எஸ்.வி.ஆர்
உங்களை பெரியாரிஸ்ட், இடதுசாரி ஆதரவாளர், மனித உரிமை போராளி என்றெல்லாம்
அழைப்பதில் எனக்கு கேள்விகள் இல்லை. உங்களால் நான் கற்ற
நூல்கள், அறிந்த விஷயங்கள் ஏராளம். இன்னும் சொல்லப் போனால் என் கவிதை நூலொன்றை உங்கள்
பேருக்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். ஆனால், மார்க்சிய அறிஞர் என்று உங்களை
அழைப்பதில்தான் எனக்கு விமர்சனங்கள் உள்ளது. ஒரு மார்க்சிய அறிஞராக மார்க்சியத்துக்கு
எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்பதையே நான் என் விமர்சனமாக முன் வைக்கிறேன்.
அதற்கான காரணங்கள் பின்வருமாறு:
1. 80 களில் ஸ்டாலின் எதிர்ப்பை கைக்கொண்ட
நீங்கள் அதன் வழியிலேயே ரஷ்யப் புரட்சி குறித்த உங்கள் அபிப்ராயங்களை எழுதினீர்கள்.
மார்க்சியத்தின் மேலதிக விளக்கம் என அந்நியமாதல், இருத்தலியம் (பின் இருத்தலியமும்
மார்க்சியமும் எனத் தலைப்பு மாற்றப்பட்டது), சார்த்தர் என்று பண்பாட்டு வழியிலான
மார்க்சிய எதிர்ப்பை முன்வைத்தவர்களை விளக்கினீர்கள். (இப்பொழுது குருச்சேவின்
பொய்கள் என நூலும் வந்திருக்கிறது. இது குறித்து நீங்கள் இதுநாள் வரை வாய்
திறக்கவில்லை)
2. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை விரிவான
விளக்கங்களுடன் மொழிபெயர்த்தீர்கள். அந்த உழைப்பை நான் மதிக்கிறேன். அதே சமயம் அந்த
உழைப்பின் பின்னால் உள்ள அரசியலையும் இங்கு கேள்விகளாக முன்வைக்கிறேன். ரஷ்யப்பதிப்பான
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை டெம்மி சைசில் 116 பக்கங்களைக் கொண்டது. முன்னுரைகளைத்
தவிர்த்துப் பார்த்தால் அறிக்கை சுமார் 61 பக்கங்களுக்கு வரும். அந்நூலை தாங்கள் மொழிபெயர்த்து,
விளக்கம், அறிமுக உரை என 482 பக்கங்களைக் கொண்ட ராயல் சைசையும் விட பெரிய சைசில்
புத்தகமாக வெளிவந்துள்ளது. நல்லது! கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்கு இன்றும் விளக்கவுரை
தேவைப்படும் சூழ்நிலைதான் உள்ளது. ஆகவே, நீங்கள் செய்த அந்தப் பெரும் பணியை நான்
மதிக்கிறேன். ஆனால், மார்க்சியம் ஏதுமறியாத ஒரு தலைமுறைக்கு இதெல்லாம் மார்க்சியம்
என்று 80, 90 களில் அறிமுகம் செய்து சீரழித்தது ஏன்.
3. நீங்கள் மொழிபெயர்த்து
விளக்கவுரை கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில், நீங்கள் நன்றி கூறியிருக்கும் நபர்கள் உங்கள் வாழ்வில்
உங்கள் மேல் உள்ள மரியாதையால், அன்பினால் உங்களுக்கு
தனிப்பட்ட உதவிகளை செய்திருக்கக் கூடும். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் மார்க்சியத்தைச்
சீரழித்தவர்கள், திரித்தவர்கள், மார்க்சியத்தை எதிர்ப்பவர்கள், அடையாள அரசியல்
செய்தவர்கள். உதாரணத்திற்கு வைணவத்தை மார்க்சியம் என பேசிய எஸ்.என். நாகராஜன்,
மார்க்சிய எதிர்ப்பாளரான சுந்தரராமசாமி வகையறாக்கள். இவர்களுக்கும் கம்யூனிஸ்ட்
கட்சி அறிக்கைக்கும் என்ன தொடர்பு?
4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி பொலிட் பிரோவில் பார்ப்பனர்கள் அதிகம் இருப்பது குறித்து தனக்குத் தானே கேள்விகள்
கேட்பதாக த.மு.எ.க.சவின் மாநிலத் துணைத்தலைவர் ஆதவன் தீட்சண்யா கூறியிருக்கிறார். இது
எவ்வகையிலான கேள்வி, இந்தக் கேள்விக்கான உங்களது பதில் என்ன?
5. செம்மலரில்,
தோழர் தோதாத்ரி உங்களைப் போன்றவர்களை முன்வைத்து மார்க்சியத்தை குழப்பியவர்கள் என்ற
பார்வையில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். நானும் அந்தக் கருத்தில் உடன்பாடுகிறேன்.
6. தமுஎகசவுக்கு
திடீரென நீங்கள் மார்க்சிய அறிஞராக தோன்றியது ஏன்? அல்லது தமுகசவில் மார்க்சிய அறிஞர்
பஞ்சமிருப்பதைக் கண்டு உங்களை நீங்கள் தாரைவார்த்துக் கொண்டீர்களா?
7. உங்களை மார்க்சிய
அறிஞர் என்று சொன்ன தமுஎகச மேடையில் நீங்கள் மார்க்சிய அறிஞர் இல்லை என்றுதான் நான்
சொன்னேன் ஆனால் அதற்கு அடுத்துப் பேச வந்த நீங்கள், “என்னை மார்க்சிய அறிஞர் என நான் சொல்லவில்லை தமுஎகச
தான் சொன்னது” என கலைஞர் பாணியில் பதில் சொன்னீர்கள். மேலும், “என்னை மார்க்சிஸ்ட் இல்லை என வசுமித்ர சொல்வதை
ஏற்றுக்கொள்ளவில்லை” என்றீர்கள். என் கருத்தைத் திரித்து, ஒரு கூட்டம் முழுக்க என்னை
எதிரியாகக் கருதும் மனநிலையைத் திட்டமிட்டே உருவாக்கினீர்கள்.
பதில் சொல்ல நான் எழுந்த போது, உங்களின் தூண்டுதலுக்கு உள்ளான
மனநிலையோடு தமுஎகச தோழர்கள் உங்கள் தொண்டர்களாக மாறி என்னை வெளியே போ எனச் சொன்னார்கள்.
அப்போது கருத்து சுதந்திரம் கருதிக்கூட, என் பொருட்டு நீங்கள் எதையும் கூறாமல் அமைதியாக
இருந்தது ஏன்? அதை மேடை நாகரீகம் என்று நீங்கள் அர்த்தம் கொடுக்கும் பட்சத்தில், இதுவரை
கலந்துரையாடல் என்பதை ஒரு வடிவத்தில் கூட காணாதவர் நீங்கள் என சொல்ல அது வாய்ப்பளிக்கக்
கூடும். (அதே கூட்டத்தில் தொண்டர்களோடு ஒரு தொண்டராக எஸ்.ஏ.பெருமாள் என்னை விரட்டியடிப்பது
போல் கைகளை அசைத்ததை நீங்கள் பார்த்தும் இருப்பீர்கள்)
8. ஒரு காலத்தில்
நவீன இலக்கியம் பேசுகிறேன் என்று ஒரு கூட்டமே குடிமடமாய் ஆன கதை நீங்கள் அறியாததல்ல.
அப்போதும் அதிகமும் பேசுபொருளானது பின்நவீனத்துவம், பிராங்பர்ட் மார்க்சியம், இருத்தலியம்
போன்ற இசங்கள்தான். தமுஎகச தோழர்களோ, கலை இலக்கியப் பெருமன்ற தோழர்களோ அப்பொழுது பத்தாம்
பசலி போல் அவர்கள் கண்ணுக்குத் தெரிந்தார்கள். ஆனால் இன்று தமுஎகச சில குடிகாரர்களையும்
அமைப்பு நிர்வாகிகளாக முன்னிருத்தும் அமைப்பாக மாறியது ஏன். அதற்கான வரலாற்றின் தேவைகள்
என்ன? அவர்கள் பலர் கூட்டத்திற்கு வந்து வெளியே பேசியது என்ன என்றும், நிகழ்ந்த ரௌடித்தனங்கள் குறித்தும் விரிவாக
எழுத நிறைய இருக்கிறது. விரிவாக எழுதுவேன்.
