Thursday, August 22, 2024

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”








“கவிதையைவிட

மோசமானது வேறொன்றும் 

இல்லை”

 

ரூமி 

 

வ சு மி த் ர 

 

 

“அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் பாங்கின் சொற்களை பிலாலுக்குக் கற்றுக்கொடுங்கள். அவர் அதை தன்னுடைய உரத்த குரலில் அறிவிக்கட்டும். தங்களுடைய குரலைவிடவும் பிலாலின் குரல் வளமானது"...

பிலாலின் உச்சஸ்தாயிலான குரலினிமையைக் காற்று சுமந்து நாலாபுறமும் கொண்டு சென்றது. மதீனாவின் செவிப்புலன்களுக்கு அது குளிர்வாரிச் சொரியும் உணர்வையூட்டியது. “அல்லாஹ் அக்பர்; அஷ்ஹத் அல்லாயிலாஹா இல்லல்லாஹ்; அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்;ஹைய அலஸ்ஸாலாத்; ஹைய அலல்ஃபலாஹ்; அல்லாஹ் அக்பர்...லா இலாஹா இல்லல்லாஹ் ”

 

 

ரூமி எழுதிய கவிதைகள் பலவற்றை வாசித்து வந்திருக்கிறேன். ரூமியின் கவிதைகள் உன்மத்தம் நிரம்பிய சொற்களின் பித்தைக் கொண்டவை என நம்பினேன். சமீபத்தில் வந்திருக்கும் ரூபாயியாத் தொகுதியை வாசித்தேன். ஏமாந்தேன். அர்த்தங்கள் தலைகீழ்வீதமாய் மாறிவிட்டது. ரூமியின் ஒவ்வொரு சொற்களுக்குப் பின்னாலும் மதம் இருக்கிறது. பித்தென்பது இறைவனிடம் சேரும் வழிகளில் தலையாய வழியாக ரூமி கண்டடைகிறார். நிதானமாக பித்தைப் பிரதியெடுக்கும் கவிதை குறித்து எச்சரிக்கையும் செய்கிறார்.

 

அக்கவிதைத்தொகுதியான ருபாயியாத் பாரசீகத்திலிருந்து நேரடியாக தமிழுக்கு வந்திருக்கிறது. மொழிபெயர்த்தவர் ரமீஸ் பிலாலி. ரூமியின் கவிதையில் வரும் சொற்களை மதப்பின்னணியில் எப்படி வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

 

“பொதுவாகவே ஸூஃபி ஞானக் கவிதைகள் அனைத்திலும் இந்தக் குறியீடுகளைக் காணலாம். அவை குறிக்கும் உட்பொருளை அறிந்து கவிதைகளின் உண்மைப் பொருளை விளங்க வேண்டும். குறியீடுகள் ரசிப்பதற்கு; உட்பொருள் விளக்கத்திற்கு" என்ற சேதியுடன் ரூமியின் கவிதைச் சொற்களுக்கு முழுமுடிவான அர்த்தமாக இதைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கூறியிருக்கிறார். 

 

காதலி,நண்பன்,காதல்,அரசன்       =                                           

இறைவன் (அல்லது) ஞான குரு

 

காதல்                                                            =

இறைத்தியானம்

 

பூவனம்,பூ                                                    =

படைப்புகள் என்னும் திரையில் வெளிப்படும் இறைப்பண்புகள்தெய்வீக அழகுகள்

 

குயில்                                                              =

ஆன்மாவின் ஏக்கம்

 

மது                                                                  =

ஆன்மீகப் பரவசம்

 

போதை                                                          =

நான் என்னும் அகம்பாவம் அழிதல்

 

சாக்கி (மதுவார்ப்பவர்)                              =

இறைவன் அல்லது ஞானகுரு

 

மதுவிடுதி                                                       =

ஸூஃபி தியானக்கூடம்

 

 

நேரடி வார்த்தைகளுக்கு மத அடிப்படைகளினால அர்த்தங்கள். “சூஃபி கவிதைகளில்  அடிக்கடி மஃது குறிப்பிடப்பட்டுள்ளதால், அது குறித்து இங்கு பேசுவது பொருத்தமாக இருக்கும். சூஃபிகள் தங்களுக்கு அனுமதிக்கொண்ட ஒரே மது, குர்ஆன் அனுமதித்த சுவர்க்கலோக மது மட்டுமே. உதாரணமாக, உமர் இப்னு ஃபாரிழின்(இ.1236) உதடுகளை மண்ணுலக மது எப்போதாவது தொட்டிருக்கலாம் என்பதற்கு அறவே சாத்தியமில்லை. இவரே அரபு சூஃபி கவிஞர்களில் தலை சிறந்தவர் மற்றும் பிரபல ஃகமரிய்யா ( மதுப்பாடல்) இயற்றிய புலவர். அந்தப் பாடலில் துவக்க வரிகளைத் தருகிறோம்.

 

‘அன்புக்குரியவனின் நினைவாக நாங்கள் மது ஒன்று அருந்தினோம்

திராட்சை படைக்கப்படுமுன்பு இருந்த அதன் போதையில் மயங்கினோம்" 

 

என எடுத்துரைக்கிறார். மார்டின் விங்ஸ். சுவர்க்கலோக மது தருவது ஆன்மீகப் பரவசம். இகலோக மது குறித்துப் பார்த்தோமானால் “மது அருந்துவதை குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கிறது. அதை ஷைத்தானின் செய்கை என்கிறது"  இதனடிப்படையில் பார்த்தால் ஸூஃபிகள் மனிதனை பரவசமடைய பரலோக மது போதுமென்கிறார்கள். 

 

இறையென்பது அறியாமையினால் விளைந்த அச்சத்தின் தோற்றுவாயை அழித்தொழிக்க நிகழும் அந்நியமாதலின் சடங்கு.  கலைக்கும் பித்துக்கும் தொடர்புண்டு என்பதிலேயே அந்நியமாதல் எப்படி நிகழ்கிறது என்பதைக் கூர்ந்து நோக்கலாம். ரூமி தன் கவிதைகளுக்கு இத்தகைய கறார்த் தன்மையை வழங்கியிருப்பாரா என்கிற சந்தேகமும் மூச்சுவிடுகிறது. 


