Thursday, October 13, 2016

வெண்புறா சரவணவனின் அமைதியை முன்வைத்து....


உபதலைப்பு: கமுக்கமா இருந்தா கண்டுக்கமாட்டாங்க.



வெண்புறா சரவணனின் கட்டுக்கோப்பான அமைதி கண்டு வியந்து, சற்று விரிவாக அவர் எப்படியெல்லாம் கட்டுக்கோப்போடு புளுகியிருக்கிறார். என்பதை எழுதியிருக்கிறேன். இதையும் படித்துவிட்டு அவர் அமைதியாகவே இருப்பார். இருக்கட்டும். வாழ்த்துகள்.

ஏதோ நம்ம பங்குக்கு ஒரு திரி திரிச்சோம், இனி அதைக் கண்டுக்காம கமுக்கமா இருக்கலாம்னு அவரு நினைக்கலாம். அதனாலதான் அவருக்கு நான் முன்னமே சொன்னேன், பொய்யைப் பேசுனாலும் நின்னு பேசுங்கன்னு.. அவருடைய மௌனம் எத்தகைய கள்ளமௌனம், தமுஎகசவின் பெயரைச் சொல்லி இவர்கள் என்னவெல்லாம் பண்ணுகிறீர்கள் என்பதை அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சரவணன் என் பதிவு பற்றிக் குறிப்பிடுகையில்....

//எடுத்த எடுப்பிலேயே அந்த அபத்தம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது... //"தமுஎகச தேனியில் வைத்து எஸ் வி ராஜதுரை அவர்களுக்கு வாழ்நாள் சாதானையாளர் விருதை வழங்கியது. ராஜதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதோ (முதியோர் விருது *) இன்னும் பல விருதுகளை வழங்குவதோ அவர்களது அமைப்பின் விருப்பம்..."// உண்மையில் தோழர் எஸ்.வி.ஆருக்கு வழங்கப்பட்டது வாழ்நாள் சாதனையாளர் விருது அல்ல. அதன் பெயர் 'முற்போக்குக் கலை இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த ஆளுமைக்கான விருது'.//

நான் விருது பெயரை தவறாகச் சொல்லிவிட்டேன். இது அபத்தம் அப்டியாக்கும் இப்டியாக்கும் என்றெல்லாம் கொதித்தெழுந்து எழுதிய அறிவாளர் வெண்புறா சரவணன் அவர்களே, நான் எழுதியது உங்கள் பார்வைக்கு வந்திருந்தாலும், புரியாதது போல் கமுக்கமாகவே கடக்க நினைப்பீர்கள். புரிகிறது.
இதோ விருதை உங்கள் தரப்பு டிசைன் டிசைனாக திரித்த கதை.

1 உங்களுக்கு கரகோஷங்களை எழுப்பி சபாஷ்... அப்படிப் போடு தமாஷு எனக் குதித்த உங்கள் இயக்கப் போர்வாள் கருப்பு கருணா போட்டிருப்பதை படியுங்கள்.



கருப்பு கருணா எழுதியதைப் பார்த்தால் அவரு என்ன மனநிலையில இருந்து இதைப் போட்டாருன்னு தெரியலை. நம்ம அமைப்பு ஏதோ விருது கொடுக்குதாம்ல என்ற மனநிலைதான் இவருக்கு இருந்திருக்கிறதே தவிர அந்த விருதின் பெயரென்ன, மார்க்சிய அறிஞர்தானா என்ற எந்தப் புரிதலும் இல்லாமல் உளறியிருக்கிறார். ஆளுமை விருதா, வாழ்நாள் சாதனையாளர் விருதா. என்ன கொடுமை சரவணா இது? தனக்குத் தானே உளறிவிட்டு,இப்பொழுது சரவணன் அதை அபத்தம் என ஒரு பாயிண்டாக வைத்ததும் குஷியாகி கரகோஷங்களை எழுப்பி, அல்லேலுயா துதித் தோஸ்திரங்களை கூறி, அனைவரையும் அழைத்து - மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் எனப் பெருமிதத்தோடு கிஞ்சித்தும் வெட்கமில்லாது தன் முட்டாள்த்தனத்தை இவரே எப்படி கொண்டாட முடிகிறது?

அடுத்து சம்பந்தப்பட்ட விருதை எப்படிக் கொடுத்தார்கள் என்று வகை தொகை இல்லாமல் உளறிய அபத்தத்திலும் அபத்தம் அடுத்து வருகிறது. பாரதிபுத்தகக் கோவில் (ஆலயம்) வாழ்த்துக்கிறோம் பேர்வழி என்று, விருது பெற்ற ஆசிரியர்கள் பெயர்கள் மற்றும் விருதுபெற்ற புத்தகத்தின் பெயரை மாற்றி அச்சடித்த அபத்தத்தையும் பாருங்கள்.



ஆகாயத் தோட்டிகள் - ஆகாயத் தொட்டில்களாகி பேர் மாறித் தொங்குவதும், அடுத்து நூல் ஆசிரியர் பெயர் மாறி அடுத்த ஆசிரியருக்குப் போனதையும், புழுதிச் சூடு, புழுதிச்சுடு ஆன அதிசயத்தையும் காண்பீர்களாக.

அமைப்பில் இல்லாத என்னை உதிரி என்ற அழைத்த சரவணனனை முன் வைத்து இவர்களை முற்போக்கு குண்டாஸ் என்று அழைப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

விருப்பக் குறி இட்டு, ஆகா… வெண்புறா கட்டுரை அருமை… சீறிப்பாயுது எருமை என்றெல்லாம் அமைப்பின் பெயரால் தங்களை சொறிந்து கொண்டு, எந்த யோசனையும் இல்லாது நாயே பேயே என்றெழுதிய மற்ற குண்டர்களையும் மேடைக்கு வரச்சொல்லுங்கள் வெண்புறாவே. மனதறிந்து பொய்யை எந்தக் கூச்சமும் இல்லாமல் சொன்ன உங்களை, ஆஹா அப்பாடக்கர் அதிரி புதிரி என எடுத்துப் போட்டு, தன் புத்தியை தானே எள்ளல் செய்த கருப்பு கருணாவையும், எதிர்வினை அருமை எனச் சொன்ன பெரியவரையும், தண்ணியக் குடி எனச் சொன்ன இளமைத் துள்ளல் காசிச் சிறுவரையும் மேடைக்கு அழையுங்கள். எது அருமை… எங்கிட்டுப் பாயுது எருமை? என்று பேசித் தீர்த்துவிடலாம்.

புளுகு எண்; 1

//" சமீபத்தில் வெளிவந்த ரங்கநாயகம்மாவின் புத்தரும் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் தேவைப்படுகிறார் நூல் குறித்து உங்கள் கருத்து என்ன?" என்ற கேள்வியை முன் வைத்தார்.//

ரங்கநாயகம்மா நூல் குறித்து சமீபகாலமாக கருத்து மோதல்கள் நடைபெற்றதாக சரவணன் கூறும்போது அவர் அவதூறுகளைத்தான் கருத்துமோதல்களாகப் புரிந்துகொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன் இருக்கட்டும். முதலில், இந்தக் கேள்வியைத் தொடங்கி வைத்தது மோகன் குமாரமங்கலம், நானல்ல. அதற்கு  எஸ்.வி.ஆர் ஏதோ நீண்ட விளக்கத்தை அளித்தது போல் ஒரு பாசாங்கையும் சொல்லியுள்ள்ளீர்கள்.  அவர் அப்படி என்ன நீண்டவிளக்கம் செய்தார் என்று ஏதேனும் ஞாபகம் இருந்தால் எழுதுங்கள். அதைப் படிக்கலாம்.

எஸ்விஆர் பதில் என்ற பெயரில் உளறியதுமே, ஆதவன் தீட்சண்யா நேரத்தைச் சுட்டிக்காட்டி கலந்துரையாடலை முடித்துக்கொள்வோம் எனச் சொன்னதாக ஒரு பெரும் புளுகைப் புளுகும் சரவணன், இன்னொன்றைக் கவனிக்க மறந்துவிட்டார். ஆதவன் அங்கு ராஜதுரையைக் கவனித்தாரோ இல்லையோ என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டிருந்தது அவரது எழுத்திலேயே தெரிகிறது. எத்தனை தபா தண்ணி குடிச்சேன்னு அவர் எண்ணிய அழகை எல்லாம் நோட் பண்ணியிருக்கிறார். நான் முன்னே வந்ததும் எத்தனை பேரை தண்ணிகுடிக்க வைக்கப் போகிறேன் என்ற பதட்டமே ஆதவன் என்னை பேசவிடாமல் தடுத்தது; “நான் பேசணும்னு சொன்னதுக்கு”,   “என்ன பேசணும், எங்கிட்டச் சொல்லுங்கன்னு” பாடிகாட் முனீஸ்வரனாகத்தான் நின்றார். நான் அதை உங்களிடம் சொல்லமுடியாது எஸ்விஆரிடம் தானே கலந்துரையாடல் என்றேன். எங்கிட்டச் சொல்லுங்க என்ன கேள்வி என்றார்,  “உங்ககிட்டச் சொன்னாத்தான், அவருகிட்டப் பேசமுடியுமா” என்றதும் உள்ளங்கால் பதற தண்ணித் தவித்து, வேகமாக மைக்கை பிடித்து, “இது எஸ்விஆருடனான கலந்துரையாடல், இதை ரங்கநாயகம்மா மேடையா மாத்த வேண்டாம்” என்று பதட்டத்தை மறைத்து, தண்ணி தவிப்பதையும் மறைத்துப் பேசினார். அடுத்துத்தான் நான் மேடையேறி என் கருத்தைச் சொன்னேன்.

கூட்டமே ஜனநாகயத்தோடு அமைதியாக இருந்தது என்ற உங்கள் புளுகு எப்படி வேலை செய்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. கூட்டத்தில் இருந்த அமைதி ஜனநாயக அமைதியல்ல, நடப்பது என்னவெனப் புரியாத அமைதி. ரங்கநாயகம்மா நூலைப் படிக்காத அந்தக் கூட்டத்தில், தானும் அந்த நூலைப் படிக்காத எஸ்.வி.ஆர் - ரஷ்யக் கம்யூனிசம், அம்பேத்கர் பத்திரிக்கை , கூலியுழைப்பும் மூலதனமும், மாவோ, கம்யூனிசத் தொகுப்பு நூல்கள், மார்க்ஸையும் இன்னும் முழுவதாகத் தொகுக்கவில்லை, அம்பேத்கரையும் முழுசா தொகுக்கலை என உளறியதைப் புரியாமலும், நான் பேசியதைப் புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்த அமைதி. அதை ஏதோ ஜனநாயக அமைதி என நீங்கள் திரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

ஒரு நூலை படிக்காத கூட்டத்தில் அந்த நூல் குறித்து உளறவேண்டிய அவசியம் எஸ்விஆருக்கு ஏன் வந்தது. அப்படியென்றால் இங்கு என் தர்க்கத்தை வைக்கிறேன். அந்த நூல் குறித்து கேள்வி வந்ததுமே, அந்த நூலைப் படிக்காத சபையில், அதுகுறித்து எஸ்.வி.ஆர் உளறுமுன்னே, ஒருங்கிணைப்பாளாரான ஆதவன் என்ன செய்திருக்க வேண்டும்? இது எஸ்.வி.ஆருடனான கலந்துரையாடல். சம்பந்தப்பட்ட நூல் குறித்து இங்கு பேசுவதற்கான மேடை இது இல்லை, எனவே அதை இங்கு பேசவேண்டாம் என எஸ்விஆருக்கோ, கேள்விகேட்டவருக்கோ ஒரு ஒருங்கிணைப்பாளாரக சொல்லியிருக்கவேண்டும்.

எஸ்விஆர் தனக்குச் சாதகமாகத்தான் பேசுவார்  (ஏனென்றால் அந்த நூலை  ‘பீ’ எனச் சொன்னால் நாக்கு கூசிவிடும் என்பதால் நாகரீகமாக நரகல் எனச் சொன்னவர் ஆதவன்) என்ற குஷியில் மேடையில் இறுமாந்து அமர்ந்திருந்த கோலத்தை நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அவர் ஆசையை நிறைவேற்றும்படி எஸ்.வி.ஆரும் உளறினார். (இடையே மார்க்சியம் ஒரு பன்றித் தத்துவம் என்பதற்கு ஆதரவாக பேசும் முன் ஆதவனிடம் ஞாபகமாக கேட்டுக்கொள்ளவும் செய்தார். அதன் பின் மாவோ இருக்காருல்ல.. அவரு… என உளறவும் தொடங்கினார்) அவர் உளறி முடித்ததும், நான் முன்னே வந்ததைப் பார்த்த உதறல்தான் ஆதவன் என்னை அனுமதிக்காது; என்னுடன் பேசி, பின் காலக்கெடுவையெல்லாம் அள்ளிவிட்டது. பின் நான் பேச வேண்டும் என்று உறுதியாக நிற்பது கண்டு, வேறு வழியில்லாமல், தண்ணி குடிக்கும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்து ஆதவன் அந்த எச்சரிக்கையை விடுத்தார்! அவர் என்னை மேடைக்கு ஜனநாயகத்தோடு அழைக்கவில்லை! நானேதான் மேடையேறினேன்! அவர் விலகிக்கொண்டார்! அவ்வளவுதான்.

இது ஏதோ அவர் ஜனநாயாக முறைப்படி அனுமதித்தார் என்று சரவணன் இட்டுகட்டுவதைப் பார்க்கும்போது, அமைப்புரீதியாக ஏதோ பிரச்சினை தொடங்கி, யாருக்கோ விளக்கம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது என்றே தோன்றுகிறது. ஆகவே அமைப்பின் மானத்தைக் காக்க தாங்கள் புளுகுப் போர்வாளுடன் களம் இறங்கியிருக்கிறார் திருவாளர் சரவணன்.

மேடையில் நான் முதலில் பேசியதுமே இதைத்தான் பேசவேண்டும் என எனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி, ரங்கநாயகம்மாவின் நூல் குறித்து நான் பெரிதாக எதையும் பேசவில்லை. எஸ்.வி.ஆர் நூல் குறித்து சொன்ன எந்தக் கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை என ஒரு வரியோடு முடித்துக்கொண்டேன். எஸ்.வி.ஆர் மார்க்சிய அறிஞர் இல்லை என்றேன். தண்ணி தவித்தும் குடிக்க முடியாமல் திணறிய ஆதவன் பதட்டத்தையும் பார்த்தேன். அடுத்த நொடி மைக்கைப் பிடித்த எஸ்.வி.ஆர் என்னை மார்க்சிய அறிஞர் என நான் சொல்லவில்லை தமுஎகசாதான் சொன்னது என்றார்… அடுத்தடுத்து உளறத்தொடங்கினார். (இதைத்தான் சரவணன் எஸ்விஆர் தோழர்கள் சொன்னார்கள் என்று அனைத்து தோழர்களும் கூறியதாக புளுகுகிறார்). நான் அந்த உளறலைச் சுட்டிக்காட்ட மேடையேறும்போதுதான் பெரியவர் எஸ்.ஏ.பி கால் மேல் கால் போட்டபடி என்னை விரட்டியது. அடுத்து என் கையைப் பிடித்து வெளியே தள்ள எத்தனித்தது, தோழர் மோகன் குமாரமங்கலம், தோழர் சிவாஜி ஆகியோர். அவர்கள் இப்பொழுதும் என் நண்பர்களே.

அந்தத் தோழர்கள் இருவரும் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள். இன்னும் சொல்லவேண்டுமென்றால் மோகன் குமாரமங்கலம் தமுஎகச அமைப்புக்கு வருவதற்கு முன், அவரது தந்தை தோழர் பரந்தாமன் அவர்களுடன் கட்சி வேலை பார்த்தவன் நான்.

என்னை கலகவாதி, எத்தனை மேடைகளில் இப்படி பேசமுடியும் என்றெல்லாம் பில்டப் கொடுத்த சரவணன், அங்கு கூட்டம் முடிந்து நான் பேசிய தோழர்களை கவனிக்காமல் இருந்திருப்பார். அங்கு நான் பேசியது கம்யூனிஸ்ட் கட்சியின் சிபிஐ (எம்) முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் ராஜப்பன் அவர்களிடமும், இந்நாள் மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் அவர்களிடம் தான்.  தோழர் மணவாளனிடமும் பேசிக் கொண்டுதான் இருந்தேன்.

கீழிருந்து உரையாடுவது மேலிருந்து உரையாடுவது, கலந்துரையாடல் என்றால் என்ன என்று சரவணன் புளுகாளர் அவரது முதுபெரும் தோழர்களிடம் விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.  என்னமோ ஊர் பேர் தெரியாத ஒரு ஆள், அவரதுஅமைப்புக்கு வந்து தகராறு செய்தார் என்பது போல் எதையும் திரிக்கவேண்டாம். என் கருத்தை சொல்ல விடாமல் தகராறு செய்தது தமுஎகசதான். வேண்டுமென்றால் சிவாஜியிடம் கேளுங்கள். மோகன் குமாரமங்கலத்திடம் கேளுங்கள்.

புளுகு எண்; 2

சபை நாகரீகமின்று எஸ்.வி.ஆர் பேசியதற்குப் பதிலாக நான் சபை நாகரீகத்தோடு புத்தகம் பற்றிய எஸ்.வி.ஆர் கருத்தில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை என்றேன். அவர் மார்க்சிய அறிஞர் இல்லை என்றேன். அந்நியமாதல், பிராங்க்பர்ட் மார்க்சியம் இருத்தலியம் என ஒரு தலைமுறையைச் சீரழித்தவர் என்றேன். இதில் உங்களுக்கான சபை நாகரீகம் எது என்று சரவணன் சொல்வாரா? முன்னப் பின்ன எதாவது கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏதேனும் அவர் போயிருப்பாரா?  போயிருந்தா தெரிஞ்சிருக்கும்!

ஆனா கலந்துரையாடல் என்பதை தலையாட்டும் கூட்டமாக கற்பனை பண்ணி, அதில் கேள்வி கேட்பதையே சபை நாகரீகம் இல்லை என்று அவர் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது  இதுவரை அவர்  எந்தக் கலந்துரையாடலுக்கும் சென்றதில்லை என்பது தெளிவாகிறது. முட்டுச் சந்தில், ஆமாஞ்சாமி பஜனைகளில் மட்டும் அவர் கலந்திருக்கிறார் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.

