·      நடனம். திசைகளைப் புணரும் ஆவேசம்.       கைகளில்  முத்திரைகள்      காற்றைக் கிழித்துக்     கலைக்கிறது.  ஆம்ரா உனது தாபங்களை உடலின்   எந்தப்        பகுதியில் சேகரம் செய்கிறாய் கண்ணே… 
· ததாகரே உதடுகள் பற்றிய பிரக்ஞை எனக்கெதுவுமில்லை.
1.  கனவு கண்டுகொண்டிருந்தேன். இரண்டு கரும்பாதங்கள்
பசிய மிருகம் போல் எனைச் சுற்றி சுழன்றதை. 
கண்கள் அசைவுகளை வீசிக்கொண்டிருந்தன. 
மெல்ல என்னுடல் சிறகானது.  வசீகரிக்கும்
இசை எதுவுமின்றி மண்ணில் பாதங்களால் இசையொன்றை எழுப்பிக்கொண்டிருந்தாள். 
2.கரகரத்த மணலோசை என் செவிகளில் கூரிய நகங்களாய் மனதாபத்தைப்
பேசிக்கொண்டிருந்தது.  பச்சை நிறத்தோடு பிட்சுகளின்
கண்கள் மௌனமாய் நடனத்தை விழியசைவின்றி மொய்த்துக்கொண்டிருந்தது.  கப்பறையை எவர் கரமும் ஆழப்பற்றவில்லை. தண்ணீரில்
பிதப்பதைப் போல் அசைந்துகொண்டிருந்தது.
3.  ஆம்ரா….இவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள்.
தன்னுடலை நடனமென பிச்சையிடுகிறாளா என்ன… இதை எந்தக் கப்பறையில் நான் வாங்க வேண்டும்…விழிகளே
திறக்கப்பட்ட கப்பறைத்தானோ… நான் வேண்டி வந்ததும் இதுதானா, 
4.   
என் விழிகளில் தாவரப்பசுமை குடியேறிக்
கொண்டிருக்கிறது.  இனி அது மிருக வாசனை பழக
ஆரம்பிக்கும்.  செவிகளை விடைத்தபடி அது என்
மடியில் அமர தருணம் பார்த்தலைகிறது.  அதன் வளர்ந்த
காதுகள் என் விரல்களின் ஸ்பரிசத்தை உணர அலைபாய்ந்து துடிக்கும் வெம்மை எனக்குப் புரிகிறது.
5.   
ஆம்ரபாலி…. எத்தனை அற்புதமான பெயர் 
6.   
சாம்பல் படிந்த பாதங்களோடு உன் முன்னே
அமர்ந்திருப்பவனின் தற்பொழுதய பெயர் புத்தன். 
நடுங்கும் உதடுங்களால் இப்பெயரை உச்சரிக்கும் முகத்தில் தெரியும் பரவசத்தில்
நான் குளிர்காய்ந்திருக்கிறேன்.  ஆனால் பெரும்
மரமொன்று சாய்வதையொத்து என்னுள் எதுவோ தயங்கிச் சரிகிறது. 
7.  நடனம், அந்தரத்தில் காலுயர்த்தி முடிந்தது.  என் சுவாசத்தின் மத்தியில் இளஞ்சூடாய் வழிவது… குருதியா…
இல்லையே… குருதி மணத்தையொத்து வேறெதுவோ… மணக்கிறதே… அது ஆம்ராவின் வியர்வைத் துளி.  
8.   நடனத்தை தன்னுடலிலிருந்து பிரித்தவள்
திரவத்தை சாட்சியாக்கி தன்னை பிழிந்தெடுத்திருக்கிறாள். 
9.   நடனம் முடிந்துவிட்டதா என்ற பெரும் கேள்வி அனைவரின்
கண்களையும், அதன் புலன்களையும் கேள்விக்குள்ளாக்கியிருப்பதை உணர்ந்தேன்.  பிட்சுகளின் அமைதி என் காதை செவிடாக்கியது. துணுக்குற்று
நிமிர்கிறேன்.  என்னை நானே கேள்வி கேட்கும்
தருணங்களில் பதிலுக்காய், அதன் கூரிய சொற்களுக்காய் கண்களை நிலைகுத்த விட்டிருக்கிறேன்.  இனி சீடர்கள் நடனத்தின் தர்மம் என்னவெனக் கேட்கும்போது
என் தனிமை கேட்பாரற்று சூறையாடப்படும்.  
10. ஆம்ரா
பாதத்தருகே அமர்ந்தாள். ஆனந்தன் பார்வையை நிமிர்த்த ஆம்ராவின் நடனத்தோழிகள் விருந்து
மண்டபம் தயாராய் இருக்கிறது ஆனந்தரே என்க ஆனந்தர் சோதரர்களே நிதானமாய்ச் செல்லலாம்
என்க காலுக்குக் கீழிருந்த மணற்பிரதேசம் இளம் வெயில் கூச வெளியே தெரிந்தது. 