 

நீதமாய் இரு!

காதல் மிகவும் நேர்மையானது!

உன் சுபாவத்தின் பாவங்களே

காதலின் குறைகளாய்த் தெரிகின்றன;

காமத்திற்கு நீ

காதல் என்று

புனைபெயர் சூட்டுகிறாய்

காமத்திலிருந்து காதலுக்குப் 

பாதை தொலைவானது!

 

காமத்தின் பெருவழி குறித்தான குறியீட்டில் பாதை தொலைவானது என்பதாகக் குறிக்கிறார் ரூமி. அதே சமயம் காமமென்பதற்கு நேர்மையின்மை என்கிற அர்த்தத்தை மறைபொருளாகச் சுட்டுகிறாரா என்பதும் கேள்வி. இக்கவிதைக்கு மொழிப்பெயர்ப்பாளர் கொடுத்திருக்கும் விளக்கம்:

 

"ஸூஃபிகளின் பாஷையில் காதல் என்பது இறைவன் மீது காட்டப்படும் உறுதியான அன்பாகும். “இறை நம்பிக்கையாளர் அல்லாஹ்விற்கான நேசத்தில் மிகவும் வலுப்பமானோர் ( வல்லதீன ஆமனூ அஷத்து ஹூப்பன் வில்லாஹி..2;165) ‘இதுவே ஸூஃபி பரிபாஷையில் இஷ்கு எனப்படுகிறது.’ காதல் என்பது அல்லாஹ் அல்லாத அனைத்தையும் எரித்துவிடும் நெருப்பு (அல் இஷ்கு நாருள் துஹரிக்கு மா-சிவல்லாஹ்’ என்கிறார் ஸூஃபி மகான் அஹ்மது கபீர் அர்ரிஃபாயி.”என்ற குறிப்பு எழுதப்படுகிறது. காதல் என்ற வார்த்தைக்குப் பின் கடவுளை வைப்பது பணிந்து போவதற்குப் பின் இருக்கும் விசுவாசத்தின் வேர்ச்சொற்கள்.

 

எல்லையின்மை, பரம்பொருள், என்பதற்குப் பின் விளங்க முடியாத, விளக்கிக் கொள்ள முடியாத என்ற வார்த்தைகளுடன் கூடிய இருள் இருக்கிறது. மதம் எப்பொழுதும் எவருக்கும் எந்த வெளிச்சத்தையும் தந்ததில்லை. இருளில் அது கண்சிமிட்டுவதைக் காண உங்களுக்கு பெருவிழி வேண்டுமென அகத்தை நோக்கி பகுத்தறிவற்ற வார்த்தைகளை வைத்து விலகும். அருஞ்சொற்பொருள் கூற ஞானிகள் உதிப்பர்! ஞானத்தின் பொருளே அகயிருட்டை உண்டாக்கி அதை அழிப்பதற்கான நாடக செயல்திட்டம்தானே!

 

இதற்கெல்லாம் மேலாக ரூமியின் கவிதை செயல்பாடு சந்தேகத்தின் எடைக்கற்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

 

இறை மறுப்பிற்கும்

இஸ்லாத்திற்கும் அப்பால்

இருக்கிறது ஒரு பாலைவனம்;

அதன் பரந்த வெலியில்

வசித்திருக்க

ஆசிக்கிறது என் மனம்!

ஆன்மீக ஞானி

அவ்விடம் அடைந்தார்

சிரம் தாழ்த்தியபடி;

இறை மறுப்பும் இல்லை

இஸ்லாமும் இல்லை

இடம் என்பதே இல்லை

அங்கே!

 

என முடிக்கிறார். இக்கவிதைக்கு மதம் சார்ந்த எந்த குறியீட்டு விளக்கமும் கிடையாது. வாசகர்கள் அனுமானிக்க வேண்டுமென கவி நினைத்ததன் வெளிப்பாடாய் இருக்கலாம்.


பகுத்தறிவின்மீதான புகார்களையும் அது செய்யும் லீலைகளைக் குறித்தும் சில கவிதைகளை ரூமி எழுதியுள்ளார்.

 

1.

பகுத்தறிவின் மூலதனம்

பித்துறும் மனிதனேயாம்!

காதலின் பித்தனே

இறுதிவரை அறிவுள்ளோன்!

வேதனையின் பாதையில்

பயணிக்கும் கலையை 

அவனே அறிவான்;

ஆயிரம் வழிகளில்

அவனே தனக்கு

அன்னியம் ஆனவன்!

 

பரிபாஷையின்படி இங்கு காதலர் என்பது இறைவன் அல்லது ஞானகுரு. இங்கு அவர்களே அறிவுடையவர்களாகச் சுட்டப்படுகிறார்கள். கவிதை மதத்தின் மத்தகத்துக்கு பக்தியே அங்குசமென்கிறது. 

 

பித்துக்கு எதிரான செயல்பாடு பகுத்தறிவு! இக்கவிதையின் பிரச்சினை என்னவென்றால் பித்தை பகுத்தறிவுக்கு இணை கூறும் ரூமி அறிவை அதன் இறுதிவரை அடைந்தவன் இறைவன் என்கிறார். இறைவனின் அறிவு பகுத்தறிவா?

 

ஒவ்வொரு நாளும்

புதிதாக வருகிறாள்

என் இனிய போதைக் காதலி;

பரவசமும் குழப்பமும்

நிரம்பிய கோப்பையை

ஏந்தி வருகிறாள் தன் கையில்;

அதை நான் கையில்

எடுப்பேன் எனிலோ

எப் பகுத்தறிவின் ஜாடி

உடைந்துவிடும்;

அதை நான் எடுக்காமல்

இருப்பேன் எனிலோ

அவள் என்னைக் 

கைவிட்டுப் போய்விடுவாள்!

 

ரூமியின் பரவசமும் குழப்பமும் சந்திக்கும் இக்கவிதையை எப்படிப் பொருள் கொள்வது?

 

இறுதியாக ரூமியை வாசிக்கும் வாசகர்களுக்கு நூலின் மொழிபெயர்ப்பாளர் ரமீஸ் பிலாலி  எழுதிய குறிப்புகளுக்குக் காரணமாக அவர் விடுக்கும் எச்சரிக்கைக் குறிப்பானது “இதை எல்லாம் சொல்வதற்குக் காரணம் என்னமௌலானா ரூமியின் கவிதைகளை வெறும் கேளிக்கைப் பொருளாக்கிவிடாதீர்கள் என்று எச்சரிக்கவே. ஏனெனில்மௌலானா ரூமி ஒரு பொழுதுபோக்குக் கவிஞர் அல்லர்கவிதை என்பது கலைக்காக வாழ்ந்தவர் அல்லர். கலை கலைக்காகவே என்பது அவரின் கோட்பாடு அல்ல. கலை ஆன்மீக வாழ்வுக்காக’ என்று கவிதை எழுதியவர் அவர்” என்கிறார். இப்படிச் சொல்வதற்கான காரண காரியத்தை விளக்க ரூமியின் 1256 வது பாடலின் அடிக்குறிப்பை வாசிக்கச் சொல்கிறார். அடிக்குறிப்புக்கு முன் அப்பாடலை (ரூமி கவிதைகள் என்ற பதம் ரூமியின் பாடல் என்ற பதத்தை இங்கு அடைந்திருக்கிறது-ரூமி பாடலாசிரியரா-கவிஞராஇசையுடன் இணைவதால் அதைப் பாடல் எனக் கருத்தில் கொள்ளலாமா?

 

பாடல்;1256

 

கவிஞன் அல்லன் நான்;

கவிதையின் வருமானத்தில்

என்றும் நான் புசிப்பதில்லை;

என் கவிதையின் சிறப்புகளை

பீற்றித் திரிபவனும் அல்லன்;

என் கவிதை தரும் சோகங்களை

ஒருபோதும் நான் ருசிப்பதில்லை;

என் கவிச்சிறப்பும் கவித்திறனும்

ஒரே ஒரு கோப்பை மட்டுமே!

என் உயிரின் உயிரான அவள்

என்னைக் கையளிக்காவிடில்

ஒருபோதும் நான் குடிப்பதில்லை

 

என்கிறார் ரூமி. இதன் அடிக்குறிப்பு: கவிஞன் அல்லன் நான்; / கவிதையின் வருமானத்தில் / என்றும் நான் புசிப்பதில்லை;’ -ஒப்பீடு மகாகவி இக்பால் பாடுகிறார்: எளிமையும் துணிச்சலுமான என் வாழ்க்கைப் பிடித்துப்போய்விட்டது. உலகிற்கு / இல்லை எனில் மனிதர்களுக்கு என் கவிதைத்தான் என்ன? கவித்துவம்தான் என்ன?” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

பிரச்சினை என்னவென்றால் கலை கலைக்காகவே என்பது கோட்பாடல்ல அது கவிதையின் உள்ளடக்கம் சம்பந்தப்பட்டது. குறிப்பாக அதன் கலையின் அடிப்படையை தத்துவார்த்த அடிப்படையில் அது எந்த வர்க்கத்துக்குரியது என்ற அபுனைவான கேள்விக்கு புனைவாக பதில் தரமுடியாதவர்களின் புலம்பல். தன்னளவில் மொழி சம்பந்தப்பட்டதும் கூட. மாறாக ரூமியின் கவிதைகள் மதத்திற்காக என்பதுதான் ஆசிரியரின் முடிவு. 

 

கெடுவாய்ப்பாக ரூமி கவிதை குறித்துக் கூறுகையில் “நான் எங்கே. கவிதை எங்கே? எனக்கும் கவிதைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. கடவுளின் பெயரால், நான் கவிதையின் மீது எவ்விதக் கவனமும் கொள்வதில்லை. நான் அதை வெறுக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், கவிதையை விட மோசமானது வேறொன்றும் இல்லை. நான் பல அறிவியல் துறைகளைக் கடுமையாக முயன்று கற்றுள்ளேன். இந்த அறிவைக் கொண்டு, என்னைத் தேடிவரும் அறிஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் அரிய, நுட்பமான விலைமதிப்பற்ற விஷயங்களை வழங்குவேன். கடவுளின் விருப்பமும் இதுவே” என்கிறார் ரூமி. 

 

இதற்கான பின்புலத்தைச் சுட்டுகையில் “கவிதையையும் இசையையும் பாரம்பரியமான இஸ்லாமிய மதக்கோட்பாட்டாளர்கள் நிராகரித்து வந்தபோது, மத போதகராகவும் சட்ட வல்லுநராகவும் புகழ்பெறத் துவங்கிய ரூமியின் அப்போதைய மனநிலையும் அதைப் பிரதிபலிப்பதாகவே இருந்தது" என்கிறார்  ரூமியின் ‘தாகங்கொண்ட மீனொன்று' நூலை மொழிபெயர்ப்பு செய்தவரான என்.சத்யமூர்த்தி.

 

அனைத்திற்கும் மேலாக ரூமி தன் குருவாக ஏற்றுக்கொண்ட ஷம்ஸ் “அதீத அகவயப்படுதலால் சூஃபிகளுக்கு விளையும் போதாமைகளைச் சுட்டிக்காட்டுவதோடு அல்லாமல், அப்பரவசநிலை என்பது பன்முகப்பட்ட இறை அனுபவத்தின் ஒரு பரிமாணம் மட்டுமே எனவும், அதன் மற்ற நுட்பங்களையும் தேடுதல் அவசியம் எனவும் குறிப்புணர்த்துகிறார்” என்று எடுத்துரைக்கிறார் சத்யமூர்த்தி.