மேலும், நான் ஏதோ பல மணிநேரம் பேசியதை பொறுமையாக கூட்டம் கேட்டது போல் ஒரு பில்டப்பைக் கொடுத்திருக்கிறார் சரவணன். இதை புரட்டென்பதா புளுகென்பதா? நான் பேசியது எண்ணி ஐந்தாறு வாக்கியங்கள் அவ்வளவே… என்னமோ சபை அமைதி காத்து ஜனநாயகத்தோடு இருந்தது என்று சரவணன் புளுகோ புளுகு பெரும் புளுகு என புளுகியிருக்கிறார்.

எஸ்.வி.ஆர் என்ன சொல்லுகிறார் என்று தலையும் புரியாமல் வாலும் புரியாமல் கூட்டம் அமைதியாக இருந்ததை ஜனநாயகம் என்ற சரவணன், இதையும் இப்படித்தான் பொய்யாகச் சொல்வார். உங்கள் புளுகுகளுக்கு பஞ்சமேயில்லை சரவணன். ஆனாலும் அதைக் கருத்துச் சுதந்திரம் என்று பெரும்புளுகாகப் போட்டார் பாருங்கள். அங்குதான் இருக்கிறது அவரது கருத்துச் சுதந்திரம் பற்றிய புரிதல்.

கேள்வி கேட்டதையே கீழ்த்தரமான வசை என முகநூலில் முன்வைத்த அவரின்  எழுத்துச் சுதந்திரம் பற்றிய  ஆபாசமான புரிதலைப் பார்த்தேன். அதற்கு விருப்பக் குறி இட்டு உரையாடிய பல முற்போக்கு குண்டர்களின் அருமையான வாசகங்களையும் பார்த்தேன். உங்களை நீங்களே கொஞ்சிக் கொண்டிருக்கலாம் அதை கருத்துச் சுதந்திரம் என்று நீங்கள் அழைக்கலாம். ஏனெனில் அது உங்களது தற்பெருமைப் பாடல்களே அன்றி கருத்துச் சுதந்திரம் அல்ல. 

புளுகு எண்: 3

//அதற்குப்பிறகும், ஆதவன் அடுத்த நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு செய்து கொண்டிருக்கும்போதே மீண்டும் மேடையேற வசுமித்ர முயற்சிக்க,//
//பொறுமையிழந்த ஆதவன் தார்மீகக் கோபத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு மிகவும் நிதானத்துடன், "ஒரு முக்கியமான ஆளுமைக்கு விருது வழங்கும் விழாவில் அவரப் பற்றி தரக்குறைவாக பேசுவது ஒருவகை மனநோய். இதை மேலும் அனுமதிக்க முடியாது. இப்போது தோழர் எஸ்ஆர்வி தனது உரையைத் துவக்குகிறார். வசுமித்ர இந்த அரங்கில் அமர்ந்தும் கேட்கலாம் அல்லது அரங்கை விட்டு வெளியேறியும் கேட்கலாம்" என்ற வேண்டுகோள் விடுத்து அமர்ந்தவுடன், மீண்டும் பேசுவதற்கு வசுமித்ர முயற்சிக்க, அருகில் அமர்ந்து இருந்த தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் தோழர் எஸ்.ஏ.பெருமாள், "அதான் சொல்லிட்டாருல்ல, வெளிய போப்பா" என்று சொன்னவுடன், "நான் ஏன் வெளியே போகவேண்டும்?" என்றவாறு முகத்திற்கு நேராக மிரட்டும் தொணியில் முறுக்கிக் கொண்டு நிற்கும்போது அருகில் நின்ற இரு தோழர்கள் என்ன சண்டையிழுக்க வந்தாயா? வெளிய போய்யா என்று அவரை வெளியேற்ற முயன்றார்கள், அப்போதும் அவர் உடனடியாக வெளியேறாமல் தன் இருக்கைக்குக் சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து அரங்கைவிட்டு வெளியே சென்று நிகழ்ச்சி முடியும் வரை வெளியில்தான் இருந்தார்.//

அடுத்த அறிவிப்பு என்று அடுத்த புளுகையும் சரவணன் பொய் பேச ஆரம்பித்துவிட்டார்.  அய்யா சரவணன், நீங்கள் மேடைக்கு எந்தப் பக்கம் எங்கு இருந்தீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நான் மேடையின் அருகே தான் இருந்தேன். ஒரு அடி எடுத்து வைத்திருந்தால் மேடைக்கு சென்றிருக்க முடியும். அதற்குள்தான் உங்கள் தோழர்கள் என்னை வாங்க வசு என வெளியே அழைத்துச் செல்ல முயற்சித்தனர். இழுத்தவர்களும் தெரிந்தவர்களே. அடுத்து பெரியவர் எஸ்.ஏபி எப்படி கைகளை அசைத்து விரட்டினார் என்று உங்கள் கருத்துச் சுதந்திர கண்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அது முட்டுச் சந்தில் விழி பிதுங்கி நிற்கிறது.

உண்மை இப்படி இருக்க, நீங்கள் புளுகுவதற்கான ‘அழுத்தமான காரணங்கள்’ என்ன? மேலும் ஒருவரை முக்கியமான ஆளுமை எனக் கருதினால் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்கிற உங்களது தமுஎகசவின் மனநிலையை இங்கு நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். என்னை இழுத்துக்கொண்டிருந்தபோது ஆதவன் மேடையில் என்ன உளறினார் எனத் தெரியாது, ஆனால் இப்பொழுது நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். ஒரு ஆளுமைக்கு விருது வழங்கும்போது கேள்வி கேட்பது மனநோய் என்று.

அய்யா சரவணாரே, முன்ன பின்ன எதாச்சும் கூட்டத்துக்குப் போயிருக்கீங்களா, இல்ல அங்கையும் வேடிக்கை பார்த்துட்டு வந்துடுவீங்களா? நீங்க வேடிக்கை பார்க்கக் கூட எந்தக் கூட்டத்துக்கும் போனதில்லேன்னு நினைக்கிறேன். (தமுஎகச கூட்டத்துக்கு எத்தனை தபா போயிருக்கேன் தெரியுமா என அளக்க வேண்டாம். தமுஎகச கூட்டங்களுக்கு மட்டுந்தான் போவேன் என்பது அடையாள அட்டை வைத்துக் கொண்டு அலைவதற்கு சமம்.) இனியாவது பல கலந்துரையாடலுக்குப் போங்க. உலகம் எப்டி சிந்திக்குது, என்னெல்லாம் பேசுதுன்னு பாருங்க. நான் இருக்கிறதுதான் ஒரே அமைப்பு, அதுதான் கருத்துச் சுதந்திரம், நாங்கதான் அதை ஜனநாயகமா மேய்கிறோம்னு சொல்லாதீங்க. சரியா?

ஒருநபரைப் பற்றி, மனநோய்னு ஒருத்தர் சொல்லுறாரு, அதுக்கு எல்லாரும் கையைத் தட்டிக் கும்மாளம் போட்டிருக்கீங்கன்னா உண்மையில் யாருக்கு மனநோய். அந்த தனிநபருக்கா இல்லை கூட்டத்துக்கா? கருத்துச் சொன்ன ஒருத்தரையே இந்த பாடு படுத்துறீங்கன்னா, உங்ககிட்ட நிஜமாவே மனநோய் பிடித்த ஒருவர் சிக்கினால் மண்டையில் அடித்தே காலி செய்துவிடுவீர்கள்.

அந்தக் கூட்டத்தில இருந்த எஸ்.வி.ஆர், தமிழ்ச்செல்வன் எல்லாம் என்ன பண்ணிட்டு இருந்தாங்கன்னுதான், என்கிட்ட தகவல் சொன்ன தோழர்கிட்டக் கேட்டேன். அமைதியா இருந்தாங்கன்னு சொன்னாங்க. அப்பவே முடிவுக்கு வந்துடுச்சு உங்க கருத்துச் சுதந்திரம்! ஆனா தமிழ்ச்செல்வன் “பேசுனதையே பேசாத, அடுத்த விசயத்துக்குப் போகலாம்” என ஆதவனிடம் கீழிருந்து மேடையை நோக்கிச் சொன்னதாக தோழர் ஒருவர் சொன்னார்.

தமுஎகச ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்னவெனத் தெரியுமா சரவணன்! கலந்துரையாடல் எனச் சொல்லியதை நம்பி தன் கருத்தை மேடையில் சொன்னவனை வெளியே தள்ளுவதும், மனநோயாளி எனச் சொல்லுவதும்தான். இந்த லட்சணத்தில், ‘உண்மை நடந்தது என்ன!’ என்கிற பாணியில் நீங்கள் புளுகின் மேல் புளுகாக அவிழ்த்துவிடுகிறீர்கள். அதற்கும் நாலைந்து முற்போக்கு குண்டாஸ்களின் கைதட்டல் வேறு.

உங்கள் கருத்துச் சுதந்திரத்தின் அழகு பளீரெனத் தெரிகிறது.