11. ஆனந்தன்
அமைதியாய் நின்றிருந்தான்.
12. வேண்டாத
தனிமையை எல்லாரும் கையளித்துச் சென்ற பின், ஆனந்தன் நிழலையும்., என் முன்னால் இருக்கும்
ஆம்ப்ராவின் குனிந்த தலையையும் கண்டேன். 
13. பெருங்காட்டின்
நடுவே யானைகள் நடந்து சென்ற ஒற்றைத் தடம் போல உன் வகிடு எவ்வளவு நேராகப் பிரிந்து செல்கிறது
ஆம்ரா..
14.  ஆம்ரா நிமிரவேயில்லை. புன்னகையுடன் கேட்டேன். சொல்
ஆம்ரா கருப்பை பற்றிய உனது சந்தேகங்களை…என்க ஆம்ரா திகைப்பது அவளது உடல் அசைவில் தெரிந்தது.
நல்லது. எதுவோ இங்கு நடக்கப் போகிறது அல்லது சிதையப் போகிறது
15.  இருப்பினும் கண்களைத் தாழ்த்தியபடி கேட்டேன். சொல்
ஆம்ரா கருப்பையின் லட்சியங்கள் குறித்த தர்மம் அறியாதவள்தானே நீ…
16. ஆம்ரா மெதுவாய் அழைத்தாள் சித்தார்த்தரே… குருதி
சட்டென உள்ளங்கைக்கு ஏற ஆனந்தன் பதட்டமடைந்தான். அவனுக்கு மிக அணுக்கமான புன்னகயோடு
சொன்னாள். ஓடும் குருதியில் வாள் இன்னும் மிதக்கிறதா…நான் சொன்னேன் ஆனந்தா நீ காத்திரு.
மௌனமாய் என் கண்களைப் பார்த்தவன் நகர்ந்து சென்றான்.
17. மிகமெதுவாய்
தலையை உயர்த்தியவள் புன்னகைத்தாள். 
18.மௌனம்
கொள் சித்தார்த்தனே….இது கேள்…ஆத்மாவின் அடிவயிற்றுக்கேவலை பசியென உணர்ந்து கப்பர்றையை
உடல் முன் நீட்டாதே…கேள் இதை.
19. இந்திரிய
வாசத்தால் கருப்பை பூரிப்படைவதில்லை
20. கருப்பையை
நிழல் தீண்டுவதில்லை
21. கருப்பைக்கு
ஸ்பரிசம் கிடையாது.
22. கருப்பைக்கு
விழிகள் உண்டு.
23. கருப்பையை
வார்த்தைகளால் நிறைக்க முடியாது
24. எவர்
வருகை வேண்டியும் கருப்பை காத்திருப்பதில்லை.
25.  கருப்பை பற்றிய புரிதல்களை கருப்பை அறிவதில்லை.
26.  கருப்பை பற்றிய உன் வார்த்தைகல் உண்மையல்ல, அது கருப்பை
பற்றிய உன் கற்பனை.
27. இறுதியாக கருப்பைப் பற்றிப் பேச உனக்குத் தகுதியில்லை
ஏனெனில் உனக்குக் கருப்பை இல்லை. 
28. ஆம்ராவின்
நாவில் அசையும் சொற்களை கவனித்தபடியே மனம் அலைந்து கொண்டிருந்தது. தகிக்கும் பதில்களை
சதா காலமும் என் சொற்கள் கண்டலைந்தபடியே வந்திருக்கின்றன.  இம்முறை பதில் சொல்ல மட்டுமல்ல… என் மௌனமும் பொருளற்றுப்
போனது, ஆம்ராவின் நாவு சிவந்த குருவாளென வெட்டவெளியை சாட்சியாய் வைத்து எனதறியாமையைக்
கிழிக்கிறது. நடந்தே தீரவேண்டும்.
29.  ஆம்ரா தரையை அறைந்து ஓங்கி உறுமினாள். மாயா….
30. எனதுடலைக்
குரூரமாய் வதைக்க நினைக்கிறாள் ஆம்ரா. அவள் விழிகளை கரும் பாவைகள் நிறைத்தபடியே இருந்தது.
எனக்கோ விழிகளில் செவிகள் பூக்கத் தொடங்கிறது. இனி என் அத்தனை புலன்களின் தனிமையையும்,
ஆம்ரா வார்த்தைகளால் விதைத்து. அர்த்தங்களை அறுவடை செய்வாள். 
நன்றி’ 
கொம்பு
இதழ்-4

 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment