ல கிழவர் இரவில் புரண்டு புரண்டு படுத்து தூக்கம் வராது  “ அரைச் சொட்டோ ஒரு சொட்டோ மனுசப் பயலத் தூங்கவிடுதா” என்று சொல்லுவார்.

பொதுக் கழிப்பறைகளில் கிறுக்கப்படும் உறுப்பு விளக்கப் படங்கள் கிறுக்கிய ஆணின்   கற்பனைக்கேற்ப ஆணுறுப்பு நீட்டப்பட்டிருக்கும். உறுப்பு பெரிதாய்   இருந்தால் சுகம் அதிகம் என்று நம்புகிற மனம்தான் இந்த நாவலில் மையப்பாத்திரம் தர்மா.

காமத்தில் அனுபவம் கொண்ட, அது ஒரே ஒரு தடவை புணர்ச்சி அனுபவம் கொண்டவராய் இருந்தாலும், தேகம் நாவலைப் படித்தால். சிறிய புன்னகை சிந்தகூடும். ழார் பத்தாய் பற்றி பேசும் ஆசிரியர் அன்றாடம் நடக்கும் புணர்ச்சி விசயங்கள் கூட தெரியாது தன்னைத் தேடி பெண்கள் வருவதாய் எழுதும் மர்மம் என்னவென்றே சிந்திப்பார்கள். தேகம் காமத்தை சீரழிவான ஒன்று என்று கருதும் மனநிலை கொண்ட எழுத்து. அவ்வளவே.

நாவலில் பின்னடையில் மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கும் பின் குறிப்பு அவரின் வாசிப்புத் திறனைக் காட்டுகிறது. இதே குறிப்பை குற்றவியல் எழுத்தாளர் ராஜேஷ் குமார் அவர்களின் நாவல்கள் அனைத்தையும் தொகுத்து பல பாகங்களாக உயிர்மை வெளியிடும் பட்சத்தில் இவ்விமர்சனத்தை அப்படியே போடலாம். ஒரு பதிப்பாளர் இவ்வளவு மட்டமான வாசிப்பைக் கைக்கொள்ளக்கூடாதென்பது என் வாசக மதிப்பீடு.

 “வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையே உள்ள மனிதகுலத்தின் சமூக பண்பாட்டு வரலாறுகளை துப்பாகியின் கருகிய குழல் மூலம் ராஜேஷ் குமார் பதிவுசெய்கிறார். வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கனேஷ் வசந்தைப் போல பரத் சுசீலாவும் குற்றங்களை நீதியின் வெளிச்சத்தில் கண்டுணர்கிறார்கள். முக்கியமாக நகுலனின் சுசீலாவைப் போல ராஜேஷ் குமாரின் சுசீலா காமத்தை இரவுகளில் மறப்பதில்லை. சுசீலா பகல்களின் வெளிச்சத்தில் தானணியும் டீ ஷர்டுகளில் அவளது சுதந்திர வாசகங்களைப் பொறித்து அணிகிறாள். அந்த உலகத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதோடு. இந்நூலை அனைவரும் விலைக் கழிவில்லாது வாங்கிப் படித்து உதவவேண்டும்.”

என்று மனுஷ்ய புத்திரன் எழுதும் நாளுக்காக காத்திருக்கிறேன்.

குறிப்பு;

 *
புத்தகத்தின் முன்னட்டையில் நாவல் என்று பதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாவல் எனும் வரையறைக்குள் ஒரு வாசகனாக என்னால் இதை பொருத்திப் பார்க்க முடியவில்லை. தேகம் ஒரு அரிப்பு என்று இருந்திருக்கலாம், அல்லது ராஸலீலாவில் விடு பட்ட பகுதி என்று குறிப்பிட்டிருக்கலாம். விமர்சனத்தில் நான் நாவல் என்று பயன்படுத்திய இடத்திலெல்லாம் மேற்குறிப்பிட்ட பதத்தையே உச்சரிக்குமாறு வேண்டுகிறேன்.


 “பின் குறிப்பு;


A Mystical Experience !
பரமஹம்ஸ நித்யானந்தருடன் நீங்கள் இருந்த நான்கு நாட்களையும் பற்றிச் சொல்லுங்கள்.
( விஷால் இன்று காலை தொலைபேசியில் கேட்ட கேள்வி)

நம் வாழ்வில் நடக்கும் சில அமானுஷ்யமான விஷயங்களைப் பற்றிச் சொல்லும்போது அது மற்றவர்களுக்கு தமாஷாகத் தெரியலாம். வாழ்வில் தமாஷ் பண்ணவும், சிரித்து மகிழவும் எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது அமானுஷ்யமான விஷயங்களை வைத்து ஏன் தமாஷ் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன். நான் அனுபவித்த அற்புதத்தை நீங்கள் புரிந்துகொள்ளும் வகையில் விளக்க வேண்டுமானால் நானே நித்யானந்தராக மாற வேண்டும். அது சாத்தியமில்லை.”          

 17.08.2009 ( அருகில் வராதே சாரு நிவேதிதா- உயிர்மைப் பதிப்பகம்)

 “.....போக நுகர்ச்சி என்பது நாய் பன்றி முதலிய உடல்கள் வாயிலாகவும் நரகங்களிலும் கூட அனுபவிக்கப்படுகிறது.

-         அத்யாத்ம ராமாயணம்:
 ஸர்கம் 4, ஸ்லோகம் 50.

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...