புளுகு எண்; 4

//ஒரு அறிவார்ந்த புரிதலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் எதிர்பாராமல் நடந்த இறுக்கத்தைப் போக்கி, வந்திருந்தவர்களை சகஜ நிலைக்கு கொண்டுவருதற்கும் உற்சாகப்படுத்தும் நோக்கிலும் மேடையேறிய பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், "ஆம் நாங்கள் தவறு செய்துவிட்டோம். தோழர் எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞர் என்று போட்டிருக்கக் கூடாது...//மார்க்சியப் பேரரறிஞர் என்று போட்டிருக்க வேண்டும்!" என்று சொல்லிவிட்டு இறங்கினார்.//

இப்படி எழுத சரவணனுக்கு உண்மையிலேயே கூசவில்லையா,  எப்படிக் கூசும், அவரது  அமைப்பின் மாநிலச் செயலாளர் சு.வெங்கடேசனுக்கே  மேடையேறி இப்படி ஒரு பதிலைசொல்லக் கூசவில்லையே.

எளிய கேள்வியாக இதை முன்வைக்கிறேன்:

ஒரு அமைப்பு ராஜதுரையை மார்க்சிய அறிஞர் என்று பட்டம் கொடுக்கிறது - அதை ஒருவன் அவர் மார்க்சிய அறிஞர் இல்லை, அதற்கு காரணம் இவை என மேடையில் சொல்லுகிறான். பதில் என்ன சொல்லியிருக்க வேண்டும். இல்லை நாங்கள் எஸ்விஆரை மார்க்சிய அறிஞர் என்றே மதிக்கிறோம், மார்க்சிய அரசியல் பொருளாதாரக் கோட்பாட்டுக்கும், மார்க்சியத் தத்துவத்துக்கும் அவர் செய்த பங்களிப்புகள் இவை என்று சொல்லியிருக்க வேண்டும். அதை விடுத்து கூட்டத்தை உற்சாகப்படுத்த இதைச் சொன்னார் என்பதை சரவணன் பெருமையாகச் சொல்லும்போது கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. வந்திருந்த கூட்டத்தை இன்னும் உற்சாகப்படுத்த வேண்டுமானால் இவர்தான் ராஜதுரை. எந்திரன் இரண்டாவது பாகத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடிக்கப் போகிறார் என்று சொல்லியிருந்தால் கூட்டம் எழுந்து நின்று கரகோஷங்களை எழுப்பியிருக்கும்.

என்ன கொடுமை இது. கேள்வி என்ன? உற்சாகமூட்ட அவர் வைக்கும் பதில் என்ன.

புளுகு எண்: 5

//இதில் முக்கியமாக இரண்டு விசயங்களை கவனிக்க வேண்டும். இவ்வளவு அசாதாரண நிலையிலும்கூட, தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த தமுஎகச தோழர்களும், தேனி மாவட்ட இடதுசாரித் தோழர்களும் கனிசமாக இருந்த அரங்கில், அவர்கள் தங்கள் இருக்கைவிட்டு எழுந்துவிடவோ, தலையீடு செய்யவோ முயற்சி செய்யவில்லை. வசுமித்ர மீதுள்ள அதிருப்தியையும் கோபத்தைபும் வெளிக்காட்டாமல். மிகவும் கட்டுக்கோப்புடன் அமைதி காத்தார்கள் என்பது ஒன்று.//

புளுகில் புளுகு நம்பர் ஒன் புளுகு. கட்டுக்கோப்புடன் கூட்டம் இருந்ததற்குக் காரணம் நடப்பது எதுவும் புரியாமல்தான் என முன்னமே விளக்கிவிட்டேன். ஆனால் நடந்துகொண்டிருப்பது என்ன எனப் புரிந்த ஆதவன் என்னை மனநோய் பிடித்தவர் என்று சொன்னார். வெளியே என்னை இழுத்துச் செல்ல தோழர்கள் முன்வந்தனர், உங்கள் முதுபெரும் தோழர் எஸ்.ஏ.பெருமாள் ஆஹா அற்புதம் போ போ என்றார். இதுதான் கட்டுக்கோப்பு ஜனநாயகம். கலந்துரையாடல் எனப் பேரைப் போட்டு ராஜதுரையை மேடையில் அமரச் சொல்லி கீழிருந்து கேள்வி கேட்க கார்ட்லெஸ் மைக் கொடுத்தது கட்டுக்கோப்பு, அதற்கு காரணமாக வயதைக் காரணம் காட்டியது மற்றொரு கட்டுக்கோப்பு, கருத்தை முன்வைத்தவனை வெளியே போ எனத் துரத்தியது ஆகப் பெரும் கட்டுக்கோப்பு, மனநோய் எனச் சொன்னது கருத்துச் சுதந்திரம். தமுஎகசவின் கட்டுக்கோப்பு எப்படியெல்லாம் செயல்படுகிறது.

புளுகு எண்:6

//மற்றொன்று, அதே மனநிலையில் வெளியில் நின்றிருந்த -வசுமித்ரவுடன் நட்பில் இருக்கும் - சில தோழர்கள் அவ்வளவையும் சகித்துக்கொண்டு அவரோடு இயல்பாக உரையாடினார்கள் என்பது.//

சகித்துக்கொண்டு இயல்பாக உரையாடினார்கள் என்பது எவ்வளவு பெரிய பொய். சகிக்க முடியாமல் வெளியே போகச் சொல்லிவிட்டு வெளியே வந்த பின் சகித்து கொண்டு உரையாடினார்களாம். என்ன கூத்து இது. ஏன் சகித்துக் கொண்டு உரையாட வேண்டும். அப்படி சகித்துக்கொண்டு உரையாட வேண்டுமென்றால் உள்ளேயே உரையாடியிருக்கலாமே. அப்படி சகித்துக்கொண்டு நடந்த உரையாடல் என்ன தெரியுமா ?

குண்டாஸ்; எங்க அமைப்புல எதுக்கு நீ கேள்வி கேட்கிற?
நான்;சரிங்க அப்புறம் எதுக்கு கலந்துரையாடல்னு போடுறீங்க?
குண்டாஸ்; அப்டித்தான் போடுவோம்
நான்; சரிங்க எஸ்விஆர் எப்டிங்க மார்க்சிய அறிஞரானாரு,
குண்டாஸ்; அதை எதுக்கு உங்கிட்டச் சொல்லணும்...

இதுதான் சகித்துக் கொண்டு ஜனநாயக முறைப்படி கட்டுக்கோப்போடு நடந்த உரையாடல். இதை உரையாடல் என்று சரவணன் சொல்லுவதைப் பார்த்தால் அவர் கற்றுக்கொண்ட உரையாடல் மரபு அற்புதம்.

புளுகு எண்: 7

//இன்னுமொரு முக்கியமான விசயம், அரங்கில் நடந்த இந்த சர்ச்சை குறித்து தமுஎகச தலைமையும் நிகழ்வில் கலந்துகொண்ட தோழர்கள் எவரும் இதுகுறித்து பொதுத்தளத்திலோ, இணையத்திலோ எந்தவொரு பதிவையும் பகிர்ந்து இதையொரு பிரச்சனையாக்க விரும்பவில்லை. ஏனென்றால், வசுமித்ர போன்ற நபர்களை வரலாறெங்கும் சந்தித்த இயக்கத்திற்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை! //

இருப்பதிலேயே உச்சபட்ச நகைச்சுவை இதுதான். நாங்க ஏன் கம்முன்னு இருந்தோம் தெரியுமா, வரலாறு… என்றெல்லாம் பிதற்றுவதற்கு முன் எஸ்விஆர் மார்க்சிய அறிஞரா இல்லையான்னு பதில் சொல்ல வார்த்தைகள் இல்லை என்பதை மறைக்கத்தான். ஏன் இப்பொழுது சரவணன் அவரது தமுஎகசவின் கட்டுக்கோப்பான ஜனநாயகத்தை முன்வைத்து அவர் எப்படி மார்க்சிய அறிஞர் என்று சொல்லி விளக்கியிருக்கலாமே. செய்யவில்லையே. ஏன்? வரலாறெங்கும் சந்தித்த இயக்கம் ஒரு கருத்துக்கு பதில் சொல்ல முடியாமல் கம்முன்னு இருக்கும் வரலாற்றை இங்குதான் பார்க்கிறேன்.

புளுகு எண்: 8

இன்றைய அசமத்துவான சமூகச்சூழலை மேலும் கெட்டிப்படுத்தத் துடிக்கும் பாசிச அரசியல் மற்றும் பண்பாட்டு போக்கு அதிகரித்து வரும் நிலையில் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் தமுஎகச என்ற அமைப்புக்கு இருக்கிறது. ஆனால், வசுமித்ர போன்ற உதிரிகளுக்கு அந்தப் பிரச்சனையை விடவும், அடுத்தவர் நடத்தும் நிகழ்வுகளுக்குச் சென்று குழப்பத்தை உருவாக்கி குளிர்காய்வதும், அதையே ஒரு பிரச்சனையாக்கி இணையத்தில் தனது இட்டுக்கட்டிய எழுத்துத் திறமையின் மூலம் பல மூத்த தோழர்களைக்கூட இழிவுபடுத்தி விளம்பரம் தேடுவதுதான் அவர்களது - புரட்சிகர செயல்பாடு - தலையாய பிரச்சனை!

