இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த கவிதை.
நான் ஒரு நீண்ட துப்பாக்கியை
கனவு கண்டேன்
நிச்சயமாக அது பாலியல் கனவு
அல்ல மிஸ்டர் ஃப்ராய்ட்!
ராட்சத இயந்திரங்களால் குடைந்தெடுக்கப்பட்ட
மலைகளின் கொடுந்துளைகள் குறித்த கனவையும்கூட
என் மறையுறுப்போடு நீங்கள் தொடர்பு படுத்தக்கூடும்
தயவுசெய்து
உங்கள் கண்ணாடியை துடைத்துக் கொள்ளுங்கள் டாக்டர் ஃப்ராய்ட்!
என்னிடமிருப்பதிலேயே
பெரும்பிரச்சனைக்குரிய
உறுப்பென்றால் அது
எனது இரைப்பைதான்
அரசு எங்களுக்கு பிரமாண்டக் கனவுகளை தந்திருக்கிறதுதான்
அதில் ஒரு துண்டைக்கூட உப்பிட்டு
தின்ன இயலாது
தாழ்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்
உங்களால் புரிந்துகொள்ள இயலாது ஆய்வாளர் ஃப்ராய்ட்!
நாங்கள் வயிற்றால்கூட கனவு கண்டிருக்கிறோம்
நான் சாமான்யை
எனக்கு குழந்தைகள் இருக்கின்றன
உங்களிடம் சிறு உதவி வேண்டும்
நண்பர் ஃப்ராய்ட்!
ஓர் எளிய நீதிக்காக
சட்டத்திற்கு கேட்காதவாறு
ஐந்து தோட்டாக்களை நான் ‘பயன்படுத்தி’விட்டேன்
நீங்கள் மனதுவைத்தால்
தடயங்களேதுமின்றி
அதை ஒரு கனவாக மாற்றிவிடலாம்.
வெய்யில்
மிக அருமை
ReplyDelete