 

அறிவை தத்துவார்த்தமாக மறுப்பதற்குக் மதத்தால் கண்டுபிடிக்கப்பட்ட உணர்வுதான் பித்துநிலை. அதனால்தான் புனைவென்பது பித்துநிலையைக் கோருகிறது. ஏலவே கூறியது போல் கவிதையில் அறிவு இருக்கக்கூடாது பித்தே அதன் தத்துவார்த்த அடிப்படை என்கிறார்கள் பழபெரும் முதற்கொண்டு நேற்றுதித்த கவிஞர்கள் வரை.  தமிழைக் கடவுளாகவும், தமிழுக்கென கடவுள்களை கண்டுபிடிக்கப்பட்ட பொழுதும்தான் கடவுள் தள்ளாட்டத்தோடு கவிதைகள் முளைக்கத் தொடங்கின. கடவுளை நீக்கிய கவிதைகளின் பாடுபொருள் தன்னளவிலேயே இயற்கையாகவும் மனித உணர்ச்சிகளுமாக இருக்கிறது. கடவுள் புகுந்தபின் தொழுகையாக மாறுகிறது. மதம் கண்டுபிடிக்கப்பட்டது அறியாமைக்குத் தத்துவார்த்த முலாம் பூசப்பட்டது. அறியாமையே ஞானத்தின் வாசலெனவும் ஆனது. வாசலுக்குள் நுழைந்தவர் தொழுதவர் மதத்தின் வால் பிடித்து தள்ளாட்டத்துக்கு ஆளாகினர். அறியமுடியாமை என்பதன் பின்னணி யாருக்கு சேவை செய்கிறது என்பதைக் கண்டுபிடித்திருந்தால் ஆளும் வர்க்கத்துக்கு இத்தனை கவிஞர்கள் தங்கள் தலையைத் தாழ்த்தியிருக்கமாட்டார்கள். 

 

புதிதாக வெளிவந்துள்ள “கேரள பழங்குடி கவிதைகள்” என்றொரு தொகுப்பை வாசித்தேன். ஓரிரண்டு கவிதைகள் தவிர ஏனைய கவிதைகள் அனைத்தும் கடவுளற்ற கவிதைகள். கடவுளுக்கு வேலையே இல்லாமல் செய்த கவிதைகள். கடவுளை வைத்திருப்பவர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களை உக்ரத்தோடும் புலம்பலோடும் முன்வைக்கும் கவிதைகள். ஒன்றோடு ஒன்றாய்  கிடந்து உருண்டைவைகளைக் குலவையிட்டும் கொண்டாடியும் தேவை இருப்பின் வசைபொழிந்தும்  உழைப்பினூடே உறங்க வைக்கப்பட்ட அத்தெய்வங்கள் என்னவாக இருக்கவேண்டுமென்பதைத் தீர்மானிப்பவர்கள் எப்படிச் சொல்கிறார்கள் என்பதைச் சொல்லும் ஒரு கவிதையைப் பார்க்கலாம்.

 

‘பதி'*

 

மண்ணால் சதுர மேடையிட்டு

அதன் மூலைகளில் கம்பு ஊன்றி

ஓலைக்கீற்றால் மேல் கூரை வேய்ந்து

அதற்குள் நாங்கள்

தெய்வங்களைக் குடி வைத்தோம்

 

எங்களுடன் சேர்ந்து அஜ்ஜனும்

காப்பாளத்தியும் கரியாப் பொதியும்

குறத்தியும் மழை நனைந்தார்கள்

 

வேலியைத் தாண்டி

கதிர் பறிக்கக்கூடாதென

நேற்றைய காலங்களில் வயல்களில் காவல் நின்றோம்.

இன்று அவர்கள் பள்ளியறைகளை** விரும்புகிறார்களா...

பழங்குடி வாழ்க்கையின் விசாலங்களை விட்டு

அஷ்டபந்தனங்களை நோக்கியப் பயணம்.

பனியும் மழையும் வெயிலும் தாங்கி

எங்களுக்குக் காவல் நின்ற குல தெய்வங்கள்

டைல்ஸ் பதித்த காங்கிரீட் கட்டடங்களுக்குள்

ஒரு குரலுக்கு ஒன்பது குரல்கள் ஒலிப்பதாகப் பொய் சொல்லி

கதவைச் சாத்தி உறங்குகிறார்கள்.

இன்றும் நாங்கள் பதிகளில்

நான்கு கம்பை நாட்டு அதன் மீது

தார்ப்பாலின் ஷீட்டை இழுத்துக் கட்டிய நீலநிறப் 

பதிகளுக்குள்

 

*பதி- பழங்குடிக் குடும்பங்களின் குலதெய்வக்குடில்.

**பள்ளியறைகள்: கோயில்களுக்கு இணையாக, காங்கிரீட் கட்டடமாக உயர்த்தப்பட்ட பழங்குடிக் குடும்பங்களின் குலதெய்வக் குடில்கள்

 

கவிதையின் அடிப்படை மதமாக இருக்கும்போது மொழி சொகுசாக மாறுவதையும் பழங்குடிக் கவிதைகளில் அத்தன்மை இல்லாதிருப்பதையும் இதில் காண வேண்டியுள்ளது. மதமானபிறகு வார்த்தைகள் உழைப்பை விட்டுப் பிரிகிறது. சொகுசு அவ்விடத்தில் அமர்கிறது. பின் சடங்குத்தன்மை கொள்கிறது. 