இந்தப் பாசிச அசமத்துமான சூழலில்தான் நீங்கள் மார்க்சியத்தைச் சிதைத்த ஒருவருக்கு பட்டுக்குஞ்சம் கட்டி மார்க்சிய அறிஞர் என மேடை ஏற்றினீர்கள். அது எப்படி எனக் கேள்வி கேட்டதற்குத் தான் பாசிசக் குணத்தோடு வெளியே போகச் சொன்னீர்கள். அய்யா நான் உதிரியாக இருந்தாலும் பரவாயில்லை. எஸ்.வி.ஆர் எப்டி மார்க்சிய அறிஞர். இதுக்கு பதிலே வராதா சரவணன். கலந்துரையாடல், அனைவரும் வருக என்று போடாமல் கட்டுக்கோப்புடைய கேள்வி கேட்காத, சொன்னதற்கெல்லாம் தலையாட்டுகுற அவரது குண்டாஸ் ஆட்கள் மட்டும் வரலாம் என்று கொட்டை எழுத்தில் குறிப்பிட்டிருந்தால் அங்கு நான் வந்திருக்கவே மாட்டேன். அனைத்தும் நடந்த பின்னும், வைத்த கருத்துக்குப் பதில் சொல்லாமல் கம்முன்னு இருந்துவிட்டு அதுகுறித்து பொதுவெளியில் வைத்ததும் ஆற அமர யோசித்து இட்டுக்கட்டிய பொய்களை பொதுவில் வைத்து, சரவணன் அவரது அமைப்பை ஜனநாகயக அமைப்பு என இட்டுக்கட்டுவதும் விளம்பரம் தேடுவதற்கும் என்ன பெயர்.

//சென்ற ஆண்டுதான் துவக்கப்பட்ட இவ்விருதுக்கு தேர்வான முதல் ஆளுமை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள். தோழர்கள் ஆ.சி.சு, எஸ்.வி ஆர் ஆகிய இருவருமே வயதால் முதியவர்கள்தான். //

ஆ. சிவசுப்பிரமணியனை ஏன் மார்க்சிய அறிஞர் எனச் சொல்லவில்லை. அப்படி சொல்ல உங்களுக்கு எது வாய்ப்பளிக்கவில்லை. ஆ.சிவசுப்பிரமணியனின் ஆசிரியர் வானமாமலையை மார்க்சிய அறிஞர் எனச் சொல்லலாம். எப்படி எனக் கேட்டால் என்னால் பதில்களை பட்டியல்களிட்டுத் தரமுடியும். ஆனால் எஸ்.வி.ஆர் எப்படி மார்க்சிய அறிஞரானார் என ஒரு சிறிய விளக்கத்தையாவது தரமுடியுமா. வேண்டுமென்றால் அறிக்கையை மொழிபெயர்த்தார், விளக்கம் கொடுத்தார் அதனால் மார்க்சிய அறிஞரானார் என்று ஏதேனும் ஒரு நகைச்சுவையை அவிழ்த்துவிடாதீர்கள் தோழரே. அது இன்னும் குழப்பும்.

//இவர்கள் மட்டுமல்ல இனி வருங்காலங்களிலும்கூட இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாகவே இருக்கும் சாத்தியக்கூறுகளே அதிகமாக இருக்கலாம்.ஏனென்றால், ஒருவருடைய நீண்டகால சமூகப் பங்களிப்பை கணக்கில் கொள்ள இந்த வயது விசாலம் முக்கியமானதாக இருக்கும்!//

சந்தோசம் அப்படி நீண்ட வயதில் நீண்டகால சமூகப் பங்களிப்பை கணக்கில் கொண்டு எஸ்.வி.ஆர் மார்க்சிய அறிஞராக மார்க்சியத்துக்குச் செய்த பங்களிப்புகள் எவை என்று சரவணன் சொல்லுவாரா?

//ஆனால், அதைவைத்து //(முதியோர் விருது *)// -என்று கொச்சைப்படுத்துவதும், களத்திலும், கருத்திலும் காத்திரமான பங்களிப்பு செலுத்தும் செயல்பாட்டை வெறும் சாதனை என்று மட்டும் குறுக்கிப் பார்ப்பதுமான சிந்தனை வறட்சியை எள்ளி நகையாடலாமே தவிர ரசிக்க முடியாது!//

சரவணன் நீங்கள் உங்களை எள்ளி நகையாடி நீங்களே கொஞ்சிக்கொண்டு இருங்கள். அதைச் செஞ்சார், இதைச் செஞ்சார், களத்திலும் கருத்திலும் காத்திரமான பங்களிப்பாக அவர் எதைச் செஞ்சார்னு சொல்லுங்க, அறிஞரா மார்க்சியத்துக்கு என்னெல்லாம் செஞ்சிருக்காருன்னு பட்டியல் போடுங்க. மத்ததை அப்புறம் எள்ளி நகையாடலாம்.

//அங்கு வந்திருந்த தமுஎகச தோழர்களில் நூற்றுக்கு 99 சதமானோர் ராஜதுரை அவர்களின் நூலைப் படித்திருக்கவே வாய்ப்பில்லை.// - என்ற அரிய கண்டுபிடிப்பை வசுமித்ர சமீபத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது இதையும் கண்டுபிடித்தார்.தான் மட்டும்தான் மெத்தப்படித்த மேதாவி என்றும், மற்றவர்கள் எல்லாம் எதுவும் தெரியாத கூமுட்டைகள் என்றும் பார்க்கும் பார்ப்பனிய சிந்தனையின் வெளிப்பாடுதான், //வந்திருந்த தோழர்கள் பலருக்கு நம்ம சேர்ந்திருக்கிற அமைப்பு யாருக்கோ பரிசு கொடுக்குதாம்ல.. என்ற உணர்ச்சியே மேலோங்கியிருந்தது. அது தவிர வேறு எதும் இல்லை.// -என்ற கதையாடல்.

சரவணன் சொல்லியிருப்பதை முன்வைத்துப் பேசவேண்டுமென்றால் 99 சதத்தைக் கூட விட்டுவிடுவோம், சரவணன் சொல்லுவதைப் பார்த்தால் எஸ்.விஆரை கரதலப்பாடமாக அவர் கற்றவர் என்று தெரிகிறது. அவராவது மார்க்சிய அறிஞராக எஸ்.வி.ஆர் என்ன பங்களிப்புச் செய்தார் என்று சொல்லட்டுமே. சரவணனுக்கு எது எதற்கு பார்ப்பனிய சிந்தனை எனப் பெயர் வைக்கவேண்டும் என்கிற சிற்றறிவு கூடவா இல்லை. அவரது கருத்தை வைத்துப் பார்த்தால் மார்க்சியத்துக்கு அறிஞராக மெத்த படித்த மேதாவியாக சபையில் ஏற்றிய எஸ்.வி.ராஜதுரையைத் தேர்ந்தெடுத்த அவரது  அமைப்புதான் பார்ப்பனியப் பார்வையைக் கொண்டதாக இருக்க முடியும் என என்னால் விவாதிக்க முடியாதா. கொடுமைக்கு ஒரு எல்லையே இல்லையா?

//தோழர்கள் அருணன், ச.தமிழ்செல்வன், ச.செந்தில்நாதன், சு.வெங்கடேசன், கே.வேலாயுதம் ஆகிய 5பேர் கொண்ட நடுவர்குழுதான் இந்த விருதுக்கு இவரை தேர்வு செய்தது. இந்த 'முதுபெரும் தோழர்கள்' வேலை வெட்டி ஏதுமற்றவர்கள். எனவே, வசுமித்ர தனது புரட்சிக் கம்பெனியில் ஏதாவது வேலையிருந்தால் போட்டுத்தரம்படி கேட்கலாம்!

சரவணன் இப்பொழுது இவர்கள் பெயரை இழுத்துவிட்டிருக்கிறார். நல்லது. தோழர்கள் அருணன், ச.தமிழ்செல்வன், ச.செந்தில்நாதன், சு.வெங்கடேசன், கே.வேலாயுதம் இனி இவர்கள் ஐவரும் இனி எஸ்.வி,ஆர் எப்படி மார்க்சிய அறிஞரானார் என்று விளக்கவேண்டும். விளக்குவார்களா?

புளுகு எண்: 9
//ஆதவன் தீட்சண்யா ஒருங்கிணைப்பாளர் என்ற தோற்றத்தை விடுத்து பாடிகாட் முனிஸ்வரராக முன்னே வந்தார். என்ன கேள்வி கேட்கப் போகிறீர்கள் என்று கேட்டார். ( அதற்கு முன்னே கலந்துரையாடலுக்கு என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று அங்கு குறிப்புத் தரவில்லை) அதை அவரிடமே கேட்கிறேன் என்றேன். உடனே என்ன கேள்வின்னு சொல்லுங்க என்று மேடையிலிருந்தே கேட்டார். என் மனதில் தோன்றிய முதல் கேள்வி மசால் போண்டா எப்படிச் செய்யணும் என்பதே! பதில் சொல்ல விரும்பி ராஜதுரை இருப்பதைக் கூட மறந்து என்ன கேள்வி என்னிடம் சொல் என்று மிரட்டுபவரை எப்படி ஒருங்கிணைப்பாளராகக் கருதமுடியும் (ஆனால் இதையே நான் செய்திருந்தால், ஆதிக்க சாதி, தலித் ஒடுக்குமுறை, வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயும் என்று முகநூலில் இந்நேரம் அலப்பறை செய்திருப்பார்!) அதனால்தான் அவரை பாடி காட் முனீஸ்வரன் என்றேன்.//- இதற்கு நீண்ட விளக்கம் எல்லாம் தேவையில்லை. நான் மேலே குறிப்பிட்ட உண்மை நிகழ்வுகளோடு பொருத்திப் பார்த்தால், வசுமித்திரவிடம் அப்பட்டமான சாதி ஆதிக்க சிந்தனை இருப்பது புலப்படும்.

சரவணன் இந்த சாதி முத்திரைப் பூச்சாண்டியையெல்லாம் என்னிடம் காட்டவேண்டாம். இது உங்களுக்கு லைக் போடும் சாதியற்ற பெருமகன்களின் குஷிக்குத் தீனியாகுமே தவிர வேறு எதற்கும் உதவாது. ஆதவனுக்கு வக்காலத்து வாங்க வந்து அவரது சாதிவெறியை நீங்கள் வெளிப்படுத்திய விதம் அபாரம். ஒருவர் கேள்வியை வைத்ததும், உடனே ஓடி வந்து வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயும் என்று எடுத்துப்போட்டு மிரட்டும் ஆதவன் சாதிவெறியரா இல்லையா என நான் எழுதியதைப் படித்தவர்கள் உணர்வார்கள். எதையும் முழுதாகப் படிக்காமல் நினைத்த புளுகை யோசித்து அவிழுத்துவிடும் உங்கள் புளுகுப் புத்திதான் இதில் காணக் கிடைக்கிறது.


புளுகு எண்: 10

//என்னை மார்க்சிய அறிஞர்னு நான் சொல்லலை, தமுஎகச சொல்லுது என்று சொல்வதன் மூலம் இது தமுஎகச பதில் சொல்ல வேண்டிய கேள்வி, என தமுஎகசவை பல்வேறு வாக்கியங்களில் உணர்ச்சிமயமாகத் தூண்டிவிட்டார். (என் கட்சிக்காரர்கள் யாரேனும் வன்முறையில் இறங்கக்கூடாது என்று அரசியல்வாதிகள் சொல்வது போல் வன்முறைக்கான முஸ்தீீபும் அங்கு நடந்தது )!//- வசுமித்திரவுக்கு நகைச்சுவை உணர்வு இருப்பது தவறில்லை. ஆனால், சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு சிரியுங்கள் என்று சொன்னால் சிரிப்பு வராது, பரிதாபம்தான் வரும்!//

சரவணனது நகைச்சுவை உணர்ச்சியை மேற்கண்ட பாராவில் படித்த எனக்கு நவத் துவாரங்களிலும் சிரிப்புப் பொத்துக்கொண்டு வருகிறது. என்ன செய்ய. கூட்டத்தில் எஸ்.வி,.ஆர் மார்க்சிய அறிஞர் இல்லை என்று சொன்னதுக்கு, “அப்டின்னு நான் சொல்லலை தமுஎகச சொல்லுதுன்னு: அவரு பண்ண காமெடிக்குப் பின்னால் இருக்கும் நுண் அரசியல் எதுவும் புரியாத அவரது புளுகுப் புத்திக்கு விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் - இதற்கு தமுஎகசாவே பதில் சொல்லும் அவர்களிடம் கேள் என்று ஒரு அர்த்தமும் இருக்கிறது. பார்த்தீர்களா நீங்கள் என்னை இப்படி அழைக்க அவன் இப்படி இல்லை என்கிறான் என்று தூண்டிவிடும் அரசியலும், இருக்கிறது. புளுகைத் தவிர சரவணன் புத்தியில் வேறேதேனும் சரக்குகள் இருக்கிறதா

//நான், வேண்டுகோளாக அல்ல, சவாலாகவே சொல்கிறேன்...
ஆர்எஸ்எஸ் அல்லது சாதி, இன அடிப்படைவாத அரங்க நிகழ்வுகளில் கூட வேண்டாம், மற்ற இலக்கிய அமைப்புகள், இலக்கிய குழுக்கள் நடத்துகிற அரங்க நிகழ்வுகளில் போய் இப்படி மேடையேறி முரட்டுச் சொற்பொழிவை முழுமையாக உளறிவிட்டு வசுமித்ர இதுபோல் இயல்பாக வெளியேறி, இறதிவரை அங்கிருந்து அனைவரிடமும் சகஜமாக உரையாட முடியுமா?//

அய்யா சரவணன்... என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. நான் எந்தெந்த மேடைகளில், எந்தெந்தக் கூட்டங்களில் பேசினேன் என தெரியாது. எந்த அமைப்பில் இருந்தேன், என்னென்ன பணிகள் செய்தேன் என எதுவும் உங்களுக்குத் தெரியாது. உங்களைப் போல் இவர் இப்படியெல்லாம் செய்தார் என அற்புத சுகமளிக்கும் கூட்டத்தை நடத்தி நான் செய்ததைச் சொல்லவும் எனக்குத் தெரியாது. ஆனால் செய்திருக்கிறேன் என்பதை நான் இருந்த அமைப்பு உணரும். ஆனால் நீங்கள் இதில் எதையேனும் ஒன்றையாவது செய்திருக்கப் போவதில்லை என்பதை உங்கள் கேள்வியில் இருக்கும் நக்கலே உணர்த்துகிறது. பதிலுக்கு நான் சொல்லவேண்டுமென்றால், உங்கள் புளுகைக் கைதட்டி வரவேற்றவர்களுக்கும் இந்தக் கேள்வி பொருந்தும். ஜனநாயகம், தோழமை, கருத்துச் சுதந்திரம் என மூச்சுக்கு முந்நூறுதரம் சொல்லும் உங்கள் அமைப்பே என்னை வெளியே போ என்றுதான் சொல்லியிருக்கிறது. புத்தகம் பேசுது முகநூல் பக்கம் என்னைத் தடை செய்திருக்கிறது. இது போன்ற நடத்தைகளிலிலிருந்தே உங்களையும், உங்கள் புளுகையும், அந்தப் புளுகுக்கு புனுகு பூசி கைதட்டும் முற்போக்குக் குண்டர்களையும் புரிந்துகொள்ள முடிகிறது. இதையெல்லாம் விட இயல்பாக வெளியேறி என்று சந்தடி சாக்கில் ஜனநாயகக் கூட்டம்தான் தேனியில் நடந்தது என்ற பெரும் புளுகை மறுபடி மறுபடி அவிழ்க்கவேண்டாம்.

அதைவிடப் பெரும் புளுகு எஸ்.வி.ஆருக்கு நானாகத்தான் முத்தம் இட்டேன் என வெளியே வராது உள்ளேயே இருந்த ஆதவனின் பெரும் புளுகு. தயவு செய்து எஸ்.வி.ஆருக்கு எல்லா இடங்களிலும் டப்பிங் கொடுப்பதை விட்டுவிட்டு நீங்கள் சொன்னது படி தமுஎகசவுக்கு பல பெரும் பணிகள் இருப்பதை நினைவூட்டுங்கள். இல்லை தமுஎகசவை விட்டுவிட்டு எஸ்.வி.ஆர் உருவம் பொறித்த கொடியைக் கையில் கொடுத்துக் கத்தவிடுங்கள்.

புளுகு எண்: 11
//தமுஎகச இவருக்கு அளித்தது கருத்துச் சுதந்திரம். அதைப் பயன்படுத்தி இவர் நிகழ்த்தியது கருத்து வன்முறை.//

ஆம் ஒரு கருத்தை வைத்ததும் வெளியே போகச் சொன்னது கருத்துச் சுதந்திரம், எஸ்.ஏ.பி விரட்டுவது போல் கையசைத்தது ஆகப்பெரிய கருத்துச் சுதந்திரம். அய்யா கருத்துச் சுதந்திரத்துக்கும் வன்முறைக்குக்கும் வித்தியாசம் தெரியாமல் நீங்கள் கருத்துச் சொல்லும் சுதந்திரத்தை மெச்சி மெய் சிலிர்க்கிறேன்.

