லாபம் தரக் கூடிய
ஒரு மரணம்
இவ்வாறாக ஒரு கொலை
ஒரு தியாகம்
அமைதியோடு அவன்
சாவதை யாரும் விரும்பவில்லை
தோட்டாக்கள் உட்பட
ஒரு தோட்டாவுக்கு
துப்பாக்கிக்கு
தத்துவம் தெரியாது
ச் சேவுக்கு இரண்டையும்
தெரியும்
சற்று தூரத்தில்
நின்று முத்தமிடுவதைப் போல் அழகாக ஒரு துளை
போராளியைக் கொலை
செய்வதற்கு
துப்பாக்கிகள்
விரும்பி தயாரிக்கப்படுகின்றன
லக்ஸம்பர்க்கின்
பின் மண்டையில்
துப்பாக்கி அழுந்த
தைத்த போது
அவள் மௌனமானாள்
எண்ணற்ற பெண்கள்
விழித்துக்கொண்டனர்
நாய்கள் அமைதியோடு
இழுத்துச் சென்றன
தற்கொலை போன்றதே
தியாகமும்
சவத்தை வைத்துக்
கொண்டு ஒன்றும் செய்யமுடியாது
சவத்திற்கு
தத்துவமோ அமைதியோ
தெரியாது
வெறும் நிச்சலனம்
பொருளற்ற மரணங்களை
ச் சே வெறுத்து உற்றுப் பார்க்கையில்
அறிந்திருப்பான்
சுருட்டில் புகையும்
வெண் புகையின் ஓலத்தை
மேலும்
ச் சே வைக் கொல்வது
எளிதல்ல
அத்தனை எளிதல்ல
அவனைக் கொல்வதற்கு
முன் வரலாற்றைக் கொலை செய்ய வேண்டும்
தத்துவத்தைக் கொலை
செய்யவேண்டும்
வெடிமருந்துகளால்
எழுதப்பட்ட லிபிகளை
ச் சே அறிந்திருந்தான்
அவனது டைரிக்குறிப்புகளில்
காதலிகளின் பெயர்களை
விட அது வசீகரமாய் மின்னிக்கொண்டிருந்தது
புத்தனைக் கொலை
செய்வதற்கும்
ச் சே வைக் கொலை
செய்வதற்கும்
வித்தியாசங்கள்
உள்ளன
புத்தன் சாவில்
அமைதியாய் இருந்தான்
ச் சே...
சாவின் கழுத்து
இறுகும் வரை நெறித்துக் கொன்றான்
ச் சே கொபேராவைக்
கொல்ல தோட்டாக்களைத் தயாரித்தவன் அறிவான்
நிச்சயம் அது அவனைக்
கொலை செய்ய முடியாதென்று
அது
ச் சேவுக்கு அளிக்கப்பட்ட
தூக்க மாத்திரை
அஃது எண்ணற்ற மனங்களில்
கனவுகளில்
காயங்களில்
ஏக்கத்தில்
தோன்றி
வளரும் தோட்டாக்கள்
தோட்டாக்களை அமைதியாக
இருக்கச் செய்வதற்கு
தத்துவம் தெரிந்திருக்க
வேண்டும்
தோட்டாவை கொலை
செய்வதற்கு
ச் சே கொபேராவுக்குத்
தெரிந்திருந்தது
கார்ல் மார்க்ஸை
கொலை செய்ய அவர்கள் துடித்துக்கொண்டிருப்பது
எனக்குத் தெரியும்
அவனோ
எழுத்துக்களில்
ரத்தமும் சதையுமாக
தன்னை மறு உற்பத்தி செய்வதோடு
ஒயாது கனவும் கண்டு
கொண்டிருக்கிறான்
கொலைகாரர்களுக்கு
அவன் தன்னைக் கொல்ல வழங்கிய சிறு குறிப்பு இதுதான்
முதலில்
என் கனவுகள்
பின்
என்னை.....
உலகக் கொலைகாரர்களே
ஒன்று கூடுங்கள்.
No comments:
Post a Comment