Monday, May 17, 2010

குளியலறை விதானத்தில் தொங்கும் தூக்குக் கயிறும்…சிறுமி நேயாவின் நெடுநல்வாடையும்....


1
அப்பா...
நான் உங்களைக் கொலை செய்யப்போகிறேன்
சரி மகளே
முத்தம் தா

இல்லையப்பா... குருதி கசிய
சரி மகளே
முத்தம் தா

அப்பா...
உங்கள் உடலைச் சிதைத்து
சரி மகளே
முத்தம் தா

அப்பா...
அப்பா...
நிஜமாகவே...

சரி மகளே
முத்தம் தா

அப்பா
இந்த விளையாட்டு பிடிக்கவில்லை
வேறு விளையாட்டு சொல்லித் தாருங்கள்

சரி மகளே
முத்தம் தா.


2
சபிப்பது பற்றிய
ஞானத்தைக் கற்றுக்கொள்கிறேனே அப்பா
அடம் பிடிக்கிறாள் நேயா

விழிகள் குமைய
அனுப்பிவைத்தேன் அவளை
என் முகத்தில் அறையுங்கள்
அவளை...
அவளை...
சாத்தானுக்கு அறிமுகம் செய்தேன்

நகங்களை நீட்டாதே
விழிகளின் நிறம் மாற்று
அவள் சிறுமி

அறிவுரைகளை
வேண்டுகோளாய்க் கொட்டி
வீடு திரும்பினேன் கண்ணீர்த் துணையுடன்

விரல்கள் உலரும் முன்
வீட்டுக்கு வந்தாள் சிறுமி நேயா குதித்தபடி
சாத்தான் நிழல்போல் பின்னால் நின்றான்

வழியனுப்ப வந்ததாகவும்
அவள் சிறுமியென்றும் சொல்லி அகன்றான்

பிறிதொரு நாள்
அலுவல் வேலையாய்ச் சாலையைக் குறுக்காகக் கடக்கையில்

நடை வீதியில் நின்று
சாத்தான் அனைவருக்காகவும்
ஆசீர்வதித்துக்கொண்டிருந்தான்.


3
துரோகம், மயக்கும் விழிகளுடன் வருகைபுரிகிறது
தனிமையில் பற்றியெரியும் என் அறையை நோட்டமிடுகிறது

நளினமான உடலசையக் கதவைத் தட்டுகிறது
திறந்த கதவின் வழியே வசந்தம் பீறிட்டு வீச
மயங்கிச் சரியும் துரோகத்தை அணைத்துக்கொள்கிறாள்
சிறுமி

அறைக்குள் நுழையும்
நான்
விசித்திர சப்தம் கேட்கிறேன்

ஒரு
குடம்
தண்ணீர் ஊற்றி
ஒரு
வனம் பூத்ததே...

என் விரல்கள் உதற
செவிக்குள் தாவரம் பூக்க

துரோகத்தைப்
புல்லாங்குழலாக்கி
என்
உதட்டில் பொருத்துகிறாள்
நேயா.


4
மீன்களை மயக்கி
நித்திரை கொள்ளச் செய்யும்
குளமொன்றிற்கு
முத்தம் தருகிறாள்
மகள் நேயா...

குளம்
கடலாக
திமிங்கிலங்கள்
விழித்தெழுகின்றன.


5
அறை அதிர
சுண்டுவிரலால் கதவு தட்டும் சப்தம்
முழு மௌனம் கொண்டு
தாழ் நீக்குகிறேன்

சூரியனின் ஒரு துண்டை வாயில் கடித்தபடி
ஒளித் திவலை வழிய அவன்
நண்பன் மற்றும் வீரியமிக்க எதிரி

வழியும் நீரைப் புறங்கையால் துடைத்தபடி
கால்களை நிதானித்து மாற்றி
எங்கே உன் சிறுமி
பார்க்க வேண்டும் அவளை

கனவுகள் குழம்ப
தரையில் அமர்கிறேன்

என் விழிகள் பார்த்தவனின் கைத்தொலைபேசி ஒலிக்க
சாவகாசமாய் கையில் எடுத்து
பதில் வாங்கக் காதில் பொருத்துகிறான்

எங்கே போனாய்
நான் உன் அறையில்...

சிறுமியின் குரல்
அறையை நிறைக்க
மயங்கிச் சாய்கிறான்

அவனுக்கு
சிறுமியென்றே அவளை விவரித்திருந்தேன்

சொல்லியிருக்க வேண்டும்
அவளுக்கு விலாப்புறம் இரண்டு சிறகுகள்
மற்றும்....

Sunday, March 14, 2010

ஒரு காதல் கடிதமும்….ஆளற்ற கடற்கரையில் கரையும் கருப்பு நிற காக்கைகளும்….


……….சொல்ல வேண்டிய வார்த்தைகளின் அர்த்தங்களை மனதில் நினைத்ததும் மௌனம் தலைகுப்புற நம்முன் விழுந்து மரிக்கிறது. சொல்லப்படாதவைகளோ சொல்லப்பட வேண்டியவருக்கு நாம் செலுத்தும் வன்முறையாகவும் மாறுகிறது.

வார்த்தைகளிலிருந்து மௌனத்திற்கும் மௌனத்திலிருந்து வார்த்தையின்மைக்கும் தாவிக்கொண்டிருந்தேன் உண்மையில் அது ஒரு ஊசலாட்டம்தான் இருந்துவிட்டுப்போகட்டுமென மனமும் பேசித்தீர் என அடம்பிடிக்கும் நண்பர்களும் கொண்டிருக்கிறேன்.

எல்லாவற்றையும் புரிந்து கொள்ள நினைக்கும் வன்முறையிலிருந்து சதா தப்பியபடியே அலைந்துகொண்டிருந்தவன் நிதானிக்க வேண்டியிருந்தது. நின்றுவிட்டேன். நான் விரும்பிக் கைக்கொண்டிருந்த, எவருக்கும் தர மறுத்த என் அனாதைத்தனத்தை ஒரு சிறு புன்னகையால் பிடுங்கியெறிந்திருக்கிறாள்.வழியும் பெயரற்ற கண்ணீரில் உப்புச்சுவை காற்றில் கரைகிறது.

இப்படியாக......

அவளை சரியாக கடற்கரையில் வைத்து சந்தித்தேன் என்பதை விட பார்த்தேன் என்று சொல்வேன். பார்த்தேன். கவிதைகளையும் கோபங்களையும் உடன் கொண்டு வந்திருந்தாள். நானும் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டுத்தான் போயிருந்தேன். பற்றிக்கொள்ள எதுவும் நடக்கவில்லை. நானறிந்த கவிகளைப் பேசியதைத்தவிர. இன்றுவரை எனக்கு அதில் ஆச்சரியமாய் இருப்பது எந்தப்புள்ளியில் நான் அவளைஅவளை….போகட்டும்….

வாழ்நாள்தோழியாய் வந்து நிற்கிறாள். எதையும் தொலைப்பதில் ஆர்வமுள்ள நான் மிகச்சரியாக என்னைத் தொலைத்திருக்கிறேன். புன்னகையில் கரையும் முகம் அவளுக்கு நித்ராவாகிய அவளுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். இருக்கிறேன்இருக்கிறேன். இருக்கிறேன்.

வாழ்நாள் தோழனாய் நான் இருப்பேனென்பதை அவளுக்கு அவளை விட அவள் மேல் நான் வைத்திருக்கும் மரியாதையின் மீதமர்ந்து சொல்கிறேன்.

நித்ரா உன்னை மிச்சம் வைக்காமல் காதலிப்பேன்னென்பதை நான் உனக்கு வெகு ஆழமாய்ச் சொல்கிறேன். அது என்னையும் இழுத்துச்செல்லும் பாதாளம் என்பதையும் அறிவேன்.

உன் அன்பின் பெருங்கைகளுக்குள் அடக்கிக்கொள் இச்சிறுவுயிரை.

சிறுகுறிப்பு

நண்பர்களின் முகச்சுளிப்புகளை பிரியத்தின் மீது கட்டப்பட்டும் செங்கற்கள் என்பதாக மொழிபெயர்த்துக்கொள்கிறேன். அவர்களுக்கு என் அன்பு.

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...