//அரசியல், கலை இலக்கியத் துறையில் அளப்பரிய பங்களிப்பு செலுத்தி வருபவரும், எவ்வளவு பெரிய கொம்பனையும் நேருக்கு நேர் களத்தில் சந்தித்தவரும், இன்றைக்கு கலை இலக்கியத் துறையில் முன்னணி படைப்பாளர்கள், கலைஞர்கள் பலருக்கும் வளர்நிலையில் ஆகர்சமாக இருந்தவருமான தோழர் எஸ்.ஏ.பெருமாள் பற்றி வசுமித்ர //அங்கு கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த, ஒரு ஓங்குதாங்கான பெரியவர் “போ போ அதான் பதில் சொல்லியாச்சுலஎன ஒரு தெரு நாயை விரட்டுவது போல் கையை வீசிக்காண்பித்து விரட்டினார். “என்ன விரட்டுறீங்களாஎன்றதும் அது அது என பம்மினார். ( அவர் எஸ். ஏ . பெருமாள் என்று அறிந்தேன். மிகவும் நகைச்சுவை உணர்வுக்கு ஆளானேன் என்பதை சொல்லவும் தேவையில்லை)// என்று எழுதுகிறார். இந்த உலகப் புரட்சியாளருக்கு எஸ்ஏபி என்றால் யாருன்னே தெரியாதாம்!//

அந்தக் கொம்பன் செய்த பங்களிப்புகளில் ஒன்றிரண்டைப் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.எதுவும் தேறவில்லை. அவரை நேரில் பார்த்ததில்லை.சரவணன் மற்றும் குண்டாஸ் எல்லாம் வரிந்து கட்டி செயலாற்றிய விதம் கண்டு அவர்தான் எஸ்.ஏ.பி என அறிந்தேன். அவர் ஒரு கொம்பன், அதனால் அவரைத் தெரிந்திருக்கவேண்டும் என்பதெல்லாம் சற்று அதிகம்.

//தோழர் எஸ்ஏபியின் அரசியல் அனுபவ வயதுகூட இல்லாத இந்த 'வசு குவேரா'வைப் பார்த்து எஸ்ஏபி பம்மினாராம்!!//எஸ்ஏபி அன்று அமைதி காத்தார் என்றால் அதற்குப் பெயர் பம்முதல் அல்ல... பெருந்தன்மை. எஸ்ஏபி முகத்துக்கு நேரே முறைத்தபடி முறுக்கிக் கொண்டு நின்ற போதும் அரங்கில் இருந்த பெரும்பாலான தமுஎகச தோழர்கள் யாரும் எழுந்துவரவில்லை என்பது வசுமித்ர என்ற பூச்சாண்டிக்கு பயந்துகொண்டு அல்ல... ஸ்தாபன ஒழுங்குக்கு கட்டுப்பட்டு என்று அந்த எல்லாம் படித்துமுடித்த ஏகாம்பரத்திற்கு யாராவது எடுத்துச் சொல்ல வேண்டும்.//

என்ன நடக்கிறது என்பதை அறியாத கூட்டத்தின் மௌனத்தை மறுபடி மறுபடி கட்டுக்கோப்பு, பெருங்கோப்பு என்று சரவணன் உளறுவதை நினைத்து எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதில் வயதை எல்லாம் வைத்து எடைபோடுவது அபத்ததிலும் அபத்தம். வேண்டுமென்றால் அவரது  அமைப்பில் இருக்கும் வயதான நபர்களைத் தேடி எடுத்து அவரது அமைப்புக்கு செயலாளர், தலைவர் பதவிகளைக் கொடுக்கலாம். எவர் கேள்வி கேட்டாலும்  - ஏய் நீ வயதுக்கு தகுந்தபடி பேசு என்று சொல்லலாம். இதை தமுஎகசவில் மட்டுமல்ல கட்சிகளுக்கும் நடைமுறைப்படுத்துங்கள். (ஆனால் உஷார்! அதில் பார்ப்பனர்கள் அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் – உபயம் ஆதவன் தீச்சட்டி)

//வசுமித்தரவின் ஆதிக்க மனோபாவத்திற்கு சான்றாக அவரே சொல்வதை பாருங்கள்...//விழா தொடங்கி தமுஎகச தனது வாசிப்பில் சிறந்த நூல்கள் எனப் பரிசளித்து எழுத்தாளர்களை முன்மொழிந்தது. அது முன்மொழிந்த அனைத்து நூல்களிலும் எனக்கு கருத்து மாறுபாடு உள்ளதெனினும் அது குறித்துப் பேச அந்த மேடையில் ஏதுமில்லை.//தமுஎகச எந்தெந்த படைப்புகளுக்கு அல்லது யாராருக்கு விருது கொடுக்க வேண்டும் என்று இந்த நாட்டாமையிடம் கேட்டு, அவருக்கு கருத்து மாறுபாடு இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டுதான் கொடுக்க வேண்டும்! இல்லையென்றால் தமுஎகச போடும் மேடையில் ஏறி இவர் தீர்ப்புச் சொல்லுவார்!!//

அடக்கொடுமையே. என் கருத்து அதுதான் என்பது கூட ஆதிக்க மனப்பான்மையா. என்ன இது. சரவணன் உங்கள் அமைப்பு  நாட்டமைத்தனத்தோடு சில பல நூல்களை முன்வைக்கும் போது நான் என் கருத்தைச் சொல்லக் கூடாதா. இதில் ஆதிக்க மனோபாவம் எங்கிருக்கிறது. சாகித்திய அகாதெமி கொடுக்காத போது உங்கள் தமுஎகச கொந்தளித்ததையும், தமுஎகசவில் இருக்கும் எழுத்தாளர்கள் விருது வாங்கியபோது கொண்டாடித் தீர்த்ததையும் உங்கள் அமைப்பில் இருப்பவர்கள் எழுதி அதை எதையும் படிக்கவில்லையா. இல்லை பாசிச பயங்கரவாதம் எனச் சொல்லி பெற்ற விருதைத் திருப்பிக் கொடுக்காமல் கக்கத்தில் வைத்து பத்திரமாக அலைந்தது குறித்த விவாதங்கள் எதுவும் நடக்கவில்லையா.

//இதையே இப்படி வைத்துக் கொள்ளலாமா... இந்த கருத்துச் சுதந்திரப் போர்வாள், ஜனநாயக சக்கரவர்த்தி நடத்தும் எல்லா இலக்கிய நிகழ்வுகள் மற்றும் புத்தக வெளியீடுகளின்போதும் அங்கு கலந்துகொள்ளும் தமுஎகச தோழர்களுக்கு கருத்து மாறுபாடு இருந்தால் அந்த மேடையில் ஏறி அது குறித்து எதுவேண்டுமானாலும் பேச அனுமதிப்பாரா?//

அய்யா சரவணன், அதைச் செய்யவே வேண்டியதில்லை. அது தானாக நடக்கும். வாங்க கருத்துச் சொல்லுங்கன்னு நான் கூடும் கூட்டங்களில் விதவிதமா நோட்டிஸ் அடிக்கிறதுல்ல. கூட்டத்துக்கு வந்த வழிப்போக்கர் கூட கேள்வி கேட்கலாம். பதில் இருந்தால் இருக்கிறது என விளக்கம் கொடுப்பேன். விவாதிக்க வேண்டிய விவாதம் பெரியதாக இருந்தால் அது குறித்துப் பேசுவேன். இதில் என்ன சவால் வேண்டிக் கிடக்கு. வேண்டுமென்றால் உங்கள் அமைப்பின் நடத்தைகள் குறித்து உங்கள் தலைமையிலேயே கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறேன் நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள், நானும் பேசுகிறேன். சரியா?

//யாருக்கு விருது தர வேண்டும் என்றும், யாரை எந்த அடையாளத்துடன் அழைக்க வேண்டும் என்றும் முடிவு செய்வதற்கு கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் தமுஎகசவுக்கு நன்றாகத் தெரியும். வசுமித்ர போன்ற இலக்கிய போலீஸ்களிடம் அனுமதியோ அங்கீகாரமோ வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு அதில் மாறுபட்ட கருத்து இருந்தால், தனி மேடை போட்டு பொங்கிக் கொள்ளலாம்!//

ரெம்பச் சரியாச் சொன்னீங்க இனி நீங்க மேடை போட்டு வியாக்கியானம் பண்ணும்போது, தமுஎகச உறுப்பினர்கள் மற்றும் குண்டாஸ் மட்டும் வாங்கன்னு போர்டை மாட்டுங்க. நீங்க தேர்ந்தெடுத்திருக்கிற நூலை அவங்க மட்டுந்தான் படிக்கனும், அப்டிப்பட்ட நூலுக்குத்தான் பரிசு தருவோம்னு சொல்லுங்க.  எல்லாத்துக்கும் மேல நாப்பது ஆண்டு, நாங்க எப்போருந்து இது மாதிரி உளறுறோம்னு உளறாதீங்க.  இதை அப்டியே கொண்டு போனா - இருக்கிற அமைப்புலையே வயதான அமைப்புதான் உண்மையைச் சொல்லுங்கிற முட்டாள்த்தனத்துலையும் ,அதிகாரத்துலையும் கொண்டு போய் விட்டுட்டும்.

அண்டப் புளுகு எண்: 12

//அது கேள்வி என்பதைவிட தோழர் ஆதவனுக்கும் சிபிஎம் தோழர்களுக்கும் சிண்டுமுடியும் நரித்தனம் என்பதே பொருத்தமாக இருக்கும்!//மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகமும் இருப்பது குறித்து தனக்கு கேள்வி இருப்பதாக// - எந்த ஊடகத்தில், எந்தப் பேட்டியில், எந்த சூழலில், எதுமாதிரியான கேள்விக்கு ஆதவன் சொல்லியுள்ளார்? சரி, அப்படியே சொல்லியிருந்தாலும் அது அவரது பார்வை. அவரது கருத்து. அதில் வசுவுக்கு என்ன பிரச்சனை? கருத்துரிமை பற்றி வாய்கிழிய பேசும் இவருக்கு ஆதவனின் கருத்துரிமை என்று வருகிறபோது மட்டும் ஏன் எரிகிறது?//

கொடுமையிலும் கொடுமை. பேசுறதுக்கு முன்னாடி இது என் கருத்துன்னு சொல்லுங்க, இது என் அமைப்போட கருத்துன்னு சொல்லுங்க எதையும் சொல்லாம சொல்லிப்போட்டு எதிர்ப்பு வந்தா அது என் தனிப்பட்ட கருத்துன்னு சொல்ல வேண்டியது. எதிர்ப்பு வல்லையா, மாநில துணைச் செயலாளர் கருத்துன்னு கொட்டை எழுத்துல போர்டை மாட்ட வேண்டியது.