9. இப்பொழுதும்
சொல்கிறேன். நான் உங்களின் மாணவனே. ஆனால் குரு அந்தஸ்தை உங்களுக்குக் கொடுக்க நீங்களும்
அனுமதிக்க மாட்டீர்கள், மாணவனாகவே இருக்கும் நிலையை நானும் வைத்துக்கொள்ளப் போவதில்லை.
நீங்கள் படித்த மார்க்சைத்தான் நானும் படிக்கிறேன், படித்துக்கொண்டிருக்கிறேன்.
10. ரங்கநாயகம்மாவை
குகை மார்க்சியர் என்று நாங்கள் அழைப்போம் என்று மேடையில் சொன்னீர்கள். அந்த நாங்களில்
மறைமுகமாகப் பங்கேற்றிருப்பது தமுஎகச தோழர்களா, இல்லை இதுபோன்று அழைத்த உங்கள் நண்பர்களா?
தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன். உங்களையும்
படிக்காத, ரங்கநாயகம்மாவையும் படிக்காத ஒரு கூட்டத்தின் முன் அவதூறு செய்தீர்கள். நிச்சயம்
அது அவதூறுதான்.
மார்க்சியம் என்ற பெயரில் எண்ணற்ற திரிபு
வேலைகளைச் செய்த நீங்கள் ரங்கநாயகம்மாவை குகை மார்க்சியர் என்றீர்கள். நல்லது. அது
உங்கள் கருத்து. ஆனால், அவரை நான் மார்க்சிய அறிஞர் என்றே அழைப்பேன். அப்படி நான்
அழைக்க ரங்கநாயகம்மா மார்க்சியத்துக்கு செய்த பங்களிப்புகளாக கீழ்க்கண்ட நூல்களை முன்வைக்கிறேன்.
1 For the solution of the ‘caste’ question,
Buddha is not enough, Ambedkar is not enough either, Marx is a must. [Pages: 400. Paperback. 1/8th demmy size. Rs. 80.]
2 House Work and Outside Work. [Pages: 104. Paperback.1/8th demmy size. Rs. 30.]
3 An Introduction to Marx’s ‘Capital’ (in 3 volumes). [Pages: 1972. Hardbound. 1/8th demmy size. Rs. 360.]
4. Caste and Class: A
Marxist Viewpoint. [Paperback.
1/8th demmy size. Rs.
60.]
இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ஒரு வாதத்திற்காக
நீங்கள் கூறியபடி ரங்கநாயகம்மா குகை மார்க்சியராகவாவது எஞ்சுவார். மாறாக, நீங்களோ இருத்தலியல்,
அந்நியமாதல், பிராங்கபர்ட் மார்க்சியம் போன்ற இருண்ட குகைகளை மார்க்சியம் எனக் கூறி,
அதில் குடியிருந்ததோடு, எண்ணற்ற பேர்களை அந்த குகைகளில் அடைக்க முயற்சித்தவர்.
இல்லை, நீங்கள் மார்க்சிய அறிஞர்தான் என்றால்
மார்க்சியத்துக்கு நீங்கள் செய்த பங்களிப்புகள் யாவை. இதற்கான பதிலை நீங்களும் கூறலாம்,
இல்லை உங்களை மார்க்சிய அறிஞர் என அழைத்த தமுஎகச அமைப்பும் கூறலாம். மார்க்சிய பேரறிஞர்
என உங்களை நெக்குருக உணர்ச்சிவசப்பட்டு அழைத்த தமுஎகச மாநிலச் செயலாளர் சு. வெங்கடேசனும்
சொல்லலாம். அதற்கான பொறுப்பும் கடமையும் இருக்கிறதென்றே நம்புகிறேன்.
காத்திருக்கிறேன்.
No comments:
Post a Comment