 

பழங்குடிக் கவிதைகளை வெளியிட்ட தன்னறம் இந்நூலின் பின்பக்கத்தில் ஒரு குறிப்பை இட்டிருக்கிறது. “தன் உள்ளார்ந்த இயல்பால் ஒரு மனம் தெரிவு செய்யும் செயலே தன்னறம். உயிரொன்றின் சுயவிடுதலையைச் சுடர்படுத்தும் எச்சிறு படைப்பாயினும் அதை அச்சில் கொண்டு வந்து பொதுவெளிப்படுத்தலே தன்னறம் நூல் வெளியின் அடிப்படை நோக்கமாக உருவகித்துக் கொள்கிறோம். காலம் தோய்ந்த அறமரபு துவங்கி, காந்தி ஏந்திய அறவழி வரை...சாட்சி மனிதர்களாகவும், அவர்தம் செயல்வழிப் பாதைகளாகவும் நீள்கிற இவ்வரலாற்றின், முடியாத மனசாட்சிப் பக்கங்களுக்குள் பொத்தி வைக்கப்படும் ஓர் மயிலிறகாக இதன் செயலமைவு அழகுற பிரார்த்திக்கிறோம்.” இவ்வார்த்தைகள் தன்னறம் பதிப்பகத்தின் வெளியீடுகளுக்கு கூறும் காரண காரியமாக அமைகிறது. இந்த வரையறை இக்கவிதைநூலுக்குப் பொருந்தாது. ‘ஒரு’ மனம் அல்லது உயிரொன்றின் என்கிற இந்த ‘ஒருக்கள்’ எல்லாம் பழங்குடி மரபுக்குப் பொருந்தாது. தனித்த மனம் என்பது ஒரு அடையாளத்துக்காக உதவுமே  ஒழிய சமூக நோக்கில் அதற்கு எந்த மரியாதையும் இல்லை. உழைப்பை முன்வைத்து சுரண்டலைக் குறித்துப் பேசும் பழங்குடிக் கவிதைகளில் இந்த தன்னறம் போன்ற பாசாங்குத்தனமான வார்த்தைகளைக் காணமுடியாது. பழங்குடிகளுக்கு தன்னறம் என்ற வார்த்தை அழிவையும், பேரச்சத்தையும் கொடுக்கக்கூடியது. 

 

ஆள்வோரின் அகங்காரங்களுக்கு வேண்டுமானால் தன்னறம் என்கிற வார்த்தை மனநிம்மதியைத் தரலாம். கொலைகளைச் செய்யவும், குற்றவுணர்ச்சி எழாமலும் இருப்பதற்கான தத்துவ ஏற்பாடுதான் தன்னறம். தன்னறத்திற்கு மானுட சுபாவத்தை வைத்துப் பொருள்கொள்வது அபத்தம். தனதாக-தனியாக தன்னறமென்று ஏதுமில்லை. இருப்பின் அது ஆளும்வர்க்கத்தின் அறமாக இருக்கும். அஹம்  பிரம்மாஸ்மி என்பதை இலக்கிய மதிப்பாக ஏற்றி தன்னறத்தை கண்டதன் கோளாறு இது. மகா வாக்கியங்கள் என்பவை ஆள்வது யார் என்கிற அகந்தையிலிருந்து தோன்றியது. அவ்வளவே. பதிப்பகம் வைத்திருக்கும் வார்த்தைகளின் இருளில் மதம் வெளிச்சத்துடன் கம்பீரமாய் ஏறிமிதிப்பதைப் பார்க்க முடிகிறது.

 

மேற்கில் நிகழ்ந்தது போல் இங்கு தத்துவத்தை மதத்தில் இருந்து பிரிக்க முடியாமைக்கு என்ன காரணம் இருக்க முடியும்கடவுளை ஏற்பதும் மறுப்பதும்தான் ஒட்டுமொத்த இந்தியத் தத்துவ மரபாமேற்கானது மதத்திலிருந்து கடவுளைப் பிரித்ததே முதல் அறிவியல் புரட்சியின் தொடக்கமாக இருந்தது. இந்தியாவில் அது நிகழ்வதற்கானப் பின்புலமாக சமூக விஞ்ஞானப் புரட்சி கைகூடவே இல்லை. மதத்திலிருந்து இன்றுவரை தத்துவத்தைப் பிரிக்க முடியவில்லை. விளைவு மேற்கத்திய கோட்பாட்டுமரபுகள் இந்திய மரபோடு இனம் காணப்பட்டது. அதிலும் அக்கோட்பாட்டு மரபுகள் பெருமளவும் கவிதை நாவல் என இவ்விரு துறைகளில்தான் அதிகமும் கோலோச்சியது. 

 

அமைப்பியல் – இருத்தலியல் – பின்நவீனத்துவம் ஆகியவற்றின் வழியே மார்க்சியத்தைக் குதறியதைத் தாண்டி வேறெதுவும் நிகழவில்லை. அறம்-தனிமனிதன்-மெய்யறம் என்று மதத்தின் சொற்களை வைத்தே மார்க்சியத்திடம் முட்டியது. காரண காரியங்கள் இல்லாமலும் இல்லை. இஸ்லாமும் இதற்கு விதிவிலக்கல்ல.

 

பரம்பொருளின் இருப்பை ஏற்பதான சூழலில் அறியாமை அதன் அடிப்படையாகிறது. மறுப்பின் அடிப்படை அறிவைச் சான்றாதாரமாகக் கொள்கிறது. நம்பிக்கை என்பது இறையுடன் தொடர்புடையதாகவும் அவநம்பிக்கை என்பது அறிவின் செயல்பாடாகவும் தத்துவத்தளத்தில் மோதத் தொடங்குகிறது. இறுதியில் மறுப்பை ஏற்றவர்களுக்கு அழிப்பவன்- நாஸ்தீகன் என்ற வரையறையை வைத்தது. அதோடு மறுப்பவைகளை நோக்கி வசைகளும் உற்பத்தியாகின. நிற்க

 

தமிழின் தத்துவ மரபுக்கும் இந்தியத் தத்துவ மரபுக்கும் பாரதூரமான வித்தியாசங்கள் உண்டு. இந்தியத்தத்துவ இயலானது வேதத்தத்துவ இயலாகவும் - பௌத்த தத்துவ இயலாகவும் - இந்துத் தத்துவ இயலாகவும் மாறியதன் பின்னணியில் அரசின் உருவாக்கம் இருக்கிறது. உபரி இருக்கிறது. மூளை உழைப்பும் உடல் உழைப்பும் பிரிந்ததற்கான பொருளாதாரச் சூழல் இருக்கிறது. ஒப்பீட்டளவில் இஸ்லாம் சமீபத்தில் தோன்றிய மதம். விதிவிலக்கில்லை. மதப்பனுவல்களை மெய்யியல் என்பதே பிழை. அதன் நோக்கம் நாமறியாததல்ல.

 

மதம் நிறுவனமானபோது நிகழ்ந்தவைகள் இவைகள். அரசுருவாக்கம் நிகழாத காலத்தில் மதம் என்ற நிறுவனம் தோன்றாத காலகட்டங்களில் கவிதை எப்படி இருந்திருக்கும்கவிதையாகவாஅதைக் கவிதை என்ற தளத்தில் அப்பொழுது யார் அழைத்திருப்பார்கள்அந்நியமாதல் நிகழாத காலகட்டத்தில் கவிதை என்ற பதமும் கவிஞர்கள் என்ற அடையாளமும் இருக்குமா

 

கவிதை தன்னிடத்தை மதம் சார்ந்து பூர்த்தி செய்துள்ளதை திறனாய்வு செய்வதற்கு தத்துவச் சட்டகம் வேண்டும். அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தைப் பெரியார் மண் என்பதற்கு முன் அப்படி ஆனது ஏன் என்கிற கேள்வியை தலைகீழாக்கிப் பார்க்கும் அவசியம் இங்கு ஏன் எழவில்லை என்பதற்கு விசயங்கள் உள்ளன. பெரியாரைப் போல் ஒருவர் ஏனைய மாநிலங்களில் ஏன் உருவாகவில்லை என்பதற்கான கேள்வியில் இருந்து அது தொடங்க வேண்டும். 

 

தமிழ்ப்பரப்பு தன் ஆதித்தத்துவ மரபாகக் கொண்ட அறிவுப்பரப்பில் கடவுளுக்கு எந்த வேலையும் இல்லை. அதனால்தான் பெரியார் இங்கு கொண்டாடப்பட்டார். ஏனைய பரப்புகளில் அது நிகழவே இல்லை. வித்தியாசம் இதுதான்.  மதம் புகுந்த நிலம்-மொழி அனைத்தும் கடவுளை ஆளும்வர்க்கத்தின் ஏவலாளாய் மாற்றியிருக்கிறது. ஆள்கிறது. நிற்க.  

 

அறியமுடியாமையைத் தொழும் வரிகளால் ரூமி தன் கவிதையுலகைப் படைத்திருக்கிறார். அவரது கவிதைகளில் இருக்கும் கடவுள்தன்மையைப் பிடுங்கிவிட்டாலும், நடைமுறையில் வார்த்தைகளுக்கு இன்று தரப்படும் அர்த்தங்களின் வழியாக அவர் கவிஞராகத்தான் இருப்பார்.  

 

“கவிஞர்களின் ஞானிஞானிகளின் கவிஞர்” என்றவொரு அடையாளத்தை ரூமிக்கு நூலின் மொழிபெயர்ப்பாளர் வழங்கியிருந்தார். கவிதை ஞானத்திற்கு எதிரானது என்பது என் முடிவு. 

 

அதே போல ரூமியை மொழிபெயர்த்த க.மோகனரங்கன் தெரிந்தோ தெரியாமலோ இதயங்களின் உதவியாளர்”  என ரூமிக்கு அடைமொழி வழங்கியிருந்தார். உண்மைதான். “மதத்தைச் சாராத விமர்சனத்தின் அடித்தளம்: மனிதன் மதத்தை உருவாக்குகிறான். மதம் மனிதனை உருவாக்குவதில்லை. தன்னைத்தானே இன்னும் கண்டடையாத, அல்லது ஏற்கனவே மீண்டும் தன்னை இழந்து விட்ட மனிதனின் தன்னுணர்வும் தன்மதிப்பும்தான் மதம். ஆனால் மனிதன் இந்த உலகிற்கு வெளியே குடிகொண்டுள்ள அருவமான உயிரி அல்ல. மனிதன் என்பவன் அரசு, சமுதாயம் ஆகிய மனித உலகம்தான். தலைகீழான உலக உணர்வாகிய மதத்தை இந்த அரசும் இந்த சமுதாயமும்தான் உருவாக்குகின்றன; ஏனெனில், இவை தலைகீழானதோர் உலகமாக இருக்கின்றன. மதம் என்பது அந்த உலகத்தின் பொதுவான கொள்கையாக, அதன் அறிவுக் களஞ்சியமாக, அதன் ஜனரஞ்சக வடிவிலான தர்க்கமாக, அதன் ஆன்மீக ரீதியான பெருமித உணர்வாக, அதன் உற்சாகமாக, அதன் தார்மீக ரீதியான ஒப்புதலாக, அதன் பயபக்தி மிகுந்த பாராட்டாக, ஆறுதலையும் நியாயப்படுத்துதலையும் பெறுவதற்கு அதன் வசம் உள்ள முழுமையான ஆதாரமாக இருக்கிறது. மனித சாரத்தின் அதீதக் கற்பனை  மெய்ப்பாடே மதம்; ஏனெனில், மனித சாரத்திற்கு உண்மையான யதார்த்தம் என்பது இல்லை. எனவே மதத்திற்கு எதிரான போராட்டமானது, மறைமுகமாக, அந்த மதம் என்னும் ஆன்மீக நறுமணத்தைக் கொண்ட உலகத்திற்கு எதிரான போராட்டமாகும். மதரீதியான துயரம், அதே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும்  அவ்வுண்மையான துயரத்திற்கு எதிர்ப்பாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சு; இதயமற்ற உலகத்தின் இதயம்; ஆன்மாவற்ற நிலைமைகளின் ஆன்மா. அது மக்களுக்கு அபின்.”  என கார்ல் மார்க்ஸ் சொன்னதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் ரூமி இதயமற்ற உலகின் இதயங்களில் உதவியாளர்தான்.

 

ஆம்! போலியான-ஏற்படுத்தப்பட்ட - ஆளும் வர்க்கத்துக்கு தன்னளவில் சேவை செய்வதான மதங்களால் ஏற்படுத்தப்பட்ட துயரங்களுக்கு ரூமி உதவியாளர்தான். உண்மையான காயத்தின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கவிடாமல் மத நறுமணம் கமழ்கின்ற போலியான களிம்பைத்தான் கவிதைகளாக ரூமி பூசுகிறார். கவிஞர்தான்!  சைவ-வைணவத்திற்கு மதமாச்சாரியர்கள் உள்ளம் உருக வைத்த வேண்டுதல்களை ரூமியும் வைக்கிறார். இஸ்லாம் மதத்தின் பக்தி மரபின் அடையாளம் ரூமி.

 

அறிவார்ந்த தேடலினால் ஒருபோதும் கடவுளை அடையமுடியாது என்பதைத்தான் கவித்துவமாகச் சொல்லிச் செல்கிறார் ரூமி. உண்மைதான்! கடவுளுக்கு எதிரானதுதான் அறிவு. ஏவாள் கடித்த ஆப்பிளுக்கு அறிவுக்கனியென்றல்லவா பெயர்.

 

ரூமியின் படைப்புகள் குறித்தான தோற்றுவாய் குறித்து கூறுகையில் அதன் மொழிபெயர்ப்பாளர் தயங்கும் இடத்தையும் நாம் நோக்க வேண்டும். ரூமியின் பாடல்கள் இஸ்லாம் வழிபாடை நோக்கமாகக் கொண்டவை என்று தீர்க்கமாகக் கூறியவர்  ரூமியின் “பாடல்கள் உருவான பின்னணி நமக்குத் தெரியவில்லை. பெரும்பாலும்  இவை மௌலானா ரூமியின் ஸூஃபித்துவச் சிந்தனைகளைக் காட்டும் குறியீட்டுப்பாடல்கள்தாம். எனவே ஸூஃபிக் கோட்பாடுகள்ஸூஃபி பரிபாஷை ஆகியவற்றில் போதிய அறிவிருந்தால் இக்கவிதைகளை நாம் சரியாகப் புரிந்துகொள்ளலாம். எனினும் சில கவிதைகள் மௌலானா ரூமியின் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளையும் சூழலையும் பின்னணியாகக் கொண்டிருக்கக்கூடும். அவற்றைப் புரிந்துகொள்ள அவரின் வரலாற்றுப் பதிவுகள் அவசியம்" எனக் குறிப்பிடுகிறார். அப்படியான கவிதைகளின் குறியிட்டுப் பொருட்களை நாம் எப்படி எடுத்துக்கொள்வது என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

 

இதன் மறுதலையாக ஸூஃபி குணங்குடி மஸ்தான் பாடல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

 

மனோன்மணிக்கண்ணியில் மஸ்தான்:

 

வேசியென்ற பேர்படைத்து வெளியிற்புறப்‌ பட்டவளைத்‌ 

தாசியென்று சொல்லத்‌ தகாதோ மனோன்மணியே.

 

ஆடாத மாடி யவிசாரி யானவுனைப்

பாடாதும்‌ பாடிலென்ன பயமோ மனோன்‌ மணியே.

 

எனும் பாடல்கள் குறித்து “வேசியென்று வெளியில் சொல்லாவிட்டாலும் உன்னை தாசியென்று சொல்வதும் தகாதோஆடாது ஆடிய அவுசாரியான உனை பாடாததும் பாடுவதற்கு பயமொன்றுமில்லையென வேறுவிதமான ஓரங்கட்டப்பட்ட வாழ்வின் விளிம்புநிலையாக இறைக்காதலியைக் குறிப்பீட்டாக்கம் செய்கிறார்” என்கிறார் ஹெ.சி.ரசூல். ஓரங்கட்டப்பட்ட விளிம்பாக இருந்தாலும் அது முன்வைப்பது பெருங்கடவுளைத்தானே. கடவுளை தாயாய் சேயாய் தந்தையாய் வைத்து பக்தி இலக்கியம் செயல்பட்டிருக்கிறது. காதலானாக காதலியாகவும் உருமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு காரண காரியங்கள் இல்லாமலும் இல்லை. 

 

“தேவடியாள்வீட்டு நாயாகச்  செய்யுமோ

தேவடியாளுமென் றாயகச்  செய்யுமோ

 

என்கிறார் குணங்குடி மஸ்தான். இக்கவிதைக்கான கூற்றாக “தேவடியாள் வீட்டு நாயாகச் செய்யுமோ தேவடியாளும் என் நாயாகச் செய்யுமோ,. பழக்கப்பட்டவர்கள் வந்து போவதால் குரைக்காத தேவடியாள் வீட்டு நாய்போல் அடிமையாய்க் கிடப்பதற்கும் அத்தேவடியாளையே தன் தாயாக சொல்வதற்குமான அதீத மனநிலையை கடந்து நிலை அனுபவத்தால் மட்டுமே பெறமுடியும். எனவேதான் விளிம்புநிலைக் குரலில் குணங்குடியால் பேச முடிகிறது” என்கிறார் ஹெ.ஜி.ரசூல். விளிம்பானது மையத்தின் பிரதிநிதியாகத்தான் இருக்கிறது. விளிம்பு ஏற்றுக்கொண்ட விளிம்பையும் சுற்றிவளைக்கின்ற, அதற்கு காரண காரியம் கற்பிக்காது தொழுகையில் முடிகிறது. மேலதிகமாய்:

 

தடிபோ லிருந்துணையான் சாதிகெட்ட பாழுங்குணங்

குடியார்க்கெப்படி கூட்டிக் கொடுப்பேன் மனோன்மணியே

 

வேசைக்‌ குணத்தை விரும்புவா யென்‌தறிந்தாற்‌

காசைப்‌ பணத்தைநான்‌ காட்டேன்‌ மனோன்மணியே. 

 

படையாதெல்‌ லாமென்னாற்‌ படைத்துப்‌ பரதேசிகுணங்‌

குடியாரை யோதேடிச்‌ கொண்டாய்‌ மனோன்‌ மணியே 

 

உக்தமிப்‌ பெண்ணென்‌ றுவந்தேனிப் போதுன்றன்‌

பத்தினித்தனத்தை நன்றாய்‌ பார்த்தேன்‌ மனோன்‌ மணியே. 

 

என்றெல்லாம் எழுதிச் செல்கிறார் குணங்குடி. சித்தர் மரபையொற்றிய பாடல்களாய் இதைக் கொள்ளலாம். உடலைக் குறித்தும் அவ்வாறே பொருள் பட்டிருக்கிறது. இருப்பினும் சம்பிரதாயங்களைக் கொல்லும் பாடல்களை பாடியதானாலேயே ஆள்வோர்களால் கண்டுகொள்ளப்படாது முகத் திருப்பலை சித்தர் பாடல்கள் சந்தித்தது. சித்தர் பாடல்களை இந்துமதச் சிமிழுக்குள் அடைக்க முடியாமல் போனதற்கு அதன் உள்ளடக்கமும் ஒரு காரணம். எளிமையும் கூட. மாறாக ஸூஃபி கவிதைகளுக்கு இஸ்லாம்தான் அடிப்படை எனும் போது அது ஏற்க மறுக்கவுமாக நடைமுறையில் உள்ளது. 

 

யதார்த்த தளத்தில் குறிப்பிடப்படும் மது, காதல் போன்றவைகள் இறைவனுக்கானவை எனும்போது அது மக்களுக்கானவை என்பதிலிருந்து விலகுகிறது. சிந்தனை இருப்பைத் தீர்மானிக்கிறது. ஏலவே சொன்னது போல் உழைப்பிலிருந்து விடுபட்டவர்கள் அதற்காக செய்யும் சேவை. அந்த சேவைதான் உழைக்கும் மக்களை கடவுளின் பெயரால் கசக்கிப் பிழிகிறது. அதற்காகவே ஆளும் வர்க்கம் மதத்தை மதிக்கிறது. மதப்பின்புலம் கொண்ட வைதீக வணக்கங்கள் உணர்ச்சி வழியே மொழியைக் கவ்வுகிறது. புனைவில் தொழுகையும் பித்தும் கூடினால் அது கவிதைத்தன்மை பூணுவதாகக் கற்பிக்கப்படுகிறது. மத இலக்கியங்கள் முடிவடையும் இடமும் அதுதான்.

 

மறுபிறப்பு எனும் கருத்தியலை மேஜிகல் ரியலிசமாகக் கொண்டு புனைவுகளை வைத்துக்கொண்டே போகலாம். சொர்க்கம் நரகம் எனசொல்லி இருப்பை மறைத்து கனவின் வியப்பை முன்வைத்து நரகம் என பயத்தை ஊட்டலாம். பைபிளும் இந்துத்துவ மரபும் குர்ரானும் செய்வது வேறென்ன?

 

இல்லாத சொர்க்கத்துக்குச் செல்ல வேண்டுமெனில் மதத்தின் பெயரால் மக்களை உழைப்பாளிகளாக வைத்திருக்கும் முதலாளித்துவவாதிகளால் உருவாக்கப்பட்ட யதார்த்த! நரகத்தை மறந்துவிடு என  கவித்துவம் பொங்கும் வரிகளால் ஆசுவாசப்படுத்துவது எதன் அடிப்படையில்?

 


 

உதவிய நூல்கள்:

 

1.ரூமியின் ருபாயியாத்

பாரசீக மூலம்மௌலானா ரூமி

தமிழில்: ரமீஸ் பிலாலி.

சீர்மை வெளியீடு

விலை: 520

கெட்டி அட்டை.

 

 

2.தாகங்கொண்ட மீனொன்று

ஜலாலுத்தின் ரூமி

தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

தமிழில்:என்.சத்திய மூர்த்தி

விலை:350

விற்பனை உரிமை:

காலச்சுவடு

 

 

3. ரூமி கவிதைகள்

இதயங்களின் உதவியாளர்

தமிழில்:க.மோகனரங்கன்

நூல்வனம் வெளியீடு

விலை;230

 

4.குணக்குடி மஸ்தான்சாகிபு அவர்கள் திருவாய்மலர்ந்தருளிய திருப்பாடற்றிரட்டு

மலர்மகன் விலாச அச்சுக்கூடம்(1948)

 

5.இஸ்லாத்தின் பிரச்சினைகள் ஒரு மறுபார்வை

அஸ்கர் அலி என்ஜினியர்

தமிழில்:

சு.கிருஷ்ணமூர்த்தி

சிங்கராயர்

அடையாளம் பதிப்பகம்

விலை;100

 

6.சூஃபியிசம் என்றால் என்ன?

 

மார்டின் விங்ஸ் ( அபூ பக்கர் சிராஜுத்தீன்)

தமிழில்: புன்யாமீன்

மெல்லினம் வெளியீடு

விலை:110

 

7.சூபி விளிம்பின் குரல்

ஹெச்.ஜி.ரசூல் 

பாரதி புத்தகாலயம்

விலை:75

 

8.மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள்

தொகுதி 1

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

20 தொகுதிகள் விலை: 5000

 

9.கேரள பழங்குடிக் கவிதைகள்

தேர்வும்- மொழியாக்கமும்: நிர்மால்யா

11 பழங்குடி மொழிகள்- 18 கவிஞர்கள்

தன்னறம் நூல்வெளி&குக்கூ காட்டுப்பள்ளி

விலை 100


10. முஹம்மத் நபி (ஸல்)

முஹம்மத் ஹுஸைன் ஹைகல்

தமிழில்:குளச்சல் யூசுஃப்

காலச்சுவடு பதிப்பகம்

விலை:595

 

 

குறிப்பு: “கலை-மதத்தின் அந்தப்புரம்” ஆய்வுக்கான குறிப்பிலிருந்து....

 

 


 

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...