ஆதவன் அப்டிச் சொன்ன சூழல் என்ன சூழல்னா - கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியப் பிடிச்சு கம்யூன் அமைக்கும் போது சொன்ன வார்த்தைங்க அது. போங்க போயி தேடிப் பாருங்க. உங்க அமைப்புல இருக்கிறவரு எப்டி உளறுனாருங்கிறதை நீங்களே படிக்க மாட்டீங்க போலையே. இல்ல மண்டபத்துல யாராவது சொல்லச் சொல்ல இதை எழுதுனீங்களா சரவணன். தலித் அமைப்புக்கும் மார்க்சியக் கட்சிக்கும் சிண்டு முடியுற வேலைய அமைப்புல இருந்துக்கிட்டே பார்க்கிறது நானா, ஆதவன் தீச்சட்டியா? நீங்களே சொல்லுங்க. பேட்டியை உத்துக் கவனிங்க. சந்தடி சாக்குல ரங்கநாயகம்மா புத்தகத்தை பத்தி நாலஞ்சு அவதூறை அவுத்து விட்டதையும் பாருங்க. இன்னும் சொல்லணும்னா அந்தக் கேள்வியை மேடையில வைக்கிறதுக்கு முன்னாடி மாநில செயலாளர் சு.வெங்கடேசன் கிட்டச் சொன்னேன். அந்தக் கேள்விகளை கலந்துரையாடலில் எஸ்.வி.ஆரிடம் என் கருத்தாகவும் கேள்விகளாகவும் வைப்பதாகச் சொன்னேன்.

கேள்வி 1 எஸ்விஆர், மார்க்சிய அறிஞர்னு உங்களைப் போட்டிருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு நீங்க மார்க்சியத்துக்கு அறிஞரா எந்தப் பங்களிப்பையும் செஞ்சது இல்ல. இதை எப்டிப் புரிஞ்சுகிறது.

கேள்வி 2 ஒரு புத்தகத்தை ஆதவன் பீன்னு சொல்லுறாரு. தமுஎகச அமைப்பில் இருப்பவர், மார்க்சியத்தைப் படிப்பவர் என்று சொல்லும் அவர் பீ என்று சொல்வதை எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்.

கேள்வி 3 தமுஎகசவில் மாநில பொறுப்பில் இருக்கும் ஆதவன், மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பார்ப்பனர்கள் அதிகம் இருப்பதாக, அவருக்கு கேள்விகள் இருப்பதாக சொல்லுகிறாரே இது குறித்து உங்கள் புரிதல் என்ன?

கேள்வியின் சாரங்களைச் சொன்னதும் சு.வெங்கடேசன் சொன்னது “புல் பார்மில் வந்திருக்கீங்க போல, எது கேட்கிறதா இருந்தாலும் நிதானமாக் கேளுங்க” என்றார். அவ்வளவே.

ஆனால்  இதில் எங்கு பிரச்சினை என்றால் சமதளத்தில் கலந்துரையாடாலாக அது நடந்திருந்தால். இவையனைத்தும் ஒரு நல்ல உரையாடலாக பரிணமித்திருக்கும். ஆனால் மேடையில் அவர் அமர, கேள்வி பதில் நிகழ்ச்சியாகிப் போனதில்தான் பிரச்சினை. அதுதான் மேடையில் வைத்து அவமானப்படுத்திவிட்டான் என்கிற உளவியல் சிக்கலாக மாறி எஸ்.வி.ஆரைப் பேச வைத்தது. நீங்கள் முதற்கொண்டு இப்பொழுது அனைவரும் அதையேதான் பேசுக்கொண்டிருக்கிறீர்கள்.

//தமுஎகச தோழர்களை 'தமுஎகச அடிப்பொடிகள்' என்று விளிக்கும் வசுமித்ர, எந்த மகா சன்னிதானத்தின் 'முடிப்பொடி'யாகவும் இருப்பது குறித்து எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை! ஆனால், ஒரு 'அமைப்புக்கு' நம்பிக்கையாக இருப்பதாலேயே நாங்கள் அடிப்பொடி என்றால் அது எங்களுக்குப் பெருமையே!//

நம்பிக்கையின் அடிப்படையில் இருக்க வேண்டியது மடங்கள், கோவில்கள் மற்றும் பூசாரித்தனங்கள் தானே தவிர முற்போக்கு அமைப்புக்களிடமும் புரட்சிகர கட்சிகளிடமோ இல்லை. எந்த விமர்சனமும் அற்ற இந்த நம்பிக்கைதான் அராஜகத்துக்கும், தனிநபர் துதி பாடலுக்கும் இட்டுச் செல்கிறது. சரவணன் கொடுத்த இந்த ஒப்புதல் வாக்குமூலமே, எனக்கு எந்தக் கேள்வியும் சுயமாக இல்லை. அமைப்பு சொன்னால் சரிதான் என மண்டையாட்டுகிற அவரது  மனப்பக்குவத்தை, அமைப்பின் அடிப்பொடியாக இருக்க பெருமைப்படும் அவரது அறிவை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது.

//தமுஎகச ஒரு பரந்த விரிந்து ஜனநாயக மேடை. இதில் 'சமூகப் பொறுப்பு மிக்க' எல்லா கலை இலக்கிய ஆளுமைகளுக்கும் இடம் உண்டு. தமுஎகசவின் அனைத்து நிலைபாடுகளையும், அழைக்கப்படும் கருத்தாளர்கள் ஏற்க வேண்டும் என்பதோ அல்லது கருத்தாளர்கள் அனைவரது கருத்துகளோடும் தமுஎகசவுக்கு முழு உடன்பாடு இருக்க வேண்டும் என்பதோ அவசியமில்லை.மாற்றுக் கருத்துள்ள ஒருவர் மற்ற எல்லோருமே தன் கருத்தை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று உத்திரவிடுவதும், மாற்றுக் கருத்தாளருக்கு அளிக்கப்பட்ட உரிய கருத்துச் சுதந்திரத்தை மதித்து சொல்லப்பட்ட கருத்துமீதான தனது விமர்சனத்தை எவ்வளவு கூர்மையாகவும் வைக்கலாம், ஆனால், அதை விடுத்து விருதுக்காக அழைக்கப்பட்டவரை இழிவுபடுத்துவது போல் அராஜகம் வேறு எதுவும் இல்லை. தேனி தமுஎகச நிகழ்வில் வசுமித்ர செய்தது அதுதான்.//

ஆம். மாற்றுக்கருத்தை வைத்ததும் வெளியே போ என்பதுதான் கருத்துச் சுதந்திரம். அந்த அடிப்படையில் மாற்றுக்கருத்தை அங்கு வைத்ததுதான் அராஜகம். அருமையான விளக்கம்.

ஆகாசப் புளுகு எண் 13

//முற்போக்கு அமைப்புகள் எதுவானாலும் மற்ற எல்லா முரண்பாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு தலைவிரித்தாடும் இந்துத்துவ பாசிசத்திற்கும் சாதி ஆதிக்க வெறித்தனங்களுக்கும் எதிராக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் தமுஎகசவின் வேண்டுகோள்.அதுமட்டுமல்ல...மார்க்சிஸ்ட் - அம்பேத்கரிஸ்ட் - பெரியாரிஸ்ட்கள் இதே நோக்கத்திற்காக ஒன்றிணைய வேண்டிய இன்றைய காலச்சூழலில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் முற்போக்கு அமைப்புகள் மீது அட்டைக் கத்தி வீசும் சீர்குலைவுவாதிகளை கருத்தியலாகவும் அரசியலாகவும் தமுஎகச சந்திக்கும்.//

இது வேண்டாம் என்று நான் எங்காவது சொல்லியிருக்கிறேனா என்ன. என்னங்க இது ஒரே லட்சையா இருக்கு. ஒருத்தன் சொல்லாத கருத்தைச் சொல்லி, அவரு இப்டித்தான் நினைக்கிறாரு. ஒன்றுபடுங்கள் ஓங்குங்கள் என உற்சாகப் பதிலளித்தால் சரவணன் போராளியாகிவிடுவாரா! அவரது நகைச்சுவைக்கு அளவே இல்லை. கருத்துச் சொன்னவனை வெளியே போகச் சொல்லிய அவரது அமைப்பின் சீர்குலைவை என்னவென்று சொல்வது.ம்... பரவாயில்லை. முட்டுச் சந்து இல்லாத இடமாகப் பார்த்து புகுந்து விளையாடுங்கள்.





No comments:

Post a Comment

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...